அன்புடையீர்
வந்தனம்!
அகத்தே
கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தில்
அடைவித்திட அவரும் இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த உகத்தே
இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே…(திருவருட்பா-5485)
உலகியலர்கள்
எல்லாம் சன்மார்க்க சங்கத்தை அடைதல் வேண்டும் என்று இறைவன் ஆசைப்பட்டான். அந்த ஆசையினை
பூர்த்தி செய்யவதற்காக இறைவன் இவ்வுலகிலே வள்ளற்பெருமானை அனுப்பி வைத்தார். வள்ளற்பெருமானால்
இவ்வுலகிடை மக்கள் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
வள்ளலார்
வருவிக்க உற்ற தினத்தை, அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்கள்
குறிப்பிட்டுள்ளதாவது… “கருணீககுல திலகவதியாகிய சின்னம்மையார் கலியுகம் 4925-ல் நிகழும்,
சுபானு வருஷம் புரட்டாசி மாதம் 21-ந் தேதி (1823-ஆம் வருடம் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி)
ஞாயிற்றுக்கிழமை பூர்வபஷம் துவிதியை சித்திரை நட்சத்திரம் நாலாம் பாதம் உதயாதி 29 ¾
க்குச் சிவயோகியர் அருளிய வரத்தின்படியே சடாந்த சமரச சுத்த சன்மார்க்க ஞானாசாரியராய்
விளங்க வேண்டிய ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தனர். அஞ்ஞான இருள் அகற்றவந்த ஞான சூரியனாய்த்
திகழ்ந்து சத்துவகுண மேலிட்ட சைவக்குழந்தை பொலிவுற்று வளர்ந்து வந்து “இராமலிங்கம்”
என்னும் பிள்ளைத் திருநாமம் சூட்டப்பெற்றது…”
வள்ளற்பெருமான் வருவிக்க உற்ற தினத்தை தமிழ்
மாத கணக்கின்படி காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
அவ்வகையில் 194-ஆம் ஆண்டு தினத்தை பொற்றடை வருடம் புரட்டாசி மாதம் 06-ஆம் நாள்
(22-09-2017) வெள்ளிக்கிழமை சித்திரை நட்சத்திரத்தில் ச.மு.க. அருள் நிலையம் கொண்டாட
இருக்கின்றது.
அவ்வமயம் சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும்
தங்களது குடும்பத்துடன் அருள் நிலையம் வந்திருந்து அருளாளரின் வருவிக்கவுற்ற தின விழாவில்
கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். நன்றி.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.