Friday, November 19, 2021

வள்ளற்பெருமான் பார்வையில் தத்துவராயர்

வள்ளற்பெருமான் பார்வையில் தத்துவராயர்



திரியோதசாந்த நிலையில்தான் மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவார்: இதைப்பற்றி வள்ளலார் தனது திருவருட்பாவில் கூறுவதை சற்று விளக்கமாகக் காண்போம் வாருங்கள்.

திரயோதசாந்தமாவது யாதெனில்: ஜீவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. நிர்மலசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி ஆக 3. பரசாக்கிரம், மேற்படி சொப்பனம் மேற்படி சுழுத்தி ஆக 3. குருசாக்கிரம், குருசொப்பனம், குருசுழுத்தி, குருதுரியம்குருதுரியாதீதம் ஆக 5. ஆக மொத்தம் 14. இதற்கு மேலுமுள சுத்தசிவசாக்கிரம், மேற்படி சொப்பனம், மேற்படி சுழுத்தி, மேற்படி துரியம், துரியாதீதம் - இவை சேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும். இவ்வள வனுபவமும் பூர்வத்திலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை. ஒருவாறு குருதுரிய பரியந்தம் வேதாகமங்களாலும் தத்துவராயர் முதலிய மகான்களனுபவத்தாலும் குறிக்கப்படும். அதற்கு மேற்பட்ட அனுபவம் சுத்த சன்மார்க்க சாத்தியம்.



என்று வள்ளற்பெருமான் தனது திருவருட்பா உரைநடை நூலில் தெரிவித்திருப்பார். முதலில் நாம் சாக்கிரம் என்றால் என்ன? என்று பார்ப்போம்.

நமது ஆன்மாவானது ஆதிதொட்டு ஆணவ மலத்துடன் கூடியிருந்ததால், அது தானே சுயமாக எதையும் அறியமுடியாத நிலையில் உள்ளது. எனவே ஆன்மாவானது அது எடுத்த உடம்பின் வழியே, அவ்வுடம்பில் உள்ள கருவிகள் வழியே ஐந்து உணர்வு நிலைகளில் நின்று அறியத்தொடங்குகின்றது அல்லது செயலாற்றுகின்றது. இவ்வைந்து உணர்வு நிலைகளை காரிய அவத்தைகள் என்கிறோம். இந்த காரிய அவத்தைகள் ஐந்தில் முதலில் வருவது  சாக்கிரமாகும். சாக்கிரம் என்றால் நனவு நிலை எனப்பொருள். மீதமுள்ள நான்கு, சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பதாகும்.




1.சாக்கிரம் என்பது ஆத்மாவின் நனவு நிலை. புருவ நடுவிலிருந்து ஆன்மா செயல்படும். இங்கு 35 தத்துவங்கள் செயல்படும். கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, பரிவாரங்கள் பத்து, தச வாயுக்கள் பத்து, அந்தக்கரணங்கள் நான்கு மற்றும் புருடன் என 35 தத்துவங்களாகும்.

2.சொப்பனம் என்பது கனவு நிலை. கண்டத்திலிருந்து ஆன்மா செயல்படும். இங்கு 25 தத்துவங்கள் செயல்படும். கண்மேந்திரியம் ஐந்து மற்றும் ஞானேந்திரியம் ஐந்தும் இங்கு செயல்படாது.

3.சுழுத்தி என்பது உறக்க நிலை. ஆன்மா, மனோமய கோசத்தில் இருதயத்தில் நின்று செயல்படும். இங்கு சித்தம், பிராணன், புருடன் மட்டுமே ஆன்மாவுடன் செயல்படும்.

4.துரியம் என்பது பேருறக்க நிலை. ஆன்மா, விஞ்ஞானமய கோசத்தில் உந்தியிலிருந்து செயல்படும். இங்கு பிராணன் மற்றும் புருடன் மட்டுமே ஆன்மாவுடன் செயல்படும்.

5.துரியாதீதம் என்பது உயிரடக்க நிலை. ஆன்மா, ஆனந்தமய கோசத்தில் பிராணன் நீங்கி புருடனுடன் தனியே மூலாதாரத்தில் நின்று செயல்படும். புருடன் என்பது இறைவனைக் குறிக்கும்.

