சிவபெருமானும் வள்ளற்பெருமானும்
(தி.ம.இராமலிங்கம்)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
for Part - 1 - Click the below link.
https://www.blogger.com/blog/post/edit/6869766267563420144/6713363428093231278
அத்தியாயம் – 2
பிறப்பும் இறப்பும்:
சிவபெருமான்:
சைவ சமயக்கடவுளான சிவபெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். அதனால் அவனுக்கு ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை என்கிறது சைவ சமயம்.
"பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்"
(திருவருட்பா - 1960)
என்று சிவபெருமானின் பிறப்பு இறப்புகளை பற்றி வள்ளற்பெருமான் தமது திருவருட்பாவில் பதிவு செய்துள்ளார்.
"பரவெளியன் முக்கண்ணன் பரவிந்தி னொளியன்
பரப்பிரமன் முடிவிலான் பரமுத்த வெளியன்"
(பிரபந்தத்திரட்டு - 2960)
என்று சிவபெருமானின் முடிவில்லாத் தன்மையினை வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே சைவ சமய தத்துவப்படி சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவன் அதாவது பிறப்பும் இறப்பும் இல்லாதவன் என்று தெளிவாகிறது. எனினும்,
"தாய்வயிற்றில் பிறவாது தானே முளைத்தவர்..."
(திருவருட்பா - 2985)
என்று ஓரிடத்தில் சிவபெருமானின் பிறப்பை பற்றி முரணாக ஒரு திருவருட்பா பாடல் வருகிறது. தாய்வயிற்றில் பிறக்காமல் தானே பிறந்தவர் என்றால், அங்கே காலம் குறிக்கிடுகிறது. ஏதோ ஒரு காலத்தில் அவர் எப்படியோ பிறந்திருக்கிறார் என்றே பொருள்கொள்ள நேரிடுகிறது. இருப்பினும் பெரும்பாலும் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதனையே நாம் எடுத்துக்கொண்டு சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்பதே சைவசமய தத்துவம் என கருதுவோம்.
வள்ளற்பெருமான்:
சுத்த சன்மார்க்கத்தை ஏற்படுத்திய வள்ளற்பெருமான் என்பவர் ஒரு சாதாரண மனிதர். ஒரு தாயின் வயிற்றில் பத்து மாதம் உருபெற்று இப்பூமியில் பிறந்தவர். இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்தில் உள்ள திருமருதூர் என்னும் கிராமத்தில் வசித்த சைவ சமயத்தை பின்பற்றும் கருணீகர் குலத்தோனான இராமையபிள்ளைக்கும் அவருடைய ஆறாவது மனைவியான சின்னம்மாள் என்பவருக்கும் ஐந்தாவது மகனாக 1823-ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் வள்ளற்பெருமான் பிறந்தார். இவருடைய இயற்பெயர் இராமலிங்கம். பிற்காலத்தில் வள்ளற்பெருமான் தாம் இடுகின்ற கையொப்பத்தில் முதலில் "இராமலிங்கம் பிள்ளை" என்றும் இறுதியாக "சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை " என்றும் தம்மை வெளிபடுத்திக்கொண்டார். எனினும் "திருவருட்பிரகாச வள்ளலார்" என்று மக்கள் இவரை அழைக்கின்றனர். இவருடைய சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள்தான் முதன் முதலில் இந்த சிறப்புப் பெயரை சூட்டினார். அதிலிருந்து "வள்ளலார்" என்கிற பெயர் நிலைத்துவிட்டது.
"வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபில்யான் ஒருவன் அன்றோ..."
(திருவருட்பா - 3803)
இதுவரையில் இந்த பூமியில் வந்து உதித்த திருக்கூட்ட மரபில் நானும் ஒருவன், என்று தம்மை "திருக்கூட்ட மரபினன்" என்று அறிமுகம் செய்துகொள்கிறார் வள்ளற்பெருமான்.
"எனை இந்த உகத்தே இறைவன்
வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே."
(திருவருட்பா - 5485)
இறைவனின் ஆணைப்படி இந்த பூமி தம்மை வருக... வருக... என வரவேற்றதால் நான் இங்கு வருவிக்க வந்தேன், என்று கூறுவதன் மூலம் இவர் நம்மைப் போல தம்முடைய வினை அழியவோ அல்லது வினை கூடவோ இந்த பூமியில் பிறப்பெய்தவில்லை. இறைவனின் கட்டளையை நிறைவேற்ற அந்த இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பது தெரியவருகிறது.
