Saturday, March 4, 2017

கர்ம காரியங்கள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

கர்ம காரியங்கள்

வழி வழியாக நாம் செய்கின்ற அனைத்து வகையான சடங்குகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது வள்ளலாரது சன்மார்க்க போதனையாகும். நாம் சடலமாக ஆவதற்கு இந்த சடங்குகளே காரணமாக இருக்கின்றது. சடங்குகள் இயற்கை விளக்கத்தை தடுக்கின்றது. சடங்குகள் இயற்கை இன்பத்தை தடுக்கின்றது. சடங்குகள் இயற்கை உண்மையை தடுக்கின்றது. சடங்குகள் அன்பு/கருணை/அருளினை தடுக்கின்றது. எனவே சடங்குகளை தடுப்பதே சுத்த சன்மார்க்கமாக இருக்கின்றது.

        அப்படிப்பட்ட சடங்குகளில் நாம் மிக முக்கியமாகக் கருதி செய்பவற்றுள் இறந்தாருக்கு செய்ய வேண்டிய கர்ம காரியங்களும் (திவசம்/திதி) ஒன்று. தந்தை இறந்த பிறகு தர்ப்பணம் செய்யும் கடமை மகனுக்கு உள்ளதாக சாத்திரங்கள் கூறுகின்றன. அப்படி செய்யப்படும் தர்ப்பணங்கள் தந்தை வழியில் முன் தோன்றிய முன்னோர்கள் ஆறு பேருக்கும் தாய் வழியில் முன் தோன்றிய ஆறு பேருக்கும் சேர்த்து மொத்தம் பன்னிரண்டு பேருக்கு செய்ய வேண்டுமென சாத்திரங்கள் விதித்திருக்கின்றன. அதாவது மூன்று தலைமுறைக்கு செய்ய வேண்டுமென்பது சாத்திர நியதி. வருடம் ஒருமுறை செய்வதைத் தவிர அமாவாசை, மகாளயபட்சம், மாதப்பிறப்புகள், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஆகிய நாட்களில் செய்யப்படும் தர்ப்பணங்களும் இந்து மக்கள் பயபக்தியுடன் செய்துவருகின்றனர்.

வள்ளற்பெருமான் சாத்திரங்களை எதற்கும் உதவாத ‘குப்பை’ என்று கடுமையாக சாடுகின்றார். சாத்திரங்கள் கூறும் சடங்குகளை செய்வது மனிதனது மிகப்பெரிய அறியாமைகளுள் ஒன்று. பிறப்பு முதல் இறப்புவரை ஐயர் கூறும் சமஸ்கிருத சடங்குகளில் நாம் பூரித்து போகின்றோம். நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், ஏதோ நாம் வழக்கமாக செய்யும் சடங்கினை முடித்துவிட்டோம் என்ற நிம்மதி நமக்குக் கிடைக்கின்றது. நாம் செய்யும் திவசத்தால் நமது தந்தை/தாயின் ஆன்மா நல்ல படியாக இருக்கட்டும் என்ற நல்லென்னத்தில் நாம் இந்த தவற்றினை செய்து வருகின்றோம்.

இப்போது இறந்த பின்பு நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

“யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா அபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மனே ஸ்வாஹா ரங்கராஜ சர்மனே அஸ்மது பித்ரே இதம் நமம கிருஷ்ண கிருஷ்ண…”

இந்த மந்திரத்தின் பொருள், என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாத என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கின்றது.

உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம். நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த ‘புனித மந்திரம்’ சொல்கின்றது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினைக்க வேண்டாம். சமஸ்கிருத மந்திரம் எம் தமிழினத் தாய்க்கு திவசம் செய்கின்ற போதும் வஞ்சகத்தோடுதான் மந்திரம் இயற்றப்பட்டுள்ளது. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதோ,
“என்மே மாதா ப்ரவது லோபசரதி அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம…”

இதன் பொருள், என்னுடைய அம்மா யாருடன் படுத்து என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் சென்று சேரட்டும்.

உண்மையில் இந்த மந்திரம் பொருளற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார்? என்று கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால்? என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்பு படுத்தலாம். ஆனால் தாய்க்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் இந்த புனித மந்திரம் அப்படித்தான் சொல்கின்றது.

