தெய்வத்தின் குரல்
சுத்த சன்மார்க்கத்தின் எதிர்காலம் - ஒரு பார்வை.
யுகங்களின்
இறுதி யுகமான கலியுகம் 17-09-1932-ஆம் ஆண்டு முடிவுற்றது என்பதை நாம் அறிவோமா? ஆம்
அன்பர்களே கலிகாலம் முடிந்துவிட்டது. சுத்த சன்மார்க்கர் காலம் துவங்கிவிட்டது என்பதை, நாள், வருடம், கிழமை
முதற்கொண்டு குறித்து நமது வள்ளற்பெருமான் அறிவித்துவிட்டார். கலியுகத்திற்குப் பிறகு,
அடுத்ததாக
ஞானசித்தர் காலம் அதாவது சுத்த சன்மார்க்க காலம் 18-09-1932- ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்த பூவுலகில் சுத்த
சன்மார்க்க ஞாயிறு உதித்துவிட்டது. 1932-ஆங்கீரச ஆண்டு புரட்டாசி மாதம் 03-ஆம் தேதி சுத்த சன்மார்க்க காலம் துவங்கியது. சுத்த சன்மார்க்க யுகம் துவங்கி, நடப்பு
2021-ஆம் ஆண்டோடு 89 வருடங்கள் முடிந்து 90-ஆவது வருடம் நடந்துக்கொண்டிருக்கின்றது.
கலிபுருடன்
ஆட்சி முடிந்து, வள்ளலாரின்
ஆட்சி 18-09-1932-லிருந்து நடைபெற்றுவருகின்றது. இவ்வாட்சி காலத்தால் யாதொரு தடையுமில்லமால் அளவு குறிக்கப்படமுடியாத நெடுங்காலம் இருக்கும். நெடுங்காலத்திற்கு
அப்பால் முடிந்துவிடுமா? எனக்கேட்டால்? காலத்தால் தடை இல்லை, எனவே
இனி வரும் காலம் எல்லாம் சுத்த சன்மார்க்க காலமே! யுகம்
என்கின்ற கணக்கெல்லாம் இனி இல்லை.
கடந்த 89 வருடங்களில் சுத்த சன்மார்க்கத்தின் வளர்ச்சியினை நினைத்தால், ”நானே சன்மார்க்கம் நடத்துக்கின்றேன்” என்று உரைத்த வள்ளலாரின் சன்மார்க்க செயல்கள் பிரமிக்க வைப்பதாக உள்ளது.
சாதி, சமயம், மதம், இனம், மொழி, கலாச்சாரம், நாடு என எவ்வளவோ பிரிவினைகளுக்கு நடுவில் வெறும் 89 வருடங்களில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்கள் உலகெங்கும் பரவியிருப்பதைப் பார்க்கின்றோம்.
அனைத்து
சமயங்களிலும், மதங்களிலும் உள்ள மக்கள், சுத்த
சன்மார்க்கத்தை அறியும்போது அங்கே ஒரு கூச்சல், குழப்பங்கள்
உருவாவதை அறிகின்றோம். அந்த கூச்சல், குழப்பத்தை
வள்ளற்பெருமான்தான் உருவாக்கி, அவர்களிடையே
ஒரு பக்குவத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். எந்த சமயமும் எந்த மதமும் பேசாத பொருளை, அனுபவத்தை
சுத்த சன்மார்க்கம் பேசும்போது மக்கள் குழப்பமடைந்து, சன்மார்க்கத்திற்கு எதிராக கூச்சலிடுகின்றனர். அதில் பக்குவபடும் ஆன்மா மேலேறி சுத்த சன்மார்க்கம் அடைகின்றது. மற்ற ஆன்மாக்களும் விரைவில் சுத்த சன்மார்க்கம் காண வள்ளலார் முயன்றுகொண்டே உள்ளார்.
