Friday, April 17, 2020

மாதப் பூசம் - MONTHLY POOSAM - 2020-21

MONTHLY POOSAM - 2020-21


அன்பர்களே...! நடப்பு நிதி ஆண்டில் 02-04-2020 வியாழன் அன்று நமது வடலூரில் மாதப்பூசத்தன்று பக்தர்கள் இன்றி ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூர் வரலாற்றில் இவ்வாறு நடைபெற்றது முதல் முறையாகும். கொரோனா (கோவிட்-19) தொற்றால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது. எனினும் தருமச்சாலை மட்டும் தினமும் இயங்கி வருகின்றது மகிழ்ச்சியளிக்கின்றது. 



02-04-2020 அன்று பக்தர்கள் இன்றி வடலூரில் ஜோதி தரிசனம் நடந்ததை ஒரு அன்பர் தமது கைப்பேசியில் வீடியோ எடுத்த காட்சி மற்றும் புகைப்படம். 



உலகம் முழுதும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டு இருப்பினும், நமது வடலூர் தருமச்சாலை பணிகள் மட்டும் என்றும் உயிர்ப்பு நிலையில் இருப்பதை தந்தி தொலைக்காட்சி மூலம் காணவும்.





30-04-2020 அன்றும் வடலூர் வரலாற்றில் இரண்டாவது முறையாக பக்தர்களின் வருகை இன்றி ஜோதி தரிசனம் நடைபெறும். கொரோனா காரணமாக ஊரடங்கு    மே - 03 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் அன்பர்கள் யாரும் வடலூர் வரவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். இல்லங்களில் இருந்து குடும்பத்துடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விளக்கேற்றி தொழவும். நன்றி. 
தி.ம.இராமலிங்கம்.

27-05-2020 - வடலூர் வரலாற்றில் மூன்றாவது முறையாக பக்தர்களின் வருகை இன்றி ஜோதி தரிசன - மாதப்பூசம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு மே-31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் அன்பர்கள் யாரும் வடலூர் வரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி. 


23-06-2020 - அன்று நடைபெற இருக்கும் மாதப்பூசம் நான்காவது முறையாக தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு இன்னும் இந்தியா முழுதும் நீடிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மத வழிபாட்டு தலங்களும் (சில மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது) மூடப்பட்டுள்ளதால் வடலூர் ஞான சபையும் ஜோதி தரிசனம் காட்ட இயலாமல் உள்ளது. ஆகையால் அன்பர்கள் இம்மாதமும் வடலூர் வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது. நன்றி.

21-07-2020, 17-08-2020 மற்றும் 13-09-2020 மாதப்பூசங்களும் கொரோனா தொற்றால் தொடர்ந்து 7-ஆவது மாதமாக தடைபட்டுள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Thursday, April 16, 2020

உலக மக்களுக்கு கொரோனா கூறும் செய்தி என்ன?


உலக மக்களுக்கு கொரோனா கூறும் செய்தி என்ன?
--தி.ம.இராமலிங்கம்.  

