Monday, April 29, 2013

திருவடிப் புகழ்ச்சி


                                         திருவடிப் புகழ்ச்சி                                   29-04-2013

உயிர்களுக்கெல்லாம் உறவானவர்களே, வணக்கம்!

இவ்வுலகில் வாழும் நாம் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, தங்களுடைய காரியங்களை வெற்றிகரமாக முடித்துக்கொள்கிறோம் என்பது உண்மை. புகழ்ச்சிக்கு அடிமையாகாத மனிதர்கள் இல்லை எனலாம். உண்மையில் புகழுபவனுக்கு அப்புகழை ஏற்பவன் அடிமையாகிவிடுவான். அதனால் தான் புகழுபவனின் காரியங்கள் வெற்றியடைகின்றன. புலவர்கள் மன்னர்களை புகழ்ந்துப் பாடியதும், அமைச்சர்கள் யாவரும் முதலமைச்சரை புகழ்வதும், முதலமைச்சர்கள் பிரதம அமைச்சரை புகழ்வதும் எதற்காக என்றால் காரிய சித்தியடைவதற்காகவே ஆகும். திருவள்ளுவரைக்கூட இந்த புகழ் விட்டு வைக்கவில்லை. அவர் இயற்றிய குறளை படியுங்கள்...    

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

இக்குறளுக்கு இதுவரை யாரும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை என்றே கருதுகிறேன். எனக்கும் இதுவரை புரியவில்லை, 

எழுதின் புரிதலோடு எழுதுக அஃதிலார்
எழுதலின் எழுதாமை நன்று.

இந்தக் குறளை பொறுத்தமட்டில், இதுதான் திருவள்ளுவருக்கு என்னுடைய புகழுரையாகும். இறைவனும் இந்தப் புகழுக்கு அடிமையானவனே என்றால் அது பொய்யன்று. திருவள்ளுவர் இங்கே இதற்காக ஒரு சரியானக் குறளை கொடுத்திருக்கிறார்...

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

உயிர்கட்கு இருவினைத் தொடர்பு உண்டென்றும், அது நீங்குதற்கு அவன் திருவடியைப் புகழ்வதாகிய வினையே வேண்டுவது என்றும் திருவள்ளுவர் உரைக்கின்றார். மேலும் இதற்குச் சாட்சியாக பல்லாயிரங்கணக்கான தமிழ் இலக்கிய / ஆன்மீக நூல்களை கூறலாம். அந்த வகையில் நமது வள்ளலார் தம் இறைவனை புகழ்ந்துப் பாடியதே இந்த திருவடிப் புகழ்ச்சியாகும்.


வள்ளலார் இயற்றிய திருவடி புகழ்ச்சியின் சிறப்புகள்:-

# இத் திருவடிப் புகழ்ச்சியில் வள்ளலார் மொத்தம் 114 இடங்களில் 'பதம்' என்கிற இறை பதத்தை உபயோகப் படுத்தியுள்ளார். இறுதியில் முடிக்கும் போது 'அழிவில் நின்று உதவுகின்ற பதமே' என்று முடித்துள்ளது சிறப்பாக அமைகிறது.

#  இந்த திருவடிப் புகழ்ச்சி 128 அடிகளைக்கொண்டதாக இருந்தாலும், உண்மையில் இது 4 அடிகளைக்கொண்ட ஒரே பாடலாகும். எப்படியெனில் ஒவ்வொரு அடியும் 32 வரிகளைக் கொண்டது. (32*4=128). 

# இப்பாடல் 'கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்னும் இலக்கண வகையைச் சார்ந்தது. 'கழிநெடிலடி' என்பது ஐந்து சீர்களுக்கும் மிக வருவது. 'விருத்தம்' என்பது நான்கு அடிகளாக மட்டுமே அமைவது. 

# பரசிவம், தரமிகும், மரபுறு, இரவுறும் என்பன அடிதோறும் முதல் சீர்களாக வந்து எதுகை தொடையாக இருப்பதைக் கவனிக்கவும்.

# வரி ஒன்றுக்கு 6 சீர்கள் என 32 வரிகளில் (ஒரு அடியில்) 192 சீர்களை இது கொண்டுள்ளது. 

# அருணகிரியாரின் திருப்புகழ் பாடல்களில் 50 க்கும் அதிகமான் சீர்களை உடையவை உள்ளன. ஆனால் 192 சீர்களைக் கொண்ட ஒரு தமிழ்ப் பாடல் உண்டு என்றால் அது தமிழ் இலக்கிய உலகில் வள்ளலார் இயற்றிய இந்த 'திருவடிப் புகழ்சி' ஒன்றே ஆகும். 

திருவடி புகழ்ச்சி

பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்
பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்
பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம்
பரதுரிய வநுபவம் குருதுரிய பதமம் பகம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாதீத மின்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த பதமகா மௌனரூபம்
பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்
பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்
பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம் (32) 1st Adi
தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி
சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்
தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்
சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்
தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்
தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்
தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்
சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம் (64) 2nd Adi
மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்
வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம் 
மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்
மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்
மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந்தருளும்பதம்
வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்
மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்
வஞ்சமறு நெஞ்சினிடை யெஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடவுண் மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யுந்தனி யறக்கருணை யுந்தந்துவழ்விக்குமொண்மைப்பதம் (96) 3ed Adi
இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்     
எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்
ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்
இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறு மிரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமு னிருந்துபி னடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடற் றெருத்தொறு மியங்கிய விரக்கப்பதம்
இறுவைகை யங்கரையின் மண்படப் பல்கா லெழுந்துவிளை யாடும்பதம்
எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்
என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்
என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்
என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்
எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே (128)4th Adi
************************************************************************

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்




1 comment:

  1. Vallalar songsதிருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.