காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம்
வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில்
வெளியானது…
நாலடியார்
சமண முனிவர்களால்
இயற்றப்பட்டது நாலடியார் என்கின்ற நான்கு அடிகளைக் கொண்ட நானூறு பாடல்கள். திருக்குறளுக்கு
இணையாக நாலடியார் கருதப்படுகின்றது. திருக்குறளைப் போன்றே நாலடியாரும் அறத்துப்பால்,
பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக உள்ளது. திருக்குறளைப்போன்றே
நாலடியாரும் வள்ளலாரை கவர்ந்த ஒரு அற நூலாகும். நாலடியாரின் வரிகளை தமது திருவருட்பாவில்
சில இடங்களில் வள்ளலார் பயன்படுத்தியிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட நாலடியாரிலிருந்து
ஒரு பாடலின் அறத்தை இம்மாதம் பார்ப்போம்.
அலை எப்போது
அடங்கும்? நாம் எப்போது குளிப்பது?
பெருங்கட லாடிய
சென்றார் ஒருங்குடன்
ஓசை அவிந்தபின்
ஆடுது மென்றற்றால்
இற்செய் குறைவினை
நீக்கி அறவினை
மற்றறிவாம்
என்றிருப்பார் மாண்பு. (332)
நம்மில் பலருக்கு
போதுமான பொருளாதாரம் இருக்கும். தான தருமங்களை நாமும் பிறருக்கு செய்ய வேண்டும் என்ற
எண்ணமும் இருக்கும். ஆனால் தருமச் செயல்களில் ஈடுபடமாட்டோம். அதற்கு நாம், நமக்கு நாமே
சொல்லிக்கொள்ளும் காரணம் என்னவென்றால், “முதலில் என்னுடைய வீட்டு கடமைகளையெல்லாம் குறைவில்லாமல்
முடித்துவிடுகின்றேன், பிறகு மற்றவர்களுக்கு தானம் செய்கின்றேன்” என்று முடங்கிவிடுகின்றோம்.
இப்படிப்பட்ட நம்மைப் பார்த்து நாலடியார் கூறுகின்றது,
“கடலில் குளிக்க வேண்டும் என்று கடற்கரைக்கு வந்துவிட்டு, அங்கு எழும் அலைகளைக்கண்டு
பயந்து, அலைகள் ஓய்ந்தவுடன் நான் குளிக்கின்றேன் என்று காத்திருக்கும் முட்டாளை போல,
பலர் கடமைகள் தீர்ந்தவுடன் தானம் செய்கின்றேன் என்று மடத்தனமாக இருக்கின்றார்கள்” என்கின்றது.
அலைகளுக்கு நடுவே சமாளித்து குளிப்பதுபோல குடும்ப
கடமைகளுக்கு நடுவே தானமும் செய்துக்கொண்டு பொது நலன்களையும் செய்யவேண்டும் என்று கூறுகின்றார்கள்
சமண முனிவர்கள். நாமெல்லாம் நம்முடைய மாத வருமானத்தில் குறைந்தபட்சம் இரண்டு சதவிகிதமாவது
வறுமையில் வாடும் மக்களுக்கு தானம் செய்ய முன்வரவேண்டும். மேலும் இரண்டு சதவிகிதம்
பொதுநலன்கருதி செலவிட முன்வரவேண்டும். மீதமுள்ள 96 சதவிகித வருமானத்தை குடும்ப கடமைகளாற்ற
ஒதுக்கினால், நமது சமுதாயம் உலகிலேயே உயர்ந்து நிற்பதை நாம் பார்க்கலாம்.
மாத ஊதியமாக ஒருவன் ரூபாய் 5000 ஈட்டுகின்றான்
எனில் அவன் தானத்திற்காக ரூபாய் 100 மற்றும் பொதுநலனிற்காக ரூபாய் 100 ஆக 200 ரூபாயினை
மாதந்தோறும் நற்செயல்களுக்காக செலவிட முன்வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.