Thursday, April 6, 2017
Wednesday, April 5, 2017
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில்
ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில் வெளியானது…
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருளேபொருளாகிஅணியும்பொற்றடை
வருவிக்கும்வருடம்வந்தது - குருவாய்
ஹேவிளம்பிஆண்டில்ஆதிராமலிங்கமே
கூவிவருவானெனக்கூறு.
---திருச்சபை.
வருகின்ற
14-ஆம் தேதி வியாழன் அன்று தமிழ்புத்தாண்டு“ பொற்றடை” ஆண்டு (ஹேவிளம்பி) பிறக்கின்றது.
இது மத்திம ஆண்டாக கருதப்படுகின்றது. பொற்றடை என்றால் பெண்கள் கழுத்தில் அணியக்கூடிய
பொன்னாலான அணிகலனை குறிக்கும். இவ்வருடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய அருளே பொற்றடையான
பொருளாக நம் அனைவருக்கும் கிடைக்கட்டும். இவ்வருடத்தில் நம் எல்லோருக்கும் ஆதி குருவாய்
வள்ளற்பெருமானே “நான்உங்களுக்காகவருகின்றேன்” என்று சொல்லிக் கொண்டே உங்களிடம் வரப்போகின்றார்.
எனவே நாம் அனைவரும் விழிப்புடன் இருப்போம். குருவருளையும் பொருளையும் பெற்று மகிழ்வோம்.
---தி.ம.இராமலிங்கம்.
பசி தவிர்க்கும் மருந்து
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்
வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில்
வெளியானது…
பசி
தவிர்க்கும் மருந்து
பசி இல்லை என்றால்
இவ்வுலகம் இயங்காது. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானது பசி. பசியினால்தான்
மரங்கள் செடிகள், புல், பூண்டுகள் வளர்கின்றன. பசியினால்தான் உயிர்கள் இடம்பெயர்கின்றன.
பசியினால்தான் மனிதர்கள் உழைக்கின்றார்கள். இப்படிப்பட்ட பசியை ஒழிக்க இதுவரை யாரும்
மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சில சித்தர்கள் ஒரு வார காலம் மட்டும் பசியில்லாமல்
இருக்க மருந்து கண்டுபிடித்து அதனை உபயோகப்படுத்தியும் உள்ளனர். தற்போதுள்ள விஞ்ஞான
காலத்தில் சில நாட்கள் மட்டும் பசியில்லாமல் இருக்க மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அம்மருந்தினை விண்வெளி வீரர்கள் பயன்படுத்துகின்றார்கள். நாமும் சித்தர்கள் கண்ட மருந்தினை
பயன்படுத்தினால், நமக்கு உடல்நிலை சரியில்லாத தருணத்தில், உழைக்க முடியாத தருணத்தில்
ஒரு வாரகாலம் சாப்பிடாமல் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா?! இதோ புலிப்பாணி முனிவர் கூறிய
மருந்தை பார்ப்போம்,
“நீர்
முள்ளிவிதை எடுத்து நசுக்கி
அதன் அரிசியை பசுப்பால் விட்டு அரைத்து
பசுப்பாலுடன் கலந்து அருந்து
வாரம் ஒன்றாகும் வரை பசியெடுக்காதே
நாதனார் போகருட கடாட்சத்தினாலே
நலமாக
புலிப்பாணி பாடினேனே”
நாயுருவி செடியின்
விதைகளை சேகரித்து அவற்றை உரலில் இட்டு குற்றியெடுத்து உமி நீக்கி, அந்த அரிசியில்
சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து அந்த விழுதினை பசும் பாலில் கலந்து அருந்தினால்
ஒரு வாரம் வரையில் பசி எடுக்காது என்கின்றார். இதனை தன் குருநாதர் போகரின் அருளால்
கூறுவதாக உரைக்கின்றார்.
எந்நாளும் பசியே
எடுக்காத மருந்தினை அகத்தியர் கண்டுபிடித்துள்ளார்,
“தானென்ற
நாயுறுவி வித்து தன்னை
தண்மையினால்
முலைப்பாலில் உரைத்து மைந்தா
பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று
எத்தனை நாள் இருந்தாலுந்தான்
நளினமுடன் பசியாது மைந்தா பாரே”
நாயுருவி வித்து
எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக்கொண்டு எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து
இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் எத்தனை நாள் சென்றாலும்
வயிறு பசி எடுக்காது என்கின்றார் அகத்தியர்.
“பாரப்பா
பசிஎளுப்ப வேண்டு மென்றால்
பண்பாக
சொல்லுகிறேன் மைந்தா கேளு
வீரப்ப எலும்பியதோர் மஞ்ச ளிஞ்சி
விரும்பிய தின்றிடவே வேகம் கொண்டு
காரப்ப மூல அக்கினியே நீறும்
கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
சித்துவித்தை அநேகமுண்டு தெளிந்து காணே”
மீண்டும் பசி
எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள்
இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும். அத்துடன் தூய நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல
பல சித்துமுறை தெரியவரும் என்கின்றார் அகத்தியர்.
(குறிப்பு:
சித்த மருத்துவரை கலந்தாலோசித்து சோதித்து பார்க்கவும்)
நாலடியார்
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்
வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில்
வெளியானது…
நாலடியார்
சமண முனிவர்களால்
இயற்றப்பட்டது நாலடியார் என்கின்ற நான்கு அடிகளைக் கொண்ட நானூறு பாடல்கள். திருக்குறளுக்கு
இணையாக நாலடியார் கருதப்படுகின்றது. திருக்குறளைப் போன்றே நாலடியாரும் அறத்துப்பால்,
பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக உள்ளது. திருக்குறளைப்போன்றே
நாலடியாரும் வள்ளலாரை கவர்ந்த ஒரு அற நூலாகும். நாலடியாரின் வரிகளை தமது திருவருட்பாவில்
சில இடங்களில் வள்ளலார் பயன்படுத்தியிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நாலடியாரிலிருந்து
ஒரு பாடலின் அறத்தை இம்மாதம் பார்ப்போம்.
அலை எப்போது
அடங்கும்? நாம் எப்போது குளிப்பது?
பெருங்கட லாடிய
சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின்
ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை
நீக்கி அறவினை
மற்றறிவாம்
என்றிருப்பார் மாண்பு. (332)
நம்மில் பலருக்கு
போதுமான பொருளாதாரம் இருக்கும். தான தருமங்களை நாமும் பிறருக்கு செய்ய வேண்டும் என்ற
எண்ணமும் இருக்கும். ஆனால் தருமச் செயல்களில் ஈடுபடமாட்டோம். அதற்கு நாம், நமக்கு நாமே
சொல்லிக்கொள்ளும் காரணம் என்னவென்றால், “முதலில் என்னுடைய வீட்டு கடமைகளையெல்லாம் குறைவில்லாமல்
முடித்துவிடுகின்றேன், பிறகு மற்றவர்களுக்கு தானம் செய்கின்றேன்” என்று முடங்கிவிடுகின்றோம்.
இப்படிப்பட்ட நம்மைப் பார்த்து நாலடியார் கூறுகின்றது,
“கடலில் குளிக்க வேண்டும் என்று கடற்கரைக்கு வந்துவிட்டு, அங்கு எழும் அலைகளைக்கண்டு
பயந்து, அலைகள் ஓய்ந்தவுடன் நான் குளிக்கின்றேன் என்று காத்திருக்கும் முட்டாளை போல,
பலர் கடமைகள் தீர்ந்தவுடன் தானம் செய்கின்றேன் என்று மடத்தனமாக இருக்கின்றார்கள்” என்கின்றது.
அலைகளுக்கு நடுவே சமாளித்து குளிப்பதுபோல குடும்ப
கடமைகளுக்கு நடுவே தானமும் செய்துக்கொண்டு பொது நலன்களையும் செய்யவேண்டும் என்று கூறுகின்றார்கள்
சமண முனிவர்கள். நாமெல்லாம் நம்முடைய மாத வருமானத்தில் குறைந்தபட்சம் இரண்டு சதவிகிதமாவது
வறுமையில் வாடும் மக்களுக்கு தானம் செய்ய முன்வரவேண்டும். மேலும் இரண்டு சதவிகிதம்
பொதுநலன்கருதி செலவிட முன்வரவேண்டும். மீதமுள்ள 96 சதவிகித வருமானத்தை குடும்ப கடமைகளாற்ற
ஒதுக்கினால், நமது சமுதாயம் உலகிலேயே உயர்ந்து நிற்பதை நாம் பார்க்கலாம்.
