Saturday, February 16, 2013

யார் குரு?


யார் குரு?

வள்ளலார் யாரை குருவாக ஏற்றுக்கொண்டார்? அவரால் அடைந்த இலாபம் என்ன? இக்கேள்விக்கு விடையளிக்கும் முன், காலத்தை கி.மு. (கிருத்து பிறப்பதற்கு முன்) - கி.பி. (கிருத்து பிறப்பதற்கு பின்) என்று கணக்கிடுவதைப்போல வள்ளலாரின் இறை அனுபவங்களையும் இரண்டாக பகுத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதாவது அவர் 'சிறிது அற்ப அறிவாக விளங்கிய காலம் (05-10-1823 முதல் 11-04-1871 வரை)' என்றும் 'பேரறிவு விளங்கிய காலம் (12-04-1871 முதல் அளவிறந்த நெடுங்காலம் வரையில்)' என்று பிரித்துப் பார்த்துதான் மேற்கண்ட வினாவிற்கு விடை யளிக்கவேண்டும்.

வள்ளலாருக்கு 'சிறிது அற்ப அறிவாக விளங்கிய காலத்தில்' அவரது குரு 'திருஞான சம்பந்தர்' ஆவார். இதனை அவரே தமது திருவருட்பாவில் பாடிக் களித்துள்ளார். திருஞானசம்பந்தரால் வள்ளலார் அடைந்த இலாபம் என்ன? ஒன்றும் இல்லை. 'சிறிது அற்ப அறிவாக விளங்கிய காலத்தில்' வள்ளலார் தமது குருவை பற்றி பாடிய திருவருட்பாவால் திருஞானசம்பந்தருக்கும், சைவ சமயத்திற்கும் தான் புகழும், இலாபமும் கிடைத்தன என்று சொல்லலாம்.

உண்மையில் திருஞானசம்பந்தர் யார்? என்பதனை சற்று சுருக்கமாக பார்ப்போம்...

சைவ வைணவ சமயங்கள் பரவுவதற்குக் காரணமாயிருந்த 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் ஆகியோர், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே தோன்றியவர்கள் என்ற குறிப்பு ஆழ்ந்த சிந்தனைக்குறியது. சைவ, வைணவ சமயங்கள் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு பரப்பப்பட்டவையல்ல. தென்னாட்டில் தோன்றி வடநாட்டிற்குப் பரவியவை. சைவ, வைணவ சமயங்களின் தொகுப்பு நூல்களாக விளங்கும் பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யபிரபந்தமும் தமிழ் மொழியில் 'மட்டும்' தோன்றியவை என்பதும், வடமொழிக்கும் இவைகளுக்கும் தொடர்பில்லை என்பதும் ஆழ்ந்து நோக்க வேண்டிய கருத்துகளாகும்.

சைவ, வைணவ சமயக் கருத்துகள் முதலிலே தமிழகத்தில் தோன்றிப் பின்னர் மற்ற இடங்களிலும் பரவும் படியாகத் தமிழ்ப் பெரியோர்களால், வடமொழியிலும் எழுதப்படலாயின. இச்சமயங்களின் மூலம், தமிழ் மொழியன்றி வடமொழியன்று. வடமொழியிலிருந்து வடவர் ஆதிக்கத்தால் இக்கருத்துகள் தென்மொழியில் பரவின என்னும் தவறான கருத்து இன்று வரை நிலவுவதற்கு காரணம் என்ன என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.

இந்த நோக்கில் நாம் சைவ வைணவ வரலாற்றை நோக்கும் போது, நமக்கு சில குறிப்புகள் தென்படுகின்றன.

வைணவ சமயத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து, நாலாயிர திவ்யபிரபந்தத்தைப் போற்றும் தென்கலையினர் எழுந்த காரணத்தால், வைணவம் - தென்கலை, வடகலை என இரண்டாகப் பிரிந்த போதிலும் வைணவத்தில் தமிழின் சிறப்பு குறைக்கப்படவில்லை.

ஆனால், சைவமோ வடமொழி ஆதிக்கத்திற்கு முழுவதுமாக உட்படுத்தப்பட்டுவிட்டது. அவ்வாறு வடமொழி ஆதிக்கத்திற்கு உட்படுத்திய பெருமை திருஞானசம்பந்தரையே சாரும்.
ஒதுக்கப்பட்டு கிடந்த வடநாட்டு வைதீக மதம் - பெளத்த, சமண மதங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆண்மையும் ஆற்றலும் பெற வழி யாது? ஒரே ஒரு வழி தான் உண்டு. அவ்வழியாதெனில் தமிழர் வழிபட்டுவரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்துக்கொண்டு, பொது மக்களின் ஆதரவை பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது.

