Tuesday, December 6, 2016

மஹாயாணம்

மஹாயாணம்

புத்த மதத்தின் எட்டு நல் வழிகள் அல்லாது புத்தரால் போதிக்கப்பட்ட பல அறநெறிகளும் ஒழுக்க நெறிகளும் உள்ளன. புத்தர் மறைந்து சில மாதங்களுக்குப் பிறகு அந்நெறிகளை புத்த பிக்குகள் தொகுத்து 'திரிபிடகம்' என்று உலகிற்கு வழங்கினர்.

இதில் ஒழுக்கத்தை போதிப்பது 'விநயபிடகம்'. அறநெறியைப் போதிப்பது 'தம்மபிடகம்'. மன வலிமையை ஊட்டுவது 'சூத்திரபிடகம்’ஆகும். புத்தர் தமது போதனைகளை பாலி மொழியில் நிகழ்த்தினார். அதேபோல் இந்த திரிபிடகம் நூலும் பாலி மொழியிலேயே அமைந்துள்ளது.

புத்தத்தை இன்னும் உலக அளவில் பரப்ப வேண்டும் என்ற ஆசை கொண்ட சில புத்த பிக்குகள், புத்தர் மறைந்த சுமார் நூறு ஆண்டுகள் கழித்து 'வைசாலி' நகரத்துக்கு அருகில் எட்டு மாதம் தங்கி ஆலோசித்தனர். புத்த மதத்தில் சில புதுமையான கருத்துக்களை புகுத்த திட்டமிட்டனர். ஆனால் முடிவாக, 'புத்த மதத்தில் புதுமைகளைப் புகுத்துவதற்கு இடமில்லை' என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

அவற்றுள் சில புத்த பிக்குகள் புதுமையை புகுத்தினால்தான் புத்த மதம் உலக அளவில் வளரும் என்று அம்முடிவுக்கு உடன்படவில்லை. புதுமையை விரும்பிய புத்த பிக்குகளால் புத்த மதத்திற்குள் 'மஹாயாணம்' என்ற பிரிவு தோற்றுவிக்கப்பட்டது. 'புதுமை மதத்தை பாழ்படுத்திவிடும்' என்ற பிக்குகளை 'ஹீனயாணம்' என்று இவர்கள்அழைத்தனர்.

          இந்து வேதங்களில் காணப்படும் சடங்குகளை கடுமையாக எதிர்த்த புத்தரின் போதனைக்கு மாறாக, மஹாயாணத்தில் சில சடங்குகள் புகுத்தப்பட்டன. மேலும் புத்தர் புலால் உண்பதை கடுமையாக கண்டித்தார். அதனை இந்த மஹாயாண பெளத்தர்கள் தடை செய்தனர். புலால் உண்ணலாம் என்று விதியை தளர்த்தினர். இது போன்று உண்மையான ஹீனயாணத்திற்கும் புதுமையான மஹாயாணத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

          இன்று புத்தம் உலக அளவில் பரவியிருப்பதற்கு, அன்று விதிகளை தளர்த்தி மஹாயாணம் கண்டதே காரணம். உண்மையான புத்த மதத்தினரை ஹீனயாணம் என்று கூறுவதை ஈனமாக கருதிய அவர்கள், தங்களைத் தாங்களே 'தேரவாத பெளத்தர்கள்' என்று பெயர் சூட்டிக்கொண்டனர். (தேரவாதம் - மூத்தோர் வழி)

தேரவாதம் இல்லையென்றால் 'பெளத்தம்' என்றால் என்ன வென்றே தெரிந்திருக்காது. புத்தர் புலால் உண்பதை தடை செய்ததைக்கூட அறியாமல் இருக்கும் இன்றைய சீனர்களை பார்த்தால் நமக்கு மஹாயாணம் நன்கு விளங்கும். பெரியார், அம்பேத்கர் போன்றோரும் புத்தரை ஆதரித்தார்கள் என்றால்... அதற்கும் காரணம் இந்த மஹாயாணம்தான்.