"தெருட்பெருஞ் சித்தெவையுந் - தேர்ந்துலகோ ருய்ய
வருட்சித்த ராக - வவதரித்த சற்குருவே"
(பிரபந்தத்திரட்டு - 1731)
வள்ளற்பெருமான் எல்லா சித்துக்களையும் தம்முடன் எடுத்துக்கொண்டு இந்த உலகம் உய்ய அருட்சித்தராக இவ்வுலகில் அவதாரம் செய்தார் என்று அவருடைய சீடர் காரணப்பட்டு ச.மு.க. அவர்களும் வள்ளற்பிரானின் பிறப்பை அவதாரம் என்கிறார்.
வள்ளற்பெருமானுக்கு முடிவு என்பதில்லை. அவர் மரணமிலா பெருவாழ்வில் வாழ்ந்து வருகிறார். அவர் எடுத்த உடம்பிற்கு 'ஆதி' என்ற ஒன்று இருந்தது. ஆனால் அவர் எடுத்த உடம்பிற்கு 'அந்தம்' என்ற ஒன்று இல்லாது அவ்வுடம்பினை ஞான உடம்பாக மாற்றிக்கொண்டார். எனவே வள்ளற்பிரானுக்கு மரணம் இல்லை.
"ஏழுலகம் போற்ற மனித்த உடம்பிதை
அழியாத வாய்மை உடம்பாக்கி..."
(திருவருட்பா - 5816)
வள்ளற்பெருமான், தாம் மரணத்தை வென்றதை திருவருட்பாவில் பல இடங்களில் குறித்துள்ளார். அவை எல்லாமும் இங்கு எடுத்துரைப்பின் பல பக்கங்கள் நீளும் எனக்கருதி மேற்கண்ட இரு வரிகளை மட்டும் எடுத்துக்காட்டாக இங்கு வைத்தோம்.
"தூலமழியாச் சுத்த - ஜோதிநாத சித்த
கோலமடைந்து சூழ - கோதிலருளால் வாழ."
(பிரபந்தத்திரட்டு - 308)
வள்ளற்பெருமான் தாம் எடுத்த உடலினை மண்ணுக்கோ நெருப்புக்கோ இட்டு அழித்திடாது சுத்த "ஜோதிநாத சித்தர்" கோலமடைந்து வாழ்வதாக காரணப்பட்டு ச.மு.க. அவர்களும் தமது குருநாதரின் தூல உடம்பின் உண்மையை உலகிற்கு எடுத்துரைக்கிறார். மேலும் வள்ளற்பெருமான் இறவா தேகம் எடுத்ததிற்கான பல ஆதாரங்களை அவருடைய வரலாற்றினை எழுதிய காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் பிரபந்தத்திரட்டு நூலில் இருந்து நாம் அறியமுடியும். எனவே வள்ளற்பெருமானுக்கு பிறப்பு உண்டு இறப்பு இல்லை என்பது முடிபு.
சுத்த சன்மார்க்க வழியில் தீர்வு:
"மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த
தேவரும் காணாச் சிவபெருமான்..."
(திருவாசகம்-625)
மூவர் என்றால் ருத்திரன், நாரணன், பிரமன் ஆகியோரைக் குறிக்கிறது. இந்த மூவர்களாளும் காணமுடியாத உயர்ந்த இடத்தில் சிவபெருமான் இருப்பதாக மாணிக்க வாசகர் கூறுகிறார். இங்கு ருத்திரன் வேறு, சிவபெருமான் வேறாக காட்சிபடுத்தப்படுகிறது. நாம் இந்நூலின் "பணிகள்" என்கிற முதல் அத்தியாயத்திலேயே இதனை பற்றி விளக்கியுள்ளோம். அதனை மீண்டும் இவ்விடத்தில் பொருத்தி பார்ப்பது நல்லது.
