(வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும்
“சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் பிப்ரவரி – 2018 –ஆம் மாதம்
வெளியானவை…)
திரு அருட்பெருஞ்ஜோதி
அகவல் – உரை
தொடர் - 15
--தி.ம.இராமலிங்கம்
பொதுவுணர்
வுணரும் போதலாற் பிரித்தே
அதுவெனிற்
றோன்றா வருட்பெருஞ் ஜோதி – 122
ஒரு மதம் பிடித்த
யானை அசையாமல் நிற்கின்றது. அதனைக் கண்ட ஒரு குழந்தை பயந்து நடுங்கி அதன் அருகே செல்ல
பயப்படுகின்றது. ஆனால் அக்குழந்தையின் தந்தை அந்த யானைக்கு அருகில் சென்று, பயப்படாதே
குழந்தாய் இது மரத்தால் செய்த யானைதான்… பயம் கொள்ளாது என்னைப்போல் அருகில் வந்து தொட்டு
விளையாடு என்று அக்குழந்தையை அழைக்கின்றான். பிறகு அக்குழந்தையும் தயங்கியப்படி வந்து
உண்மை உணர்ந்து அந்த மதம் பிடித்த யானையை தொட்டு விளையாட ஆரம்பித்துவிடுகின்றது.
இக்கதையில்
அக்குழந்தையின் மனம் பொது உணர்வில் இருக்கின்றது. உயிரற்ற பொம்மைகள் எவை? உயிருள்ள
பொம்மைகள் எவை? என்று பேதம் காணாது அனைத்து பொம்மைகளும் உயிர் உள்ளவையே என்ற பொது உணர்வை
குழந்தைகள் மனம் கொண்டுள்ளது. ஒரு மண்ணாங்கட்டி தன் காலடி பட்டு உடைபட்டால்கூட அதற்காக
வருந்தி மயக்கமடைவார்கள் சுத்த சன்மார்க்கிகள். மண்ணாங்கட்டிக்கு உயிரில்லையே என்று
பார்ப்பதைக் காட்டிலும் அதன் உருவம் தன்னால் சிதைந்துவிட்டதே என்ற பொது உணர்வு சுத்த
சன்மார்க்கிகளுக்கு வந்துவிடும்.
இவ்வாறு பொது
உணர்வு இருக்கும் ஞானிகளுக்கு இவ்வுலக பொருட்களும், இவ்வுலக உயிர்களும் இறைவனாகவே காட்சியளிக்கும்.
ஒரு குழந்தை மரத்தால் செய்த யானையைக் கண்டு பயந்தது போல ஞானிகளும் தாம் பார்க்கும்
எதனையும் இறைவனாகவே பார்ப்பர்.
அவ்வாறு பொதுவுணர்வு
அற்று இறைவன் வேறு உலகம் வேறு என்று பிரித்துப்பார்க்கும்போது அங்கே இறைவன் மறைந்து
ஜடப்பொருட்களாகவே காட்சியளிக்கக்கூடிய நிலமையுறும். குழந்தையின் தந்தையாவன் இது மரத்தாலான
யானைதான் என்று தம் குழந்தைக்கு உணர்த்தியப் பிறகு அக்குழந்தைக்கு யானை மறைந்து மரம்
தோற்றமளித்துவிடுகின்றது. அவ்வாறே அஞ்ஞானிகள் இறைவனை தனித்து பிரித்து அறிய முற்படுகின்றார்கள்.
அவ்வாறு இறைவன் தனித்து தோன்றும் இயல்பு அற்றவனாக இருக்கின்றான். அவன் எதிலும் தன்னை
கலந்தவனாக, எவ்வுயிரிலும் தன்னை இணைத்தவனாக உள்ளான்.
இதனையே திருமூலர்,
மரத்தை மறைத்தது
மாமத யானை
மரத்தில் மறைந்தது
மாமத யானை
பரத்தை மறைத்தது
பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது
பார்முதல் பூதம்
என்கின்றார்.
