(வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும்
“சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் பிப்ரவரி – 2018 –ஆம் மாதம்
வெளியானவை…)
நாயன்மார்களின்
தத்துவங்கள் – தொடர்-4
கண்ணப்ப நாயனார்
பொத்தப்பி என்னும்
நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன் என்ற வேடர்கள் தலைவனுக்கும் வேட்டையாடும் கலையில்
தேர்ச்சி பெற்றவளான அவன் மனைவிக்கும் நீண்ட நாள் கழித்துப் ஒரு மகன் பிறந்தான். (ஆந்திர
மாநிலத்தில் இப்போதய கடப்பை மாவட்டத்தில் புல்லம்பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்
பொத்தப்பி நாடாகும். உடுப்பூர் என்பது குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு
அருகில் உள்ளது. இன்று அவ்வூர் உடுக்கூர் என்று அழைக்கப்படுகின்றது.) குழந்தைப் பருவத்திலேயே
மிகவும் வலிமை வாய்ந்தவனாக இருந்ததால் அவனுக்குத் திண்ணன் என்று பெயரிட்டனர். வேடர்கள்
தலைவனின் மகனல்லவா? மிருகங்களின் உடலிலிருந்த எடுக்கப்பட்ட பற்கள், தந்தங்கள் முதலியவற்றால்
செய்யப்பட்ட ஆபரணங்களை அவன் மார்பிலும் இடையிலும் அணிகலன்கலாகப் பூண்டு வளர்ந்தவன்.
காட்டுப்பன்றிகளுடனும் காட்டுநாய்களுடனும் பாம்புகளுடனுமே விளையாடி வளர்ந்தவன்.
திண்ணனுக்குப்
பதினாறு வயதானதும் ஒரு நல்ல நாள் பார்த்து நாகன் அவனுக்கு வேட்டையாடும் கலையைக் கற்றுத்தந்து
ஏழு நாள் விழா எடுத்து ஊரார் அனைவரும் கூடியிருக்கப் பிரமாதமாக அவன் மகனை வேட்டையாடுதலுக்கு
அறிமுகப்படுத்தி எல்லோருக்கும் சிறப்பாக உணவளித்தான்… கசாப்புச் சாப்பாடு தான், வேறென்ன?
அன்றிலிருந்து திண்ணனே வேடர்கள் தலைவனானான். சில நாட்களில் நாகனுக்கு வயதானதும் திண்ணன்
பொறுப்பெற்று மற்ற வேடர்களை வழிநடத்தவேண்டிய கட்டம் வந்தது.
அதிகாலையில்
சூரியன் எழும் முன் திண்ணன் அர்ச்சுனனைப் போல அம்பும் வில்லுமாக ஒரு மாவீரன் போல் வேட்டையாடப்
புறப்பட்டான். அவனுடன் ஏனைய வேடர்களும் சென்றனர். ஏராளமான மிருகங்களைக் கொன்று வீழ்த்தினர்.
அப்போது ஒரு காட்டுப்பன்றி வேட்டைக்குத் தோண்டியிருந்த குழிகளிலிருந்தும் வேடர்கள்
விரித்து வைத்திருந்த வலைகளினின்றும் தப்பியோடியது. மூன்று பேரால் மட்டுமே அந்தப் பன்றியின்
வேகத்துக்கு ஈடுகொடுத்து அதைத் துரத்த முடிந்தது – திண்ணன், நாணன், காடன். ஆயினும்
அது அவர்கள் எப்போதும் வேட்டையாடும் காட்டை விட்டு வெகுதூரம் ஓடிச்சென்று திருக்காளஹஸ்தி
மலையடிவாரத்தில் ஒரு மரத்தடியில் நின்றது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்கே தலைவனான
திண்ணன் வீராவேசத்தோடு முன் சென்று அதைக் கொன்று வீழ்த்தினான்.