மாத ஊதியமாக ஒருவன் ரூபாய் 5000 ஈட்டுகின்றான்
எனில் அவன் தானத்திற்காக ரூபாய் 100 மற்றும் பொதுநலனிற்காக ரூபாய் 100 ஆக 200 ரூபாயினை
மாதந்தோறும் நற்செயல்களுக்காக செலவிட முன்வேண்டும்.
உறுதிப்பாடுகள்
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்
வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில்
வெளியானது…
உறுதிப்பாடுகள்
அஜான் லீ (அஜான் லீ தம்மதாரோ 1907-1961 தாய்லாந்து நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பௌத்தத் துறவி) அவர்களின் சுயசரிதையைப் படிக்கும் போது அவர் அடிக்கடி உறுதிப்பாடு (சபதம்) செய்து கொள்வதைக் கவனிக்கலாம். இரவு முழுதும் தியானிக்கப் போவதாகவும், இத்தனை மணி நேரம் தியானிக்கப் போவதாகவும், இதை செய்யப் போவதாகவும், அதைச் செய்யாமல் இருக்கப் போவதாகவும் சபதம் செய்து கொள்வார். தாய் (தாய்லாந்து நாட்டின்) மொழியில் 'அதிதான்' என்றால் சபதம் என்று பொருள். அது 'உறுதி' என்றும் பொருள்படும். அதாவது மனதில் ஒரு முடிவு எடுத்து விடுவது. ஒன்றைச் செய்வது என்று தீர்மானித்து விடுவது. இது போலத் தீர்மானிப்பது உங்கள் பயிற்சிக்கு உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் உட்கார்ந்து தியானம் செய்யும்போது, சற்று நேரத்திற்குப் பின்பு அது கடினமாகத் தெரிந்தால், "சரி, இன்றைக்கு இது போதும்," என்று பயிற்சியைத் தொடராமல் விட்டு விடுவோம். நமக்குப் பழக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச் செல்ல முயல்வதில்லை. அதனால் நமது எதிர்பார்ப்பின் எல்லைக்கு அப்பால் உள்ளவற்றை நாம் அனுபவிக்க முடிவதில்லை.
புத்தர் கூறியது யாதெனில், பயிற்சி செய்வதற்கான காரணமே இது வரை காணாததைக் காண்பதும், அறியாததை அறிந்து கொள்வதும் தான். நாம் இதுவரை காணாத, அறியாத பல விஷயங்கள் நமது கற்பனை எல்லைக்கு அப்பால் உள்ளன. எனவே அவற்றைக் காண வேண்டுமானால் நமது கற்பனை எல்லைக்கு அப்பால் செல்ல நம்மை நாமே மென்மேலும் ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இதனைத் திறமையுடனும், கவனத்துடனும் செய்யவேண்டும். எனவே தான் ஒரு நல்ல தீர்மானத்துக்கு நான்கு இயல்புகள் உள்ளன என்று புத்தர் கூறினார். அவையாவன: விவேகம், வாய்மை, துறத்தல் மற்றும் அமைதி.
விவேகம்
இங்கு விவேகம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு.
முதலில் சிறந்த (பயனுள்ள, அறிவுள்ள) நோக்கங்களை அடைய விரும்புவது. பயனுள்ள உறுதிப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதென்பது உண்மையிலேயே அந்த நோக்கத்தை அடைவது சிறந்ததா என்பதை அறிவது மட்டுமல்லாமல் மிகமிக எளிதாக அடையக் கூடியதாகவும் இல்லாமல், அடைவது மிக மிகக் கடினமானதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். நோக்கம் நமது சராசரி எதிர்பார்ப்புகளுக்கு வெளியே இருக்க வேண்டும். அதே சமயம் அடைய முடியாத மிகத் தொலைவில் இருந்து நம்மை ஏமாற்றத்தில் தள்ளி விடவும் கூடாது.
இரண்டாவதாக அந்த நோக்கத்தை அடைவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். என்ன செய்தால் நாம் விரும்பும் நோக்கம் நிறைவேறும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
நமது பயிற்சியில் குறிப்பிட்ட நோக்கங்கள் இருப்பது முக்கியம். இதைப் பெரும்பாலோர் உணர்வதில்லை. அவர்கள், நோக்கம் என்று ஒன்று இருந்தால் நாம் அதை அடையவில்லையே என்ற ஏமாற்றம் நமக்குத் தொடர்ந்து இருக்கும் என்று நினைக்கின்றனர். இவ்வாறு நோக்கத்தைப் பற்றி நினைப்பது திறமையான வழி இல்லை. அடையக்கூடிய நோக்கமாக இருத்தல் வேண்டும். அதே சமயம் அதை செய்வது ஒரு சவாலாகவும் இருக்க வேண்டும். என்ன காரணிகள், என்ன செய்கைகள் நோக்கத்தை அடையச் செய்யும் என்றறிந்து அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு நோக்கம் இல்லாமல் பயிற்சி செய்வது பயனற்றது. நோக்கம் இல்லாவிட்டால் பயிற்சியும் சீரழிந்து பின் எதற்காகப் பயிற்சி செய்கிறோம், எதற்காகத் தியானிக்கின்றோம் என்பதையெல்லாம் மறந்து, ஏன் கடற்கரை ஓரமாக உலவச் செல்லக்கூடாது என்பது போன்ற வீண் எண்ணங்களெல்லாம் தோன்றக் கூடும். எனவே அறிவு சார்ந்த வழியில் நாம் நமது நோக்கத்தோடு உடன்பட வேண்டும். ஒரு சபதம் எடுக்கும் போது அதற்குத் தேவையான விவேகத்தோடு அது சார்ந்திருக்க வேண்டும்.
சில சமயம் தியானம் செய்யும் போது குறிக்கோள்கள் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நமக்குக் கற்பிக்கப் படுகிறது. பொதுவாகத் தியான முகாம்களில் (மூன்று நாள், பத்து நாள் காலக் கட்ட முகாம்களில்) தான் இவ்வாறு நமக்குக் கூறப்படுகிறது. இது போன்ற முகாம்களில் காலக்குறைவின் காரணமாகவும், அழுத்தமான சூழ்நிலைகளாலும் நாம் மிகக் கடுமையாக முயற்சிக்கின்றோம். விவேகம் இல்லாத கடும் முயற்சி நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஆக இது போன்ற சில நாட்களில் செய்யும் பயிற்சியின் போது நாம் குறிப்பிட்ட நோக்கத்தை அடையவேண்டும் என்று குறிக்கோள் வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. இல்லாவிட்டால், "நான் அந்த விகாரையில் இரண்டு வாரம் கழித்தேன். அந்த நேரத்தில் முதல் ஜான நிலையை (தியானத்தின் ஓர் ஆழ்ந்த ஒருமுகப்பட்ட மன நிலை) அடைந்தேன்," என்று பெருமிதம் கொள்வோம்; ஏதோ பந்தயத்தில் கோப்பையை வென்று விட்டது போல. இப்படி ஏதோ ஜான நிலையை அடைந்துவிட்டதாக நினைப்பது வீடு திரும்பும் போது ஒரு பழுக்காத மாங்காயைப் பெற்றுச் செல்வது போன்றதே. உங்கள் வீட்டு மரத்தில் ஒரு பச்சை மாங்காய் உள்ளது. ஒருவர் வந்து, "பழுத்த மாம்பழம் மஞ்சல் நிறத்தில் கனிந்து இருக்கும்," என்கிறார். அவர் சொன்னதால் நாம் மாங்காயைக் கசக்கிப் பிணைந்து கொழகொழவென்றாக்கி மஞ்சல் வண்ணத்தையும் அதன் மீது பூசி விடுகிறோம். பார்க்கப் பழுத்த மாம்பழம்போல தோன்றினாலும் அது பழுத்த பழம் அன்று. நாசம் செய்யப்பட்ட மாங்காய் மட்டுமே.
அரைகுறை ஜான நிலைகளும் இப்படித்தான். இப்படி இருக்க வேண்டும், இந்த இயல்பு கொண்டது என்று படித்திருக்கின்றீர்கள். ஆகவே இதைக் கொஞ்சம் சேர்த்து, அதில் துளி கலந்து அதன்பின், ஆகா! அதோ ஜான நிலை என்றுகொண்டாடுவது போலத்தான் இதுவும். இதுபோலக் காலக் கட்டாயத்தில் ஒன்றை அடையப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டீர்களென்றால் நீங்கள் அடையப்போவது என்னவென்றே சொல்ல முடியாது.
