Wednesday, April 5, 2017

உறுதிப்பாடுகள்


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில் வெளியானது…

உறுதிப்பாடுகள் 

     அஜான் லீ (அஜான் லீ தம்மதாரோ 1907-1961 தாய்லாந்து நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பௌத்தத் துறவி) அவர்களின் சுயசரிதையைப் படிக்கும் போது அவர் அடிக்கடி உறுதிப்பாடு (சபதம்) செய்து கொள்வதைக் கவனிக்கலாம். இரவு முழுதும் தியானிக்கப் போவதாகவும், இத்தனை மணி நேரம் தியானிக்கப் போவதாகவும், இதை செய்யப் போவதாகவும், அதைச் செய்யாமல் இருக்கப் போவதாகவும் சபதம் செய்து கொள்வார். தாய் (தாய்லாந்து நாட்டின்) மொழியில் 'அதிதான்' என்றால் சபதம் என்று பொருள். அது 'உறுதி' என்றும் பொருள்படும். அதாவது மனதில் ஒரு முடிவு எடுத்து விடுவது. ஒன்றைச் செய்வது என்று தீர்மானித்து விடுவது. இது போலத் தீர்மானிப்பது உங்கள் பயிற்சிக்கு உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் உட்கார்ந்து தியானம் செய்யும்போது, சற்று நேரத்திற்குப் பின்பு அது கடினமாகத் தெரிந்தால், "சரி, இன்றைக்கு இது போதும்," என்று பயிற்சியைத் தொடராமல் விட்டு விடுவோம். நமக்குப் பழக்கப்பட்ட எல்லையைத் தாண்டிச் செல்ல முயல்வதில்லை. அதனால் நமது எதிர்பார்ப்பின் எல்லைக்கு அப்பால் உள்ளவற்றை நாம் அனுபவிக்க முடிவதில்லை.

    புத்தர் கூறியது யாதெனில், பயிற்சி செய்வதற்கான காரணமே இது வரை காணாததைக் காண்பதும், அறியாததை அறிந்து கொள்வதும் தான். நாம் இதுவரை காணாத, அறியாத பல விஷயங்கள் நமது கற்பனை எல்லைக்கு அப்பால் உள்ளன. எனவே அவற்றைக் காண வேண்டுமானால் நமது கற்பனை எல்லைக்கு அப்பால் செல்ல நம்மை நாமே மென்மேலும் ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இதனைத் திறமையுடனும், கவனத்துடனும் செய்யவேண்டும். எனவே தான் ஒரு நல்ல தீர்மானத்துக்கு நான்கு இயல்புகள் உள்ளன என்று புத்தர் கூறினார். அவையாவன: விவேகம், வாய்மை, துறத்தல் மற்றும் அமைதி. 

விவேகம்

    இங்கு விவேகம் என்பதற்கு இரண்டு பொருள் உண்டு.

    முதலில் சிறந்த (பயனுள்ள, அறிவுள்ள) நோக்கங்களை அடைய விரும்புவது. பயனுள்ள உறுதிப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்வதென்பது உண்மையிலேயே அந்த நோக்கத்தை அடைவது சிறந்ததா என்பதை அறிவது மட்டுமல்லாமல் மிகமிக எளிதாக அடையக் கூடியதாகவும் இல்லாமல், அடைவது மிக மிகக் கடினமானதாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். நோக்கம் நமது சராசரி எதிர்பார்ப்புகளுக்கு வெளியே இருக்க வேண்டும். அதே சமயம் அடைய முடியாத மிகத் தொலைவில் இருந்து நம்மை ஏமாற்றத்தில் தள்ளி விடவும் கூடாது.

    இரண்டாவதாக அந்த நோக்கத்தை அடைவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். என்ன செய்தால் நாம் விரும்பும் நோக்கம் நிறைவேறும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

    நமது பயிற்சியில் குறிப்பிட்ட நோக்கங்கள் இருப்பது முக்கியம். இதைப் பெரும்பாலோர் உணர்வதில்லை. அவர்கள், நோக்கம் என்று ஒன்று இருந்தால் நாம் அதை அடையவில்லையே என்ற ஏமாற்றம் நமக்குத் தொடர்ந்து இருக்கும் என்று நினைக்கின்றனர். இவ்வாறு நோக்கத்தைப் பற்றி நினைப்பது திறமையான வழி இல்லை. அடையக்கூடிய நோக்கமாக இருத்தல் வேண்டும். அதே சமயம் அதை செய்வது ஒரு சவாலாகவும் இருக்க வேண்டும். என்ன காரணிகள், என்ன செய்கைகள் நோக்கத்தை அடையச் செய்யும் என்றறிந்து அவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.