அப்போது தான்
மற்ற வேடர்களை விட்டு வெகுதூரம் வந்துவிட்டதை மூவரும் உணர்ந்தனர். திண்ணன் அந்தப் பன்றியைக்
காடனிடம் கொடுத்து மூவரும் பசியாறுவதற்காகச் சமைக்கச் சொன்னான். காட்டுக்கும் மலைக்கும்
அந்தப்பக்கம் பொன்முகலி என்ற நதி இருப்பதாக நாணன் கூறவே, அவனும் திண்ணனும் தண்ணீர்
எடுத்துவருவதற்காக அங்கே சென்றனர். அவ்வாறு காட்டைக் கடந்து செல்லும்போது திண்ணன் காளஹஸ்தி
மலையைக் கண்டு பரவசப்பட்டு அதனருகே சென்றான். மலையுச்சியில் குடுமித்தேவர் (சிவன்)
ஆலயம் இருப்பதாகவும் அவரைத் தரிசிக்கலாமென்றும் நாணன் கூற, அதுவே சிவனின் பாற்செல்ல
திண்ணன் எடுத்த முதல் அடியாகும். முற்பிறவிகளில் செய்த நற்செயல்களின் பலன், திண்ணனை
சிவபெருமானின் பால் ஈர்க்க உதவின. அவரிடம் அவன் கொண்ட ஈடிலா அன்பானது பெருவெள்ளமாகப்
பொங்கி வளரத் தொடங்கியது. அவனுடைய தூய அன்பும் உடன் வந்த நாணனும் அவனை மலைமேல் அழைத்துச்
சென்றன. உள்ளம் கவர் கள்வனாகிய சிவபெருமானை அவன் காண்பதற்கு முன் அந்தக் கள்வனே திண்ணனுடைய
பிறப்பின் ஆதாரமும் அவனுடைய பிறப்புக்கும் வாழ்க்கைக்குமிடையேயான உறவாகிய வேட்டையெனும்
கலையைக் களவாடிவிட்டார்.
திண்ணன் அங்கே
ஒர் சிவலிங்கத்தைக் கண்டான். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்களினால் பருக, அக்காட்சியின்
அருமை அவன் நெஞ்சில் நிரம்பி வழிந்தது. அவன் நினைவு தன் வசமில்லாமல் போயிற்று. அந்த
அன்புப் பரவசத்தில் அவனை ஆழ்த்திய சிவனிடம் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.
அவன் உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் அளவிலாப் பேரானந்தம் பொங்கித் திளைத்தது.
அதே சமயம்
அவன் கண்களிலிருந்து அருவி போல் கண்ணீர் வழிந்தது. “எம்பெருமானே! இந்த அடர்ந்த
காட்டில் கொடிய மிருகங்களுக்கிடையே உன்னைக் காக்க ஆளில்லாமல் இப்படித் தனிமையில் இருக்கிறாயே?
இது முறையன்று! இது முறையன்று!” என்று கதறினான். அவனுடைய வில் கீழே விழுந்தது கூடத்
தெரியாமல், நாணனிடம், “யார் இப்படி எம்பெருமானுக்குப் பச்சிலையும் பூக்களுமாக உணவளித்திருப்பார்கள்?”
என்று வினவினான். அதற்கு நாணன், “ஒரு முறை நான் இங்கே வேட்டையாட வந்தபோது ஓர் அந்தணர்
அபிஷேகம் செய்து பூச்சொரிந்ததைக் கண்டேன். அவர் தான் இன்றும் செய்திருக்கவேண்டும்”
என்றான். திண்ணனுக்குப் பொறுக்கவில்லை. “எம்பெருமான் இப்படித் தனியே இருப்பதா? அவருக்கு
மாமிச உணவு, இறைச்சி உணவளிக்க ஆளில்லை! அவரை எப்படித் தனியே விட்டு வருவேன்? என் செய்வேன்?
அவருக்குப் பசியாற நல் இறைச்சி கொண்டுவரவேண்டும் நான்!” என்று கூறினான்.
திண்ணன் சிவனுக்கு
இறைச்சி கொணர முற்படுவான், ஆனால் அவர் தனிமையிலிருப்பது நினைவுக்கு வரவும் ஓடோடி வந்து
அவருக்குத் துணையிருக்க எண்ணுவான். மீண்டும் இறைச்சி கொணர முற்படுவான், மீண்டும் ஓடோடி
வந்து துணையிருப்பான். இப்படியே ஒரு பசு தன் இளம் கன்றை
விட்டு அகலாதது போல் சிவனுக்கு முன் நின்று அவரிடமிருந்து தன் கண்களைப் பறித்தெடுக்க
இயலாமல் தடுமாறினான். ஒரு கணம், “எம்பெருமானே! உனக்கு மிகச்சிறந்த இறைச்சி கொண்டுவரப்
போகிறேன்!” என்று உறுதிமொழி கூறுவான். மறுகணம், “உன்னைத் தனிமையில் விட்டு எங்ஙனம்
செல்வேன்?” என்பான். பின், “ஆனால் நீ மிகுந்த பசியுடனிருப்பதை என்னால் சகித்துக்கொள்ள
முடியவில்லையே… என் செய்வேன்!” என்று புலம்புவான். கடைசியில் தன்னைத் தானே தேற்றிக்
கொண்டு, அனைத்தும் உடைய சிவபெருமானுக்கு வேண்டியதைக் கொண்டு வந்தே தீரவேண்டுமென்ற ஒரு
முடிவோடு சென்றான்.