புலால் உண்பதையும், சாதி, மதங்களையும் அதன் சடங்குகளையும் வள்ளற்பெருமான் எதிர்க்காமல் தமது போதனையை சைவ சமயம் சார்ந்து செய்திருந்தால் (அவ்வாறு செய்வது இயலாது) அன்றைக்கே உலக அளவில் திருவருட்பா பரவியிருக்கும். ஆனால் ஒழுக்கங்களை விடுத்து ஒரு கொள்கை மக்களிடத்தில் பரவி என்ன பயன்? ஒன்றுமில்லை. உயிரில்லாத பிணம் நடமாடுவதாகவே அதனைக் கருத வேண்டும்.

புத்தரை வணங்கிக்கொண்டே புலால் உண்பவர்களை இவ்வுலகில் பல நாடுகளில் காணும்போது, புத்தர் புன்னகைக்கின்றார்! நாம் அழுவதா? சிரிப்பதா எனத் தெரியவில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா...? தற்போது நம்மில், வள்ளற்பெருமானை வணங்கிக்கொண்டே புலால் உண்பவர்களும் சாதி, சமய, மதங்களிலும், சடங்குகளை செய்பவர்களும் மிக மிக அதிகமாகவே உள்ளனர். இவர்களெலாம் உயிரில்லாத பிணங்களே.     




ஊசியின் காதில் ஒட்டகம் புகும்

ஊசியின் காதில் ஒட்டகம் புகும்


இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, "நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், "நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே".

உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? "கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே களவு செய்யாதே பொய்ச்சான்று சொல்லாதே வஞ்சித்துப் பறிக்காதே உன் தாய் தந்தையை மதித்து நட" என்றார்.

அவர் இயேசுவிடம், "போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறினார்.

அப்போதி இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார்.

இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார்.

சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, "பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.

அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், "பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.

அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார்.

அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்

இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரர்களையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

முதன்மையானோர் பலர் கடைசி ஆவர், கடைசியானோர் முதன்மை ஆவர்" என்றார். (மார்க் - 10.17 - 10.31)

சுத்த சன்மார்க்கமும் இதன் உண்மையினை பேருபதேசத்தில் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. "இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார். எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தை பெறுவீர்கள்"

நம்மால் செல்வத்தையும் விடமுடியவில்லை, நான் என்கிற ஆணவத்தையும் விடமுடியவில்லை, சாதி சமய மத பழக்க வழக்கங்களையும் விட முடியவில்லை! பிறகு எங்ஙனம் சன்மார்க்க லாபம் கிட்டும்?

இம்மை வாழ்வென்பது சாதி, மத, இனத்துள் காணும் சிற்றின்பம் ஆகும். மறுமை வாழ்வென்பது, அவைகளை விடுத்து சன்மார்க்க நெறி கொண்டு பேரின்பம் காண்பதாகும். சுத்த சன்மார்க்கப் பாதையில் வாழ்ந்து வருபவர்கள் தற்போது மறுமை வாழ்வில் இருக்கின்றார்கள் எனப் பொருள். 





வள்ளலாரின் புகைப்படம்

வள்ளலாரின் புகைப்படம்


கூடலூர் அப்பாசாமி செட்டியார் வீட்டில் வள்ளற்பெருமான் அடிக்கடி வந்து தங்கிச் செல்வது வழக்கம். அவ்வீட்டில்தான் வள்ளற்பெருமானின் தலையில் பாம்புத் தீண்டி, அப்பாம்பு இறந்தது. காசியிலிருந்து வள்ளற்பெருமானைப் போன்ற உருவமுடைய ஒரு மகான் அவ்வீட்டிற்கு வந்து வள்ளலாரை சந்தித்து பிரசாதம் கொடுத்துவிட்டு உடனே மறைந்த சம்பவம் நடைபெற்ற வீடும் அதுதான். இன்னும் பல அற்புதங்கள் அவ்வீட்டில் நிகழ்ந்ததாக காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் பிரபந்தத்திரட்டில் நாம் படிக்கலாம்.