அபக்குவ
ஆன்மாக்கள்தான் இவ்வுலகில் 90% பிறப்பெடுத்துள்ளன. அவைகள் எல்லாம் தாம் பிறப்பெடுத்த மதத்தையோ, சமயத்தையோ
உண்மை என நம்பி வளர்கின்றன. அவைகளை பற்றற விடுவதற்கு தயாராக இல்லை. ஏனெனில்
அவைகளுக்கு ஒரு கூட்டம் தேவை. அது
அரசியல் முதற்கொண்டு ஆன்மீகம் வரை அவர்களை இணைத்து வைக்க தேவைப்படுகின்றது. இப்படியாக ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தைக் கண்டு மிரளுகின்றது. எனவே ஒரு கூட்டத்தை விட்டு வெளியில் வந்தால் தனித்து விடுவோமோ? நமது
கூட்டத்தை அயலார் கூட்டம் வென்றிடுமோ? என்கின்ற பயத்தால் அபக்குவ ஆன்மாக்கள் அந்தந்த கூட்டத்தை விட்டு வர மறுக்கின்றன.
ஆன்மீக
ரீதியில் நமது தத்துவங்கள் தவறு எனத் தெரிந்தும், அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து இருப்பது அவசியம் என நினைத்து இப்பிறவி பயனை வீணே கழித்து இறந்துவிடுகின்றன. அடுத்தப் பிறவி மனிதப் பிறவி கிடைக்குமா? என்பது 99% சந்தேகமே! எனினும்
அபக்குவ ஆன்மாக்கள் அக்கூட்டத்தோடு கூத்தடிக்கின்றன.
1% அபக்குவ
ஆன்மாக்கள் பக்குவமடைந்து சுத்த சன்மார்க்கத்திற்கு வந்திருக்கின்றார்கள். அதுவே மிகப்பெரும் வளர்ச்சியாகும். சுத்த சன்மார்க்கத்தில் புலால் மறுக்கப்பட்டுள்ளது. சுத்த சைவமாக இருக்க வேண்டும். பால்
மற்றும் பாலிலிருந்து கிடைக்க் கூடிய பொருட்கள், முட்டை, மீன், விலங்குகள், பறவைகள் ஆகிய எவ்வுயிரையும் உண்ணுதல் கூடாது. தாவர
உணவுகள் மட்டுமே உண்ண வேண்டும் என்பது முதல் விதிமுறையாகும். இவ்விதி முறையை கடைபிடிக்க முடியாமல் இருக்கும் அபக்குவ ஆன்மாக்கள்தான் இந்த 99% . இதற்கு மேற்பட்டு நான்கு ஒழுக்கங்கள், புருஷாத்தங்கள் மற்றும் மரணமிலா பெருவாழ்வு இவைகளின் இருப்பிடம்தான் சுத்த சன்மார்க்கம்.
கடந்த 89 வருடங்களில் பல மதங்களில், பல
சமயங்களில் இருந்த
1% மக்கள்
சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் பக்குவ ஆன்மாக்களாக உருமாறிவிட்டார்கள். இனி வரும் காலம் அதி தீவிர சுத்த சன்மார்க்க காலமாக மாறும். வள்ளற்பெருமான்
போன்று நிறைய மனிதர்கள் உருவாகுவார்கள். நீங்களும் நானும் அவ்வாறே மரணமிலா பெருவாழ்வைப் பெறுவது உறுதி.
கிறுத்துவ
மதம், இஸ்லாம்
மதம், இந்து
மதம் மற்றும் ஏனை மதங்களிலும் – அவரவர்கள் வணங்கும் கடவுள்கள் தத்துவங்களிலும், பின்பற்றும் வழிமுறைகளிலும் அனேக இடங்களில் பிழைகள் இருக்கின்றன. ஏனென்றால் இம்மதங்களை பிறப்பித்தவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தவறுகள் நடந்திருக்கின்றன. மாயையை வென்ற சுத்த சன்மார்க்கிகளுக்கு மட்டுமே பிழையற இயற்ற முடியும். அப்பிழைகளை
திருத்தி சன்மார்க்க சங்கம் அடைவித்திடவே தற்போது அதி தீவிர சுத்த சன்மார்க்க காலம் நடைபெற்று வருகின்றது.
