Sunday, September 17, 2017

மூன்று படிகள்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் செப்டம்பர் – 2017 ஆம் மாதம் வெளியானவை;

மூன்று படிகள்

சுத்த சன்மார்க்கத்துக்குப் படி மூன்று. ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் 1, சமரச சன்மார்க்கம் 1, சுத்த சன்மார்க்கம் 1, ஆக 3. ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் 3: சிற்சபை 1, பொற்சபை 1, சுத்த ஞானசபை 1, ஆக 3. இவைகள் மூன்றுந்தான் படிகளாக இருக்கும்.

 



சுத்த சன்மார்க்க நடை உடையவர்கள், தாம் ஏறவேண்டிய படிகள் மூன்றுதான். இந்த மூன்று படிக்கட்டுகளில் முதலில் ஒன்றாம் படிக்கட்டு என்பது என்ன? என்று பார்ப்போம். 

“சடாந்த சன்மார்க்கம்” என்பதே அந்த ஒன்றாம் படிக்கட்டு. இந்தப் படிக்கட்டைத்தான் நாம் முதலில் ஏறி கடக்கவேண்டும். சடாந்த சன்மார்க்கம், சடாந்தங்களின் பொதுவாக அமைந்துள்ளது. ஆறு வகையான முடிபுகள்தான் சடாந்தம் எனப்படுகின்றது. இவற்றை பற்றி நாம் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரையில் “மே – 2017” மின்னிதழில் ஏற்கனவே எழுதியுள்ளோம். அதன் சுருக்கத்தை மட்டும் நாம் இங்கே தற்போது காண்போம்.

சைவ சமயம் கூறும் ஆறு முடிபுகளை வள்ளலற்பெருமான் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆறு முடிபுகளையும் தமது அனுபவத்தால் செப்பனிடுகின்றார்.  அதற்கு அடையாளமாக ஒவ்வொன்றிர்க்கும் அடை மொழியினை சேர்க்கின்றார். தூய கலாந்தம், ஞான யோகாந்தம், விமல போதாந்தம், பெரிய நாதாந்தம், சுத்த வேதாந்தம், சுத்த சித்தாந்தம் என்று தமக்கே உரிய அனுபவத்தால் வேறுபடுத்தி காட்டியிருக்கின்றார். ஏன் வேறுபடுத்தினார் எனில்?, சைவ சமயவாதிகளால் அனுபவிக்கப்பட்ட ஆறு முடிபுகளின் அனுபவங்களும் “சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள்” என்றும் அவற்றை பின்பற்ற வேண்டாம் என்றும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளற்பெருமானுக்கு தடை செய்து அருளியிருக்கின்றார். (சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்) எனவே வள்ளற்பெருமான் கூறும் ஆறு முடிபுகள் என்பது சைவ சமயம் கூறும் ஆறு அந்தம் அல்ல என்பது தெளிவாகின்றது. ஆனாலும் சமயத்தில் உள்ள ஆறு அனுபவங்களும், மிகச்சிறிய  அனுபவங்களாக சுத்த சன்மார்க்க அனுபவத்திலும் தோன்றும்.

வள்ளற்பெருமான் கூறியிருக்கும் மேற்காணும் ஆறு முடிபுகளுக்கும் பொது என்பது எதுவெனில்?, சுத்த வேதாந்த அனுபவமும், சுத்த சித்தாந்த அனுபவமும் இணைந்த அனுபவத்தைத்தான் பொது எனக்கூறுகின்றார். இந்த “பொது”தான் சடாந்த சன்மார்க்கமாகும். இவ்வனுபவம் சுத்த சன்மார்க்கத்தின் முதல் படியாகும். இதன் விரிவினை திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரையில் எண் 34 முதற்கொண்டு எண் 44 வரையில் விளக்கமாக எழுதியுள்ளேன். நிற்க.

இரண்டாம் படிக்கட்டு “சமரச சன்மார்க்கம்” ஆகும். மேற்காணும் ஆறு முடிபுகளின் முடிபும் தனக்கு முதன்மையாக்கி அதனையும் கடந்து மேல் நிலை அனுபவம் அடைவது சமரச சன்மார்க்கம் ஆகும். இவ்வனுபவத்திற்கு பெயர் குருதுரிய அனுபவமாகும். தத்துவராயர் போன்ற மகான்கள் பெற்ற அனுபவமானது சமரச சன்மார்க்க அனுபவமாகும் என்று வள்ளலார் குறிப்பிடுகின்றார். இந்த அனுபவம் இரண்டாம் படிக்கட்டு ஆகும்.