அப்படிப்பட்ட வீட்டில்தான், வள்ளற்பெருமானை புகைப்படம் பலமுறை எடுத்தும் அவரது உருவம் விழாமல் ஆடை மட்டும் விழுந்த அந்த அற்புத புகைப்படத்தை நான் எனது தந்தை தாயுடன் தரிசித்துள்ளேன்.
         
25-08-2016 அன்று அமெரிக்காவிலிருந்து திரு.சிவக்குமார் என்பவர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அந்தப் படத்தை தாங்கள் பார்த்ததாக சொல்கிறீர்கள். அப்படம் எப்படி இருந்தது? அது தற்போது எங்கிருக்கின்றது? என்றெல்லாம் விவரமாக கேள்விகளை கேட்டார். நானும் எனது நினைவுகளை அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். அப்படத்தை எப்படியாவது மீண்டும் வெளிஉலகிற்கு கொண்டுவாருங்கள்! என என்னிடம் கேட்டுக்கொண்டார்.

நாங்கள் பார்த்த அப்படத்தின் நினைவுகள் எங்களை விட்டு என்றும் பிரியாது. அந்த நினைவுகளின் நிழலை அப்படியே பென்சிலால் அன்றே (உடனே) வரைந்து முடித்தேன். இப்படத்தினைப் பார்த்த எனது தாயார், ‘அப்படத்தில் வள்ளலாரின் இரு கண்களில் மட்டும் லேசாக ஒளி பிரதிபலித்ததாக கூறினார்கள். எனக்கு அப்படி பார்த்ததாக நினைவு இல்லை. நான் பார்த்தது வெறும் கருமை நிறம் மட்டுமே. ஒரு வேளை நான் மறந்திருக்கவும் வாய்ப்பிருக்கின்றது. வள்ளலாருடன் யாரும் அருகில் இல்லை. அவர் மட்டுமே தனியே நிற்பதாக அப்புகைப்படம் உள்ளது. மேலும் அவரின் பின்புறமும் ஒரே கருமை நிறமாகவே காணப்பட்டது. ஒரு வேளை சுவற்றின் முன்புறம் நின்று அப்புகைப்படம் எடுத்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

வள்ளலார்  அமைத்துக்கொடுத்த விளக்கு கூண்டும், இந்த புகைப்படமும் அப்பாசாமி செட்டியாரின் வாரிசுதாரர்களிடம் இருக்க, வள்ளலார் எழுதிய சிலகுறிப்புகளும் மற்றும் சில பொருட்களையும் தருமச்சாலைக்கு கொடுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். சன்மார்க்க அன்பர்களுக்காக நாங்கள் இந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம்.  - TMR

(04-06-2024-ஆம் தேதி சேர்க்கப்பட்டக் குறிப்பு) : நான் அப்பாசாமி செட்டியார் வீட்டிற்குச் சென்று பார்த்த ஆண்டு குறிப்பிடும்படி ஒரு அன்பர் கேட்டுக்கொண்டார். 
சுமார் (சரியாகத் தெரியவில்லை) 1986-ஆம் ஆண்டு நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது இருக்கலாம், என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன். )


அடிப்பவன் கடவுள்

அடிப்பவன் கடவுள்

கடவுள் ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு மனிதரிடமும், ஒவ்வொரு பொருள்களிலும் நிறைந்து இருப்பதாக நமது முன்னோர்கள் கூறுவார்கள். சுத்த சன்மார்க்கமும் அதனையே கூறுகின்றது. ஆனாலும் நாம் உலகிடையே அடிபடும்போது அக்கருத்து நம்மைவிட்டு நீங்கிவிடுதலையும் காணமுடிகின்றது.

