Sunday, February 18, 2018

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு ஜனவரி - 2018

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் பிப்ரவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு
ஜனவரி - 2018


தேதி விவரம் வரவு செலவு இருப்பு
01.01.2018 இருப்பு கீ/கொ              8,795.50
04.01.2018 திரு.ம.உமாபதி (Trustee) மூலம் வரவு          1,000.00            9,795.50
01.02.2018 திரு.என்.ஆனந்தகுமார் மூலம் நன்கொடை வரவு             312.82          10,108.32


ஜனவரி மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.10,108.32 மட்டும் உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.


          தம்மை யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.

                                                                                           இங்ஙனம்
                                                                                      T.M.Ramalingam
                                                                                              Trustee

சித்தர்கள் பார்வை விண்வெளிப் பயணம்

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் பிப்ரவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

சித்தர்கள் பார்வை
       விண்வெளிப் பயணம்

மனிதன் இன்று மேற்கொள்ளும் விண்வெளிப் பயணம் என்பது பூமியை சுற்றி வருவது மற்றும் நிலவில் கால் பதித்ததை கூறலாம். நிலவுக்கு பயணம் சென்று வந்ததும் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. எனினும் பூமியின் காற்று பகுதியைத் தாண்டி விண்வெளிப் பகுதியில் பூமியை வலம் வந்த வண்ணம் இன்றைய மனிதன் உள்ளான்.

விண்வெளிப் பயணம் போன்று காலப் பயணம் என்ற ஒன்றையும் கூறுகின்றார்கள். காலப்பயணம் என்பது கொள்கை வடிவில் உள்ளது. இது சாத்தியந்தான் என்று ஸ்டீபன் ஹாகின்ஸ் (Stephen Hopkins) கூறுகின்றார். காலப்பயணம் செய்ய அண்டவெளி புழுத்துளை (Worm hole) தேவைப்படுகின்றது. இத்துளை நம்மை சுற்றியே உள்ளதாகவும் ஸ்டீபன் கூறுகின்றார். இதனுள் செல்ல அணு வடிவம் எடுத்து மிகுந்த வேகத்தில் செல்ல வேண்டுமாம். பணயம் முடிந்தவுடன் மீண்டும் சுய உருவம் பெற வேண்டுமாம். கோள்களின் நகர்வை வைத்து காலம் கணக்கிடப்படுகின்றது. பொருள்களின் மாற்றங்களை காலத்தின் நீளம் கொண்டு கணக்கிடுகின்றோம். பொருள்களில் மாற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்தி பார்ப்பது காலப் பயணமாகும். உதாரணமாக 2500-ஆம் ஆண்டு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதனை நமது உடலில் மாற்றம் இல்லாமல் 2500-ஆம் ஆண்டிற்கு சென்று பார்ப்பது. அல்லது கிறுத்து பிறப்பிற்கு முன்னுள்ள காலத்திற்கு சென்று பார்ப்பது. 

நமது தமிழ்ச் சித்தர்கள் இப்படிப்பட்ட காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கோரக்க சித்தர் தாம் செய்த காலப்பயணத்தின் அனுபவங்களை பாடல்களாக சந்திர ரேகை என்கின்ற நூலில் பாடல் 194 முதல் 199 வரை பதிவு செய்துள்ளார். கலியுகத்தின் பிறப்பு முதல் முடிபு வரை நடக்கும் நிகழ்ச்சிகளை இப்பாடல்களில் உரைத்துள்ளார்.

தமது காலப் பயணத்தை கோரக்கர் பதிவு செய்தது போல் விண்வெளிப் பயணத்தை திருமூலர் பதிவு செய்திருக்கின்றார். இதற்கு “கெவுணம் பாய்தல்” என்ற சித்தர் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. வேற்று கிரக வாசிகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்று நாம் இன்று விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் திருமூலர் விண்வெளியில் உள்ள மனிதர்களிடம் பேசியுள்ளார். அவரது பயண விவரங்களை தமது பாடல்களிலும் பதிவு செய்துள்ளார். மேலும் இப்பிரபஞ்சம் 1008 அண்டங்களை உடையது என்ற தகவலையும் கூறுகின்றார்.

விண்வெளி பயணத்திற்கு சிவயோகம் செய்து காய சித்தி அடைந்து உடலை ஒளி உடலாக மாற்ற வேண்டும். இதனால் கணக்கில்லாத வேகத்தில் செல்ல முடியும். மேலும் குளிகை ஒன்றையும் தயார் செய்தார். திரவ பாதரசத்தை அணு மாற்றம் செய்து திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன்பின் உலோகங்கள் ரத்தினங்கள் (உப ரசங்கள் 120) பாசானங்கள் ஆகியவற்றின் அணுக்களை திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து (சாரணை) பாதரசத்தின் நிறையை தங்கத்தின் நிறைக்குச் சமமாக கொண்டு வரவேண்டும். இவ்விதம் ஒரு முறை சாரணை செய்தால் அந்த குளிகைக்குச் ‘சகம்’ என்று பெயர். 14 முறை சாரணை செய்தால் ‘கமலினி’ என்று பெயர். 17 முறை சாரணை செய்தால் ‘சொரூபம்’ என்று பெயர். இந்த கமலின் மற்றும் சொரூப குளிகையினை விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்தினார்கள்.

அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி
தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .
ஒண்டிஇருந்தது  ஓடி நுழை என்றார்
கண்டி கமலினி காணீர் சொரூபமே

சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
தரு வோத்த ஞான சதகோடி சித்தரே

சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே
--   திருமூலர் கருக்கிடை வைத்தியம்  பாடல் 353, 354

பிரபஞ்சத்தைப் பற்றி சிவன் விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது. ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன். சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன். அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகமும் எனது வேகமும் ஒத்துப் போகவேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.

          நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடி வந்து அண்டத்துக்குள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்து அண்டத்துள் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள் இருந்தனர். அங்குள்ள சித்தர் ஒருவரைக் கண்டு பணிவான வணக்கம் சொன்னேன். அந்த விண்வெளி சித்தர் என்னிடம், ‘எத்தனை வகைச் சித்தி செய்து உள்ளீர்கள்?’ என்றார். நான், ‘அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன்’ என்றேன். அதற்கு அவர், ‘இன்னும் நீங்கள் இளமையான சித்தராகவே உள்ளீர்… மேலும் பல சித்திகள் செய்யுங்கள்’ என்றார். பிறகு நான் அங்கிருந்து வெளியேறினேன்.

என்றே நுழைந்தேன்  அயலொரு அண்டத்தில்
கண்டேன்சிததரை கடிபதுமை போல .
தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டது
அண்ட  நிராகாரத்து  அடைந்த பெரியோர்.
    ---பாடல் 356

பெரியோர் தனைகண்டேன் பேராய்  வலம் வந்தேன்
நரியோ மௌனம் மென்று அப்பால் நுழைந்திட்டேன்
பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே.
                      --- பாடல் 357

அதன்பின் வேறொரு அண்டத்தில் நுழைந்திட்டேன். அங்கும் சித்தர்களைக் கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல் இருந்தார்கள். அவர்களைக் கைகூப்பி வணங்கினேன். அவர்கள் மேனியினை தடவிப்பார்த்தேன். அவர்கள் பிடிபடவில்லை. அவர்கள் நிராகரன் என்ற கடவுள் நிலை அடைந்த பெரியவர்கள் என்று அறிந்தேன். அவர்களை வலம் வந்தேன். அவர்கள் மெளன யோகத்தில் இருக்கின்றார்கள். பிறகு அந்த அண்ட உச்சிக்குச் சென்றேன். அங்கிருந்து அடுத்த அடுக்குக்குள் விரைவாய் நுழைந்தேன்.