தியானத்தை முகாம்களுக்குச் செல்லும் போது மட்டும் பயிலாமல், தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக அதைப் பயிலும்போது நீண்ட நாள் குறிக்கோள் வைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பயிற்சி குறிக்கோளற்று, 'பயிற்சியோடு தினசரி வாழ்க்கை' என்றில்லாமல் சாதாரண அன்றாட வாழ்வாகிவிடும். ஏன் தியானம் செய்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். உங்களின் எதிர்கால நீண்ட நாள் நன்மையில் தியானம் விளைவிக்கும் பயனைத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வேண்டுவது உண்மையான மகிழ்ச்சி, நம்பகமான மகிழ்ச்சி, நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் உங்களுடன் நிலைத்து இருக்கக் கூடிய பேரின்பமே உங்களுக்குத் தேவை.
குறிக்கோள் தெளிவான பின் அதை எப்படி அடைவதென்பதற்கும், அப்படி அதை அடைவதற்குத் தொடர்ந்து உங்களை ஊக்குவிப்பதற்கும் விவேகம் தேவை. அதாவது கவனத்தை நோக்கத்திலிருந்து அதை அடைய நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் மீது திருப்ப வேண்டும். அதாவது காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டுமே அன்றிச் செய்யும் செயல்களால் விளையும் பயன்களின் மீது அல்ல.
உதாரணமாக, இங்கு அமர்ந்துகொண்டு "நான் முதல் ஜான நிலையை அடைவேன்," என்றோ, இரண்டாவது ஜான நிலையை அடைவேன் என்றோ எண்ணாமல், "இங்கு இருக்கப் போகும் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு என் ஒவ்வொரு மூச்சையும் அறிந்து கவனத்தோடு இருப்பேன்," என்று நினைக்க வேண்டும். இதுதான் காரணிகள் மீது கவனம் செலுத்துவதென்பது.
ஒரு குறிப்பிட்ட ஜான நிலையை அடைந்தோமா இல்லையா என்பது வினைப்பயன் சம்பத்தப் பட்டது. வினை இல்லாமல் வினைப்பயன் இருக்காது. எனவே விவேகம் வினையின் மீது கவனம் செலுத்தினால், வினை தானகவே வினைப்பயனை உண்டாக்கிவிடும்.
வாய்மை
அடுத்து, நோக்கத்தையும், நோக்கத்தை எப்படி அணுகுவது என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டபின் நாம் எடுத்துக் கொண்ட உறுதிப்பாட்டோடு வாய்மையோடு இருத்தல் வேண்டும். அதாவது செய்யப் போவதாக உறுதி கொண்டபின் அதனோடு நிலைத்து நிற்க வேண்டும். இடையில் மனம் மாறி அதைக் கைவிட்டு விடக்கூடாது.
நாம் செய்வது நமக்கே தீங்கு விளைவிக்கும் நிலை ஏற்படுவது மட்டுமே நமது மனம் மாறுவதற்கேற்ற ஒரு நல்ல காரணம் எனலாம். அப்போது வேண்டுமானால் நமது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யலாம். நமக்குக் கஷ்டமாக இருப்பதாலோ, தொந்தரவாக இருப்பதாலோ மனம் மாறக் கூடாது. என்ன நடந்தாலும் நாம் உறுதி செய்ததைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இப்படித்தான் நாம் நம்மையே நம்புவதற்குக் கற்றுக் கொள்கிறோம். வாய்மை, 'சச்சா' என்பது வெறும் உண்மையைப் பேசுவது மட்டும் இல்லை. நாம் எடுத்த முடிவோடு உண்மையிலேயே ஒத்து நடப்பதும் ஆகும். மனம் எடுத்த முடிவோடு நாம் ஒத்து இருக்காவிட்டால், அது, நாம் நமக்கே துரோகம் செய்வதற்குச் சமமாகும். நம்மையே நாம் நம்பமுடியவில்லையென்றால் வேறு யாரை நாம் நம்பப் போகிறோம்? வேறு ஒருவரை நம்பி இருக்கலாம் என்று விருப்பப்பட்டாலும் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை அவர்களால் செய்ய முடியாது. ஆகவே நமது தீர்மானத்தினால் வாய்மையோடு ஒத்திருக்க நாம் கற்றுக் கொள்கிறோம்.
துறத்தல்
மூன்றாவதாக நல்லதொரு தீர்மானம் செய்வதற்குத் தேவையானது துறத்தல். அதாவது உங்கள் தீர்மானத்தை வாய்மையோடு நிறைவேற்றுகையில் விருப்பமான சிலவற்றைக் கைவிட வேண்டியிருக்கும். தம்மபதத்தில் ஒரு குறட்பா உண்டு: "சிற்றின்பத்தைத் துறப்பதால் பேரின்பம் கிட்டுமானால், அந்தச் சிற்றின்பத்தை விட்டுவிட்டுப் பேரின்பத்தை நாடத் தயாராக இருங்கள்."
ஆனால் நாம் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கவனிக்கும்போது பெரும்பாலோர் நிலையான மகிழ்ச்சியைக் கைவிட்டுச் சிற்றின்பத்தை நாடுவதையே காண்கின்றோம். ஒரு நாள் எளிதான வழியைத் தேடிச் சென்றால் அடுத்த நாளும், பின் அதன் மறுநாளும் அத்தகைய வழியை நாடியே செல்கிறோம். பின் நமது நீண்ட நாள் நோக்கத்தை அடையவே முடியாது. அந்த நோக்கத்தை அடைவதற்கு வேண்டிய சக்தியும் நம்முள் உருவாகாது.
உடனடி இன்பம் தருவதாகத் தெரியும் விஷயங்களே நம்மைப் பாதையிலிருந்து விலக்குகின்றன. ஆனால் உடனடியாக இன்பம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்யும் செயலின் வினைப்பயன் கிடைத்த பின்பும் நாம் திருப்தியடைவதில்லை. எல்லாம் மாயமாகத் தோன்றுகிறது. அப்படியே கொஞ்சம் சுகம் கிடைத்தாலும் அது கிடைக்க நாம் செய்த செலவுக்கு ஈடு செய்வதாக இருப்பதில்லை.
அதனால் தான் புத்தர் புலன் ஆசைகளின் குறைபாடுகளை நம் மனதில் பதியச் செய்யக் கடுமையான உவமானங்களைக் கூறுகின்றார்.
கத்திமுனையில் உள்ள ஒரு தேன் சொட்டு.
காற்று அடிக்கும் திசையின் எதிராகத் தீப்பந்தத்தைக் கையில் உங்கள் முன்னால் பிடித்துக் கொண்டு ஓடுவது.
ஒரு சிறிய மாமிசத்துண்டைத் தன் கால் நகங்களில் கவ்விக் கொண்டு பறக்கும் ஒரு சிறு பறவை. அதைக் கவர்ந்து கொள்ளத் துரத்தும் பெரிய பறவைகள். மாமிசம் கிடைக்காவிட்டால் அந்தச் சிறு பறவையைக் கொல்லவும் தயங்காத வல்லூறுகள் அவை.
இவையெல்லாம் குரூரமான உவமானங்கள் என்றாலும் அவை ஒரு காரணமாகத்தான் குரூரமாக இருக்கின்றன. புலன் ஆசைகளில் பிடிபட்ட மனம், அதைத் துறந்து வேறு எதையும் அடைய விரும்புவதில்லை. மென்மையான, இனிமையான மன உருவங்கள் மனத்தை மாற்றப் போவதில்லை. ஆனால் புலன் இன்பங்கள் நம்மைத் திருப்திப்படுத்த மாட்டாது. அவற்றுள் சாரம்சம் ஒன்றும் இல்லை, அவை உண்மையான திருப்தி தருபவை இல்லை, அதே சமயம் உண்மையான அபாயங்களைக் கொண்டுள்ளன என்பதைத் திரும்பத் திரும்ப உங்களுக்கே உறுதியாக நினைவுபடுத்த வேண்டும்.
புலன் இன்பங்கள் சம்பந்தப்பட்ட உலகத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான மக்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு ஒரு கனவு தோன்றியது: கற்பனையாளர்கள் ஒரு சாரார் மற்றும் குற்றவாளிகள். இவர்கள் தங்களுக்கு என்ன வேண்டுமென்பதைப் பற்றி கனவு கண்டுக்கொண்டே இருப்பார்கள். மற்ற பிரிவினர் முடியாது என்ற பதிலை ஏற்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டுத் தங்களுக்கு வேண்டியதைப் பலாத்காரமாகவும் எடுத்துக் கொள்ளத் தயங்காதவர்கள். மிகவும் அசௌகரியமான உலகம் இது. புலன் ஆசைகள் சம்பந்தப்பட்ட உலகம் இப்படித்தான். ஆனால் நாம் நமது கனவுகளால் கட்டுப்பட்டு இருப்பதால், இந்தக் கனவுகளில் கண்ட விருப்பங்களை நிறைவேற்றும் போது என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அவற்றை நிறைவேற்றப் பார்க்கிறோம்.