இவ்வுலகிலுள்ள
எல்லாவற்றின் மீதும் உள்ள ஆசைகளனைத்தும் எரிந்துபோய் சிவனின் மீதுள்ள ஆசை மட்டுமே அவனிடமிருக்க,
திண்ணனும் நாணனும் பொன்முகலி நதிக்கரையிலிருந்த ஓர் அழகிய சோலையை வந்தடைந்தனர். அப்போது
காடன் வந்து காட்டுப் பன்றியைச் சமைத்து முடித்த செய்தியைச் சொல்லி மூவரும் உணவருந்தலாமென்று
அழைத்தான். நாணன் அவனிடம், திண்ணன் சிவனைத் தரிசித்தபின் தான்
வேடர்களின் தலைவன் என்ற உண்மையை மறந்து (மெய் மறந்து) அந்த எண்ணத்தைத் துறந்து, தன்னை
இப்போது சிவனின் அடிமையாகவே கருதுகிறானென்று சொன்னான். அதைக் கேட்டதும்
காடன் அதிர்ச்சியடைந்தான்.
திண்ணனோ எதைப்பற்றியும்
கவலையே இல்லாமல் பன்றிக்கறியின் மிகச்சுவையாக இருக்கக்கூடிய பாகங்களை ஒரு அம்பினால்
குத்தியெடுத்துத் தன் வாயிலிட்டுச் சுவைத்துப் பின் அதை வாயினின்றும் வெளியிலெடுத்துத்
தான் சுவைத்தவற்றுள் மிகச்சிறந்தவையைத் தனியே சேகரித்தான். மற்ற இருவரும், “இவனுக்குப்
பைத்தியம் பிடித்துவிட்டது! இறைச்சியைச் சுவைத்தபின் அதையெடுத்துச் சேகரிக்கிறானே!
அவனுக்குக் நிச்சயமாகக் கடும் பசியிருக்கும், ஆனாலும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருக்கிறானே!
நமக்கும் உணவளிக்க மாட்டேனென்கிறான்! அவனுடைய தந்தை நாகனையும் மற்றவர்களையும் அழைத்து
வந்து என்ன செய்வதென்று பார்ப்போம்” என்று அந்த இடத்தை விட்டுச் சென்றனர். எந்தச் சலனமுமில்லாமல்,
திண்ணன் இறைச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அபிஷேகம் செய்யச் சிறிது தண்ணீரைத் தன்
வாயில் நிரப்பிக்கொண்டு, சிவனுக்குச் சமர்ப்பிக்க அழகிய மலர்கள் சிலவற்றைக் கொய்து
தன் தலையில் சூடியெடுத்துக்கொண்டு, சிவனுக்குப் பசிக்குமே என்றெண்ணி மலையுச்சிக்கு
விரைந்து சென்றான். சுயம்புவாகத் தோன்றிய அந்தச் சிவலிங்கத்தின் தலையிலிருந்த பூக்களைத்
தன் கால்களால் களைந்து வீசித் தன் வாயிலிருந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, தன் தலையில்
சூடி வந்த மலர்களால் அலங்கரித்துப் பணிந்தபின் தான் சுவைத்து எடுத்து வந்த இறைச்சியை
உணவாக அளித்தான். அப்படியும் அவனுக்குச் சமாதானமாகவில்லை. சிவனுக்கு மேலும் உணவளிக்க
வேண்டுமென்றெண்ணினான்.
சூரியன் அஸ்தமனமாகிப்
பொழுது சாய்ந்தது. அச்சமென்றால் என்னவென்றே அறிந்திராத வேடர்கள் தலைவன் திண்ணன், வனவிலங்குகள்
இரவில் வந்து சிவனைத் துன்புறுத்துமோ என்று அஞ்சினான். அதனால் அருகிலேயே தன் வில்லும்
அம்பும் உடனாகக் காவலிருந்தான். மறுநாள் பொழுது புலரும் சமயம் சிவனை விழுந்து வணங்கிவிட்டு
அவருக்கு மீண்டும் உணவளிப்பதற்காக வேட்டையாடக் கிளம்பினான்.