நுழைந்திடில் அண்டத்தில்  நூல்பார்த்த சித்தர்கள்
அழைந்திடு நூல்சொன்னது  ஆர்தான் எனகேட்டேன்
தனஞ்செய வீசண் தாய்கண்டு சொன்னது
களைந் தேழு லட்சம்  கரைகண்டு பார்த்தோமே 
                                      --- பாடல் 358

பார்த்தோம் என்றிறே பராபர சித்தரே
கார்த்தே இந்நூல்தனை கண்டு சுருக்காததேன்
சேர்த்ததே சுருக்க சிவனாலும் கூடாது
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே
                                       ---பாடல் 359

சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்தி தான் வைத்தர்கேள் ஆயிரம்
பல்லுயிர் பார்க்க பகர்ந்தேழு லட்சமும்
கல்லுயிர் வெட்டுபோல்  காட்டினார் பார்த்திடே
                                         ---பாடல் 360

நான் நுழைந்த அண்டத்தில் சித்தர்கள் நூல்களை படித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம், ‘இந்த நூல்களை எழுதியது யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஈசன் பார்வதியிடம் சொன்ன ஏழு லட்சம் பாடல்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்’ என்றனர். அதற்கு நான், ‘இறைவனுக்கு ஒப்பான சித்தர்களே! ஆராய்ந்து பார்த்தோம் என்கிறீர்கள்… அதனை சுருக்காதது ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இவற்றை சுருக்க ஈசனாலும் ஆகாது… அப்படி யாராகிலும் சுருக்கியிருந்தால் அந்த மகத்துவமான நூல் பற்றி சொல்லுங்கள்’ என்றனர். நான், ‘நந்தி என்பவர் உலகில் பல உயிர்கள் பார்த்துப் பயன் பெற ஏழு லட்சம் பாடல்களைச் சுருக்கி ஆயிரம் பாடல்களாக எழுதி உள்ளார். இது கல்வெட்டில் எழுதியது போன்று தெளிவானது. அதை படித்துப் பாருங்கள்’ என்றேன்.

பார்த்திடு என்றிறே நீர்பார்கும் நூல் எங்குண்டு
தேர்த்து மடக்குந் தச்சன பாகத்தில்
ஆர்த்திடு ஒரு நூற்றுஅறுபதாம் அண்டத்தில்
கோர்த்திடு சித்தர் குலாவிப் படிப்பபதே
                                                 ---பாடல் 361

படிக்கின்ற நூலில் பயனெல்லாம் சொல்லுமோ
படிக்கின்ற நூலில் பாய்சுமோ சாரணை
படிக்கின்ற நூலில் பறித்தான் குருவாமோ
படிக்கும் பதினாறும் பாங்காமோ சித்தரே
                                                 ---பாடல் 362

பாங்காமோ எட்டெட்டும் பலபல சித்தொடு
வாங்காமல் ஆடலாம் மற்றோர்க்கு கிட்டாது
தேங்காமல் தேங்கும் சிவயோக பூரணம்
தூங்காமல் தூங்கும் சொருபத்தை காட்டுமே
                                                 --- பாடல் 363

அதற்கு, ‘அப்படி சுருக்கப்பட்ட நூல் எங்குள்ளது?’ என்றனர். நான், ‘இந்த அண்டம் உள்ள அடுக்கிற்கு முன்பு உள்ள அடுக்கில் 1600-ஆவது அண்டத்தில் உள்ள பூமியில் வசிக்கும் சித்தர்கள் குழுவாக விரும்பிப் படிக்கும் நூல் ‘நந்தி நூல் 1000’ என்பதாகும் என்றேன். பிறகு அவர்கள், ‘இந்த நூல் சிவன் சொன்ன எல்லா பயன்பாடுகளையும் சொல்லுமா? பாதரசத்திற்கு சாரணை செய்து குளிகை ஆக்கும் முறை சொல்லுமா? தங்கத்தை குரு மருந்தாக மாற்றும் முறை சொல்லுமா? சிவன் சொன்ன பதினாறு அத்தியாயங்கள் அதில் உண்டா? என்றனர்.

          நான், ‘இவை அனைத்தும் உள்ளது. மேலும் 64 சித்திகள் பெறும் முறை, பல சித்து என்னும் அபூர்வ செயல் முறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதனை செய்து பயன்பெறலாம். சிவ யோகம் செய்முறை முழுமையாக சொல்லப்பட்டுள்ளது. தூங்காமல் தூங்கும் சொரூப சித்தி என்ற முத்தி நிலை பெறலாம். இது சிவ யோகிக்கு கிடைக்கும் பிறருக்கு கிடைக்காது’ என்றேன்.

காட்டும் மென்றீர் நூலை கைக்குள்ளாறீபேர்சொல்லும்
நாட்டிய வாசிக்கு குருநாத நந்தி தான்
கூட்டினார் சித்தர்க்குக்கொடுத்தார் தான் இந்நூலை
ஆட்டிய மூலர் தான் அறைநத நூல் என்பரே
---பாடல் 364

அறைந்துநீர் சொல்லவோ என்ற திருமூலர்
மறைத்தே மயங்கியே வார்த்தையால் நீர்சொன்னீர்
குறைந்திடுமோ நூலை கொடுத்தாக்கால் பூரணம்
உரைதேழு லட்சமும் ஒண்ணாக் கரிதென்னே
---பாடல் 365

அரிதல்ல காணும் அகப்பட்டால் வாசிதான்
புரிதல்ல மூலத்தில் புகட்டினால் வாசியை
எருதல்ல நந்தி எழுநூறும் ஒணறாகப
பெரிதல்லோ நூலை பேசவறி நீரே
---பாடல் 366

‘சொரூப சித்தியை காட்டும் நூலினை எழுதியவர் பெயர் சொல்லுங்கள்’ என்றனர். நான், ‘எனக்கு வாசி யோகம் சொல்லிக் கொடுத்து இந்த நூல் எழுத குருவானவர் நந்தி என்கின்ற சிவன். அதனை சுருக்கி எழுதி சித்தர்களுக்கு கொடுத்தவர் திருமூலர் என்று சொல்வார்கள்’ என்றேன்.

அதற்கு அச்சித்தர் ‘சிவன் சொன்ன ஏழுலட்சம் பாடலை சுருக்கி எழுதுவது அரிதான செயல். அத்தகைய அருமையான நூலை திருமூலனாகிய நான் எழுதினேன் என்றால் நூலின் பெருமை குறைந்துவிடும் என்று கருதினீர்கள். ஆகையால் நூல் எழுதியவர் பெயரை மறைத்தும் தெளிவாக சொல்லாமல் மயக்கியும் நீர் சொன்னீர்’ என்று சொன்னார்.

பேசுவதற்கு அரிதான நந்தி எழுதிய ஏழுலட்சம் பாடல்களை அவரே சுருக்கி 700 பாடல்களாக எழுதி உள்ளார். மூலாதாரத்தில் இருந்து வாசி யோகம் செய்து வாசி யோகம் சித்தி பெற்றவர்களுக்கு இவ்விதம் சுருக்கி எழுதுவது அரிதான செயல் இல்லை. வாசி யோக சித்தர்கள் பெற்ற உயர்ந்த அறிவால் சிவனின் பாடல்களை புரிந்து அதன் சாரத்தை சுருக்கி விடுவார்கள், என்றார் அச்சித்தர் என்னிடம் கூறினார்.