சாக்கிர முப்பத்தைந்து நுதலினிற், கனவு தன்னில்

ஆக்கிய இருபத்தைந்து களத்தனிற், சுழுனை மூன்று

நீக்கிய இதயம் தன்னில், துரியத்தில் இரண்டு நாபி,

நோக்கிய துரியா தீத நுவலின் மூலத்தில் ஒன்றே.

என்று சிவஞான சித்தியாரின் பாடல் உரைப்பதிலிருந்து நாம் ஆன்மாவின் செயல்பாட்டினை அறிகின்றோம்.

சைவ சமயத்தில் இந்த ஐந்து அவத்தைகளை மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் நமது வள்ளற்பெருமான் மேற்காணும் ஐந்து அவத்தைகளையும் ஐந்து பிரிவுகளாகப் பிரித்து சுத்த சன்மார்க்கம் காண்கின்றார்.




அது என்ன ஐந்து பிரிவுகள்? என்றால்,

1.     ஜீவன்

2.     நிர்மலம்

3.     பரம்

4.     குரு

5.     சுத்தசிவம்

என்று ஐந்தாக பிரித்து, அதில் முதல் மூன்றில் அதாவது ஜீவன், நிர்மலம், பரம் வரையிலான பிரிவுகளில் சாக்கிரம் , சொப்பனம், சுழுத்தி வரைதான் உள்ளதாகவும், நான்கு மற்றும் ஐந்தாம் பிரிவில் மட்டுமே மேற்சொன்ன ஐந்து அவத்தைகளும் உள்ளதாக அறிவிக்கின்றார். அதாவது குரு மற்றும் சுத்தசிவம் ஆகிய பிரிவுகளில் மட்டுமே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் ஆகிய ஐந்தும் இருப்பதாக அறிவிக்கின்றார். இப்பிரிவினை நாம் முறையே பார்ப்போம்,




1. ஜீவ சாக்கிரம்

2. ஜீவ சொப்பனம்

3. ஜீவ சுழுத்தி

4. நிர்மல சாக்கிரம்

5. நிர்மல சொப்பனம்

6. நிர்மல சுழுத்தி

7. பர சாக்கிரம்

8. பர சொப்பனம்

9. பர சுழுத்தி

10. குரு சாக்கிரம்

11. குரு சொப்பனம்

12. குரு சுழுத்தி

13. குரு துரியம்

14. குரு துரியாதீதம்

15. சுத்தசிவ சாக்கிரம்

16. சுத்தசிவ சொப்பனம்

17. சுத்தசிவ சுழுத்தி

18. சுத்தசிவ துரியம்

19. சுத்தசிவ துரியாதீதம்

ஆக, சைவ சமயத்தில் வெறும் ஐந்து அவத்தைகள் இருப்பதை, சுத்த சன்மார்க்கத்தில் 19 அவத்தைகள் என அறிவிக்கின்றார். மேலும் சைவ சமய மகான்கள் இந்த 19 நிலைகளில் எதுவரை அனுபவத்தை பெற்றிருக்கின்றார்கள் என வள்ளலார் கூறும்போது, இந்த 19 பிரிவுகளில் 13-ஆம் நிலையில் உள்ள குரு துரியம் வரை அனுபவத்தை பெற்றுவிட்டார்கள் என ஒருவாறு கூறுகின்றார். அதாவது அதனையும் முழுமையாக பெறாமல் அந்த 13-ஆவது குருதுரிய நிலையை எட்டித் தொட்டுவிட்டார்கள் எனக்கொள்ளலாம் என வள்ளலார் உரைக்கின்றார். அந்த 13-ஆவது நிலையான குருதுரியத்தை அடைந்த மகானாக வள்ளலார் குறிப்பிடுபவர் நமதுதத்துவராயர்என்கின்ற மகானை அறிவிக்கின்றார். இந்த 13-ஆவது நிலையைதிரயோதசாந்தநிலை என்கின்றார் வள்ளலார். திரி என்றால் மூன்று, சதம் என்றால் பத்து ஆக பதிமூன்றாவது நிலையான குருதுரிய நிலையில் ஆன்மா சாந்தமடைவதை / அமைதியடைவதை  அல்லது அனுபவிப்பதைதிரயோதசாந்தம்என்கின்றார் வள்ளலார்.

