காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017
ஆம் மாதம் வெளிவந்தவை:
மனிதரிடையே
உள்ள உறவுகளில் எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றி புத்தர் என்ன கூறுகிறார்?
வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதி உறவுகள் ஆகும், இல்லையா? என்னுடைய பதில் உங்களை மிகவும் மகிழ்விக்கும். பௌத்தம் ஒரு அமைதியான மதம் என்று பெயர் பெற்றுள்ளது. அதன் பெயரால் போர்கள் நடைபெற்றதில்லை. அமைதிக்கும், சமாதானத்திற்கும், விரிந்த எண்ணப் போக்கிற்கும் பௌத்தம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. அதற்கு ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை. அது பொறுமை போன்ற நல்லியல்புகளைப் போற்றுகிறது. எனவே "நான் தினமும் தியானம் செய்தால் (பௌத்தப் பயிற்சியில் ஈடுபட்டால்) என்னுடைய உறவுகளில் ஏற்படும் சில பிரச்சனைகளையும், வேறு பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் நல்ல உறவுகளைக் கொண்டிருப்பார்," என்று நீங்கள் எண்ணக் கூடும்.
இல்லை. நடைமுறையில் அது அப்படி இல்லை. இது ஒரு சிறு பிள்ளைத்தனமான கருத்து. புத்தர், தான் உலகத்தோடு எப்போதும் வாதாடவில்லை யென்றும், ஆனால் உலகம் தான் தன்னோடு வாதாடுகிறது என்றும் கூறுகிறார். ஆகவே உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியாது. எனென்றால், மற்றவர் மனத்தை நீங்கள் கட்டுப்படுத்த முடியும் என்று நினைப்பது தான் உங்களது மிகப் பெரிய தவறான கருத்து. அது உங்களால் முடியாது. உங்கள் பிரச்சனைகளை மட்டுமே நீங்கள் தீர்க்க முற்படலாம். அது உறவுகளில் உள்ள பிரச்சனைகளில் சரிபாதி மட்டுமே. மற்ற பகுதி, உலகம் உங்களிடம் சச்சரவு கொள்ளுமென்பது தான். மேலும் நீங்கள் யாராக இருந்தாலும் சரி. நீங்கள் புத்தராகவே கூட இருக்கலாம். உங்களுக்கு உறவுகளுடன் பிரச்சனைகள் ஏற்பட்டே தீரும். இதை முழுமையாக உங்களால் தவிர்த்து வெற்றி காண முடியாது. ஏனென்றால் மற்றவர் மனத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் மனத்தைக் கட்டுப் படுத்துவதில் நீங்கள் திறமைசாலியாக இருந்தாலும், மற்றவர் விஷயத்தில் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் உங்களைப் பற்றி மனதில் இப்படிப் பட்டவர், அப்படிப் பட்டவர் என்று கணித்து வைத்திருப்பார்கள். ஆனால் அதற்கு நீங்கள் முற்றிலும் மாறு பட்டவராகக் கூட இருக்கலாம். ஆக மனித வரலாற்றிலேயே உறவுகளில் எவரும் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை நடத்தியதில்லை. அது ஏசுவாக இருந்தாலும் சரி, புத்தராக இருந்தாலும் சரி. பிறர் மனத்தைப் புண்படுத்தாமல் எவரும் வாழ்ந்ததில்லை.
துறவிகளாகிய நாங்கள் ஓர் இடத்தை விட்டுச் செல்லும்போது இவ்வாறு மன்னிப்புக் கேட்பது வழக்கம்:
'நான் மனத்தாலும், பேச்சாலும், உடலாலும் தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் மனத்தைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.' நீங்கள் முழுக்க முழுக்க முறையாக நடந்து கொண்டாலும் கூட, உங்கள் நடத்தை மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப் படலாம். நீங்கள் சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், எந்த (தவறான) நோக்கமும் இல்லாதவரானாலும் மற்றவர் மனத்தை நீங்கள் புண்படுத்தக் கூடும். நீங்கள் ஓர் இடத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருந்தால் கூட யாரையாவது புண்படுத்தக் கூடும்.