அன்புடையீர் வணக்கம்!
இத்தலைமுறை மக்கள் "சுனாமி" என்கின்ற ஆழிப்பேரலையை முதன் முதலாகக் கண்டார்கள். அதற்கு அடுத்ததாக ”உயிரி” தாக்குதல் என்பதை மிகப்பிரமாண்டமாக நாம் முதன் முதலாக பார்க்கின்றோம். 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வாகனம் ஒன்றை உடனே பிரேக் போட்டு நிறுத்தினால் என்னவாகும்? வாகனம் விபத்துக்கு உள்ளாகி கவிழும். அதில் உள்ள மக்கள் உயிரிழப்பார்கள். பின்னால் தொடர்ந்து வருகின்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி நிலை குலையும். சாலை, சக்கரத்தின் உராய்வால் பழுதாகும்.
இப்படி ஒரு நிலையைத்தான் உலகம் தற்போது சந்திக்கின்றது. பொருளாதாரம் என்னும் வாகனம் உடனே நிறுத்தப்பட்டதால் உலகெங்கும் சொல்லொன்னா பாதிப்பு. வேறு வழியில்லை. உலகெங்கும் மயான அமைதி. மனிதன் தன்னுயிரை பாதுகாக்க வீடுகளில் முடங்கினான். மற்ற உயிரினங்கள் எல்லாம் சுதந்தரமாக திரிகின்றன. ஆனால், மனிதன் மட்டும் வீடுகளில் தஞ்சம் அடைந்தான். கண்ணுக்குத்தெரியாத ஓர் அணு உயிரி “கொரோனா” என்னும் பெயரில் மனிதனை மட்டும் கொலை செய்கின்றது.
எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்களை கண்ட மனிதன் தற்போது தமது கையறு நிலையால் வெட்கப்படுகின்றான். கண்ணுக்குத்தெரியாத ஒரு உயிரியிடம் தோற்றுவிட்டான். தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் தங்களது கடவுள்களை மக்கள் உருவாக்கிக் கொண்டார்கள். மனிதன் தங்களது கடவுள் பெயரால் உயிர்க் கொலைகளை செய்கின்றார்கள். மற்ற உயிர்களை ஈவு, இரக்கமின்றி கொலை செய்து உண்கின்றார்கள். கடவுள் பெயரால் கோயில்களிலும், வனவிலங்கு சரணாலயம் என்ற பெயரிலும் மற்ற உயிர்களை சிறையில் அடைக்கின்றார்கள், தனிமைப் படுத்துகின்றார்கள். ஆனால், தங்களது உயிருக்கு ஆபத்து என்றதும், தங்களது கடவுள்களை துணைக்கு அழைக்கின்றார்கள், மணி அடிக்கின்றார்கள், கை தட்டுகின்றார்கள், விளக்கேற்றுகின்றார்கள், பிரார்த்தனை செய்கின்றார்கள், ஜெபம் செய்கின்றார்கள், தொழுகின்றார்கள். அப்பப்பா… புலம்பித் தள்ளுகின்றார்கள். மனிதனால் ஒரு உயிர் தனிமைப்படுத்தப்படும் போது, அதன் வலி மனிதனுக்கு உணரவில்லை. இப்போது மனிதன் தனிமைப்படும் போது, அய்யோ… என அலறுகின்றான். ஒரு உயிரை கொலை செய்யும்போது மனிதன் அதன் வலியை உணரவில்லை. ஆனால், இப்போது தான் கொலையுறும்போது, அய்யோ… கொடுமை… என அலறுகின்றான். அப்போதும் மனிதன் திருந்துவதாக இல்லையே. சீனாவில் கொரோனா கொஞ்சம் அமைதி காத்தப்போது மீண்டும் சீன மக்கள் பழையபடி உயிர்களை கொன்று தின்ன ஆரம்பித்துவிட்டார்கள். கொரோனா பார்த்தது… மீண்டும் அங்கு தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. எனவே சில முக்கிய மாற்றங்களை உலக நாடுகள் இனி செய்தே ஆகவேண்டும்.
கொரோனாவால் உண்டாக்கப்பட வேண்டிய உலகலாவிய மாற்றங்கள்:
1.    இறைவன் மனிதர்களை கால்நடையாகத்தான் படைத்தான். அதனால் அவன் எங்கு பிறந்தானோ, அங்கிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவுதான் அவனது எல்லை. சுமாராக இருநூறு கிலோமீட்டர் சுற்றளவு என்றால், அந்த சுற்றுளவை அவன் தனது வாழ்நாளில் கடக்கக்கூடாது. அறிவியல் முன்னேற்றத்தால் வெளி நாடுகளுக்கு செல்ல நேர்ந்தால், ஓரிரு நாட்களில் தன் இருப்பிடம் திரும்பிவிட வேண்டும். நிரந்தரமாக பிறந்த இடத்தை துறத்தல் கூடாது. வேலை கிடைக்கும் இடத்தில் மக்கள் செல்வதை தடுத்து, மக்கள் இருக்குமிடத்தில் வேலை வழங்க அரசு முயல வேண்டும்.
2.    ஐம்பூதங்களும் மனிதன் தனிமைப்படும்போதுதான் மகிழ்கின்றன. மனிதன் உருவாக்கிய எண்ணற்ற தொழிற்சாலைகளால் ஐம்பூதங்களும் மாசடைந்தன. தற்போது அவைகள் தங்களை புதுப்பித்துக்கொண்டன. அதனால் மனிதன் இனி தொழிற்சாலைகளை இயக்காமல் நிரந்தரமாக மூடுதல் வேண்டும். அதற்கேற்ப தங்களது வாழ்வாதாரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நீர் நிலைகள் அனைத்தும் மிகவும் புனிதமானதாக அறிவிக்க வேண்டும்.  