    ஒரு நோக்கம் இல்லாமல் பயிற்சி செய்வது பயனற்றது. நோக்கம் இல்லாவிட்டால் பயிற்சியும் சீரழிந்து பின் எதற்காகப் பயிற்சி செய்கிறோம், எதற்காகத் தியானிக்கின்றோம் என்பதையெல்லாம் மறந்து, ஏன் கடற்கரை ஓரமாக உலவச் செல்லக்கூடாது என்பது போன்ற வீண் எண்ணங்களெல்லாம் தோன்றக் கூடும். எனவே அறிவு சார்ந்த வழியில் நாம் நமது நோக்கத்தோடு உடன்பட வேண்டும். ஒரு சபதம் எடுக்கும் போது அதற்குத் தேவையான விவேகத்தோடு அது சார்ந்திருக்க வேண்டும்.

    சில சமயம் தியானம் செய்யும் போது குறிக்கோள்கள் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நமக்குக் கற்பிக்கப் படுகிறது. பொதுவாகத் தியான முகாம்களில் (மூன்று நாள், பத்து நாள் காலக் கட்ட முகாம்களில்) தான் இவ்வாறு நமக்குக் கூறப்படுகிறது. இது போன்ற முகாம்களில் காலக்குறைவின் காரணமாகவும், அழுத்தமான சூழ்நிலைகளாலும் நாம் மிகக் கடுமையாக முயற்சிக்கின்றோம். விவேகம் இல்லாத கடும் முயற்சி நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும். ஆக இது போன்ற சில நாட்களில் செய்யும் பயிற்சியின் போது நாம் குறிப்பிட்ட நோக்கத்தை அடையவேண்டும் என்று குறிக்கோள் வைத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது. இல்லாவிட்டால், "நான் அந்த விகாரையில் இரண்டு வாரம் கழித்தேன். அந்த நேரத்தில் முதல் ஜான நிலையை (தியானத்தின் ஓர் ஆழ்ந்த ஒருமுகப்பட்ட மன நிலை) அடைந்தேன்," என்று பெருமிதம் கொள்வோம்; ஏதோ பந்தயத்தில் கோப்பையை வென்று விட்டது போல. இப்படி ஏதோ ஜான நிலையை அடைந்துவிட்டதாக நினைப்பது வீடு திரும்பும் போது ஒரு பழுக்காத மாங்காயைப் பெற்றுச் செல்வது போன்றதே. உங்கள் வீட்டு மரத்தில் ஒரு பச்சை மாங்காய் உள்ளது. ஒருவர் வந்து, "பழுத்த மாம்பழம் மஞ்சல் நிறத்தில் கனிந்து இருக்கும்," என்கிறார். அவர் சொன்னதால் நாம் மாங்காயைக் கசக்கிப் பிணைந்து கொழகொழவென்றாக்கி மஞ்சல் வண்ணத்தையும் அதன் மீது பூசி விடுகிறோம். பார்க்கப் பழுத்த மாம்பழம்போல தோன்றினாலும் அது பழுத்த பழம் அன்று. நாசம் செய்யப்பட்ட மாங்காய் மட்டுமே.

    அரைகுறை ஜான நிலைகளும் இப்படித்தான். இப்படி இருக்க வேண்டும், இந்த இயல்பு கொண்டது என்று படித்திருக்கின்றீர்கள். ஆகவே இதைக் கொஞ்சம் சேர்த்து, அதில் துளி கலந்து அதன்பின், ஆகா! அதோ ஜான நிலை என்றுகொண்டாடுவது போலத்தான் இதுவும். இதுபோலக் காலக் கட்டாயத்தில் ஒன்றை அடையப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டீர்களென்றால் நீங்கள் அடையப்போவது என்னவென்றே சொல்ல முடியாது.

    தியானத்தை முகாம்களுக்குச் செல்லும் போது மட்டும் பயிலாமல், தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக அதைப் பயிலும்போது நீண்ட நாள் குறிக்கோள் வைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பயிற்சி குறிக்கோளற்று, 'பயிற்சியோடு தினசரி வாழ்க்கை' என்றில்லாமல் சாதாரண அன்றாட வாழ்வாகிவிடும். ஏன் தியானம் செய்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். உங்களின் எதிர்கால நீண்ட நாள் நன்மையில் தியானம் விளைவிக்கும் பயனைத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு வேண்டுவது உண்மையான மகிழ்ச்சி, நம்பகமான மகிழ்ச்சி, நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் உங்களுடன் நிலைத்து இருக்கக் கூடிய பேரின்பமே உங்களுக்குத் தேவை.

