Tuesday, April 4, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவர்ல் உரை


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” மாத மின்னிதழில் ஏப்ரல்-2017 ஆம் மாதம் வெளியானது…

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை

        ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
        ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி     - 24

ஓதாது உணர்தல்: ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்பது உலக நீதி. அற நூல்களை படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது என்பது உலகநாதரின் அறிவுரை.இவ்வறிவுரை உலகியர்களுக்கு மிகவும் பொருந்தும்.உலகியலை சாராத ஞானிகளுக்கு உலகியல் அற நூல்களை படித்துதான் அறிய வேண்டும் என்ற நிலை இல்லை.அதற்கு மிகச்சிறந்த அன்மை காலத்து உதாரணம் நமது வள்ளற்பெருமான் ஆவார்.இவர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை என்பதும், பள்ளி கல்விகளில் விருப்பமில்லாமல் இருந்தார் என்பதும் வரலாறு.

        திருவருட்பா என்ற அருள் நூலினை ஆறு திருமுறைகளாக செய்யுள் வடிவில் இயற்றினார்.செய்யுள் வடிவம் என்றால் அதற்கு தமிழ் இலக்கணம் படித்திருக்க வேண்டும்.தமிழ் எழுத்துக்களை எழுத கற்றிருக்க வேண்டும்.மேலும் தமிழ் உலகிலேயே உரைநடை முறையினை முதன் முதலில் வள்ளலாரே அறிமுகப்படுத்தினார்.செய்யுள் வடிவில் மட்டுமே தங்களது கருத்துக்களை உலகிற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் உரைநடை வடிவில் தமிழை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.இவ்வளவு அறிவும் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பது ஆச்சரியப்படத்தக்க ஒன்று.

        ஆனால் வள்ளற்பெருமான் சொல்கின்றார், “ பத்து ஆள் சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம்.சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் பெறமுடியும்.அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.இது சத்தியம்.” (பக்கம்-400)

        ஒரு ஆள் சுமை என்பது சுமார் 60 கிலோ என்று வைத்துக்கொள்வோம்.பத்து ஆள் சுமை என்பது 600 கிலோ ஆகும்.600 கிலோ என்பது ஒரு வண்டிப்பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது 2,40,000 கிலோ ஆகும். 2,40,000 கிலோ கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரமாகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது 24,00,00,000 கிலோ ஆகும். 24 கோடி கிலோ எடையுள்ள (2,40,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளலாரின் கணக்கு.       
       
        இன்னும் இதனை விளக்கமாகப் பார்ப்போம். நமக்குத் தெரிந்த ஆறு திருமுறைகள் கொண்ட திருவருட்பா நூல் என்பது சுமார் 10 கிலோ இருப்பதாகக் கொண்டால், 2கோடியே 40 லட்சம் திருவருட்பா போன்ற நூல்களை நாம் இந்த ஜென்மத்தில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம் என்றாகின்றது. அதாவது ஆறுதிருமுறை கொண்ட திருவருட்பா நூலை 2,40,00,000 முறை முழுதும் படிப்பதற்கு சமம். ஒருவன் ஒரு ஜென்மத்தில் 120 வயதை ஆயுளாகக் கொண்டால், முதல் மற்றும் இறுதி 10 ஆண்டுகளை கழித்துவிட்டால், மீதம் உள்ள 100 ஆண்டுகளில் 36,500 நாட்களே அவனுக்கு உள்ளது.இந்த 36,500 நாட்களில் அதிதீவிர முயற்சி எடுத்து ஒரு நாளைக்கு 657 முறை 10 கிலோ எடையுள்ள நூல்களை படித்து முடிக்க வேண்டும்.இது முடியுமா என்றால், சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும் என்கின்றார் வள்ளலார்.

