Saturday, March 4, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னூலில் மார்ச்-2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை
தி.ம.இராமலிங்கம்.

எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி       - 16

இவ்வுலகம் உருண்டை வடிவம் கொண்டதாக உள்ளது. இவ்வுருண்டையில் அமைந்துள்ள கடலும் அதே உருண்டை வடிவத்தில் உள்ளது. இதனுடைய ஆழத்தை இன்னும் மனிதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் எல்லை எதுவென சொல்லமுடியாத வண்ணம் தொடக்கம் எதுவோ அதுவே முடிவாகவும் இருந்துக்கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட பெரிய கடலையே இருங்கடல் என்கிறார் வள்ளலார்.

பிறப்பெனும் பெருங்கடல் என்று கூறியிருக்கலாமே? ஏன் இருங்கடல் என கூறவேண்டும்? என்றால் இலக்கணம் கருதி இருங்கடல் என்று சொல்லப்பட்டுள்ளது.

இருங்கடல் என்பது இடத்திற்கு தக்க பொருளை வழங்கக்கூடியதாக உள்ளது. இரு என்பது இரண்டு, பெரிய, கருமை, பெருமை என்றெல்லாம் பொருளைத் தருகின்றது.

இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து… (புறநானூறு-201)

பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில்… என்று பொருள் கொள்ளப்படுகின்றது.

        இருங்கடல் கடந்து கரை ஏறினன் – இராமன் (கம்பராமாயணம்)

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கடலினை கருங்கடல் (கரிய கடல்) என்கிறார் கம்பர். இதனை பெரிய கடல் என்று சொல்லமுடியாதல்லவா.

ஆழமும் தொடக்கமும் முடிவும் இல்லாத பெருங்கடலை (இருங்கடல்) பிறப்பிற்கு ஒப்பிட்டு பேசுகின்றார். பிறப்பு என்பதும் இந்த பெருங்கடலைப் போன்று உள்ளது. பிறப்பின் தொடக்கம் என்ன? பிறப்பின் முடிவு என்ன? என்றே தெரியாது இருக்கின்றது. பிறப்பு என்பது தொடக்கம் என்றால் அதுவே முடிவாகவும் இருக்கின்றது. அதாவது ஒரு ஆன்மா பிறவி எடுத்துவிட்டால், அதன் பிறவியானது தொடர்கதையாகி விடுகின்றது. இடையில் வருகின்ற மரணம் என்பது பிறப்பின் தொடர்ச்சியே ஆகும். பிறப்பு என்பது மரணத்தின் தொடர்ச்சியாகும்.
        இப்படிப்பட்ட பிறப்பு என்னும் பெருங்கடலின் எல்லை எதுவென கண்டுபிடிக்க வேண்டும்? அதன் எல்லையினை கண்டுணர்ந்துவிட்டால் நமது பிறவிகள் அற்றுவிடும். வள்ளலார் பிறப்பின் எல்லையினை/முடிவினை கண்டுணர்ந்தார். அது என்ன முடிவு? அது தான் மரணம் அற்று வாழும் பெருவாழ்வு. அந்த பெருவாழ்வுதான் பிறப்பின் எல்லை என குறிப்பிடுகின்றார். அப்படிப்பட்ட பெருவாழ்வு என்கின்ற எல்லையினை அடைந்துவிட்டால் ‘அல்லல்’ என்கின்ற துயரமான மரணம் நீங்கும். மரணம் நீங்கினால், மீண்டும் பிறப்பு என்னும் பெருங்கடலில் நாம் நீந்தவேண்டாம்.