திருமூலரின் பிரபஞ்ச பயணப் பதிவின் மூலம் சிவ வழிபாடு இப்பூமியில் மட்டுமல்லாது பிரபஞ்சம் முழுக்க இருப்பதையும், மனிதர்கள் எங்கும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும், பிரபஞ்ச மனிதர்களும் தமிழையே பேசுகின்றார்கள் என்பதும் தெளிவுறுகின்றது. மேலும் இந்த பூமியில் முதன் முதலில் பிரபஞ்ச பயணத்தையும், கால பயணத்தையும் செய்து அதனை தமது பாடல்களில்  பதிவும் செய்தவர்கள் நமது தமிழ் சித்தர்களே என்பதில் பெருமிதம் கொள்வோம்.  

மேலும் இப்பிரபஞ்சத்தில் முதல் முதலாக நமது பூமியில்தான் தற்போது அருட்பெருஞ்ஜோதி வழிபாடு இறையருளாள் உண்டாகியது. அதன் மூலம் மரணமிலா பெருவாழ்வு பெற்ற ஒரே மனிதர் வள்ளலார்தான். இவர் காலப்பயணம், விண்வெளிப்பயணம் போன்ற எதனையும் மேற்கொள்ளாமல் இருந்த இடத்திலிருந்தே அனைத்து அண்டங்களிலும் நடக்கும் செயல்களை காண்பதும், அங்குள்ள செயல்களை நடத்தும் வல்லமை பெற்றவர். இவர் அடைந்த மொத்த சித்துகள் எண்ணிலடங்காதவை. ஆடுறு சித்துகள் மட்டும் 647 கோடிகள். மற்றும் கூட்டுறு சித்திகள், அறிவுறு சித்திகள், கரும சித்திகள், யோக சித்திகள், ஞான சித்திகள் என எண்ணற்ற சித்திகளை பெற்று ஐந்தொழிலையும் செய்யும் சித்தினையும் வள்ளலார் பெற்றதை எண்ணி, மற்ற அண்டங்களில் உள்ள சிவ வழிபாடு செய்யும் சித்தர்கள் எல்லாம் தற்போது நமது பூமி உள்ள அண்டத்திற்கு வந்து அருட்பெருஞ்ஜோதி வழிபாடு செய்யும் நமது பூமியில் உள்ள வடலூர் வந்து தரிசித்து, அருட்ஜோதி வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். சித்தர்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கிகள் ஆக விருப்பம் தெரிவித்து பூமியில் பிறக்கவும் ஆவலாக உள்ளனர். 

தற்போது சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நம்மில் அனைவரும், இதற்கு முன்னர் ஏதோ ஒரு அண்டத்தில் சிவ வழிபாடு செய்துக்கொண்டிருந்த சித்தர்கள்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நமது பயணம் மரணமிலா பெருவாழ்வில் இனிதுற முடிய இறைவனை வேண்டுவோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி   



மாதம் ஒரு மகான் – ஸ்ரீ வீர வைராக்கிய மூர்த்தி சுவாமிகள்

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (பிப்ரவரி 2018) வெளிவந்தவை:

மாதம் ஒரு மகான் –

ஸ்ரீ வீர வைராக்கிய மூர்த்தி சுவாமிகள்

திருவண்ணாமலை அருகிலுள்ள சீனந்தல் எனும் ஊரில் ஆதி விஸ்வகர்ம பிராமண மடமான ஸ்ரீ ஜெகத்குரு ஆதி சிவலிங்காச்சாரிய குருபீடத்தின் ஏழாவது பீடாதிபதியே ஸ்ரீ வீர வைராக்கியமூர்த்தி சுவாமிகள் ஆவார் .இவர் இளமையிலேயே ருக்,யசூர், சாம, அதர்வண , பிரணவ எனும் ஐந்து வேதத்தின் தேர்ச்சியும் மற்றைய ஆகம,புராண இதிகாச நூல்களையும் கசடறக் கற்று வல்லுனரானார். இவர் திரிகால சிவபூஜை செய்து செம்பொருட்சோதியின் இன்னருள் பெற்று சிறப்புற வழி நடத்தி சென்றார்.

இவர் இவ்வாறு இருக்கும் போது திருவண்ணாமலை திருநகரை ஓர் மன்னன் ஆட்சி செய்து வந்தான் . அப்பொழுது கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்ந்து கொண்டிருந்தது .அவ்விழாவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வரும்  சமயம் திருவருணையில் உள்ள ஐந்து மடாதிபதிகளும் பல்லக்கில் ஆலய மரியாதையுடன் சுவாமிக்கு பின்னால் செல்வது வழக்கம். அவ்வண்ணமே திருவண்ணாமலையில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு பின்னால் பல்லக்கில் சென்றார்கள் .அது கண்ட மன்னன் சுவாமிஉலா வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் மடாதிபதிகளை பல்லக்கில் ஏற்றி வருவது எதற்காக எனக் கேட்டான் .அது கண்ட அங்கிருந்த அன்பர்கள் அவர்கள் ஆலயத்திற்கு நேரும் இடையூறுகளை நீக்க வல்லவர்கள் . எனவே தான் இவர்களுக்கு இத்தகைய சிறப்பு என கூறினார்கள். அவர்தம் சொல் கேட்ட மன்னன் நன்று இதோ இங்குள்ள கோவிலின் காராம் பசுவை உடல் வேறு தலை வேறாக வெட்டுகிறேன் எனக்கூறி வெட்டினான் .இவர்கள் தெய்வ வல்லமை உடையவராக இருப்பின் இப்ப சுவை உயிர்ப்பிக்கட்டும் .இல்லையென்றால் இந்த சிவாலயத்தை அழிப்பேன் என சீறி ஆவேசமாக ஆணையிட்டு சென்றான்.
இது கண்ட மடாதிபதிகள் பல வகையிலும் காராம் பசுவை உயிர் பெற வைக்க முயன்றனர். முடியாத நிலையில் கருவறையில் உள்ள ஸ்ரீ அண்ணாமலையாரிடம் சென்று முறையிட்டனர். அப்பொழுது அண்ணாமலையார் அசரீரியாக "இங்கிருந்து வடதிசையில் கண்ணுவ மகரிஷி ஆஸ்ரமத்தின் கண் ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்ய குருபீட பாரம்பர்ய ஏழாவது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ வீர வைராக்கியமூர்த்தியை அழைத்து வந்தால் தான் இவ்வரிய பணியினை செய்ய முடியும். எனவே அனைவரும் சென்று அழைத்து வருக" என்று கூறி மலர்ந்து அருளினார் .இது கேட்ட மடாதிபதிகள் திருமூலாரண்ய திவ்ய க்ஷேத்திரமாகிய சீனத்தில் மடாலயம் நோக்கி சென்றார்கள். அப்பொழுது சுவாமிகள் வயது பதினான்கு ஆகும் அவர் தமது நித்திய அனுஷ்டானங்களை மிருகண்டு நதிக்கரையில் முடித்து சிவயோகத்தில் அமர்ந்து இருந்த வேலையில் இரண்டு புலிகள் அவர் இருபுறமும் நின்று காவல் இருந்தன.இது கண்ட மடாதிபதிகள்  நாம் வயதில் மூப்பு எய்தி பூரணத்துவ நிலைக்கு பக்குவப்பட்டு உள்ளோம். ஆனால் இவரோ சிறுவனாக உள்ளாரே, இவரால் எப்படி இச்சீரிய அருஞ்செயலை செய்ய முடியும் என மனதளவில் எண்ணினார்கள். இவ்வாறு இவர்கள் எண்ணியதும் புலிகள் கர்ஜிக்கத் துவங்கின. இறைவன் அருள் தூண்ட தியானம் கலைத்த சுவாமிகள் அப் புலிகளை சாந்தம் அடையச் செய்ய அவைகள் புலித் தோல்களாக மாறி விட்டன.பின் தங்களது தவறை உணர்ந்து, தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை எடுத்துக் கூறினர்..

