Saturday, March 4, 2017

கலை அறிவும் அருள் அறிவும்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

கலை அறிவும் அருள் அறிவும்

பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம். இது சத்தியம்.
                                       ---திருவருட்பிரகாச வள்ளலார்

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

நாம் நமது கைகளைத் தொட்டு, மணல் குழியில் எவ்வளவு ஆழம் எடுக்கிறோமோ அந்த ஆழத்திற்கு தகுந்தவாறு நமக்கு நீர் கிடைக்கும். அதுபோல நாம் எவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறோமோ அந்த அளவிற்காண அறிவு நமக்குக் கிடைக்கும் என்பது திருவள்ளுவர் வாக்கு. புத்தகத்தைப் படிப்பதின் மூலம் நமக்குக் கிடைக்கும் அறிவை, கலை அறிவு என்கிறோம்.

        ஒருவன் ஒரு ஜென்மத்தில் எத்தனை புத்தகத்தை படித்துவிட முடியும்? நாம் நமது வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டால், நாம் வாழும் ஆயுளில் சுமார் ஆயிரம் நூல்களை படித்துவிட முடியும். அதுவே மிகவும் முயற்சி செய்தால்தான் படிக்க முடியும். இவ்வுலகில் 90 சதவிகித மக்கள் தமது வாழ்நாளில் 100 புத்தகங்களை முழுதும் படித்து முடித்திருப்பதே அரிது. இந்த 90 சதவிகித மக்களும் 100 புத்தக அறிவைக்கொண்டே அரசியலிலும், செல்வாக்கிலும், செல்வத்திலும், வறுமையிலும், அடிமையாகவும், கொலைஞர்களாகவும், புலையர்களாகவும், கலைஞர்களாகவும், புலவர்களாகவும், நல்லவர்களாகவும், தீயவர்களாகவும், ஒழுக்கம் மிகுந்தவர்களாகவும், சாமியார்களாகவும், ஞானிகளாகவும் இப்படி பல்வேறு முகபாவங்களை அவர்கள் ஏற்றுள்ள ஒரு ஜென்மத்தில் முடித்துவிட்டு அடுத்த ஜென்மம் நோக்கி பயணப்படுகின்றார்கள்.

        இவர்களே தாம் எடுத்த அந்த ஜென்மத்தில் ஆயிரம் நூல்களை கற்றறிந்தால் அவர்களது அறிவு எப்படி சுடர்விட்டு பிரகாசிக்கும் என்று எண்ணிப்பாருங்கள். இப்படி எண்ணும்போதுதான் வள்ளற்பெருமான் குறுக்கிடுகின்றார். ஒரு ஜென்மத்தில் ஆயிரம் நூல்தானா? அவ்வெண்ணிக்கை தூசு போன்றது. இதோ நான் ஒரு கணக்கு வைத்திருக்கின்றேன். அதன்படி கற்றதுதான் என்னுடைய அறிவு என்கின்றார். அது என்ன கணக்கு?, அதனையும் பார்த்துவிடுவோமா…   

ஒரு ஆள் சுமை என்பது சுமார் 60 கிலோ என்று வைத்துக்கொள்வோம். பத்து ஆள் சுமை என்பது 600 கிலோ ஆகும். 600 கிலோ என்பது ஒரு வண்டிப்பாரம். இப்படி 400 வண்டிச் சுமை கொண்டது 2,40,000 கிலோ ஆகும். 2,40,000 கிலோ கொண்டது ஒரு சூல்வண்டிப் பாரமாகும். சூல் வண்டி ஆயிரம் கொண்டது 24,00,00,000 கிலோ ஆகும். 24 கோடி கிலோ எடையுள்ள (2,40,000 டன்) புத்தகத்தை ஒருவன் தான் எடுத்த இந்த ஜென்மத்தில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம் என்பது வள்ளலாரின் கணக்கு.
       