மனித தேகத்தில் மட்டுமே கடவுள் காரியப்படுவார். அதுவும் பக்குவ ஆன்மாக்களிடத்தில் மட்டுமே கடவுள் காரியம் நடைபெறும். மற்ற
விக்கிரகங்களிலும், உருவங்களிலும், உருவமில்லா கற்பனையிலோ கடவுள் காரியப்படமாட்டார். இதுவெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டாகும். அனைத்து மத வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சாத்திரங்கள், ஆகமங்கள் ஆகிய யாவிலும் உண்மை இல்லை. எனவே
”மெய்” என்று
தமிழில் கூறப்படும் மனித உடம்பினை புனிதமாக வைத்திருக்க, அவ்வுடம்பில் புனிதர் வரும் தருணம் இந்த சுத்த சன்மார்க்க காலமாகும். இதுவே
மெய் வழியாகும்.
சுத்த
சன்மார்க்க காலத்தில் இனி வரும் மனிதர்கள் எல்லாம் நனவிலும் மண்ணாசை, கனவிலும்
பெண்ணாசை, உறக்கத்திலும்
பொன்னாசை யின்றி இருக்கக் காண்போம்.
இனிவரும்
சுத்த சன்மாக்க காலத்தில், இறந்தவர்களை
கட்டாயம் அடக்கம் மட்டுமே செய்வார்கள். சுட மாட்டார்கள். இறந்தவர்களுக்கு கருமாதி, திதி
போன்ற நம்மை ஏமாற்றும் கரும காரியங்கள் நடைபெறாது. குழந்தைகளுக்கு காது குத்துதல், மொட்டை அடித்தல்,
குலதெய்வத்திற்கு உயிர்பலி இடுதல், பல மதங்களின் பெயரால் நடைபெறும் விழாக்களில் புலால்
உண்ணுதல், அவ்விழா தொடர்பாக உயிர் பலி இடுதல் போன்ற கொடூர செயல்கள் எல்லாம் தயவின்
மேம்பாட்டாலும், உண்மை அறிவு விளங்கும் காலமாதலாலும் தடையுறும்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், நம்மோடு
உறவாடி, நமக்கு
முன் இறந்தவர்கள் எல்லாம் உயிர் பெற்று வருகின்ற ஞானசிருஷ்டியினைக் காண்போம்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், மக்கள்
அனைவரும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வந்து வந்து தரிசனம் செய்வார்கள். அவ்வமயம் இறந்தவர்கள் எல்லாம் அங்கே எழுந்திடவும், முதியோர்கள் எல்லாம் இளமை பெறுவதையும் மற்றும் பல அற்புதங்களை அங்கே காண்பார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், மக்கள்
யாவரும் உண்மையறிவு, உண்மையன்பு, உண்மையிரக்கம் முதலியவைகளைப் பெற்று விரைந்து விரைந்து இறந்து வீண்போகாமல் மெய்யுடம்பை பெறுவார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், அறிந்து
அறியாத அற்புத அறிவுகள், அடைந்து
அறியாத அற்புத குணங்கள், கேட்டு
அறியாத அற்புதக்கேள்விகள், செய்து அறியாத அற்புதச் செயல்கள், கண்டு
அறியாத அற்புதக் காட்சிகள், அனுபவித்
தறியாத அற்புத அனுபவங்கள் இவைகள் அனைத்தும் மக்கள் எல்லோருக்கும் கிடைக்கப் பெறும்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், இறைவன்