ஸ்ரீ வீரவைராக்கியமூர்த்தி சுவாமிகள் ஸ்ரீ ஆதிசிவலிங்காச்சார்ய மூர்த்தியின் அருளாசியை பெற்று பின்வருமாறு கூறினார், "நன்று நாங்கள் திருவண்ணாமலைக்கு வந்து துண்டிக்கப்பட்ட காராம் பாவினை உயிர் உண்டாக்க வேண்டுமாயின் ஒரு நாழிகை தூரத்திற்கு ஒரு உலைக்கூடம் அமைக்க வேண்டும் .அங்கே பாதரட்சை, கமண்டலம், தண்டம் காய்ந்து கொண்டிருக்க வேண்டும்" என ஆணையிட்டார். சுவாமிகள் உத்தரவுப்படி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டன.
சுவாமிகள் அன்று தனது வழிபாட்டை நிறைவு செய்து சீனத்தல் மடத்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு உலைக்கூடத்திலும் புதிதாக காய்ந்து கொண்டிருக்கும் பாதரட்சை, கமண்டலம், தண்டம், முதலியவற்றை அணிந்து கொண்டு பழுக்க காய்ச்சிய பாதரட்சையை பூண்ட வண்ணமாகவே திருவண்ணாமலை ஈசான்ய குளக்கரையை அடைந்தார். மாலைப் பொழுதை நெருங்கியதால் சந்தியா வந்தனத்தை அங்கிருந்து ஓர்க் கைபிடி புல்லை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கி சென்றார். சுவாமிகள் ஆலயத்தினை நெருங்க நெருங்க வெட்டப்பட்டிருந்த காராம் பசுவின் உடல் ஒன்றாக இணையத் துவங்கியது, பின் கோவிலின் உட்சென்று சிவலிங்க மந்திரத்தை கூறி கமண்டலத்தில் உள்ள புனித நீரினை காராம் பசுவின் மீது தெளித்து பிரம்பால் தட்டினார். உடனே உயிரிழந்த அந்த பசு முழக்கமிட்டு எழுந்தது. அப்பொழுது தாம் கொண்டு வந்த புல்லை அதற்கு கொடுத்தார். அப்ப சுவின் கன்று துயர் நீங்கி துள்ளி வந்து பாலுண்டது. இக்காட்சியைக் கண்ட மன்னனும் மக்களும் வியப்புற்று நின்றனர். உடனே சுவாமிகள் நின் அருமை அறியா இம்மக்கள் மத்தியில் நீ இருக்கலாகாது எனக்கூறி பசுவை முக்தி அடைய செய்தார். பின்பு பசுவானது மறைந்தது.
இது கண்ட மன்னன் சுவாமியை நோக்கி என்னால் இதனை நம்ப முடியவில்லை, இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக நினைக்கிறேன், எனக்கூறி மீண்டும் சுவாமியை மன்னன் பரிசோதித்து பார்த்தான்.சுவாமியிடம் தாங்கள் உண்மையான இறைவனின் இன்னருள் உடையவர் எனில் நான் அளிக்கும் நெய்வேத்தியப் பொருட்களையே இறைவனுக்கு படைக்க வேண்டும் என்றான்.சுவாமிகள் அவ்வாறே ஆகட்டும் எனக் கூற அம்மன்னன் பல வகை மாமிச உணவுகளை தட்டிவி வைத்து ஓர் ஆடையால் மறைத்து அளித்தான்.சுவாமிகள் அண்ணாமலையாருக்கு அதனை நெய்வேத்தியமாக காட்டி பின் மேலாடையை நீக்க மாமிசங்கள் அனைத்தும் வண்ணமலர்களாக மாறி இருந்தன. அதனைக் கண்டதும் அனைவரும் வியந்தனர். மீண்டும் அம்மன்னன் நம்பவில்லை, மீண்டும் பரிசோதிக்க எண்ணினான். இறுதியாக தாங்கள் தவப்பயன்மிக்கவர் எனில் இங்குள்ள பெரிய கல் நந்தியை கனைத்தெழ செய்ய வேண்டும், எனக் கூறினான். அதைக் கேட்ட சுவாமிகள் தங்கள் விருப்பம் அதுவானால் இறைவன் குரு அருளால் அவ்வாறே நிகழும் என்றார். உடனே பெரியகல் நந்தி கனைத்து எழுந்து நின்று தனது காலை மடக்கி சுவாமிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மடாலயம் உள்ள திசையை நோக்கி தனது வலது காலை மடக்கி வலப்புறமாக தலையை திருப்பிய வண்ணம் அமர்ந்தது. ( திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள நான்கு நந்தியும் இடது பக்கம் காலை மடக்கி அமர்ந்து இருக்க பெரிய நந்தி மட்டும் வலது பக்கம் காலை மடக்கியும் தலைவலது பக்கமாக பார்த்தவாறு உள்ளது). சிவலிங்க மந்திரத்தால் விளைந்த அரிய செயல்களை கண்ட மன்னன் மெய்சிலிர்க்க சுவாமியின் காலில் விழுந்து வணங்கி தனது ஆளுமைக்கு உட்பட்ட இந்த திருவண்ணாமலை முழுவதையும் உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான்.சுவாமிகள் பொருளாசை எமக்கு இல்லை எனவே எமக்கு தேவையில்லை எனக் கூறினார். இது கேட்ட மன்னன் இவ்வாதீன பீடாதிபதிகள் திருவண்ணாமலை ஆலயத்திற்கு வரும் சமயம் ஆலய பரிவாரங்களுடன் பல்லக்கில் அழைத்து வர வேண்டும் என செப்பேடு சாசனம் எழுதி வைத்து ,இன்றுமுதல் இம்மடம் மகத்துவமடம் என பெயர் பெறட்டும் என்று கூறி வணங்கி பணிந்து நின்றான்.

பின்னர் நால்வகை படைகளுடன் சுவாமிகளை அழைத்து சென்று மடாலயத்திற்கு சென்று மரியாதை செய்து விட்டு திருவண்ணாமலை திரும்பினான்.ஸ்ரீவைராக்யமூர்த்தி சுவாமிகள் வேத பாராயணம் செய்தும் மக்களுக்கு நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் மக்களுக்கு பரப்பி வரலானார்.ஸ்ரீ சுவாமிகள் தனது மடத்தின் முதலாம் பீடாதிபதி ஸ்ரீஜெகத்குரு ஆதிசிவலிங்காச்சார்யமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்த இடத்திற்கு வலது புறம் தானும் முக்தி அடைந்து மக்களுக்கு இன்றளவும் அருள்பாலித்து வருகின்றார்.

ஸ்ரீ வீரவைராக்கியமூர்த்தி சுவாமிகள் முக்தி அடைந்த நாளிலிருந்து இன்று வரை அவருக்கு பின் வந்த மடாதிபதிகளாலும் விஸ்வகர்ம மக்களாலும் அவரது குரு பூஜா மகோன்னத விழா பிரதி ஆண்டு வைகாசி மாதம் முதல்ஞாயிற்றுக்கிழமையன்று ஆதினத்தில் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர்-4 கண்ணப்ப நாயனார்

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் பிப்ரவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர்-4

கண்ணப்ப நாயனார்
                                           (தி.ம.இராமலிங்கம்)

பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன் என்ற வேடர்கள் தலைவனுக்கும் வேட்டையாடும் கலையில் தேர்ச்சி பெற்றவளான அவன் மனைவிக்கும் நீண்ட நாள் கழித்துப் ஒரு மகன் பிறந்தான். (ஆந்திர மாநிலத்தில் இப்போதய கடப்பை மாவட்டத்தில் புல்லம்பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் பொத்தப்பி நாடாகும். உடுப்பூர் என்பது குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. இன்று அவ்வூர் உடுக்கூர் என்று அழைக்கப்படுகின்றது.) குழந்தைப் பருவத்திலேயே மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். வேடர்கள் தலைவனின் மகனல்லவா? மிருகங்களின் உடலிலிருந்த எடுக்கப்பட்ட பற்கள், தந்தங்கள் முதலியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்களை அவன் மார்பிலும் இடையிலும் அணிகலன்கலாகப் பூண்டு வளர்ந்தவன். காட்டுப்பன்றிகளுடனும் காட்டுநாய்களுடனும் பாம்புகளுடனுமே விளையாடி வளர்ந்தவன்.