எனவே புத்தர் கூறுகிறார்: 'அதிகம் பேசினாலும் மக்கள் உங்களைக் குறை கூறுவார்கள். குறைவாகப் பேசினாலும் மக்கள் உங்களைக் குறை கூறுவார்கள். ஒன்றுமே பேசாவிட்டாலும் மக்கள் உங்களைக் குறை கூறுவார்கள்.' எது செய்தாலும் உலகம் உங்கள் மீது பழி சுமத்தும். எனவே மற்றவரைப் புண்படுத்தாமல் இருக்க வழியே இல்லை. மேலும் கம்மம் (கர்மம்) என்றும் ஒன்று இருக்கிறது. வாழ்க்கையில் எப்போதேனும் யாரோ ஒருவரைச் சந்திக்கிறோம். அவர்களுடன் ஒரு விசித்திரமான உறவு. எப்படித்தான் இவருடன் இந்த உறவு உண்டாயிற்றோ? எங்களுக்குள் கருத்துப் பரிமாற்றமே செய்துகொள்ள முடியவில்லையே! என்னால் ஒருவரிடம் (மூன்றாவது மனிதர்) பேசிக்கொள்ள முடிகிறது. அவராலும் இவரிடம் பேசிக் கொள்ள முடிகிறது. ஆனால் எங்களுக்குள் எதையும் பேசிக் கொள்ள முடிவதில்லையே? ஒருவர் காலை மற்றவர் மிதித்துக் கொண்டே இருக்கின்றோம். எங்களுக்குள் எப்போதும் சண்டையும், சச்சரவும் மட்டுமே மிஞ்சுகிறது.
'ஆயிரம் நண்பர்களைக் கொண்டவனுக்கு அவர்களில் ஒருவரைக்கூட இழக்க விருப்பமில்லை. ஆனால் ஒரே ஒரு விரோதி இருந்துவிட்டால் காணுமிடமெங்கும் அவரையே சந்திக்கின்றோம்,' என்றார் ஒரு கவிஞர் (அலி பின் அபு-தாலிப் என்ற அராபியக் கவிஞர் 600-661). அதாவது ஆயிரம் நண்பர்கள் இருந்தும் அவர்களில் ஒருவரையும் விடாமல் எப்போது மீண்டும் அவர்களை சந்திப்போன் என்ற எதிர்பார்ப்பொடு இருக்கிறோம். ஆனால் ஒரே ஒரு விரோதி இருந்து விட்டாலும், அவரை சந்திக்க விரும்பா விட்டாலும், எங்கு பார்த்தாலும் அவர் தோன்றுகிறார். அவரை (எதிரியை) நேரடியாகச் சந்திக்கவில்லையென்றாலூம், எண்ணங்கள் அவரைச் சுற்றிச் சுற்றியே எழுகின்றன. மனத்தில் தோன்றுகிறார். ஏதோ எண்ணப்போக்கு மனத்தில் ஓடிக்கொண்டிருக்கையில் திடீரென்று அவர் தோன்றுகிறார். ஆகவே தவறான எதிர்பார்ப்புகளுடன் இருக்கவேண்டாம். இல்லாவிட்டால் ஏமாற்றம் உண்டாகும்.
நீங்கள்,
'நான் ஒரு சாதுவாக இருக்க வேண்டும்.. சாதுக்களுக்கு மற்றவரிடத்தே பிரச்சனைகள் உண்டாகாது,'
என்று நினைக்கலாம். இல்லை, இல்லை. அப்படி நினைப்பதும் தவறு. சாதுக்களுக்கு இருப்பது
பொறுமை, அவ்வளவுதான். 'அவன் சாதுக்களின் பொறுமையையே சோதிப்பவன்..' என்று மக்கள் சொல்வதைக்
கேட்டிருக்கின்றோம். ஆக சாதுக்கள் அடிக்கடி சோதிக்கப்படுபவர்கள். நீங்கள் சாதுவாக இருப்பதால்
மற்றவர்கள் அனைவரும் சாதுக்களாக இருக்கப் போவதில்லை.