கடவுள் ஒவ்வொரு மனிதரிடமும் இருப்பதாகக் கருதி தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது, பலம் வாய்ந்த மனிதன் ஒருவன் வந்து நம்மை தள்ளுவதால், நாம் நடைபாதையில் கீழே விழுகிறோம். உடனே இறுகிய முஷ்டியுடன் நாம் விரைவில் எழுந்து நிற்கின்றோம். கோபத்தினால் இரத்தம் தலைக்குப் பாய்கின்றது. உடனே நாம் பைத்தியகாரனாகிவிடுகிறோம். எல்லா நீதிகளையும் மறந்துவிடுகின்றோம். கடவுளை காண்பதற்கு பதில் அங்கு அவர் நமக்கு எதிரியாகத் தென்படுகின்றார். நாம் முடிந்தால் ஓங்கி ஒரு அறை கூட அறைந்துவிடுகிறோம். கடவுளை எங்கும் காணவேண்டும் என்ற நீதி நம்மை விட்டு வழுவிவிடுகின்றது.  கடவுளையே எதிரியாக நினைத்து அடித்தாலும் கூட, அது ஒருவகையில் வரவேற்கத்தக்கது. ஆனால் நாம் அந்நிலையில் கடவுளையே மறந்துவிடுகின்றோம் என்பதே எதார்த்தம்.

எல்லா உயிர்களும், எல்லா மனிதர்களும், எல்லா பொருட்களும் இறைவனே என்ற அனுபவம் ஒருவருக்கு எப்போது கிடைக்குமென்றால், தன்னை முழுவதும் இறைவனிடம் ஒப்படைக்கும் அன்பர்களுக்குத்தான் அவ்வனுபவம் கிடைக்கும். ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்ற திட நம்பிக்கையை அவன் பெற்றிருப்பான்.

இந்த பெரும் அனுபவத்தைப் பற்றி வள்ளற்பெருமானே ஒரு கதையின் மூலம் விளக்கியிருப்பார்.

தெருவோரமாக ஒரு நிர்வான சந்நியாசி நடந்து செல்கின்றான், அப்போது அவனைப்பார்த்த ஒருவன் அச்சந்நியாசியிடம் மரியாதைக்கொண்டு அவனுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுத்து அவனது பசிக்கு உதவினான்.
அச்சாமியாரைப்பார்த்த இன்னொருவன், பெண்கள் நடமாடும் இத்தெருவில் நிர்வாணமாய்ப் போகின்றானே என்று கோபித்து அவனைக் கல்லால் அடித்தான்..

           இந்த இருநிகழ்ச்சியினையும் பார்த்த மூன்றாமவன், அந்த நிர்வாணசாமியாரையும் பழம் கொடுத்தவனையும், கல்லால் அடித்தவனையும் அழைத்துக்கொண்டு நீதிபதியிடம் சென்றான்.

         நீதிபதியிடம் சென்று, அந்த நிர்வானச் சாமியாருக்கு இப்புண்ணியவான் பழம் கொடுத்தான், இப்பாவி அவரைக் கல்லால் அடித்தான், என்றான் மூன்றாமவன்.

        நீதிபதி நிர்வானச் சாமியாரை நோக்கி, உம்மை யார் அடித்தது? என்று கேட்க, 'வாழைப்பழம் கொடுத்தவன் அடித்தான்' என்று கூறினான்.

        அதற்கு நீதிபதி யார் வாழைப்பழம் கொடுத்தது? என்று கேட்க, 'கல்லால் அடித்தவன் வாழைப்பழம் கொடுத்தான்', என்று நிர்வானச் சாமியார் கூறினார்.

         அதற்கு நீதிபதி யார் கல்லால் அடித்தது? என்று கேட்க, 'எங்களை உங்களிடம் இட்டுக்கொண்டுவந்தவன் கல்லால் அடித்தான்' என்று கூறினார்.

         இதனை கேட்ட நீதிபதி தீர்ப்பு கூறமுடியாமல் மயங்கியப்பின் ஒரு முடிவுக்கு வந்தார், 'இவர் மேலானஞானத்தை உடைய ஞானி' என ஒருவாறு உணர்ந்து, அடித்தவனுக்கு சிறைதண்டனை அளித்தார். (பிரபந்தத்திரட்டு – அ.திருநாவுக்கரசு பதிப்பு – பக்கம்-93)

வள்ளலார் சொன்ன இக்கதையிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவெனில், பேத உணர்வு நம்மிடமிருந்து நீங்க வேண்டும் என்பதே.  “அடித்தது போதும்… அணைத்திடல் வேண்டும்” என்று இறைவனிடம் வள்ளற்பெருமான் வேண்டுவார். எனவே நம்மை அடிப்பதும் இறைவனே...! நம்மை அணைப்பதும் இறைவனே…!  நம்மை அடிக்கும் மனிதனும் இறைவனே…! நம்மை அணைக்கும் மனிதனும் இறைவனே…!