    குறிக்கோள் தெளிவான பின் அதை எப்படி அடைவதென்பதற்கும், அப்படி அதை அடைவதற்குத் தொடர்ந்து உங்களை ஊக்குவிப்பதற்கும் விவேகம் தேவை. அதாவது கவனத்தை நோக்கத்திலிருந்து அதை அடைய நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் மீது திருப்ப வேண்டும். அதாவது காரணிகள் மீது கவனம் செலுத்த வேண்டுமே அன்றிச் செய்யும் செயல்களால் விளையும் பயன்களின் மீது அல்ல.

    உதாரணமாக, இங்கு அமர்ந்துகொண்டு "நான் முதல் ஜான நிலையை அடைவேன்," என்றோ, இரண்டாவது ஜான நிலையை அடைவேன் என்றோ எண்ணாமல், "இங்கு இருக்கப் போகும் அடுத்த ஒரு மணி நேரத்துக்கு என் ஒவ்வொரு மூச்சையும் அறிந்து கவனத்தோடு இருப்பேன்," என்று நினைக்க வேண்டும். இதுதான் காரணிகள் மீது கவனம் செலுத்துவதென்பது.

    ஒரு குறிப்பிட்ட ஜான நிலையை அடைந்தோமா இல்லையா என்பது வினைப்பயன் சம்பத்தப் பட்டது. வினை இல்லாமல் வினைப்பயன் இருக்காது. எனவே விவேகம் வினையின் மீது கவனம் செலுத்தினால், வினை தானகவே வினைப்பயனை உண்டாக்கிவிடும். 

வாய்மை

    அடுத்து, நோக்கத்தையும், நோக்கத்தை எப்படி அணுகுவது என்பதையும் தெளிவாக அறிந்து கொண்டபின் நாம் எடுத்துக் கொண்ட உறுதிப்பாட்டோடு வாய்மையோடு இருத்தல் வேண்டும். அதாவது செய்யப் போவதாக உறுதி கொண்டபின் அதனோடு நிலைத்து நிற்க வேண்டும். இடையில் மனம் மாறி அதைக் கைவிட்டு விடக்கூடாது.

    நாம் செய்வது நமக்கே தீங்கு விளைவிக்கும் நிலை ஏற்படுவது மட்டுமே நமது மனம் மாறுவதற்கேற்ற ஒரு நல்ல காரணம் எனலாம். அப்போது வேண்டுமானால் நமது தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யலாம். நமக்குக் கஷ்டமாக இருப்பதாலோ, தொந்தரவாக இருப்பதாலோ மனம் மாறக் கூடாது. என்ன நடந்தாலும் நாம் உறுதி செய்ததைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    இப்படித்தான் நாம் நம்மையே நம்புவதற்குக் கற்றுக் கொள்கிறோம். வாய்மை, 'சச்சா' என்பது வெறும் உண்மையைப் பேசுவது மட்டும் இல்லை. நாம் எடுத்த முடிவோடு உண்மையிலேயே ஒத்து நடப்பதும் ஆகும். மனம் எடுத்த முடிவோடு நாம் ஒத்து இருக்காவிட்டால், அது, நாம் நமக்கே துரோகம் செய்வதற்குச் சமமாகும். நம்மையே நாம் நம்பமுடியவில்லையென்றால் வேறு யாரை நாம் நம்பப் போகிறோம்? வேறு ஒருவரை நம்பி இருக்கலாம் என்று விருப்பப்பட்டாலும் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை அவர்களால் செய்ய முடியாது. ஆகவே நமது தீர்மானத்தினால் வாய்மையோடு ஒத்திருக்க நாம் கற்றுக் கொள்கிறோம். 

துறத்தல்

    மூன்றாவதாக நல்லதொரு தீர்மானம் செய்வதற்குத் தேவையானது துறத்தல். அதாவது உங்கள் தீர்மானத்தை வாய்மையோடு நிறைவேற்றுகையில் விருப்பமான சிலவற்றைக் கைவிட வேண்டியிருக்கும். தம்மபதத்தில் ஒரு குறட்பா உண்டு: "சிற்றின்பத்தைத் துறப்பதால் பேரின்பம் கிட்டுமானால், அந்தச் சிற்றின்பத்தை விட்டுவிட்டுப் பேரின்பத்தை நாடத் தயாராக இருங்கள்."