திரயோ தசநிலை சிவவெளி நடுவே

வரையோ தருசுக வாழ்க்கை மெய்ப் பொருளே

என திரு அருட்பெருஞ்ஜோதி அகவலிலும் இந்த திரையோதசநிலைப் பற்றி வள்ளலார் குறிப்பிட்டிருப்பதை காணலாம். 

நாம் பெரிதும் போற்றக்கூடிய வேத ஆகமங்களில்கூட இந்த 13 நிலை மட்டுமே கூறப்பட்டுள்ளதாக வள்ளலார் குறிப்பிடுகின்றார். அதற்கு மேல் அதாவது 14-ஆம் நிலையிலிருந்து 19-ஆம் நிலைவரை சுத்த சன்மார்க்கிகளுக்கே சாத்தியமாகும் என்று தான் அடைந்த அனுபவ உண்மையை இங்கே எடுத்துரைக்கின்றார். இந்த 19- நிலையும் அடைந்த ஆத்மாதான் ஜீவ சாக்கிரத்தை விட்டு அதாவது அவத்தைகளை விட்டு முழுமையாக விடைபெறும் என்று கூறுகின்றார் வள்ளலார்

சைவ சமயத்தை பின்பற்றும் மகான்கள் யாரும் இதுவரை துரியாதீதம் என்பதை அறவே அடையவில்லை என்பதை வள்ளலார் எடுத்தியம்புகின்றார். எனினும் குரு துரியம் வரை ஒருவாறு  அடைந்துவிட்ட தத்துவராயர் அவர்களை வள்ளலார் மகான்என்று போற்றுகின்றார். மேலும் பல மகான்கள் இந்த நிலையை அடைந்திருப்பதாகவும்தத்துவராயர் முதலிய மகான்கள்என்று குறிப்பிடுவதால் நாம் அறிகின்றோம். நமக்குத் தெரிந்தவர் இந்த தத்துவராயர் மட்டுமே. தெரியாத எத்தனை ராயர்கள் இருக்கின்றார்களோ என நமக்குத்தெரியாது.

எனவே நமக்குத் தெரிந்த தத்துவராயரைப் பற்றி நாம் சற்றே இந்தப் பதிவில் காண்போம்.   

 

தமிழ்நாட்டில் அத்வைதத்தை வளர்ப்பதில் தனிப்பெருமை கொண்டவர் தத்துவராயர். தமிழ்நாட்டில் வெகுசன வேதாந்தம் பரப்பியவரில் முதண்மை பங்கு தத்துவராயரைச் சாரும். ஏனெனில் அத்வைதத்தினை வடமொழியின் துணை கொண்டு ஓதியுணர வேண்டுமேயொழிய நாட்டு மொழிகளின் துணை கொண்டு உணரலாகாது என்ற கொள்கை இருந்தது. தத்துவராயர் வருகைக்குப் பின்பு தமிழ்நாட்டில் ஒரு உயர்குடி வர்க்கத்தில் மட்டுமே இருந்த அத்வைதத்தினை பெரும்பாலான சாதாரண மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததால் வெகுசன வேதாந்தத்தின் கர்த்தா தத்துவராயர் எனப்பட்டார்.

பொதிகைச் சித்தர் மரபு நாராயண தேசிகர் கூட, தத்துவராயர் கொள்கை வேதாந்த நெறி வழியில் வந்தவர். யார் இந்த தத்துவராயர். வாருங்கள் 15 ம் நூற்றாண்டுக்குச் செல்வோம்.

தாய் மாமன், மருமகன் என்கிற உறவைக் கொண்டவர்கள் சொருபானந்தர் மற்றும் தத்துவராயர். அவ்விருவரும் வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவர்கள். மிகச் சிறந்தபிரம்மச்சாரிகளாக இருந்து வேதாந்த சாஸ்திரம் யாவையும் படித்து ஐயம்திரிபற அவற்றின் பொருளை ஆராய்ந்து தத்துவ பரிசீலனை செய்துவந்தார்கள்.

சொரூபமாக இருந்து தத்துவத்தை வழிநடத்தியதால் சொருபானந்தர் என்றும் தத்துவராயர் என்றும் பெயர் வழங்கலாயிற்று.

இவர்கள் இருவரும் தக்க குருவினைத் தேடிச் சென்று  யாருக்கு முதலில் தக்க குரு வாய்க்கிறதோ, அக்குருவினிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்கு ஆசிரியராக நிச்சயித்துக் கற்றுக் கொடுக்கலாம் என தீர்மானித்து இருவரும் இரு திசைகளாக பிரிந்து சென்றனர்.

