Tuesday, April 4, 2017

வரதட்சணை


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” மாத மின்னிதழில் ஏப்ரல்-2017 ஆம் மாதம் வெளியானது…

வரதட்சணை

வரதட்சணை பெறுவதும் கொடுப்பதும் இந்திய சட்டத்தின்படி குற்றமாக கருதப்படுகின்றது. “மணப்பெண் வீட்டாரிடமிருந்து மணமகன் வீட்டாருக்காக திருமணத்திற்காக கேட்கப்படும் பணம், பொருள் மற்றும் சேவைகள் அனைத்தும் வரதட்சணை எனப்படுகின்றது”. இன்னும் சற்று விளக்கமாக பார்ப்போம்,

பணமாக கேட்பது, பெண்ணுக்கு நகை, ஆணுக்கு நகை, இருவருக்கும் உடைகள் கேட்பது, சீர்வரிசை எனும் சீதனமாக கேட்பது, பெண்ணுக்கு 'பெட்டி சீர்' என்று தனியாக, (இதில்... உடை, செருப்பு, ஜமக்காளம், தலகாணி உரை, அழகுசாதன பொருட்கள் உட்பட சோப்பு சீப்பு கண்ணாடி என வாழ்வியல் அவசிய பொருட்கள் அனைத்தும் பெட்டிகளில்), சீதனம் எனும் பெயரில் குடும்ப வாழ்வுக்கு அவசியமான அண்டாகுண்டா தட்டுமுட்டு சாமான்கள், அவசிய ஃபர்னிச்சர் முதல் ஏசி, கார் என்று ஆகி... ஒரு வீட்டையே கட்டியும் சீதனமாக கொடுக்கிறார்கள். 

மேலும், கல்யாண விருந்து போட சொல்லுதல், அதையொட்டி பல்வேறு விருந்துகள் போட சொல்லுதல், கல்யாண பத்திரிக்கை அடிக்க- போஸ்டர் அடிக்க சொல்லுதல், திருமண மண்டபசெலவு, விருந்தினர் போக்குவரத்து ஏற்பாட்டு செலவு, விருந்தினர் தங்கவைக்க லாட்ஜ் செலவு, சில சமயம் மாப்பிள்ளைக்கு இன்னும் சிறப்பான அதிக வருவாயில் வேலை வாய்ப்பு – மாமனார் சிபாரிசில் அல்லது லஞ்சத்தில் வாங்கிக்கொள்ளுதல் என பல செலவினங்களை பெண்வீட்டார் தலையில் கட்டுதல்.

நாங்கள் எங்கள் பெண்ணுக்கு இவ்வளவு போட்டோம்… அதனால் நீங்கள் எங்கள் பையனுக்கு இவ்வளவு போடுங்கள். நாங்கள் இப்படி செய்தோம்… அதனால் நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்… என்று பெண்வீட்டாரை வறுபுறுத்துதல் இவையெல்லாம் வரதட்சணை என்ற கணக்கில் வந்துவிடுகின்றது. வரதட்சனை கேட்பது யார்? என்று பார்த்தால்… பெரும்பாலும் பெண்ணினத்தார்களே முன்னிலையில் இருக்கின்றார்கள். அதாவது பையனை பெற்ற பெண்கள்தான் வரதட்சணை கேட்டுப்பெறுவதில் குறியாக இருக்கின்றார்கள். சில வீட்டுத் திருமணத்தில் மணப்பெண்ணே வரதட்சணை என்ற பெயரில் தம் தாய்வீட்டு பொருளாதாரத்தை சுரண்டி சென்றுவிடுகின்றனர்.

இப்படி, "பல விதங்களில் அளிக்கப்படும் வரதட்சணையை" பல காரணிகள் பாதிக்கின்றன. சில காரணிகள் அவற்றை உயர்த்துகின்றன; சில காரணிகள் வரதட்சணையை குறைக்கின்றன. இவற்றையும் இனி பார்ப்போம். 

மணப்பெண்ணின் அழகு, கல்வி, பட்டப்படிப்பு, வேலைவாய்ப்பு, மாதச்சம்பளம், சமூகத்தில் தனிப்புகழ், தனிப்பட்ட சாதனை, தந்தை(யின் சொத்து)க்கு ஒரே வாரிசாக இருத்தல்... போன்றவை எல்லாம் "இருதரப்பு நிச்சயதார்த்த பேச்சுவார்த்தை"யின் போது வரதட்சணையில் பெரும் சரிவை ஏற்படுத்தும் காரணிகள்.

மேலும் மணமகனுக்கு இது இரண்டாம் திருமணம் ஆக இருத்தல், மணமகன் 'ஹேண்ட்சம் லுக்' இல்லாமல் அவலட்சணமாக இருத்தல், கல்வியறிவற்று இருத்தல், சம்பாரிக்காது இருத்தல், ரொம்ப வயதாகி இருத்தல், அங்கங்கள் ஊனமுற்று இருத்தல், மணப்பெண்ணைவிட படு ஏழையாக இருத்தல்... போன்றவையும் வரதட்சணையை படு கீழே குறைத்துவிடும்.