எனவே பொது உணர்வு ஒன்றே இறைவனை காணும் வழி. இறைவனை தனித்து பார்க்கின்றேன் என்றால்
அவன் தனித்து தோன்றமாட்டான் என்கின்றார் வள்ளலார்.
பொது உணர்வால்
உணரும் போதலால் மட்டுமே தோன்றும் இயல்புடைய இறைவனே, உம்மை ஒன்றிடமிருந்து பிரித்து
அதுதான் நீ எனில், அங்கே உம்மை தோன்றாமல் மறைத்துக்கொள்ளும் இயல்புடைய அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரே.
உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா
வருட்பெருஞ் ஜோதி – 124
உளவு வேலை பார்க்கத்
தெரிந்தால்தான் இறைவனையே உணரமுடியும். உளவு வேலை என்பது என்ன? வேறொரு நாட்டின் இராணவ
இரகசியங்களை அந்நாட்டிற்குத் தெரியாமல் தம் நாட்டு அதிகாரிகளுக்குத் தெரிவித்து நாட்டின்
பாதுகாப்பை உறுதிபடுத்தும் செயலை உளவு என்பர். இறைவனையே ‘கள்வன்’ என்பர் ஞானிகள். அவர்களது
உள்ளத்தில் அவர்களுக்கே தெரியாமல் புகுந்து
குடிகொண்டுவிடும் இறைவனை ‘கள்வன்’ என செல்லமாக அழைப்பர் ஞானிகள். நம் உள்ளத்தில் இறைவன்
குடிகொண்டுவிட்டான் என்பதை சில உளவு வேலை பார்த்துதான் நாம் தெரிந்துகொள்ள முடியும்.
நீங்கள் நினைப்பது நடந்தேறும்போதும், நீங்கள் உரைப்பது உண்மையாகும்போதும், பிற உயிர்களுக்காக
நீங்கள் இரக்கப்படும்போதும் இறைவன் நம் உள்ளத்தில் இருந்து ஆட்டுவிக்கின்றான் என்ற
உளவினை அறிந்துக்கொள்ள வேண்டும்.
பிறருடைய இரகசியத்தை
அவர்களுக்கே தெரியாமல் நாம் அறிந்துக்கொண்டால் அதனை உளவு செயல் என்கின்றோம். ஒரு வீடு
ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கின்றது. வெளியூர் சென்ற வீட்டின் உரிமையாளர் இன்னும் வந்து
சேரவில்லை என்பதனை அறிந்து, அவ்வீட்டின் முகவரியினை தமக்குத் தெரிந்த திருட்டுத் தொழில்
செய்பவன் ஒருவனுக்கு தெரிவித்து அவனை திருடத் தூண்டுவதும் உளவு வேலையே ஆகும். இப்பாவச்
செய்கையினை, ‘களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ’ என்பார் வள்ளலார்.
இறைவனுக்கே
உளவு சொன்னவர் நமது வள்ளலார். எப்படி? சிதம்பரத்தில் நீ ஆடுவதற்கு ஒரு அம்பலம்தான்
இருக்கின்றது. இங்கே நீ இடமில்லாமல் இடுக்கில் ஆடிக்கொண்டிருக்கின்றாய். நீ வடலூர்
வந்தால் அங்கே எட்டம்பலம் உள்ளது. இடுக்கில்லாமல் ஆடலாம் என்கின்ற வடலூர் உளவினை /
வடலூர் இரகசியத்தை சொல்லி ஞானசபைக்கு அழைக்கின்றார் வள்ளலார்.