நீரில் மூழ்கி உயிர் இழக்கும் தருவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுகோடு கிடைக்குமாயின், அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ அவ்வாறே அழியும் தருவாயிலிருந்த வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டது.

ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டுத் திராவிட தெய்வங்களுக்கும் வைதீக தெய்வங்களுக்கும் புதிய தொடர்பையும் உறவுகளையும் கற்பித்துக்கொண்டது.


இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிதுபுதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீக மதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று திராவிடமும் வைதீகமும் அல்லாமல் இரண்டும் கலந்ததோர் புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதியதாக தோன்றிய மதம்தான் "இந்து மதம்" ஆகும்.

தமிழராகிய திருநாவுக்கரசர், பல்லவ மன்னனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியபோது, தமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களையெல்லாம் இறைவன் அருளால் பொருத்துக்கொண்டு, அரசனுக்கோ மற்றவர்களுக்கோ எவ்வித தீமையும் செய்யாமல், அவர்களை மனமாற்றம் அடையும்படி செய்து, மதமாற்றத்தைச் செய்தார்.

ஆனால், திருநாவுக்கரசருக்கு பின்னால் தமிழகத்தில் எழும்பிய எழுச்சியைப் பயன்படுத்த விரும்பிய ஆரியராகிய திருஞானசம்பந்தர், தன்னை தமிழன் என்று கூறி உரிமை பாராட்டிக்கொண்டும், தமிழ் மொழி சிறப்பானது என்று கூறிக் கொண்டும், வன்முறையை ஆயுதமாகக் கொண்டு, பாண்டி நாட்டில் சமண சமயம் சார்ந்திருந்த எண்ணாயிரம் தமிழர்களைக் கழுவிலேற்றி, பாண்டிய நாட்டை மதம் மாறச்செய்தார்.

திருஞானசம்பந்தர் சைவசமய வளர்ச்சிக்குப் பாடுபட்டாரா? அல்லது ஆரிய நாகரிக எழுச்சிக்கு பாடுபட்டாரா? என்னும் நோக்கில் நாம் பார்க்கும் போது, அவர் சைவ, சமய வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்பதைவிட சைவ சமயத்தை பயன்படுத்தி ஆரிய எழுச்சிக்குப் பாடுபட்டார் என்பதே கிடைக்கும் விடையாக இருக்கிறது. எவ்வாறெனில்,

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்ற்ழிக் கத்திரு வுள்ளமே"

"வேட்டு வேள்விசெய் யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முரட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெய் யத்திரு வுள்ளமே"

"அந்த ணானர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே" (3-ம் திருமுறை - திருவாலவாய் பதிகம்)

என்கிற பாடல்கள் மூலம், மேற்கண்ட கருத்து தெளிவாகிறது.

திருஞானசம்பந்தர் பாடிய பாக்களில் சமண, பெளத்தர்கள் சைவ சமயத்தின் பகைவர்கள் என்றோ சைவ சமயத்தைப் பழிக்கின்றவர்கள் என்றோ எங்கும்பாடவில்லை. வேள்வியை எதிர்ப்பவர்கள், அந்தணாளர்க்கு அடிமையாகாதவர்கள் என்பன போன்ற குற்றச் சாட்டுகளையே சமண, பெளத்தர் பேரில் சாடியுள்ளார்கள். எனவே திருஞானசம்பந்தரின் குறிக்கோள் வேத வேள்வியைப் பரப்புவதேயன்றி சைவசமயத்தை பரப்புவதன்று என்பது தெளிவு.

சைவ சமயம், வேதவேள்வியை ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. திருஞானசம்பந்தர் பொருள் திரட்டிப் பசுக்களை கொன்று, ஆங்காங்கு வேள்வி புரிந்ததையும் அக்கொலை வேள்வியைத் தில்லைவாழ் சிவபெருமானும் அடியார்களும் ஆசீர்வித்ததாகவும்,

'பரப்பை படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லை'

எனப்பாடியுள்ளார். இப்பரிதாப செயலைக்கண்டு தில்லை திருவாய்மொழி பாடிய புலவர்

'பெரிதாய முக்தியைப் பல்லோர்க்கருளும் நற்பிள்ளை பெற்றும்
அரிதாய பொன்கொண்டும் சீர்காழி அந்தணனாம் கிழவன்
பரிதாபமின்றிப் பசுவதைத்தான் என்ன பாவம் அந்தோ
எரிதாங்கி நின்றஎன் அப்பனே...'

என வருந்திப் பாடிக் கண்டித்துள்ளார்.