3.    பிற உயிர்களை கொன்று தின்னும் பழக்கத்தை உலக மக்கள் உடனே விடவேண்டும். மீன்பிடித் தொழில், கோழி முட்டை உற்பத்தி, இறைச்சிக் கடைகள் ஆகியவை உலகில் எங்கும் இயங்கக் கூடாது. தாவர உணவுகளை மட்டுமே மனிதர்கள் உண்ண வேண்டும்.
4.    பிற உயிர்களை சிறை படுத்துதல், தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்.
5.    பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது. அதனை மாபெறும் குற்றமாக அறிவித்து தண்டனை அளிக்க வேண்டும். குப்பைகள் அதற்கான இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை போட்டால் அதனையும் குற்றமாக கருதி தண்டனை அளிக்க வேண்டும்.
6.    புகை பிடித்தல், மது அருந்துதல் அறவே கூடாது. அதன் தயாரிப்புகளை உலகம் நிறுத்த வேண்டும்.
7.    உலகம் முழுதும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகள் நடத்தக்கூடாது. அவைகளை சுற்றுலா தலமாக மட்டுமே நிர்வகிக்க வேண்டும். புதியதாக எந்த ஒரு மத வழிபாட்டுத் தலங்களும் கட்டக்கூடாது. உலக மக்கள் அவரவர்களது கடவுள் வணக்கங்களை அவரவர்களது வீட்டில் மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். திருவிழாக்கள், மதத்தின் பெயரால் வரும் பல பண்டிகைகளை பொதுவெளியில் கொண்டாடத் தடை விதிக்க வேண்டும். கடவுள் இருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்… அவர் யார்? என்பதில் மக்களுக்குள் பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளதால், உண்மை கடவுள் மக்கள் மத்தியில் வெளிப்படும்வரை, மனிதனால் உண்டாக்கப்பட்ட எல்லா கடவுள்களுக்கும் பொதுவெளியில் வணங்கத் தடை விதிக்க வேண்டும். கொரோனாவால் தற்போது நடைமுறையில் இருப்பது இதுதானே! எனவே இதனை நிரந்தரமாக்க வேண்டும். உண்மை கடவுளுக்கு, மனித இனம் தெரியப்படுத்தும் செய்தி இதுவாகும். உண்மை கடவுள் வெளிப்படும் நேரம் சமீபத்தில் இருப்பதாக அனைவரும் சொல்வதால், அவர் வெளிப்பட்ட பிறகு, பொதுவெளியில் கடவுள் வழிபாட்டை வைத்துக்கொள்ளலாம். அதுவரை வீட்டில் மட்டுமே கடவுள் வணக்கம் செய்ய வேண்டும்.
8.    உலகில் உள்ள அனைத்து வாகனங்களும் மின்சார சக்தியால் மட்டுமே இயங்கும்படி வடிவமைக்க வேண்டும். காற்று மாசு அறவே கூடாது.
9.    நாட்டு மக்களை காக்க வேண்டும் என, ஒவ்வொரு நாடும் இராணுவத்திற்கே தங்களது மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றார்கள். இதனை தடுக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டு எல்லையும் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டின் எல்லையை மதித்து நடக்க வேண்டும். அது தொடர்பாக போர் ஏற்படக்கூடாது. மாறாக ஐ.நா. சொல்லும் தீர்ப்பை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை உலக நாடுகள் ஏற்படுத்த வேண்டும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இராணுவம் இருக்கவே கூடாது. மக்களது வரிப்பணத்தை மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமே உலக நாடுகள் செலவழிக்க வேண்டும். கொரோனா பாதிப்பில் கூட, அமெரிக்கா இந்தியாவிற்கு 1000 கோடிக்கு இராணுவ பொம்மைகளை விற்கப்போகின்றதாம். இந்தியாவில் மக்கள் உணவிற்கு அல்லல் படுகின்றார்கள். இருக்க இடம் இல்லாமல் தெருவில் வசிக்கின்றார்கள். இந்நிலையில் இந்திய மக்களின் வரிப்பணம் 1000 கோடி ருபாய் அமெரிக்காவிற்கு செல்ல இருப்பது நியாயம் இல்லை. அதேபோல் வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை செய்தது வருத்தமளிக்கின்றது. எனவே இராணுவமில்லா நாடுகள் அமைய உலக நாடுகள் ஐ.நா.வின் மூலம் விடை காண வேண்டும். கொரோனா தாக்குதலால், இனி இராணுவத்திற்கு வேலையில்லாது உயிரி தொழில்நுட்பத்தை எல்லா நாடுகளும் கையாளும் என தெரியவருகின்றது. அதுபற்றி விரிவாக வேறு கட்டுரையில் காண்போம்.    
10.  உலகம் முழுதும் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முதல் 15 நாட்கள் தொடர்ந்து மக்கள் தனித்திருக்க வேண்டும். தற்போது உள்ளது போல ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும். 15-நாட்களுக்கு மட்டும் கொரோனா வந்து செல்வதும் நல்லதுதான்.