வெளிப்படையாக எடுத்துக்கொண்ட “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்கின்ற மந்திரத்தை மகா மந்திரமாக மக்கள் ஏற்று ஒருமையுள் கூடுவார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், மக்கள்
யாவரும் இதுவரைக்கும் இருந்தது
போல் வீண்காலம்
கழிக்காமல் தங்களது
வாழ்க்கையில், சுத்த
சன்மார்க்கத்தால் மாற்றத்தைக்
காண்பார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், தாவர
உணவாளர்களே இருக்கக் காண்போம். ஆதலால்
கொலைத் தொழில் செய்பவர்கள், மீனவர்கள், மாடு, ஆடு, கோழி
மற்றும் இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அத்தொழிலை விட்டுவிட்டு விவசாயம் அல்லது வேறு நல்ல தொழிலுக்கு மாறுவார்கள். உயிர்களை வதைக்கும் தொழில் எதுவும் மக்கள் செய்யமாட்டார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், மக்களுக்கு
உண்மையறிவு விளங்குகின்றபடியால் மூடபழக்கம், வழிவழி சடங்குகள் யாவற்றையும் விடுத்து தயவு ஒன்றே மோட்ச வீட்டின் திறவு கோள் என வாழ்வார்கள். ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை மேலோங்கும்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், எல்லோருக்கும்
தாய், தந்தை
அண்ணன், தம்பி, முதலானவர்களால் செய்யப்படும் உதவி எவ்வளவோ, அதற்குக்
கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவிகள் கிடைக்கும் இடம் சித்திவளாகமாகும், என்பதை அறிந்து சித்தி வளாகம் அமைந்துள்ள மேட்டுக்குப்பத்தில் மக்கள் அதிக அளவில் குடியேறுவார்கள். அதனால் மேட்டுக்குப்பத்தில் பூர்வீகமாக உள்ளவர்கள் தங்களது இல்லங்களை இழக்க நேரிடும். வடலூரிலும்
அவ்வாறே நிகழக்காணலாம்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், யான், எனது என்னும் தேகசுதந்தரம், போக சுதந்தரம், ஜீவ
சுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களையும் நீக்கி இறைவனுடைய சுதந்தரத்தை பெற்று மரணம், பிணி, மூப்பு, பயம், இன்பம், துன்பம்
முதலிய அவத்தைகளை நீக்கி இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி ஞான தேகமடைவார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், இவ்வுலக
போகத்தின்கண் மக்களுக்கு அலட்சியம் தோன்றும். இதனால்
நிராசை என்னும் யோகப்பலன் உண்டாகி விரைவில் சுத்த சன்மார்க்க போகம் காணச் செல்வர்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், பள்ளி, கல்லூரிகளில் சாகாக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுத்து, சுத்த
சன்மாக்கம் போதிக்கப்படும். சாகாக் கல்வி உலகெங்கிலும் பரவும். உலக
மக்கள் யாவரும் வடலூரில் வந்து குவிவார்கள். முக்கியமாக மரணத்தை தவிர்க்க பாடுபடும் உலக விஞ்ஞானிகள் அனைவரையும் வடலூர் பெருவெளி ஈர்க்கும். அவர்களுக்கு
சுத்த சன்மார்க்கிகள் பாடம் புகட்டுவர்.