இப்பாடலில் உள்ள கருத்தை அராயின், திருஞானசம்பந்தர் சிவபெருமான் பேரில் பழிசுமத்தியும், பக்திமார்க்கப் பிரசாரம் எனக் காட்டிக்கொண்டும் சைவ சமயத் தமிழர்களின் ஆதரவோடு, வேத வேள்விகளையும், வேதக் கருத்துகளையும் பரப்பிவரும் மறைமுகமான சதியே என்பதைக் கலங்கரை விளக்கம்போல காட்டுகிறது.


இதைப் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரும் திருஞானசம்பந்தருடைய வரலாற்றை தொடங்கும் போது, 'வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க புனிதவாய் மலர்ந்த' தன்மையை தெளிவாகக் கூறுகின்றார். வேத நெறியைப் பரப்புவதற்குச் சைவ சமயம் திருஞானசம்பந்தருக்கு ஒரு துணைக் கருவியாகப் பயன்பட்டது.

திருஞானசம்பந்தர் இதற்குப் பயன்படுத்திய முறை, மிகக் கொடுமையானது, திருஞானசம்பந்தர் தாமே செய்ய விரும்பும் பாடலைக் கேளுங்கள்,

'மண்ணகத்திலும்.....
பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணற் கற்பழிக்கத் திருவுள்ளமே'

வேதவேள்வி வெறி, சமண - பெளத்தப் பெண்களைக் கற்பழிக்க வேண்டுமெனத் துணிகின்றது. உலகிலுள்ள மனித குலம் அனைத்தும் பழிக்கும் அனாகரிக விலங்குச் செயலை, ஒழுக்கக் கேட்டை, சமூக விரோதக் கொடுமையைப் புரிய இறைவனை வேண்டுகிறார் திருஞானசம்பந்தர். எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் எந்த கவிஞரும் இத்தகைய இழி செயலைப் பாடி, நூல்களை எழுதவில்லை. அய்யகோ! தமிழ் நூலிலே காணும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சீர்காழியில், ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் திருஞானசம்பந்தரின் திருமுலைப்பால் விழா நடைபெறுவதாகவும், அவ்விழாவில் 'சமணப் பெண்களை....' என இசையோடு கூவி சொல்லொணா வார்த்தைகளால் பெண்களின் தலைமுதல் கால்வரை ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டுப் பாடுவதாகவும், அவ்விழா உள்ளது.

உலகோர் பழிக்கும் இக்கூடா ஒழுக்கத்தைத் திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் பாடியுள்ளாரா? சுந்தரர் பாடல்களில் இடம் பெற்றுள்ளதா? இல்லை! இல்லை! திருஞானசம்பந்தரே கூசாமல், குலுங்காமல் பச்சைத் தமிழில் பாடி வைத்துள்ளார்.

'நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
... ... ... ... ...
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
கொள்கை கண்டு'

என்னும் சுந்தரர் தேவாரத்தில் அறியலாம்.

சீர்காழி விழாவைப் போலவே மதுரையிலும் சமணர்களைக் கழுவேற்றிய விழாக் கொண்டாடப்படுகிறது. திருஞானசம்பர் பாண்டிய அரசனை, அவனது கோப்பெருந்தேவி, மந்திரி ஆகியோரின் உதவியால், சைவனாக்கிய கதையாவரும் அறிந்ததே, அன்று எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய மகிழ்ச்சியைக் காட்டுவதற்கு, இப்பொழுதுங்கூட மதுரைக் கோயிலில் விழா கொண்டாடப்படுகிறார்கள்.

திருஞானசம்பந்தர் வரவால், தமிழர் எண்ணாயிரம் பேர் கழுவிலேற்றப்பட்டதுடன், தமிழராகிய திருநாவுக்கரசரும் இழிவுப்படுத்தப்பட்டார். திருமறைக்காட்டில் கோயில் கதவைத் திறந்து மூடுவதில், இறைவன் ஆரியனுக்கும் தமிழனுக்கும் வேறுபாடு காட்டியதாகவும், திருநாவுக்கரசர் இறைவனைக் காண விரும்பிய பொழுது, ஆரியரான திருஞானசம்பந்தர் காட்டத் தமிழராகிய திருநாவுக்கரசர் காண வேண்டுமெனவும், திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்ததாகவும் சேக்கிழாரால் குறிக்கப்பட்டிருக்கும் குறிப்புகள், தமிழர் திட்டமிட்டுத் தாழ்த்தப்பட்டனர் என்பதைக் காட்டுகிறது.

சைவம், ஆரிய சூழ்ச்சிக்கு உட்பட்டுவிட்டபடியால், சைவ சமய எழுச்சிக்கு காரணமாயிருந்த திருநாவுக்கரசராகிய தமிழர், மனம் நொந்த நிலையில் சைவசமயத்தில் நிலைத்திருக்க இயலாமல் மீண்டும் சமண சமயத்திற்கே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறுவர்.

