யார் குரு?
வள்ளலார் யாரை குருவாக ஏற்றுக்கொண்டார்? அவரால் அடைந்த இலாபம் என்ன? இக்கேள்விக்கு விடையளிக்கும் முன், காலத்தை கி.மு. (கிருத்து பிறப்பதற்கு முன்) - கி.பி. (கிருத்து பிறப்பதற்கு பின்) என்று கணக்கிடுவதைப்போல வள்ளலாரின் இறை அனுபவங்களையும் இரண்டாக பகுத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. அதாவது அவர் 'சிறிது அற்ப அறிவாக விளங்கிய காலம் (05-10-1823 முதல் 11-04-1871
வரை)' என்றும் 'பேரறிவு விளங்கிய காலம் (12-04-1871 முதல் அளவிறந்த நெடுங்காலம் வரையில்)' என்று பிரித்துப் பார்த்துதான் மேற்கண்ட வினாவிற்கு விடை யளிக்கவேண்டும்.
வள்ளலாருக்கு 'சிறிது அற்ப அறிவாக விளங்கிய காலத்தில்' அவரது குரு 'திருஞான சம்பந்தர்' ஆவார். இதனை அவரே தமது திருவருட்பாவில் பாடிக் களித்துள்ளார். திருஞானசம்பந்தரால் வள்ளலார் அடைந்த இலாபம் என்ன? ஒன்றும் இல்லை. 'சிறிது அற்ப அறிவாக விளங்கிய காலத்தில்' வள்ளலார் தமது குருவை பற்றி பாடிய திருவருட்பாவால் திருஞானசம்பந்தருக்கும், சைவ சமயத்திற்கும் தான் புகழும், இலாபமும் கிடைத்தன என்று சொல்லலாம்.
உண்மையில் திருஞானசம்பந்தர் யார்? என்பதனை சற்று சுருக்கமாக பார்ப்போம்...
சைவ வைணவ சமயங்கள் பரவுவதற்குக் காரணமாயிருந்த 63 நாயன்மார்கள், 12
ஆழ்வார்கள் ஆகியோர், தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே தோன்றியவர்கள் என்ற குறிப்பு ஆழ்ந்த சிந்தனைக்குறியது. சைவ, வைணவ சமயங்கள் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு பரப்பப்பட்டவையல்ல. தென்னாட்டில் தோன்றி வடநாட்டிற்குப் பரவியவை. சைவ, வைணவ சமயங்களின் தொகுப்பு நூல்களாக விளங்கும் பன்னிரு திருமுறையும், நாலாயிர திவ்யபிரபந்தமும் தமிழ் மொழியில் 'மட்டும்' தோன்றியவை என்பதும், வடமொழிக்கும் இவைகளுக்கும் தொடர்பில்லை என்பதும் ஆழ்ந்து நோக்க வேண்டிய கருத்துகளாகும்.
சைவ, வைணவ சமயக் கருத்துகள் முதலிலே தமிழகத்தில் தோன்றிப் பின்னர் மற்ற இடங்களிலும் பரவும் படியாகத் தமிழ்ப் பெரியோர்களால், வடமொழியிலும் எழுதப்படலாயின. இச்சமயங்களின் மூலம், தமிழ் மொழியன்றி வடமொழியன்று. வடமொழியிலிருந்து வடவர் ஆதிக்கத்தால் இக்கருத்துகள் தென்மொழியில் பரவின என்னும் தவறான கருத்து இன்று வரை நிலவுவதற்கு காரணம் என்ன என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.
இந்த நோக்கில் நாம் சைவ வைணவ வரலாற்றை நோக்கும் போது, நமக்கு சில குறிப்புகள் தென்படுகின்றன.
வைணவ சமயத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட வடமொழி ஆதிக்கத்தை எதிர்த்து, நாலாயிர திவ்யபிரபந்தத்தைப் போற்றும் தென்கலையினர் எழுந்த காரணத்தால், வைணவம் - தென்கலை, வடகலை என இரண்டாகப் பிரிந்த போதிலும் வைணவத்தில் தமிழின் சிறப்பு குறைக்கப்படவில்லை.
