Thursday, November 18, 2021

மாயூரம் வேதநாயகம் பிள்ளை & மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

&

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை




கிறுத்துவரான மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கும் சாற்றுக்கவி அளித்த வள்ளலார். காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களிடமிருந்து திருவருட்பாவை வாங்கிய திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. இந்த இரு வேறு நடந்தேறிய நிகழ்ச்சிகளை பற்றி சற்றே இங்கு நாம் காண்போம்.

வள்ளலார் வெளிப்பட வாழ்ந்த காலத்தின் சமகாலத்தவர்கள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார்கள். இவர்களில் திருவாவடுதுறை ஆதினத் தலைவர் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை சந்தித்தவர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை ஆவார்கள். வள்ளற்பெருமானை சந்தித்தவர் மாயூரம் வேதநாயம் பிள்ளை ஆவார்கள்.

நாம் முதலில், காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை சந்தித்த நிகழ்ச்சியினை, அவரின் எழுத்து மூலமாகவே அறிகிறோம். காரணப்பட்டு ச.மு.க அவர்கள் இயற்றிய பிரபந்த்திரட்டு என்னும் நூலில் (திரு..திருநாவுக்கரசு அவர்களின் பதிப்பில் பக்கம் 134-ல் காணலாம்.)

காரணப்பட்டு ச.மு.. அவர்கள் தாம் எங்கு சென்றாலும் தன்னுடன் திருவருட்பாவை தன் உயிர்த்துணையாக எடுத்துச்செல்வது வழக்கம்.  ஒரு முறை மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு செல்லும்போது அங்கு நடந்த நிகழ்ச்சியினை மிகச்சுருக்கமாக தனது பிரபந்த்திரட்டு நூலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். அவை பின்வருமாறு,




திருவருட்பாவை தன் தலை மீது வைத்துக்கொண்டு போற்றித் துதித்து ஆனந்தித் திருப்பதே அப்பாடலுக்கு உரைஎன்று திருவருட்பாவைக் கொண்டாடிய திரிசிரபுரம் மஹாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களை பற்றி நாம் இப்போது சற்று காண்போம்.

தற்போது திருச்சிராப்பள்ளி, திருச்சி என்று அழைக்கப்படுகின்ற மாநகரைத்தான் அன்று திருசிரபுரம் என்று அழைத்தனர். திருச்சிராப்பள்ளியில் உள்ள எண்ணெயூரில் 06-04-1815- ஆம் ஆண்டு பிறந்தார்.

தமது நட்புக்களின் ஒருவரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர்  இவருக்கு மஹா வித்வான் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார்.

இவரின் சீடர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் , தமது குருவான மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாற்றை நூலாக இயற்றியுள்ளார்கள். ”தாயைவிட என்மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்  என உ.வே.சா. இவரைப்பற்றி குறிப்பிடுகின்றார்.

19-ம் நூற்றாண்டில் தமிழில் மிக அதிகமான நூலை இயற்றியவர் மஹாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்கள். சுமார் இரண்டு லட்சம் பாடல்களை இயற்றியுள்ளார்கள். இவரது படைப்புகள் பலவற்றை ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிரபந்தத்திரட்டுஎன்னும் பெயரால் உ.வே.சா அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தமது 61-ஆவது வயதில் 01-02-1876 –ஆம் ஆண்டு மஹாவித்வான் அவர்கள் மறைந்தனர்.

இது நிற்க. நாம் அடுத்ததாக கிறுத்துவ மதத்தைச் சார்ந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளையை பற்றி சிறிது காண்போம். மாயூரம் வேதநாயகம் பிள்ளை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் 11-10-1826-ஆம் ஆண்டு பிறந்தார். வள்ளற்பெருமானிடமும், மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடமும் மிகுந்த நட்பில் இருந்தவர் இந்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆவார்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவரை பாராட்டி குளத்துக்கோவை என்ற நூலையே இயற்றியதை நாம் சற்று முன்பு அறிந்தோம். அதுபோல வள்ளற்பெருமானும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய நூல்களுக்கு சாற்றுக்கவி கொடுத்து அருளியிருக்கின்றார்கள். வள்ளலார் இவருக்கு அருளிய சாற்றுக்கவி என்ன என்பது தெரியவில்லை. தெரிந்த அன்பர்கள் இங்கே கமெண்டில் குறிப்பிடலாம்.

