Tuesday, February 13, 2018

அகஸ்டீன் என்னும் மகாத்மாவின் விண்ணப்பம்

அகஸ்டீன் என்னும் மகாத்மாவின் விண்ணப்பம்
(தமிழாக்கம்: வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்)


அகஸ்தீன் என்பவன் கத்தோகிக் கிறிஸ்தவ மதக் குரவர்களுள் மிகக் கியாதி பெற்றவன். அவன் சாலி வாகன சகம் 279-இல் தகாஸ்தே என்னும் ஊரில் பிறந்து சிறு வயதிலேயே கல்விப் பேறு மிகவும் பெற்று மகா பண்டிதனாய் விளங்கினான். ஆனால் கல்வியிற் சிறந்த எத்தனையோ பண்டிதர்களைப் போலவே தெய்வபக்தி யில்லாமலும், சர்மத்தில் பற்றில்லாமலும் இருந்து வந்தான்.

அவன் தாயான மோனிகா அவனுக்குச் சரியான ஈசுவர பக்தியும் ஞானமும் உண்டாக வேண்டுமென்று, அவனுக்கு அநேக புத்திமதிகள், ஸத்கதைகள் சொல்லியும், தனக்குப் பழக்கமான பாகவதர்கள் ஞானியர்களிடம் சொல்லி அவர்கள் மூலமாகச் சொல்லிவித்தும், தனியே கண்ணார நீர்விட்டு ஈஸ்வரனைப் பிரார்த்தித்தும் வந்தாள்.

கடைசியில் அவனுடைய 33-வது வயதில் அவன் புத்தி திரும்பி அவர்கள் மதக் கொள்கைப்படி அம்பிரோஸ் என்னும் குருவிடம் ஞான ஸ்நானம் பெற்றான். மோனிகாவின் எண்ணம் நிறைவேறி விட்டது. தான் இதற்காகத்தான் உயிரை வைத்திருந்தாள் என்னும் படியாக புத்திரன் ஞான ஸ்நானம் பெற்ற சில நாட்களுக்கெல்லாம் அவள் புண்ணியாத்துமாக்கள் சேரும் உலகத்தைச் சேர்ந்து விட்டாள்.

அகஸ்தீனும் அவளுக்குப் பிறகு மூன்று வருஷம் ஏகாந்த நிஷ்டையில் இருந்து விட்டான். கடைசியில் அவனுடைய 41-வது வயதில் ஹிப்போ என்னும் நகருக்கு பிஷப்பாக நியமனம் பெற்று 35 வருடம் அந்த ஸ்தானத்தை வகித்து தன்னுடைய 76-வது வயதில் காலம் சென்றான்.

ஈசுவர சந்நிதானத்தில் தன்னுடைய சரித்திரத்தைச் சொல்லுகின்ற பாவமாக இந்த விண்ணப்பம் எழுதப்பட்டுள்ளது. இது மிகவும் அற்புதமான புத்தகம். பக்தியோகம், ஞானயோகம் இரண்டிலும் கரை காணாதவன் இதை எழுதியிருக்க முடியாது. இதன் பொருளும் நடையும் மகா காவியங்களின் உன்னத ஸ்தாகியைப் போய்த் தொடுகின்றன.

எந்த மதத்தினரேனும் சரி, எந்தக் கொள்கையரேனும் சரி, உண்மையான ஆத்தும ஞானத்தைப் பெற்றுளரேல் அவர்கள் பேசுவது ஒரே பாஷை, பாடுவது ஒரே கானம், நிற்பது ஒரே நிலை. இந்த சத்தியத்தை இந்த மகானுடைய விண்ணப்பம் நன்கு எடுத்துக் காட்டுகின்றது. லத்தீன் பாஷையில் எழுதப்பட்ட இந்த ஆரிய கிரந்தத்தை ஆங்கிலத்திலிருந்து நம்மனோர்க்காகத் தமிழில் பெயர்த் தெழுதலானோம்.

புத்தகம் 1:

ஏ, பிரபு, நீ யாரினும் பெரியன், பெரும் புகழ்க்குரியன். நின் வல்லமை பெரிது. நீ அறிவின் பெருங்கடல், நின்னையன்றோ மனிதன் புகழ விரும்புகின்றான். அவன் எத்தனை? நின் சிருஷ்டியில் ஓர் அணுவினும் சிறியவன். தன் பாபத்துக்கும் நின் துஷ்ட நிக்ரகத்துக்கும் அத்தாட்சியாக நசுவரத்தன்மையை உடையை போலத் தரித்தவன். அப்படிக்கிருந்தும் நின்னைத் துதிக்க விரும்புகின்றான்.

நின் சிருஷ்டியில் லேசத்தினும் லேசமாகின்ற அவன்! நின் துதியில் மகிழவென்றே நீ எமக்கு சைதன்னியம் அருள்கின்றாய். ஏனெனில் நினக்காகவன்றோ எம்மைப் படைத்தனை! நின்னுள் லயப்படும் வரையில் எம் மனம் குழம்பிக் கொண்டேயன்றோ இருக்கின்றது. ஏ பிரபு! இதை அறிய எனக்கு அருள் செய்.

