ஊடக தர்மம்
மக்கள் நன்மைக்காக
பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உலகப் பொதுமறையான திருக்குறளின் மூலம் ஒர் ஆய்வு...!
ஊடகம் என்பது மக்களின் மனதைத் தெளிவுபடுத்தும் ஓர் கருவி, கருவிச் சரியாக அமைந்தால்தான் அந்த காரியமும் சரியாக அமையும்.
மக்களின் மனத்தெளிவு என்பது அவரவர் நிலைக்கேற்ற அறத்தின் படி செயல்படுவது, பிறகு பார்த்துக்கொள்ளாம் என்று எண்ணாமல் உடனடியாக அறத்தின் வழியில் மனசாட்சியை முன்நிறுத்தி, தன் நலனிலும் பொது மக்கள் நலனிலும் பெரிதும் அக்கறை செலுத்திச் செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் தளரும் நேரத்தில் அறம் நம்மைக்காக்கும். இதைத்தான் வள்ளுவப்பெருந்தகை,
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
என்றும்,
அவ்வறத்தால் மட்டுமே மனித உயிர்களுக்கு நிலையான செல்வத்தையும், புகழையும் தர முடியும் என்பதை நன்குனர்ந்து, அதை நாம் உணர வேண்டி,
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
என்றார்.
அறம் என்றால் என்ன என்பதை நாம் உணர வேண்டி,
மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
அதாவது அவரவர் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு எந்த ஒரு பழிப் பாவச் செயல்களையும் செய்ய அஞ்சி மனசாட்சிக்கு பயந்து வாழ வேண்டும் என்றும்,
மனசாட்சி என்றால்,
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அதாவது, பொறாமை, ஆசை, கோபம், கடுமையான சொல் போன்ற நான்கிற்கும் மனதில் சிறிதும் இடம் கொடுக்க கூடாது என்றார், உலகப்பொதுமறை முதலான நீதிநூல்கள் மூலமாக நாம் முன்னோர்கள்.
நாம் அவ்வாறு இருக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் நான் கூறுவேன். காரணம் நான் தனிமையில் இருந்து என் மனசாட்சியை முன்நிறுத்தி நான் செய்த மற்றும் செய்யும் ஒரு சில செயல்களை எண்ணிப்பார்த்தால், அதனால் பிறர் அடையும் பாதிப்பு அவர்களுக்கு எவ்வளவு வேதனை தரும் என்பதை நினைத்துப் பார்த்தால், ஒன்று நான் திறந்த வேண்டும், இல்லையேல் நிச்சயம் நான் தண்டிக்கப்படவேண்டும் என்றே தோன்றுகிறது. ஒரு துளி நீரால் தாகத்தைத் தீர்க்கமுடியாது. ஆகையால் இதை அனைவரும் மனதினுள் உணர்ந்து. நாம் அனைவரும் சுய நலனுக்காக கூட்டாக கூடி முடிவெடுப்பதைப் போல்! பொது நலனுக்காக தனியாகவும், கூட்டாகவும் கூடி நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மேலே குறிப்பிட்டுள்ள மறைந்து இருக்கும் இந்த மறைமொழி விளக்கங்கள்.
சாதரணமாக மக்களுக்கு இரண்டு கண்கள்தான், ஆனால் எல்லோரும் ஆராய்ந்து அறிந்து, நல்லதொரு முடிவு எடுக்கக்கூடிய மூன்றாவதுக் கண் என்பது நெற்றிக்கண், அதாவது நமது அறிவு.
மனித வாழ்க்கை சுழற்சிக்கு உதவும் அப்பேர் பெற்ற அறிவிற்குத் தெளிவூட்ட வெளி உலகச்செய்திகளைக் கொடுப்பதுதான் ஊடகத்துறை.
உண்மையையும், பொய்மையும், அறிந்து ஆராய்ந்து, பொது மக்களுக்கு உண்மை செய்தியை மட்டுமே கொடுப்பது ஊடகத் துறையின் கடமை.
ஆனால் இப்போது உள்ள புனிதமான ஊடகத்துறை மக்கள் நலனுக்காக அல்லாமல் சுயநலனுக்காக இயங்குவது போலத்தான் காட்சியளிக்கிறது.
உலகில் வேறு எந்தத் துறையில் களங்கம் என்றாலும் ஊடகத்துறையை பயன்படுத்தி மக்கள்களான மகேசனைக் கொண்டு அக்களங்கத்தைச் சரி செய்ய முடியும்.