 

மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எப்படி கிறுத்துவரானார்? என்பது பற்றி பார்ப்போம்.

முனிசீப் வேதநாயகம் பிள்ளையின் முப்பாட்டனார் சைவ வேளாளர் மரபில் பிறந்தவர். அவருக்கு சூலை நோய் பிடித்து ஆட்டி வைத்தது. கத்தோலிக்க இயேசு சபை பாதிரியார்களைச் சந்தித்து தனக்கு நோய் குணமானால் தனது குடும்பத்துடன் கிறிஸ்துவத்தில் சேருவதாக சத்தியம் செய்தார். அவர்களும் வைத்தியம் பார்க்க, நோயும் குணமாக, இவரும் அந்த மதத்தில் சேர்ந்தார். எனவே அதிலிருந்து இவரது குடும்பம் கிறுஸ்துவத்தை பின்பற்ற, வேதநாயகம் பிள்ளையும் கிறுஸ்துவத்தை தனது பிறவியிலிருந்தே பின்பற்ற வேண்டியிருந்தது. திருநாவுக்கரசர் காலத்தில் மதமாற்ற விவகாரத்தில் நோயும் வைத்தியமும் ஒரு முக்கிய பங்கு வகித்தன. அன்று சிவபெருமான், இன்று இயேசு என கடவுள் பெயர்கள் மாறுபட்டாலும் மதமாற்றம் நடைபெற்றுக்கொண்டே உள்ளது.

மகாக்கவி பாரதியார் தனது சொந்த சாதியினரால் ஒதுக்கப்பட்டபோது மாயூரத்தில் தனது இல்லத்திலேயே அவரை வைத்து பாதுகாத்தார். தான் சார்ந்த கிறுஸ்துவ மதத்தை மதித்து நடைமுறையில் ஓர் உண்மை கிறுஸ்துவனாக இருந்தார். 1876-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாடுகள் தமிழகத்தில் கொடூரமான பஞ்சம் நிலவியது. எங்கு நோக்கினும் வறுமை சாவுகள், மரண ஒலிகள் கேட்டன.

அற்புதமான சங்கீத ஞானமும், இலக்கிய ஆற்றலும் மிக்க வேதநாயகம் பிள்ளை இந்த வறுமையை பற்றி இவ்வாறு பாடினார்.

“பஞ்சம் தீரையா – உனையன்றி

தஞ்சம் யாரையா – சுவாமி!

வஞ்சக மேகம் உலோபர்கள் போலே

மண்ணில் மழை பொழியாமையினாலே

சஞ்சலமாகித் தளர்ந்தோம் மென்மேலே

சாமி! கதி உன்றன் தாமரைக் காலே”

தனது சொந்த உய்விற்கு வழி தேடாமல் பொதுமக்களின் பஞ்சம் போக்கும்படி கடவுளை வேண்டி பாடி, உண்மையான இயேசு சீடராக திகழ்ந்தார். அதுமட்டுமல்ல, வறுமையும் பஞ்சமும் நீங்க தனது சொத்துக்கள் முழுவதையும் கொடையாக அளித்துவிட்டார். இதனை போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் “நீயே புருஷ மேரு” என்ற பாடலை பாடினார். 1856-ல் தரங்கம்பாடியில் முனிசீப் வேலையில் அமர்ந்தார். இதனால் இந்தியாவின், ஆங்கிலேயர் அல்லாத முதல் நீதிபதியாக இவர் போற்றப்படுகின்றார்.

மாயவரம் முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால் இவரை ”மாயூரம் வேதநாயகம் பிள்ளை” என்றே மக்கள் அழைக்கலாயினர். 1872-பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு மயிலாடுதுறை நகராட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார். அப்போது தமிழகத்தின் முதல் பெண்கள் பள்ளியைத் துவங்கினார். இவர் 16 நூல்களை இயற்றியுள்ளார். இவர் எழுதிய “பிரதாப முதலியார் சரித்திரம்” என்பதே தமிழ் உலகில் முதல் நாவல் என்ற பெருமையை பெற்றிருக்கின்றது.