ஆனால், சைவமோ வடமொழி ஆதிக்கத்திற்கு முழுவதுமாக உட்படுத்தப்பட்டுவிட்டது. அவ்வாறு வடமொழி ஆதிக்கத்திற்கு உட்படுத்திய பெருமை திருஞானசம்பந்தரையே சாரும்.
ஒதுக்கப்பட்டு கிடந்த வடநாட்டு வைதீக மதம் - பெளத்த, சமண மதங்களைப் போன்று செல்வாக்குப் பெற முயன்றது. செல்வாக்குப் பெற வேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்க வேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆண்மையும் ஆற்றலும் பெற வழி யாது? ஒரே ஒரு வழி தான் உண்டு. அவ்வழியாதெனில் தமிழர் வழிபட்டுவரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்துக்கொண்டு, பொது மக்களின் ஆதரவை பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது.
நீரில் மூழ்கி உயிர் இழக்கும் தருவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுகோடு கிடைக்குமாயின், அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ அவ்வாறே அழியும் தருவாயிலிருந்த வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டது.
ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டுத் திராவிட தெய்வங்களுக்கும் வைதீக தெய்வங்களுக்கும் புதிய தொடர்பையும் உறவுகளையும் கற்பித்துக்கொண்டது.
இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிதுபுதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிட மதமும் வைதீக மதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று திராவிடமும் வைதீகமும் அல்லாமல் இரண்டும் கலந்ததோர் புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதியதாக தோன்றிய மதம்தான் "இந்து மதம்" ஆகும்.
தமிழராகிய திருநாவுக்கரசர், பல்லவ மன்னனைச் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியபோது, தமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களையெல்லாம் இறைவன் அருளால் பொருத்துக்கொண்டு, அரசனுக்கோ மற்றவர்களுக்கோ எவ்வித தீமையும் செய்யாமல், அவர்களை மனமாற்றம் அடையும்படி செய்து, மதமாற்றத்தைச் செய்தார்.
ஆனால், திருநாவுக்கரசருக்கு பின்னால் தமிழகத்தில் எழும்பிய எழுச்சியைப் பயன்படுத்த விரும்பிய ஆரியராகிய திருஞானசம்பந்தர், தன்னை தமிழன் என்று கூறி உரிமை பாராட்டிக்கொண்டும், தமிழ் மொழி சிறப்பானது என்று கூறிக் கொண்டும், வன்முறையை ஆயுதமாகக் கொண்டு, பாண்டி நாட்டில் சமண சமயம் சார்ந்திருந்த எண்ணாயிரம் தமிழர்களைக் கழுவிலேற்றி, பாண்டிய நாட்டை மதம் மாறச்செய்தார்.
திருஞானசம்பந்தர் சைவசமய வளர்ச்சிக்குப் பாடுபட்டாரா? அல்லது ஆரிய நாகரிக எழுச்சிக்கு பாடுபட்டாரா? என்னும் நோக்கில் நாம் பார்க்கும் போது, அவர் சைவ, சமய வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்பதைவிட சைவ சமயத்தை பயன்படுத்தி ஆரிய எழுச்சிக்குப் பாடுபட்டார் என்பதே கிடைக்கும் விடையாக இருக்கிறது. எவ்வாறெனில்,
"வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை
வாதில் வென்ற்ழிக் கத்திரு வுள்ளமே"
"வேட்டு வேள்விசெய் யும்பொரு ளைவிளி
மூட்டு சிந்தை முரட்டமண் குண்டரை
ஓட்டி வாதுசெய் யத்திரு வுள்ளமே"
"அந்த ணானர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் சிரங்களை
சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே" (3-ம் திருமுறை - திருவாலவாய் பதிகம்)
என்கிற பாடல்கள் மூலம், மேற்கண்ட கருத்து தெளிவாகிறது.