        பிறவி என்னும் பெருங்கடலை வள்ளற்பெருமான் நீந்தி கடந்து அதன் எல்லையினை அடையவில்லை. அதற்கு மாறாக இறைவனே அந்தப் பெருங்கடலில் இருந்து வள்ளலாரை கடத்திச் சென்று அதன் எல்லையான பெருவாழ்வில் விட்டுவிட்டார். எப்படிப்பட்ட மிகவும் சுலபமான அனுபவம் அவருக்கு கிடைத்திருக்கின்றது என்பதை பாருங்கள். இப்படிப்பட்ட எல்லையில் நாமும் மிகச் சுலபமாக அடைந்து மகிழ, நம்மையும் இறைவன் கடத்திச்செல்ல மாட்டானா?  என்று நம்மை ஏங்க வைக்கின்றது… இந்த இரண்டு திரு அகவல் வரிகளும். இப்படிப்பட்ட பிறப்பின் எல்லையினை அடைந்தவர்கள் வள்ளற்பெருமானைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பிறப்பின் எல்லையினை இதுவரை இறைவன் யாருக்கும் காட்டவில்லை. சிலருக்கு காட்டினாலும் அதனை அடைய விடவில்லை. மரணமில்லா பெருவாழ்வு என்கின்ற முடிவினை/எல்லையினை அடைய நாம் பிறப்பென்னும் பெருங்கடலை நீந்தி கடக்க முடியாது, இறைவனே நம்மை கடத்த வேண்டும் என்பது தெளிவாகின்றது.
வள்ளற்பெருமானுக்கு முன்னர் இருந்த பெரியவர்கள் எல்லாம் பிறவாமல் இருப்பதற்காக முட்டி மோதினார்கள், பெருங்கடலை கடக்க நீந்தினார்கள், ஆனால் பயன் ஏதும் கண்டிலர். பிறவா வரம் வேண்டும் என்றுச் சொல்லி இறந்தனர். இறவா வரம் வேண்டும் என்றுச் சொல்லி மறைந்து மீண்டும் பிறந்தனர். விவேக சிந்தாமணியின் பாடல் வரிகளில்கூட இதன் தாக்கத்தை நாம் காணமுடிகின்றது…

        அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
        தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
        குணமதிக மாமருணைக் கோபுரத்துச் செல்வக்
        கணபதியைக் கைதொழுதக் கால்.
                                        (விவேகசிந்தாமணி-1)

        வள்ளற்பெருமான் வருவிக்கவுற்ற காலத்திற்கு பிறகு நாமெல்லாம் பிறந்தது பெருமை. அதுவும் வள்ளலாரை அறிந்திருப்பது அதைவிட பெருமை. அவரின் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுவது எதையும்விட பெருமை. ஏனெனில் நாமெல்லாம் பிறப்பின் எல்லையை அடைய இருக்கின்றோம். அடைவோம்.   
       
ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி – 18

ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களை தமக்கு இறைவன் காட்டியதாக வள்ளலார் இங்கு குறிப்பிடுகின்றார். சைவ சமயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையே வள்ளலார் ஆறாறு என்று குறிப்பிட்டுள்ளார்.

மும்மலங்களில் ஒன்றான மாயையினை இறைவன் இயக்கும்போது இந்த முப்பத்தாறு தத்துவங்களும் படிப்படியாகத் தோன்றுகின்றன. இந்த மாயா மலமானது சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்று மூன்றாக பிரியும். இப்படி பிரிந்த சுத்தமாயையிலிருந்து சிவதத்துவம் ஐந்தும், அசுத்தமாயையிலிருந்து வித்தியாதத்துவம் ஏழும், பிரகிருதிமாயையிலிருந்து ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் ஆக முப்பத்தாறு தத்துவங்கள் மாயையிலிருந்து வந்தன.

நாதம், விந்து, சதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை இவை ஐந்தும் சிவதத்துவமாகும்.

காலம், நியதி, கலை, வித்தை, இராகம், மாயம், ஆன்மா இவை ஏழும் வித்தியா தத்துவமாகும்.

நிலம், காற்று, நீர், தீ, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற தன்மாத்திரைகள் ஐந்தும், பற்றுதல், பதித்தல், படைத்தல், பலுக்கல், கழித்தல் என்ற கன்மேந்திரியம் ஐந்தும்,
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியம் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற அந்தகரணங்கள் நான்கும் என மொத்தம் இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்கள் ஆகும்.

