ஆறுமுக நாவலர்
வள்ளலாரின் திருவருட்பா – முதல்
நான்கு திருமுறைகளை மட்டும் அவர் மாணவர் தொழுவூர் வேலாயுதம் 1867 பிப்ரவரியில்
சென்னையில் வெளியிட்டார். அது, திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம்
இராமலிங்கம் பிள்ளை அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருவருட்பா முதற் புத்தகம் என்று
காணப்பட்டது.
இந்நூலில் உள்ள ஆசிரியர் பெயர் – திருவருட்பிரகாச
வள்ளலார், நூற் பெயர் – திருவருட்பா, நூல் பதிப்பின் பெயர் – திருமுறை. இவைகள்
கண்டனத்துக்குரிய ஒன்றாக அக்காலத்தில் யாழ்ப்பாணம் ச.ஆறுமுக நாவலர் அவர்களால்
கருதப்பட்டது. இங்கு ஓர் உண்மையை எடுத்துரைப்பது பொருந்தும் என எண்ணுகிறேன்.
உலகில் எந்த ஒரு இலக்கியப் படைப்பும், சாதனையும் சமகாலத்தவரால் எளிதில் ஏற்றுக்
கொள்ளப்படுவதில்லை என்பதே. இக்குறைபாட்டைக் குறிப்பிட்ட மனிதர்கள் மீது சுமத்துவதை
விட அக்காலத்தின் சூழ்நிலை என்று கொள்வது அறிவுடைமை ஆகும்.
யாழ்ப்பாணம் ச.ஆறுமுக நாவலர் (1823 –
1879) இல்லறத்தில் ஈடுபடாமல், சைவமும், தமிழும் வளர்க்கும் பணியில் வாழ்ந்தவர்.
யாழ்ப்பாணத் தமிழறிஞர்களுள் சிறப்பிடம் பெற்றுத்திகழ்ந்தவர். சிதம்பரத்திலும்
சென்னையிலும் சிலகாலம் தங்கி, சைவ பாடசாலைகள் ஏற்படுத்தி, பாடல்களை அச்சிட்டுத் தர
அச்சகமும் வைத்து நடத்தினார். மாணவர்களுக்கு ஏற்ற பாடங்களை உரைநடையில் பல
தொகுதிகளாக வெளியிட்டார். பல உயர்ந்த நூல்களைப் பதிப்பித்தும், உரை எழுதியும்,
உரைநடைப்படுத்தியும் பிழைஇன்றி அச்சிட்டு வெளியிட்டார். இவர் ‘நாவலர்’ என்றும் ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார்.
தமிழ் மக்களால் – குறிப்பாகச்
சைவர்களால் பெரிதும் போற்றப்படும் ஆறுமுக நாவலர், வள்ளலாரின் திருவருட்பா
வெளிவந்ததைக் கண்டார். “அடிகளின் பாடல் திரட்டிற்குத் திருவருட்பா” எனப் பெயரிட்டதும் அதன்
பகுதிகளுக்குத் திருமுறை எனப்பெயரிட்டதும் அடிகளைத் திருவருட் பிரகாச வள்ளலார் என
வழங்கியதும் ஆறுமுக நாவலுருக்கு உடன்பாடில்லை.
அடிகளது பாடல்கள் அருட்பாக்கள்
அன்றென்பதும் அவை மருட்பாக்கள் என்பதும் ஆதலின் திருவருட்பா என்னும் பெயர்
அடிகளின் பாடல் தொகுதிக்குப் பொருந்தாதென்பதும் நாவலரின் வாதம். பட்டினத்டார்
படற்றிரட்டு, குமர குருபர் பிரபந்தத்திரட்டு, சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபந்தத்
திரட்டு, தாயுமானவர் பாடற்றிரட்டு, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்
திரட்டு என்பவைபோல் அடிகளது பாடல் தொகுதியும் ‘இராமலிங்க பிள்ளை பாடல் திரட்டு’ என்றோ ‘இராமலிங்க பிள்ளை பிரபந்தத்
திரட்டு’ என்றோ வழங்கப்பட வேண்டுமென்பது
நாவலர் கருத்து. ‘திருமுறை’ என
வழங்கத்தக்கவை பன்னிரு திருமுறைகளே என்பதும் வேறு எவற்றையும் ‘திருமுறை’ என்னும் பேரால் வழங்கக் கூடாது
என்பதும் நாவலர் கொள்கை.
இன்ன பிறவற்றால் நாவலர் வள்ளலாரையும்
அவரது திருவருட்பாவையும் தூற்றி, போலியருட்டபா மறுப்பு எழுதி வேறொருவர் பேரால்
1868ல் வெளியிட்டார். இதற்கு மறுப்பாக வள்ளலாரின் மாணவர் ‘திருவருட்பா’ வின் பதிப்பாசிரியரான தொழுவூர்
வேலாயுதம் அவர்கள் போலி அருட்பா மறுப்பின் கண்டனம் அல்லது குதர்க் காரணிய நாச
மஹாபரசு என்பதை எழுதினார்.