திருஞானசம்பந்தர் பாடிய பாக்களில் சமண, பெளத்தர்கள் சைவ சமயத்தின் பகைவர்கள் என்றோ சைவ சமயத்தைப் பழிக்கின்றவர்கள் என்றோ எங்கும்பாடவில்லை. வேள்வியை எதிர்ப்பவர்கள், அந்தணாளர்க்கு அடிமையாகாதவர்கள் என்பன போன்ற குற்றச் சாட்டுகளையே சமண, பெளத்தர் பேரில் சாடியுள்ளார்கள். எனவே திருஞானசம்பந்தரின் குறிக்கோள் வேத வேள்வியைப் பரப்புவதேயன்றி சைவசமயத்தை பரப்புவதன்று என்பது தெளிவு.
சைவ சமயம், வேதவேள்வியை ஏற்றுக்கொண்டதாகவும் தெரியவில்லை. திருஞானசம்பந்தர் பொருள் திரட்டிப் பசுக்களை கொன்று, ஆங்காங்கு வேள்வி புரிந்ததையும் அக்கொலை வேள்வியைத் தில்லைவாழ் சிவபெருமானும் அடியார்களும் ஆசீர்வித்ததாகவும்,
'பரப்பை படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்பும்
சிறப்பர் வாழ்தில்லை'
எனப்பாடியுள்ளார். இப்பரிதாப செயலைக்கண்டு தில்லை திருவாய்மொழி பாடிய புலவர்
'பெரிதாய முக்தியைப் பல்லோர்க்கருளும் நற்பிள்ளை பெற்றும்
அரிதாய பொன்கொண்டும் சீர்காழி அந்தணனாம் கிழவன்
பரிதாபமின்றிப் பசுவதைத்தான் என்ன பாவம் அந்தோ
எரிதாங்கி நின்றஎன் அப்பனே...'
என வருந்திப் பாடிக் கண்டித்துள்ளார்.
இப்பாடலில் உள்ள கருத்தை அராயின், திருஞானசம்பந்தர் சிவபெருமான் பேரில் பழிசுமத்தியும், பக்திமார்க்கப் பிரசாரம் எனக் காட்டிக்கொண்டும் சைவ சமயத் தமிழர்களின் ஆதரவோடு, வேத வேள்விகளையும், வேதக் கருத்துகளையும் பரப்பிவரும் மறைமுகமான சதியே என்பதைக் கலங்கரை விளக்கம்போல காட்டுகிறது.
இதைப் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரும் திருஞானசம்பந்தருடைய வரலாற்றை தொடங்கும் போது, 'வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க புனிதவாய் மலர்ந்த' தன்மையை தெளிவாகக் கூறுகின்றார். வேத நெறியைப் பரப்புவதற்குச் சைவ சமயம் திருஞானசம்பந்தருக்கு ஒரு துணைக் கருவியாகப் பயன்பட்டது.
திருஞானசம்பந்தர் இதற்குப் பயன்படுத்திய முறை, மிகக் கொடுமையானது, திருஞானசம்பந்தர் தாமே செய்ய விரும்பும் பாடலைக் கேளுங்கள்,
'மண்ணகத்திலும்.....
பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேயமண்
தெண்ணற் கற்பழிக்கத் திருவுள்ளமே'
வேதவேள்வி வெறி, சமண - பெளத்தப் பெண்களைக் கற்பழிக்க வேண்டுமெனத் துணிகின்றது. உலகிலுள்ள மனித குலம் அனைத்தும் பழிக்கும் அனாகரிக விலங்குச் செயலை, ஒழுக்கக் கேட்டை, சமூக விரோதக் கொடுமையைப் புரிய இறைவனை வேண்டுகிறார் திருஞானசம்பந்தர். எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் எந்த கவிஞரும் இத்தகைய இழி செயலைப் பாடி, நூல்களை எழுதவில்லை. அய்யகோ! தமிழ் நூலிலே காணும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.