        இன்னும் இதனை விளக்கமாகப் பார்ப்போம். நமக்குத் தெரிந்த ஆறு திருமுறைகள் கொண்ட திருவருட்பா நூல் என்பது சுமார் 10 கிலோ இருப்பதாகக் கொண்டால், 2கோடியே 40 லட்சம் திருவருட்பா போன்ற நூல்களை நாம் இந்த ஜென்மத்தில் அதிதீவிர முயற்சி எடுத்தால் படித்து முடிக்கலாம் என்றாகின்றது. அதாவது ஆறுதிருமுறை கொண்ட திருவருட்பா நூலை 2,40,00,000 முறை முழுதும் படிப்பதற்கு சமம். ஒருவன் ஒரு ஜென்மத்தில் 120 வயதை ஆயுளாகக் கொண்டால், முதல் மற்றும் இறுதி 10 ஆண்டுகளை கழித்துவிட்டால், மீதம் உள்ள 100 ஆண்டுகளில் 36,500 நாட்களே அவனுக்கு உள்ளது. இந்த 36,500 நாட்களில் அதிதீவிர முயற்சி எடுத்து ஒரு நாளைக்கு 657 முறை 10 கிலோ எடையுள்ள நூல்களை படித்து முடிக்க வேண்டும். இது முடியுமா என்றால், சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும் என்கின்றார் வள்ளலார்.

        இவ்வாறு ஒருவன் ஒரு ஜென்மத்தில் ஒரு நாளைக்கு 657 - 10 கிலோ எடையுள்ள நூலை 100 வருடம் வரை படித்துக்கொண்டு, அவன் மீண்டும் மீண்டும் இதே மாதிரி 1000 ஜென்மம் எடுத்து தொடர்ந்து படித்துக்கொண்டே வந்தால், 2400,00,00,000 (2,400 கோடி கிலோ) நூல்களை அவன் படித்து முடித்திருப்பான். என்ன… தலை சுற்றுகிறது அல்லவா!!!....!!! (இவ்வுலகில் இவ்வளவு நூல்கள் இருக்கின்றதா என்பதே சந்தேகம்). 1000 ஜென்மத்தில் 10 கிலோ எடையுள்ள 2,400 கோடி புத்தகங்களை படிப்பவன் ஒருவன், அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், இவ்வளவு நூல்களையும் ஒரே கணத்தில் / ஒரே நொடியில் படித்துக்கொள்ளலாம் என்கின்றார் வள்ளலார். இந்த அருள் செய்தியினை சும்மா படிக்கவே தலைசுற்றுகின்றதே… ஒரு வகையில் சந்தேகம் எழுகின்றதே… என்றெல்லாம் நாம் நினைப்போம் என்றுதான்… வள்ளலார் இந்தச் செய்தியினை சொல்லி முடித்தவுடன்… “இது சத்தியம்” என்று இச்செய்திக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.“இது சத்தியம்” என்று சொன்ன பிறகு இதனை யாரேனும் அலட்சியப் படுத்த முடியுமா?
        இப்படித்தான் வள்ளற்பெருமான் ஓதாது இவ்வுலகில் உள்ள நூல்களை எல்லாம் ஒரே நொடியில் படித்து முடித்தார். அவர் தம்முடைய அனுபவத்தைத்தான் மேலே உரைநடையிலும், திரு அகவல் வரிகளிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

        சுத்த சன்மார்க்க அனுபவம் என்பது சுத்த சிவ துரியாதீத நிலையாகும். அப்படிப்பட்ட சுத்த சிவ அனுபவத்தை நான் பெறுதல் வேண்டும் என்ற நோக்கமுடன், ஜீவகாருண்யத்தால் பெறப்படும் இறையருள் முன்னிடமாக, ஒருவன் அறியத் தொடங்கினால் அதாவது அருள் அறிவைக்கொண்டு அறியத்தொடங்கினால், ஆயிரம் ஜென்மத்தில் படித்து முடிக்கக்கூடிய நூல்களை எல்லாம் ஒரே நொடியில் கற்று முடித்துவிடலாம். எனவே அருள் அறிவு பெற்றுவிட்டால் கலையறிவு எல்லாம் நொடியில் படிக்காமலேயே நமக்குக் கிடைத்துவிடும் என்பதே இதில் உள்ள செய்தியாகும்.


                                                    ---தி.ம.இராமலிங்கம்.


3 comments:

  1. வணக்கம் அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.