இடுக்கி லாமல்இருக்க
இடமுண்டு நடஞ்செய்ய
இங்கம் பலம்ஒன்றங்கே
எட்டம் பலம்உண்டைய
ஒடுக்கில் இருப்பதென்ன
உளவுகண்டு கொள்வீர்என்னால்
உண்மைஇது வஞ்சமல்ல
உம்மேல் ஆணை என்று சொன்னால்
வருவார ழைத்துவாடி
வடலூர் வடதிசைக்கே – 4485
இப்படி அருள்
செய்வோருக்கு உளவு சொல்லி ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் வரச்செய்தல் ஞானிகள் செய்யும்
உளவு செயலாகும். தம்மை அறிவதற்கு இறைவனும் வள்ளலாருக்கு ஓர் உளவினை தெரிவிக்கின்றார்,
உயிருள்யாம்
எம்முள் உயிர்இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுக
என்றுரைத்த மெய்ச்சிவமே…
உயிர்களுக்குள்
இறைவனும், இறைவனுக்குள் உயிர்களும் இருக்கும் உளவினை / இரகசியத்தை இறைவனெ வள்ளலாருக்கு
தெரிவிக்கின்றார். அவரும் அவ்வுளவினை அறிந்திருக்கின்றார் என்பதனை,
உயிரெலாம் ஒருநீ
திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுவென
அறிந்தேன்
என்று பாடுகின்றார்.
மேலும் உளவினால் மட்டுமே இறைவனை அறியமுடியும் என்பதை கவியரசு கண்ணதாசனின் பாடலிருந்து
நாம் மிக எளிதாக புரிந்துக்கொள்ள முடியும்.
பூஜ்ஜியத்துக்குள்ளே
ஒரு
ராஜ்ஜியத்தை
ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான்
ஒருவன் – அவனைப்
புரிந்துகொண்டால்
அவன்தான் இறைவன்.
தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள
ஓட்டுக்குள்ளே
தேங்காயைப்
போலிருப்பான் ஒருவன் – அவனைத்
தெரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்.
வெள்ளருவிக்
குள்ளிருந்து
மேலிருந்து
கீழ்விழுந்து
உள்ளுயிரைச்
சுத்தம் செய்வான் ஒருவன் – அவனை
உணர்ந்து கொண்டால்
அவன்தான் இறைவன்.
வானவெளிப் பட்டணத்தில்
வட்டமதிச் சக்கரத்தில்
ஞானரதம் ஓட்டிவரும்
ஒருவன் – அவனை
நாடிவிட்டால்
அவன்தான் இறைவன்.
ஒன்பது ஓட்டைக்குள்ளே
ஒருதுளிக் காற்றைவைத்து
சந்தையில் விற்றுவிட்டான்
ஒருவன் – அவன்
தடம் தெரிந்தால்
அவன்தான் இறைவன்.
கோழிக்குள்
முட்டை வைத்து
முட்டைக்குள்
கோழி வைத்து
வாழைக்கும்
கன்றுவைத்தான் ஒருவன் – அந்த
ஏழையின் பேர்
உலகில் இறைவன்.
இவைபோன்ற உலகியல்
உயிர்களையும் உலகியல் நடப்புகளையும் கூர்ந்து கவனித்து அதன் உளவினை / இரகசியத்தை அறிவதின்
மூலம் அந்த உளவின் வெளிப்பாடாக இறைவனை அனுபவிப்பதே இறை அனுபவமாகும்.
இவ்வாறு உளவினால்
இறைவனை அறியாது, அவனை அளந்து பார்க்கப் புகுவது தோல்வியில் முடியும். இறைவனுக்கு சிலை
வடிப்பது, இறைவனுக்கு பெயர் வைப்பது, இறைவனுக்கு கோவில், தேவாலயம், சபை போன்ற வழிபாட்டு
இடங்கள் கட்டுவது, இறைவனுக்கு திருவிழா செய்வது, அவன் எட்டு குணங்களை உடையவன் என்பது,
அவனை அருளாளன் என்பது, அவனை அரு அல்லது உரு என்று தமது மனதிற்கு வந்ததை சொல்வது, தமக்கு
தீங்கு நடக்கும்போது அவனை இரக்கமற்றவன் என்று இழிப்பது, அவன் இருக்கின்றான் என நம்புவது,
அவன் இல்லை என்று நம்புவது, அவன் ஆண், பெண் அல்லது அலி என பாலினம் சார்ந்து அளப்பது,
அவன் ஒருவன் என்பதும், அவன் பல என்பதும், அவன் இச்சமயத்தான் என்பதும், அவன் இம்மதத்தான்
என்பதும், அவனை சடங்குகள் மூலம் வழிபடுவதும் இவைபோன்ற புகழ்தல், இகழ்தல் என்ற அளவைகளுள்
இறைவன் ஒருபோதும் சிக்கமாட்டான் என்பதை அறியவேண்டும். இவ்வாறு இறைவனை அளந்தால் அந்த
அளவைகளுக்கு அளவே இருக்காது. அதனால் இறைவனை உணர வேண்டுமாகில் உளவினால் மட்டுமே உணரவேண்டும்
என்கின்றார் வள்ளலார்.