        இந்த முப்பத்தாறு தத்துவங்களும் சேர்ந்துதான் நமது உடலை இயக்குகின்றன. நமது உடலில் நமது ஆன்மாவும் நமது இறைவனும் செயல்படுவது இந்த தத்துவங்களின் வழியில்தான். இந்தத் தத்துங்களை எல்லாம் தனித்தனியே கடந்து முடிவில் தத்துவங்கள் அற்ற நிலையான தத்துவாதீத நிலையை அடைய வேண்டும்.

        தத்துவங்கள் முப்பத்தாறும் கடப்பதே ஒரு மனிதனுக்கு இயலாத காரியம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்ம தத்துவங்களில் ஒன்றிரண்டை கடந்தாலே அவர் இவ்வுலகில் ஞானியாகிவிடுவார். அப்படியிருக்க முப்பத்தாறும் கடந்த மனிதரின் நிலை எப்படிப்பட்டது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
        நாம் முதலில் நமது ஆன்ம தத்துவங்களை கடக்க வேண்டும். பிறகு வித்தியா தத்துவங்களை கடக்க வேண்டும். அதன் பிறகு சிவ தத்துவங்களை கடக்க வேண்டும். சிவ தத்துவத்தின் முடிபான நாத நிலையினை அடைந்தவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. நாத நிலைக்கும் மேற்பட்டு இன்னும் அறுபது தத்துவங்கள் உள்ளன. ஆக தொன்னூற்று ஆறு தத்துவங்களை கடந்தால்தான் இறைநிலை அறிந்து அம்மயமாகலாம் என்பது வள்ளலாரின் அனுபவமாகும்.

        தத்துவங்களை கடப்பது என்றால் என்ன? ஒரு ஆன்மா இவ்வுடலில் இயங்க, மேற்கண்ட முப்பத்தாறு தத்துவங்களும் சாதனங்களாக நம்முடலிலும் இவ்வுடலைச்சார்ந்த இவ்வுலகிலும் தேவைப்படுகின்றன. அப்படிப்பட்ட தேவைகளை ஒவ்வொன்றாக அழித்தலே கடத்தல் என்பதாகும். சித்தம், அகங்காரம், புத்தி, மனம் என்று தொடங்கி இறுதியில் நாதம் என்கின்ற சாதனத்தை அழித்தல் வேண்டும். அவ்வாறு முப்பத்தாறு சாதனங்களையும் தம்மிடமிருந்து விடுவித்தவர் தத்துவங்களை கடந்தவராகின்றார்.

        சித்தம், அகங்காரம், புத்தி, மனம் இவைகளில் ஏதேனும் ஒன்றினையாவது நாம் விட்டுவிட்டு இருக்க முடியுமா? அப்படியிருந்தால் எப்படியிருக்கும்? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். இப்படிக் கேட்பதின் மூலம் ஏதாவது ஒரு தத்துவ சாதனத்தையாவது நம்மால் விடமுடியுமா? என்று பார்ப்போம்.

        இவ்வாறு இதுவரை யார் ஒருவரும் ஏறாத நிலைமிசையில் (மிசை என்றால் உயர்வான இடம்) என்னை ஏற்றி முப்பத்தாறு தத்துவங்களையும் இறைவன் எனக்குக் காட்டினான் என்கின்றார் வள்ளலார். இதுவரை யாரும் ஏறிடாத நிலை என்பது உண்மையா? வள்ளலார் வருவிக்கவுற்றதற்கு முன்பே சைவசமயத்தில்தானே இந்த முப்பத்தாறு தத்துவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க சைவசமய பெரியோர்கள் அதனை அடைந்திருக்க மாட்டார்களா? என்ற வினாவும் இங்கு எழுவது இயல்பு.