எனது பதில் உங்களை மகிழ்விக்கும் என்று சொன்னேனல்லவா! எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த தோல்விகளைப் பற்றியே நினைக்கின்றனர். தாங்கள் நன்கு தியானிப்பவராக மட்டும் இருந்துவிட்டால் இந்தச் சொந்தப் பிரச்சனைகளெல்லாம் நிகழாது என்று நினைக்கின்றனர். ஆனால், இப்படி நினைப்பது சரி இல்லை.
<.. கூட்டத்தில் இருந்த ஒருவர் எதோ சொல்கிறார். அது சரியாக பதிவுக் கருவியில் பதியவில்லை..>
சரியான பேச்சு: புத்தர் நீங்கள் ஒன்றைச் சொல்வதற்கு முன் இதை நினைத்துப் பார்க்குமாறு கூறினார்: சொல்லப்போவது உண்மையா? அது பயன்தரக் கூடியதா? பயனற்றதென்றால் அதைச் சொல்லவே வேண்டாம். அதாவது நீங்கள் சொல்ல நினைப்பதை மற்றவருக்கு புரிய வைக்கக் கூடிய வாய்ப்பே இல்லையென்றால், அது உண்மையாக இருந்தாலும் அதைச் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. ஒருவரிடம் இதையும், அதையும் தேவையில்லாமல் சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு நீங்கள் சொல்வது புரிகிறதா? அவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? அது முடியாது என்றால் பேசாமல் இருப்பதே நல்லது.
பத்திரிக்கை ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன் படித்த கேலிச்சித்திரம் ஒன்று நினைவுக்கு வருகிறது. சித்திரத்தில் ஒரு மனிதனும் அவனது நாயும் உள்ளனர். அவனுக்கு நாய் மீது ஏதோ கோபம். அவன் நாயைப் பார்த்து வசை பாடுகிறான், "முட்டாள் நாயே! சேற்றில் புரண்டு விட்டு வீட்டுக்குள் யார் உன்னை வரச்சொன்னது? ....." தொடர்ந்து இப்படி அப்படி என்று அதைத் திட்டுகிறான். நாய்க்குக் கேட்பது என்ன? "கச முசா ..கச முசா .." என்ற பொருள் விளங்காத சத்தந்தான் நாய்க்கு கேட்கிறது. அதற்கு ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. அவன் சுத்தமான தமிழில் தான் பேசுகிறான். ஆனால் நாய்க்குத்தான் ஏதும் புரியவில்லை.
இப்படித்தான் மனிதரிடையேயும். நீங்கள் சொல்வது ஒன்று. மற்றவர் புரிந்து கொள்வது வேறொன்று. அது நீங்கள் அவருக்குப் புரியாத வேற்று மொழியில் பேசுவதைப் போலத்தான். இங்கிலாந்துப் பிரதமரான ... கிலேட்ஸ்டோன் என்று நினைக்கின்றேன். அவர் நீண்ட காலம் அரசியலிலும் பிரதம மந்திரியாகவும் நிலைத்து இருந்தவர். அவரிடம், "இவ்வளவு காலம் பிரதம மந்திரியாக உங்களால் நீடிக்க முடிவதன் இரகசியம் என்ன?" என்று கேட்டனர். அவர் சொன்னார், “அரசியல்வாதியின் வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். நரகம் தான் அது. பிரதம மந்திரியாக இருக்க விருப்பப் பட்டால், குற்றங் கூறவும் கூடாது, விளக்கமளிக்கவும் கூடாது," என்று பதிலளித்தார். பெரும்பான்மையானோர் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். குற்றமும் கூற வேண்டாம், விளக்கமும் தர வேண்டாம். வீணாக அலட்டிக் கொள்ள வேண்டாம். எப்போதேனும் யாராவது ஒருவர் உங்களைப் புரிந்து கொள்வார். அவரிடம் சுலபமாகக் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். அப்போது உங்கள் விளக்கங்களைத் தரலாம். மற்றபடி விளக்கம் தராமலிருந்து மகிழுங்கள். பெரும்பாலோர் உங்களைப் புரிந்து கொள்ளப் போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படிப் புரிந்து கொள்வதென்பது நடக்கப் போவதில்லை. கவலை கொள்ள வேண்டாம். இதுதான் உலக இயல்பு. சினிமாவில் தான் மக்கள் எளிதாக கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.