இன்னும் சீர்காழியில், ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் திருஞானசம்பந்தரின் திருமுலைப்பால் விழா நடைபெறுவதாகவும், அவ்விழாவில் 'சமணப் பெண்களை....' என இசையோடு கூவி சொல்லொணா வார்த்தைகளால் பெண்களின் தலைமுதல் கால்வரை ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டுப் பாடுவதாகவும், அவ்விழா உள்ளது.
உலகோர் பழிக்கும் இக்கூடா ஒழுக்கத்தைத் திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் பாடியுள்ளாரா? சுந்தரர் பாடல்களில் இடம் பெற்றுள்ளதா? இல்லை! இல்லை! திருஞானசம்பந்தரே கூசாமல், குலுங்காமல் பச்சைத் தமிழில் பாடி வைத்துள்ளார்.
'நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
... ... ... ...
...
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
கொள்கை கண்டு'
என்னும் சுந்தரர் தேவாரத்தில் அறியலாம்.
சீர்காழி விழாவைப் போலவே மதுரையிலும் சமணர்களைக் கழுவேற்றிய விழாக் கொண்டாடப்படுகிறது. திருஞானசம்பர் பாண்டிய அரசனை, அவனது கோப்பெருந்தேவி, மந்திரி ஆகியோரின் உதவியால், சைவனாக்கிய கதையாவரும் அறிந்ததே, அன்று எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிய மகிழ்ச்சியைக் காட்டுவதற்கு, இப்பொழுதுங்கூட மதுரைக் கோயிலில் விழா கொண்டாடப்படுகிறார்கள்.
திருஞானசம்பந்தர் வரவால், தமிழர் எண்ணாயிரம் பேர் கழுவிலேற்றப்பட்டதுடன், தமிழராகிய திருநாவுக்கரசரும் இழிவுப்படுத்தப்பட்டார். திருமறைக்காட்டில் கோயில் கதவைத் திறந்து மூடுவதில், இறைவன் ஆரியனுக்கும் தமிழனுக்கும் வேறுபாடு காட்டியதாகவும், திருநாவுக்கரசர் இறைவனைக் காண விரும்பிய பொழுது, ஆரியரான திருஞானசம்பந்தர் காட்டத் தமிழராகிய திருநாவுக்கரசர் காண வேண்டுமெனவும், திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்ததாகவும் சேக்கிழாரால் குறிக்கப்பட்டிருக்கும் குறிப்புகள், தமிழர் திட்டமிட்டுத் தாழ்த்தப்பட்டனர் என்பதைக் காட்டுகிறது.
சைவம், ஆரிய சூழ்ச்சிக்கு உட்பட்டுவிட்டபடியால், சைவ சமய எழுச்சிக்கு காரணமாயிருந்த திருநாவுக்கரசராகிய தமிழர், மனம் நொந்த நிலையில் சைவசமயத்தில் நிலைத்திருக்க இயலாமல் மீண்டும் சமண சமயத்திற்கே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறுவர்.
சமயக் குரவர்களில் தமிழரான திருநாவுக்கரசர் முதல்வராயிருந்தபோதிலும், ஆரியரான திருஞானசம்பந்தருக்கே முதலிடம் கொடுக்கப்படும் வழக்கு ஏற்பட்டது. சைவ சித்தாந்தத்தை எழுதிய ஆசிரியர்களில் சிறப்பானவரும் சித்தாந்தக் கருத்துகள் முழுமையும் உள்ளடக்கிச் சித்தாந்தத்தை முழுமைப்படுத்தியவருமான தமிழரான மெய்கண்டார் - சிவாக்கிர யோகி போன்ற ஆரியர்களால் புறக்கணிக்கப்பட்டதுடன், மெய்கண்டாரின் நூல் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஒன்றே என்ற கருத்தும் திட்டமிட்டு பரப்பப்பட்டது.