தென் திசையை நோக்கி சொரூபானந்தரும், வட திசையை நோக்கி தத்துவராயரும் இருவேறு திசைகளில் பிரிந்து சென்று பல மலை ,நதி மற்றும் புராதான இடங்களை நோக்கி அலைந்தனர்.

தென் திசையை நோக்கி சென்று கொண்டிருந்த சொரூபானந்தர் காவேரி நதிதீரத்தில் திருச்சி சமயபுரம் தாண்டி மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் திருப்பைஞ்ஞீலி தாண்டி திருவெள்ளரைக்கு நடுவில் கோவர்த்தனம் அருகே தனது உடம்பு முழுவதும் வியர்க்கவும், நா தழுதழுக்கவும், கண்களில் நீர் பெருகக் கண்டும் தக்க குரு இந்த இடத்தில் இருப்பதாக சில லட்சணங்கள் மூலம் அவருக்குத் தெரிய வருகிறது.

சொரூபானந்தர், ஊர்க்காரர்களிடத்தில் இந்த ஊரில் பெரியவர்கள் யாரும் இருக்கிறாரா  என்று விசாரிக்க, அந்த இடத்திலுள்ளவர்கள் நாணற்புதர்காட்டில் பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் சிவப்பிகாச சுவாமி. திருவாரூரைச் சேர்ந்தவர் எனக் கிராம மக்கள் கூறுவே, சொரூபானந்தர் அங்குச் சென்று அப்பெரியவரைக் கண்டு வணங்க, உன் வருகைக்காகத்தான் நான் காத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சொரூபானந்தருக்கு அனுக்கிரகம் வழங்கி சீடராக சேர்த்துக் கொண்டார்.

வடக்கு நோக்கிச் சென்ற தத்துவராயர் பலமொழி, பலதேசம், பல இஸ்லாமிய சூபி மார்க்கங்கள் உட்பட  கண்டும் தக்க குரு கிடைக்காமல் மறுபடியும் தென்னாடு நோக்கி தனது மாமன் சொரூபானந்தரைக் காண திரும்பிவிட்டார். தனது தாய் மாமன் சொரூபானந்தர் தனக்கு முன்பே குருவை பெற்றுவிட்டதால், ஒப்பந்தப்படி தத்துவராயர் தனது தாய் மாமன் சொரூபானந்தரை தனது குருவாக ஏற்கின்றார். சொரூபானந்தரும் தனது குரு சிவப்பிரகாச சுவாமிகள் தனக்கு அருளிய வித்தையை தத்துவராயருக்கு சொல்லிக் கொடுக்க சம்மதித்தார்.

தத்துவராயருக்கு சில பக்குவம் அடையும் வரை பொறுமை காக்க வேண்டினார் சொரூபானந்தர். அதற்கு சில பரீட்சைகள் நடக்கும். ஒரு தடவை சொரூபானந்தர் அப்பியாசம் பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தைலம் கொண்டு வரச் சொல்லி ஏவளாலரை ஏவிவிடும் வேளையில் அருகிலிருந்த தத்துவராயர் அந்த நாளன்று அமாவாசை என்பதால் “அம்” என்று வாயிலிருந்து வந்தவுடன் சொரூபானந்தர் மிக்க கோபத்துடன் “விதிவிலக்கென்ற சங்கல்பத்தை கடந்த நமக்கும் இவ்விதிவுண்டோ? என்று கத்தி விட்டு என் அருகில் நிற்காதே என்று கோபமாகிவிட்டார்.

சொரூபானந்தரின் கோபக்கனலை தாங்க முடியாத தத்துவராயர் மனம் நொந்து போய் தாரை தாரையாய் கண்ணிர் பெருகி தனது குரு மீதும், குருவினுடைய குரு மீதும் உருகி உருகி துதிப்பாடல்களாக சிவப்பிரகாச வெண்பா, திருத்தாலாட்டு, பிள்ளை திருநாமம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலிப்பா, சிலேடையுலா, கலிமடல், அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி போன்ற சிற்றிலக்கிய வடிவில் பிரபந்தங்களைப் பாடித் தள்ளினார்.