அவன் சென்றவுடன்
சிவகோச்சாரியார் என்ற முனிவர் வந்தார். சிவலிங்கத்துக்கு முன் சிதறிக் கிடந்த இறைச்சியையும்
எலும்புத் துண்டுகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். “இது அந்தப் பொல்லாத வேடர்களின்
வேலையகத்தானிருக்கும்” என்றெண்ணிச் சன்னதியை மிகவும் சிரத்தையாகச் சுத்தம் செய்தபின்
பொன்முகலியாற்றுக்குச் சென்று நீராடிவிட்டு விரைந்து வந்தார். பின்னர் சிவனுக்கு அபிஷேகம்,
அர்ச்சனை, தீபாராதனை செய்து அவருடைய திருநாமங்களை மொழிந்து அந்த ஒப்பிலாப் பரம்பொருளைப்
பல முறை விழுந்து வணங்கிவிட்டு வீடு திரும்பினார்.
நம் அன்பு வேடன்
திண்ணன் மான்களையும் காட்டுப்பன்றிகளையும் மற்ற மிருகங்களையும் வேட்டையாடி அவற்றின்
இறைச்சியை தீயில் வேகவைத்தான். சிவனுக்கு மிகுந்த சுவையுள்ள உணவையே அளிக்கவேண்டுமென்பதால்
இறைச்சித் துண்டங்களைச் சுவைத்து அவற்றுள் மிகச்சுவையானவற்றையே தேர்ந்தெடுத்தான். அவற்றை
மேலும் சுவையுள்ளவையாக்க அவற்றின் மேல் தேன் வார்த்துக் கொடுத்தான் திண்ணன்.
தினமும் பூசைக்கு
வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பிறப்பிறப்பிலாப் பெருமானை மிகுந்த அன்புடன் வழிபடச்
செல்வான். முனிவர் இட்டிருந்த மலர்களை அவன் காலால் அப்புறப்படுத்தி மான்கறி, காட்டுப்பன்றிக்கறி
அளிப்பான். இரவு உறக்கத்தை மறந்து சிவனைக் காவல் காப்பதையே கருத்தாகக் கொள்வான். மீண்டும்
பகலில் சிவனுக்கு இரை தேடுவதற்காக வேட்டையாடச் செல்வான். பகலில் வழிபட வரும் சிவகோச்சாரியாரோ
சன்னதியில் தகாத பொருட்கள் இருப்பதைக் கண்டு வேதனைப்பட்டு அவற்றை அப்புறப்படுத்திச்
சுத்தம் செய்து முறைப்படி வழிபடுவார்.
இப்படியாக நம்
நாயனார் (திண்ணனார்) இறைவருக்கு இறைவனான சிவபெருமானைத் தனக்குத் தெரிந்த முறையில் வழிபட்டுக்
கொண்டிருக்க, சிவகோச்சாரியார் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டித் தவித்தார்.
இப்படியொரு தகாத செயலைச் செய்பவனை நீ தான் அடையாளம் காட்டி அவனை அகற்ற வேண்டுமென்று
சிவனிடம் முறையிட்டார். நாயனாரின் மெய்யான அன்பை விளக்க, சிவகோச்சாரியாரின் கனவில்
சிவன் தோன்றி, “அவனை ஒரு குற்றவாளியைப் போல் எண்ணாதே! என்னுடைய அன்பே அவனை முழுக்க
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
அவன் என்னைப்
பற்றி மட்டுமே நினைக்கிறான். அவன் செயல்கள் எனக்கு ஆனந்தமளிக்கின்றன. அவன் வாயிலிருந்து
என் மேல் அவன் துப்பும் தண்ணீர் கங்கையைவிடப் புனிதமானது, அவன் தலையில் சூடிக்கொண்டுவந்து
எனக்கு அளிக்கும் மலர்கள் தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் மலர்களை விடப் புனிதமானவை.
இவையெல்லாம் அவனுடைய அன்பின் அடையாளம். நாளை அவன் வரும்போது மறைந்திருந்து பார்த்தாயானால்
அவனுடைய பக்தியின் மகிமை உனக்குத் தெரியும்!” அச்சமும் பிரமிப்பும் கலந்த எண்ணங்களோடு
சிவகோச்சாரியார் அன்றிரவு முழுவதும் உறங்க இயலாமல், சூரியன் உதித்தவுடன் பொன்முகலியாற்றுக்குச்
சென்று நீராடிவிட்டு காளஹஸ்தி ஈசுவரனின் சன்னதியை அடைந்து மறைவாக இருந்து கவனித்தார்.
அன்று ஏழாவது
நாள்… திண்ணனார் என்றும் போல் அளவிலா அன்புடன் பூசைப் பொருட்களைக் கொண்டுவந்தார். பூசைக்குத்
தாமதமாயிற்றே என்றெண்ணிய திண்ணனாருக்குப் போகிற வழியெல்லாம் அபசகுனங்கள் பல தோன்றின.
