Sunday, February 18, 2018

இந்து மதம் எங்கே போகின்றது? – தொடர் – 18

வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் ‘சமரச பஜனை’ காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மாதாந்திர மின்னிதழில் ‘பிப்ரவரி – 2018’ ஆம் மாதம் வெளியானவை…              

  இந்து மதம் எங்கே போகின்றது? – தொடர் – 18

அப்போது… பெருமாளுக்கு துணையாக இருக்கின்றாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்ய முடியும் என்பது தென் கலைகாரர்களின் வாதம். இதற்கு ‘புருஷகாரத்வம்’ என்பது சம்ப்ரதாயப் பெயர். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள், சாதாரண ஸ்த்ரீ… அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள்… மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

வடகலைகாரர்களோ… பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கின்றது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து… விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள்.

இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல… சுமார் 24 விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள்தான் வட கலை, தென் கலை என்று பிரித்தார்கள். பிற்பாடு 40 விஷயங்களில் கருத்து வேறுபாடு வளந்துவிட்டது என வைணவ முக்கியஸ்தர் ஒருவரே திருவாய் மலர்கின்றார்.

அது இருக்கட்டும்… மநு மணம் முடித்த பெண்கள் விதவைகளாகி மறு மணம் முடிக்க நினைத்தால்? இதை விபச்சாரம் என்னும் அடை மொழிக்குள் வைத்துப் பார்க்கின்றது மநு. அவளுக்கு ஒழுக்கம்தான் முக்யம். ஒரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவள் இன்னொரு ஆணோடு வாழ்வதா…? பிடி… அவளை… அவளது படுக்கையோடு சேர்த்து அவளை சுற்று. ஆமாம் அப்படியே தீ வை. எந்த படுக்கையில் விபச்சாரம் என்னும் அபச்சாரத்தை செய்தாளோ… அதிலேயே வைத்து அவள் எரிக்கப்பட வேண்டும்.. என மநு தன் கட்டளைகளில் கொள்ளிக் கட்டைகளை கொண்டு வருகின்றார்.

வேதம் பெண்களை எப்படிப் பார்த்தது?... மநு பெண்களை எப்படி பார்த்தது? என்று இதுவரை பார்த்துவிட்டோம். சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கின்றார்கள். அப்படியென்றால் தெய்வப் பெண்களை? அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம். கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கம், இடது பக்கமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால் பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது, அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.

கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள்… வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார். முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார்.

ஆதிசேஷ வாகனம் பாம்பின் மேல் அமர்ந்து கம்பீரமாக வெளியே வருவார். பின் அனுமார் வாகனம் ஆஞ்சனேயரின் தோள்களில் அமர்ந்து ஊருலகம் வலம் வருவார். யானை வாகனம் ஜம்மென அம்பாரியில் உட்கார்ந்தபடி சுற்றுலா வருவார் பெருமாள். பிறகு குதிரை வாகனம்… கடைசியில் தேர் ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.

ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர… பெண் தெய்வமான பிராட்டியார்…?

ஆமாம்… ஆண் தெய்வமான பெருமாள்… வாகனங்களில் ஏறி ஊர் சுற்றுவார், ஆதி சேஷ வாகனத்தின் மீதேறி கம்பீரமாக வருவார். பின் அனுமார் வாகனம்… அடுத்தது யானை வாகனம் என அம்பாரியில் ஜம்மென உட்கார்ந்து வீதிகளை மேள தாள வாத்தியங்களை ஜோராக ரசித்தபடி ஆடியபடி சுற்றி வருவார் பெருமாள். அப்படியென்றால் பெண் தெய்வமான பிராட்டி?

அதற்கு முன் பெண் தெய்வம் வந்த கதையை பார்ப்போம். வேதத்தில் கடவுளுக்கு உருவம் இல்லை. நீ வேண்டுமானால் அவருக்கு உருவம் இருப்பதாக நினைத்துக்கொள். ஆனாலும் நீ நினைப்பதால் நினைத்து வடிப்பதால் கடவுள் உருவத்துக்குள் அடங்க மாட்டார் என்றது வேதம்.