சிவனானவன் மும்மூர்திகளாக பிரம்மன், விஷ்ணு, சிவன் என்பவர்களை படைக்கையில், 'சிவன்' என்கிற இடத்தில் ருத்திரனாக தாமே சிவ அம்சமாக தோன்றுவதாக சைவ தத்துவம் கூறுகிறது. ருத்திரனுக்கு பிறகு மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் என்கிறவர்களும் உண்டு. இவர்களும் சிவனின் அம்சமாக விளங்குபவர்களாக சைவ தத்துவம் கூறுகிறது. ஆக சிவபெருமான் இந்த ஐவர்களையும் படைத்து இந்த ஐவரில் தாம் மூவராகவும் (ருத்திரன், மகேஸவரன், சதாசிவன்) இருக்கிறார். சித்தாந்த சைவ தத்துவப்படி நாம் ருத்திரனையே சிவபெருமானாக வணங்குகிறோம். அப்படி வணங்கும்போது ருத்திர அம்சத்தைவிட சிவபெருமானின் சக்தியைத்தான் ருத்திரனின் வடிவில் நாம் காண்கிறோம். எப்படியெனில் ருத்திரனின் பணி அழித்தல் மட்டுமே. ஆனால் நாம் இங்கு ஐந்தொழில்களையும் செய்யும் சிவபெருமானாகவே ருத்திரனை பார்க்கிறோம். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமெனில் ருத்திரனை மறந்து அங்கு சிவபெருமானையே முன்னிறுத்துவதால், நாம் மூவர் என்பதில் சிவபெருமானும் ஒருவர் என்றே கருத வேண்டும்.
"தேவ ரும்தவ முனிவரும் சித்தரும் சிவன்அரி அயன்ஆகும்
மூவரும்..."
-திருவருட்பா-149
மேற்காணும் கருத்தை நிரூபிக்கும் வகையில் 'சிவன்' என்பவர் மூவரில் ஒருவனே என்று வள்ளற்பெருமானும் தெள்ளத்தெளிவாகக் கூறியிருப்பது இங்கு கருதத்தக்கது.
சைவ சமயத் தலைவர் சிவபெருமானின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கின்றது? என்பதனை வள்ளற்பெருமான் தம்முடைய தவ வலிமையால் கண்டுணர்ந்து அதனை தமது இறுதி முடிபாக திருவருட்பாவில் எடுத்துரைப்பதையே நாம் இங்கு தீர்வாக எடுத்துக்கொண்டுள்ளோம்.
"துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்..."
(திருவருட்பா - 4733)
உலக மக்களால் வணங்கப்பெறும் பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன் என்னும் இம்மூவர்களும் தாங்கள் யார் என்றே தெரியாது ஒருவருக்கொருவர் கூடிப்பேசி தங்களது பொல்லாத நேரத்தை விதி என்று நொந்துக்கொண்டு உடல் இளைத்து ஒன்றும் தெரியாமல் முழிக்கின்றனர் என்கிறார் வள்ளற்பிரான்.
"நான்முகர்கள் மிகப்பெரியர் ஆங்கவரில் பெரியர்
நாரணர்கள் மற்றவரின் நாடின்மிகப் பெரியர்
வான்முகத்த உருத்திரர்கள் மற்றவரில் பெரியர்
மயேச்சுரர்கள் சதாசிவர்கள் மற்றவரில் பெரியர்
மீன்முகத்த விந்ததனில் பெரிததனில் நாதம்
மிகப்பெரிது பரைஅதனில் மிகப்பெரியள் அவளின்
ஆன்முகத்தில் பரம்பரந்தான் பெரிததனில் பெரிதாய்
ஆடுகின்ற சேவடியார் அறிவார்காண் தோழி."
(திருவருட்பா - 5645)
மிகப்பெரியவர் பிரம்மன், அவரைவிட மிகப்பெரியவர் விஷ்ணு, அவரைவிட மிகப்பெரியவர் உருத்திரன், அவரைவிட மிகப்பெரியவர் மகேஸ்வரன், அவரைவிட மிகப்பெரியவர் சதாசிவன், அவரைவிட மிகப்பெரிது விந்து, அதனைவிட மிகப்பெரிது நாதம், அதனைவிட மிகப்பெரிது பரை, அதனைவிட மிகப்பெரிது பரம்பரம், அதனைவிட மிகப்பெரிய ஒன்று உள்ளது! அதுதான் ஆடுகின்ற சேவடி! அதனை அறிந்தார் யாருமிலர் என்கிறார் வள்ளற்பெருமான். இவர்களின் பெயரைக் குறிப்பிடும்போது ஒருமையில் கூறாமல் பண்மையில் கூறியிருப்பதை கவனித்தால், இவர்களது பதவியில் பல நபர்கள் இருப்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் வள்ளற்பெருமான்.