11. எந்த ஒரு நோய்களுக்கும் இயற்கை வைத்தியங்களான, சித்தா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய வைத்தியத்தையே உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டும். இந்தத் துறையில் ஆய்வகங்கள் ஏற்படுத்தி புதிய ஊட்டச்சத்து உணவினை உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஊட்டச்சத்து இல்லாததுதான் கொரோனா மற்றும் எந்த நோய்க்கும் முதல் காரணம். ஊட்டச்சத்து உள்ளவர்களை எந்த கொரோனாவும் ஒன்றும் செய்ய முடியாது.  அதனை நாம் பாரம்பரிய இயற்கை வைத்தியத்திலேயே அளித்து எந்த ஒரு கொடூர நோயினையும் குணமாக்க முடியும். மாறாக  மருந்து என்கின்ற வேதியியல் ஆங்கில மருந்தால் மக்களுக்கு எந்த நோயும் தீர வாய்ப்பில்லை. ஒரு நோய் தீர்ப்பது போன்று மறு நோயை உண்டு பண்ணுவதுதான் ஆங்கில மருந்தின் எதார்த்தமாக இருக்கின்றது. மேலும் உலக நாடுகள் மக்களின் நோய்களை முன்னிறுத்தி, மருந்து தயாரிக்கின்றோம் என மக்களது பணத்தை கொள்ளையடிக்கின்றார்கள். மருந்து தயாரிக்க பல தொழிற்சாலைகள் ஏற்படுத்தி உலகை மாசுபடுத்துகின்றார்கள். ஊழல் நிறைந்த இந்த அலோபதி முறையை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும். மக்கள் இவ்விஷயத்தில் விழிப்புணர்வு அடைய வேண்டும். தங்களது அரசு அலோபதியை தேர்ந்தெடுத்தால், அவ்வரசு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றது என்று உணர வேண்டும். தற்போது தமிழ்நாட்டில், இந்தியாவில், உலகில் பெரும் ஊழல் நடைபெற்று வருகின்றது. இந்நிலை மாற வேண்டும். மக்கள்தான் மாற்ற வேண்டும். புரட்சி வெடிக்க வேண்டும். ஜனநாயக அரசு, மக்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும். சுகாதார விஷயத்தில் அரசு சொல்வதை மக்கள் கேட்டால்.. மக்கள் ஏழைகளாகவும், நோயாளிகளாகவும் இருப்பர். நமது அரசர்கள் மட்டும் செல்வந்தர்களாக ஆகிவிடுவர். எனவே மக்கள்தான் திருந்த வேண்டும். கொரோனாவிற்கு சிகிச்சையளிக்க தற்போது இந்திய உச்சநீதி மன்றமும் பாரம்பரிய வைத்தியத்திற்கு தடைவிதித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. பாரம்பரிய வைத்திய சாலைகள் பெருக வேண்டும். பாரம்பரிய வைத்திய ஆராய்ச்சிகள் பெருக வேண்டும். மருத்துவமனைகள் இல்லாத நாடு, நாட்டு மருந்தகங்கள் மட்டுமே உள்ள நாடு, மெடிக்கல் இல்லா நாடு உருவாக மக்களிடம் விழிப்புத் தேவை, புரட்சி தேவை.
12. உலகில் மக்கள் எந்த ஒரு தொழிலை மேற்கொண்டாலும், அத்தொழில் பிற உயிர்களை சிறிதும் பாதிக்காதவண்ணம் உள்ளதா? எனவும், உலகில் உள்ள ஐம்பூதங்களான நீர், நெருப்பு, காற்று, மண், ஆகாயம் இவைகளை பாதிக்காத வண்ணம் உள்ளதா? எனவும் ஆராய்ந்து அத்தொழிலை மேற்கொள்ள வேண்டும். மனிதன் உட்பட மற்ற உயிர்களுக்கும் பாதிப்பு உண்டானாலும், ஐம்பூதங்களுக்கு மனித செயல்களால் பாதிப்பு உண்டானாலும் கொரோனா போன்ற உயிர்கொல்லி உயிரிகள் வந்தே தீரும். மனித உயிர்களும் மனிதன் அல்லாத பிற உயிர்களும் ஐம்பூதங்களும்தான் நமக்குக் கடவுள். இவைகளுக்கு துன்பம் விளைவித்துவிட்டு, நாங்கள் எங்களது கடவுளை பூஜை செய்கின்றோம், ஜெபிக்கின்றோம், தொழுகின்றோம் என்பதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு.
அன்பு மக்களே… நாம் இதுவரை கொரோனா பாதிப்பால், உலகளவில் தேவையான மாற்றங்களை பற்றி படித்தோம். உலகம் என்பது நம்மில் இருந்துதான் துவங்குகின்றது. எனவே முதலில் நாம் திருந்துவோம். உலகம் தன்னால் திருந்தும். மனிதனிடத்தில் பெரும் மாற்றங்களை இறைவன் எதிர்பார்க்கின்றான் என்பதை நாம் கொரோனா மூலம் அறிய வேண்டும். கொரோனாவால் உயிர் இழந்த, உயிர் இழக்க உள்ள உலக மக்களுக்கு இறைவன் தனது அருளால் மன்னிப்பைக் கொடுத்து, மறு பிறவியும் மனிதப் பிறவியாகவே கொடுத்து அருள வேண்டும் என்று நான் எல்லாம் வல்ல உண்மையிடம் வேண்டுதல் வைக்கின்றேன்.
--தி.ம.இராமலிங்கம்.        
For e-book link
https://drive.google.com/file/d/1gYOBnooezOr9IfmLJgG2uuvicVUBIvol/view?usp=sharing