திண்ணனுக்குப் பதினாறு வயதானதும் ஒரு நல்ல நாள் பார்த்து நாகன் அவனுக்கு வேட்டையாடும் கலையைக் கற்றுத்தந்து ஏழு நாள் விழா எடுத்து ஊரார் அனைவரும் கூடியிருக்கப் பிரமாதமாக அவன் மகனை வேட்டையாடுதலுக்கு அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் சிறப்பாக உணவளித்தான்… கசாப்புச் சாப்பாடு தான், வேறென்ன? அன்றிலிருந்து திண்ணனே வேடர்கள் தலைவனானான். சில நாட்களில் நாகனுக்கு வயதானதும் திண்ணன் பொறுப்பெற்று மற்ற வேடர்களை வழிநடத்தவேண்டிய கட்டம் வந்தது.

அதிகாலையில் சூரியன் எழும் முன் திண்ணன் அர்ச்சுனனைப் போல அம்பும் வில்லுமாக ஒரு மாவீரன் போல் வேட்டையாடப் புறப்பட்டான். அவனுடன் ஏனைய வேடர்களும் சென்றனர். ஏராளமான மிருகங்களைக் கொன்று வீழ்த்தினர். அப்போது ஒரு காட்டுப்பன்றி வேட்டைக்குத் தோண்டியிருந்த குழிகளிலிருந்தும் வேடர்கள் விரித்து வைத்திருந்த வலைகளினின்றும் தப்பியோடியது. மூன்று பேரால் மட்டுமே அந்தப் பன்றியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து அதைத் துரத்த முடிந்தது – திண்ணன், நாணன், காடன். ஆயினும் அது அவர்கள் எப்போதும் வேட்டையாடும் காட்டை விட்டு வெகுதூரம் ஓடிச்சென்று திருக்காளஹஸ்தி மலையடிவாரத்தில் ஒரு மரத்தடியில் நின்றது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்கே தலைவனான திண்ணன் வீராவேசத்தோடு முன் சென்று அதைக் கொன்று வீழ்த்தினான்.

அப்போது தான் மற்ற வேடர்களை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை மூவரும் உணர்ந்தனர். திண்ணன் அந்தப் பன்றியைக் காடனிடம் கொடுத்து மூவரும் பசியாறுவதற்காகச் சமைக்கச் சொன்னான். காட்டுக்கும் மலைக்கும் அந்தப்பக்கம் பொன்முகலி என்ற நதி இருப்பதாக நாணன் கூறவே, அவனும் திண்ணனும் தண்ணீர் எடுத்துவருவதற்காக அங்கே சென்றனர். அவ்வாறு காட்டைக் கடந்து செல்லும்போது திண்ணன் காளஹஸ்தி மலையைக் கண்டு பரவசப்பட்டு அதனருகே சென்றான். மலையுச்சியில் குடுமித்தேவர் (சிவன்) ஆலயம் இருப்பதாகவும் அவரைத் தரிசிக்கலாமென்றும் நாணன் கூற, அதுவே சிவனின் பாற்செல்ல திண்ணன் எடுத்த முதல் அடியாகும். முற்பிறவிகளில் செய்த நற்செயல்களின் பலன், திண்ணனை சிவபெருமானின் பால் ஈர்க்க உதவின. அவரிடம் அவன் கொண்ட ஈடிலா அன்பானது பெருவெள்ளமாகப் பொங்கி வளரத் தொடங்கியது. அவனுடைய தூய அன்பும் உடன் வந்த நாணனும் அவனை மலைமேல் அழைத்துச் சென்றன. உள்ளம் கவர் கள்வனாகிய சிவபெருமானை அவன் காண்பதற்கு முன் அந்தக் கள்வனே திண்ணனுடைய பிறப்பின் ஆதாரமும் அவனுடைய பிறப்புக்கும் வாழ்க்கைக்குமிடையேயான உறவாகிய வேட்டையெனும் கலையைக் களவாடிவிட்டார்.

திண்ணன் அங்கே ஒர் சிவலிங்கத்தைக் கண்டான். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்களினால் பருக, அக்காட்சியின் அருமை அவன் நெஞ்சில் நிரம்பி வழிந்தது. அவன் நினைவு தன் வசமில்லாமல் போயிற்று. அந்த அன்புப் பரவசத்தில் அவனை ஆழ்த்திய சிவனிடம் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டான். அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அளவிலாப் பேரானந்தம் பொங்கித் திளைத்தது.

அதே சமயம் அவன் கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் வழிந்தது. “எம்பெருமானே! இந்த அடர்ந்த காட்டில் கொடிய மிருகங்களுக்கிடையே உன்னைக் காக்க ஆளில்லாமல் இப்படித் தனிமையில் இருக்கிறாயே? இது முறையன்று! இது முறையன்று!” என்று கதறினான். அவனுடைய வில் கீழே விழுந்தது கூடத் தெரியாமல், நாணனிடம், “யார் இப்படி எம்பெருமானுக்குப் பச்சிலையும் பூக்களுமாக உணவளித்திருப்பார்கள்?” என்று வினவினான். அதற்கு நாணன், “ஒரு முறை நான் இங்கே வேட்டையாட வந்தபோது ஓர் அந்தணர் அபிஷேகம் செய்து பூச்சொரிந்ததைக் கண்டேன். அவர் தான் இன்றும் செய்திருக்கவேண்டும்” என்றான். திண்ணனுக்குப் பொறுக்கவில்லை. “எம்பெருமான் இப்படித் தனியே இருப்பதா? அவருக்கு மாமிச உணவு, இறைச்சி உணவளிக்க ஆளில்லை! அவரை எப்படித் தனியே விட்டு வருவேன்? என் செய்வேன்? அவருக்குப் பசியாற நல் இறைச்சி கொண்டுவரவேண்டும் நான்!” என்று கூறினான்.

திண்ணன் சிவனுக்கு இறைச்சி கொணர முற்படுவான், ஆனால் அவர் தனிமையிலிருப்பது நினைவுக்கு வரவும் ஓடோடி வந்து அவருக்குத் துணையிருக்க எண்ணுவான். மீண்டும் இறைச்சி கொணர முற்படுவான், மீண்டும் ஓடோடி வந்து துணையிருப்பான். இப்படியே ஒரு பசு தன் இளம் கன்றை விட்டு அகலாதது போல் சிவனுக்கு முன் நின்று அவரிடமிருந்து தன் கண்களைப் பறித்தெடுக்க இயலாமல் தடுமாறினான். ஒரு கணம், “எம்பெருமானே! உனக்கு மிகச்சிறந்த இறைச்சி கொண்டுவரப் போகிறேன்!” என்று உறுதிமொழி கூறுவான். மறுகணம், “உன்னைத் தனிமையில் விட்டு எங்ஙனம் செல்வேன்?” என்பான். பின், “ஆனால் நீ மிகுந்த பசியுடனிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லையே… என் செய்வேன்!” என்று புலம்புவான். கடைசியில் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அனைத்தும் உடைய சிவபெருமானுக்கு வேண்டியதைக் கொண்டு வந்தே தீரவேண்டுமென்ற ஒரு முடிவோடு சென்றான்.