        வள்ளற்பெருமானும் சைவ சமயத்தில்தான் முப்பத்தாறு தத்துவங்களும் கூறப்பட்டுள்ளன என்று ஒப்புக்கொள்கின்றார். ஆனால் கூறுவதற்கும் அதனை அடைந்து அனுபவிப்பதற்கும் உள்ள விக்தியாசத்தை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இங்கே நான்கூட முப்பத்தாறு தத்துவங்களை கூறிவிட்டேன். அதனாலேயே நான் அதனை கடந்துவிட்டேன் என்று சொல்லலாமா? இரவிலே நிலவும், பகலிலே சூரினும் கண்ணுக்குத் தெரிவதாக அறிந்து கூறுகின்றோம். ஆனால் அதனை அங்குச்சென்று தொட்டு அறிந்தவர்கள் யார்? இவ்வாறு சூரியனையும் சந்திரனையும் அறிந்து கூறியவர்கள் சைவ சமய பெரியோர்கள் என்றால், அதனை தொட்டு அனுபவித்துக் கூறியவர் சுத்த சன்மார்க்கி வள்ளலார் ஆவார். சூரியனையும் சந்திரனையும் சைவ சமயத்தார்கள் தவிர, வேறு சமய மதத்தார்கள் அறிந்திருக்கவுமில்லை என்று வள்ளலார் சைவ சமயத்திற்கு ஒரு முக்கியத்துவமும் கொடுக்கவே செய்கின்றார்.   

எனவே முப்பத்தாறு தத்துவங்களை நாமும் காணவேண்டுமென்றால் நாம் மேலே ஏறவேண்டும் என்பதைவிட, இறைவன் நம்மை மேலே ஏற்ற வேண்டும் என்பதே இந்த திரு அகவல் வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றது. அப்படி இறைவன் நம்மை மேலே ஏற்றிவிட்டாரெனில் அங்கிருந்து நமக்கு கீழே இந்த முப்பத்தாறு தத்துவங்களும் கைகட்டி நிற்பதை கண்ணாற காணலாம். அப்படிப்பட்ட அற்புதக் காட்சியினை வள்ளலாருக்கே இறைவன் காட்டியுள்ளான். இனி நமக்கும் காட்டுவான்.

ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி     -20

ஐயம் என்கின்ற சந்தேகமும் திரிபு என்கின்ற மாறுபாடான பார்வையும் மனம் சம்பந்தப்பட்டது. இந்த ஐயமும் திரிபும் மனதோடு ஒட்டியே உறவாடுகின்ற எண்ணங்களாகும். மனதைவிட்டு இவைகள் என்றும் நீங்காது. ஒரு பொருளில் உள்ள தேவையற்றவைகளை நீக்கவேண்டுமானால் அதனை அறுத்து நீக்குவது வழக்கம். அவ்வாறே மனதுடன் ஒட்டிய இந்த ஐயமும் திரிபும் அறுத்தே நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மனம் என்பது பொருள் அல்ல. இருந்தாலும் பொருளைவிட மிகவும் பலம்வாய்ந்த மாயை ஆகும். அந்த மனம் என்கின்ற மாயையிலிக்கும் ஐயத்தையும், திரிபுகளையும் அறுக்கும் தொழிலையும் இறைவனே செய்ய வேண்டும். நமது முயற்சியால் நடவாது. ஆனால் அதற்காக நாம் நமது மனதை பக்குவப்படுத்தி வைத்திருக்க வேண்டியது மட்டுமே நமது முயற்சிக்கு உட்பட்டு இருக்கின்றது.

ஐயம் என்பது மிகப்பெரிய விவாதப்பொருளாகும். கடவுள் இருக்கின்றாரா? இல்லையா? இருக்கின்றார் என்றால், அவர் இவரா? அவரா? கடவுள் இருக்கின்றார் என்பது பொய்யா? கடவுள் இருந்திருந்தால் இப்படி நிகழ்ந்திருக்குமா? என்று பல வகையில் சந்தேகம் என்கின்ற ஐயம் நமது மனதை பிடித்து ஆட்டிக்கொண்டே இருக்கும். கடவுள் மீது நம்பிக்கை வருவதற்குக்கூட ஒருவருக்கு ஐயம் மிக அவசியமாகின்றது. நம்பிக்கையும் ஐயமும் ஒன்றே. நம்பிக்கை என்பது நாம் பார்க்காத அனுபவிக்காத ஒன்றினை உண்மை என்று நம்புவது. நாம் நம்புகின்ற உண்மை பொய்யாகக்கூட இருக்கலாம். எனவே நம்பிக்கை என்பதும் ஐயத்திற்கு உட்பட்டதே.