சமஸ்கிருத சடங்குகளை மகிழ்ந்து போயிருக்கும் எம் தமிழினங்களே, சமஸ்கிருத சடங்கு உங்கள் அம்மாவை ‘நம்பத்தகாதவள்’ என்கின்றது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கின்றது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கின்றது. மதங்களையும் சடங்குகளையும் உண்மை என நம்பும் மக்களுக்கு இதைவிட கேவலமான செய்தியை நாம் சொல்ல வேண்டியதில்லை.

நமது வீட்டில் நமது முன்னோர்கள் இறந்துவிட்டால், திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுவோம். பிறகு ஜோதி வழிபாடு நடத்திவிட்டு வேறு எவ்வித சடங்குகளும் செய்யாது பிரேதத்தை ஒரே நாளில் இடுகாட்டில் புதைக்க வேண்டியது. புதைக்கும்போது திருவருட்பா ஓதினால் போதும். அங்கேயும் வேறு எவ்வித சடங்கினையும் செய்யக்கூடாது. பிறகு எல்லோருக்கும் நேரிட்டவர்களுக்கு அன்ன விரயம் நம்மால் முடிந்தவரை செய்ய வேண்டியது மட்டுமே நமது இறுதி காரியமாக இருக்க வேண்டும். ஐயர் பெருமக்களை நாம் எந்த வகையிலும் பயன்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். ஐயர் பெருமக்களோடு எமக்கு காழ்ப்புணர்ச்சி ஏதும் கிடையாது. ஆனால், அவர்கள்தான் சடங்குகளின் கர்த்தாக்களாக இருக்கின்றார்கள் என்பதால் அவர்களை முற்றிலும் தவிர்ப்பது சன்மார்க்கத்துக்கு நல்லது.  

மகான் கபீர் தாசர், புத்தர், மகாவீரர், நமது தமிழ்ச் சித்தர்கள் போன்ற நமது நாட்டில் பிறந்த பெரியவர்கள் எல்லோரும் இப்படிப்பட்ட சடங்குகளுக்கு இடம் தருவதே இல்லை. வள்ளற்பெருமானும் இதனை கடுமையாக சாடுகின்றார். நாம் செய்கின்ற இந்த சடங்கினால் நமது தாய் தந்தையின் ஆன்மாக்கள் இன்பமோ, துன்பமோ அடைவதில்லை. அவரவர்கள் உடம்பெடுத்து வாழ்ந்தபோது அவரவர்கள் செய்த நல்ல, தீய செயல்களுக்கு தகுந்தவாறு அந்தந்த ஆன்மா இன்பத் துன்பங்களை அடைகின்றன என்பதனை தெரிந்துக்கொள்ள வேண்டும்.  எனவே கர்ம காரியங்கள் செய்வதை சன்மார்க்க மக்களாகிய நாம் முற்றிலும் விட்டுவிவோம். இப்படிப்பட்ட கண்மூடி வழக்கங்களை மண்மூடி புதைக்க சபதம் ஏற்போம்.

தாய் தந்தையர் நினைவு தினங்களில் ஆண்டுதோறும் அன்ன விரயம் செய்து ஜோதி வழிபாடு மட்டும் செய்ய வேண்டியது நமது கடமை எனக் கொள்வோம். இதனையும் சடங்காக நினைத்துச் செய்ய முற்படாமல், முடிந்தால் செய்யுங்கள்… அல்லது தாய் தந்தையரின் நினைவு தினங்களில் அவர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டாலே போதும். இதன் உண்மை நாம் இறந்து ஆன்மாவாக இருக்கும் போது நமக்குத் தெரியவரும். அப்போது தெரிந்து என்ன செய்வது? இப்போதே தெரிந்துக்கொண்டு உண்மையின் வழியில் நடைபோடுங்கள்.
         
தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
        சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
        பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்…(4726)


                                        ---தி.ம.இராமலிங்கம்.

9 comments:

  1. அருமையான விளக்கம் நன்றிஅய்யா

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  2. திதி மந்திரம் : அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இது

    என்மே மாதா ப்ரவது லோபசரதி
    அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
    பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
    அவபத்ய நாம....