(கற்பனைச் சினிமா வசனம்)
“தந்தையே! உங்களிடம் ஒன்று கூற வேண்டும். உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன்."
"ஓ, மகனே..!"
சரி, சரி. நாம் இறப்பதற்கு முன் இதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டோமென்று மகிழ்ச்சியாய் உள்ளது. ஆனால்… இப்படியெல்லாம் சினிமாவில் தான் நிகழ முடியும்....
எனவே எல்லாம் நன்மைக்கே.. எல்லாம் நன்மைக்கே.. உறவுகளில் ஏற்படும் தோல்விகளைப் பற்றி நினைத்து நினைத்து நொந்து போக வேண்டாம். அதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். கவனத்தை உங்கள் மீது செலுத்துங்கள்.
உங்கள் அறிவு தெளிவு பெறப் பெற மற்றவரிடத்தே உள்ள உறவுகளில் தோல்விகள் அதிகமாகலாம். போகப் போக நீங்கள் செய்யவிரும்பும் செய்கைகளைச் செய்வதற்கும், கூற விரும்பும் கருத்தைக் கூறுவதற்கும் தயக்கமாக இருக்கலாம். மற்றவர்களால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் ஆன்மிக வழிகளை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவற்றை மக்கள் குறைகூறுகின்றனர்.
முற்காலத்தில் நடைபெற்ற சில கதைகளை மனத்தில் நினைவுறுத்திக் கொள்ளுங்கள். ஆன்மீக வாழ்க்கையில் நடை பெற்ற பல கதைகள் உள்ளன. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு கதை உள்ளது. தவறாகப் புரிந்து கொண்டதைப் பற்றிய கதைகள். எனக்கு ஜென் மாஸ்டர் ஹக்குவின் பற்றிய கதை மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ஜப்பானியத் துறவி (ஹக்குவின் இகாகு 1686-1768).
அவர் அன்பு, நிதானம் போன்ற நற்குணங்கள் நிறைந்தவராகப் பாராட்டப் படுகின்றார். தமது புகழ் பெருமை ஆகியவற்றைப் பற்றிக் கவலைப் படாதவர் அவர். தமது மாணவர்களால் அவர் மிகவும் தூய்மையானவர் என்று கருதப் பட்டவராகவும், போற்றப் பட்டவராகும் இருந்தார். ஒரு விகாரையில் அவர் தங்கியிருந்தார்.
அவரது விகாரையின் அருகே ஒரு காய் கறிக் கடை நடத்திவந்த தனது பெற்றோர்களுடன் ஒரு அழகிய இளம் பெண் தங்கியிருந்தாள். ஒரு நாள் எந்த அறிகுறியும் இல்லாமல் அவள் கற்பமுற்றிருந்ததை அவள் பெற்றோர்கள் கண்டனர். இதனால் அவள் பெற்றோர்கள் மிகவும் கோபங்கொண்டனர். ஆனால் அவள் தனது காதலன் யார் என்பதைச் சுட்டிக் காட்டவில்லை. பெற்றோரின் தொல்லை தாள முடியாமல் இறுதியாக அந்தப் பெண் தான் கருவுற்றதற்கு ஹக்குவின் தான் காரணம் என்று கூறினாள். குழந்தையும் பிறந்துவிட்டது.
ஆத்திரமுற்ற பெற்றோர் அந்தப் பிஞ்சுக் குழந்தையுடன் நேராக விகாரையின் தியான மண்டபத்துக்குள் நுழைந்து தியானம் நிகழும்போதே ஹக்குவினை நோக்கிச் சென்றனர்.
"இதோ, இது உன்னுடைய குழந்தை," என்று கூறிக் குழந்தையை அவரிடம் கொடுத்தனர்.