சிவனுக்கு ஏதேனும் ஆயிற்றோ என்றஞ்சி விரைந்தோடினார். சிவகோச்சாரியாருக்குத் திண்ணனாரின்
அன்பைக் காட்டுவதற்காக சிவன் தன் முக்கண்ணில் ஒன்றிலிருந்து இரத்தம் கசியச் செய்தார்.
அதைக் கண்ட திண்ணனார் அம்பும் வில்லும் இறைச்சியும் ஆங்காங்கே சிதற அஞ்சி அதிர்ச்சியடைந்து
மிகவும் வேதனைப்பட்டார். சிவனருகே ஓடிச்சென்று குருதியை நிறுத்த முயன்றார், ஆனால் அது
நிற்கும்படியாக இல்லை.
இச்செயலைச்
செய்த குற்றவாளி யாராக இருக்குமென்று உக்கிரமான கோபத்துடன் எல்லாப் பக்கமும் தேடினார்.
மக்களையோ மிருகங்களையோ யாரையும் அருகே காணவில்லை. மனமுடைந்து சன்னதிக்குத் திரும்பியவர்,
தன் கால்களைக் கட்டிக்கொண்டு அழுதார். பிறவிப்பிணி முதலாய எல்லாப் பிணிகளையும் தீர்க்கும்
மருந்தான சிவபெருமானின் பிணிதீர்க்க மருந்து தேடிக் காற்றைப்போல் மிகவிரைவாகச் சென்று
காட்டிலிருந்த மூலிகைகளிலிருந்து மருந்தெடுத்துக் கொண்டுவந்தார். அப்படியும் ஒரு பிரயோசனமுமில்லை!
சிவன் கண்ணினின்றும்
வழியும் குருதியை நிறுத்தமுடியாத தன் இயலாமையை எண்ணி வாடி வருந்திய திண்ணனாருக்குத்
திடீரென்று ஒரு யோசனை உதிக்க, அம்பினால் தன் கண்ணைத் தோண்டியெடுத்து சிவனின் கண் இருக்குமிடத்தில்
வைத்தார். உடனே இரத்தம் வழிவது நிற்கவும், அவர் பேரானந்தமடைந்து வான் வரை குதித்துத் தான் செய்த
வீரச்செயலையெண்ணி மகிழ்ந்தார்.
ஆனால் சிவபெருமானோ
அவருடைய பக்தி இதைக்காட்டிலும் எல்லையற்றது என்பதை நிரூபிக்க முடிவெடுத்தார். அவர்
வலது கண்ணில் குருதி நின்றதும் இடது கண்ணினின்று குருதி வழியத் தொடங்கியது. ஒரு கணம்
அதிர்ச்சியடைந்த நாயனார், “ஓ… இப்போது தான் இப்பிணிக்கு மருந்து என்னவென்று
எனக்குத் தெரியுமே… என்னிடம் இன்னொரு கண் உள்ளதல்லவா? அதுவே இதைத் தீர்த்து
வைக்கும்!” என்று தெளிந்தார். முன்பு போலவே அம்பினால் கண்ணைத் தோண்டப் போனவர் அதையும்
எடுத்துவிட்டால் கண்ணில்லாமல் (பார்வையிழந்த பின்) எப்படிச் சிவலிங்கத்தின் கண் எங்கேயிருக்கிறது
என்று தேடி வைப்பது என்று குழம்பி அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தார். அவர் காலைத் தூக்கிச்
சிவலிங்கத்தின் கண் இருக்குமிடத்தைக் குறித்துக் கொள்வதற்காகத் தன் கால் கட்டை விரலை
வைத்துக் கொண்டார். பின் அவர் அம்பை எடுத்துத் தன் இன்னொரு கண்ணைத் தோண்டியெடுக்க எத்தனித்தார்.
இதை விவரிக்க
வார்த்தைகளேயில்லை. (திண்ணனார்) கண்ணப்ப நாயனாரும் பக்தியும் வெவ்வேறில்லை,
இரண்டும் ஒன்றே என்று சொன்னாலும் போதாது. இதைக் கண்ட சிவபெருமானுக்கே பொறுக்கமுடியாமல்
கண்ணப்பருக்குக் காட்சியளித்ததோடு மட்டுமல்லாமல் “ஓ… நில் கண்ணப்பா! நில் கண்ணப்பா!”
என்று அவர் கைகளைப் பிடித்து நிறுத்தி மற்றொரு கண்ணைப் பறித்து எடுக்க விடாமல் தடுத்தார்.
மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த சிவகோச்சாரியார் கண்ணப்பரின் அளவிலாப் பேரன்பையும்
அதற்கு அவருக்குக் கிட்டிய அருளையும் கண்டார். அப்பேர்ப்பட்ட சுயநலமிற்ற அன்பே சிவபெருமான்
மிருகங்களின் இறைச்சியையும் இனிய கனியாக ஏற்றுக்கொண்டதற்குக் காரணம்.