ஆனால், அனைத்தையும் சாதிக்க வல்ல, மனித உணர்வுகளைத் தூண்டவல்ல ஊடகத்துறையில் களங்கம் என்றால், அக்களங்கத்தைப் போக்க நிகழ்காலத்திலும் மற்றும் எதிர்க்காலத்திலும் நாம் இனமாகிய மனிதக் குலத்தை வாழ வைத்து, செயற்கைப் பேரழிவில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க, மற்றும் பத்திரிக்கைத் தர்மம் நிலைபெற, ஊடகத்துறையில் பணிப்புரியும் நண்பர்கள்தான் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து உறுதி பூண்டுச் செயல் பட வேண்டும்.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தர்மம் தன்னைச் சூது கவ்வும்! முடிவில் தர்மமே வெல்லும்! அரசாங்க உறுதிமொழியோ! வாய்மையே வெல்லும்! ஆனால், இவையணைத்தும் வெறும் விளம்பர அளவில்தான் உள்ளது, வெறும் விளம்பரத்திற்கே மக்கள் ஆதரவு பெருகுகிறது என்றால், நேர்மையுடன், உண்மையையும் பொது மக்களுக்கு உபயோகப்படும் செய்திகளையும் மட்டுமே கூறினால் மக்களும் நலம் அடைவார்கள், நாமும் நலம் அடைவோம்.
இன்றைய நிலையில் நம் நாட்டு மக்கள் சென்று கொண்டு இருக்கும் பாதையை சற்றே கூர்ந்து பார்த்தால், பரவலாக பெரும்பான்மையோர்கள் உழைக்காமலேயே உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.
இதற்கு முக்கியக் காரணம்?
எந்தக் துறையால் நாட்டின் அடிமைச்சங்கிலி உடைத்து எறியப்பட்டதோ! எந்தத்துறை சோம்பலாலும், பலமான அடக்கும் முறையாலும் உறங்கிக்கொண்டு இருந்த இந்திய மக்களின் உறக்கத்தைக் கலைக்க இசை பாடியதோ! அதே இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளுக்குள் அடங்கிய ஊடகத்துறைதான். போற்றுதலுக்கு உரிய நம் முன்னோர்கள் மிகுந்த பொறுப்புடன் படைத்திருக்கும் முத்தமிழில் அடங்கிய பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி, மற்றும் இணையத்தளம் போன்றவை தான்.
இவை ஊடகத் தர்மத்தின் படி செயல்படவில்லை என்பதே காரணம்.
நாடகங்களும், ஊடகங்களும், தடையங்களும் போன்றவை தான் நமது முன்னோர்களின் செழிப்பான வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் படைத்த பல விந்தையான வித்தைகளையும் நமக்கு நினைவூட்டுகின்றன.
எதிர்க் காலத்தில் நம் சந்ததிகளுக்கு உண்மை வரலாறு தெரிய வேண்டும் என்றால் மனித வாழ்க்கையில் முதலில் நேர்மைத் தேவை.
காசுக்குப் பாடுபவன் கவிஞர் அல்லன்;
கைம்மாறு வேண்டிப் புகழ் பெறுதல் வேண்டி.
மாசற்ற கொள்கைக்கு மாராய் நெஞ்சை
மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
தேசத்தை தன்னினத்தை தாழ்த்தி விட்டுத்
தேட்டையிடப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப் பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்;
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவ ரேனும்
ஆள்கஎனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன்;
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்;
தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்.
என்று கவிஞர் முடியரசன் எழுதிய கவி, நேற்றைய எட்டாம் வகுப்புத் புத்தகத்தில் இடம் பெற்றது. தற்போது பத்தாம் வகுப்பு புத்தகத்தில் உள்ளது.
ஒருபுறம் நமது பிள்ளைகள் இந்த கவிதையின் உள் அர்த்தம் தெரியாமல் படிக்கின்றனர், மறுப்பக்கம் நாமும் அதன் படி வாழாமல் வெறும் வாய் வார்த்தையில் கூறிவிட்டு, முடிவில் எல்லோரும் மாறவா போகிறார்கள் என்று பெரு மூச்சு விட்டு விட்டு சென்று விடுகிறோம். இன்றைய நாட்டு மக்கள வாழ்க்கையை ஒழுக்கமாக வழிநடத்த உதவும் துறைகளுள், முக்கியமான துறைகள், பத்திரிக்கை, சினிமா, தொலைக்காட்சி, இணையத்தளம் ஆகியவைகள் தான்.