இவ்வளவு பாடினாலும் தனது குரு சொரூபானந்தரை கவர முடியவில்லை. சொரூபானந்தர் ஒரே வார்த்தையில் விருப்பமில்லாதவர் போல, “மயிருள்ளவன் வாரி முடிக்கிறது போல, வாயுள்ளவன் பாடியனுப்புகிறான்” என்று  தத்துவராயரை பொருட்படுத்தாமல் கூறிவிட்டு கடந்து சென்று விட்டார்.

கண்டு கொள்ளாத குருவினுடைய சந்நிதானத்தில் எப்படித்தான் இடம் பெறுவதன்றெ தத்துவராயர் மிகவும் மனம் நொந்த நிலையில் ஆசாரியரின் தரிசனத்துக்கு ஏங்கிய நிலையில் தாயைக் காணாத இளம்பிள்ளை நிலையில் அழுது புரண்டு முகம் வீங்கிய நிலையில் மனச் சஞ்சலமுற்று அரற்றிய மன நிலையில் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றெண்ணிய தத்துவராயர் குருவின் அனுக்கிரகம் கிடைக்காத விரக்தியில் பாடுதுறையில் திருவடி மாலையைப் பாடிக் கொண்டே இறக்கப் போகும் வேளையில் சொரூபானந்தருக்கு மற்ற சீடர்கள் மூலம் தத்துவராயர் நிலை குறித்தான தகவல் போய்ச் சேர்கிறது.

சொருபானந்தர் தத்துவராயரை வந்து சந்திக்கும்படி வேண்டுகிறார். தகவல் அறிந்த தத்துவராயர் என்னை வரச் சொல்லி கட்டளையிட்டாரே என்ற பேரானந்தத்தில்  போற்றி மாலை, புகழ்ச்சி மாலை, திருவருட்கழன்மாலை முதலானவைகளை படித்துக் கொண்டே வந்து குருவை வந்தடைகிறார்.

இது வரை படித்து வந்த துதிமாலைகள் அனைத்தும் சாஸ்திரம் மிகவும் கற்றவர்களுக்கும், உனக்குமே உதவுமேயன்றி சாதாரண சனங்களுக்கு உதவாது. உலகுக்கு உதவும் வகையில் பாடியருள குரு வேண்டினார்.

உலகுக்கு உதவும் வகையில் மோகவதை பரணியில் ஒரு படலமாக சசிவண்ண போதம் பாடி குருவிடம் சமர்ப்பித்தார். சசிவண்ண போத பாகத்தை எண்ணி குரு மகிழ்ந்தார். இந்த சசிவண்ண போதம் நூலே தமிழ்நாட்டில் வேதாந்தம் கற்க விரும்பும் ஒவ்வொருவரும் அடிப்படையாக கற்கும் வேதாந்த நூல் ஆகும்.

போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை கொன்ற படைவீரனைப் போற்றிப் புகழ்பாடுவதே பரணி என்னும் பிரபந்தம். ஆனால் வீரம் என்பதை கனவிலும் அறியாத உங்கள் குரு மீது எப்படி பரணி பாடினீர் என்றதற்கு “ நீர் சொல்லும் அகங்கார யானை கண்ணுக்குப் புலப்படாது. ஆயினும் சீடனுடைய அகங்காரம் என்னும் யானையை கொல்வதற்கு அநேக நாள் பிடிக்கும். சீடர்களுடைய அகங்காரம் என்னும் யானையை எனது குரு கொன்றதால் பாடினோம் என்றார்.

தத்துவராயர் 18 மரபு வகை சிற்றிலக்கியங்களில் பாடியவர். பாடுதுறையில் 138 தலைப்புகளில் 1140 பாடல்கள் அருளியவர். இப்பாடல்களில் அன்றைய தமிழ்நாட்டு நாட்டுப்புற விளையாட்டுக்கள், இசைக்கருவிகள், கூத்து வகைகள், சாதிப் பெயரில் பாடல் வகைகள், இலக்கிய வகைகள் ஆகிய அனைத்தும் பொதுமக்களின் மரபிலிருந்தும், வாயமொழி வழக்காற்றுகளிலிருந்தும் பாடல் வடிவமாக வேதாந்தத்தை கொண்டு சென்றவர் தத்துவராயர்.