உனது உளவு வேலைகளான
உயிர்கள், உலகங்கள், அண்டங்கள், வெளிகள், அணுக்கள் இவை போன்றவைகளின் இயக்கத்தைக் கண்டு
உன்னை அறிய முடியுமே ஒழிய உனது குணம், வடிவம், பெயர், பால், இடம், செயல் போன்ற அளவைகளால்
அளந்து அறியமுடியா வண்ணம் இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
என்னையும்
பணிகொண் டிறவா வரமளித்
தன்னையி
லுவந்த வருட்பெருஞ் ஜோதி – 126
படைத்தல், காத்தல்,
அருளல், மறைத்தல், அழித்தல் ஆகிய ஐந்து பணிகளை செய்பவர்கள் எண்ணில்லா கோடிக்கணக்கான
தேவர்கள் என திருஅருட்பா கூறும். மேலும் இந்த ஐந்து பணிகளையும் ஒருங்கே செய்யும் வல்லமையுடைய
தேவர்கள் யாருமிலர். மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் போன்றே இத்தேவர்கள் எல்லாம் பிறப்பு
இறப்பு என்னும் சுழற்சியுடையவர்களாவர். இவர்களையெல்லாம் பணிகொள்பவர் அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவராவார்.
இத்தேவர்களை
வேலை வாங்கியது போன்று தன்னிடமும் இறைவன் வேலை வாங்கியதை எண்ணி பாடுகின்றார். மேலும்
மற்ற தேவர்களிடமிருந்து வேறுபட்டவராக தம்மை காட்டிக்கொள்கின்றார் வள்ளலார். எப்படியெனில்,
மேற்சொன்ன ஐந்து தொழில்களையும் இறைவன் தம்மை மட்டுமே செய்யச் சொன்னதாக விளம்புவார்.
“ஐந்தொழில்களையும் யாம்செய்ய தந்தனை…” என்று இறைவனை அவர் போற்றுவதிலிருந்து இதனை நாம்
அறியலாம். வள்ளற்பெருமான் அரூப நிலைக்கு செல்லும் முன்பே, மனித ரூபத்தில் இவ்வுலகில்
பிறருடன் நடமாடும்போதே இத்தொழில்கள் ஐந்தையும் செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பது இவ்வுலகில்
வேறு யாருக்கும் கிடைக்காத பெரும் பேற்றை பெற்றவராகின்றார்.
அதுமட்டுமல்லாது
சிவன், விஷ்ணு, பிரம்மா போன்ற மற்ற தேவர்களை போன்று இறந்து பிறக்கும் சுழற்சியை கடந்து
இறவா நிலையும் பெற்றவராகின்றார் என்பதை நாம் இங்கு காண்கின்றோம்.