சமயக் குரவர்களில் தமிழரான திருநாவுக்கரசர் முதல்வராயிருந்தபோதிலும், ஆரியரான திருஞானசம்பந்தருக்கே முதலிடம் கொடுக்கப்படும் வழக்கு ஏற்பட்டது. சைவ சித்தாந்தத்தை எழுதிய ஆசிரியர்களில் சிறப்பானவரும் சித்தாந்தக் கருத்துகள் முழுமையும் உள்ளடக்கிச் சித்தாந்தத்தை முழுமைப்படுத்தியவருமான தமிழரான மெய்கண்டார் -  சிவாக்கிர யோகி போன்ற ஆரியர்களால் புறக்கணிக்கப்பட்டதுடன், மெய்கண்டாரின் நூல் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒன்றே என்ற கருத்தும் திட்டமிட்டு பரப்பப்பட்டது.

இன்றும் சைவத் திருக்கோயிலின் கருவரையினுள் ஆரியருக்கும் வடமொழிக்கும் உள்ள உயர்வு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இல்லை. ஆரியர்களுடைய திட்டமிட்ட சூழ்ச்சி வெற்றியடைந்து, தமிழர்கள் தாழ்த்தப்பட்ட நிலையில், அடிமைபடுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.

நமது வள்ளலாரும் இந்த ஆரிய சூழ்ச்சியில் மயங்கியே தமது திருவருட்பாக்களை முதல் ஐந்து திருமுறை வரை அதாவது 'சிறிது அற்ப அறிவு உள்ள வரை' சைவ சமய தெய்வங்களை - திருஞானசம்பந்தரை குருவாகக் கொண்டு பாடியுள்ளார் என்பதே உண்மை.

வள்ளலார் தமது சமய கொள்கைகள் அனைத்தையும் விட்டுவிட்டு 'பெருநெறி' பிடித்து ஒழுகியபடியால் இனியும் வள்ளலாரின் குரு திருஞானசம்பந்தர் என்ற பழைய பாட்டினையே கூறி வள்ளலாரை அவமதிக்கவேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.


வள்ளலாருக்கு சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்று இருந்த போதிலும், அவரது வாலிப பருவத்திலேயே அச்சமய ஆசாரங்களையும், கட்டுப்பாடுகளையும் சிறிதும் மதிக்காமலும், அதனை மேற்கொள்ளாமலும் இறுக்குமாறு இறைவன் தடுத்து ஆட்கொண்டார்கள். அதனால் தான் 'சிறது' அற்ப அறிவு என்று தாம் சைவ சமயத்தை சார்ந்த காலத்தை குறிப்பிடுகிறார்.

எனினும் சைவ சமயதை மட்டுமல்லாது மற்ற எந்த சமயத்தையும் சாராமல் மற்ற மதத்தையோ, மார்க்கத்தையோ சாராமல் அனைத்தையும் பொய்என்றும் கலையுரைத்த கற்பனை என்றும் இறைவன் அறிவிக்க, அந்த இறைவன் ஆணைபடியே ஓர் புதிய மார்க்கத்தை இவ்வுலகிற்க்கு வள்ளலார் அறிவித்த நாள் 12-04-1871 ஆகும்.

"சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றேஎல்லா உலகத்தும் வழங்கும், இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதி பேதங்களும், ஆசார பேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்...." என்ற அறிவிப்பை 12-04-1871 அன்று வெளிப்படுத்துகிறார்".

இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று தருமச் சாலையை உருவாக்குகிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று ஞானசபையை தொற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று சங்கத்தை தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று கொடியை தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று மஹா மந்திரத்தை தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று ஒழுக்கங்களைத் தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று வழிபாட்டு நூலை உருவாக்கிறார்,                                           (6 ஆம் திருமுறை)
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று தனிக்கடவுளை தெரிவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று வெள்ளாடையை தேர்ந்தெடுக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று நோக்கமாக 'மரணமிலா                                        பெருவாழ்வை கூறுகிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று புனித இடமாக 'சித்தி வளாகத்தை"                                                            அமைத்தார்.

இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று இறைவன் தமிழ் மொழியையும் ஒரு சுத்த தமிழரையும் தேர்ந்தெடுத்தது தான் திரு விளையாட்டு, மற்றதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்பதனை இறைவனே வள்ளலார் மூலம் இவ்வுலகிற்கு உணர்த்திவிட்டார்.