தத்துவராயர் பாடல்கள் சிலவற்றை சங்கீர்த்தனம் முறையில் நாமசங்கீர்த்தனம், சிவசிவ, சரணம் சரணம்,, நமோநம போன்ற ஈற்றடிச் சொல் வருமாறு அமைந்த பாடல்களை இசைத்தன்மையில் பஜனை மரபு தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன.

பாம்பாட்டி, பிடாரன், பகடி, பகவதி, பறை, குரவை, கழங்கு, ஊசல், போன்ற இசை கூத்து பாடல் வகையில் பாடுதுறையில் இருக்கிறது.

தச்சன் பாட்டு, செட்டியார் பாட்டு, பிடாரன் பாட்டு, அம்பட்டன் பாட்டு, வண்ணான் பாட்டு, முதலியார் பாட்டு, பார்ப்பானும் பறைச்சி பாட்டு போன்ற தொழில் அடிப்படையில் உருவான சாதிப் பெயர்களை தலைப்பாக கொண்ட பாட்டுகளும் அடங்கும். தத்துவராயர் காலத்தில் சாதிய மேலாதிக்கம் மிகுந்ததை காணமுடிகிறது. சாதி வேறுபாடற்ற , அனைவரும் சமம் என்ற அடிப்படையில் மக்கள் யாவரும் ஒன்று அதுவே அத்வைதம்  என்பதை முன் வைக்கும் விதமாக பாடினார் தத்துவராயர்.

தத்துவராயர் திரட்டிய சிவப்பிரகாச பெருந்திரட்டு மற்றும் குறுந்திரட்டு மூலம் உலகானுபவ விசயங்களினை தொகுத்தருளினார். சிவப்பிரகாச பெருந்திரட்டு மூலம் தமிழ் சங்க இலக்கிய முதல் தத்துவராயர் காலத்து வரையிலான பல்வேறு நூல்களில் எத்தனையோ அத்வைத நூல்கள் தமிழ்நாட்டில் வெளியானதை முதன்முதலாக அறிய முடிந்தது. சூத சங்கிதையில் உள்ள ஈசுவர கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்.

கோவிலூர் வேதாந்த மடத்தில் தமிழில் வேதாந்தம் கற்க விரும்புபவர்கள் அடிப்படையாக 16 நூல்கள் படிக்க வேண்டும். அதில் ஒரு முக்கிய நூல் தத்துவராயர் எழுதிய சசிவண்ணபோதம்.

அரிச்சந்திரன், சிரவணன் கதை மாதிரி சசிவண்ணன் வாழ்வில் நடந்த உண்மைக் கதை கொண்டே வேதாந்தத்தில் சசிவண்ண போதம் சாத்திர நூலினை உருவாக்கினார் தத்துவராயர்.

சசிவண்ணன் என்ற பெயருடையோன் அவனது துர்நடத்தையினால் தீராநோயுற்று வருந்தும் நிலையில் இருப்பான். தனது மகனின் துன்ப நிலையைக் கண்டு வருந்திய தந்தையை ஒரு அன்பர் வழிகாட்டுதலின் பேரில் ஒரு ஞானியிடம் அழைத்து கொண்டு போக சொல்வார். சசிவண்ணனை தனது தந்தையான பாகயஞ்ஞன் ஞானியான நந்திபாராயணரிடம் அழைத்துச் செல்வார். ஞானியின் விழிபட தீரா நோயிலிருந்து பூரண குணமடைந்து விடுவான் சசிவண்ணன். அதாவது ஞானிகளுக்கு பணிவிடை செய்வதன் மூலம் சாதனங்களை அடையலாம் என்பதை சசிவண்ண போதத்தில் கீழ்க்கண்டவாறு வருமாறு

புணர்ந்த பாவ மெலாம்பரி பூரணம்

உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே”

தமிழ் வேதாந்தத்தில் மிகவும் அடிப்படையாக கற்கபட வேண்டிய நூல் சசிவண்ண போதம். கோவிலூர் வேதாந்த மடத்தில் முறையாக பயிலும் போது 16 நூல்களில் மூன்றாவது பாடமாக இந்த நூலினை கற்க வேண்டும். இந்த சசிவண்ண போத நூலிற்கு பல உரைகள் இருக்கிறது.