பெற்ற அன்னையின்
அன்பைவிட பேரன்புடன் எம்மிடம் ஐந்தொழில்களையும் செய்யப்பணித்து இறவா நிலையும் எனக்களித்த
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
ஓதியோ
தாம லுறவெனக் களித்த
ஆதியீ
றில்லா வருட்பெருஞ் ஜோதி – 128
ஓதுகின்ற உறவு
என்பது உலகியல் அறிவினை பெறுவது. ஓதாத உறவு என்பது அருளியல் அறிவினை பெறுவது. ஓதுகின்ற
கல்வியில் ஜீவ உறவு மட்டும் இருக்கும். கடவுள் உறவு இருக்காது. ஓதாத கல்வியில் ஜீவ
உறவுடன் கடவுள் உறவும் காரியப்படும். ஓதுகின்ற ஜீவ உறவில் எண்ணங்கள் தமது ஆதிக்கத்தை
அதிகரித்துக்கொண்டே செல்லும். ஓதாத கடவுள் உறவில் தன்னையும் தன்னுள் உறைந்துள்ள பேரறிவையும்
அறிய முடியும். ஜீவ உறவில் உலகமும், கடவுள் உறவில் உலகை தாண்டிய பிரபஞ்சமும் சம்பந்தப்பட்டிருக்கும்.
நம்மில் பெரும்பாலருக்கு இறைவன் ஓதுகின்ற உறவினை மட்டுமே கொடுத்துள்ளான். சில அருளாளர்களுக்கு
மட்டுமே ஓதாத உறவினையும் சேர்த்து கொடுத்துள்ளான். அவ்வகையில் நமது வள்ளற்பெருமானுக்கு
ஓதுகின்ற உறவையும், ஓதாத உறவையும் இணைத்து கொடுத்துள்ளான் இறைவன். சும்மா இருக்கும்
சுகத்தில், மெளனத்தில் கிடைக்கக்கூடிய ஓதாத அறிவே கடவுள் அறிவாகும். பல இறையியல் கேள்விகளுக்கு
மெளனமே விடை பகிரும்.
இவ்வுலகியல்
அறிவை எமக்கு ஓதியும், பிரபஞ்ச அறிவை எமக்கு ஓதாமலும் உறவாய் அளித்த, தொடக்கமும் முடிவும்
அற்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
படியடி
வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி
யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி – 130
படியின் அடிக்குக்
கீழ் என்று ஏதுமில்லை. மேலே ஏறவுதவும் படிக்கட்டில் மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு
படிக்கட்டாக இறங்கி வந்தால் இறுதியில் உள்ள அடி படிக்கட்டுக்கும் கீழ் நம்மால் இறங்க
முடியாது. எனவே அந்த படியடி என்பது கீழ்நிலைக்கு எல்லையாக உள்ளது.
வான்முடி என்பது
மேல் நிலைக்கு எல்லையாக உள்ளது. வான் என்பது ஒரு கற்பனையே. அப்படி ஒன்றும் இல்லை. விண்
வெளியை வான் என்று அழைப்பர். அதன் எல்லை எதுவென்று கூறமுடியாது அல்லது அதற்கு எல்லையே
இல்லை. இருப்பினும் அதற்கும் ஒரு எல்லை இருந்து அதன் முடிவினை அடைதலை வான்முடி எனலாம்.
இவ்வாறு எந்த
வரையறை கீழ்நிலையாக இருகின்றதோ அங்கிருந்து எந்த வரையறை மேல்நிலையாக இருக்கின்றதோ அதுவரை
சென்று பற்றினும் / தேடினாலும் இறைவனின் அடிமுடி என்கின்ற முழு வடிவையும் காணுதல் இயலாது.
நாம் முன்னமே சொன்னவாறு அளவைகளால் இறைவனை அளந்தால் அவனது அடிமுடி காணக்கிடைக்காது.
இறைவனை உளவினால் கண்டால் அவனது அடிமுடியினை கண்டுவிடலாம்.
மதம், சமயம்,
சடங்குகள் போன்ற அளவைகளால் கீழிறங்கும் படிக்கட்டில் இறுதி படிக்கட்டுவரை செல்லினும்,
மேலிருக்கும் வானில் இறுதிவரை செல்லினும் உந்தன் அடிமுடியை காட்டாது விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவரே.
Thanks
ReplyDelete