வள்ளலார் இவ்வாறு சாதி மதங்களை கடந்த நிலையில், இதுவரை யாரும் வெளிப்படுத்தாத இறைவனுக்காக கட்டுவித்த ஞான சபை தற்போது இந்து மத ஆணையம் கட்டுப்பாட்டில் இருப்பது தான் வேதனையளிக்கிறது. தமிழக அரசு இதனை உணர்ந்து இச்சபையையும் மற்றும் சுத்த சன்மார்க்க அமைப்புகளையும் வள்ளலாரால் உருவாக்கப்பட்ட'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' என்ற அமைப்பிடமே இதன் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடவேண்டும். வள்ளலாரும் தற்போது இந்த முயற்சியில் இருக்கின்றபடியால் வெகுசீக்கிரம் உலக மக்களின் அவா கைகூடும்.

மேலும் வள்ளலார் நாயன்மார்கள் யாவரும் (நால்வர் உட்பட) பொய்யர்களே. 63 நாயன்மார் புராணங்களும் கதைகளே ஒழிய உண்மை யன்று என உரைத்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

(13-11-2014 - அன்று கீழ்காணும் சரத்துகள் சேர்க்கப்பட்டது)

"ெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களை அனுஷ்டித்தால், அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற செளராதி சண்டை பரியந்தமும் தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம் முதலியயாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. ஒவ்வொரு மாஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவதத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தார்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள...." (திருஅருட்பா உரைநடைப்பகுதி - பக்கம் 375)

மேற்காணும் வள்ளலாரின் வாக்கினை மனதிற்கொண்டு 63 நாயன்மார்களும் பொய்யர்களே என யாம் எழுதியதை கண்டு, தென்காசியிலிருந்து ஒரு மெய்யன்பர், 13-11-2014 அன்று இரவு நீண்ட நேரம் தொலைப்பேசியில் எம்மை தொடர்புகொண்டு அக்கருத்துக்களை கண்டித்தார். அதற்கு யாம் வள்ளலார் 63 நாயன்மார்களும் பொய்யர்கள் எனக்கூறவில்லை. ஆனால் அவ்வார்த்தையின் சாரமாக தத்துவங்கள் என சொல்லியிருப்பதாகக் கூறி மேற்கண்ட உரைநடை பக்கத்தினையும் கூறி, அந்நூலை படிக்கும்படி கூறினேன். நிற்க.

வள்ளலாருக்கு திருஞானசம்பந்தரை குருவாக ஏற்றுக்கொண்டது ஒரு காலக்கட்டம். அக்காலகட்டத்திற்கு பிறகு வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதியே குருவாக அமைந்து அவரை அன்றும் இன்றும் என்றும் வழிநடத்தி வருகின்றார். எனவே வள்ளாரின் குரு திருஞானசம்பந்தர் அல்ல என்பதே இச்சிற்றுரையின் நோக்கம்.

பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத் (1039)
திரமுற வருளிய திருவருட் குருவே
மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின் (1041)
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங் (1043)
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம் (1045)
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே (1047)
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே (1049)
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே (1051)
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும் (1053)
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே (1055)
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே (1057)
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே (1059)
மாண்பத மளித்து வயங்குசற் குருவே
செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே (1061)
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள் (1063)
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித் (1065)
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும் (1067)
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம் (1069)
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
                                             (அருட்பெருஞ்ஜோதி அகவல்)


    வாழி எனைதூக்கி வைத்த கரதளங்கள்! வாய்மை என்றும் வாழி!

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி
   

Tuesday, February 5, 2013

ஆறுமுக நாவலர்


ஆறுமுக நாவலர்

வள்ளலாரின் திருவருட்பா – முதல் நான்கு திருமுறைகளை மட்டும் அவர் மாணவர் தொழுவூர் வேலாயுதம் 1867 பிப்ரவரியில் சென்னையில் வெளியிட்டார். அது, திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருவருட்பா முதற் புத்தகம் என்று காணப்பட்டது.

இந்நூலில் உள்ள ஆசிரியர் பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார், நூற் பெயர் – திருவருட்பா, நூல் பதிப்பின் பெயர் – திருமுறை. இவைகள் கண்டனத்துக்குரிய ஒன்றாக அக்காலத்தில் யாழ்ப்பாணம் ச.ஆறுமுக நாவலர் அவர்களால் கருதப்பட்டது. இங்கு ஓர் உண்மையை எடுத்துரைப்பது பொருந்தும் என எண்ணுகிறேன். உலகில் எந்த ஒரு இலக்கியப் படைப்பும், சாதனையும் சமகாலத்தவரால் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே. இக்குறைபாட்டைக் குறிப்பிட்ட மனிதர்கள் மீது சுமத்துவதை விட அக்காலத்தின் சூழ்நிலை என்று கொள்வது அறிவுடைமை ஆகும்.

