வள்ளலாரின்
அணுக்கத் தொண்டர் ‘சமரச பஜனை’ காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும்
‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மாதாந்திர மின்னிதழில் ‘பிப்ரவரி – 2018’ ஆம்
மாதம் வெளியானவை…
பிப்ரவரி
மாதத்தில் அன்று…
15-02-1859 - "ஐயோ! நானோ புத்திதெரிந்த
நாள் தொடங்கி இதுபரியந்தமும் இந்தப் பிண உடம்பும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துண்டங்களும்
பெருஞ் சுமையாக இருக்கின்றதே, ஐயோ, இது என்றைக்குத் தொலையும் என்று எண்ணி எண்ணி இளைத்துத்
துன்பப் படுகின்றவனாக இருக்கின்றேன். இப்படிப்பட்ட இந்த நாய்க்குப் பணம் என்ன செய்ய?"
என்று தன்னைப்பற்றி வள்ளற்பெருமான், புதுவை வேலு முதலியார் அவர்களுக்கு கடிதம் அனுப்பிய
நாள் இந்நாள்.
02-02-1867
- வள்ளற்பெருமானுக்கு சுத்த சன்மார்க்கப் பணிக்காக வடலூர் பெருவெளியினை, வேட்டவலம்
ஜமீன்தார் அருணாசல வசந்த கிருஷ்ணவாணாதிராய அப்பாசாமி பண்டாரியார் அவர்கள் தானமாகக்
கொடுத்தனர். எனினும் சில சட்ட சிக்கலுக்காக இந்நிலங்களை வடலூரில் வாழ்ந்த சிலரது பெயர்களில்
தானமாக அளிக்கப்பட்டதாக சட்டப்படி வரையறுக்கப்பட்ட நாள் இந்நாள்.
**-02-1867
- சமரசவேத சன்மார்க்க சங்கத்தை யபிமானித்த புதுவை-வேலுமுதலியார், சிவாநந்தபுரம்-செல்வராயமுதலியார்,
இறுக்கம்-இரத்தினமுதலியார் இவர்களின் வேண்டுகோளின்படி வள்ளற்பெருமானின் சம்பந்தத்துடன்
திருவருட்பா முதல் நான்கு திருமுறைகளின் முதல் பதிப்பை தொழுவூர்-வேலாயுதமுதலியார் அவர்கள்
பதிப்பித்து வெளியிட்டனர்.
**-02-1867
- முதல் நான்கு திருமுறைகள் 1867-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளி வந்தது.
21-02-1889
- 'நம் பிள்ளை நமக்குக் கிடைத்தாய்' என்று வள்ளற்பெருமானின் சொல்லில் ஆட்கொள்ளப்பட்டவரும்,
திருக்குறள் பாடத்தை வள்ளற்பெருமான் சொல்லிற்கிணங்க நடத்தியவரும், வள்ளற்பெருமானின்
பாடல்களை திருவருட்பா எனவும் அதனை ஆறு திருமுறைகள் என வகுத்தவரும், தம் குருநாதருக்கு
திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயர் வைத்தவரும், வள்ளற்பெருமானால் உபயகலாநிதி பெரும்
புலவர் என்ற பட்டத்தை பெற்றவரும், வள்ளற்பெருமானின் முதல் மாணாக்கருமான "தொழுவூர்
வேலாயுத முதலியார்" அவர்களின் 127-ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று. இவரது ஜீவசமாதி
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது.
08-02-1902
- வள்ளற்பெருமானுக்கு பின் தருமச்சாலையை கல்பட்டு ஐயா அவர்கள் நர்வாகம் செய்துக்கொண்டு
வந்தார்கள். கல்பட்டு ஐயா, வள்ளற்பெருமானிடம் தஞ்சம்புகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கையில்
தமது நிர்வாகப்பணிகளை தன் மாணவராகிய சுப்புராய பரதேசியிடம் ஒப்படைத்துவிட்டு, தருமச்சாலை
பணிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட நாள், இந்நாள்.
06-02-1942 - சுயமரியாதைக்காரர் என தம்மை
அழைத்துக்கொண்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள் 'வரட்டுமே வள்ளலார்'
என்ற கட்டுரையை எழுதி வெளியிட்ட நாள் இந்நாள். இக்கட்டுரையில் வள்ளலாரின் சன்மார்க்க
சங்கத்தை விட சுயமரியாதை இயக்கமே சாதிய ஒழிப்பில் முன்னிற்கின்றது என்ற நோக்கில் சன்மார்க்க
சங்கத்தை சாடியிருப்பார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.