ஆடுகின்ற சேவடி என்பது என்ன?
சிதம்பரம் என்னும் ஊரில் உள்ள நடராஜ பெருமானின் சேவடிதான் அது. அதுதானே ஆடுகின்ற சேவடி! ஆடிநிற்குஞ் சேவடி! கூற்றுதைத்த சேவடி! அற்புதப் பொற் சேவடி! இதனைத்தானே வள்ளற்பெருமான் பாடியிருக்கிறார். தில்லை என்கிறார்! சிதம்பரம் என்கிறார்! கூத்தன் என்கிறார்! ஆடிய பாதம் என்கிறார்! திருச்சிற்றம்பலம் என்கிறார்! அம்பலம் என்கிறார்! இத்தனை சொற்களும் அந்த சிதம்பரம் என்னும் ஊரையல்லவா குறித்து நிற்கிறது!
ஆம்!... சந்தேகமே இல்லை... இந்த சொற்களெல்லாம் அந்த சிதம்பரம் என்னும் ஊரினைத்தான் குறிக்கிறது. அதைக்குறித்துதான் வள்ளற்பெருமானும் பாடியிருக்கிறார். அதிலொன்றும் சந்தேகம் இல்லை. ஆனால்... ஆன்ம அறிவு கொண்ட சுத்த சன்மார்க்கிகளுக்கு மட்டும் ஒரு சந்தேகம் உள்ளது. அது என்ன சந்தேகம்?
சிதம்பரம் சென்று அந்த ஆடுகின்ற சேவடியை தரிசிக்காத சைவர்கள் யார்தான் உளர்? மிக சுலபமாக, காட்சிக்கு எளிமையாக அந்த ஆடுகின்ற சேவடியை இதுவரை பார்க்காதவர்களும் சிதம்பரம் சென்றால் பார்த்துவிடலாமே! அப்படியிருக்க வள்ளற்பெருமான், "அந்த சேவடியை யார் அறிவர்?" என்று வினா எழுப்புகிறாரே? எப்படி? நானே சிதம்பரத்தில் உள்ள அச்சேவடியை பலமுறை பார்த்திருக்கின்றேனே! அறிந்திருக்கின்றேனே! அப்படியிருக்க அச்சேவடியை இதுவரை யாரும் அறிந்திலர் என்று வள்ளற்பெருமான் கூறுவதென்பது எப்படி?
சிதம்பரத்தில் உள்ள சிற்றம்பலத்தில் திருவருட்பாவை இசைக்க முடியுமா? அல்லது திருவாசகத்தைத்தான் இசைக்க முடியுமா? அல்லது பன்னிரு திருமுறைகளைத்தான் இசைக்க முடியுமா? தமிழை அந்த சேவடி அதனிடத்தில் கேட்டதுண்டா? தமிழர்களால் - தமிழால் அச்சேவடியை தொடமுடியுமா? அச்சேவடி எமனை உதைத்ததா? அல்லது தமிழர்களை உதைத்ததா? அந்த சேவடியின் புராணக்கதையைக் கேட்டால் அசிங்கமாக உள்ளதே? இப்படிப்பட்ட, புறத்தில் நாம் காண்கிற அந்த சேவடியையா ஐயா வள்ளற்பெருமான் பாடியிருப்பார்? என்கிற சந்தேகம் ஆன்ம அறிவு கொண்டோர்க்கு எழத்தானே செய்யும்!
"ஜோதியுள் ஜோதியுள் ஜோதி" (-4585)என்கிறது திருவருட்பா. நமது ஆன்மாவானது ஜோதியுள் ஜோதியுள் ஜோதியாய் உள்ளது. நமது ஆன்மாவானது ஜோதியின் பிரகாசமாய் உள்ளது. அந்த ஜோதி பிரகாசத்திற்குள் உள்ள ஜோதிதான் இறைவன். அந்த இறைவனின் அசைவுதான் சேவடி என்கிறார் நமது ஐயா வள்ளற்பெருமான். அந்த சேவடி அசைவு கொண்டுள்ளதால் அதனை நடராஜர் என்கிறார் வள்ளற்பெருமான். அந்த ஆன்ம ஜோதி நம்மிடம் இருக்குமிடமே சிதம்பரம் ஆகும். அதுவே திருச்சிற்றம்பலம் என்றும் சிற்சபை என்றும் பொற்சபை என்றும் அம்பலம் என்றும் ஞானசபை என்றெல்லாம் பல பெயர் கொண்டு பாடியிருக்கிறார் நமது ஐயா வள்ளற்பெருமான்.