Tuesday, April 14, 2020

வீறியெழல் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


இராமலிங்க அந்தாதி



இங்கு எழில்மாறல் ஏடுகள் சொன்ன
அங்கக் கடவுள் எல்லாம் - மங்கியே
விகாரி ஆண்டில் வீழ ராமலிங்கமே
மகா மந்திர மணியாவான். - 995

வந்தனம் அன்பர்களே!

எழில்மாறல் தமிழ் வருடம் பிறக்கும்போது எழிலாகவும், செல்லும்போது எழில்மாறலாகவும் (அழகின்மை) சென்றது எவ்வளவு பெயர் பொருத்தமாக உள்ளது பாருங்கள். இராமலிங்க அந்தாதியில் இந்த எழில்மாறல் வருடம் பற்றி குறிப்பிடுகையில் ”ஏடுகள் சொன்ன அங்கக் கடவுள் எல்லாம் மங்கி விகாரி ஆண்டில் வீழும்” என்று குறிப்பிட்டதை, அனைத்து வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் வீழ்ந்துக்கிடப்பதை பொருளாக எடுத்துக்கொள்ளலாம்.

சரி… அன்பர்களே… இதோ இன்று, 60 தமிழ் வருடங்களில் 34 –ஆவது வருடமான ”வீறிஎழல்” வருடம் பிறந்துள்ளது. இராமலிங்க அந்தாதியில் குறிப்பிட்டுள்ளபடி இவ்வருடத்தில் வள்ளற்பெருமான் நமது உள்ளங்களில் ஓர் அருவாக இருந்து உலக மக்களுக்கு எல்லாம் ஆன்ம அறிவை பெருக்குவார். ஆன்ம அறிவால் மட்டுமே இறைவனை உணர முடியும் என்பது வள்ளலாரின் சத்தியம். இந்த வீறிஎழல் ஆண்டின் துவக்கம் நமக்கெல்லாம் கடுமையானதாக இருந்தாலும், அந்தக் கடுமையால் நமக்கெல்லாம் ஆன்ம அறிவை உண்டாக்க இறைவன் முயல்கின்றான் போலும். அவனது செயல் வெற்றியடைய நாமெல்லாம் இவ்வருடத்தில் உழைப்போம். பிறக்கும் குழந்தை வீறிஎழுந்தால்தான் தாய் மகிழ்வாள். நாமும் இவ்வருடத்தில் ஆன்ம அறிவு பெற்று ஒரு புதியக் குழந்தையாக வீறிஎழுந்து இறைவனை மகிழ்விப்போம்.        

மணி ஓசையால் மனம் வீறியெழுந்து
அணி பெற்று ஆன்மஅறிவுப் - பணியை
சார்வரி வருடம் செய்ய ராமலிங்கமே
ஓர்அருவாக உள் இருப்பான். - 996

அனைவருக்கும் வள்ளலாரின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Tuesday, April 7, 2020

கொரோனா பதிகம்

வந்ததே கொரோனா
                                                           (தி.ம.இராமலிங்கம்)

விழி பார்த்து வழி நடந்தும்
        விளக்க மின்றி மதமான பெருங்
குழி விழுந்தி ளைத்து இன்னும்
        கருணை யின்றி புலால் நுகரும்
இழிச் செயல் செய்து நெஞ்சில்
இரக்கம் சிறிது மின்றி செய்யும்
பழி பாவச் செயலால் உன்னை
பண் படுத்த வந்ததே கொரோனா.                                 (1)

துடிப்பு சிறிது மின்றி பிறஉயிர்
துடிப்பை மகிழ்ந் தூட்டும் மதப்
படிப்பை மிகப் படித்து பல்லிளித்து
பாவம் செய்யவே பக்தி செய்து
நடிக்கும் உலகில் இருக்கும் கூட்டம்
  நொடிந்து போகவே சிற் றுயிரை
தடித்து படைத்து இறைவன் செய்த
தயவால் பரவி வந்ததே கொரோனா.                             (2)

மண்ணின் மூத்த உயிரிகளை நேற்றய
மனிதன் காட்டு விலங்கென அடித்து
எண்ணிறைந்த பலிகளை சாமி கேட்குது
  என்று தன் பசிக்கு உணவாக்குவான்
கண்ணிருந்தும் காணாமல் போவார் போல
கருத்துரைத்த வள்ளல் சொல் கேளாது
உண்மைக்கு மாறாக செயல் படும்
உன்னை மிரட்ட வந்ததே கொரோனா.                         (3)

சுய ஊரடங்கும் மூவெண் தடைகளும்
சுழன்று வரும் பாவம் போக்குமோ
சுய அடக்கம் கூறும் சுத்தசன்மார்க்கம்
சூழும் வல்வினை போக்கும் உன்
பய மதைபூஜ்ஜிய மாக்கும் மாறாய்
பாடை மேல் செல்லும் வரை
தய வறியா மாந்தருக்கு அவர்காண
தலை வீழவைக்க வந்ததே கொரோனா.                    (4)


கத்தும் போதும் பிறஉயிர் இரத்தம்
சிந்தும் போதும் களித்து நின்றாய்
பத்து ரூபாய்க்கு இன்று கோழி
பத்து கொடுத்தாலும் வேண்டா மென்று
பித்தனாய் செல்லக் காரண முன்னுயிர்
பற்று என் றில்லாது அனைத்துயிரும்
நித்தமும் இன்புற்று வாழ நினைத்து
நிறைவு காண வந்ததே கொரோனா.                         (5)

எல்லாம் வல்லஅருட் பெருஞ் ஜோதி
அற்புதக் கடவுளை நினைந் துருகி
நல்லார் எல்லோரும் வணங்கித் தொழுதிட
நாடுக ளெல்லாம் நலம் பெற்று
பொல்லா புலாலும் வழக்கற்று பொய்
  புகலா மார்க்கம் நிலைபெற்று மெய்
நில்லாத நிலை விடைபெற்று என்றும்
நன்னெறி காண சென்றதே கொரோனா.                 (6)

உலகெலாம் உணர்ந்து ஓதுகின்ற நிலையும்
உளமெலாம் நிறைந்து பாடுகின்ற கலையும்
மலமெலாம் ஒழிந்து மதிக்கின்ற மொழியும்
மதமெலாம் தளர்ந்து வருகின்ற இறையும்
நலமெலாம் வளர்ந்து தருகின்ற தயவும்
நினைந்து நினைந்து உருகுகின்ற நெஞ்சமும்
நிலமெலாம் பரந்து இருக்கக் கண்டுவிட்டு
நடுக்குற்று பறந்து சென்றதே கொரோனா.            (7)