        இவ்வாறு ஒருவன் ஒரு ஜென்மத்தில் ஒரு நாளைக்கு 657 - 10 கிலோ எடையுள்ள நூலை 100 வருடம் வரை படித்துக்கொண்டு, அவன் மீண்டும் மீண்டும் இதே மாதிரி 1000 ஜென்மம் எடுத்து தொடர்ந்து படித்துக்கொண்டு வந்தால், 2400,00,00,000 (2,400 கோடி) நூல்களை படித்து முடித்திருப்பான். என்ன… தலை சுற்றுகிறது அல்லவா!!!....!!! (இவ்வுலகில் இவ்வளவு நூல்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்). 1000 ஜென்மத்தில் 10 கிலோ எடையுள்ள 2,400 கோடி புத்தகங்களை படிப்பவன் ஒருவன், அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், இவ்வளவு நூல்களையும் ஒரே கணத்தில் / ஒரே நொடியில் படித்துக்கொள்ளலாம் என்கின்றார் வள்ளலார். இந்த அருள் செய்தியினை சும்மா படிக்கவே தலைசுற்றுகின்றதே… ஒரு வகையில் சந்தேகம் எழுகின்றதே… என்றெல்லாம் நாம் நினைப்போம் என்றுதான்… வள்ளலார் இந்தச் செய்தியினை சொல்லி முடித்தவுடன்… “இது சத்தியம்” என்று இச்செய்திக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.“இது சத்தியம்” என்று சொன்ன பிறகு இதனை யாரேனும் அலட்சியப் படுத்த முடியுமா?
        இப்படித்தான் வள்ளற்பெருமான் ஓதாது இவ்வுலகில் உள்ள நூல்களை எல்லாம் ஒரே நொடியில் படித்து முடித்தார்.அவர் தம்முடைய அனுபவத்தைத்தான் மேலே உரைநடையிலும், திரு அகவல் வரிகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

        அருள் முன்னிடத்தில் சுத்த சிவ நோக்கம் கொண்டு கலையறிவும், அருளறிவும் வேண்டும் என நின்றால், ஓதாது உணர்ந்திடும் ஒளி / அறிவு கிடைக்கும்.‘அவ்வாறான ஒளியினை எந்தனுக்கு கொடுத்ததோடு, எனக்கு ஆதாரமாகவும் / சாட்சியாகவும் இறைவன் இருக்கின்றான்’ என்கின்றார் வள்ளலார்.அதாவது தாம் ஓதாமல் உணர்ந்ததற்கு சாட்சியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தாம் எழுதிய திருவருட்பாவாகவும், தாம் படித்து அனுபவிக்கும் சாகாக் கல்வியாகவும் இருக்கின்றார் என்கின்றார்.
       
ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி – 26

ஒளவியம் முதற்கொண்டு மற்ற ஆறு குணங்களையும் தவிர்க்க வேண்டும்.

பற்று, வஞ்சகம், ஈயாமை, பேராசை, மதியாமை, சகியாமை இவைகளே கீழ்த்தரமான ஆறு குணங்கள் ஆகும். இவைகளை முறையே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் என்று வடமொழியில் சொல்வர்.

                 --  ஐயமுறுங்
காமக் குரோதலோப மோகமதங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் தலைமிதித்து –
(68 நெஞ்சுவிடுதூது- உமாபதிசிவம்)

ஒளவியம்: ஒளவியம் என்றால் பொறாமை. என்னால் முடியாததை அவன் செய்துவிட்டானே! என்கின்ற ஏக்கமானது நம்மை தீயவழியில் செல்ல வற்புறுத்தும். காரிய சித்தி பெற்றவனை எண்ணும்போதெல்லாம், அவன் மீது நமது எண்ணம் தாக்குதல் நடத்தும். அந்த எண்ணமே நம்மை அவனுக்கு எதிராக தீய வழியில் செல்ல வழிவகுக்கும். எனவே ஒருவரை பார்த்து பொறாமை அடைதலை தவிர்க்க வேண்டும்.

 பற்று: செல்வம், பொருள், தாய், தந்தை, மனைவி, கணவன், மகன், மகள், சகோதரன், சகோதரி இவர்களின் பால் அதீத பற்று வைத்து அதன் மயமாய் ஆவது காமம் எனப்படும். இப்படிப்பட்ட காமமும் நமக்கு தீமையே தரும். எனவே இவற்றின்பால் அவா மயமாய் இருக்கலாம். சன்மார்க்கத்தில் அவாவும் கூடாது.

வஞ்சகம்:   ஒருவருக்கு கெடுதி விளைவிக்க எண்ணம் கொள்வது குரோதம் ஆகும். கெடுவான் கேடு நினைப்பான் எனவே நாம் ஒருவருக்கு கெடுதி செய்தால், அக்கெடுதியால் பாதிக்கப்படுவது நாம்தான். எனவே குரோதம் தவிர்க்கப்படவேண்டும்.