ஆனாலும்… உலகின் அனைத்துப் பகுதிகளிலும் தோன்றிய வழிபாட்டு முறைகள்படி (Humanistic Worship) அதாவது மனித உருகொண்டு தெய்வத்தை வணங்கும் கலாச்சாரம் உருவானது. அதிலும் ஆண் உருவங்கள்தான் முதலில் வழிபடப்பட்டன. பிறகு… இந்த ஆணுக்கு ஒரு பெண் துணை வேண்டாமா? என யோசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகுதான் பெண் தெய்வங்கள். இது ஒரு பக்கம் என்றால்… சிறு சிறு குழுக்கள் தத்தமது பகுதிகளில் ‘அம்மன்’ என அழைக்கப்படும் பெண் தெய்வங்களையும் வணங்கி வந்தனர். இது பற்றி பிறகு பார்ப்போம்.

ஆண் தெய்வம் பெண் தெய்வத்தை வைத்து பல வழிபாட்டு முறைகளை வகுத்தனர் ஆகமக்காரர்கள். அவர்களே… விஷ்ணுவின் மனைவியான லட்சுமி அவரது மார்பில் இருக்கின்றார் என்றார்கள். இதன் பிறகு… உற்சவம், திருவிழா என்றெல்லாம் தெய்வத்துக்கும் கொண்டாட்டங்களை குறித்து வைத்தார்கள். அதில் ஒன்று சொல்கின்றேன் பாருங்கள். இந்த உற்சவத்துக்கு பெயர் பாரிவேட்டை உற்சவம். இன்னொரு பெயர் மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இன்றும்… திருக்கண்ணபுரம், திருவரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில் இந்த உற்சவத்தை கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

அப்படி என்ன உற்சவம்? வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்று மறு நாளும் இந்த உற்சவம்…

குதிரை வாகனத்தில் கிளம்புகின்றார் பெருமாள். மேளதாளம் ஆடி ஆடி சென்று கொண்டிருக்கின்றது. குதிரை மீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல்… சைக்கிள் கேரியரில் நாம் உட்கார்ந்து போவோமே அதுபோல் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டுக்கொண்டு போகின்றார் பெருமாள்.

கொஞ்ச தூரம் போன பிறகு… மேளம் நிறுத்தியாகிவிட்டது. நாதஸ்வரத்தை எடுத்து அதற்கான துணியுரையில் போட்டு விடுகின்றார் வித்வான்… ஏன்? அது தாசிகள் வசிக்கும் தெரு. அங்கே போகும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்றுதான் வாத்தியத்தையும் நிறுத்திவிட்டனர். அங்கே போன பிறகு பெருமாளை இறக்கி வைக்கின்றார்கள். இரவு அங்கே உள்ள ஒரு மண்டபத்தில் தங்குகின்றார்.

இது உற்சவத்தில் வரும் காட்சிகள். ஏன் இந்த காட்சிகள்? பெருமாளுக்கு பிராட்டியாரை பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகி அலுத்துப் போய்விடுகின்றது. அதனால் என்ன நினைக்கின்றார் என்றால்… கொஞ்ச நேரம் வெளியே போய் சுற்றிவிட்டு வரலாமே என்றுதான்.

இவர் வெளியே போனாரே… எங்கே இன்னும் காணோம் என நினைத்துக் கொண்டிருக்கின்றார் பிராட்டி. இரவு ஆகிவிட்டது ஊரெல்லாம் அடங்கிவிட்டது. அப்படியும் பெருமாள் கோயிலுக்கு திரும்பவில்லை. இரவு முழுதும் தாசிகளுடன் தங்கியிருந்துவிட்டு… மறுநாள் காலை ஆசுவாசமாக புறப்படுகின்றார் பெருமாள்.

இதன்பிறகு மறுபடியும் அந்த உற்சவக் காட்சிகளை சொல்கின்றேன் பாருங்கள். காலையில் அதே குதிரையில் ஏறி… கோயிலுக்கு வருகின்றார். ஆடிவரும் குதிரையோடு அப்படியே விடுவிடுவென கோயிலுக்குள் பெருமாள் நுழைவதற்காக வர… கோயில் வாசலில் எதிரே வழியை மறித்துக் கொண்டு நிற்கின்றார் பிராட்டி.

“எங்கேய்யா போயிட்டு வந்தீர்?” இது பிராட்டியின் கேள்வி. அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் பெருமாள் மறுபடியும் உள்ளே நுழைய, மறுபடியும் தடுக்கின்றார் பிராட்டி. இருவரும்  எதிரெதிரே ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நிற்க… இப்படியே நேரம் ஓடிக்கொண்டிருக்க…

அப்போதுதான் சமாதானத்துக்காக வருகின்றார். அங்கே ஒரு தூதுவர்… அப்படியும் பிராட்டியார் சொல்கின்றார். “கற்பூரம் காட்டும் போது பார்த்தேன். இன்னமும் காயாத ஈர சந்தனம் அவர் மார்பிலே ஒட்டிக்கொண்டிருக்கின்றதே… அந்த சந்தன வாசனை வேறு ஏதோஒரு அந்நிய வாசனை போல உள்ளது. அவர் எங்கே போய்விட்டு வந்தார்? எனக்கு சந்தேகமாக இருக்கின்றது. அவரை உள்ளே விடமுடியாது. “பெருமாள் மீது சந்தன வாசனை இதனால் பிராட்டிக்கு சந்தேக வாசனை.