இவ்வுலகிலுள்ள எல்லாவற்றின் மீதும் உள்ள ஆசைகளனைத்தும் எரிந்துபோய் சிவனின் மீதுள்ள ஆசை மட்டுமே அவனிடமிருக்க, திண்ணனும் நாணனும் பொன்முகலி நதிக்கரையிலிருந்த ஓர் அழகிய சோலையை வந்தடைந்தனர். அப்போது காடன் வந்து காட்டுப் பன்றியைச் சமைத்து முடித்த செய்தியைச் சொல்லி மூவரும் உணவருந்தலாமென்று அழைத்தான். நாணன் அவனிடம், திண்ணன் சிவனைத் தரிசித்தபின் தான் வேடர்களின் தலைவன் என்ற உண்மையை மறந்து (மெய் மறந்து) அந்த எண்ணத்தைத் துறந்து, தன்னை இப்போது சிவனின் அடிமையாகவே கருதுகிறானென்று சொன்னான். அதைக் கேட்டதும் காடன் அதிர்ச்சியடைந்தான்.

திண்ணனோ எதைப்பற்றியும் கவலையே இல்லாமல் பன்றிக்கறியின் மிகச்சுவையாக இருக்கக்கூடிய பாகங்களை ஒரு அம்பினால் குத்தியெடுத்துத் தன் வாயிலிட்டுச் சுவைத்துப் பின் அதை வாயினின்றும் வெளியிலெடுத்துத் தான் சுவைத்தவற்றுள் மிகச்சிறந்தவையைத் தனியே சேகரித்தான். மற்ற இருவரும், “இவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது! இறைச்சியைச் சுவைத்தபின் அதையெடுத்துச் சேகரிக்கிறானே! அவனுக்குக் நிச்சயமாகக் கடும் பசியிருக்கும், ஆனாலும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறானே! நமக்கும் உணவளிக்க மாட்டேனென்கிறான்! அவனுடைய தந்தை நாகனையும் மற்றவர்களையும் அழைத்து வந்து என்ன செய்வதென்று பார்ப்போம்” என்று அந்த இடத்தை விட்டுச் சென்றனர். எந்தச் சலனமுமில்லாமல், திண்ணன் இறைச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அபிஷேகம் செய்யச் சிறிது தண்ணீரைத் தன் வாயில் நிரப்பிக்கொண்டு, சிவனுக்குச் சமர்ப்பிக்க அழகிய மலர்கள் சிலவற்றைக் கொய்து தன் தலையில் சூடியெடுத்துக்கொண்டு, சிவனுக்குப் பசிக்குமே என்றெண்ணி மலையுச்சிக்கு விரைந்து சென்றான். சுயம்புவாகத் தோன்றிய அந்தச் சிவலிங்கத்தின் தலையிலிருந்த பூக்களைத் தன் கால்களால் களைந்து வீசித் தன் வாயிலிருந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, தன் தலையில் சூடி வந்த மலர்களால் அலங்கரித்துப் பணிந்தபின் தான் சுவைத்து எடுத்து வந்த இறைச்சியை உணவாக அளித்தான். அப்படியும் அவனுக்குச் சமாதானமாகவில்லை. சிவனுக்கு மேலும் உணவளிக்க வேண்டுமென்றெண்ணினான்.

சூரியன் அஸ்தமனமாகிப் பொழுது சாய்ந்தது. அச்சமென்றால் என்னவென்றே அறிந்திராத வேடர்கள் தலைவன் திண்ணன், வனவிலங்குகள் இரவில் வந்து சிவனைத் துன்புறுத்துமோ என்று அஞ்சினான். அதனால் அருகிலேயே தன் வில்லும் அம்பும் உடனாகக் காவலிருந்தான். மறுநாள் பொழுது புலரும் சமயம் சிவனை விழுந்து வணங்கிவிட்டு அவருக்கு மீண்டும் உணவளிப்பதற்காக வேட்டையாடக் கிளம்பினான்.

அவன் சென்றவுடன் சிவகோச்சாரியார் என்ற முனிவர் வந்தார். சிவலிங்கத்துக்கு முன் சிதறிக் கிடந்த இறைச்சியையும் எலும்புத் துண்டுகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். “இது அந்தப் பொல்லாத வேடர்களின் வேலையகத்தானிருக்கும்” என்றெண்ணிச் சன்னதியை மிகவும் சிரத்தையாகச் சுத்தம் செய்தபின் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு விரைந்து வந்தார். பின்னர் சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்து அவருடைய திருநாமங்களை மொழிந்து அந்த ஒப்பிலாப் பரம்பொருளைப் பல முறை விழுந்து வணங்கிவிட்டு வீடு திரும்பினார்.

நம் அன்பு வேடன் திண்ணன் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் மற்ற மிருகங்களையும் வேட்டையாடி அவற்றின் இறைச்சியை தீயில் வேகவைத்தான். சிவனுக்கு மிகுந்த சுவையுள்ள உணவையே அளிக்கவேண்டுமென்பதால் இறைச்சித் துண்டங்களைச் சுவைத்து அவற்றுள் மிகச்சுவையானவற்றையே தேர்ந்தெடுத்தான். அவற்றை மேலும் சுவையுள்ளவையாக்க அவற்றின் மேல் தேன் வார்த்துக் கொடுத்தான் திண்ணன்.

தினமும் பூசைக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பிறப்பிறப்பிலாப் பெருமானை மிகுந்த அன்புடன் வழிபடச் செல்வான். முனிவர் இட்டிருந்த மலர்களை அவன் காலால் அப்புறப்படுத்தி மான்கறி, காட்டுப்பன்றிக்கறி அளிப்பான். இரவு உறக்கத்தை மறந்து சிவனைக் காவல் காப்பதையே கருத்தாகக் கொள்வான். மீண்டும் பகலில் சிவனுக்கு இரை தேடுவதற்காக வேட்டையாடச் செல்வான். பகலில் வழிபட வரும் சிவகோச்சாரியாரோ சன்னதியில் தகாத பொருட்கள் இருப்பதைக் கண்டு வேதனைப்பட்டு அவற்றை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்து முறைப்படி வழிபடுவார்.

இப்படியாக நம் நாயனார் (திண்ணனார்) இறைவருக்கு இறைவனான சிவபெருமானைத் தனக்குத் தெரிந்த முறையில் வழிபட்டுக் கொண்டிருக்க, சிவகோச்சாரியார் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டித் தவித்தார். இப்படியொரு தகாத செயலைச் செய்பவனை நீ தான் அடையாளம் காட்டி அவனை அகற்ற வேண்டுமென்று சிவனிடம் முறையிட்டார். நாயனாரின் மெய்யான அன்பை விளக்க, சிவகோச்சாரியாரின் கனவில் சிவன் தோன்றி, “அவனை ஒரு குற்றவாளியைப் போல் எண்ணாதே! என்னுடைய அன்பே அவனை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

அவன் என்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறான். அவன் செயல்கள் எனக்கு ஆனந்தமளிக்கின்றன. அவன் வாயிலிருந்து என் மேல் அவன் துப்பும் தண்ணீர் கங்கையைவிடப் புனிதமானது, அவன் தலையில் சூடிக்கொண்டுவந்து எனக்கு அளிக்கும் மலர்கள் தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்களை விடப் புனிதமானவை. இவையெல்லாம் அவனுடைய அன்பின் அடையாளம். நாளை அவன் வரும்போது மறைந்திருந்து பார்த்தாயானால் அவனுடைய பக்தியின் மகிமை உனக்குத் தெரியும்!” அச்சமும் பிரமிப்பும் கலந்த எண்ணங்களோடு சிவகோச்சாரியார் அன்றிரவு முழுவதும் உறங்க இயலாமல், சூரியன் உதித்தவுடன் பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு காளஹஸ்தி ஈசுவரனின் சன்னதியை அடைந்து மறைவாக இருந்து கவனித்தார்.