யாழ்ப்பாணம் ச.ஆறுமுக நாவலர் (1823 – 1879) இல்லறத்தில் ஈடுபடாமல், சைவமும், தமிழும் வளர்க்கும் பணியில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணத் தமிழறிஞர்களுள் சிறப்பிடம் பெற்றுத்திகழ்ந்தவர். சிதம்பரத்திலும் சென்னையிலும் சிலகாலம் தங்கி, சைவ பாடசாலைகள் ஏற்படுத்தி, பாடல்களை அச்சிட்டுத் தர அச்சகமும் வைத்து நடத்தினார். மாணவர்களுக்கு ஏற்ற பாடங்களை உரைநடையில் பல தொகுதிகளாக வெளியிட்டார். பல உயர்ந்த நூல்களைப் பதிப்பித்தும், உரை எழுதியும், உரைநடைப்படுத்தியும் பிழைஇன்றி அச்சிட்டு வெளியிட்டார். இவர் ‘நாவலர் என்றும் ‘தமிழ் உரைநடையின் தந்தை என்றும் போற்றப்படுகிறார்.

தமிழ் மக்களால் – குறிப்பாகச் சைவர்களால் பெரிதும் போற்றப்படும் ஆறுமுக நாவலர், வள்ளலாரின் திருவருட்பா வெளிவந்ததைக் கண்டார். “அடிகளின் பாடல் திரட்டிற்குத் திருவருட்பா எனப் பெயரிட்டதும் அதன் பகுதிகளுக்குத் திருமுறை எனப்பெயரிட்டதும்    அடிகளைத் திருவருட் பிரகாச வள்ளலார் என வழங்கியதும் ஆறுமுக நாவலுருக்கு உடன்பாடில்லை.

அடிகளது பாடல்கள் அருட்பாக்கள் அன்றென்பதும் அவை மருட்பாக்கள் என்பதும் ஆதலின் திருவருட்பா என்னும் பெயர் அடிகளின் பாடல் தொகுதிக்குப் பொருந்தாதென்பதும் நாவலரின் வாதம். பட்டினத்டார் படற்றிரட்டு, குமர குருபர் பிரபந்தத்திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபந்தத் திரட்டு, தாயுமானவர் பாடற்றிரட்டு, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு என்பவைபோல் அடிகளது பாடல் தொகுதியும் ‘இராமலிங்க பிள்ளை பாடல் திரட்டு என்றோ ‘இராமலிங்க பிள்ளை பிரபந்தத் திரட்டு என்றோ வழங்கப்பட வேண்டுமென்பது நாவலர் கருத்து. ‘திருமுறை என வழங்கத்தக்கவை பன்னிரு திருமுறைகளே என்பதும் வேறு எவற்றையும் ‘திருமுறைஎன்னும் பேரால் வழங்கக் கூடாது என்பதும் நாவலர் கொள்கை.

இன்ன பிறவற்றால் நாவலர் வள்ளலாரையும் அவரது திருவருட்பாவையும் தூற்றி, போலியருட்டபா மறுப்பு எழுதி வேறொருவர் பேரால் 1868ல் வெளியிட்டார். இதற்கு மறுப்பாக வள்ளலாரின் மாணவர் ‘திருவருட்பா வின் பதிப்பாசிரியரான தொழுவூர் வேலாயுதம் அவர்கள் போலி அருட்பா மறுப்பின் கண்டனம் அல்லது குதர்க் காரணிய நாச மஹாபரசு என்பதை எழுதினார்.

இவற்றைத் தொடர்ந்து பல கண்டன, மறுப்பு நூல்கள் வெளிவந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டிற் கண்டனங்கள் எழுதுவதில் ஈழ நாட்டுப் புலவர்களே சிறந்து விளங்கினர். நாவலருடைய கண்டனங்கள் தனிச்சிறப்புடையன. எதிரிகளாலே இலகுவில் அசைக்க முடியாதன. சைவதூஷண பரிகாரம் – சுப்பிரபோதம், மித்தியவாத நிரசனம், போலி அருட்பா மறுப்பு முதலியன நாவலர் எழுதிய கண்டனங்களுட் சிறந்தன.
வாதத்தால் பயனில்லை என்றுனர்ந்த நாவலர் 1869ல் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வள்ளலார் மீது வழக்குத் தொடுத்தார். வழக்கு நடந்த நாளில் வள்ளலார் மன்றத்துள் புக, வாதி உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். வாதியாகிய ஆறுமுக நாவலர் பிரதிவாதிக்கு மரியாதை செலுத்தியதைக் கண்டு நீதிபதி வழக்கைத் தள்ளுபடிசெய்துவிட்டார். நாவலர் பெருமான் பின்னர் 1879ல் மறைந்தார். அருட்பா மருட்பா போர் ஓய்ந்ததா?