எனவே இது போன்றவைகளைப் பிரதிபலிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது உறுதிப்பாடுகளும் விவேகத்தோடு துவங்க வேண்டும் என்பதற்கு இது ஒரு காரணம். நமது பயிற்சியின் எச்சமயத்திலும் விவேகத்தைப் பயன்படுத்தி, சிற்றின்பங்கள் உண்மையிலேயே சிறு இன்பங்கள் தான் என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை அடைவதற்காகத் தேவைப்படும் சக்தி வீண் செலவே. மேலும் பேரின்பத்தை விட்டுக் கொடுத்துச் சிற்றின்பத்தைப் பெற வேண்டுமென்பது வீண் முயற்சியேயாகும்.
அமைதி
நல்ல தீர்மானத்தை ஏற்படுத்தும் நான்காவதும் இறுதியுமான இயல்பு அமைதி ஆகும். உங்கள் நோக்கத்தை அடையும் நெறிமுறையில் மனம் அமைதி யாக இருக்க முயற்சிக்க வேண்டும். அதைப் பெறும் வழியில் ஏற்படும் கஷ்டங்களும், துறக்க வேண்டியவனவற்றையும், செலவு செய்யப்பட்ட நேரத்தையும், இன்னமும் செலவிடப்பட வேண்டிய காலத்தையும் நினைத்துச் சங்கடப்பட வேண்டாம். உடனடியாகச் செய்யவேண்டிய அடுத்த படியின் மீது மட்டும் கவனம் செலுத்தி நிதானமான மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் அமைதிக்கு இரண்டாவது பொருள் என்னவெனில் உங்கள் நோக்கத்தை அடைந்த பிறகு மனதில் ஓர் அமைதி நிலைக்க வேண்டும். நோக்கத்தை எட்டிய பிறகும் மனம் கிளர்ச்சியுடன் காணப்பட்டால் நீங்கள் தவறான நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்பதை அது குறிக்கும். நோக்கத்தை அடைந்த பிறகு மேலும் ஆழமான அமைதியும், சாந்தமும் நிலைக்க வேண்டும்.
ஒரு நோக்கத்தை அடையப் பாடுபடும்போது ஓரளவு அதிருப்தி உண்டாவது இயற்கை தான் என்று புத்தர் கூறினார். உங்களுக்கு ஒன்று வேண்டும். ஆனால் அதை இன்னமும் அடையவில்லை. ஒரு சில மக்கள் அந்த அதிருப்தியை நீக்கவேண்டுமானால் உங்கள் குறிக்கோளின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். குறிக்கோள் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது உங்களையே மட்டப் படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அந்த அதிருப்தியை நீக்க திறனற்ற வழி இது. திறமையான வழி என்ன வென்றால் படிப்படியாக நோக்கத்தை அடைய, செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்து உங்கள் நோக்கத்தை எட்டுவது தான். அது நல்ல நோக்கமாக இருந்தால், பின்னர் அந்த அதிருப்தி மறைந்து அமைதி உண்டாகும்.
எனவே உங்கள் தியானப் பயிற்சியிலோ உங்கள் வாழ்க்கையிலோ குறிக்கோள்களைப் பற்றி நினைக்கும் போது இந்த நான்கு இயல்புகளை மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முயலுங்கள். அவை: விவேகம், வாய்மை, துறத்தல் மற்றும் அமைதி.
குறிக்கோளைத் தேர்ந்தெடுக்கும் போதும் அதை அடைய எடுக்கும் பாதையிலும் விவேகத்தோடு செயல்பட வேண்டும். அது மெய்யறிவுள்ள, பயனுள்ள நோக்கம் என்பதை முடிவு செய்த பின் அந்த உறுதிப்பாட்டோடு வாய்மையோடு இருக்க வேண்டும். அதற்குத் துரோகம் செய்ய வேண்டாம். உங்கள் பாதையை மறிக்கும் சிற்றின்பங்களைத் துறக்க முடிவெடுங்கள். இறுதியாக, சாந்தமான வழியில் உங்கள் நோக்கத்தை அடையப் பாடுபடுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் அகலக்கால் வைக்காமல் - விழுந்துவிடும் அளவுக்கு இல்லாமல் - உங்களையே வளர்த்துக் கொள்வீர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக உங்களையே நீங்கள் எண்ணியதைவிட வளர்கையில் அந்தக் கொஞ்சகொஞ்ச வளர்ச்சியும் இறுதியில் பெருமளவான வளர்ச்சியாக முடிவுறுகிறது. நீர் சொட்டு சொட்டாக விழுந்தாலும் கூஜாவை நிரப்புவது போல, உங்கள் பயிற்சியும் உங்களை உங்களால் நினைத்தும் பார்க்க முடியாத இடங்களுக்கு எடுத்துச் செல்லும். -- தணிசாரோ பிக்கு
நபியின் அறிவுரைகள்
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்
வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில்
வெளியானது…
நபியின் அறிவுரைகள்
இறை அச்சத்தால்
குறைவாக சிரி! நிறைய அழு!
“நான் அறிவதை
நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்.”
“செல்வத்திலும்
தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே தம்மைவிடக் கீழானவர்களை
அவர் பார்க்கட்டும்.”
ஒரு முறை நபி
அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார். அல்லாஹ் நன்மைகளையும்
தீமைகளையும் அவை இன்னின்னவை என நிர்ணயித்து எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான்.
அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என மனத்தில் எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும்
அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக் அல்லாஹ் பதிவு செய்கின்றான். அதை அவர்
எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக,
எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கின்றான். ஆனால் ஒருவர் ஒரு தீமை
செய்ய எண்ணி, அல்லாஹ்வுக்கு அஞ்சி அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத்
தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து
முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகின்றான்.
விசாரணை ஏதுமின்றி
சொர்க்கம் செல்பவர்கள்: “என் சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம்
செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள், பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்.
தம் இறைவன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவனையே சார்ந்திருப்பார்கள்”.
நம்முடைய செல்வம்
எது? “உங்களில் யாருக்காவது தம் செல்வத்தைவிடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக
இருக்குமா? என்று நபிகள் கேட்க, அதற்கு தோழர்கள், “இறைதூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே
வாரிசுகளின் செல்வத்தைவிட எங்களின் செல்வமே விருப்பமானதாகும். என்று பதிலளித்தார்கள்.
அவ்வாறாயின், ஒருவர் இறப்பதற்கு முன் அறவழியில் செலவிட்டதே அவரின் செல்வமாகும். இறந்த
பின்பு விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும் என்று நபிகள் மொழிந்தார்கள்.
வேலையும் கூலியும்
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்
வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில்
வெளியானது…
வேலையும் கூலியும்
நிலக்கிழார் (பண்ணையாளர்) ஒருவர் தம்
தோட்டதில் வேலையாள்களை தேடும் நோக்கில் விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு
ஒரு ரூபாய் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு
அனுப்பினார். பின்பு பத்து மணிவேலையில் அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர்
வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், "நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப்
போங்கள் நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்" என்றார். அவர்களும் சென்றார்கள்.
மீண்டும் மதிய மணிவேலையிலும் வெளியே சென்று அப்படியே செய்தார். மதிய மணிவேளையிலும்
வெளியே வேறு சிலர் நிற்பதைக் கண்டார். அவர்களிடம், "நாள் முழுவதும் வேலை செய்யாமல்
ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரைப் பார்த்து,
"எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை" என்றார்கள். அவர் அவர்களிடம், "நீங்களும்
என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்" என்றார்.
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர்
தம் மேற்பார்வையாளிடம், "வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில்
வந்தவர்வரை அவர்களுக்குறிய கூலி கொடும்" என்றார். எனவே மதிய மணிவேளையில் வந்தவர்கள்
ஒரு ரூபாய் வீதம் பெற்றுக் கொண்டனர். அப்போது முதலில் வந்தவர்கள் தங்களுக்கு மிகுதியாகக்
கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கும் ஒரு ரூபாய் வீதம் தான் பெற்றார்கள்.
அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டபோது அந்நிலக்கிழாருக்கு எதிராக முணுமுணுத்து, "கடைசியில்
வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும்
வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கி விட்டீரே" என்றார்கள். அவரோ
அவர்களுள் ஒருவரைப் பார்த்து, "தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர்
என்னிடம் ஒரு ரூபாய் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு
போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்.
எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதாய்
உமக்குப் பொறாமையா?" என்றார்.
இதில் திராட்சைத்தோட்டம் விண்ணரசாகவும்,
பண்ணையாளர் கடவுளாகவும் கிறிஸ்தவர் பணியாட்களாகவும் உவமானப் படுத்தப்பட்டுள்ளனர். இதன்
பொருள் விண்ணரசிற்கு வேலை செய்பவர்கள் யாவரும் இறுதியில் பெறப்போகும் ஊதியம் சமன் என்பதே.
இவ்வுலகில் கடவுளுக்கு சிறிய அளவில் வேலை செய்தவனும் பாரிய வேலைகளை செய்தவனும் விண்ணரசில்
ஒரே மாதிரியாகத்தான் நோக்கப்படுவார்கள். அதாவது விண்ணரசில் தலைவர் சீடர் சிறியவர் பெரியவர்
என்ற பேதம் கிடையாது.
Tuesday, April 4, 2017
திரு அருட்பெருஞ்ஜோதி அகவர்ல் உரை
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” மாத
மின்னிதழில் ஏப்ரல்-2017 ஆம் மாதம் வெளியானது…
திரு அருட்பெருஞ்ஜோதி
அகவல் உரை
ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி - 24
ஓதாது உணர்தல்:
‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்பது உலக நீதி. அற நூல்களை படிக்காமல் ஒரு நாளும்
இருக்கக் கூடாது என்பது உலகநாதரின் அறிவுரை.இவ்வறிவுரை உலகியர்களுக்கு மிகவும் பொருந்தும்.உலகியலை
சாராத ஞானிகளுக்கு உலகியல் அற நூல்களை படித்துதான் அறிய வேண்டும் என்ற நிலை இல்லை.அதற்கு
மிகச்சிறந்த அன்மை காலத்து உதாரணம் நமது வள்ளற்பெருமான் ஆவார்.இவர் பள்ளிக்குச் சென்று
படிக்கவில்லை என்பதும், பள்ளி கல்விகளில் விருப்பமில்லாமல் இருந்தார் என்பதும் வரலாறு.
திருவருட்பா என்ற அருள் நூலினை ஆறு திருமுறைகளாக
செய்யுள் வடிவில் இயற்றினார்.செய்யுள் வடிவம் என்றால் அதற்கு தமிழ் இலக்கணம் படித்திருக்க
வேண்டும்.தமிழ் எழுத்துக்களை எழுத கற்றிருக்க வேண்டும்.மேலும் தமிழ் உலகிலேயே உரைநடை
முறையினை முதன் முதலில் வள்ளலாரே அறிமுகப்படுத்தினார்.செய்யுள் வடிவில் மட்டுமே தங்களது
கருத்துக்களை உலகிற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் உரைநடை வடிவில் தமிழை
இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.இவ்வளவு அறிவும் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பது
ஆச்சரியப்படத்தக்க ஒன்று.
ஆனால் வள்ளற்பெருமான் சொல்கின்றார், “ பத்து
ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம்.சூல்வண்டி
ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்சியால் படிக்கச் சிறிய
உபாசனைச் சகாயத்தால் பெறமுடியும்.அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும்
கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு
கணத்தில் படித்துக் கொள்ளலாம்.இது சத்தியம்.” (பக்கம்-400)
ஒரு ஆள் சுமை என்பது சுமார் 60 கிலோ என்று
வைத்துக்கொள்வோம்.பத்து ஆள் சுமை என்பது 600 கிலோ ஆகும்.600 கிலோ என்பது ஒரு வண்டிப்பாரம்.
இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது 2,40,000 கிலோ ஆகும். 2,40,000 கிலோ கொண்டது ஒரு சூல்வண்டிப்
பாரமாகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது 24,00,00,000 கிலோ ஆகும். 24 கோடி கிலோ எடையுள்ள
(2,40,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில் அதிதீவிர முயற்சி எடுத்தால்
படித்து முடிக்கலாம் என்பது வள்ளலாரின் கணக்கு.
இன்னும் இதனை விளக்கமாகப் பார்ப்போம். நமக்குத்
தெரிந்த ஆறு திருமுறைகள் கொண்ட திருவருட்பா நூல் என்பது சுமார் 10 கிலோ இருப்பதாகக்
கொண்டால், 2கோடியே 40 லட்சம் திருவருட்பா போன்ற நூல்களை நாம் இந்த ஜென்மத்தில் அதிதீவிர
முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம் என்றாகின்றது. அதாவது ஆறுதிருமுறை கொண்ட திருவருட்பா
நூலை 2,40,00,000 முறை முழுதும் படிப்பதற்கு சமம். ஒருவன் ஒரு ஜென்மத்தில் 120 வயதை
ஆயுளாகக் கொண்டால், முதல் மற்றும் இறுதி 10 ஆண்டுகளை கழித்துவிட்டால், மீதம் உள்ள
100 ஆண்டுகளில் 36,500 நாட்களே அவனுக்கு உள்ளது.இந்த 36,500 நாட்களில் அதிதீவிர முயற்சி
எடுத்து ஒரு நாளைக்கு 657 முறை 10 கிலோ எடையுள்ள நூல்களை படித்து முடிக்க வேண்டும்.இது
முடியுமா என்றால், சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும் என்கின்றார் வள்ளலார்.
இவ்வாறு ஒருவன் ஒரு ஜென்மத்தில் ஒரு நாளைக்கு
657 - 10 கிலோ எடையுள்ள நூலை 100 வருடம் வரை படித்துக்கொண்டு, அவன் மீண்டும் மீண்டும்
இதே மாதிரி 1000 ஜென்மம் எடுத்து தொடர்ந்து படித்துக்கொண்டு வந்தால், 2400,00,00,000
(2,400 கோடி) நூல்களை படித்து முடித்திருப்பான். என்ன… தலை சுற்றுகிறது அல்லவா!!!....!!!
(இவ்வுலகில் இவ்வளவு நூல்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்). 1000 ஜென்மத்தில் 10 கிலோ
எடையுள்ள 2,400 கோடி புத்தகங்களை படிப்பவன் ஒருவன், அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால்
அறியத் தொடங்கினால், இவ்வளவு நூல்களையும் ஒரே கணத்தில் / ஒரே நொடியில் படித்துக்கொள்ளலாம்
என்கின்றார் வள்ளலார். இந்த அருள் செய்தியினை சும்மா படிக்கவே தலைசுற்றுகின்றதே… ஒரு
வகையில் சந்தேகம் எழுகின்றதே… என்றெல்லாம் நாம் நினைப்போம் என்றுதான்… வள்ளலார் இந்தச்
செய்தியினை சொல்லி முடித்தவுடன்… “இது சத்தியம்” என்று இச்செய்திக்கு ஒரு முக்கியத்துவம்
கொடுக்கின்றார்.“இது சத்தியம்” என்று சொன்ன பிறகு இதனை யாரேனும் அலட்சியப் படுத்த முடியுமா?
இப்படித்தான் வள்ளற்பெருமான் ஓதாது இவ்வுலகில்
உள்ள நூல்களை எல்லாம் ஒரே நொடியில் படித்து முடித்தார்.அவர் தம்முடைய அனுபவத்தைத்தான்
மேலே உரைநடையிலும், திரு அகவல் வரிகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
அருள் முன்னிடத்தில் சுத்த சிவ நோக்கம் கொண்டு
கலையறிவும், அருளறிவும் வேண்டும் என நின்றால், ஓதாது உணர்ந்திடும் ஒளி / அறிவு கிடைக்கும்.‘அவ்வாறான
ஒளியினை எந்தனுக்கு கொடுத்ததோடு, எனக்கு ஆதாரமாகவும் / சாட்சியாகவும் இறைவன் இருக்கின்றான்’
என்கின்றார் வள்ளலார்.அதாவது தாம் ஓதாமல் உணர்ந்ததற்கு சாட்சியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே
தாம் எழுதிய திருவருட்பாவாகவும், தாம் படித்து அனுபவிக்கும் சாகாக் கல்வியாகவும் இருக்கின்றார்
என்கின்றார்.
ஒளவிய மாதியோ
ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து
மருட்பெருஞ் ஜோதி – 26
ஒளவியம் முதற்கொண்டு
மற்ற ஆறு குணங்களையும் தவிர்க்க வேண்டும்.