இப்பொழுது சொல்லுங்கள். இப்படிப்பட்ட ஆடுகின்ற சேவடியை நாம் அறிந்திருக்கிறோமா? இல்லையே! அதனால்தான் இச்சேவடியை "யார் அறிவார்?" என்று தான் அறிந்ததை இதுவரை யாரும் அறியவில்லை என்கிறார் வள்ளற்பெருமான். இந்த சேவடியே கூற்றை உதைத்த சேவடி! தமிழ் மொழியை தந்தை மொழியாகக் கொண்டு, எம்மொழி இசைக்கும் ஆடுகின்ற சேவடி இதுவே. இதுவரை எந்த அருளாளர்களாலும் காணமுடியாத அந்த அசைவானது, அந்த ஆடுகின்ற சேவடியானது, மூன்றிலொரு பாகம் மஞ்சள் நிறமாகவும் மற்றது வெள்ளை நிறமாகவும் உள்ளதாக கண்டு வெளிபடுத்தியிருக்கிறார் நமது ஐயா வள்ளற்பெருமான். அதனையே ஆன்மக்கொடி என்று புறத்தில் குறியீடாக கொண்டுவந்தார் வள்ளற்பெருமான். அந்த கொடி எவ்வாறு காற்றில் அசைந்தாடுகிறதோ அதுபோல் நம்முள்ளே ஆடுகின்றது இறைவனின் சேவடி, என்கிறார் வள்ளற்பெருமான்.
அப்படி யாரும் அறியாத அந்த சேவடியானது, சிவபெருமான் உட்பட நாம் இவ்வுலகில் வணங்கக்கூடிய எத்தெய்வத்தைக்காட்டிலும் உயர்ந்தது, அத்தெய்வத்திற்கெல்லாம் தந்தையானது, என்பதே இப்பாடலில் பொருளாக உள்ளது.
இதனையே வேறொரு பாடலில் வெளிப்படுத்துகிறார்,
"உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி
உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி
பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்
பேசில்அனந் தங்கோடி...."
(திருவருட்பா - 5776)
இவ்வாறு பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்றோர்கள் யாவரும் கோடி கோடியான நபர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் பிறக்காமலும் மரணம் இல்லாமலும் நித்தியமாக இருக்கின்றார்களா?
மனித தேகத்தை மூன்றுவித தேகங்களாக மாற்றிக்கொண்டு பிறர் கண்களுக்குத் தெரியாமல் வாழலாம். முதலில் இந்த தூல உடம்பு சுவர்ண தேகமாக மாறும், அதன் பிறகும் பிரயாசை எடுத்து அதில் வெற்றியடைந்தால் அந்த சுவர்ண தேகம் பிரணவ தேகமாக மாறும், இறுதியாக அந்த பிரணவ தேகம் ஞான தேகமாக மாறும் என்பது வள்ளலாரின் தத்துவம்.
மேற்குறித்த யாவரும் மனிதனாகப் பிறந்து தங்களது தூல உடம்பினை சுவர்ண தேகமாக மாற்றிக்கொண்டு பிறர் கண்களுக்குத் தோன்றாமல் வாழ்ந்துவருவதாகவும், அவரவர்கள் சுவர்ண தேகத்தின் மாற்றுக்குத்தக்க / தரத்திற்குத்தக்க அவரவர்களுக்கு பிரம்மன் என்றும் விஷ்ணு என்றும் சிவன் என்றும் மற்றும் பலப் பெயரில் வாழ்ந்து வருகின்றார்கள். மாற்றுக்குத்தக்க அவரவர்களுக்கு ஆயுள் உண்டு என்பதே வள்ளற்பெருமானின் வாக்கு.
5-மாற்றுள்ள சுவர்ணதேகியே பிரமன், அவருடைய வயது 4,36,000 ஆண்டுகள்.
6-மாற்றுள்ள சுவர்ணதேகியே விஷ்ணு, அவருடைய வயது 8,64,000 ஆண்டுகள்.