‘நான் வள்ளலாரை நம்புகின்றேன்’ என்று நீங்கள் சொன்னால், அச்சொல் ஐயத்திற்கு உட்பட்டதே. இன்றைய நம்பிக்கை நாளை பொய்த்துப்போகலாம். ‘நானே வள்ளலாராக இருக்கின்றேன்’ என்று உணர்ந்து சொன்னால், அங்கே ஐயம் அறுபடுகின்றது, அறுக்கப்படுகின்றது. ஒருவருக்கு ஐயம் இருக்கும்வரைதான் அவருக்கு புற வழிபாடு தேவைப்படும். ஐயம் அறுந்துவிட்டால் அவருக்கு அவர்தான் தெய்வம் என்ற நிலை வந்துவிடும். ‘அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு’ (5295) என்று வள்ளலார் கூறுவது இப்படித்தான். எனவே இவ்வுலகில் இதுவரை ஏற்படுத்தப்பட்ட மதங்களும் சமயங்களும் அதுசார்பான வழிபாட்டு தளங்கள் எல்லாம் ஐயத்தினால் உண்டானவையே. ஒருவருக்கு ஐயம் அறுபடும்போது இவைகள் எல்லாம் பொய்யாகத் தோற்றமளிக்கும். ஐயம் அறுபட்டவர்களால்தான் மதங்களும் சமயங்களும் பொய் என்று உறுதியாகச் சொல்லமுடியும். ஐயம் அறுக்கப்பட்டப் பின்புதான் வள்ளலாரும், மதங்களையும் சமயங்களையும் பொய் என்று சாடுகின்றார்.

ஈ.வெ.ரா. பெரியார் போன்றவர்களும் பொய் என்றுதானே சொல்கின்றார்கள் என்றால், அவர்கள் சொல்வது ஐயத்தின் பாற்பட்டது. நம்பிக்கையின் பாற்பட்டது. கடவுள் நம்பிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கூறி அதனை பொய் என்கின்றனர். மேலும் விஞ்ஞானத்தின் மூலம் அதனை பொய் எனக்கூறுகின்றார்கள். இந்தவகை மேற்கோள்கள் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது. மனம் சார்ந்தது அல்ல, அகம் சார்ந்ததும் அல்ல, எல்லாம் புறம் சார்ந்தது ஆகும். வள்ளலார் கூறுவது அகம் மற்றும் மனம் சார்ந்ததாகும்.

அடுத்ததாக திரிபு. ஒரு பொருளை தமது அஞ்ஞானத்தால் அதன் உண்மை தன்மைக்கு மாறாக மாறுபட்டு பார்ப்பது திரிபு எனலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நமக்கெல்லாம் உடனே தெரியவருவது, தூரத்தில் இருக்கும் கயிற்றை பாம்பாக எண்ணி பயப்படுவது மற்றும் தூரத்தில் தெரியும் கானல் நீரினை உண்மையான நீர் என நினைத்தல் போன்றவைதான். அந்தகரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவைகளாலே திரிபு காட்சிகள் ஏற்படுகின்றன. நமது ஐம்பொறிகளால் அறியப்பட்ட ஒரு பொருளை மனமானது முதற்கண் பற்றி ஐயுறும். அதன் பிறகு புத்தி அது இதுதான் என்று துணிவைக்கொடுக்கும். அதன்பின் புத்தியால் துணியப்பெற்றதை சித்தம் மீண்டும் மீண்டும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும். அதன்பின் அகங்காரமானது நான் இதனை ஆராய்வேன், நான் இதனை கொள்வேன் என்று செயல்படுத்தத் துவங்கும்.