மூன்றாம் படிக்கட்டு “சுத்த சன்மார்க்கம்” ஆகும். மேற்காணும் இரண்டு படிக்கட்டுகளை சைவ வேதாகமங்களிலும், தத்துவராயர், தாயுமானவர் போன்ற மகான்களாலும் ஒருவாறு (முழு அனுபவம் இல்லாமல்) அனுபவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் படிக்கட்டு என்பது இதுவரை எவர் ஒருவராலும் ஏற முடியாமல் இருந்து வந்துள்ளது. மூன்றாம் படிக்கட்டை அடைந்தவர் நமது வள்ளற்பெருமான் மட்டுமே. 

இவ்வனுபவத்தை சுத்த சிவ துரியாதீத நிலை என்பார் வள்ளலார். சிவ அனுபவம், பரசிவ அனுபவம் இவை இரண்டினையும் மறுத்தது சுத்த சிவ அனுபவமாகும். சன்மார்க்கம், சிவசன்மார்க்கம் இவை இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். முதலில் நின்ற சமய மத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். எனவே சடாந்த சன்மார்க்கம் எனவும், அதன் மேற்பட்டு சமரச சன்மார்க்கம் எனவும், அதன் உச்சியில் சுத்த சன்மார்க்கம் எனவும் மூன்று நிலை சன்மார்க்க அனுபவங்களை பெறுவதே நமது நோக்கம். 

சத்தென்னும் உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கம். ஆதலால் இம்மார்க்கம் எவ்வகையிலும் உயர்வுடையது. பாவனாதீத அதீதம், குணாதீத அதீதம், லட்சியாதீத அதீதம், வாச்சியாதீத அதீதம் ஆகியவையே சுத்த சன்மார்க்கமாகும். எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வகைத் தடையும்  வாராத சுத்தமாதி ஞானதேக சித்தியும், அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்தும் தனிப்பெரும் வல்லமையும், ஏமவுப்பிய பிரேதஜீவிதாதி சித்தியும், வஸ்துப் பிரத்யசானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது மூன்றாவது படிக்காட்டாகிய சுத்த சன்மார்க்கத்தின் முடிபாகும். 

மேற்காணும் மூன்று படி நிலைகளையும் சிற்சபை, பொற்சபை, சுத்த ஞானசபை அனுபவங்களாக குறிக்கின்றார். சிற்சபை அனுபவமானது சடாந்த சன்மார்க்க அனுபவமாகும். பொற்சபை அனுபவமானது சமரச சன்மார்க்க அனுபவமாகும். சுத்த ஞானசபை அனுபவமானது சுத்த சன்மார்க்க அனுபவமாகும். 

சிற்சபைக்கு அடுத்து பொற்சபை, பொற்சபையை கடந்து சுத்த ஞானசபைக்கு செல்ல வேண்டும். இதனை விளக்கவே வடலூரில் சுத்த ஞானசபைக்குள் சிற்சபையும், பொற்சபையும் வள்ளற்பெருமான் அமைத்துள்ளார். சிற்சபை என்பது நெற்றிக்கண் அல்லது புருவ மத்தி என்பதாகும். புருவமத்தியில் அதாவது சிற்சபையில் ஆன்மா இருக்குமிடம் பொற்சபையாகும். ஆன்மாவின் ஒளி / வெளிச்சம் / பிரகாசமே ஞானசபையாகும். 

சிற்சபையை அறிவதற்கு நாம் சடாந்த சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும். பொற்சபையை அறிவதற்கு நாம் சமரச சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும். ஞானசபையை அறிவதற்கு நாம் சுத்த சன்மார்க்க அனுபவத்தை அடையவேண்டும். இவை மூன்றும் ஒருங்கே அடைந்த மகான் நமது வள்ளலார் மட்டுமே. மற்ற மகான்கள் எல்லாம் சிற்சபை அனுபவத்தையே பெரிதும் அடைந்துள்ளனர். அதில் மிகச்சிலரே பொற்சபை அனுபவத்தையும் அடைந்துள்ளனர். சமயம், மதம், சடங்குகள் கடந்து ஆன்ம நேய உணர்வுடன் உயிரிரக்கம் கொண்டவர்களால் மட்டுமே ஞானசபை அனுபவத்தைப் பெறமுடியும். 

சிற்சபை அனுபவம் பெற்றவர்கள் சுவர்ணதேகமுடையவர்கள். பொற்சபை அனுபவம் பெற்றவர்கள் பிரணவ தேகம் உடையவர்கள். ஞானசபை அனுபவம் பெற்றவர்கள் ஞானதேகம் உடையவர்கள். இந்த மூன்று தேகங்களும் பிறர் பார்வையிலிருந்து மறைபடும். முதல் இரண்டு தேகத்திற்கு மரணம் உண்டு. மூன்றாவது ஞான தேகத்திற்கு மட்டுமே மரணமில்லா பெருவாழ்வு உண்டு.   

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.