7-மாற்றுள்ள சுவர்ணதேகியே ருத்திரன், அவருடைய வயது 12,96,000 ஆண்டுகள்.
8-மாற்றுள்ள சுவர்ணதேகியே மகேஸ்வரன் - வயது 17,28,000 ஆண்டுகள்.
9-மாற்றுள்ள சுவர்ணதேகியே சதாசிவன் - வயது 43,20,000
ஆண்டுகள்.
(திருவருட்பா-உரைநடை நூல் பக்கம்-443)
இவ்வாறு 15-மாற்றுள்ள சுவர்ணதேகியாகிய பரநாத நிலை வரையில் சுவர்ணதேகி என்கிற கட்டுக்குள் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் குறிப்பிட்ட ஆயுள் முடிந்தப்பின்பு மரணம் நேரும். ஒருவர் மரணித்தால் அவருக்கு கட்டாயம் மறுபிறவி உண்டு என்பது வள்ளற்பெருமானின் வாக்கு. எனவே இவர்களுக்கு மரணத்திற்கு பிறகு பிறப்பும் உண்டு என்றாகிறது.
வள்ளற்பெருமானுக்கு மரணம் என்பதே இல்லை என்பதனை நாம் முன்பே கண்டோம். எனினும் சிவபெருமான் நிலையில் இருந்து இவர் எப்படி வேறுபடுகிறார் என்பதனை பார்ப்போம்.
சிவபெருமான் என்பவர் ஓர் சுவர்ணதேகி என்பதனைக் கண்டோம். அதுவும் பல கோடி சிவபெருமான்கள் இருப்பதாகவும் அறிந்தோம். சிவபெருமானையும் தாண்டி 15-மாற்றுள்ள பரநாத நிலையில் உள்ள சுவர்ணதேகிகளும் பல கோடியினர் உள்ளனர் என்பதனையும் அறிந்தோம். பரநாத நிலைக்கும் மேல் 16 முதல் 108 மாற்று வரை உள்ள சுவர்ணதேகிகளை 'பிரணவ தேகிகள்' என்று அழைக்கிறோம். பிரணவதேகிகளான இவர்களுக்கும் பிறப்பு இறப்பு உண்டு.
அடுத்ததாக நாம் எடுப்பது ஞான தேகம். இந்த ஞானதேகத்திற்கு அளவு கடந்த மாற்று. இவர்களே காலாதீதர்கள். மரணமிலா பெருவாழ்வில் வாழ்பவர்கள். இவர்களுக்கு பிறப்பு உண்டு, மரணம் என்பது இல்லை, மரணம் இல்லை என்பதால் மறு பிறப்பு இல்லை. இப்படிப்பட்ட ஞான தேகிகளின் பட்டியலில் வருபவர்தான் நமது வள்ளற்பெருமான். இவருக்கு ஆயுள் என்பதே கிடையாது. காலத்தை கடந்தவர்.
ஆகவே திருவருட்பாவின் ஆதரப்படி, சிவபெருமான் பிறப்பும் இறப்பும் உள்ள ஒரு சுவர்ணதேகியாவார். வள்ளற்பெருமானுக்கு பிறப்பு உண்டு, இறப்பு இல்லை. வள்ளற்பெருமான் சிவபெருமானைவிட பலமடங்கு உயர்ந்த நிலையில் ஞானதேகம் பெற்று மரணமிலா பெருவாழ்வில் வாழ்கிறார் என்பதும் தெளிவாகிறது. தான் பெற்ற இந்த ஞான தேகத்தை வேறு ஒருவரும் பெறவில்லை என்பதையும் வள்ளற்பெருமான் தனது அருட்பா பதிப்பில் பதித்துவிடுகிறார்.
"மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை"
(திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்-1581)
என்று தனது பேரருட் தனிப்பெருந் தந்தையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறார். இவ்வாறு சிவபெருமானை விட வள்ளற்பெருமான் தனித்துவம் மிக்கவராக மேலானவராக விளங்குவதை நாம் உள்ளங்கை நெல்லிக் கனி போன்று கண்டு களிக்கலாம். நிற்க.