காமம் என்பது இயற்கையில் உயிருள்ள அனைத்திற்கும் பருவம் வந்தால் தோன்றக் கூடிய ஒர் உணர்வு, அந்தப் புனிதமான இனப்பெருக்கத்திற்காக உதவும் காமத்தை தேவையில்லாமல் மனம் கிளர்ச்சியடையும் வண்ணம் தூண்டுவதற்கு காரணம், மக்களை நல்வழியில் நடத்திச் செல்லக் கூடிய தகுதிபடைத்த மேலே குறிப்பிட்டுள்ள புனிதமான துறைகள்தான் என்பதும் நாம் அனைவருக்குமே நன்றாக தெரியும். ஆனால் இதை மாற்றியமைக்க ஒரு சிலர் முன்வந்தும் சரியான விழிப்புணர்வும், ஒற்றுமையும், அரசாங்க ஒத்துழைப்பும் இல்லாத காரணத்தால் இந்தத் துறைகளை ஒழுங்குபடுத்த முடியவில்லை என்பதும், மிகுந்த வருத்தத்தையளிக்கிறது.
நாம் நாட்டு மக்கள் தாங்கள் சென்று கொண்டு இருக்கும் பாதை அழிவுப்பாதை என்பதை உணராமல் சென்று கொண்டு இருக்கிறார்கள். தவறான பாதையில் சென்று கொண்டு இருக்கும் பிள்ளைகளை நல்ல பெற்றோர்கள் எவ்வாறு நல்வழியை புரிய வைக்கின்றார்களோ! அதேபோல் இத்துறைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புதிய ஒழுக்கமான (நவீன ஜனநாயகம்) அமைத்திட அணித் திறண்டு நாட்டு மக்களை நல் வழி நடத்த வேண்டும் என்பதே இந்த வேண்டுகோள்.
இன்றைய குழந்தைகள் நாளைய நாட்டின் முதுகெலும்புகள் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, குழந்தைகளுக்கு கல்வியும், ஆரோக்கியமான உணவும், நல்லொழுக்கமும் பொதுவாக கிடைக்கப் பெற்றால்தான், நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் நாடு இக்காலத்திலும் எதிர்காலத்திலும் நலம் பெரும இவை அனைத்தும், நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால், இருப்பவர்களின் கனிவுப்பார்வை இல்லாதவர்கள் மீது பட வேண்டும். சகமனிதர்கள் நமது இனத்தவர் என்ற உணர்வு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிலை பெற வேண்டும்.
அதற்கு போற்றுதலுக்குரிய பத்திரிக்கைத் துறை, சினிமா துறை, தொலைக்காட்சித் துறை, இணையதளத்துறை ஆகியவற்றில் வருங்கால நாட்டின் தூண்களான குழந்தைகளையும், பெண்களையும், கவனத்தில் கொண்டு, நம்மை பேரழிவிற்கு அழைத்துச்செல்லும் ஆபாசங்களையும், உல்லாச வாழ்க்கையை தூண்டி விடும் வகையில் உருவாகும் காட்சிகளையும், செய்திகளையும் தலை தூக்கா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்பதே தொழில்தர்மம்.
இதை நாம் மறக்க முடியாது.
உடனடியாக இந்த நிலை மாறவில்லை என்றால், நாட்டின் வன்முறை, கற்பழிப்பு, துரோகம், கொலை, கொள்ளை, சோம்பல், பொறுப்பின்மை போன்ற பல தீய செயல்கள் தலைவிரித்து ஆடும். இன்று சக மனிதர்களுக்கு நடந்து கொண்டு இருக்கும் கொடுமைகள் நாளை நமக்கோ! அல்லது நமது பிள்ளைகளுக்கோ! அல்லது நமது சந்ததிகளுக்கோ! நிச்சயம் கேடு விளைவிக்கும்.
மேலும், சினிமாத் துறையின் மீது மக்கள் கொண்டுள்ள மோகத்தின் விளைவு இப்போது வாழ்க்கையிலும் கூட, குடும்பத்திலும், சமுதாயத்திலும் பலப் பேர் நடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்திய நாட்டின் அடிப்படைத் தொழில் (விவசாயம்) என்ற நிலை மாறி, நடிப்புத் தொழில் என்ற நிலை ஏற்ப்படும் முன்பே! இதை சரிச் செய்ய வேண்டியது கலைத்துறையின் கடமையாம்.
எல்லோரும் ஆடம்பரத்தையும், உல்லாசத்தையும் விரும்பினால் உணவுப் பொருள்களுக்கு வெளி நாடுகளில் கையேந்த வேண்டிய நிலை காலப்போக்கில் கட்டாயம் ஏற்படும்.