இவ்வாறு புறப்பொருளாக ஆனாலும் அகப்பொருளாக ஆனாலும் நமது அந்தகரணங்களைக் கொண்டு ஆராய்ந்தால் அங்கு திரிபு காட்சிகளே தோன்றும். உண்மை வெளிப்படாது. அதனால்தான் ஆன்ம அறிவினைக்கொண்டு எதனையும் காண வேண்டும் என்பார் வள்ளலார். ஆன்ம அறிவினால் காணும்போதுதான் ஒரு பொருளின் உண்மை என்னவென நமக்குத்தெரியும். அந்த ஆன்ம அறிவு எப்போது வேலை செய்யுமெனில், அந்தகரணங்கள் என்னும் தத்துவங்களை நாம் கடக்கவேண்டும். அந்நிலையில் நமது மனதில் ஒட்டியுள்ள திரிபு என்னும் குற்றம் அறுக்கப்படும். இந்நிலையில் இறைவன் நிலை இன்னதென்று மிகத்தெளிவாக நமக்கு தெரியவரும். அந்தகரணங்களைக் கொண்டு இறைநிலையை அறிய முற்பட்டதின் விளைவுதான் மதங்கள் சமய மார்க்கங்கள் தோன்றியதற்கு காரணமாகும். இறைவனை திரிபு நிலையில் காண்பதே மத சமய மார்க்கங்களாகும்.

        மனதிலே நிகழும் ஐயமும், திரிபும் என்னவென்று பார்த்தோம்.  ஆனால், உடம்பினுள் ஐயம் என்கிறாரே அதென்ன?

        உடம்பின் ஐயம் என்பது அவ்வுடம்பிற்கு ஏற்படும் மரணமாகும். நேற்றுதான் அவரிடம் பேசிவிட்டு வந்தேன்… இன்று போய்விட்டாரே…! என்று நாமெல்லாம் புலம்புகின்றோம். இதே புலம்பலை நாளை நம்மைப் பார்த்து பலர் புலம்புவார்கள். இவ்வாறு தினம் தினம் நாம் மரண்த்தோடு போராடிக்கொண்டிருக்கின்றோம். அடுத்த நொடி நாம் உயிரோடு இருப்போமா என்பது நிச்சயமில்லை. அந்த நிச்சயமற்ற தன்மைதான் உடம்பினுள் உள்ள ஐயமாகும்.

        ‘இன்றிருந் தவரை நாளைஇவ்
வுலகில் இருந்திடக் கண்டிலேம்…’ (868)

என்பார் வள்ளலார். இப்படிப்பட்ட உடம்பின் நிலையற்ற தன்மையினைத் தான் வள்ளலார் உடம்பினுள் உள்ள ஐயம் என்று கூறுகின்றார். உடம்பின் ஐயத்தை போக்க வேண்டுமானால், நாம் மனதின் ஐயங்களை முதலில் போக்க வேண்டும் என்பதே இத்திரு அகவல் வரிகளின் செய்தியாகும்.

        மரணமில்லா பெருவாழ்வை நான் அடையும் முன்னர், எனது மனதில் உள்ள ஐயமும், திரிபும் இறைவன் அறுத்து எடுத்துவிட்டார் என்கிறார் வள்ளலார்.

        ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
        யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி – 22

        இந்து மதத்திலே மூன்று மதத்தத்துவங்கள் உண்டு. சைவ சமயத்தில் சங்கரர் கூறும் அத்வைதம், வைணவ சமயத்தில் மத்துவர் கூறும் துவைதமும் இராமானுஜர் கூறும் விசிஷ்டாத்வைதமும் ஆகும்.

        ஒன்று: ஆதிசங்கரர் கூறிய அத்வைதமே ‘ஒன்று’ என்று குறிப்பிடப்படுகின்றது. உயிரும் இறைவனும் வெவ்வாறானவை அல்ல. இவை இரண்டும் ஒன்றே. இறைவன் ஒருவனே உண்மைப்பொருள் மற்றவையெல்லாம் நிழல்களே. இதனால் இது அபேதம் என்றாகின்றது. சங்கரர் கூறும் அத்வைதத்தில் உலகமும் இல்லை, உயிரும் இல்லை இருப்பது ஒன்றுதான் அது இறைவன் மட்டுமே.