“ஓ! அன்பிலும்
பக்தியிலும் ஒப்பற்றவனே! நீ என் வலப்பக்கமாக இருப்பாயாக! என்று சொல்கிறார்!!
நாம் இதுவரை
கண்ணப்ப நாயனார் அவர்களின் புராணத்தை படித்தோம். இவர் கி.பி.300 – 600 ஆண்டுகளின் இடைப்பட்ட
காலத்தில் வாழ்ந்ததாக கூறுகின்றார்கள். கண்ணப்ப நாயனாரை பற்றி வள்ளற்பெருமானும் தமது
திருஅருட்பாவில் ஏழு இடங்களில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
கண்ணப்பன் என்னும்
திருப்பெய ரால்உல கம்புகழும்
திண்ணப்பன்
ஏத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டனிட்ட
விண்ணப்பம்
ஒன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
தெண்ணப் படும்நின்
திருவருள் ஈகஇவ் வேழையற்கே. – 373
வண்ணப்பல் மாமலர்
மாற்றும் படிக்கு மகிழ்ந்தெமது
திண்ணப்பர்
சாத்தும் செருப்படி மேற்கொண்டு தீஞ்சுவைத்தாய்
உண்ணப் பரிந்துநல்
ஊன்தர உண்டுகண் ஒத்தக்கண்டே
கண்ணப்ப நிற்க
எனக்கைதொட் டார்எம் கடவுளரே. – 825
கண்ணப்பா என்றருளும்
காளத்தி யப்பாமுன்
வண்ணப்பால்
வேண்டும் மதலையைப்பால் வாரிதியை
உண்ணப்பா என்றுரைத்த
ஒற்றியப்பா வந்தருள
எண்ணப்பா என்றழும்இவ்
ஏழைமுகம் பாராயோ. – 1159
கண்ணப்பன் ஏத்துநற்
காளத்தி யார்மங் கலங்கொளொற்றி
நண்ணப்பர் வேண்டும்
நலமே பரானந்த நன்னறவே
எண்ணப் படாஎழில்
ஓவிய மேஎமை ஏன்றுகொண்ட
வண்ணப் பசும்பொன்
வடிவே வடிவுடை மாணிக்கமே. – 1456
வேல்பிடித்த
கண்ணப்பன் மேவுமெச்சில் வேண்டுமிதத்
தாற்பொசித்து
நேர்ந்த தயாளனெவன் – 1965-146
உப்பிருந்த
ஓடோ ஓதியோ உலாப்பிணமோ
வெப்பிருந்த
காடோ வினைச்சுமையோ - செப்பறியேன்
கண்ணப்ப ருக்குக்
கனியனையாய் நிற்பணியா
துண்ணப் பருக்கும்
உடம்பு. – 1987
கண்ணப்பன் ஏத்துநற்
கண்ணப்ப மெய்ஞ்ஞான
விண்ணப்ப நின்றனக்கோர்
விண்ணப்பம் – மண்ணிற்சில்
வானவரைப் போற்றும்
மதத்தோர் பலருண்டு
நானவரைச் சேராமல்
நாட்டு. – 2066
இவ்வாறு வள்ளற்பெருமான்
கண்ணப்ப நாயனாரை குறிப்பிட்டு பல்வேறு இடங்களில் பாடியிருப்பது அவரது முக்கியத்துவத்தை
எடுத்துக்காட்டுகின்றது. இறைவன் மீது உள்ள அன்பின் மிகுதியால் தனது எச்சிலை அவர் மீது
உமிழ்கின்றார், தமது காலை அவர்மீது வைக்கின்றார், பன்றி கறியை படைக்கின்றார், தன் தலையில்
சூட்டிய மலரினை கொண்டு வந்து இறைவனுக்கு சூட்டுகின்றார் இப்படி அன்பின் மிகுதியால்
தவறினையே இழைக்கின்றார் கண்ணப்பர். இருந்தாலும் சிவபிரான் கண்ணப்பரின் குற்றத்தை எல்லாம்
குணமாகக் கொள்கின்றார்.
குறிப்பாக ஊன் உணவை உண்பவனுக்கும் ஊன் உணவை படைத்தவனுக்கும்
இறைவன் எவ்வாறு அருள் வழங்க முடியும்? என்கின்ற மிகப்பெரிய கேள்வி நம்மிடையே எழுகின்றது.
உயிர்களிடம் அன்பில்லாதவன் எவ்வாறு இறைவனிடம் அன்பு வைக்கமுடியும்.