இல்லை. கால் நூற்றாண்டுக்குப்பின் நாவலரின் மாணவரின் மாணவராகிய நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) சென்னை வந்து சில ஆண்டுகள் தங்கியபின், இப்போர் மீண்டும் எழுந்தது. யாழ்ப்பாணம் நா.கதிரைவேற் பிள்ளை ஒருசிறந்த தமிழ்ப் புலவர். நாவன்மை வாய்ந்தவர், எழுத்தாற்றல் நிறைந்தவர், வாதம் புரிவதில் வல்லவர், சைவ சமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டவர். நாவலரைப் போற்றுபவர். தம் பேச்சு, எழுத்து, வாதத் திறங்களால் மக்களின் அன்பைப் பெற்றவர். இத்தகையார் சைவத்தின் மேன்மையை விளக்குவதற்காக வைணவம், பெளத்தம், வேதாந்தம் ஆகிய சமயங்களை எதிர்த்து வாதம் செய்தவர் – வள்ளலாரின் அருட்பாவையும் எதிர்த்தார். தாம் கோவை செய்த அகராதியில் அருட்பா என்பதற்குப் பன்னிரு திருமுறை என்றே பொருள் விளக்கம் செய்துள்ளார். திரு.வி.க. இவரது மாணவர், திரு.வி.க. இவர் மீது கொண்ட அதீத பற்றால் தமது பள்ளிப் படிப்பையே பாதியில் கைவிட்டார்.
 
இராமலிங்க சுவாமிகளின் எதிர் அணியிலே நின்ற கதிரைவேற் பிள்ளையின் செயல்களுக்குத் துணை போன திரு.வி.க. பின்னாளில் அருட்பா அணியைச் சார்ந்த ம.ரா. குமாரசாமிப்பிள்ளையிடம் 1912ல் பேசிய பேச்சு அருட்பா – மருட்பா நிலைகளைக் தெளிவாகக் காட்டுகிறது.

குமாரசாமிப்பிள்ளை குறுக்கிட்டு ‘நீங்கள் கதிரைவேற் பிள்ளை மாணாக்கர், யான் இராமலிங்க சுவாமிகளின் அடியவன். இருவருக்கும் இடையில் நெருப்பு ஆறு ஓடுகிறதே என்று சொன்னார். நெருப்பு ஆறா? அன்பு ஆறு என்று சொல்லுங்கள்… என்று ஒருவாறு திரு.வி.க. வள்ளலாரின் அருட்பாவை ஒத்தவரானார்.  

Saturday, February 2, 2013

ஒளிதேகக் காட்சி

ஒளிதேகக் காட்சி



வள்ளலாரின் மெய்வடிவம் எப்படிப்பட்டது என்பதனை நாம் முன்பு பார்த்தோம். வள்ளலாரின் மெய்யை (ஓளி தேகத்தை) நம் கண்களால் பார்க்கமுடியுமா?

வள்ளலார் இவ்வுலகில் வெளிப்படையாக வாழ்ந்த காலதில், அவரை புகைப்படம் எடுத்தபோது அவரது நிழற்படம் விழவில்லை, பிறகு அவருக்கே தெரியாமல் பல முறை புகைப்படம் எடுத்துப்பார்தபோதும் அவரது நிழற்படம் விழவில்லை, வெறும் வெள்ளாடை மட்டுமே புகைப்படத்தில் தெரிந்தது, அவரது மேனி மறைந்துவிட்டது. இப்புகைப்படத்தை இப்போதும் கடலூர் O.T. யில் திரு அப்பாசாமி செட்டியார் வீட்டில் உள்ளதை பார்க்கலாம். வள்ளலார் காலத்தில் மேற்குவங்கத்தில் வாழ்ந்த இராமகிருட்டின பரமஹம்சரின் புகைப்படம் உள்ளது, ஆனால் வள்ளலாருக்குக் கிடையாது. இப்போது உள்ள வள்ளலார் படமெல்லாம் தோராயனமாக கைகளால் வரையப்பட்டதே.

வள்ளலாரை என்னால், எனது அனுபவத்தால் இது வரை பார்க்க இயலவில்லை. இப்போது வாழுகின்ற சில அன்பர்கள் பார்த்தாகக் கூறுகிறார்கள், உண்மையா? பொய்யா? என எனக்குத்தெரியாது. ஆனால் பார்க்கமுடியும், எப்படி? நான் முயற்சி செய்கிறேன், நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

வள்ளலார் தமது ஒளிதேகத்தை 30-01-1874 (தை மாதம் – பூசம் அன்று இரவு 12.00 மணிக்கு) அன்று மறைத்துக்கொள்ளும் முன்பு, “நான் இரண்டரை கடிகையில் மீண்டும் தோன்றுவோம் என்று கூறி தம்மை மறைத்துக்கொண்டார்கள்.