        இரண்டு: மத்துவர் கூறிய துவைதமே ‘இரண்டு’ என்று குறிப்பிடப்படுகின்றது. இறைவனின் ஒரு அணுவளவு பாகம் உயிரில் இருப்பதால்,  உயிர் என்பது இரண்டாக உள்ளது. அதாவது உயிர் மற்றும் இறைவன் என்று இரண்டாக இருக்கின்றது. இதனை மரத்திற்கும் மரத்திலுள்ள இலைகளுக்கும் உள்ள வேற்றுமையாக இதனை கொள்ளலாம். ‘தன்னுள் இருக்கும் வேற்றுமை’, ஸ்வகத பேதம்’ என்றெல்லாம் இதனை சொல்லலாம்.

        அதேபோல உலகிற்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமையோ மரத்திற்கும் மலைக்கும் உள்ள வேற்றுமை போன்றது. அதாவது இரு பகுப்புகளுக்கு உள்ள வேற்றுமை எனக்கூறலாம். இதனை விஜாதீய பேதம் என்பர். இவ்வாறு இறைவன் உயிர்களுக்குள்ளும் உலகிடையும் தான் வேறாகவே காட்சியளிக்கின்றான் என்பதுவே மத்துவாச்சாரியாரின் துவைதம் விளக்குகின்றது. ஒளியும் இருளும்போல இறைவனும் உயிரும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பது துவைதம். இதனால் இது பேதம் என்றாகின்றது. மத்துவர் கூறும் துவைதம் என்பது உலகமும் உயிரும் தனியானவை, இறைவன் இவற்றிற்கு அப்பாற்பட்டவன். உலகும் உயிரும் இறைவனால் உருவாக்கப்படாத நித்திய பொருள்களாகும்.

        ஒன்றிரண்டு (ஒன்று+இரண்டு=மூன்று): இராமானுஜர் கூறிய விசிஷ்டாத்வைதமே ‘ஒன்றிரண்டு’ என்று குறிப்பிடப்படுகின்றது. 
           
சித்து, அசித்து, இறைவன் என்கின்ற மூன்றும் எப்போதும் சேர்ந்தே இருக்கின்றன என்ற கொள்கையுடையது வைணவ சமயமனான விசிஷ்டாத்வைதம்.

        சித்து என்பது உயிர்கள், அசித்து என்பது உடல்கள் ஆகும். இறைவன் தனிப்பட்டு இருப்பதோடுமட்டும் இராமல், உயிர் மற்றும் உடல்களுடன் என்றும் இணைந்தே இருப்பதால் இறைவனே உயிராகவும், இறைவனே அசித்தாகவும் மற்றும் இறைவனே தானாகவும் இம்மூன்று நிலையில் இருப்பதாக விசிஷ்டாத்வைதம் கூறுகின்றது. இவை மூன்றும் தனித்தனி இயல்புடைய வெவ்வேறு பொருள்கள், என்றாலும் இவைகள் அழிவதில்லை, எக்காலத்தும் இவை மூன்றும் சேர்ந்தே இருக்கின்றன. இதனை தத்துவத்திரயம் என்பர். (திரயம் – மூன்று)  

        இராமனுஜர் கொள்கைப்படி உலகம், உயிர், இறைவன் ஆகிய மூன்றும் உண்மைப் பொருள். உலகம், உயிர் இவைகளில் இறைவன் இரண்டற கலந்திருப்பதால் இவை மூன்றும் (உயிர், உலகம், இறைவன்) இறைவன்தான் என்கின்றார். உலகமும், உயிர்களும் இறைவனுக்கு விசேணங்கள், இறைவன் அவ்விசேணங்களை உடைய விசேஷியம். இந்த விசேணம், விசேஷியம் ஆகிய இரண்டும் சேர்ந்த விசிஷ்டமே இராமானுஜர் பேசும் பரம்பொருளான நாராயணன். அதனாலேயே இவருடைய அத்வைத கொள்கைக்கு விசிஷ்டாத்வைதம் என்று பெயர் வந்தது.