இன்றும் சைவத் திருக்கோயிலின் கருவரையினுள் ஆரியருக்கும் வடமொழிக்கும் உள்ள உயர்வு தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இல்லை. ஆரியர்களுடைய திட்டமிட்ட சூழ்ச்சி வெற்றியடைந்து, தமிழர்கள் தாழ்த்தப்பட்ட நிலையில், அடிமைபடுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளனர்.
நமது வள்ளலாரும் இந்த ஆரிய சூழ்ச்சியில் மயங்கியே தமது திருவருட்பாக்களை முதல் ஐந்து திருமுறை வரை அதாவது 'சிறிது அற்ப அறிவு உள்ள வரை' சைவ சமய தெய்வங்களை - திருஞானசம்பந்தரை குருவாகக் கொண்டு பாடியுள்ளார் என்பதே உண்மை.
வள்ளலார் தமது சமய கொள்கைகள் அனைத்தையும் விட்டுவிட்டு 'பெருநெறி' பிடித்து ஒழுகியபடியால் இனியும் வள்ளலாரின் குரு திருஞானசம்பந்தர் என்ற பழைய பாட்டினையே கூறி வள்ளலாரை அவமதிக்கவேண்டாம் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
வள்ளலாருக்கு சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்று இருந்த போதிலும், அவரது வாலிப பருவத்திலேயே அச்சமய ஆசாரங்களையும், கட்டுப்பாடுகளையும் சிறிதும் மதிக்காமலும், அதனை மேற்கொள்ளாமலும் இறுக்குமாறு இறைவன் தடுத்து ஆட்கொண்டார்கள். அதனால் தான் 'சிறது' அற்ப அறிவு என்று தாம் சைவ சமயத்தை சார்ந்த காலத்தை குறிப்பிடுகிறார்.
எனினும் சைவ சமயதை மட்டுமல்லாது மற்ற எந்த சமயத்தையும் சாராமல் மற்ற மதத்தையோ, மார்க்கத்தையோ சாராமல் அனைத்தையும் பொய்என்றும் கலையுரைத்த கற்பனை என்றும் இறைவன் அறிவிக்க, அந்த இறைவன் ஆணைபடியே ஓர் புதிய மார்க்கத்தை இவ்வுலகிற்க்கு வள்ளலார் அறிவித்த நாள் 12-04-1871 ஆகும்.
"சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றேஎல்லா உலகத்தும் வழங்கும், இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை. தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும். அதன் மேலும் வழங்கும். பலவகைப்பட்ட சமய பேதங்களும் சாத்திர பேதங்களும், ஜாதி பேதங்களும், ஆசார பேதங்களும் போய், சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும். அது கடவுள் சம்மதம்...." என்ற அறிவிப்பை 12-04-1871 அன்று வெளிப்படுத்துகிறார்".
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று தருமச் சாலையை உருவாக்குகிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று ஞானசபையை தொற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று சங்கத்தை தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று கொடியை தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று மஹா மந்திரத்தை தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று ஒழுக்கங்களைத் தோற்றுவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று வழிபாட்டு நூலை உருவாக்கிறார், (6 ஆம் திருமுறை)
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று தனிக்கடவுளை தெரிவிக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று வெள்ளாடையை தேர்ந்தெடுக்கிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று நோக்கமாக 'மரணமிலா பெருவாழ்வை கூறுகிறார்,
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று புனித இடமாக 'சித்தி வளாகத்தை" அமைத்தார்.
இந்த சுத்த சன்மார்க்கத்திற்கு என்று இறைவன் தமிழ் மொழியையும் ஒரு சுத்த தமிழரையும் தேர்ந்தெடுத்தது தான் திரு விளையாட்டு, மற்றதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்பதனை இறைவனே வள்ளலார் மூலம் இவ்வுலகிற்கு உணர்த்திவிட்டார்.