ஈயாமை: தனது சம்பாத்தியத்திலிருந்து ஞானிகளுக்கு கூட சிறிதேனும் கொடுக்கக்கூடாது என்னும் எண்ணம் கொள்ளுதல் லோபம் எனப்படும். பொருள் சேர்க்க வேண்டும் என்கின்ற அதீத எண்ணம் இருப்பவனால் பிறருக்கு தருமம் தானம் செய்ய இயலாது. அப்பொருளால் பிறருக்கும் பயனில்லை, அவனுக்கும் பயனில்லாது போய்விடும். எனவே லோபம் கூடாது. ‘எட்டி பழுத்தென்ன? ஈயாதான் வாழ்ந்தென்ன?

பேராசை: தனக்கு இருக்கும் பொருள் போதாதென்று இன்னும் கொஞ்சம் அதிகமாய் சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டு செயல்படுதல் மோகம் எனப்படும். பார்க்கும் பொருள்களை எல்லாம் தன்வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற மோகத்தால் விளைவது தீய செயல்களே. அதனால் மோகத்திலிருந்து விடுபடவேண்டும்.

மதியாமை:  பணம் பொருள் ஆகியவைகளை அதிகம் சேர்த்துக்கொண்டு, அதனால் வருகின்ற அகங்காரத்தால் மற்றவர்களை அலட்சியப்படுத்தி பேசும் குணத்தை மதம் என்கிறோம். பிறரை மதியாமல் மதம் கொண்டு நடந்தால் அழிவு அவனை தேடி வருகின்றது எனப்பொருள். எனவே மதத்தை தவிர்க்க வேண்டும்.

சகியாமை: தன்னைப் போல் மற்றவர்களும் சுகம் பெறுவதை பொறுக்காமல், அவர்களுக்கு கேடு விளைவிக்கும் செயலை மாச்சர்யம் என்கின்றோம். நம்மைப்போல் பிறரும் சுகமடைவதை சகிக்காமல் அவர்களுக்கு துன்பம் விளைப்பதை தவிர்க்க வேண்டும்.

        காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம் ஆகிய ஆறு இழி குணங்களுக்கும் முதல் / கர்த்தா எதுவென்றால் அது பொறாமை என்ற ஒளவியம் ஆகும். எனவே பொறாமைப் படுவதை தவிர்த்தாலே மற்ற இழிகுணங்கள் ஆறையும் எளிதில் தவிர்த்துவிடலாம். பொறாமை மற்றும் உள்ள ஆறு குணங்களில் அகப்படாமல் இருக்கும் மனிதர் எவரோ அவரே உத்தம மனிதர் ஆவர். இப்படிப்பட்ட இழிகுணங்களின் இயல்புகளை நாம் மேற்கண்டவாறு படித்துக்கொண்டு வரும்போதே, நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எந்த இழிகுணம் கொண்டிருக்கிறோம் என்பதை நம்மால் தெரிந்துக்கொள்ள முடியும். தெரிந்துக்கொண்டு அக்குணங்களில் இருந்து வெளிவர விரைவில் நாம் முயற்சிக்க வேண்டும்.  

        அவ்வியல் என்றால் அகரம், வகரம் என்றெல்லாம் பொருள் உண்டு. “அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்…942” என்று திருமந்திரம் உரைக்கின்றது. இங்கு வகரமான காற்று பாய… என்று பொருள்படுகின்றது. ஆனால், இவ்விடத்தில் வள்ளற்பிரான் ‘அவ்வியல்’ என்பதை ‘அப்படிப்பட்ட தன்மையினைக் கொண்ட (அந்த+இயல்)’ என்ற பொருளில் பயன்படுத்துகின்றார்.

        இவ்வாறு பொறாமையினை தவிர்த்து அதன் மூலம் வருகின்ற ஆறு இழிகுணங்களையும் தவிர்த்து நற்செய்கையே தங்களுடைய இயல்களாய் கொண்டுள்ள பேர்களை வழுத்தும் (வாழ்த்தும்) இறைவனே.  நற்செய்கை யுடையோரை இறைவன் வாழ்த்துகின்றார்.

        திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
        அருள்வெளிப்  பதிவள ரருட்பெருஞ் ஜோதி - 28

        திரு அருட்பெருஞ்ஜோதி அகவலை அகர வரிசையில் அருளிச்செல்கின்றார் வள்ளற்பிரான். அருட்பெருஞ்ஜோதி, அருட்சிவ நெறி, ஆகம முடி… ஒளவியம் என்று முடிந்த பிறகு ஆய்த எழுத்தில் அடுத்த வரி துவங்க வேண்டும்.

தமிழில் ஆய்த எழுத்து துவக்கத்தில் வராது. தனக்கு முன்னர் ஒரு குறிலையும் பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று நடுவில் மட்டுமே ஆய்த எழுத்து வரும்.  அஃது, இஃது, எஃகு, கஃசு, பஃது, ப்ஃறி, கஃடு போன்றவை சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி/மென்மையாக்கி காட்டுவது என்று பொருள். ஆய்தல் என்னும் உரிச்சொல், இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. மேற்காணும் வல்லின எழுத்துக்களை மென்மையாக்கி காட்டியிருப்பதை கவனியுங்கள்.

இவ்வெழுத்தின் வடிவம் மூன்று புள்ளிகளை கொண்டு முக்கோண வடிவில் இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பல பெயர்களும் உண்டு. உயிரெழுத்தும் இல்லாமல் மெய்யெழுத்தும் இல்லாமல் உயிர்மெய் எழுத்துமில்லாமல் தனித்த நிலையைப் பெற்று தனித்து நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் இது ‘தனிநிலை’ என்று பெயர்பெற்றது. 

வள்ளற்பிரான் இவ்வெழுத்திற்கான ‘தனிநிலை’ என்கின்ற சிறப்புப் பெயரையும் அதன் காரணத்தையும் கருத்தில் கொண்டு, தாம் அனுபவித்த இறைநிலை எப்படிப்பட்டது என்பதனை தெரிவிக்க ‘திருநிலை’ என்கின்ற வார்த்தையினை இட்டு துவங்குகின்றார். அதாவது ‘திருநிலை’ என்பதனை ‘தனிநிலை’க்காண எழுத்துருவில் (ஃ) கொண்டு வந்திருக்கின்றார் வள்ளலார்.

திருநிலை என்றால் இறைநிலை எனப்பொருள். “திருநிலை பெற எனை வளர்க்கின்ற பரமே” (3689) என்பார் வள்ளலார். வெளி என்றால் இடம் என்று பொருள்.

        இறைநிலை எப்படி இருக்கின்றது என்றால், “ஃ” என்கின்ற குறியீட்டின்படி நமது பிண்டத்தில் அண்டமாகிய தலைப்பகுதியில் வலது கண், இடது கண் மற்றும் நெற்றிக்கண் இவை மூன்றையும் இணைத்தால் “ஃ” போன்றதொரு வடிவம் கிடைக்கும். இந்த வடிவ நிலையிலேயே இறைநிலை விளங்குவதாக அறிவிக்கின்றார். நமது வலது கண்ணை தனிவெளி என்கின்றார். எப்பொருளும் இல்லாத வெட்டவெளியாக தான் மட்டுமே தனித்து இருக்கின்ற வெளியே தனிவெளியாகும். இந்த தனிவெளிதான் சுத்த சன்மார்க்க சுகத்தை தரவல்லது. சுத்த சன்மார்க்க சுகம் என்பது என்ன? என்பதை அடுத்த அகவல் வரிகளில் காணலாம்.

இடது கண்ணை சிவவெளி என்கின்றார். சிவம் விளங்குமிடமாக இவ்வெளி உள்ளது. சர்வ வல்லமையுடைய வெளியாக நமது இடது கண் விளங்குகின்றது. இவ்வாறு இரண்டு வெளிகளும் நமது பிண்டத்தில் வெளியே இருக்க, (நமது பார்வைக்கு அகப்படும்படியாக) இவையிரண்டு வெளிகளுக்கும் மேலாக நடுவில் தாம் வெளிப்படாமல் உள்ளுக்குள் இருப்பது திருநிலையாகும். அதாவது நடுக்கண்/மூன்றாவது கண்.  இந்த மூன்றாவது கண்ணே இறைநிலையாக உள்ளது. அதுவே திருநிலை.