அன்றைய கிறுஸ்துவர்கள் மத மாற்ற முயற்சியில் பெரிதும் ஈடுபட்ட வந்தார்கள். ஆனால் வேதநாயகம் பிள்ளை ஒரு போதும் தமது கவித்துவத்தை பயன்படுத்தி கிறுஸ்துவ மதமாற்றத்தை செய்யவில்லை. மாறாக வள்ளற்பெருமான் கொண்ட நட்பால் “சர்வ சமய சமரச கீர்த்தனைகள்” பாடினார்.

“ஆணல்ல பெண்ணல்ல ஐம்பூதச் சுடரல்ல

அரிஅயன் சிவனல்ல அதுவல்ல இதுவல்ல

காணரும் உட்திவ்ய காந்திவிரியும் நல்ல

கன வடிவினைக் காணக் காதல் கொண்டேன்.”

எவ்வித உருவத்திலும் உட்படுத்தாமல் இறைவனைக் காண ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர் முயன்றிருப்பது அபூர்வமானதாகும். சைவத்தில் சித்தர்கள் போல, இஸ்லாமில் ஸூபிகள் போல, கிறுஸ்துவத்தில் வேதநாயகம் பிள்ளை விளங்கினார்கள். தேவாலயத்தின் கட்டுக்குள் அடங்கிய மதப் பிரச்சாரகராக அவர் இருந்ததில்லை.

“கையிலே பிடிப்பது ஜபமாலை

கக்கத்தில் வைப்பதுவோ கன்னக்கோலை

மெய்யாகத் தினம் படிப்பது தர்மநூலை

மேலும் மேலும் துன்மார்க்க வேலை

ஆனதலையில் வளர்ப்பது ஜடை முடியே

அறுதினமும் கெடுப்பது ஆயிரங்குடியே

தானம் பிறர் அறியக் கொடுப்பதோர் நொடியே

தனியே வந்தவனுக்குத்தான் அடிதடியே.”

இப்படி போலி சமய வாதிகளை அடையாளம் காட்டினார்.


“ஊன் தூக்கி உண்ணும் பிராமணர்க்கு அஞ்சி உமாமதியும்

மான் தூக்கினன் கையில், வேலவன் தூக்கினன் வாரணத்தை

மீன் தூக்கினன் கொடியாக உருவிலி, மேடமது

தான் தூக்கவே அதில் ஏறிக் கொண்டான் அந்த சண்முகனே.”

என்று பாடினார். இதன் விளக்கம் என்ன வென்றால், ஒரு காலத்தில் பிராமணர்கள் வரன்முறையின்றி மாமிசம் புசித்தார்கள். அப்போது விலங்குகளுக்கு அடைக்கலம் தர முன்வந்தனவாம் கடவுளர்கள். சிவனார் மானைக் கரத்தில் பிடித்தார். முருகன் கோழியைக் கொடியாக்கினான். மன்மதன் மீனைச் கொடியாக்கினான். ஆடு பார்த்தது, தனது கதி அதோகதியாகிவிடும் எனப் பயந்து தானாகப் போய் சண்முகனைத் தன்மீது ஏற்றிக்கொண்டதாம். இவ்வாறு நயமாக கேலி செய்திருக்கின்றார்.

இவ்வாறு வள்ளற்பெருமானின் நட்பால், இவர் “சமரசப் புலவர்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். இவ்வாறு பல்வேறு பெருமைகளை உடைய மாயூரம் வேதநாயம் பிள்ளை தனது 63-ஆம் வயதில் 21-07-1889-ஆம் ஆண்டு உயிரிழந்தார். மயிலாடுதுறை காந்திஜி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

வள்ளற்பெருமான் மற்றும் காரணப்பட்டு ச.மு.க. ஆகிய இருவர்களிடமும் தொடர்புடைய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மற்றும் மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர்களை பற்றி அறிந்துக்கொண்டது ஒவ்வொரு சன்மார்க்கிகளுக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி. நாம் வேறொரு நல்ல பதிவில் சந்திப்போம்.

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி.

 --T.M.RAMALINGAM

Whatsapp No.9445545475

vallalarmail@gmail.com

 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.