ரொம்ப நேரத்துக்குப் பிறகு… நம்மாழ்வாரின் சமாதானத்திற்குப் பிறகு பெருமாளை உள்ளே விடுகின்றார் பிராட்டி. இது உற்சவம். இந்த உற்சவம் நடக்கும்போது எல்லோரும் கையெடுத்து சேவிக்கின்றார்கள். இதில் சேவிக்க என்ன இருக்கின்றது? ஆனால் இங்கு ஞாபகப்படுத்த ஒன்று இருக்கின்றது. வேதத்தில் ஒரு வாக்கியம் வருகின்றது என்று கூறியிருந்தேனே… கணவன் மனைவியிடம் சொல்கின்றான்… “நீ உன்னை எப்போதும் அழகானவளாக உன்னை வைத்துக்கொண்டிருந்தால் நான் வெளியே ஏன் போகப்போகின்றேன்? என்று…

இதேபோல்தான் பெருமாள்… இந்த உற்சவத்தில் பிராட்டியாரிடம் சொல்கின்றார். குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தும் இந்த உற்சவத்தை குடும்பத்தோடு வந்து சேவிக்கின்றார்கள். இந்த உற்சவத்திலே இன்னொரு விசேஷம். ஆண்மகன் எங்கே வேண்டுமானாலும் போவான். ஆனால்… பெண்ணானவள் அதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும். தெய்வங்கள் இடையிலேயே இப்படித்தான் நடக்கின்றது.

பாரி வேட்டை படித்திருப்பீர்கள். அதாவது ஆண் தெய்வம் கோவிலை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இதை சகித்துக்கொண்டு பெண் தெய்வங்கள் கோயிலுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும். ஆமாம்… பெருமாள் இத்தனை வாகனங்களில் ஊர்விட்டு ஊர், தெருவிட்டு தெரு என ‘புறப்பாடு’ நடத்திக் கொண்டிருக்க தனிக்கோவில் நாச்சியரான தாயார் நிலை என்ன தெரியுமா?

எத்தனை பெரிய திருவிழா நடந்தாலும், உற்சவம் நடந்தாலும் கோவில் வாசலை விட்டு தாண்டி வெளியே போகக்கூடாது. நம் கணவர் ஜம்மென்று இப்படி ஊர் சுற்றுகின்றாரே… நாம் சற்ற முடியாதா? என ஒரு வேளை பிராட்டி நினைத்தால்…

“ஓ… நீங்களும் சுற்றலாமே… ஆனால் உங்கள் கணவரான பகவானை மட்டும் சுற்றுங்கள். அதுவே ஊரைச் சுற்றுவது போல் ஆகிவிடும்.” என பெண் தெய்வத்துக்கே கட்டளை போடுகின்றது நமது ஆண் சாஸ்திரம். அதனால்… இன்றும் பெருமான் கோவில்களில் தனிக்கோவில் நாச்சியாரான பிராட்டிக்கு ‘புறப்பாடு என்றால் கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதுதான். அதற்கு மேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது என்பதுதான் பொதுவிதி.

இன்னும், விதிவிலக்காக சிற்சில இடங்களில் சில ஸ்தல புராணங்களை முன்வைத்து பெண் தெய்வமான பிராட்டி வெளியே தலைகாட்டும் உற்சவங்களும் அபூர்வமாக நடக்கின்றன. அதாவது தெய்வங்களிடையே பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் பாருங்கள். இதெல்லாம் எதற்கு? தெய்வ விஷயத்திலேயே இப்படித்தான் இருக்கின்றது. ‘பெண் தெய்வம் படிதாண்டக்கூடாது என சாஸ்திரம் கோடு போட்டு வைத்திருக்கின்றது. அப்படியென்றால் மனித தர்மத்தில் பெண்கள் நிலமை எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவதற்குதான் இதெல்லாம்.

     இதெல்லாம் இருக்கட்டும். பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர். அந்த போதனையை சொல்லும் ஒரு காட்சியை உங்களுக்கு சொல்கின்றேன். 

--தொடரும்…

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.