சுத்த சன்மார்க்க வாசகர்களாகிய நாம் இதுவரை "பிறப்பும் - இறப்பும்" என்கிற இந்த இரண்டாவது அத்தியாயத்தின் படி சிவபெருமானின் நிலையினையும் வள்ளற்பெருமானின் நிலையினையும் வாசித்து அறிந்தோம்.
தற்போது நமக்கெல்லாம் ஒரு சந்தேகம் முளைத்திருக்கும். அதாவது வள்ளற்பெருமான் போல் இறப்பு இல்லாமல் இருக்க முடியும்! ஆனால் பிறப்பில்லாமல் எவ்வாறு இருக்க முடியும்? நாம் வணங்கும் கடவுளே ஆனாலும் அவரும் ஒரு நாள் பிறந்திருக்கத்தானே வேண்டும்! பிறவாத ஒன்று எவ்வாறு இருக்க இயலும்! என்கிற சந்தேகந்தான் அது.
நம்மை படைத்தது யார்?
இறைவன்!
அப்படியானால், அந்த இறைவனை படைத்தது யார்?
??????
இம்மண்ணில் பிறந்த மனிதர்களுள் சிற்றறிவு முதற்கொண்டு பேரறறிவு உடைய எவராலும் இதுவரை இதற்கான பதிலை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களால் இயன்றதெல்லாம் 'அநாதி' என்ற சொல்லை பயன்படுத்தியது மட்டுமே. 'அநாதி' என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்? நமது அறிவானது காரண காரிய அளவைக்குள் அதனை அளந்து பார்க்கிறது. 'இறைவன்' என்பவர் ஒரு காரியம். அந்த காரியத்திற்கு காரணம் எது? காரணம் இல்லாமல் காரியம் இருக்க முடியாது என்கிறது நமது அறிவு.
'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்பது நமது நம்பிக்கை. ஓர் அணுவின் அசைவிற்கு கூட ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுகிறது. அந்த அசைவிற்கு காரணமாக இருப்பது 'அவன்'. அப்படியெனில் அந்த 'அவன்' எதனின் காரணமாக உள்ளது? என்கிற கேள்வி நம்மை சூழ்கிறது.
நாகார்ஜூனர் கூறுகிறார், 'நம்முடைய மருள் அல்லது அறியாமையினாலேயே உலகம் நமக்குத் தோன்றுகிறது. பிரக்ஞை அல்லது ஞானம் தோன்றியதும் உலகம் மறைந்து விடும். அதற்கப்பால் நீடிப்பது சூனியமே ஆகும்."
இந்த சூனியத்தையே சிலர் 'பிரம்மம்' என்கின்றனர். சிலர் 'இறைவன்', 'தெய்வம்', 'கடவுள்' என்கின்றனர். சிலர் 'அல்லா', 'கர்த்தர்', 'சிவன்', 'விஷ்ணு', 'பிரம்மா', 'இயற்கை விளக்கம்', 'இயற்கை இன்பம்', 'இயற்கை உண்மை', 'அருட்பெருஞ்ஜோதி', 'பரமாகாசம்' என்றெல்லாம் இவ்வுலகில் பெயர் வைத்து வணங்குவதாக தோன்றுகிறது இல்லையா. அந்தந்த பெயர்கள் சொல்லுகிற தத்துவங்களுக்கு ஏற்றவாறு சற்றேறவும் குறையவும் சூனியத்தை வரையறை செய்திருக்கிறார்கள் அவ்வளவே. சூனியத்தை முழுதும் அறிந்தவர்கள் இதுவரை யாருமில்லை, இனியும் அறியப்போவதுமில்லை. ஏனென்றால் சூனியம் முழுமை அற்றதாக உள்ளது. சூனியத்தின் உண்மை விளக்கவொண்ணாத ஒரு மர்ம நிலையாகும். அதைப்பற்றி முழு வரையறையினை நம்மால் கொடுத்துவிட முடியாது. ஏனென்றால் அது வரையறை அற்றதாக உள்ளது. அதனால் அது குறித்து ஆழமாக விவாதிப்பதோ மறுப்பதோ இயலாத ஒன்றாகும்.
நேற்று சிவன், விஷ்ணு, அல்லா, கர்த்தர் என்பதிலிருந்து இன்று அருட்பெருஞ்ஜோதியாகவும் நாளை எதுவாகவும் தன்னை வெளிப்படுத்தக்கூடும் அந்த சூனியம். அருளாளர்கள் இப்பூமிக்கு வந்துக்கொண்டே இருப்பார்கள். தத்துவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்றவாறு மக்களாகிய நாமும் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே முக்கியம். 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்கிற உண்மை அந்த சூனியத்திற்கே முழு பொருத்தமுடையதாக உள்ளது.