"அப்படியா?" என்று மட்டும் அவர் கூறினார். அதற்குப் பல பொருள் கூறிக் கொள்ளலாம். ஆம் என்றும், இருக்கட்டும் என்றும், இம்ம்ம்ம்... என்றும் எப்படிவேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவர் வேறு ஒன்றும் கூறவில்லை. அவர் குழந்தையைப் பெற்றுக் கொண்டார். பெற்றோர் கோபத்தோடு வெளியேறினார்கள். அந்தக் குழந்தை தமது இளம்வயது மகள் சமீபத்தில் பெற்றெடுத்த குழந்தை. ஹக்குவின் தனது மாணவர்களிடமும் எதையும் விளக்கவில்லை.
அடுத்த நாள் விகாரை வெறிச்சோடிக் கிடந்தது. அவரது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் அவமானப்பட்டுக் கோபத்துடன் வெளியேறி விட்டனர். அவர்கள் அவரை இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர் என்று நினைத்திருந்தனர். ஏமாற்றத்துடன் விகாரையை விட்டுச் சென்று விட்டனர்.
அக்காலத்தில் ஜப்பானிலும் துறவிகள் பிட்சா பாத்திரத்துடன் வீடு வீடாகச் சென்று உணவு கேட்டு யாசிப்பது வழக்கம். ஹக்குவினும் அவ்வாறே உணவு பெறுவதற்குச் சென்றார். அந்தக் குழந்தைக்கும் உணவு தேவைப்பட்டது. அவர் மேலங்கியின் ஒரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டு மற்ற கையில் பிட்சா பாத்திரத்தை ஏந்தியபடி யாசித்தார். ஒவ்வொரு நாளும் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று தனக்கு உணவும், குழந்தைக்குப் பாலும் கேட்டுச் சென்றார். மிகவும் தர்மச்சங்கடமான சூழ்நிலை. ஆனால் அவர் குழந்தையை நன்கு கவனித்துக் கொண்டார். அதன் உடைகளை தேவைபடும்போது மாற்றுவார். அதற்கு உணவு கொடுப்பார். பின்னர் தனது வெறிச்சோடிக் கிடந்த விகாரைக்குத் திரும்புவார்.
அவர் புகழ், பெருமை ஆகியவற்றை இழந்தும் அதைப் பற்றி அவர் சங்கடப் படவில்லை. குழந்தையை நன்கு கவனித்துக் கொண்டார். குழந்தைக்கு வேண்டிய பால் மற்றும் அனைத்துத் தேவைகளையும் அருகில் வாழ்ந்தவர்களிடம் பெற்றுக் கொண்டார்.
ஒரு வருடம் கழிந்த பின்னர் அந்த இளம்பெண்ணால் துறவியின் மீது தான் கூறிய அபாண்டமான பழியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குழந்தையின் உண்மையான தந்தை மீன் சந்தையில் வேலை செய்துவந்த ஒரு இளைஞன் என்ற உண்மையைத் தனது பெற்றோரிடம் கூறிவிட்டாள்.
திடுக்குற்ற பெற்றோர்கள், "என்ன! நாம் அவருக்கு எத்தகைய தீங்கிழைத்து விட்டோம் என்பதை நினைத்துப் பார்த்தாயா! நாங்கள் விகாரைக்குச் சென்று அவரிடம் குழந்தையைப் பலர் முன்னிலையில் கொடுத்தோம். அவரும் பெற்றுக் கொண்டார். அவரும் ஒன்றும் சொல்ல வில்லையே!"
அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும் உடனே விகாரைக்குச் சென்று ஹக்குவினிடம் மன்னிப்புக் கோரினர். நீண்ட நேரம் தாங்கள் செய்த பெருந்தவற்றைப் பற்றிச் சொல்லிச் சொல்லி வருந்தினர். பின் குழந்தையைத் திருப்பிக் கேட்டனர்.
ஹக்குவின் அப்போதும், "அப்படியா!" என்று மட்டும் கூறி மனமுவந்து குழந்தையைத் திருப்பித் தந்தார்.
இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. எல்லோரும் அவரைப் பற்றித் தாழ்வாக நினைத்திருந்தனர். பின் அவரது சீடர்கள், "ஓ, அந்தப் பொய்யை நாமும் நம்பிவிட்டோமே!" என்று வருந்தி முழங்காளிட்டபடி தலை தாழ்த்தி மீண்டும் விகாரைக்கு வந்து சேர்ந்தனர்.
ஏன் அவர் குழந்தையை ஏற்றுக் கொண்டார்? ஏன் அவர் மறுப்பேதும் கூறவில்லை?... ஏனென்றால் அவர் விரைவாக இப்படிச் சிந்தித்தார். "அவள் ஏன் என் பெயரைக் குறிப்பிட வேண்டும்? உண்மையான தகப்பன் பெயரைச் சொன்னால் அவள் கடும் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்திருக்கலாம். எனவே நான் அவள் கூற்றை மறுக்கப் போவதில்லை. பிரச்சனையில் அவள் சிக்கிக் கொள்வதில் எனக்கு விருப்பமில்லை. எனது புகழ் குலைந்து போவது பற்றியும் எனக்குக் கவலை இல்லை. மக்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். நான் நிரபராதி. நான் குழந்தையைக் கவனித்துக் கொள்வேன்." எனவே அவர் குழந்தையை ஏற்றுக்கொண்டு அதைக் கவனமாக வளர்த்தார். குழந்தையைத் திரும்பப் பெற அவர்கள் வந்த போதும் அவருக்குப் பிரச்சனை ஒன்றும் இல்லை. அவர் அந்தக் குழந்தையிடம் அன்பு காட்டினாலும் அதனிடம் பற்றுக் கொள்ளவில்லை. அதை நன்கு கவனித்துக் கொண்டார். அதனால் தயங்காமல் குழந்தையைத் திருப்பிக் கொடுத்து விட்டார். வருவதும், போவதும் சகஜம். அவர் யாரையும் குறை கூறவும் இல்லை. எல்லோரும் அவரது நடத்தையால் பாடம் கற்றுக் கொண்டனர். அவரைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியும் அவர் கவலைப் படவில்லை. எனவே அவருக்கு பிரச்சனை எதுவும் இல்லை.
எனவே அடுத்த முறை உங்களுக்கு யாரிடமாவது மனஸ்தாபம் ஏற்பட்டால், யாராவது உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு உங்களைப் பற்றி இழிவாகக் குறை கூறினால், நீங்கள், 'அப்படியா!" என்று மட்டும் சொல்லுங்கள். குற்றமும் கூறவேண்டாம், விளக்கமும் தர வேண்டாம். அந்தக் குற்றச் சாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள். காலப்போக்கில் அது தானாகத் தெளிவடைந்துவிடலாம். அல்லது அது தெளிவாகாமலும் இருக்கலாம். ஹக்குவினை நினைத்துக் கொள்ளுங்கள். கருணையுடனும், நிதானத்துடனும் இருப்பதுதான் முக்கியம். மற்றதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஹக்குவின் ஒரு சிறந்த வழிகாட்டி.
இதற்கிணையான மிகச் சுவாரஸியமான வியட்நாமியக் கதை ஒன்று உள்ளது.
