Wednesday, April 5, 2017

பசி தவிர்க்கும் மருந்து


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஏப்ரல் 2017 ஆம் மாதத்தில் வெளியானது…


பசி தவிர்க்கும் மருந்து

பசி இல்லை என்றால் இவ்வுலகம் இயங்காது. உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானது பசி. பசியினால்தான் மரங்கள் செடிகள், புல், பூண்டுகள் வளர்கின்றன. பசியினால்தான் உயிர்கள் இடம்பெயர்கின்றன. பசியினால்தான் மனிதர்கள் உழைக்கின்றார்கள். இப்படிப்பட்ட பசியை ஒழிக்க இதுவரை யாரும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சில சித்தர்கள் ஒரு வார காலம் மட்டும் பசியில்லாமல் இருக்க மருந்து கண்டுபிடித்து அதனை உபயோகப்படுத்தியும் உள்ளனர். தற்போதுள்ள விஞ்ஞான காலத்தில் சில நாட்கள் மட்டும் பசியில்லாமல் இருக்க மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அம்மருந்தினை விண்வெளி வீரர்கள் பயன்படுத்துகின்றார்கள். நாமும் சித்தர்கள் கண்ட மருந்தினை பயன்படுத்தினால், நமக்கு உடல்நிலை சரியில்லாத தருணத்தில், உழைக்க முடியாத தருணத்தில் ஒரு வாரகாலம் சாப்பிடாமல் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா?! இதோ புலிப்பாணி முனிவர் கூறிய மருந்தை பார்ப்போம்,

“நீர் முள்ளிவிதை எடுத்து நசுக்கி
 அதன் அரிசியை பசுப்பால் விட்டு அரைத்து
 பசுப்பாலுடன் கலந்து அருந்து
 வாரம் ஒன்றாகும் வரை பசியெடுக்காதே
 நாதனார் போகருட கடாட்சத்தினாலே
நலமாக புலிப்பாணி பாடினேனே”

நாயுருவி செடியின் விதைகளை சேகரித்து அவற்றை உரலில் இட்டு குற்றியெடுத்து உமி நீக்கி, அந்த அரிசியில் சிறிது பசும்பால் விட்டு மை போல அரைத்து அந்த விழுதினை பசும் பாலில் கலந்து அருந்தினால் ஒரு வாரம் வரையில் பசி எடுக்காது என்கின்றார். இதனை தன் குருநாதர் போகரின் அருளால் கூறுவதாக உரைக்கின்றார்.
எந்நாளும் பசியே எடுக்காத மருந்தினை அகத்தியர் கண்டுபிடித்துள்ளார்,

“தானென்ற நாயுறுவி வித்து தன்னை
        தண்மையினால் முலைப்பாலில் உரைத்து மைந்தா
 பானென்ற பசுப்பாலில் கரைத்துக் கொண்டு
        பாங்கான எட்டிவிரை உரைத்துக் கொண்டு
 தேனென்றே தியானித்துக் கொண்டாயாகில்
        செவ்வியை வயிறு பசி எடுப்பதில்லை
நானென்று எத்தனை நாள் இருந்தாலுந்தான்
        நளினமுடன் பசியாது மைந்தா பாரே”

நாயுருவி வித்து எடுத்து முலைப்பால் விட்டு அரைத்து எடுத்துக்கொண்டு எட்டி விதை ஒன்றையும் அரைத்து எடுத்து இரண்டையும் பசும்பாலில் கரைத்து இறைவனை வணங்கிக் கொண்டு அருந்தினால் எத்தனை நாள் சென்றாலும் வயிறு பசி எடுக்காது என்கின்றார் அகத்தியர்.  

“பாரப்பா பசிஎளுப்ப வேண்டு மென்றால்
        பண்பாக சொல்லுகிறேன் மைந்தா கேளு
 வீரப்ப எலும்பியதோர் மஞ்ச ளிஞ்சி
        விரும்பிய தின்றிடவே வேகம் கொண்டு
 காரப்ப மூல அக்கினியே நீறும்
        கடும்பசிதா னெடுக்குமாடா கருவாய்ப்பாரு
 தெறப்பா மனந்தேறி கருவாய்ப் பார்த்தால்
        சித்துவித்தை அநேகமுண்டு தெளிந்து காணே”

மீண்டும் பசி எடுக்க வேண்டும் என்றால் ஒரு மஞ்சள் இஞ்சியை தின்ன வேண்டும் என்று சொல்வதோடு மஞ்சள் இஞ்சி தின்றால் கடும் பசி உண்டாகும். அத்துடன் தூய நல்ல மனதுடன் தேடுபவர்களுக்கு இதுபோல பல சித்துமுறை தெரியவரும் என்கின்றார் அகத்தியர்.

(குறிப்பு: சித்த மருத்துவரை கலந்தாலோசித்து சோதித்து பார்க்கவும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.