மருவாணைப் பெண்ணாக்கி
ஒருகணத்தில்
கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி
இறந்தவரை
எழுப்புகின்ற உறுவ னேனும்
கருவாணை யுறஇரங்கா
துயிருடம்பைக்
கடிந்துண்ணுங் கருத்த னேல்எங்
குருவாணை எமதுசிவக்
கொழுந்தாணை
ஞானிஎனக் கூறொ னாதே. – 3027
ஆண் என்பவனை
பெண்ணாக மாற்றியும், பெண் என்பவளை ஆணாக மாற்றியும், இறந்தாரை எழுப்பியும் சித்து செய்கின்ற
ஒருவர் ஊன் உணவு உண்ணலாம் என்கின்ற கருத்தினை உடையவராயின் அவரை ஞானி என்று கூறக்கூடாது
என்று தமது குருவின் மேலும் சிவபெருமான் மீதும் ஆணையிட்டு ஒரு ஞானியின் இலக்கணத்தை
வெளிப்படுத்துகின்றார் வள்ளலார். ஒரு ஞானிக்கே இவ்வரை என்றால், தான் வணங்கும் சிவபெருமான்
ஊன் உணவை ஏற்று அருள் புரிந்தார் என்றால் அவ்விறைவனை மட்டும் வள்ளலார் ஏற்றது எஞ்ஞனம்?
மேலும் ஊன் உணவை படைத்த கண்ணப்பனையும் பாடியிருகின்றார்! ஊன் உணவை ஏற்ற சிவபெருமானையும்
பாடியிருக்கின்றார்! வியப்பாக உள்ளதே! எங்கு தவறு நேர்ந்துள்ளது? வள்ளலார் கொள்கையிலா?
அல்லது சிவபெருமானின் அருளிலா?
கண்ணப்பரின் இறுதி நிகழ்வினை இங்கு மீண்டும்
நினைவுறுவோம். சிவபெருமானின் ஒரு கண்ணில் இரத்தம் வருகின்றது. அதனை நிறுத்த தனது கண்ணில்
ஒன்றை எடுத்து சிவபெருமான் கண்ணின் மீது அப்புகின்றார். இரத்தம் நின்று விடுகின்றது.
உடனே சிவபெருமானின் மற்றொரு கண்ணிலிருந்து இரத்தம் வடிகின்றது. உடனே கண்ணப்பர் தமது
இன்னொரு கண்ணினை எடுக்க முயல்கின்றபோது அவரை தடுத்து ஆட்கொள்கின்றார் சிவபெருமான்.
இந்தக் கதையிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது
என்னவெனில், “கண்ணப்பர் தமக்கிட்ட புலால் படையலை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் ஒரு பன்றியை கொல்லும்போது அதற்கு எவ்வாறு இரத்தம் வந்ததோ அது போல் எமது கண்ணின்
வழியே இரத்தத்தை வழியவிட்டு எமது எதிர்ப்பையும் உயிரிரக்கத்தையும் கண்ணப்பருக்கு காட்டினேன்”
என்பதுதான் சிவபெருமானின் வாக்குமூலம்.
ஆனால்… அதற்குள் கண்ணப்பர் தமது ஊனினையே
(கண்கள்) சிவபெருமானுக்கு காணிக்கையாக கொடுத்தமையால்… அந்நொடியில் சிவபெருமான் கண்ணப்பரின்
உண்மையான அன்பினைக் கண்டு அவருக்காக இரங்கி அவரை ஆட்கொள்கின்றார். அதாவது இவன் பிற
உயிர்களை கொன்று அதனை தமக்கு படையல் அளிப்பதோடு தம்மையும் அழித்துக்கொள்ள தயங்கவில்லை
என்பதால் பிற உயிர்கள் போலவே தன்னுயிரையும் பார்த்ததால் கிடைத்த பரிசே அது.
தன்னுயிர்போல் பிற உயிர்களையும் நேசிக்க
வேண்டும் என்பது வள்ளலாரின் கொள்கை. இறைவனுக்காக பிற உயிர்களைபோல தன்னுயிரையும் அழிக்க
வேண்டும் என்பது கண்ணப்பரின் கொள்கை. பொதுவாக இவை இரண்டிலும் அருள் கிடைக்கின்றது.
இரண்டாவதாக கிடைக்கும் அருளிலிருந்து நாம் ஒன்றினை படிப்பிணையாகக் கொள்ள வேண்டும்.