குறிப்பாக பிறைசை அருணாசல சுவாமிகள் உரை, ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள் உரை, கோ. வடிவேலு செட்டியார் உரை, திருவாரூர் தட்சணாமூர்த்தி சுவாமிகள் உரை, மதுரை கோ.சித. சிவானந்த சுவாமிகளின் 41 செய்யுள்களுக்கான விருத்தியுரை, காஞ்சிபுரம் ஆ. செங்கல்வராய முதலியார் எழுதிய தத்வபிரகாசினி உரை, திருப்பூவனம் காசிகாநந்த ஞாநாச்சார்ய சுவாமிகளின் பதார்த்த பாஸ்கரன் உரை போன்ற மற்றும் பல எண்ணிலடங்கா உரைகள் சசிவண்ண போதம் நூலினுக்கு பெரியவர்களால் அணிவகுத்துள்ளது என்பதால் இதன் மூலம் தெரிகிறது, தத்துவராயர் அருளிய இந்த நூல் எவ்வளவு சிறப்பானது என்று.

 

தத்துவராயர் எழுதிய இந்த ”சசிவண்ணன்” என்பவரின் சமாதிக்கோவில் விருத்தாசலத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள கோபுராபுரம் என்ற ஊரில் இருக்கின்றது. கோவிலினுள் சசிவண்ணனுக்கு ஒரு சிறிய கோவிலும் அதன் எதிரே சசிவண்ணனின் குரு நந்திபாராயணருக்கும் சிறு கோவில் கட்டப்பட்டிருக்கின்றது.

பிரம்மம் அறிந்த ஞானிகளின் ஞான திருஷ்டியில் படுவதால் பாவங்கள் நிச்சயமாக ஒழியும் என்ற கருத்தினை வலியுறுத்தும் பாப நாயகனான சசிவண்ணனின் கோவிலும், பாவங்களை நீக்கிய நந்திபாரயணரின் தரிசனமும் தத்துவராயர் மூலம் இன்றும் நடக்கிறது.

தத்துவராயரின் குருவான சொரூபானந்தரின் ஜீவசமாதி சேந்த மங்கலத்தில் இருக்கிறது என குறிப்பு இருந்தாலும் எந்த சேந்த மங்கலம் என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் இங்கே கமெண்ட்டில் தெரியப்படுத்தவும்.

தத்துவராயருக்கு முதன்முதலில் ஜீவசமாதியைக் கண்டறிந்து 1895 வாக்கில் கோவில் எழுப்ப முயற்சி எடுத்தவர் சிதம்பரம் கோவிலூர் மடாதிபதி பொன்னம்பலம் சுவாமிகள்.

பொன்னம்பலம் சுவாமிகள் தத்துவராய சுவாமிகளின் நூலின் மேல் உள்ள ஈடுபாட்டால் அவரது சமாதி எங்குள்ளது என்பதை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரை எறும்பூரிலிருந்து தரிசிக்க வந்த சாதாரண பக்தர் இன்று மாலை காட்டு சாமிக்குப் போய் விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்ப எத்தனிக்கும் போது பொன்னம்பலம் சுவாமிகள் அந்த சாதாரண பக்தனின் வார்த்தை நீண்ட நாள் தேடிக் கொண்டுருந்த சுவாமிகளுக்கு விடை கிடைத்தது.

விருத்தாசலத்திற்கும் சிதம்பரத்திற்கும் இடையில் சேத்தியாதோப்பு கூட்டு ரோடு அருகே எறும்பூர் அருகே காட்டுக்குள் தத்துவராயர் சமாதிக் கோவில் சிதிலமடைந்து, அழிக்கப்பட்டு, கள்ளிப் புதருக்குள் மறைந்திருப்பதைக் கண்டார்.

வெள்ளாற்றில் அணை கட்டுவதற்காக அக்காலத்தில் ஆங்கிலேய அரசு தத்துவராயர் சமாதிக் கோவிலின் முன்மண்டபப்  பிரகாரம், பாவுக்கல், வரிக்கல் எடுக்க முனைந்த போது பொன்னம்பலம் சுவாமிகள் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அச்சமயத்தில் ஒரு கருநாகம் இருந்து சீறவும் ஆங்கிலேயர்கள் கோவிலில்  இருந்து கல் எடுக்கும் முயற்சியை கைவிட்டனர்.

உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியார் கண் நோயால் அவதிப்பட, பொன்னம்பலம் சுவாமிகள் கைங்கர்யத்தால் பூரண குணமடைந்து கண்ணொளி பெற்றார். இதற்கு ஈடாக பர்மா சென்று பெரும் பொருள் ஈட்டிய சுப்பிரமணிய செட்டியார் தத்துவராயருக்கு கருங்கல்கோவில் கட்டி முடித்தார். இது நடந்தது 1895 ம் ஆண்டு.

வள்ளலார் போற்றிய தத்துவராயரை தரிசனம் செய்ய நாம் முதலில் எறும்பூருக்குச் செல்ல வேண்டும். அதன் பிறகு தத்துவராயரின் குரு சொரூபானந்தரின் சமாதிக்குச் செல்ல சேந்தமங்கலம் செல்ல வேண்டிம். (இவ்வூர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை). அதன் பிறகு சொரூபானந்தரின் குருவான சிவபிரகாச சுவாமிகளின் சமாதியைக் காண  வேண்டும். திருச்சி சமயநல்லூர் அருகே மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் திருப்பைஞ்ஞிலிக்கும் திருவெள்ளறைக்கும் நடுவில் கோவர்த்தனகிரியில் திருவாரூர் சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது.

திருவெள்ளறையில் புகழ்பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இதனை ஆதி திருவரங்கம் என்பர். இக்கோவிலுக்கு முன்பாக அரை கிலோ மீட்டர் முன்னதாக காட்டு வழியினுள் ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்றால் சிறு குன்று உள்ளது. அக்குன்றின் மேல் முருகன் கோவில் உள்ளது. முருகன் கோவிலுக்கு முன்பாக சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. இச்சாமாதி பொட்டல் காடுகளுக்கு இடையே முள் நிறைந்த நெருஞ்சிக்காட்டுக்கு மத்தியில் கள்ளிக் காடாக காட்சி அளிக்கின்றது. கரடு முரடான காட்டு மேட்டில்தான் சிவப்பிரகாசர் ஜீவ சமாதி அமைந்துள்ளது. திருவெள்ளறை பெருமாள் கோவிலுக்கு தினசரி வருகை புரியும் பக்தர்களில் ஒருவர் கூட இந்த சமாதிக்கு கோவிலுக்கு வருவதில்லை என்பது வேதனை அளிக்கின்றது. ஆடு மாடு மேய்ப்பவர்கள்தான் சாதாரணமாக அங்கே விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

அதன் பிறகு தத்துவராயர் போற்றிய சசிவண்ணன் அவர்களின் சமாதியைக் காண விருத்தாச்சலம் அருகே உள்ள கோபுராபுரம் செல்லவேண்டும். இப்படியாக தத்துவராயரின் மரபு சார் வேர்களை காண்பதில் நமது ஊனடம்பு வாகனத்தை விரைவாக செலுத்துவோம். அதன் பிறகு சுத்த சன்மார்க்கப் பாதையில் பயணித்து வள்ளலார் கூறும் 19- ஆன்ம நிலைகளையும் அடைந்து சாக்கிர அவத்தைகளிலிருந்து முற்றிலும் விடைபெறுவோம். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

தத்துவராயரின் முக்கிய நூலான “சசிவன்ன போதம்” பதிவிறக்கம் செய்யவும்.

https://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/literature/chachivanna_pootam.pdf

உதவி: திரு.ரெங்கையா முருகன் அவர்களுக்கு நன்றி.


T.M.RAMALINGAM

Whatsapp No.9445545475

vallalarmail@gmail.com 




8 comments:

  1. தத்துவராயர் பாடிய பாடல்கள் அனைத்தும் எங்கு கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் தேடியதில் இந்த இணைப்பு கிடைத்தது. https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh8jhyy.TVA_BOK_0000576/page/n7/mode/2up

      Delete
  2. மிக்க நன்றி அய்யா, மிக அருமையான தகவல்கள்

    ReplyDelete
  3. மாதவன்May 9, 2024 at 10:19 PM

    🇲🇾 ஆன்மிக தேடலுக்கு கிடைத்த மாபெரும் தகவல்கள் மற்றும் சிறப்பான தெளிவுரை
    தலை வணங்குகிறேன் 🙏🏻

    ReplyDelete
  4. நன்றி திரு.இராமலிங்கம் ஐயா. தங்களின் இந்த விளக்கமான பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது சுத்த சன்மார்க்கிகளுக்கு

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.