இருபத் தொருநாளில் இருக்குமோ உயிரும்
என்றே அஞ்சி அடங்கினோம் வீட்டில்
உருமெலிந்து அன்றாட பிழைப்பு மின்றி
உருண்டை சோற்றுக்கு அல்லல் பட்டு
வரும் நாளில் பசித்துன்பம் மேலோங்கி
வறுமையால் மரணமுறும் நிலை பெருகி
இருளான இந்தியாவில் இனி இருக்கவும்
இடமின்றி சபித்துச் சென்றதே கொரோனா.        (8)


மனிதன் இல்லா உலகம் இனிமையாம்
மரணம் எனும் அச்சம் இனிமையாம்
தனித்து இருக்கும் சுகம் இனிமையாம்
துணிந்து மீள்வோ மென்றமடம் இனிமையாம்
இனியும் திருந்தோ மெனும்குணம் இனிமையாம்
இரக்க மில்லாது புலாலுண்பது இனிமையாம்
 கனித்து எதிர்காலம் கூறும்பொய் இனிமையாம்
       குறித்த இனிமையால் செல்லுமோ கொரோனா?      (9)

சுற்றும் உருண்டை பந்திலே நோயிலே
சிக்கிமாளும் மானிடரைக் கண்டு இனி
சற்றும் நான்சகித்திட மாட்டேன் மனித
  சக்தி கொடுக்கும் சன்மார்க்க சங்கப்
பற்றும் திருவருட்பாத் தமிழ் அளிக்கும்
  பலசித்தி வகைகளை எனக்க ளிப்பாய்
முற்றும் மரணாதிகளை தடுத்து உனது
  மன்றி லாடஎனக் கிச்சைகாண் எந்தாய்.                (10)












கொரோனா அழகியே -
உனை
முகர்ந்தாலும் முக்தி
உட்கலந்தாலும் சித்தி!

எனைஈர்க்கும்
உன் கீழ்நோக்கு
பார்வையும்
உன் முகம் காட்டும்
வெறுமையும் நினைத்து
மகிழ்ந்தேன்!

உலக மாயையால் – என்னை
சுவைக்கத் தூண்டும்
உன் தேன்சுவை
வதனங்களுக்கு வந்தனம்

உலகையே அச்சுறுத்தும்
உன் எழில் உருவமும்
முத்தந்தர அழைக்கும்முன்
இரு கன்னங்களும்
தனித்தவன் முன்
என்ன செய்யும்?

வெற்றிவாகைச் சூடும்
உன்னிரு புருவங்களும்
அனைப்பிலே சூடேற்றும்
உன்னுயிர் சுவாசங்களும்
விழித்தவன் முன்
என்ன செய்யும்?

கொரோனா அழகியே –
சன்மார்க்க உலகிலே
துன்மார்க்கம் ஒழியவே
மானுடம் சிறக்கவே
உலகுயிர் வாழவே
சென்றுவிடு… சென்றுவிடு…




அரிது, பெரிது, இனிது, கொடிது.

உலகீரே! அரியது கேட்கின்…
அரிதரிது கொரோனா ஆதல் அரிது
கொரோனா ஆயினும் கோவிட் 19
 ஆதல் அதனினும் அரிது
கோவிட்19 ஆயினும் உலகை சுற்றி
வலம் வருதல் அதனினும் அரிது
உலகை வலம் வரினும் ஒழுக்கமில்லா
மானுடரை கொல்லுதல் அரிது
கொல்லினும் தருமச் சாலையில் நடப்போரை
கடவுள் என்றே துதித்து சென்றிடுமே.

உலகீரே! பெரியது கேட்கின்…
பெரிது பெரிது கொரோனா பெரிது
கொரோனாவோ கடவுள் படைப்பு
கடவுளோ மனித மனத்தின் படைப்பு
மனமோ உலக மாயையின் படைப்பு
உலக மாயையோ வெட்டவெளியின் படைப்பு
வெட்ட வெளியோ அணுவின் படைப்பு
அணுவோ ஒளியின் அற்புதப் படைப்பு
ஒளியின் பெருமை சொல்லவும் பெரிதே.


உலகீரே! இனியது கேட்கின்…
இனிது இனிது கொரோனா இனிது
அதனினும் இனிது ஏகாந்தம்
அதனினும் இனிது ஒழுக்கம்
அதனினும் இனிது தாவரஉணவு
அதனினும் இனிது அக இனத்தாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே.

உலகீரே! கொடியது கேட்கின்…
கொடிது கொடிது கொரோனா கொடிது
அதனினும் கொடிது ஊரடங்கால் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணா அரசியல்
அதனினும் கொடிது அன்பிலா மதங்கள்
அதனினும் கொடிது மதப்பிடியுள் மனிதர்கள்தானே!



இன்றைய உலகம்! (12-04-2020)

ஓடிய ஓட்டமென்ன?
துப்பிய எச்சில் என்ன?
வீசிய குப்பை என்ன?
கொன்று தின்னுமுணவு என்ன?
நாடுவிட்டு நாடுபோனால்
நோயோடு  வருவதென்ன?

வீடுவரை உலகம்
வீதிவரை தனிமை
நாடுவரை நடுக்கம்
நாளை வரை யாரோ?