இனிவரும் சுத்த சன்மார்க்க காலத்தில், ஜீவகாருண்யம்
மட்டுமே கடவுள் வழிபாடாக மாறும். பல்வேறு
மதத் தலங்களில் யாவும் ஜீவகாருண்ய வழிபாடு மட்டுமே நடைபெறும். அனையா
தீபம் அனைத்து மதத் தளங்களிலும் ஒளி வீசக் காணலாம். அவ்வாறே
அனைத்து மதத் தளங்களிலும் அனையா அடுப்பும் இருக்கக் காணலாம். அனைத்து
மக்களும் பசி என்கின்ற நோயிலிருந்து விடுபடுவார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், மக்களில்
பெரும்பாலனவர்களின் தேகம் வெளிப்படத் தோன்றாது மறையும் பிறகு தோன்றி மறையும். சிலரின்
தேகம் பிடிபடாது. மூன்று
தேகத்தில் ஏதேனும் ஒரு தேகத்தை நிச்சயம் பெற்றவர்களாக இருப்பர். மக்களின்
தேகங்கள் மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாகாது. வள்ளலாரைக்
கண்ணுற்று அவருடன் கைகோர்த்து அகமகிழ்ந்து இருப்பர்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், பிறப்பைக்
காட்டிலும் இறப்பு விகிதம் குறையும். சிலர்
இறந்தாலும் அவர்களை எழுப்பும் வல்லமையை பலர் பெற்றிருப்பார்கள். பலருக்கு இடம் பெயர்வதற்கு வாகனங்கள் தேவைப்படாது. அவர்கள் தேகம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திலிருக்கும். ஓரிடத்தில் இருந்துக்கொண்டே பல இடங்களில் திரிவார்கள். இன்னும் கோடான கோடி சுத்த சன்மார்க்க சித்திகளை பெற்றிருப்பார்கள். ஐந்தொழில் செய்யும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள். இவ்வுலகம் மட்டுமல்ல, பல
உலங்கங்களுக்குச் சென்று அங்குள்ள உயிர்களுக்கு சுத்த சன்மார்க்கம் போதித்து வருவார்கள்.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், வடலூர்
மட்டுமல்லாது, இவ்வுலகமே புனித இடங்களாக மாறும். ஆன்ம
நேய மேலீட்டால் எங்கும் அமைதி உண்டாகும். போர்
நடைபெறாது. எல்லா
உயிர்களும் இன்புற்று வாழும். காட்டிலுள்ள
விலங்குகள் மற்றும் கடலில் வாழும் மீன் வகைகள் கூட ஒன்றை ஒன்று கொன்று சாப்பிடும் பழக்கம் மெல்ல மாறும். கடவுளின்
நியதிப்படி அம்மாற்றம் உண்டாகும். அல்லது
மாறாமலும் இருக்கலாம். விலங்குகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்னகளின்
வாழ்க்கையில் சில விலங்குகளுக்கு கடவுள் ஜீவகாருண்யத்திற்கு தடைவிதிக்கின்றார். அதுவும் அருள் நியதியே.
இனிவரும்
சுத்த சன்மார்க்க காலத்தில், உலகெங்கும் இருக்கும் சன்மார்க்க சங்கங்களில்
திருவருட்பா இசைக் கச்சேரி நடக்கும்போது அங்கே மிருகத் தொல்களிலான மேளங்கள் பயன்படுத்துவதை
தவிர்த்து விடுவது காலத்தின் கட்டாயம் என்பதை சுத்த சன்மார்க்க சங்கங்கள் அறிந்துக்கொள்ளும்.
மேலும் அன்ன தானம் என்கின்ற பெயரில் தயிர் சாதம், மோர் சாதம், நெய் ஊற்றுதல், நெய்யில்
விளக்கேற்றுதல் போன்ற பாவச் செயல்களையும் தவிர்த்து சுத்த சைவத்தில், சங்கங்கள் நடைபயில
வேண்டுமென்பதை அறிந்து அதன்படி நடக்கும்.
சுத்த
சன்மார்க்கத்தின் எதிர்காலம் நாம் நினைப்பதை விட மிகச் சிறப்பாக அமைய உள்ளது. எனவே
காலம் உள்ளபோதே நாம் நமது ஆன்மாவை தூய்மையுறச் செய்து நம்மை மறைத்திருக்கும் ஏழு திரைகளையும் நீக்கிக்கொள்வோம். ஆன்ம இலாபம் ஒன்றே நமது குறிக்கோளாக இருக்கட்டும். ஆன்ம நட்டத்திற்கு வழிவகுக்கும் நாம் இது வரை பின்பற்றும் அனைத்தையும் விட்டு விட்டு சுத்த சன்மார்க்கம் காண வாருங்கள். ”எதிர்
காலம் ஞான தேகிகளுக்கே” என்ற தெய்வத்தின் குரல் எனது காதில் ஒலித்துக்கொண்டே உள்ளது. உங்களுக்கும் அந்த தெய்வத்தின் குரல் கேட்கும்.
நன்றி.
T.M.RAMALINGAM
Whatsapp No.9445545475
vallalarmail@gmail.com
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.