எவ்விதம் ஆரம்பித்தால் தகும்? நின்னைத் திருநாமம் சொல்லி அழைத்தா? நின்னைத் துதித்தா? அல்லது நின்னை அறிவினில் அறிந்தா?

நின்னை அழைப்பது எங்ஙனம்? நின்னை அறியாதவன் நின்னை வேறு நாமத்தால் அழைப்பனன்றோ? அல்லது இவ்விதமோ? – நின்னை அறிவதற்கென்றே தான் நின்னை அழைக்கின்றோமா? ஆனால் நம்பிக்கை இல்லாதவர் கடவுளை எவ்விதம் அழைப்பார். ஆப்த வாக்கியமின்றி எவ்விதம் நம்புவார்? தவிர பிரபுவை நாடுவோர் துதி செய்க. ஏனெனில் தேடுவோர் அவனைக் காண்பார், அவனைக் காண்போர் துதிப்பர்.

பிரபு! நின் நாமம் சொல்லி அழைத்து நின்னை நாடுவேன். நின் பேரில் விசுவாசம் வைத்து நின்னை அழைப்பேன். ஏனெனில் ஆப்தர்கள் நின்னை எனக்கு அறிவித்திருக்கின்றார்கள். எனக்கு நீ அருளியிருக்கின்ற நின் திருமகன் அவதாரம் வாயிலாக, சற்குருவின் உபதேசம் மார்க்கமாக, எனக்குள் நீ புகட்டியிருக்கின்ற விசுவாசமானது நின் திரு நாமத்தைச் சொல்லி நின்னை அழைக்கும்.

என் பிரபுவும் ஈசனுமாகிய கடவுளை நான் எங்ஙனம் அழைப்பேன்? அழைக்கும்போது என்னுள் அன்றோ அவனை அழைக்கின்றேன். என் ஈசன் பிரவேசிக்க என் உள்ளே இடம் எங்கே? ஆகாசத்தையும் பூமியையும் ஆக்கிய ஈசன் என்னுள்ளே எங்கு வருவான்? இருக்கட்டும்.

என் பிரபுவே, என் ஈச, நின்னைக் கொள்ளக்கூடியது ஏதும் என்னுள் உண்டோ? நீ படைத்த ஆகாயமும் பூமியும்தான் உன்னைக் கொள்ளுகின்றனவோ? கொள்ளதாம் போதாது. அந்த புவனத்தின் கண் ஏதோ ஒரு மூலையில் வைக்கப்பட்ட என்னுடைய உள்ளமா கொள்ளப் போகின்றது? அல்லது உனது எனச் சொல்லும் எதுவும் நீ அன்றி உளதாகாது. ஆகையால் உளது ஒவ்வொன்றும் நின்னைக் கொள்ளா நிற்குமோ? அவ்விதமானால் நானும் உளேன் ஆனபோது நீயன்றி உளனலா என்னுள் நின்னை வருவிக்க ஏன் முயல்கின்றேன்?

நான் நரகத்துக்கு இப்புறம் இருக்கின்றேன். அது தான் காரணம். ஆனால் அங்குதான் நீ யில்லையோ? அங்கும் இருக்கின்றாய்! நரகத்திற்கு நான் போனாலும் அங்கும் நீ உளை. ஆதலின் என் ஈச, நீ என்னுள் இலதேல் நான் உளேன் ஆகேன். ஆகவே ஆகேன்.

அல்லது இவ்விதமோ? எவன் சகமனைத்துக்கும் உற்பத்தியோ, எவன் சகமனைத்துக்கும் கர்த்தாவோ, எவன் சகமனைத்துக்கும் ஆசிரயமோ, அவ்வனைய நின்னுள் நான் இலனேல் நான் உளேனாயிரேன். அதுதான் சத்தியம். பிரபு, அதுதான் சத்தியம்.

ஆனால் நின்னுள்ளே நான் இருக்க நீ எங்கு அழைப்பேன்? எங்கு நின்று நீ என்னுள் புகுவாய்? அண்டபகிரண்டமும் அடக்க நிறைகின்றேன் என்று அருளியிருக்கும் நீ அவை நின்று என்னுள் வந்து புகுவதற்கு அவைகட்குப் புறத்தில் நான் எங்கு போகலாகும்?
                                     
                                                                             (தொடரும்)

--- ஞானபாநு – ஜனவரி – 1914.




கி.பி.354-ஆம் ஆண்டு பிறந்த புனித அகஸ்டின் அவர்கள் லத்தீன் மொழியில் தமது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் வரைகின்றார். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்ததைத்தான் நாம் மேலே படித்தது.

கி.பி.1823-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நமது வள்ளற்பெருமான் தமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நோக்கி வரைந்த கீழ் காணும் நான்கு விண்ணபங்களும் ஏதோ ஒரு வகையில் புனித அகஸ்டின் அவர்களின் விண்ணப்பத்தினை நினைவு கூர்வதாக உள்ளன.

1.   சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்
2.   சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்
3.   சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
4.   சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்

                                                              --தி.ம.இராமலிங்கம்




 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.