வள்ளலார் இவ்வாறு சாதி மதங்களை கடந்த நிலையில், இதுவரை யாரும் வெளிப்படுத்தாத இறைவனுக்காக கட்டுவித்த ஞான சபை தற்போது இந்து மத ஆணையம் கட்டுப்பாட்டில் இருப்பது தான் வேதனையளிக்கிறது. தமிழக அரசு இதனை உணர்ந்து இச்சபையையும் மற்றும் சுத்த சன்மார்க்க அமைப்புகளையும் வள்ளலாரால் உருவாக்கப்பட்ட'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' என்ற அமைப்பிடமே இதன் நிர்வாகத்தை ஒப்படைத்துவிடவேண்டும். வள்ளலாரும் தற்போது இந்த முயற்சியில் இருக்கின்றபடியால் வெகுசீக்கிரம் உலக மக்களின் அவா கைகூடும்.
மேலும் வள்ளலார் நாயன்மார்கள் யாவரும் (நால்வர் உட்பட) பொய்யர்களே. 63 நாயன்மார் புராணங்களும் கதைகளே ஒழிய உண்மை யன்று என உரைத்துள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
(13-11-2014 - அன்று கீழ்காணும்
சரத்துகள் சேர்க்கப்பட்டது)
"பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களை அனுஷ்டித்தால், அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற செளராதி சண்டை பரியந்தமும்
தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம்
முதலியயாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. ஒவ்வொரு மாஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள்
முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவதத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை
மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தார்பரியமுடைய சித்திகள் முன்னும்
பின்னும் இனியுமுள...." (திருஅருட்பா உரைநடைப்பகுதி - பக்கம் 375)
மேற்காணும் வள்ளலாரின் வாக்கினை மனதிற்கொண்டு 63 நாயன்மார்களும் பொய்யர்களே என யாம் எழுதியதை கண்டு, தென்காசியிலிருந்து ஒரு மெய்யன்பர், 13-11-2014 அன்று இரவு நீண்ட நேரம் தொலைப்பேசியில்
எம்மை தொடர்புகொண்டு அக்கருத்துக்களை கண்டித்தார். அதற்கு யாம் வள்ளலார் 63 நாயன்மார்களும் பொய்யர்கள் எனக்கூறவில்லை. ஆனால் அவ்வார்த்தையின் சாரமாக தத்துவங்கள் என சொல்லியிருப்பதாகக்
கூறி மேற்கண்ட உரைநடை பக்கத்தினையும் கூறி, அந்நூலை படிக்கும்படி கூறினேன். நிற்க.
வள்ளலாருக்கு திருஞானசம்பந்தரை குருவாக ஏற்றுக்கொண்டது ஒரு காலக்கட்டம். அக்காலகட்டத்திற்கு பிறகு வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதியே
குருவாக அமைந்து அவரை அன்றும் இன்றும் என்றும் வழிநடத்தி வருகின்றார். எனவே வள்ளாரின் குரு திருஞானசம்பந்தர் அல்ல என்பதே இச்சிற்றுரையின்
நோக்கம்.
பரமுட னபரம்
பகர்நிலை யிவையெனத்
(1039)
திரமுற வருளிய திருவருட் குருவே
திரமுற வருளிய திருவருட் குருவே
மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின் (1041)
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங் (1043)
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம் (1045)
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே (1047)
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே (1049)
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே
சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே (1051)
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும் (1053)
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே (1055)
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே (1057)
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே (1059)
மாண்பத மளித்து வயங்குசற் குருவே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே
செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே (1061)
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள் (1063)
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித் (1065)
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும் (1067)
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம் (1069)
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே
(அருட்பெருஞ்ஜோதி அகவல்)
வாழி எனைதூக்கி வைத்த கரதளங்கள்! வாய்மை என்றும் வாழி!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
//சீர்காழியில், ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் திருஞானசம்பந்தரின் திருமுலைப்பால் விழா நடைபெறுவதாகவும், அவ்விழாவில் 'சமணப் பெண்களை....' என இசையோடு கூவி சொல்லொணா வார்த்தைகளால் பெண்களின் தலைமுதல் கால்வரை ஒவ்வொரு அங்கத்தையும் குறிப்பிட்டுப் பாடுவதாகவும், அவ்விழா உள்ளது.// முழு பாடல் வரிகள் கிடைக்குமா???