    ஆனால் நாம் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கவனிக்கும்போது பெரும்பாலோர் நிலையான மகிழ்ச்சியைக் கைவிட்டுச் சிற்றின்பத்தை நாடுவதையே காண்கின்றோம். ஒரு நாள் எளிதான வழியைத் தேடிச் சென்றால் அடுத்த நாளும், பின் அதன் மறுநாளும் அத்தகைய வழியை நாடியே செல்கிறோம். பின் நமது நீண்ட நாள் நோக்கத்தை அடையவே முடியாது. அந்த நோக்கத்தை அடைவதற்கு வேண்டிய சக்தியும் நம்முள் உருவாகாது.

    உடனடி இன்பம் தருவதாகத் தெரியும் விஷயங்களே நம்மைப் பாதையிலிருந்து விலக்குகின்றன. ஆனால் உடனடியாக இன்பம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்யும் செயலின் வினைப்பயன் கிடைத்த பின்பும் நாம் திருப்தியடைவதில்லை. எல்லாம் மாயமாகத் தோன்றுகிறது. அப்படியே கொஞ்சம் சுகம் கிடைத்தாலும் அது கிடைக்க நாம் செய்த செலவுக்கு ஈடு செய்வதாக இருப்பதில்லை.

     அதனால் தான் புத்தர் புலன் ஆசைகளின் குறைபாடுகளை நம் மனதில் பதியச் செய்யக் கடுமையான உவமானங்களைக் கூறுகின்றார்.

     கத்திமுனையில் உள்ள ஒரு தேன் சொட்டு.

    காற்று அடிக்கும் திசையின் எதிராகத் தீப்பந்தத்தைக் கையில் உங்கள் முன்னால் பிடித்துக் கொண்டு ஓடுவது.

    ஒரு சிறிய மாமிசத்துண்டைத் தன் கால் நகங்களில் கவ்விக் கொண்டு பறக்கும் ஒரு சிறு பறவை. அதைக் கவர்ந்து கொள்ளத் துரத்தும் பெரிய பறவைகள். மாமிசம் கிடைக்காவிட்டால் அந்தச் சிறு பறவையைக் கொல்லவும் தயங்காத வல்லூறுகள் அவை.

     இவையெல்லாம் குரூரமான உவமானங்கள் என்றாலும் அவை ஒரு காரணமாகத்தான் குரூரமாக இருக்கின்றன. புலன் ஆசைகளில் பிடிபட்ட மனம், அதைத் துறந்து வேறு எதையும் அடைய விரும்புவதில்லை. மென்மையான, இனிமையான மன உருவங்கள் மனத்தை மாற்றப் போவதில்லை. ஆனால் புலன் இன்பங்கள் நம்மைத் திருப்திப்படுத்த மாட்டாது. அவற்றுள் சாரம்சம் ஒன்றும் இல்லை, அவை உண்மையான திருப்தி தருபவை இல்லை, அதே சமயம் உண்மையான அபாயங்களைக் கொண்டுள்ளன என்பதைத் திரும்பத் திரும்ப உங்களுக்கே உறுதியாக நினைவுபடுத்த வேண்டும்.

    புலன் இன்பங்கள் சம்பந்தப்பட்ட உலகத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான மக்கள் மட்டுமே இருப்பதாக எனக்கு ஒரு கனவு தோன்றியது: கற்பனையாளர்கள் ஒரு சாரார் மற்றும் குற்றவாளிகள். இவர்கள் தங்களுக்கு என்ன வேண்டுமென்பதைப் பற்றி கனவு கண்டுக்கொண்டே இருப்பார்கள். மற்ற பிரிவினர் முடியாது என்ற பதிலை ஏற்கப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டுத் தங்களுக்கு வேண்டியதைப் பலாத்காரமாகவும் எடுத்துக் கொள்ளத் தயங்காதவர்கள். மிகவும் அசௌகரியமான உலகம் இது. புலன் ஆசைகள் சம்பந்தப்பட்ட உலகம் இப்படித்தான். ஆனால் நாம் நமது கனவுகளால் கட்டுப்பட்டு இருப்பதால், இந்தக் கனவுகளில் கண்ட விருப்பங்களை நிறைவேற்றும் போது என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அவற்றை நிறைவேற்றப் பார்க்கிறோம்.

    எனவே இது போன்றவைகளைப் பிரதிபலிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது உறுதிப்பாடுகளும் விவேகத்தோடு துவங்க வேண்டும் என்பதற்கு இது ஒரு காரணம். நமது பயிற்சியின் எச்சமயத்திலும் விவேகத்தைப் பயன்படுத்தி, சிற்றின்பங்கள் உண்மையிலேயே சிறு இன்பங்கள் தான் என்பதை நினைவு படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை அடைவதற்காகத் தேவைப்படும் சக்தி வீண் செலவே. மேலும் பேரின்பத்தை விட்டுக் கொடுத்துச் சிற்றின்பத்தைப் பெற வேண்டுமென்பது வீண் முயற்சியேயாகும். 