இவற்றைத் தொடர்ந்து பல கண்டன, மறுப்பு
நூல்கள் வெளிவந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டிற் கண்டனங்கள் எழுதுவதில் ஈழ நாட்டுப்
புலவர்களே சிறந்து விளங்கினர். நாவலருடைய கண்டனங்கள் தனிச்சிறப்புடையன. எதிரிகளாலே
இலகுவில் அசைக்க முடியாதன. சைவதூஷண பரிகாரம் – சுப்பிரபோதம், மித்தியவாத நிரசனம்,
போலி அருட்பா மறுப்பு முதலியன நாவலர் எழுதிய கண்டனங்களுட் சிறந்தன.
வாதத்தால் பயனில்லை என்றுனர்ந்த
நாவலர் 1869ல் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வள்ளலார் மீது வழக்குத்
தொடுத்தார். வழக்கு நடந்த நாளில் வள்ளலார் மன்றத்துள் புக, வாதி உட்பட அனைவரும்
எழுந்து நின்றனர். வாதியாகிய ஆறுமுக நாவலர் பிரதிவாதிக்கு மரியாதை செலுத்தியதைக்
கண்டு நீதிபதி வழக்கைத் தள்ளுபடிசெய்துவிட்டார். நாவலர் பெருமான் பின்னர் 1879ல்
மறைந்தார். அருட்பா மருட்பா போர் ஓய்ந்ததா?
இல்லை. கால் நூற்றாண்டுக்குப்பின் நாவலரின்
மாணவரின் மாணவராகிய நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) சென்னை வந்து சில ஆண்டுகள்
தங்கியபின், இப்போர் மீண்டும் எழுந்தது. யாழ்ப்பாணம் நா.கதிரைவேற் பிள்ளை
ஒருசிறந்த தமிழ்ப் புலவர். நாவன்மை வாய்ந்தவர், எழுத்தாற்றல் நிறைந்தவர், வாதம்
புரிவதில் வல்லவர், சைவ சமயத்தில் அழுத்தமான பற்றுக் கொண்டவர். நாவலரைப்
போற்றுபவர். தம் பேச்சு, எழுத்து, வாதத் திறங்களால் மக்களின் அன்பைப் பெற்றவர்.
இத்தகையார் சைவத்தின் மேன்மையை விளக்குவதற்காக வைணவம், பெளத்தம், வேதாந்தம் ஆகிய
சமயங்களை எதிர்த்து வாதம் செய்தவர் – வள்ளலாரின் அருட்பாவையும் எதிர்த்தார். தாம்
கோவை செய்த அகராதியில் அருட்பா என்பதற்குப் பன்னிரு திருமுறை என்றே பொருள்
விளக்கம் செய்துள்ளார். திரு.வி.க. இவரது மாணவர், திரு.வி.க. இவர் மீது கொண்ட அதீத
பற்றால் தமது பள்ளிப் படிப்பையே பாதியில் கைவிட்டார்.
இராமலிங்க சுவாமிகளின் எதிர் அணியிலே
நின்ற கதிரைவேற் பிள்ளையின் செயல்களுக்குத் துணை போன திரு.வி.க. பின்னாளில்
அருட்பா அணியைச் சார்ந்த ம.ரா. குமாரசாமிப்பிள்ளையிடம் 1912ல் பேசிய பேச்சு
அருட்பா – மருட்பா நிலைகளைக் தெளிவாகக் காட்டுகிறது.
குமாரசாமிப்பிள்ளை குறுக்கிட்டு
‘நீங்கள் கதிரைவேற் பிள்ளை மாணாக்கர், யான் இராமலிங்க சுவாமிகளின் அடியவன்.
இருவருக்கும் இடையில் நெருப்பு ஆறு ஓடுகிறதே’ என்று
சொன்னார். நெருப்பு ஆறா? அன்பு ஆறு என்று சொல்லுங்கள்… என்று ஒருவாறு திரு.வி.க.
வள்ளலாரின் அருட்பாவை ஒத்தவரானார்.
அடடா! தமிழுக்கும் தமிழரின் உள்ளத்துக்கும் உடைசல் ஏது? தமிழில் குறைவரக்கூடாதென அதன் பழைமையைக் காக்க ஆறுமுக நாவலரும், தமிழன் தமிழுள்ளம் படைத்தவன், அவன் வாடிய பயிரைக் கண்டும் வாட வேண்டும் என்று வள்ளலாரும் கொண்ட செயற்பாட்டை சண்டையாக்காமல் முடித்து வைத்த தமிழ்மகன் திருவிக அவர்களின் பாங்குக்கு தலை வணங்குகிறேன்.
ReplyDeleteநன்றி....
Delete