தேடும் வரை செல்வம்
தேனிலவில் நாட்டம்
தேடிவந்த இன்பம்
தெய்வசுகம் தருமா? (வீடு)

வட்டிகேட்கும் வங்கி
விட்டுவிலகும் அங்கி
பட்டனத்து வேலை
விட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
செய்த வினை என்பான்
செய்த வினை கேட்டால்
சுற்றி வந்தேன் என்பான்! (வீடு)

விட்டிழுக்கும் மூச்சு
கட்டிலிலே போச்சு
வெட்டிவச்ச பூமி

படுத்துவிட்டா சாமி! (வீடு)

Friday, April 3, 2020

BIO WEAPON - TMR




பயோ வெப்பன்
(தி.ம.இராமலிங்கம் – 03-04-2020)
கொரோனா வைரசை தடுக்க உலக வங்கி இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர்கள் நிதியுதவி (கடன்) அளிக்கின்றது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7613 கோடியே 50 லட்சம் கடன் வழங்குகின்றது. இதன் வட்டி விகிதம் என்னவென்றும், எத்தனை வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன பற்றி வெளிப்படையாக நமக்குத் தெரியாது. இந்தியா கடன் உதவி கேட்காமலேயே இந்த கடன் தொகை நமக்கு கிடைக்கின்றது. இது போல இன்னும் சில நாடுகளுக்கும் கடன் கொடுக்க உள்ளது.

கொரோனாவிற்காக நமது நாட்டு நிறுவனங்கள், தனி நபர்கள் எல்லோரும் கோடி கோடியாக நமது அரசிற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். மத்திய மாநில அரசும் பொது மக்களிடம் நிதி தாருங்கள் என வெளிப்படையாக கேட்டு பெறுகின்றன. மேலும் தங்களுடைய ஊழிர்களின் ஊதியத்திலிருந்தும் தானாக ஒரு நாள் ஊதியம் என பிடித்தம் செய்துக் கொள்கின்றன. இவையன்றி கொரோனா சிகிச்சை அளிக்க பல அரசியல் கட்சிகள் தங்களுடைய இடங்களை அளிக்கின்றன. இவையன்றி அரசு தேவைப்பட்டால் திருமண மண்டபங்கள், அனைத்து மத வழிபாட்டுத்தளங்கள் இவைகளை பயன்படுத்திக்கொள்ள தடைகளும் இல்லை. நம் நாட்டு மக்களிடம் பெற பெற்ற நிதிகளுடன் மத்திய அரசின் நிதியையும் சேர்த்து செலவு செய்தாலே கொரோனா ஒழிப்பிற்கு போதுமானதாக இருக்கும். கொரோனா பாதிப்பை சரிசெய்ய அமெரிக்க அரசு அங்குள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.90,000/- இனாமாக அளிக்கின்றது. ஆனால் இந்தியா மக்களிடமும் வாங்கிக்கொள்கின்றது. உலக வங்கியிடமும் வாங்கிக்கொள்கின்றது. வெறும் ஆயிரம் இரண்டாயிரம் என ஒருவருக்கு அல்ல, ஒரு குடும்பத்திற்கு கொடுத்து கொரோனா பாதிப்பை சரிசெய்ய நினைக்கின்றது இந்தியா. மக்களிடம் மூன்று மாதத்திற்கு இ.எம்.ஐ. வாங்க வேண்டாம் என சொன்னாலும் அதனை இந்திய நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கேட்பதாக இல்லை. தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் இந்தியாவில் உள்ள 90 சதவிகித மக்கள் மாதந்தோறும் தாங்கள் வாங்கிய கடனுக்கு இ.எம்.ஐ. கட்ட சிரம்படுகின்றனர். வீட்டு வாடகை, மின் கட்டனம், உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்.    

ஆனால், உலக வங்கி இந்தியாவிற்கு இப்படி வலிந்து வந்து கடன் கொடுப்பது எதனால்? இத்தொகையினை இந்தியா கொரோனா ஒழிப்பிற்கா பயன்படுத்தப் போகின்றது? இல்லை. நாடுகள் ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியை கட்டுவதற்கும், பழைய கடன்களை புதுப்பிக்கவுமே உலக வங்கிகள் கடன்களை பல்வேறு நாடுகளுக்கு வழங்கி வருகின்றன.

பல நாடுகள் இந்தியா உட்பட தங்களது இராணுவ தளபதிகளுக்கு விளையாட பொம்மைகள் வாங்கிக் கொடுக்கவே தங்களது நிதி ஆதரங்களை எல்லாம் பயன்படுத்தி விடுகின்றன. இராணுவ வரவு செலவு என்பது அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாக உள்ளன. ஒவ்வொரு நாடும் தமது அண்டை நாட்டை பார்த்து பயப்படுவதுதான் இதற்கு காரணம். ஆயுதங்களுக்காக எவ்வளவு செலவு செய்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது என்ற வெளிப்படையான உண்மை, நாட்டு பாதுகாப்பு என்ற வார்த்தையில் மறைக்கப்படுகின்றது. இராணுவ செலவீட்டில் வெறும் நுகர்வைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆயுதங்களை கடனில் வாங்கும் நாடுகள், அசலோடு வட்டியையும் சேர்த்துத் திரும்பக் கட்ட வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து எந்தவிதமான வருமானமும் வருவது இல்லை. இராணுவச் செலவு என்பது உலகை பயங்கரமான விளையாட்டில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துகின்றது. இதில் நிச்சயமாக அனைவரும் தோல்வியடைய போவது உண்மை.