இந்தக் கதையிலும் ஒரு விகாரையில் வாழ்ந்த துறவி மீது அந்தக் கிராமத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு அவரே தந்தையெனெக் குற்றம் சுமத்தப்படுகிறது. அந்தப் பிக்கு மிகவும் நல்லவர். அந்த விகாரையின் தலைமை பிக்கு மிகவும் ஆச்சரியப்பட்டார். அந்தக் குற்றம் சுமத்தப்பட்ட துறவி சிறப்பாகப் பயிற்சி செய்பவர். குற்றம் சுமத்தப் பட்டபோது அந்தத் துறவி அதை மறுக்கவும் இல்லை. ஆட்சேபிக்கவும் இல்லை. அவர் இனிமேல் துவராடை அணிந்து துறவியாய் இருக்க முடியாது. ஆனால் அவருக்கு வேறு போக்கிடம் இல்லாததால் விகாரையின் பின்புறத்தே ஓர் இடத்தில் தங்க அனுமதி அளித்தனர். அங்கு தங்கிச் சாமானியர் அணியும் உடையில் குழந்தையைப் பார்த்துக் கொண்டார். அதுவே ஒரு அவமானகரமான வாழ்க்கைதான். எப்படியோ, அந்த முன்னால்-துறவியும் அந்தக் குழந்தை, இருபது ஆண்டு இளைஞனாகும் வரை கவனத்தோடு வளர்த்து விட்டார். வளர்ந்த குழந்தை விகாரையை விட்டுச் சென்று விட்டது. அந்த முன்னால் துறவியும் காலப் போக்கில் வயதாகிப் பின் இறந்து விட்டார். உடலைத் தகனம் செய்வதற்குத் தயார் செய்ய எடுத்துச் சென்ற போது தான் அந்த முன்னால் துறவி உண்மையில் ஒரு பெண் என்பது தெரிய வந்தது. அவர் ஆண் இல்லை. எனவே அவர் அந்தக் குழந்தைக்குத் தந்தையாக இருந்திருக்க முடியாது. அவர் துறவியாக விருப்பப் பட்டார். ஆனால் பெண் துறவியாவதற்கு அப்போது வாய்ப்பே இல்லை. எனவே ஆண் வேடத்துடன் துறவறம் பூண்டு பின் ஒரு குழந்தைக்குத் தகப்பன் என்று பொய்க் குற்றம் சாட்டப் பட்டார். அதை மறுக்கவும் முடியவில்லை. மறுப்புக் கூறி, ‘அந்தக் குழந்தைக்கு நான் தகப்பனாக இருக்க முடியாது, ஏனென்றால் நான் ஒரு பெண்,' என்று தெளிவாக்கியிருந்தால் தனது வேடம் கலைந்திருக்கும். எனவே குழந்தையை ஏற்றுக் கொண்டதோடு, பழியையும் ஏற்றுக் கொண்டார். அவர் ஆண் இல்லாததால் குழந்தைக்குத் தந்தையாக இருந்திருக்க முடியாது என்பதும், அவர் உண்மையிலேயே ஒரு நல்ல துறவி என்பதும் பின்னால் தான் தெரிய வந்தது. இதுதான் அந்த வியட்நாமியக் கதை.
எனவே உலகத்தில் என்ன நிகழ்கின்றது என்பது யாருக்குத் தெரியும்? இதே சூழ்நிலையை நாம் ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டியிருக்கலாம். எல்லோரும் இவர் இப்படிப்பட்டவர், அவர் அப்படிப்பட்டவர் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது வாழ்க்கையின் ஓர் அங்கம். இந்தக் கதைகளை நினைவில் வைத்துக் கொண்டு மேன்மையானோர் இச்சூழ்நிலைகளை எப்படிச் சமாளிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சிலர் குற்றம் சுமத்தப்பட்டால் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். அவர்கள் மாயையில் (அறியாமையில்) மூழ்கி இருக்கின்றனர். அவர்கள் தங்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர்களைப் பற்றி யாரும் குறை கூறக்கூடாதென்றும் நினைக்கின்றனர். குற்றம் கூறப் பட்டால் சிதைந்து விடுகின்றனர். இது போன்ற முட்டாள் தனமான எதிர் மறைச் செயலெல்லாம் உலகம் தங்களை எப்போதும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதால் தான் நிகழ்கிறது.
உறவுகள் பற்றி நான் சொல்ல நினைப்பது இதுதான்.
--பிக்கு
அஜான் சோனா.
உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசுவார்தம் உறவு கலவாமை வேண்டும் என்ற வேண்டுதல் வள்ளலாருக்கு கிடைத்ததா?
கிடைக்கவில்லை. இறுதியில் மானமெல்லாம் போனவழி விடுத்தேன்… என்று தம்மை சமாதானம் செய்துக்கொண்டு
தமது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டார் வள்ளலார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.