ReplyDeleteமுயல்கின்றேன்.
Deleteஇது வள்ளலார் குருவை பற்றி அன்று. அந்தணர்களை சாடுவதாக அமைந்துள்ளது. திருஞான சம்பந்தர் அவர்களை பழிப்பது முறையா. ? அவரை சாதியில் கொண்டு வரலாமா.? தாங்கள் சைவ சமயத்திற்கு பெரும் அநீதி செய்கிறீர்கள்.
ReplyDeleteசைவ சமயம் தமிழ் சித்தர்களுக்கே சொந்தம். அந்தனர்களு அல்ல. திருஞானசம்பந்தரை பழிக்கவில்லை. அவரின் செயல்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
Deletehttps://youtu.be/AFZPZPdh-pU
ReplyDeleteவள்ளலார் தன்னுடைய கடவுள் அனுபவத்தை திருத்தணிகை முருகன் வழி பெற்றாலும் அவர் மாணிக்கவாசகரின் 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி' எனும் அடையாளத்தையும் & திருஞானசம்பந்தரின் 'சிவன்' தலைமையிலான கடவுள் வழிபாடு என்பதையும் ஏற்றுக்கொண்டு தான் அருட்பெருஞ்சோதி அகவலில் இணைத்துள்ளார்.
Deleteவள்ளலாரின் மூன்று வகை கடவுள் அனுபவம்:
1) கரு இருந்த காலத்தில் உணர்த்தியது - பிறப்பு
2) சிதம்பரத்தில் திரைதூக்கச் தரிசனம் - காட்சி
3) திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பு - சாட்சி
மேற்கோள்கள்:
நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே
திருவருண் முறையீடு - 131
ஆண்டவன்நீ யாகில்உனக் கடியனும்நா னாகில் அருளுடையாய் இன்றிரவில் அருள் இறையாய் வந்து
நீண்டவனே முதலியரும் தீண்டரிதாம் பொருளின் நிலைகாட்டி அடிமுடியின் நெறிமுழுதும் காட்டி
வீண்டவனே காலையில்நீ விழித்தவுடன் எழுந்து விதிமுடித்துப் புரிதிஇது விளங்கும்எனப் புகல்வாய்
தாண்டவனே அருட்பொதுவில் தனிமுதலே கருணைத் தடங்கடலே நெடுந்தகையே சங்கரனே சிவனே
திருநெறிமெய்த் தமிழ்மறையாம் திருக்கடைக்காப் பதனால் திருவுளங்காட் டியநாளில் தெரிந்திலன் இச் சிறியேன்
பெருநெறிஎன் உளத்திருந்து காட்டியநாள் அறிந்தேன் பிழைபடாத் தெய்வமறை இதுவெனப்பின் புணர்ந்தேன்
ஒருநெறியில் எனதுகரத் துவந்தளித்த நாளில் உணராத உளவைஎலாம் ஒருங்குணர்ந்து தெளிந்தேன்
தெருணெறிதந் தருளும்மறைச் சிலம்பணிந்த பதத்தாள் சிவகாம வல்லிமகிழ் திருநடத்தெள் ளமுதே_
-திருவருள் விலாசம்
அடிவிளங்கக் கனகசபைத் தனிநடனம் புரியும் அருட்சுடரே என்உயிருக் கானபெருந் துணையே
துடிவிளங்கக் கரத்தேத்தும் சோதிமலை மருந்தே சொற்பதம்எல் லாம்கடந்த சிற்சொருபப் பொருளே
பொடிவிளங்கத் திருமேனிப் புண்ணியனே ஞானப் போனகரைச் சிவிகையின்மேல் பொருந்தவைத்த புனிதா
படிவிளங்கச் சிறியேன்நின் பதமலர்கண் டுவந்தேன் பரிவொழிந்தேன் அருட்செல்வம் பரிசெனப்பெற் றேனே
-தனித் திருஅலங்கல்
உலகியல் உணர்வோர் அணுத்துணை மேலும் உற்றிலாச் சிறியஓர் பருவத்
_திலகிய எனக்குள் இருந்தருள் நெறியில் ஏற்றவுந் தரமிலா மையினான்
விலகுறங் காலத் தடிக்கடி ஏற விடுத்துப்பின் விலகுறா தளித்தாய்
