அருட்பெருஞ்ஜோதியனே
பிடித்துபடித்த
போதெல்லாம் உன்னையே படித்தேன்
புகழ்ந்துபேசும் போதெல்லாம் உன்னையே பேசினேன்
விடிந்துகாணும்
போதெல்லாம் உன்னையே கண்டேன்
வெளியைவியக்கும் போதெல்லாம் உன்னையே வியந்தேன்
படிந்துகேட்கும்
போதெல்லாம் உன்னையே கேட்டேன்
பாரில்நுகரும் போதெல்லாம் உன்னையே நுகர்ந்தேன்
அடியைபாடும்
போதெல்லாம் உன்னையே பாடினேன்
அடிமை உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
தவமென்ன
புரிந்தேனோ தயவே வடிவான
தந்தையை அடைந்தே தன்நிலை யறிந்து
நவநிலையும்
கடந்து நாதாந்த நாட்டினிலே
நடிக்கவும் பெற்றேன் நான் அதுவாகும்
தவநிலையில்
உயர்ந்து தத்துவ மழித்து
தனித்து இருக்கஓர் தந்திரம் சொல்லியே
அவநிலை
போக்கிய அழகனே அம்மையே
அடிமை உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
என்னுயிரே
அவ்வுயிரிலாடும் அணுவே அணுவில்
ஊடும் ஒளியே ஒளியில்வீசும் பெருஞ்சுடரே
என்னியலே
அவ்வியலில் அமைந்த பெருந்தயவே
அத்தயவில் காணும் பெருஞ்ஜோதி இறையே
என்தவமே
அத்தவத்தில் விரிந்ததோர் பெருவெளியே
அவ்வெளியில் நடுநின்றாடும் கருணையா மரசே
என்கதியே
அக்கதிஎய்தும் இறவா பெருவாழ்வே
அடிமை உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
மதமும்
சாதியும் மெய்யெனவே இருந்தேன்எம்
மனம் செல்லுமிடமே நற்கதி என்றிருந்தேன்
முதலோடு
வட்டிமிக வாங்குவதும் இன்ப
மங்கையரை தழுவுவதுமே வாழ்க்கை என்ற
மிதப்போடு
கடந்த பிறவிகள்தான் எத்தனையோ
மண்ணுயி ரெல்லாம் தன்னுயிராய் கருதும்
உதயத்தை
இப்பிறப்பில் கண்டுவிட்டேன் இனி
அடிமை உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
கடவுளும்
கடவுள் திகழும்நன் நிலையும்அக்
கடவுளுள் விளங்கும் இன்பமுறு முயிருமாக்கி
கடவுளை
கடந்துகடந்து உள்ளும் வெளியுமாய்
கடந்து பார்க்கினும் சற்றும் அணுவளவேனும்
கடக்க
முடியாத அணுவினும்சிறிய பேரிடத்திலே
கடவுளாய்க் கட்டுண்டு பெருவாழ்வு வாழவே
அடங்கி
இருக்கபணித்த பேரருளே பெருங்கணக்கே
அடிமை உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
பிச்சுலகர்
மெச்சவே பாடினேன் அல்லேன்நின்
பன்னுலகம் மெச்சவே பாடினேன் எந்தாய்
எச்சம்
எல்லாம் நீக்கும்உந்த னடியைப்பாடவே
எனக்குள் குலவும் பெருந்தெய்வமே உனக்கே
இச்சை
வைத்தேன் இசைந்து பாடுகபாடுகநீ
அசைந் தாலன்றிநான் அசைவேனில்லை அறிவாய்
அச்சஉலகியர்
அறிவாறில்லை பெருவாழ் வளித்ததால்
அடிமை உனக்கேயானோம் அருட்பெருஞ்ஜோதியனே.
உள்ளத்தில்
உள்ளானை உள்ளம் காணாதே
உண்மை
என்றாகிலும் உண்மை உரைக்காதே
பள்ளியில்
கற்றாலும் பள்ளிகள் அறியாதே
பழமை
வேதங்களும் பழம்பொருள் கூறாதே
துள்ளியே
குதித்தாலும் துள்ளலுள் அடங்காதே
துதித்து
நின்றாலும் துதித்தல் வேண்டாதே
அள்ளி
கொடுத்தலும் ஆருயிர் காத்தலும்செய்து
அடிமை
உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
உத்தமன்
குடிகொள்ளும் உள்ளந்தனை வேண்டியே
உன்திருவடி
பாடிநின்று தொழுகின்றேன் ஐயாவே
நித்தியன்
என்றென்னும் நிலையளிக்க வேண்டியே
நின்புகழை
ஏற்றிநின்று நீடுகின்றேன் ஐயாவே
சித்திகள்
எல்லாமும் சிறந்தோங்க வேண்டியே
சிற்சபை
நேயனுனை சிந்திக்கின்றேன் ஐயாவே
அத்துவிதம்
ஆகிநின்று அனைத்துயிரு மாகநிற்க
அடிமை
உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
உலகெலாம்
படைத்து உடுக்களில்அதை இறைத்து
உயிர்களை வகுத்து உடல்களில்அதை விதைத்து
நலமெலாம்
காணஆன்ம நற்கோயிலில் எழுந்தருளி
நடனமிடும் அருட்ஜோதி நண்பனே எந்தன்
பலமெலாம்
திருச்சபை புகழ்ச்சி என்றறிவித்த
பழம்பொருளே சன்மார்க்க பக்தர்க்கு ஓய்வில்லா
அலை
ஒலியால் எழுப்பியாட்கொள்ளு மணியே
அடிமை உனக்கேயானோம் அருட்பெருஞ் ஜோதியனே.
பிறப்பெனும்
பேயேனை பிரிந்தறியேன் ஐம்பெரும்
புலன்களை கடந்தறியேன் பஞ்சணை சுகமும்பெண்
உறவெனும்
மாமாயையை விட்டறியேன் சன்மார்க்க
உண்மையை கண்டறியேன் பிணமெனும் பெயராகி
இறப்பெனும்
கொடுமையை எதிர்த்தறியேன் சமயமத
அல்லல்களை துறந்தறியேன் எனினும் இறைமை
அறமென்னும்
கருணையால் அழுது தொழுகின்றேன்
அடிமை உனக்கேயானேன் அருட்பெருஞ் ஜோதியனே.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.