கண்ணப்பரின் ஊன் தனக்காக சிதையும்போது அதனை சிவபெருமான் தடுத்து அருள்வதுபோல, பிற உயிர்களின்
ஊன் சிதையும்போது மனிதர்களாகிய நாம் அதனை தடுத்து காக்க வேண்டும், தனது ஊனினையும் காத்துக்கொள்ள
வேண்டும். யாருக்காகவும் உயிர்களை / ஊன்களை பலியாகக்கூடாது என்பதே கண்ணப்பரின் கதை
உணர்த்துகின்றது. வள்ளலார் இதனை உணர்ந்தார். கண்ணப்பர் இதனை உணர்த்தப் பெற்றார்.
இவ்வுலகில் இறைவனுக்காக பிற உயிர்களை பலியிடுபவர்களில்
யாரேனும் அதே இறைவனுக்காக தன்னுயிரை பலிகொடுக்க முன்வருவார்களா? இறைவனுக்காக மொட்டை
அடித்தல், காது குத்தல், மூக்கு குத்தல், நெருப்பு மிதித்தல், அலகு குத்துதல், ஊசி
குத்திக்கொள்ளுதல், தேர் இழுத்தல், காவடி எடுத்தல், முள் படுக்கையில் படுத்தல், ஆணி
செருப்பில் நடத்தல், மிளகாய் குழம்பில் குளித்தல், கொதிக்கின்ற எண்ணையில் வடை சுடுதல்
இவை போன்ற நாகரிகமற்ற உடம்பை வருத்திக்கொள்ளும் நிகழ்ச்சியினால் ஆவதென்ன? ஒரு முறை
உங்களை பலிகொடுத்துதான் பாருங்களேன்! வேண்டாம்… கண்ணப்பர் போல் உங்கள் கண்களையாவது
பிடுங்கி கொடுங்களேன்! முடியுமா…? முடிந்தாலும் இறைவன்தான் அருள்வானா? இரண்டும் நடக்காது.
எனவே கண்ணப்பர் கதை மூலம் நாம் வள்ளற்பெருமானின் உயிர் இரக்கத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நினைத்தே கண்ணப்பரை குறித்து வள்ளலார் தமது திருஅருட்பாவில் பாடியுள்ளார். ஆகவே நாம் கண்ணப்ப நாயனாரை பின்பற்றினால் நமக்கு”சத்அருள்” என்கின்ற சித்து கிடைக்கும். 63 கலைகளில் “சத்அருள்” என்பது இரண்டாவது கலையாகும். கண்ணப்பர் போன்று தம்மையே இறைவனுக்கு கொடுக்க முன்வருபவர்களுக்கு “சத்அருள்” என்கின்ற இரண்டாவது கலையுடன் நமது ஆன்மா வளர்ச்சியடையும். “சத்அருள்” என்கின்ற கலையை குறிக்க எழுந்தது கண்ணப்ப நாயனார் புராணம்.
பெயர்: கண்ணப்ப நாயனார்
குலம்: வேடர் -கங்கை குலம்
பூசை நாள்: தை மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி (பஞ்சபூத தளங்களில் வாயு தளமாக விளங்குகின்றது)
குலம்: வேடர் -கங்கை குலம்
பூசை நாள்: தை மிருகசீருஷம்
அவதாரத் தலம்: உடுப்பூர்
முக்தித் தலம்: திருக்காளத்தி (பஞ்சபூத தளங்களில் வாயு தளமாக விளங்குகின்றது)
--தத்துவங்கள்
தொடரும்…
A scholar who become a follower of Sanmargh (Sanmargh – the path advocated by Vallalar)
ReplyDeleteKaranapattu S M Kandasamy Pillai was a learned person, a great scholar, musician, poet and had great affinity on Tamil language. He was suffering with a unique disease that he got fainted often. All sorts of treatments failed. He came to know about Vallalar and hence he came and requested Vallalar to cure him. Vallalar not only cured him by giving Vibhuti (holy ash), but also accepted him as his disciple. Since then, he started propagating about Vallalar, his greatness, his principles, etc. He also followed the various disciplines advocated by Vallalar (such as avoidance of killing animals, non intake of non vegetarian food, feeding the poor etc) scrupulously and remained a pure sanmarghi next to Thozhuvur Velayudha Mudaliar.
He wrote “ Sarithira Keerthanai”, “Sarguru Venpa Andhathi”, “Gurunesa venpa”, “Siddhivilasa Namavali”, etc., composed several songs on Vallalar, compiled and published them as “prabhandha thirattu”. He also compiled entire “Thiruvarutpa” in a single book and published in 1924. In this way, Kandasamy pillai spent his life in the service of Vallalar and got his Grace.
ச.மு.க. விளக்கம் மிக நன்று
Deleteஅற்புதம் அற்புதம் அற்புதமே.
ReplyDeleteநன்றி ஐயா...
Delete