திலகநன் காழி ஞானசம் பந்தத் தெள்ளமு தாஞ்சிவ குருவே
உயிர்அனு பவம்உற்றிடில் அதவிடத்தே ஓங்கருள் அனுபவம் உறும்அச்
செயிரில்நல் அனுப வத்திலே சுத்த சிவஅனு பவம்உறும் என்றாய்
பயிலுமூ வாண்டில் சிவைதரு ஞானப் பால்மகிழ்ந் துண்டுமெய்ந் நெறியாம்
பயிர்தழைந் துறவைத் தருளிய ஞான பந்தன்என் றோங்குசற் குருவே
தத்துவநிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பர நாதமாந் தலத்தே
ஒத்தான் மயமாம் நின்னைநீ இன்றி உற்றிடல் உயிரனு பவம்என்
றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே இருந்தவா றளித்தனை அன்றோ
சித்தநற் காழி ஞானசம் பந்தச் செல்வமே எனதுசற் குருவே
தனிப்பர நாத வெளியின்மேல் நினது தன்மயந் ஆக்கிப்
பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப் பரம்பரத் துட்புற மாகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தே அருளனு பவம்என்
றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன் என்னும்என் சற்குரு மணியே
உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன
விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என்
றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே
-ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
- அருட்பெருஞ்ஜோதி அகவல் - 1,2
நன்று
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிருஞானசம்பந்தர் மற்றும் நாயன்மார்கள் பற்றி விமர்சனம் செய்ய தேவையான தகுதிகள் தமக்கு உள்ளதோ என்று முதலில் தனக்குத்தானே ஆராய வேண்டும். பிறகு தெளிவு பிறக்கும். இதுபோன்ற பதிவுகள் வராது.
ReplyDeleteஅருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.
Deleteஐயா இந்த பதிவில் நீங்கள் வள்ளல் பெருமானாரின் உரைநடை கூட ஒழுங்காக படிக்கவில்லை என தெரியவருகிறது
ReplyDeleteஏன் இப்படி திராவட பகுத்தறிவாளன் போல் உளறியிருக்கின்றீர் என புரியவில்லை
வேதாரண்யத்தில் கதவு திறந்தது மூடியது என்பது வேதத்தின்உண்மைப் பொருளை அறிவக் கண்ணிற்கு மூடியதும் திறந்ததும் என விளங்கிக் கொள்ள பெருமானார் கூறியுள்ளார்.
பிறகு ஏன் கதைக்கு கண் மூக்கு காதுலாம் வச்சி கற்பனையில் உளறித்தள்ளியுள்ளீர்கள் ஐயா .
சிந்தித்து பதிவிடலாமே.
கற்பு என்ற சொல்லிற்கு நீங்கள் நினைக்கும் ஒரே பொருள் என்பது உங்கள் அறியாமையை தெளிவாக காண்பிக்கிறது .
ReplyDeleteஇனி நன்கு ஆராய்ந்து அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடத்து கேட்டு பின் பதிவிட வேண்டும் இது அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் வாக்கு . உங்கள் உடலில் செத்தவர் எல்லாம் எழும்போது இதன் தெளிவு உங்களுக்கு பிறக்கும் . வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி....
Deleteசரியாகத்தான் எழுதியுள்ளீர்கள்
ReplyDelete