பற்று, வஞ்சகம்,
ஈயாமை, பேராசை, மதியாமை, சகியாமை இவைகளே கீழ்த்தரமான ஆறு குணங்கள் ஆகும். இவைகளை முறையே
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்று வடமொழியில் சொல்வர்.
-- ஐயமுறுங்
காமக் குரோதலோப
மோகமதங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின்
தலைமிதித்து –
(68 நெஞ்சுவிடுதூது- உமாபதிசிவம்)
ஒளவியம்: ஒளவியம்
என்றால் பொறாமை. என்னால் முடியாததை அவன் செய்துவிட்டானே! என்கின்ற ஏக்கமானது நம்மை
தீயவழியில் செல்ல வற்புறுத்தும். காரிய சித்தி பெற்றவனை எண்ணும்போதெல்லாம், அவன் மீது
நமது எண்ணம் தாக்குதல் நடத்தும். அந்த எண்ணமே நம்மை அவனுக்கு எதிராக தீய வழியில் செல்ல
வழிவகுக்கும். எனவே ஒருவரை பார்த்து பொறாமை அடைதலை தவிர்க்க வேண்டும்.
பற்று: செல்வம், பொருள், தாய், தந்தை, மனைவி, கணவன்,
மகன், மகள், சகோதரன், சகோதரி இவர்களின் பால் அதீத பற்று வைத்து அதன் மயமாய் ஆவது காமம்
எனப்படும். இப்படிப்பட்ட காமமும் நமக்கு தீமையே தரும். எனவே இவற்றின்பால் அவா மயமாய்
இருக்கலாம். சன்மார்க்கத்தில் அவாவும் கூடாது.
வஞ்சகம்: ஒருவருக்கு
கெடுதி விளைவிக்க எண்ணம் கொள்வது குரோதம் ஆகும். கெடுவான் கேடு நினைப்பான் எனவே நாம்
ஒருவருக்கு கெடுதி செய்தால், அக்கெடுதியால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே குரோதம்
தவிர்க்கப்படவேண்டும்.
ஈயாமை: தனது
சம்பாத்தியத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்கக்கூடாது என்னும் எண்ணம்
கொள்ளுதல் லோபம் எனப்படும். பொருள் சேர்க்க வேண்டும் என்கின்ற அதீத எண்ணம் இருப்பவனால்
பிறருக்கு தருமம் தானம் செய்ய இயலாது. அப்பொருளால் பிறருக்கும் பயனில்லை, அவனுக்கும்
பயனில்லாது போய்விடும். எனவே லோபம் கூடாது. ‘எட்டி பழுத்தென்ன? ஈயாதான் வாழ்ந்தென்ன?
பேராசை: தனக்கு
இருக்கும் பொருள் போதாதென்று இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும்
எண்ணம் கொண்டு செயல்படுதல் மோகம் எனப்படும். பார்க்கும் பொருள்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ள
வேண்டும் என்ற மோகத்தால் விளைவது தீய செயல்களே. அதனால் மோகத்திலிருந்து விடுபடவேண்டும்.
மதியாமை: பணம் பொருள் ஆகியவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டு,
அதனால் வருகின்ற அகங்காரத்தால் மற்றவர்களை அலட்சியப்படுத்தி பேசும் குணத்தை மதம் என்கிறோம்.
பிறரை மதியாமல் மதம் கொண்டு நடந்தால் அழிவு அவனை தேடி வருகின்றது எனப்பொருள். எனவே
மதத்தை தவிர்க்க வேண்டும்.
சகியாமை: தன்னைப்
போல் மற்றவர்களும் சுகம் பெறுவதை பொறுக்காமல், அவர்களுக்கு கேடு விளைவிக்கும் செயலை
மாச்சர்யம் என்கின்றோம். நம்மைப்போல் பிறரும் சுகமடைவதை சகிக்காமல் அவர்களுக்கு துன்பம்
விளைப்பதை தவிர்க்க வேண்டும்.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம்
ஆகிய ஆறு இழி குணங்களுக்கும் முதல் / கர்த்தா எதுவென்றால் அது பொறாமை என்ற ஒளவியம்
ஆகும். எனவே பொறாமைப் படுவதை தவிர்த்தாலே மற்ற இழிகுணங்கள் ஆறையும் எளிதில் தவிர்த்துவிடலாம்.
பொறாமை மற்றும் உள்ள ஆறு குணங்களில் அகப்படாமல் இருக்கும் மனிதர் எவரோ அவரே உத்தம மனிதர்
ஆவர். இப்படிப்பட்ட இழிகுணங்களின் இயல்புகளை நாம் மேற்கண்டவாறு படித்துக்கொண்டு வரும்போதே,
நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எந்த இழிகுணம் கொண்டிருக்கிறோம் என்பதை நம்மால் தெரிந்துக்கொள்ள
முடியும். தெரிந்துக்கொண்டு அக்குணங்களில் இருந்து வெளிவர விரைவில் நாம் முயற்சிக்க
வேண்டும்.
அவ்வியல் என்றால் அகரம், வகரம் என்றெல்லாம்
பொருள் உண்டு. “அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்…942” என்று திருமந்திரம் உரைக்கின்றது.
இங்கு வகரமான காற்று பாய… என்று பொருள்படுகின்றது. ஆனால், இவ்விடத்தில் வள்ளற்பிரான்
‘அவ்வியல்’ என்பதை ‘அப்படிப்பட்ட தன்மையினைக் கொண்ட (அந்த+இயல்)’ என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.
இவ்வாறு பொறாமையினை தவிர்த்து அதன் மூலம் வருகின்ற
ஆறு இழிகுணங்களையும் தவிர்த்து நற்செய்கையே தங்களுடைய இயல்களாய் கொண்டுள்ள பேர்களை
வழுத்தும் (வாழ்த்தும்) இறைவனே. நற்செய்கை
யுடையோரை இறைவன் வாழ்த்துகின்றார்.
திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி - 28
திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை அகர வரிசையில்
அருளிச்செல்கின்றார் வள்ளற்பிரான். அருட்பெருஞ்ஜோதி, அருட்சிவ நெறி, ஆகம முடி… ஒளவியம்
என்று முடிந்த பிறகு ஆய்த எழுத்தில் அடுத்த வரி துவங்க வேண்டும்.
தமிழில் ஆய்த
எழுத்து துவக்கத்தில் வராது. தனக்கு முன்னர் ஒரு குறிலையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய்
எழுத்தையும் பெற்று நடுவில் மட்டுமே ஆய்த எழுத்து வரும். அஃது, இஃது, எஃகு, கஃசு, பஃது, ப்ஃறி, கஃடு போன்றவை
சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி/மென்மையாக்கி காட்டுவது
என்று பொருள். ஆய்தல் என்னும் உரிச்சொல், இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம்
கூறுகின்றது. மேற்காணும் வல்லின எழுத்துக்களை மென்மையாக்கி காட்டியிருப்பதை கவனியுங்கள்.
இவ்வெழுத்தின்
வடிவம் மூன்று புள்ளிகளை கொண்டு முக்கோண வடிவில் இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை,
முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பல பெயர்களும் உண்டு. உயிரெழுத்தும் இல்லாமல்
மெய்யெழுத்தும் இல்லாமல் உயிர்மெய் எழுத்துமில்லாமல் தனித்த நிலையைப் பெற்று தனித்து
நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் இது ‘தனிநிலை’ என்று பெயர்பெற்றது.
வள்ளற்பிரான்
இவ்வெழுத்திற்கான ‘தனிநிலை’ என்கின்ற சிறப்புப் பெயரையும் அதன் காரணத்தையும் கருத்தில்
கொண்டு, தாம் அனுபவித்த இறைநிலை எப்படிப்பட்டது என்பதனை தெரிவிக்க ‘திருநிலை’ என்கின்ற
வார்த்தையினை இட்டு துவங்குகின்றார். அதாவது ‘திருநிலை’ என்பதனை ‘தனிநிலை’க்காண எழுத்துருவில்
(ஃ) கொண்டு வந்திருக்கின்றார் வள்ளலார்.
இறைநிலை எப்படி இருக்கின்றது என்றால், “ஃ”
என்கின்ற குறியீட்டின்படி நமது பிண்டத்தில் அண்டமாகிய தலைப்பகுதியில் வலது கண், இடது
கண் மற்றும் நெற்றிக்கண் இவை மூன்றையும் இணைத்தால் “ஃ” போன்றதொரு வடிவம் கிடைக்கும்.