அன்று ஏழாவது நாள்… திண்ணனார் என்றும் போல் அளவிலா அன்புடன் பூசைப் பொருட்களைக் கொண்டுவந்தார். பூசைக்குத் தாமதமாயிற்றே என்றெண்ணிய திண்ணனாருக்குப் போகிற வழியெல்லாம் அபசகுனங்கள் பல தோன்றின. சிவனுக்கு ஏதேனும் ஆயிற்றோ என்றஞ்சி விரைந்தோடினார். சிவகோச்சாரியாருக்குத் திண்ணனாரின் அன்பைக் காட்டுவதற்காக சிவன் தன் முக்கண்ணில் ஒன்றிலிருந்து இரத்தம் கசியச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார் அம்பும் வில்லும் இறைச்சியும் ஆங்காங்கே சிதற அஞ்சி அதிர்ச்சியடைந்து மிகவும் வேதனைப்பட்டார். சிவனருகே ஓடிச்சென்று குருதியை நிறுத்த முயன்றார், ஆனால் அது நிற்கும்படியாக இல்லை.

இச்செயலைச் செய்த குற்றவாளி யாராக இருக்குமென்று உக்கிரமான கோபத்துடன் எல்லாப் பக்கமும் தேடினார். மக்களையோ மிருகங்களையோ யாரையும் அருகே காணவில்லை. மனமுடைந்து சன்னதிக்குத் திரும்பியவர், தன் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதார். பிறவிப்பிணி முதலாய எல்லாப் பிணிகளையும் தீர்க்கும் மருந்தான சிவபெருமானின் பிணிதீர்க்க மருந்து தேடிக் காற்றைப்போல் மிகவிரைவாகச் சென்று காட்டிலிருந்த மூலிகைகளிலிருந்து மருந்தெடுத்துக் கொண்டுவந்தார். அப்படியும் ஒரு பிரயோசனமுமில்லை!

சிவன் கண்ணினின்றும் வழியும் குருதியை நிறுத்தமுடியாத தன் இயலாமையை எண்ணி வாடி வருந்திய திண்ணனாருக்குத் திடீரென்று ஒரு யோசனை உதிக்க, அம்பினால் தன் கண்ணைத் தோண்டியெடுத்து சிவனின் கண் இருக்குமிடத்தில் வைத்தார். உடனே இரத்தம் வழிவது நிற்கவும், அவர் பேரானந்தமடைந்து வான் வரை குதித்துத் தான் செய்த வீரச்செயலையெண்ணி மகிழ்ந்தார்.

ஆனால் சிவபெருமானோ அவருடைய பக்தி இதைக்காட்டிலும் எல்லையற்றது என்பதை நிரூபிக்க முடிவெடுத்தார். அவர் வலது கண்ணில் குருதி நின்றதும் இடது கண்ணினின்று குருதி வழியத் தொடங்கியது. ஒரு கணம் அதிர்ச்சியடைந்த நாயனார், “ஓ… இப்போது தான் இப்பிணிக்கு மருந்து என்னவென்று எனக்குத் தெரியுமே… என்னிடம் இன்னொரு கண் உள்ளதல்லவா? அதுவே இதைத் தீர்த்து வைக்கும்!” என்று தெளிந்தார். முன்பு போலவே அம்பினால் கண்ணைத் தோண்டப் போனவர் அதையும் எடுத்துவிட்டால் கண்ணில்லாமல் (பார்வையிழந்த பின்) எப்படிச் சிவலிங்கத்தின் கண் எங்கேயிருக்கிறது என்று தேடி வைப்பது என்று குழம்பி அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் காலைத் தூக்கிச் சிவலிங்கத்தின் கண் இருக்குமிடத்தைக் குறித்துக் கொள்வதற்காகத் தன் கால் கட்டை விரலை வைத்துக் கொண்டார். பின் அவர் அம்பை எடுத்துத் தன் இன்னொரு கண்ணைத் தோண்டியெடுக்க எத்தனித்தார்.

இதை விவரிக்க வார்த்தைகளேயில்லை. (திண்ணனார்) கண்ணப்ப நாயனாரும் பக்தியும் வெவ்வேறில்லை, இரண்டும் ஒன்றே என்று சொன்னாலும் போதாது. இதைக் கண்ட சிவபெருமானுக்கே பொறுக்கமுடியாமல் கண்ணப்பருக்குக் காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல் “ஓ… நில் கண்ணப்பா! நில் கண்ணப்பா!” என்று அவர் கைகளைப் பிடித்து நிறுத்தி மற்றொரு கண்ணைப் பறித்து எடுக்க விடாமல் தடுத்தார். மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் கண்ணப்பரின் அளவிலாப் பேரன்பையும் அதற்கு அவருக்குக் கிட்டிய அருளையும் கண்டார். அப்பேர்ப்பட்ட சுயநலமிற்ற அன்பே சிவபெருமான் மிருகங்களின் இறைச்சியையும் இனிய கனியாக ஏற்றுக்கொண்டதற்குக் காரணம்.

“ஓ! அன்பிலும் பக்தியிலும் ஒப்பற்றவனே! நீ என் வலப்பக்கமாக இருப்பாயாக! என்று சொல்கிறார்!!

நாம் இதுவரை கண்ணப்ப நாயனார் அவர்களின் புராணத்தை படித்தோம். இவர் கி.பி.300 – 600 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக கூறுகின்றார்கள். கண்ணப்ப நாயனாரை பற்றி வள்ளற்பெருமானும் தமது திருஅருட்பாவில் ஏழு இடங்களில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.

கண்ணப்பன் என்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
திண்ணப்பன் ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டனிட்ட
விண்ணப்பம் ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
தெண்ணப் படும்நின் திருவருள் ஈகஇவ் வேழையற்கே. – 373

வண்ணப்பல் மாமலர் மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
திண்ணப்பர் சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்துநல் ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
கண்ணப்ப நிற்க எனக்கைதொட் டார்எம் கடவுளரே. – 825

கண்ணப்பா என்றருளும் காளத்தி யப்பாமுன்
வண்ணப்பால் வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
உண்ணப்பா என்றுரைத்த ஒற்றியப்பா வந்தருள
எண்ணப்பா என்றழும்இவ் ஏழைமுகம் பாராயோ. – 1159

கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொளொற்றி
நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
எண்ணப் படாஎழில் ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட
வண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே. – 1456

வேல்பிடித்த கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்
தாற்பொசித்து நேர்ந்த தயாளனெவன் – 1965-146

உப்பிருந்த ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
வெப்பிருந்த காடோ வினைச்சுமையோ  - செப்பறியேன்
கண்ணப்ப ருக்குக் கனியனையாய் நிற்பணியா
துண்ணப் பருக்கும் உடம்பு. – 1987

கண்ணப்பன் ஏத்துநற் கண்ணப்ப மெய்ஞ்ஞான
விண்ணப்ப நின்றனக்கோர் விண்ணப்பம் – மண்ணிற்சில்
வானவரைப் போற்றும் மதத்தோர் பலருண்டு
நானவரைச் சேராமல் நாட்டு. – 2066

இவ்வாறு வள்ளற்பெருமான் கண்ணப்ப நாயனாரை குறிப்பிட்டு பல்வேறு இடங்களில் பாடியிருப்பது அவரது முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. இறைவன் மீது உள்ள அன்பின் மிகுதியால் தனது எச்சிலை அவர் மீது உமிழ்கின்றார், தமது காலை அவர்மீது வைக்கின்றார், பன்றி கறியை படைக்கின்றார், தன் தலையில் சூட்டிய மலரினை கொண்டு வந்து இறைவனுக்கு சூட்டுகின்றார் இப்படி அன்பின் மிகுதியால் தவறினையே இழைக்கின்றார் கண்ணப்பர். இருந்தாலும் சிவபிரான் கண்ணப்பரின் குற்றத்தை எல்லாம் குணமாகக் கொள்கின்றார்.