அமைதி 


    நல்ல தீர்மானத்தை ஏற்படுத்தும் நான்காவதும் இறுதியுமான இயல்பு அமைதி ஆகும். உங்கள் நோக்கத்தை அடையும் நெறிமுறையில் மனம் அமைதி யாக இருக்க முயற்சிக்க வேண்டும். அதைப் பெறும் வழியில் ஏற்படும் கஷ்டங்களும், துறக்க வேண்டியவனவற்றையும், செலவு செய்யப்பட்ட நேரத்தையும், இன்னமும் செலவிடப்பட வேண்டிய காலத்தையும் நினைத்துச் சங்கடப்பட வேண்டாம். உடனடியாகச் செய்யவேண்டிய அடுத்த படியின் மீது மட்டும் கவனம் செலுத்தி நிதானமான மனப்பாங்கோடு இருக்க வேண்டும்.

     இந்த விஷயத்தில் அமைதிக்கு இரண்டாவது பொருள் என்னவெனில் உங்கள் நோக்கத்தை அடைந்த பிறகு மனதில் ஓர் அமைதி நிலைக்க வேண்டும். நோக்கத்தை எட்டிய பிறகும் மனம் கிளர்ச்சியுடன் காணப்பட்டால் நீங்கள் தவறான நோக்கத்தைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்பதை அது குறிக்கும். நோக்கத்தை அடைந்த பிறகு மேலும் ஆழமான அமைதியும், சாந்தமும் நிலைக்க வேண்டும்.

    ஒரு நோக்கத்தை அடையப் பாடுபடும்போது ஓரளவு அதிருப்தி உண்டாவது இயற்கை தான் என்று புத்தர் கூறினார். உங்களுக்கு ஒன்று வேண்டும். ஆனால் அதை இன்னமும் அடையவில்லை. ஒரு சில மக்கள் அந்த அதிருப்தியை நீக்கவேண்டுமானால் உங்கள் குறிக்கோளின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். குறிக்கோள் எதையும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இது உங்களையே மட்டப் படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அந்த அதிருப்தியை நீக்க திறனற்ற வழி இது. திறமையான வழி என்ன வென்றால் படிப்படியாக நோக்கத்தை அடைய, செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்து உங்கள் நோக்கத்தை எட்டுவது தான். அது நல்ல நோக்கமாக இருந்தால், பின்னர் அந்த அதிருப்தி மறைந்து அமைதி உண்டாகும்.

    எனவே உங்கள் தியானப் பயிற்சியிலோ உங்கள் வாழ்க்கையிலோ குறிக்கோள்களைப் பற்றி நினைக்கும் போது இந்த நான்கு இயல்புகளை மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ள முயலுங்கள். அவை: விவேகம், வாய்மை, துறத்தல் மற்றும் அமைதி.

    குறிக்கோளைத் தேர்ந்தெடுக்கும் போதும் அதை அடைய எடுக்கும் பாதையிலும் விவேகத்தோடு செயல்பட வேண்டும். அது மெய்யறிவுள்ள, பயனுள்ள நோக்கம் என்பதை முடிவு செய்த பின் அந்த உறுதிப்பாட்டோடு வாய்மையோடு இருக்க வேண்டும். அதற்குத் துரோகம் செய்ய வேண்டாம். உங்கள் பாதையை மறிக்கும் சிற்றின்பங்களைத் துறக்க முடிவெடுங்கள். இறுதியாக, சாந்தமான வழியில் உங்கள் நோக்கத்தை அடையப் பாடுபடுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் அகலக்கால் வைக்காமல் - விழுந்துவிடும் அளவுக்கு இல்லாமல் - உங்களையே வளர்த்துக் கொள்வீர்கள்.

    கொஞ்சம் கொஞ்சமாக உங்களையே நீங்கள் எண்ணியதைவிட வளர்கையில் அந்தக் கொஞ்சகொஞ்ச வளர்ச்சியும் இறுதியில் பெருமளவான வளர்ச்சியாக முடிவுறுகிறது. நீர் சொட்டு சொட்டாக விழுந்தாலும் கூஜாவை நிரப்புவது போல, உங்கள் பயிற்சியும் உங்களை உங்களால் நினைத்தும் பார்க்க முடியாத இடங்களுக்கு எடுத்துச் செல்லும். -- தணிசாரோ பிக்கு 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.