தனிப்பெருங்கருணை நாள்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க
வள்ளல் மலரடி
வாழ்க வாழ்க
அன்பர்கள் அனைவருக்கும் காரணப்பட்டு ச.மு.க. அருள்
நிலையத்தின் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வள்ளற்பெருமான் வருவிக்கவுற்ற தினமான 05-10-2021
அன்று, இனி அக்டோபர் ஐந்தாம் நாளினை ”தனிப்பெருங்கருணை நாள்” என்று தமிழக அரசால் கடைபிடிக்கப்படும்
என்ற ஓர் இனிய அறிவிப்பை நமது மாண்புமிகு முதல்வர் ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்”
அவர்கள் அறிவித்து சுத்த சன்மார்க்க உலகில் ஓர் புதிய வரலாற்றை இயற்றியுள்ளார். மாண்புமிகு
முதல்வருக்கும், தமிழக அரசிற்கும் காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையமானது, வள்ளற்பெருமான்
சார்பாகவும், சுத்த சன்மார்க்கர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாம் தற்போது “தனிப்பெருங்கருணை நாள்” என்றால் என்ன?
என்பது பற்றி சற்றே சிந்திப்போம்.
”அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி” என்பது வள்ளலார் தமது இறுதியான பேருபதேசத்தில் வெளிப்படுத்திய மஹா
மந்திரமாகும். இம்மஹா மந்திரத்தில் ஒரு சொல்தான் “தனிப்பெருங்கருணை” என்பதாகும். அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் தனது முதல் சாதனமாக “கருணை” என்பதையே
எடுத்துக்கொண்டார். கருணை என்கின்ற தயவினை தனது முதல் சாதனமாக எடுத்து அருட்பெருஞ்ஜோதியின்
மயமாய் ஆன வள்ளலாரை தனது முதல் மகனாக ஏற்றுக்கொண்டார் இறைவன். அதாவது அருட்பெருஞ்ஜோதியும்
வள்ளலாரும் தங்களது முதல் சாதனமாக “கருணை” என்பதையே எடுத்துக்கொண்டு அதன் வழி சென்று
கொண்டிருக்கின்றார்கள். கருணை இன்றி இறைவனும் இல்லை, வள்ளலாரும் இல்லை என்றாகின்றது.
அகரம் என்கின்ற உயிரெழுத்தில் துவங்கும் “அருட்பெருஞ்ஜோதி”
என்ற சொல் என்றும் உயிருடன் விளங்கும்.
ஆய்த எழுத்தான ”ஃ” அக்கு என்பதை “தனிநிலை” என்பார்கள்.
இந்த தனிநிலையை குறிக்கவே “தனிப்பெருங்கருணை” என்பதில் “தனி” என்கின்ற வார்த்தை வந்தது.
ஆய்த எழுத்து என்பது சிற்சபை, பொற்சபை, ஞானசபை மற்றும் இடது கண், வலது கண், நெற்றிக்கண்ணை
குறிக்கும். இதனை ”மாடம்” என்ற சொல்லால் சித்தர்கள் குறிப்பார்கள். அந்த காலத்தில்
அனைத்து இல்லங்களிலும் விளக்கு ஏற்றுவதற்கென்றே மாடம் என்கின்ற அமைப்பு இருக்கும்.
நமது உடம்பு என்னும் வீட்டிலும் மாடம் என்கின்ற இடத்தில் இறைவனால் ஏற்றிவைக்கப்பட்ட
விளக்கு எரிந்துக்கொண்டிருக்கின்றது. அதனைக்குறிக்கவே ”தனி” என்கின்ற வார்த்தை வந்தது.
“அ” என்னும் அருட்பெருஞ்ஜோதி விளக்கானது, நமது உடம்பில் “தனி” என்கின்ற மாடத்தில் அனைந்துவிடாமல்
என்றும் அனையா தீபமாக விளங்க வேண்டுமானால், நமக்கு இறைவனின் முதல் சாதனமான “பெருங்கருணை”
வேண்டும். (கருணையை சிறப்பிக்க வேண்டி பெருங்கருணை என்ற வார்த்தை வந்தது.)
இவ்வுலகில் இதுவரை வந்த எவ்வித மானிடரும் தங்களது
மாடத்து விளக்கை “அனையா தீபமாக” வைத்துக்கொள்ளவில்லை. வள்ளலார் ஒருவரே மரணமிலா பெருவாழ்வை
அடைந்து, தமது உடம்பின் மாடத்தில் உள்ள தீபத்தை இன்றும் என்றும் அனையா தீபமாக வைத்துக்கொண்டுள்ளார்.
அதற்கு காரணம் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் தயவினை வள்ளலாருக்கு
அளித்ததும் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை வள்ளலார்
தோற்றுவிக்க காரணமாக இருந்ததும் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வள்ளலார்
தோற்றுவிக்க காரணமாக இருந்ததும் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வள்ளலார்
தோற்றுவிக்க காரணமாக இருந்ததும் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
வள்ளலார் மேட்டுக்குப்பத்தில் பேருபதேசம் செய்து,
திருக்காப்பிட்டுக்கொண்டதற்கும் காரணம் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
”இரா.இராமலிங்கம் பிள்ளை” என்பவர் ”சிதம்பரம் இராமலிங்கம்
பிள்ளை” என்றும் அதன் பிறகு ”வள்ளலார்” என்றும் அழைக்கப்பெற காரணமாக இருப்பதும் இந்த
“தனிப்பெருங்கருணை”தான்.
வள்ளலார் இயற்றிய பாடல்களுக்கு “திருவருட்பா” எனப்
பெயர் வரக்காரணமாக இருந்ததும் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
இவ்வாறு வள்ளலாரின் பெருவாழ்க்கை இந்த “தனிப்பெருங்கருணை”யாலே
காலம் கடந்தும் நீடித்துக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு அருட்பெருஞ்ஜோதியின் “தனிப்பெருங்கருணை” காரணத்தால் இவ்வுலகிற்கு வள்ளலார்
வருவிக்கவுற்றார். எனவே வள்ளலார் வருவிக்கவுற்ற திருநாளை “தனிப்பெருங்கருணை நாள்” என
தமிழக அரசு அறிவித்ததற்கும் காரணம் இந்த “தனிப்பெருங்கருணை”தான்.
இனி நாம் வள்ளலார் வருவிக்கவுற்ற தினத்தை “தனிப்பெருங்கருணை
நாள்” என கொண்டாடி மகிழ்வோம்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க.
வள்ளல் மலரடி
வாழ்க வாழ்க.
--தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.