தன்னளவில் பாதிப்பு ஏற்படும்போது மட்டுமே நாம் இந்நீதியினை கடைபிடிக்க வேண்டும். பிறர் பாதிக்கப்படும்போது, அது இறைச்செயல் என நாம் சும்மா இருப்பது தகாது. பரோபகாரத்தை மறந்துவிடக்கூடாது.

நாமெல்லாம் சுத்த சன்மார்க்கர்களாய் சுத்த சன்மார்க்க நீதியுடன் வாழ்வோம். இந்நீதியினை கடைபிடிப்பது மிகவும் கடினம்தான். முயலுவோம்… முடியும்…! ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டும் வல்லமை பெறுவோம். வாழ்க சுத்த சன்மார்க்க நீதி.- TMR



பேப்பர் சுவாமிகள்

பேப்பர் சுவாமிகள்

          திருக்குற்றாலத்தை அடுத்த இலஞ்சி என்னும் ஊரில் சுவாமிகள் தமது அருளாட்சியைத் தொடங்கினார்கள். சுவாமிகள் எப்பொழுதும் தமது கைகளில் பேப்பர் செய்தித்தாள்களை வைத்திருப்பது வழக்கம். கீழே கிழிந்து கிடக்கும் தாள்களை எடுத்து அவற்றை ஒன்றாகச் சேர்த்து வைத்துக்கொள்வார். பின்னர் அவற்றைப் பார்த்து வாசிப்பார். வாசித்தவை மறுநாள் நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளாக வரும். இவற்றைக் கண்ட மக்கள் வியப்படைவார்கள். இதனாலேயே சுவாமிகளை மக்கள் பேப்பர் சுவாமிகள் என்று பெயரிட்டழைத்தனர்.


          இலஞ்சியிலுள்ள பெரியவர்கள் சுவாமிகளைப் பற்றிக்கூறும் போது, "சுவாமிகள் சுமார் ஐந்தரை அடி உயரம் இருப்பார். ஜிப்பா சட்டையும் வேஷ்டியும் அணிவது வழக்கம். இரண்டு கைகளிலும் காப்பு அணிந்திருப்பார். கால்களில் பூட்ஸ் அணிந்திருப்பார்" என்று கூறுகின்றனர்.

          சுவாமிகள் இலஞ்சியில் அருளாட்சி செய்த காலத்தில் ஓரிடத்தில் நிலையாக இருந்தது இல்லை. சுவாமிகள் எங்கிருப்பார், எப்பொழுது வருவார், போவார் என்று தெரியாது. இலஞ்சியில் உள்ள பெருந்தெரு பிள்ளையார் கோயில், குன்னக்குடி பிள்ளையார் கோயில், கீழ் இலஞ்சியில் உள்ள நாராயணசுவாமி கோயில் போன்ற இடங்களில் சுவாமிகள் தவமிருப்பார்கள்.

          பேப்பர் சுவாமிகள் மிகுந்த அருளாற்றல் மிக்கவராக விளங்கினார்கள். சுவாமிகள் பரிபூரணமடைவதற்கு முன் இறுதிப் பத்தாண்டுகள் இளையசனேந்தல் ஜமீனில் இருந்தார்கள். ஜமீனில் மூத்த ஜமீன், இளைய ஜமீன் இருவருக்கும் ஆண் வாரிசுகள் இல்லை. ஒருமுறை சுவாமிகளை வணங்கிய இளைய ஜமீன் நரசிம்ம அப்பாசாமி, தமக்கு பிள்ளை இல்லாக்குறையை மனம் உருகச் சொல்ல... சுவாமிகள் இரண்டு கடுக்காய்களை அவரிடம் கொடுத்து உனக்கு சிம்மலக்னத்தில் இரண்டு ஆண்குழந்தைகள் பிறக்கும் பிறக்கும் என ஆசீர்வதித்தார். சொன்னபடியே குழந்தைகள் பிறந்தனர். முதல் ஆண் குழந்தைக்குப் பெரிய பேப்பர் என்றும், இரண்டாம் ஆண் குழந்தைக்கு சின்ன பேப்பர் என்றும் பெயரிட்டு ஜமீன்தாரர் மகிழ்ந்தார்.

          சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம். மழையில்லா நிலையில் மழை பெய்வித்தது, சிறுவன் தவறுதலாகக் கொடுத்த நவபாஷணத்தைச் சாப்பிட்டும் உயிரோடு இருந்தது, சுவாமிகள் கேட்டும் வைத்துக்கொண்டே இல்லை என்று சொன்னதால் ஊறுகாய்ப் பானையில் புழுவாய் ஆய்ந்தது, வறுமையில் வாடிய அன்பருக்கு அருள்பாலித்தது, குத்தகைக்கு எடுத்த பட்டாமரங்களை தளிர்க்கச் செய்து காய்த்துக் குலுங்க வைத்தது, முத்துக்கோனார் என்பவரின் இறந்துபோன இரண்டு வயது மகனை உயிர்பெற்று எழச் செய்தது, ஒரே நேரத்தில் இலஞ்சியிலும், இளையசனேந்தம் அரண்மனையிலும், அன்பர் ஒருவர் வீட்டிலும் காட்சி கொடுத்தது, அன்பர் ஒருவர் சிறுநீரகங்கள் பழுதடைந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நிலையிலிருந்ததை மாற்றிக் குணமாக்கியது போன்ற அற்புதங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

          பேப்பர் சுவாமிகள் வைத்தியத்திலும் சிறந்து விளங்கினார்கள். கீழ்இலஞ்சி இராமசாமி, திருநெல்வேலி முத்தையாபிள்ளை போன்றோர் சுவாமிகளிடம் மருத்துவம் கற்றனர். இவர்களுள் முத்தையா பிள்ளையிடம் ஜி.டி.நாயுடு, நீதிபதி பலராமையா போன்றோர் மருத்துவம் பயின்று இருக்கின்றனர்.

          1946-ஆம் ஆண்டு முதல் 1950-ஆம் ஆண்டு வரை இளையசனேந்தலில் தவத்தை மேற்கொண்ட சுவாமிகள் 1950-ஆம் ஆண்டு முதல் 1956-ஆம் ஆண்டு வரை மெளன தவத்தில் வீற்றிருந்தார்கள். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தமது ஞானப்பணி நிறைவடைந்ததை உணர்ந்த சுவாமிகள் தாம் ஜீவசமாதி ஆகப் போவதை ஜமீன் குடும்பத்தார்க்கு உணர்த்தினார்கள். 14-05-1956-ஆம் ஆண்டு சித்திரை மாதம் 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 01.30 மணியளவில் திருவாதிரை நட்சத்திரத்தில் பேப்பர் சுவாமிகள் பரிபூரணமடைந்தார்கள்.

          ஆண்டுதோறும் சித்திரை வளர்பிறை திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜையை இளையசனேந்தல் ஜமீன் குடும்பத்தினர் சிறப்பாக நடத்திவருகின்றனர். கோயில்பட்டியிலிருந்து திருவேங்கடம் இராஜபாளையம் செல்லும் வழியில் 10 கி.மீ. தூரத்தில் இளையசனேந்தல் என்னும் ஊரில் உள்ள ஜமீன் அரண்மனையின் ஒரு பகுதியில் பேப்பர் சுவாமிகளின் அதிஷ்டானக் கோயில் உள்ளது. அழகிய மண்டபத்தின் நடுவில் சமாதி மேடை உள்ளது. கிழக்குப் பார்த்த சன்னதியாக சிவலிங்க பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.