ஆகவே உடனடியாக இந்த நிலை மாற வேண்டும் என்றால் நாட்டுப்பற்றும், வீட்டுப்பற்றும் ஒரே பார்வையில் இருக்கும் பொறுப்புணர்வை மக்களுக்கு உணர்த்த, மக்களை காக்கும் பொருட்டு உயர்ந்த பதவியில் இருக்கும் அனைவரும் கருத்து வேறுபாடில்லாமல், நேர்மையுடனும், அக்கறையுடனும் கூடி நல்லதொரு முடிவெடுத்து அறியாமல் தவறாக அழிவுப்பாதையில் சென்று கொண்டு இருக்கும் நாட்டு மக்களுக்கு நல்வழி காட்டும் கலங்கரை விளக்கமாக இருந்து காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு பாதிக்கப் பட்டு இருக்கும் நாட்டு மக்களுக்காக அனைத்து துறைகளிலும் உயர்ந்த பதவியில் இருக்கும் அரசின் அங்கங்களில் அடங்கிய, மாண்புமிகு மந்திரிகளும், மதிப்பிற்குரிய அதிகாரிகளும் தான் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும்.
அணுவால் உண்டானது அண்டம் என்பது போல! நாட்டு மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல முறையில் பயன்பட வேண்டும் என்றால், நல்லொழுக்க பாதையை நல்லவர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
நம் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்றால் அனைத்துத் துறைகளிலும் உள்ள நாட்டு மக்களின் தாய் தந்தை போன்ற, மந்திரிகளும், அதிகாரிகளும்தான் முன்னுதாரணமாக சுயநலத்தைத் தவிர்த்து பொது நலனுக்காக நேர்மையுடன் செயல்பட வேண்டும். "முன் ஏர் சரியானால் தான் பின் ஏர் சரியாகும்" நிர்வாகம் சரியாக இருந்தால் நிச்சயமாக நிர்வகிக்கப்படுபவர்கள் சரியாக இருப்பார்கள். அரசின் செங்கோண்மையில் அனைத்தும் அடங்கியுள்ளது.
ஒன்றே செய், நன்றே செய், இன்னே செய், அதையும் இன்றேசெய் என்பது சான்றோர் வாக்கு.
உலகப் பொதுமறை தந்த வள்ளுவப்பெருந்தகையின் வாக்கோ!
சான்றவர் சான்றாமை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை.
மிருகங்களுக்கு இயற்கைக் குணம் மட்டும்தான் உள்ளது. ஆனால், மனிதனுக்கோ இயற்கை குணமும் உண்டு, செயற்கைக் குணமும் உண்டு, ஆகவே நல்ல குணம் பல படைத்தவர்கள் சுயநலத்துக்காக தீய செயல்களை செய்வார்களானால் நகரம் நரகமாகும்.
அழகிய கிராமங்கள் அழிந்து போகும் அவல நிலை ஏற்படும்.
இந்நிலை நீட்டித்தால், காலப்போக்கில் அண்டமே அணுக்களாக மாறும் அபாய நிலையும் ஏற்படும். ஆகையால், உயர்ந்தவற்றையே சிந்திப்போம், உடனடியாகச் செயல்படுவோம்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
எல்லோருடைய கருத்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி அக்கருத்தில் உள்ள உண்மைப் பொருள்களைக் காண வேண்டும் என்பதே இதன் பொருள்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் நம் வாழ்க்கை வழிகாட்டியான உலகப் பொதுமறை யில் அடங்கி இறுக்கும் உபதேசங்கள்தான்.
ஊடகத் தர்மங்கள் தவறு என்றால், உலக பொதுமறையும் தவறுதான்! உலகப் பொதுமறை தவறு என்றால், அதை நாம் மறுப்போம்! மறுப்பது தவறு என்றால், மீண்டும் மறுப்போம்!
சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
காரியத்தைச் சொல்ல எல்லோராலும் முடியும், செயல்படவோ ஒரு சிலரால் மட்டுமே முடியும்.
அந்தச் சிலர் பலர் ஆனால், பாதுகாப்போடு நாடு நலம்பெறும் நாமும் நலம் பெறுவோம்.
மக்களே!
மனம்திரும்புங்கள்!
இணைந்தால் வாழ்வது நிச்சயம்!
இல்லையேல் வீழ்வது நிச்சயம்!
நமது நாட்டில் வாழ்ந்து மறைந்த எண்ணற்ற விவசாயிகள், உழைப்பாளர்கள், வியாபாரிகள், ஞானிகள், விஞ்ஞானிகள், அரசர்கள், தியாகிகள் போன்றோர்களின் உழைப்பும், வேதனையும், சோதனையும், மரணமும் வீண் போனால்? நாமும் வீண் போவோம்... இது நடக்கக் கூடாது என்றால், நம்மில் பலர் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து எதற்காகவும் போராட வேண்டாம் "மாறாக" நமது செயல்களை நற்செயல்களாக்கி மக்களை மிகச் சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என்பதே இந்த அன்பான வேண்டுகோள்!
அன்பே சிவம் அறக்கட்டளை
வாழ்க வளமுடன்
பு.வே. நாகராஜன்
கைப்பேசி: 8939459338
மின்னஞ்சல்:nagarajanteam@gmail.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.