இந்த வடிவ நிலையிலேயே இறைநிலை விளங்குவதாக அறிவிக்கின்றார். நமது வலது கண்ணை தனிவெளி
என்கின்றார். எப்பொருளும் இல்லாத வெட்டவெளியாக தான் மட்டுமே தனித்து இருக்கின்ற வெளியே
தனிவெளியாகும். இந்த தனிவெளிதான் சுத்த சன்மார்க்க சுகத்தை தரவல்லது. சுத்த சன்மார்க்க
சுகம் என்பது என்ன? என்பதை அடுத்த அகவல் வரிகளில் காணலாம்.
இடது கண்ணை
சிவவெளி என்கின்றார். சிவம் விளங்குமிடமாக இவ்வெளி உள்ளது. சர்வ வல்லமையுடைய வெளியாக
நமது இடது கண் விளங்குகின்றது. இவ்வாறு இரண்டு வெளிகளும் நமது பிண்டத்தில் வெளியே இருக்க,
(நமது பார்வைக்கு அகப்படும்படியாக) இவையிரண்டு வெளிகளுக்கும் மேலாக நடுவில் தாம் வெளிப்படாமல்
உள்ளுக்குள் இருப்பது திருநிலையாகும். அதாவது நடுக்கண்/மூன்றாவது கண். இந்த மூன்றாவது கண்ணே இறைநிலையாக உள்ளது. அதுவே திருநிலை.
அனுபவத்தில் வலது கண்ணான தனிவெளியானது சிவமாகத்
தோன்றும். இடது கண்ணான சிவவெளியானது சத்தியாகத் தோன்றும். இவையிரண்டையும் திருநிலை
என்கின்ற மூன்றாம் கண்ணோடு இணைத்து பார்த்தால் முக்கோணம் போன்ற மாடம் போன்ற அமைப்பு
தோன்றும். அந்த மாடம் போன்ற அமைப்பே அருள்வெளியாக விளங்குகின்றது. அருள்வெளியில்தான்
தனிவெளியும் சிவவெளியும் திருநிலையும் உள்ளது. “ஜோதியுள் ஜோதியுள் ஜோதி” இதில் குறிப்பிடப்பட்டுள்ள
முதல் ஜோதி என்பது தனிவெளி, இரண்டாம் ஜோதி என்பது சிவவெளி, மூன்றாம் ஜோதியானது திருநிலையாகும்.
அருள்வெளி என்னுமிடத்தில் இம்மூன்று ஜோதிகளும் பிரகாசிக்கின்றன. “ஆண்டவர் இப்போது தீப
முன்னிலையில் விளங்குகின்றபடியால்…” என்று தமது உபதேசமாகவும் இக்கருத்தினையே வள்ளற்பெருமான்
கூறுகின்றார். எங்கெல்லாம் தீபம் எரிகின்றதோ அதன் முன்னிலையில் அருள்வெளி தோன்றும்.
அந்த அருள்வெளியில்தான் இறைவன் ஓங்குகின்றான் (பதி வளர்), இறைவன் அருளுகின்றான். புறத்திலே
தீப முன்னிடத்திலும் அகத்திலே முக்கண் மாடத்திலும் திருநிலை விளங்குகின்றது.
சுத்தசன் மார்க்க
சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை
யருட்பெருஞ் ஜோதி – 30
அருட்சுகம்,
தனித்த பெரும் சுகம், அழியாச்சுகம், கருணைச் சுகம், சும்மா இருக்கும் சுகம் என்று பலவாறு
வள்ளற்பெருமான் கூறுவதெல்லாம் இந்த சுத்த சன்மார்க்க சுகத்தினைத்தான். இறைவனுக்கே உரிய
தனிச்சுதந்தரத்தை யார் ஒருவர் பெறுகின்றாரோ அவருக்கே இந்த சுத்த சன்மார்க்க சுகம் கிடைக்கும்.
இறைவனுடைய இறையாண்மையை பெறுவதே சுத்த சன்மார்க்க சுகமாகும். அருட்பெருஞ்ஜோதியின் ஆட்சியினை
பெறுவதே சுத்த சன்மார்க்க சுகமாகும். அச்சுதந்தர சுகத்தை வள்ளற்பெருமான் ஒருவரே இவ்வுலகில்
பெற்றார்கள்.
அப்படிப்பட்ட தனித்த பெரும் சுகத்தை நமக்கு
அளிப்பது தனிவெளியும் சிவவெளியும் திருநிலையும் சேர்ந்த முக்கோண அமைப்பான, முச்சுடர்களும்
இணைந்து ஒருசுடராக இயங்குகின்ற அத்தகைய சிற்சபையே ஆகும். நெற்றிகண்ணுக்கு திருநிலை
/ சிற்சபை என்றெல்லாம் பெயர். எனவே சிற்சபை என்று சொன்னாலே அங்கே தனிவெளியும் சிவவெளியும்
இணைந்து அருள்வெளி வெளிப்பட்டு விடுகின்றது. அந்த அருள் வெளியில் கிடைப்பதே சுத்த சன்மார்க்க
சுகமாகும்.
--தி.ம.இராமலிங்கம்
பரஞ்சோதி மகான்
காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” மாத
மின்னிதழில் ஏப்ரல்-2017 ஆம் மாதம் வெளியானது…
பரஞ்சோதி
மகான்
நமது
பரஞ்சோதி மகான் அவர்கள், இந்திய நாட்டின் தென்பகுதியில் "காண்ஸாபுரம்" என்ற
ஊரில் 2-5-1900-ஆம் ஆண்டு இரவு 8.30 மணியளவில் பிறந்தார்கள்.
ஞான உதயம்
தாம்
வசித்து வந்த ஊரில் 11.11.1911-ஆம் தேதி பகல் 11.00 மணிக்கு மேலை நாட்டு வல்லரசர் ஒருவரின்
முடிசூட்டு விழா வைபவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவதைக் கண்ணுற்ற போது, நமது குருபிரான்
அவர்கள் இதயத்தில், அரசனைக் கடந்த பெரியவனாகிய கடவுளைக் காணவேண்டும் என்ற ஏக்கம் உதயமாயிற்று
அவ்வேகத்தின் விளைவே கடவுளின்பால் காதலாகி, அக்காதலின் வேகவிவேகமே "பரஞ்சோதி"
மகானாக விளைந்ததாகும்.
குருபிரான்
அவர்கள் 1919-ஆம் வருடத்திலேயே தனது இளமையில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது
தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. 11.11.1911-ல்
ஏற்பட்ட ஏக்கத்தின் காரணமாகவே தனது வாழ்வோடு பற்பல யோக அப்பியாசங்களிடனும், மந்திர
தந்திர ஜப தபங்களுடனும் மிக உருக்க நீர் வடித்து அரசனை கடந்த கடவுளை காணவேண்டும் என்ற
தீவிரக் காதலால் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டு, தவ புனித வாழ்வு வாழ்ந்து வந்தார்கள்.
அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த பெரியவர் ஒருவர் தமது குருபிரானுடைய நல்லெண்ணத்தையும்
ஏக்கத்தையும் அவரது விடாமுயற்சியையும் நன்கு கவனித்து வந்தார். விடிவெள்ளி தோன்றும்
முன்பாகவே நமது குருபிரான் ஆலயத்திற்கு வருவதையும், வழிபாடுகள் செய்வதில் மிகுந்த உருக்கமிருப்பதையும்,
அவ்வாலயத்திலேயே வசித்து வந்த அவர் நன்கு கவனிக்க ஒரு சந்தர்ப்பமாக விளங்கிற்று.
எனவே
அந்தப் பெரியவர் நமது மகானை வலியநண்பராக்கிக் கொண்டார். நட்பு முதிர்ந்து இரங்கூன்
புதுக்காண் ரோட்டின் அருகாமையில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 07.11.1938-ஆம் தேதி
11.00 மணி 11 நிமிடத்திற்கு அந்த பெரியவர் மூலம் நமது மகான் உபதேசம் பெற்றார்கள். குருபிரான்
அவர்கள் சுமார் 21 ஆண்டுகளாக உருக்க நீர் வடித்துத் தேடிய பொருளை அடையும் மார்க்கம்
கிடைத்துவிட்ட ஊக்க வேக விவேகத்தின் விளைவால் "பரஞ்சோதி" என்ற தன்னிலையாகிய
பேரின்ப நிலை அடைந்தார்கள்.