                 மேற்கண்டவாறு ஒன்று எனவும், இரண்டு எனவும், மூன்று எனவும் இறைவன் விளங்குவதை வள்ளலார் ஏற்றுக்கொள்கின்றார். சங்கரர் சொன்னதை மத்துவர் மறுக்கின்றார். சங்கரர் மற்றும் மத்துவர் சொன்னதை இராமானுஜர் மறுக்கின்றார். ஆனால் வள்ளலார் இவர்கள் மூன்று பேரும் சொன்ன தத்துவங்கள் அனைத்துமே உண்மைதான் என்று ஏற்கின்றார். “துவைதமாக இருந்தால் அத்வைதம் தானே ஆகும்” என்று தமது உரைநடையிலும் தெரிவித்துள்ளார். (பக்கம்-398) அதோடு மட்டுமன்றி நான்காவதாக ஒரு தத்துவத்தையும் கூறுகின்றார். இறைவன் பூஜ்ஜியமாகவும் விளங்குகின்றார் என்பதே அது. ‘அன்றென’ என்றால் மேற்பட்ட மூன்று தத்துவங்களையும் மீறி ஒன்றுமில்லாதவராகவும் சூன்யமாகவும் விளங்குகின்றார் என்ற ஒரு புதிய தத்துவத்தினையும் புகுத்துகின்றார். நாம் இத்தத்துவத்திற்கு ‘நிர்வைதம்’ அல்லது ‘பூஜ்யவைதம்’ என்று பெயர் சூட்டலாம். (சூனிய வாதிகளின் தத்துவம் வேறு. நாம் அதனுள் புகவேண்டாம்.)

        இறைவனின் நிலையை ஒன்று, இரண்டு, மூன்று என அடுக்கிக்கொண்டே செல்கிறீர்களே… ஒன்று பிறப்பதற்கு காரணமான பூஜ்ஜியத்தை மறந்துவிட்டீர்களே… என்று சொல்வதுபோல இருக்கின்றது. இவ்வாதத்தின்படி இறைவனானவன் தனது இருப்பை தானே அறியாமல் இருப்பதாகக் கொள்ளவேண்டும்.

        “உருவாய் அருவாய் உருஅரு வாய்அவை
                ஒன்றுமல் லீர்இங்கு வாரீர்…(4396)

இறைவனின் நிலை உருவமாயும், அருவமாயும், உருஅருவமாயும் இருப்பதோடு இந்நிலைகளில் இல்லாத ஒன்றுமில்லாத பூஜ்ஜியமாகவும் இருப்பதாக உரைக்கின்றார். பூஜ்ஜிய நிலையும் அருவ நிலையும் ஒன்றல்ல. ஒரு பொருள் மறைபொருளாக இருந்தால் அது அருவ நிலை. அப்பொருளே இல்லாமல் இருந்தால் அது பூஜ்ஜிய நிலை.

        “தான் கெடுவது அத்வைதம், பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம்” என்று தமது உரைநடையில் வள்ளலார் குறிப்பிட்டுள்ளார். (பக்கம்-398) தான் கெடுவது என்பது நமது மனம் அறும் நிலை. பார்க்கப்படும் பொருளும் கெடுவது என்பது இறையனுபவமும் அறும் நிலை. இந்நிலையே அதீத நிலை. பூஜ்ஜிய நிலை. இப்படிப்பட்ட பூஜ்ஜிய நிலையிலும் விளங்குவது இறைவனே ஆகும்.

        மனம்தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய
        இனமதி ஈனமடி குதம்பாய்
        இனமதி ஈனமடி.


என்ற சித்தர் பாடலும் இதனை நிரூபிக்கின்றது. மனமானது தெய்வத்தை மகிழ்ந்து கொண்டாடினால், அந்நிலையானது (இனம்-நிலை) மதிஈனம் என்கின்றார் குதம்பை சித்தர். மனமும் அது தொழும் தெய்வமும் அறுகின்ற அதீத பூஜ்ஜிய நிலையினை சொல்லாமல் சொல்கின்றார் இச்சித்தர் பெருமான். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.