    பொருள்: “யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ, அது அம்மாவுக்குத் தான் தெரியும். அந்த நம்பிக்கையில் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகின்றேன். அப்படிப்பட்ட அந்த அம்மாவிற்கு இந்த ஆஹுதி போய் சேரட்டும்”

    "...ப்ரலுலோப சரதி ..." யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும் என்பது பொருள். எவ்வளவு அழகான, தெளிவான,குறிப்பான மந்த்ரம்? இதை இவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்களே?

    அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும் என்பதில் இந்த மந்திரம் காட்டும் அக்கரையைக் கண்டு வியக்கவேண்டாமா?

    அப்படிச் சரியானவனுக்குப் போய்ச்சேர்ந்தால் அல்லவோ, இந்த மகனுக்கு பித்ரு கடன் தீரும்?!

    இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்

    யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
    தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
    பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
    ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
    கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண

    “யாருடைய சுக்லத்தினால் நான் பிறவி பெற்றேனோ அந்த என்னைப் பெற்ற தந்தைக்கு இந்த ஆஹுதி போகவேண்டும். அந்தக் குறிப்பிட்ட தன்னைப்பெற்ற தகப்பனுக்கு இந்த ஆகுதி பலிதமாகவேண்டும்”

    மேலும் இந்த மந்திரத்தைச் சொல்லி கோத்திரத்தையும், பெயரையும் சொல்கிறோம், பல இடங்களில் மறந்து போயிருக்கும். தாத்தா, கொள்ளுத் தாத்தா பெயர் பலருக்குத் தெரியவில்லை, இதனால் பெயரும், கோத்திரமும் கூட தவறாகப் போவதற்கு வாய்பிருக்கிறது, ஆனால் நான் பிறப்பதற்கு யார் காரணமோ அவனுக்கு இந்த ஆகுதி போய்ச் சேரவேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது?

    தர்மரிடம் ஒரு அயோக்கியனைக் காண்பிக்கும்படி கேட்டார்களாம் அவர் - என் கண்ணுக்கு ஒருஅயோக்கியன்கூடத் தென்படவில்லை என்றாராம். துரியோதனனிடம் -ஓரு நல்லவனைக் காண்பிக்கும்படிக் கேட்டார்களாம், அவன் - ஒரு நல்லவன்கூட என் கண்ணுக்குப் புலப்படவில்லை என்றானாம்.

    ReplyDelete
    Replies
    1. இந்தமந்திரங்களை இழிவுசெய்து சடங்குகளை தடைசெய்ய சென்னவர்களிள் முதல் நபர் கபீர்தாசர் .அருமை வேற்றுமதத்தை சேர்ந்தநாய்கள் நம்சடங்கை கேவளபடுத்துவதை வாள்ளார்பேயரில் பதிவுசெய்யும் ராமலிங்கம் போண்ற இடதுசாரி ஜந்துக்களை

      Delete
    2. கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடிப் போக... திவஷம் போன்ற இறப்பு சடங்குகள் எல்லாம் தேவையில்லை என்பது வள்ளற்பெருமானின் புரட்சி கருத்து. தேவையானவர்கள் அதனை பின்பற்றவும். மாற்றார்கள் பழைமையை தொடரலாம். அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  3. அருமை கேசவ தாஸ் அவர்களே

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  4. இங்கே வார்த்தை பிரவாகம் தான் சரியாக இல்லை.
    ஏனெனில், கொடுப்பதோ தன் தந்தையின் திதி அப்புறம் ஏன் யாருடைய சுக்கிலத்தில் பிறந்தேனோ அவருக்கு என்று வர வேண்டும். தீர்க்கமாக என்னுடைய தந்தை என்றானபிறகு என்னுடைய தந்தையான தங்களுக்கு என்றுதானே வரவேண்டும்.
    அதே போல் தாயின் திதியிலும் அப்படித்தான்.
    நமக்கு தெரியாத மந்திரங்களை சொல்வதைவிட திருறைகளை சொல்லி செய்வது சால சிறந்தது.
    அன்றய தினத்தில் அன்னதானம் செய்வது நாம் முன்னோர்களுக்கும் நமக்கும் நல்லது.
    திருமண நிகழ்ச்சிகளிலும் திருமுறைப்படி செய்வது மிகவும் நல்லது.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.