ஒரு நாடு அதன் கடனை உலக வங்கிக்ளுக்கு அடைக்க முடியா தருணத்தில், என்ன நடக்கும்? அப்படிப்பட்ட சமயங்களில் அந்நாட்டின் சொத்துக்கள், உலகெங்கும் அதற்கு கடன் கொடுத்த நாடுகளால் கையகப்படுத்தப்படும். அதன் ஏற்றுமதிகள் ஒவ்வொரு துறைமுகத்திலும் பறிமுதல் செய்யப்படும். அந்நாட்டின் விமான போக்குவரத்து தொடர்ந்து இயங்க முடியாது. அதற்குத் தேவையான மூலதன பொருட்களும் உதிரி பாகங்களும் ஒரேயடியாகக் கிடைக்காமல் போய்விடும். உணவு இறகுமதியும் தடை செய்யப்படும். அந்நாட்டு குடிமக்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இது ஒன்றும் ஏற்புடைய காட்சி அல்ல.

இவ்வாறு ஏதும் நடந்துவிடாமல் பாதுகாக்க உலக வங்கிகள் அவ்வப்போது ஏதேனும் காரணத்தை அதுவாகவே ஏற்படுத்திக்கொண்டு மீண்டும் மீண்டும் கடனை அளித்து வருகின்றன. நம்மை போன்ற நாடுகளும் தங்களது வட்டியை அடைக்கவே புதிய கடன்களை வாங்கி வாங்கி வட்டித் தொகைகளை அதிகரித்துக்கொண்டுள்ளன. அசலை பற்றி பேச்சுக்கே இடமில்லை.

தற்போத நிலையில் ஓர் உண்மை உலகிற்கு தெரிய வந்துள்ளது. இனி ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு நாட்டு இராணுவம் அதன் நாட்டை காப்பாற்ற முடியாது என்பதே அது. கொரோனா என்கின்ற உயிரிப் போர் (BIO WAR) தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றது. இதற்கும் காரணம் உலக நாடுகளின் பொருளாதார வேட்கைதான். உயிரிப் போர் - எந்த நாடு, எந்த நாட்டுக்கு எதிராக நடத்துகின்றது என்பதே வெளிப்படையாகத் தெரியாது. உலகில் உள்ள மக்கள் கொத்து கொத்தாக சாகின்றார்கள். எந்த இராணுவமும் இதனை தங்களது ஆயுதங்களைக் கொண்டு தடுக்க முடியாது. இனி இவ்வாறுதான் போர் நடக்கும் என்பதன் ஆரம்பம்தான் இந்த கொரோனா. ஆகையால் ஒரு வழியில் இதுவும் உலகிற்கு நல்லதே. ஆயுத கொள்முதலில் தங்களுடைய நிதியாதாரங்களை அழித்த நாடுகள் எல்லாம் இனி, அந்நிதிகளை தங்களுடைய மக்களின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தத் தொடங்கும். உயிரிப் போரால் உலகின் மக்கள் தொகை படிப்படியாக குறையும். இருக்கும் வரை வசதியாக வாழ்வார்கள், போர் என வந்துவிட்டால் எல்லோரும் சாவார்கள் என்ற நடைமுறைக்கு உலகம் வந்துவிடும்.

இராணுவத்திற்கு வேலை இருக்காது. சில அறிவியல் விஞ்ஞானிகளின் கையில் இவ்வுலக உயிர்களின் வாழ்க்கை இருக்கும். எனவே இன்று இந்தியா வாங்கும் உலக வங்கிக் கடனே இறுதியானதாக இருக்கட்டும். இனி இராணுவ நிதி ஒதுக்கீட்டினை பெருமளவு குறைக்க வேண்டும். நம்மிடம் உயிரிகள் (BIO WEAPON) உள்ளன என்று மட்டும் வெளி உலகத்திற்கு சொல்லிக்கொண்டே (அச்சுறுத்திக்கொண்டே) நாம் நிம்மதியாக வாழத் தொடங்குவோம். உயிரிகள் செய்ய ஒரு அறிவியல் கழகத்தை மிக நுட்பமாக அமைத்தால் மட்டும் போதுமானது.

இனி இவ்வுலகம் அடித்தட்டு மக்களுக்கானது. அவர்களின் வறுமையை ஓட்டி அனைவரும் செல்வந்தர்களாகவும், வளமாகவும், சமமாகவும் வாழ்வோம்.  இராணுவம் இல்லாத நாடுகளில் மட்டுமே மக்கள் செல்வந்தர்களாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும் என்கின்ற ஒரு புதிய கோட்பாட்டை நமது உலகிற்கு கொடுத்த கொரோனாவிற்கு நன்றி சொல்வோம்.  - TMR    

Download load e-book 


https://drive.google.com/open?id=10OUSMte9ZE-2K92HvDyWHkTHyuiTzF7S