ஆனால், இல்லாமலேயே ஆக்கி விடும் என்று சொல்ல முடியாது. ஏனெனில், இங்கே வரதட்சணை என்பது மணப்பெண்ணின் 'தியாகமாக' அல்லது 'சகிப்புத்தன்மையாக' மாற்றப்பட்டு அல்லவா மணமகன் வீட்டாருக்கு தரப்படுகிறது. அப்படியல்லாது, இதுவே மணப்பெண்ணிடம் அதேபோன்ற குறைகள் அமைந்துவிட்டாலோ... வரதட்சணை தாறுமாறாக எகிறும்..!

இவை அல்லாது பத்து பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் சேர்கிறது, "செவ்வாய் தோஷமா, ராசி, நட்சத்ரம், சாதி, அந்தஸ்து என்ன.." என்றும் நிறைய காரணிகள் நம் இந்திய-தமிழ் கலாச்சாரத்தில் வரதட்சிணையை பாதிக்கும் காரணிகளாக இருக்கின்றன.

வரதட்சணை என்ற இத்தனை கொடுமையான விஷயங்களும் பெண்ணுக்கு மணவாழ்வு அமைய வருடக்கணக்கில் தாமதம் ஆகின்றன. ஒருவேளை அப்படி மணவாழ்வு அமைந்த பின்னும் "அதில் குறை; இதில் குறை" என்று அப்பெண்ணின் மவாழ்வில்  பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்ணை பெற்றவர்களுக்கும் இந்த சமூக கொடுமையான வரதட்சணையால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுகின்றது.

இப்போது நான் கேட்பது என்னவெனில்... பொதுவாக பெண்களுக்கும், பெண்களின் பெற்றோருக்கும் இவ்வளவு பாதிப்பு இருந்தும், பொதுவாக இந்த சமூக கொடுமைக்கு எதிராக சமூகத்தில் மிக மிக அதிகமாக ஆண்கள் மட்டுமே தீவிரமாக குரல்கொடுக்க காண்கிறோம். "வரதட்சணை எதிர்ப்பில், வரதட்சணை மறுப்பில் பெண்களின் பங்கு எந்த அளவில் இருக்கிறது" என்று சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். 

பெரும்பாலும் பெண்கள் 'மவுனமாகவே' இருப்பதைத்தான் காண்கிறோம். இந்த வரதட்சணை என்பது "தன் பெற்றோருக்குத்தானே பொருளாதார இழப்பு..? நமக்கு எதிர்கால பொருளாதார வரவுதானே..!" என்று பேசாமல் சுயநலத்துடன் இருந்துவிடுகிறார்களா..? புரியவில்லை..! ஏனிந்த மவுனம் சகோதரிகளே..? 

"வரதட்சணை கேட்கும் மணமகனை திருமணம் செய்யமாட்டோம்" என்று எத்தனை மணமகள்கள் உறுதி மொழி எடுத்திருக்கிறீர்கள்..? பெற்றோர்களின் சொத்தில் ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கும் சம உரிமை / பாத்தியம் உண்டு என்கின்றது சட்டம். பெற்றோர்களின் சொத்தினை பாகப்பிரிவினையின்போதோ அல்லது உங்களுக்கு வேண்டும்போதோ, பெண்களான உங்கள் பாகத்தை பெறுவது தவறாகாது. மாறாக திருமணத்தின்போது கைமாறும் பொருட்களைபற்றியே இங்கு பேசப்படுகின்றது. 

'மேற்கூறிய எந்த வகையிலும் பெண் வீட்டாரிடமிருந்து ஒரு பைசா கூட வரதட்சணையாக வாங்கக்கூடாது' என்கிற ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். மிகச்சில சுயநல ஆண்கள் மட்டுமே வரதட்சணை கேட்டுப்பெறுகின்றனர்.

வரதட்சணை என்ற வகையில் ஆண்களானாலும் பெண்களானாலும் பெறுவதும் கொடுப்பதும் கொடுமையான செயலாகும். வரதட்சணை வாங்கி அல்லது கொடுத்துச் செய்கின்ற அடிமைத் திருமண வாழ்க்கை எவ்வகையிலும் இனிக்காது. இப்படிப்பட்ட அறமற்ற செயலினை பொதுமக்களும், சன்மார்க்கிகளும் தங்களது வாழ்க்கையிலிருந்து அறவே ஒழிக்க வேண்டும். காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்த கொடூரமான கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக வேண்டும். வரதட்சணைக்கு ஆதராவாக இன்றைய இளைஞிகள் சமூக ஊடகங்களில் பேசிவருவதை நினைத்தால் நெஞ்சம் நடுங்குகின்றது. ஆணும் பெண்ணும் சமம் என்பதையும், பெண்களுக்கான சமத்துவத்தை வரதட்சணையினை தவிர்ப்பதின் மூலம் பெண்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதனையும் நடைமுறையில் கொண்டுவருவது பெண்கள் கையில்தான் உள்ளது.

வரதட்சணை வாங்கிக்கொண்டு செய்யப்படும் திருமண பத்திரிக்கையில் திருக்குறளை அச்சடிக்காதீர்கள். வள்ளலாரின் மகாமந்திரத்தை அச்சடிக்காதீர்கள். உங்கள் குலதெய்வத்தின் பெயரை அச்சடிக்காதீர்கள். மாறாக “வரதட்சணை துணை” என்று அச்சடித்து விநியோகம் செய்யுங்கள். அதுதானே உண்மை. அறத்திற்கு மாறான திருமணங்களை தவிருங்கள்.

--தி.ம.இராமலிங்கம். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.