நமது
குருபிரானைக் கண்ணுற்ற அப்பெரியவர் மிக்க மகிழ்ந்து சிலாகித்தார். 07.07.1938 முதல்
தமக்கு தெரிந்த இந்த உபதேசத்தை பிறருக்கும் வழங்கலாம் என்ற அனுமதியையும் வழங்கினார்.
08.07.1938-ல் இரங்கூன் டவுனில் சென்று கொண்டிருக்கும் சமயம் ஒரு பெரியவர் மகானைப்
பார்த்து, தாங்கள் ஒரு பெரிய குருவைப் போல் விளங்குகிறீர்கள் என்று கூறினார். அன்றிலிருந்து
தம் தொழில், மதம் யாவும் விட்டுவிட்டுத் தாம் ஒரு குருவாக வாழ்வது என முடிவெடுத்துக்
கொண்டார்கள். அந்நாள் முதல் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற நற்கருணையினால்,
உலக மக்கள் அனைவருக்கும் இந்த "குண்டலினி" உபதேசத்தை வாரி வாரி வள்ளலாக வழங்கினார்கள்.
ஜெகத்
மகாகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அவர்கள் 1939-ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதம் இந்தியா வந்தார்கள். 07.01.1938ந் தேதி 11.00 மணி 11 நிமிடத்திற்கு மலர்ந்த பரஞ்சோதி
என்ற மலர், ஞானச் செல்வத்தால் உலக மக்களின் அறிவிற்கு எட்டாத அளவிற்கு உயர்ந்தும்,
கருணை என்ற அருட்செல்வத்தால் இப்பூவுலகெங்கும் அருள் மணம் கமழ்ந்து, கோடிக்கணக்கான
மக்களின் உள்ளங்களில் அவ்வருள் மணம் வீசிப்பரவி, பரிசுத்தமாகப் பிரகாசிப்பதற்கு காரணப்
புருஷராக நமது ஜெகத்குரு திகழ்ந்து வந்தார்கள். 1944-ஆம் ஆண்டு முதல் இந்திய நாடு மட்டுமின்றி
மேலை நாடுகள் முழுவதும், தாம் ஒருவராக தனித்தே சென்று எல்லா நாடுகளிலும், ஆங்காங்கே
உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.
பர்மா
மொழியை தாய்மொழி போல் பேசியும் எழுதியும் பழகியிருந்த தமது குருபிரான் ஞானபீடம் ஏறியதும்
"நான் - கடவுள்" என்ற தத்துவ தவஞான நீதிநூலை தமிழில் அருள் பாலித்துள்ளார்கள்.
உலகமக்கள் அனைவருக்கும் அவரவர்களின் தகுதிக்கேற்பச் சமாதானமாக வாழ வேண்டியதற்குள்ள
உணவு, உறக்கம், உடை, தொழில், விவசாயம், அரசியல், விஞ்ஞானம், பேரின்பநிலை முதலியவற்றிற்குச்
சரியான விளக்கங்களை எல்லா நாட்டிற்கும் பொதுவாக எளிமையாக விளக்கிக் கூறுவதற்காக
"உலக சமாதான ஆலயம்" சென்னையில் 20.07.1946-ல் குருபிரானால் தொடங்கப்பட்டது.
எங்கும் பூரணமான இருட்டில் சூனியத்தில்
ஒன்றுமில்லாது ஓர் அணுவாயிருந்த கடவுள் என்ற அனாதியாயுள்ள ஆதி, நான் என்ற துணிகரமாகி
வியாபகத்தில் நினைப்பாகி வேகத்தில் சப்தமாகி, உருவத்தில் நெருப்பாகி என்றென்றைக்கும்
குறைந்திடாப் பெருக்கம் கொண்ட அந்நெருப்பின் பொறிகளே அணுக்களாகி எங்கும் நிறைந்த இருட்டில்
அவ்வணுக்களே வேகமாக பரவி அவ்வேகங்குறைந்ததும், ஆங்காங்கு அவவணுக்களின் இயல்பால் ஒன்றுசேர்ந்து
அச்சேர்க்கையால் சுழலுதல், விலகுதல், உருளுதல், புரளுதல் அடங்கிய இழுக்குஞ்சக்தியுள்ள
நட்சத்திர கிரக பூமிகளாகி அணுக்களே அணுக்களுக்கு வாகனமும் உணவுமாகி, அதனால் உயிர்களின்
வளர்தல், நகர்தல், நடை, ஓட்டம் யாவுமாகி தாவரம் மற்ற உருவங்கள் உட்பட ஊற்றுணர்ச்சியும்,
தோற்றமும் உள்ள சீவராசிகளாகி, மனிதர்களாகி சுவை, நோவு, இன்பம் இவைகளில் சூக்குமமாகி,
அம்மனிதர்களின் அனேக காரியங்களால் உள்ள தொழில் அனுபவகாரணத்தால் பேச்சாலும், நுண்ணறிவாலும்,
அறிவு உயர்வாகி அதனால் பக்தியோக ஆராய்ச்சிகளாகி, முடிவில் தன்னைத்தான் அறிந்து, இவைகள்
யாவும் தன் வேறுபாடுடைய பரிணாம வேகவிளைவாக இருப்பதை விளக்கமாக அறிந்துகொள்வதே ஞானமாகும்.
இதுவே பிரபஞ்சத் தத்துவம்.
எப்பொருளையும் எடுத்து ஆராய்ந்தீர்களானால்,
இருள், துணிவு, நினைவு, ஓசை, ஒளி, அணுக்கள் இவை யாவும் பிரிக்கமுடியாது ஒன்று சேர்ந்து
இருப்பதை அறியலாம். இதை அறியாதபோது கடவுள் ஒருவன் தனியாக இருக்கின்றான் என்று தேடவும்
சொல்லவும் வேண்டியதாக இருந்தது.
கடவுளின் பெரிய அம்சம் - 9
1.
நான்
என்ற துணிவு
2.
நினைப்பு
அல்லது வியாபகம்
3.
வேகமாகிய
நாதசப்தம்
4.
நெருப்பு
அல்லது சோதி
5.
அணுக்களாகிய
வெட்டவெளியான ஆகாயம்
6.
நீராகிய
தண்ணீர்
7.
மண்ணாகிய
பூமி
8.
காற்று
9.
நெருப்பு
கடவுளின் சிறிய அம்சம் - 5
1.
தாவரம்
2.
நீர்வாழ்வன
3.
ஊர்வன
4.
பறப்பன
5.
நடப்பன
உணர்ச்சி அம்சம் - 6
1.
பரிசம்
2.
சுவை
3.
நாற்றம்
4.
கேள்வி
5.
பார்வை
6.
யூகம்
பொன்மொழிகள்
- ஈசனே மனிதனாகிறான்.
மனிதனான ஈசனே தன் உயர்ஞானத்தால் தன்னை அறிவான்.
- புகழை
நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள். துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டுவிடாதீர்கள்.
- ஆயிரம்
ஆண்டு வணக்கத்தை விட அரைநிமிட ஆராய்ச்சியே மேல்.
- அனுபவம்
முந்தியது வேதம் பிந்தியது.
- பெற்றவரும்
தாயல்ல! பாலூட்டியவடும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!
- பற்றற்ற
துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி
- நாவில்
ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசி அறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு
இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.
- குருவுக்கு
செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம்
சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.
- சுருதி,
நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச் சுழிமுனையும்
கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.
- ஞானத்தின்
மூதாதை துன்பம்,ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.
- நடுப்பகலும்
நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின்
துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.
- வறுமையில்
பொறுமையுள்ளோர் வல்லவராவார்.
- இருக்கும்
இடத்தில் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும்,
உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்.
- உருக்கமும்
உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.
- எந்த இடையூறு
இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில்
கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.
- மயக்கம்
தெளியாதவர்கள் - பக்தர்கள், யோகிகள், சித்தர்கள்.
- மயக்கம்
தெளிந்தவர்கள் - அறிவாளிகள், நாஸ்திகர்கள், முக்தர்கள்.
- எண்ணம்,
செயல், சொல் சீராய் இருப்பாரே ஜெகதீசன்.
- கனியைப்
பேன்றது ஆன்மா; வாசனையைப் பேன்றது அன்பு; அழகைப் பேன்றது அருள்; சுவையைப் பேன்றது
அறிவு.
- உடலை நடத்துவது
ஞாபகம், உடலில் உணர்வது அறிவு, உடலாய் இருப்பது நினைப்பு, நினைப்பாய் உள்ளது நான்.
- இல்லறமில்லாத
துறவறமில்லை; துறவறமில்லாத இல்லறமில்லை.
Subscribe to:
Posts (Atom)