ஒரு கடிகை என்பது 60 வருடங்களைக்கொண்டது என்று சிலர் பொருளுரைக்கிறார்கள். ( தமிழ் வருடங்கள் மொத்தம் 60 ) அவ்வாறெனில் இரண்டரைக் கடிகை என்பது மொத்தம் 150 வருடங்களாகும், ஆக அவர் வாக்குப் படி 2024 ம் வருடம் அவர் தம்மை வெளிப்படுத்துவார்.

நம்மில் பெரும்பாண்மையோர் வரும் 2024-ம் ஆண்டு வள்ளலாரை பார்க்கும் அதிசயம் நிகழும் என்று நம்பியிருப்போம்.

“அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே!

“எண்ணுந் தொறும் எண்ணுந் தோறும்
   என்னுள் இனிக்குதே
 இறைவ நின்னைப் பாட நாவில்
   அமுதஞ் சனிக்குதே
கண்ணுங் கருத்து நின்பா லன்றிப்
   பிறர்பாற் செல்லுமோ
கண்டே னுன்னை இனிமே லென்னை
   மாயை வெல்லுமோ

அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்

Friday, February 1, 2013

சுத்த சன்மார்க்கம்


சுத்த சன்மார்க்கம்


சன்மார்க்கம் இரண்டு வகைப்படும், வள்ளலாருக்குப் பிறகு அது மூன்றுவகையாக உள்ளது.

1. சமய சன்மார்க்கம்
2. மத சன்மார்க்கம்
3. சுத்த சன்மார்க்கம் (இது வள்ளலார் உருவாக்கியது)

வள்ளலலாருக்கு முன்புவரை சுத்த சன்மார்க்கம் என்ற மார்க்கம் இல்லை. இந்த சுத்த சன்மார்க்கம் என்ற தனி மார்க்கத்தை இறைவன் அறிவிக்க அதை அப்படியே இறைவன் முன்னிலையிலேயே அரங்கேற்றுகிறார் வள்ளலார்.

“தன் முன் அரங் கேற்றெனவே தான் உரைத்தான்…” (1251)

மேற்படி சுத்த சன்மார்க்கத்தையும் அம்மார்க்கக் கடவுளையும் வெளிஉலகத்தாருக்கு 12ம் தேதி ஏப்ரல் மாதம் 1871ம் ஆண்டு, அவர் தனது அறிவிப்பில் கீழ்கண்டவாறு வெளிப்படுத்தியுள்ளார்கள்.

“சுத்த சன்மார்க்கம் ஒன்றேஎல்லா உலகத்தும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்றபெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதிபேதங்களும், ஆசாரபேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறியொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்….

இந்த பெருநெறியான சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்க நாம் ஜாதி, சமயம், மதம் அவற்றிலுள்ள ஆசாரங்கள், சங்கர்ப்பங்கள், விகற்பங்கள் ஆகியவற்றை முழுமையாக மூட்டைகட்டி குழித்தோண்டி அவற்றில் போட்டுவிட்டு மண்ணைக்கொண்டு மூடிவிட்டு சுத்த சன்மார்க்க கடவுளாகிய தனிப்பெருங்கருணையினை அருட்பெருஞ்ஜோதியாக வணங்குதல் வேண்டும். இதன் பயனாக நாம் பெருவது “மரணமிலா பெருவாழ்வு”. “சாகாதவனே சன்மார்க்கி “சன்மார்க்கத்தை நானே நடத்துகிறேன் என்கிறார் கருணையே வடிவான வள்ளலார். சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்துதான் பார்ப்போமே…

வள்ளலாரின் வடிவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிய்மா? இதோ அவரே தமது தேகத்தின் இயல்பை கீழ்கண்டவாறு வெளிப்ப்டுத்துகிறார்…

எதனாலும் தடுக்கப்படாத வடிவம்

ஆராலும் அறிந்துகொளற் கரியபெரும் பொருளே
  அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்
  கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்
பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்
  படுதலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே
சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் ஞான
  சித்திபுரத் தமுதேஎன் நித்திரைதீர்ந் ததுவே. (788)

எதனாலும் அழியாத வடிவம்

காற்றாலே புவியாலே ககனமத னாலே
  கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
  கோளாலே பிறவியற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
  மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
  எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே. (1733)

வள்ளலாரின் தேகம் ஒரு தனிநிலை வடிவம் என்பது இப்போது புரிகிறதா, இவ்வடிவத்தை நாமும் சுத்த சன்மார்க்கத்தின் மூலம் பெறலாம்.

அன்பெனும் பிடியுள்
தி.ம.இராமலிங்கம்