        அனுபவத்தில் வலது கண்ணான தனிவெளியானது சிவமாகத் தோன்றும். இடது கண்ணான சிவவெளியானது சத்தியாகத் தோன்றும். இவையிரண்டையும் திருநிலை என்கின்ற மூன்றாம் கண்ணோடு இணைத்து பார்த்தால் முக்கோணம் போன்ற மாடம் போன்ற அமைப்பு தோன்றும். அந்த மாடம் போன்ற அமைப்பே அருள்வெளியாக விளங்குகின்றது. அருள்வெளியில்தான் தனிவெளியும் சிவவெளியும் திருநிலையும் உள்ளது. “ஜோதியுள் ஜோதியுள் ஜோதி” இதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் ஜோதி என்பது தனிவெளி, இரண்டாம் ஜோதி என்பது சிவவெளி, மூன்றாம் ஜோதியானது திருநிலையாகும். அருள்வெளி என்னுமிடத்தில் இம்மூன்று ஜோதிகளும் பிரகாசிக்கின்றன. “ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால்…” என்று தமது உபதேசமாகவும் இக்கருத்தினையே வள்ளற்பெருமான் கூறுகின்றார். எங்கெல்லாம் தீபம் எரிகின்றதோ அதன் முன்னிலையில் அருள்வெளி தோன்றும். அந்த அருள்வெளியில்தான் இறைவன் ஓங்குகின்றான் (பதி வளர்), இறைவன் அருளுகின்றான். புறத்திலே தீப முன்னிடத்திலும் அகத்திலே முக்கண் மாடத்திலும் திருநிலை விளங்குகின்றது.   

சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 30

அருட்சுகம், தனித்த பெரும் சுகம், அழியாச்சுகம், கருணைச் சுகம், சும்மா இருக்கும் சுகம் என்று பலவாறு வள்ளற்பெருமான் கூறுவதெல்லாம் இந்த சுத்த சன்மார்க்க சுகத்தினைத்தான். இறைவனுக்கே உரிய தனிச்சுதந்தரத்தை யார் ஒருவர் பெறுகின்றாரோ அவருக்கே இந்த சுத்த சன்மார்க்க சுகம் கிடைக்கும். இறைவனுடைய இறையாண்மையை பெறுவதே சுத்த சன்மார்க்க சுகமாகும். அருட்பெருஞ்ஜோதியின் ஆட்சியினை பெறுவதே சுத்த சன்மார்க்க சுகமாகும். அச்சுதந்தர சுகத்தை வள்ளற்பெருமான் ஒருவரே இவ்வுலகில் பெற்றார்கள்.  
        அப்படிப்பட்ட தனித்த பெரும் சுகத்தை நமக்கு அளிப்பது தனிவெளியும் சிவவெளியும் திருநிலையும் சேர்ந்த முக்கோண அமைப்பான, முச்சுடர்களும் இணைந்து ஒருசுடராக இயங்குகின்ற அத்தகைய சிற்சபையே ஆகும். நெற்றிகண்ணுக்கு திருநிலை / சிற்சபை என்றெல்லாம் பெயர். எனவே சிற்சபை என்று சொன்னாலே அங்கே தனிவெளியும் சிவவெளியும் இணைந்து அருள்வெளி வெளிப்பட்டு விடுகின்றது. அந்த அருள் வெளியில் கிடைப்பதே சுத்த சன்மார்க்க சுகமாகும்.    

--தி.ம.இராமலிங்கம்

2 comments:

  1. ஒருவேளை தனிவெளி திருநிலை சிவவெளி தான் சிவாலயங்களில் சோமாஸ்கந்தர் (தியாகராஜர்) திருமேனியாக காட்டுகிறார்களோ
    நடராஜர் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் சுத்த அறிவைத் தான் வள்ளற் பெருமான் முருகன் என்று கூறுகிறார் போலிருக்கு , நாபி முதல் புருவமந்தி இடையில் ஜவ்வு தொங்குகிறது கீழ்புறம் வெள்ளை ஆகிய சுக்கிலம் மற்றும் மஞ்சள் சேர்த்து செம்மையாக தோன்றும் அதை தான் சித்தர்களும் முருகன் பிறப்பான் என்று கூறுகிறார் போலிருக்கு.
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களுக்குள்ளும் இன்புற்று வாழ்க 🔥❤️
    வள்ளல்பெருமானார் திருவடிகள் வாழ்க வாழ்க
    🔥🙏🏻👑

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.