 குறிப்பாக ஊன் உணவை உண்பவனுக்கும் ஊன் உணவை படைத்தவனுக்கும் இறைவன் எவ்வாறு அருள் வழங்க முடியும்? என்கின்ற மிகப்பெரிய கேள்வி நம்மிடையே எழுகின்றது. உயிர்களிடம் அன்பில்லாதவன் எவ்வாறு இறைவனிடம் அன்பு வைக்கமுடியும்.  

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்தில்
          கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
          எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா துயிருடம்பைக்
          கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக் கொழுந்தாணை
          ஞானிஎனக் கூறொ னாதே. – 3027

ஆண் என்பவனை பெண்ணாக மாற்றியும், பெண் என்பவளை ஆணாக மாற்றியும், இறந்தாரை எழுப்பியும் சித்து செய்கின்ற ஒருவர் ஊன் உணவு உண்ணலாம் என்கின்ற கருத்தினை உடையவராயின் அவரை ஞானி என்று கூறக்கூடாது என்று தமது குருவின் மேலும் சிவபெருமான் மீதும் ஆணையிட்டு ஒரு ஞானியின் இலக்கணத்தை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார். ஒரு ஞானிக்கே இவ்வரை என்றால், தான் வணங்கும் சிவபெருமான் ஊன் உணவை ஏற்று அருள் புரிந்தார் என்றால் அவ்விறைவனை மட்டும் வள்ளலார் ஏற்றது எஞ்ஞனம்? மேலும் ஊன் உணவை படைத்த கண்ணப்பனையும் பாடியிருகின்றார்! ஊன் உணவை ஏற்ற சிவபெருமானையும் பாடியிருக்கின்றார்! வியப்பாக உள்ளதே! எங்கு தவறு நேர்ந்துள்ளது? வள்ளலார் கொள்கையிலா? அல்லது சிவபெருமானின் அருளிலா?

          கண்ணப்பரின் இறுதி நிகழ்வினை இங்கு மீண்டும் நினைவுறுவோம். சிவபெருமானின் ஒரு கண்ணில் இரத்தம் வருகின்றது. அதனை நிறுத்த தனது கண்ணில் ஒன்றை எடுத்து சிவபெருமான் கண்ணின் மீது அப்புகின்றார். இரத்தம் நின்று விடுகின்றது. உடனே சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்து இரத்தம் வடிகின்றது. உடனே கண்ணப்பர் தமது இன்னொரு கண்ணினை எடுக்க முயல்கின்றபோது அவரை தடுத்து ஆட்கொள்கின்றார் சிவபெருமான்.

          இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவெனில், “கண்ணப்பர் தமக்கிட்ட புலால் படையலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் ஒரு பன்றியை கொல்லும்போது அதற்கு எவ்வாறு இரத்தம் வந்ததோ அது போல் எமது கண்ணின் வழியே இரத்தத்தை வழியவிட்டு எமது எதிர்ப்பையும் உயிரிரக்கத்தையும் கண்ணப்பருக்கு காட்டினேன்” என்பதுதான் சிவபெருமானின் வாக்குமூலம்.

          ஆனால்… அதற்குள் கண்ணப்பர் தமது ஊனினையே (கண்கள்) சிவபெருமானுக்கு காணிக்கையாக கொடுத்தமையால்… அந்நொடியில் சிவபெருமான் கண்ணப்பரின் உண்மையான அன்பினைக் கண்டு அவருக்காக இரங்கி அவரை ஆட்கொள்கின்றார். அதாவது இவன் பிற உயிர்களை கொன்று அதனை தமக்கு படையல் அளிப்பதோடு தம்மையும் அழித்துக்கொள்ள தயங்கவில்லை என்பதால் பிற உயிர்கள் போலவே தன்னுயிரையும் பார்த்ததால் கிடைத்த பரிசே அது.

          தன்னுயிர்போல் பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கொள்கை. இறைவனுக்காக பிற உயிர்களைபோல தன்னுயிரையும் அழிக்க வேண்டும் என்பது கண்ணப்பரின் கொள்கை. பொதுவாக இவை இரண்டிலும் அருள் கிடைக்கின்றது. இரண்டாவதாக கிடைக்கும் அருளிலிருந்து நாம் ஒன்றினை படிப்பிணையாகக் கொள்ள வேண்டும். கண்ணப்பரின் ஊன் தனக்காக சிதையும்போது அதனை சிவபெருமான் தடுத்து அருள்வதுபோல, பிற உயிர்களின் ஊன் சிதையும்போது மனிதர்களாகிய நாம் அதனை தடுத்து காக்க வேண்டும், தனது ஊனினையும் காத்துக்கொள்ள வேண்டும். யாருக்காகவும் உயிர்களை / ஊன்களை பலியாகக்கூடாது என்பதே கண்ணப்பரின் கதை உணர்த்துகின்றது. வள்ளலார் இதனை உணர்ந்தார். கண்ணப்பர் இதனை உணர்த்தப் பெற்றார்.

          இவ்வுலகில் இறைவனுக்காக பிற உயிர்களை பலியிடுபவர்களில் யாரேனும் அதே இறைவனுக்காக தன்னுயிரை பலிகொடுக்க முன்வருவார்களா? இறைவனுக்காக மொட்டை அடித்தல், காது குத்தல், மூக்கு குத்தல், நெருப்பு மிதித்தல், அலகு குத்துதல், ஊசி குத்திக்கொள்ளுதல், தேர் இழுத்தல், காவடி எடுத்தல், முள் படுக்கையில் படுத்தல், ஆணி செருப்பில் நடத்தல், மிளகாய் குழம்பில் குளித்தல், கொதிக்கின்ற எண்ணையில் வடை சுடுதல் இவை போன்ற நாகரிகமற்ற உடம்பை வருத்திக்கொள்ளும் நிகழ்ச்சியினால் ஆவதென்ன? ஒரு முறை உங்களை பலிகொடுத்துதான் பாருங்களேன்! வேண்டாம்… கண்ணப்பர் போல் உங்கள் கண்களையாவது பிடுங்கி கொடுங்களேன்! முடியுமா…? முடிந்தாலும் இறைவன்தான் அருள்வானா? இரண்டும் நடக்காது.

         
எனவே கண்ணப்பர் கதை மூலம் நாம் வள்ளற்பெருமானின் உயிர் இரக்கத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நினைத்தே கண்ணப்பரை குறித்து வள்ளலார் தமது திருஅருட்பாவில் பாடியுள்ளார். ஆகவே நாம் கண்ணப்ப நாயனாரை பின்பற்றினால் நமக்கு”சத்அருள்” என்கின்ற சித்து கிடைக்கும். 63 கலைகளில் “சத்அருள்” என்பது இரண்டாவது கலையாகும். கண்ணப்பர் போன்று தம்மையே இறைவனுக்கு கொடுக்க முன்வருபவர்களுக்கு “சத்அருள்” என்கின்ற இரண்டாவது கலையுடன் நமது ஆன்மா வளர்ச்சியடையும். “சத்அருள்” என்கின்ற கலையை குறிக்க எழுந்தது கண்ணப்ப நாயனார் புராணம்.
         
பெயர்: கண்ணப்ப நாயனார்
குலம்: வேடர் -கங்கை குலம் 
பூசை நாள்: தை மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி (பஞ்சபூத தளங்களில் வாயு தளமாக விளங்குகின்றது)


--தத்துவங்கள் தொடரும்…