அப்படிப்பட்ட எங்குமாய் விளங்குகின்ற சூனியத்திற்கு பிறப்பு எது? இறப்பு எது? ஆதி எது? அந்தம் எது? அடி எது? முடி எது? என்று நம்மால் கண்டுவிட முடியுமா? அல்லது ஆதியும் அந்தமும் அதற்கு இருக்கத்தான் முடியுமா? சூனியம் என்பது காரணமா? அல்லது காரியமா?
மேற்கண்ட சூனியக் கோட்பாட்டை மிகச்சாதாரனமாக சொல்ல வேண்டுமானால், "கோழிக்கு முதல் முட்டையா? முட்டைக்கு முதல் கோழியா? இவற்றில் எது ஆதி? எது அந்தம்? எது காரணம்? எது காரியம்?" என்று வினவலாம். பதில் உரைப்பது முடியாத காரியம். அதற்காக நாம், ஆதியும் அந்தமும் இல்லாதது கோழி! என்று சொல்லலாமா? என்ற கேள்வியும் எழுகிறது.
நியாய வைசேஷிகம் கூறுகிறது, "பொருள்கள் உருவாதல் என்பது பகுதிகளின் சேர்க்கை என்பதே ஆகும். அதாவது பகுதிகளற்ற பொருள்கள் உற்பத்தியாகமாட்டா. பரமாணுக்கள் பகுதிகளற்றவை. எனவே அவற்றை உருவாக்க முடியாது. மேலும் உருவாக்கும் பொருளுக்கு முடிவும் உண்டு. எனவே உருவாக்க முடியாத பரமாணுக்களுக்கு முடிவும் கிடையாது. சுருக்கமாகச் சொல்வதானால் அணுக்கள் நித்தியமானவை. அதாவது தோற்றமும் முடிவும் அற்றவை."
அதாவது ஒரு பொருளில் உள்ள பொருட்களை பிரித்துக்கொண்டே சென்றோமானால், அப்பொருளிலிருந்து மேலும் பிரிக்க முடியாது இறுதியாக எஞ்சிய பொருளே 'பகுதிகள் அற்ற பொருள்' என்கிறது நியாய வைசேஷிகம். அந்த பகுதிகளற்ற பொருள் என்றும் இருக்கக்கூடியது. அதற்கு ஆதியும் அந்தமும் இல்லை என்கிறது அது. இதுவும் 'அனாதி' தத்துவத்தையே குறிப்பிடுகிறது.
வள்ளற்பெருமானின் நோக்கில் இறைவனுடைய அந்தரங்கம் எவ்வாறு அறியப்படுகிறது என்பதையும் காண்போம்,
"மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதி உண்மையதாய் அமர்ந்த மெய்ப்பொருளே"
(திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்-897)
மனாதிகள் என்றால், இந்திரிய அறிவு, மன அறிவு, ஜீவ அறிவு இவை மூன்றும் சேர்ததே மனாதிகள். இந்த மூன்று அறிவின் கண் கொண்டும் நாம் இறைவனின் உண்மையினை காண முடியாது. இவ்வுலகில் சாதிகளும், சமயங்களும், மதங்களும் இம்மூன்று அறிவின் கண் கொண்டு பார்க்கப்பட்டதே ஆகும்.
சுத்த சன்மார்க்கம் மூலம் ஆன்ம அறிவின் கண் கொண்டு இறைவனை காணும் பொழுது, அவர் வானடு வானாய் அனாதியாய் இருப்பதாக கூறுகிறார். அதாவது ஒரு வானத்தின் மீது இன்னொரு வானம் என அடுக்கிக்கொண்டே சென்றால் எப்படி இருக்குமோ அதுபோன்று வானத்தின் அடுக்குகளாய் ஒரு முடிவில்லா சூனியமாய் (வானம் மற்றும் சூனியம் என்றால் வெற்றிடம்)விளங்குவதாகவும்,
அவ்வெற்றிடம் எவ்வாறு தோற்றுவிப்பாரும் அழிப்பாரும் இன்றி சுயமாக, தான்தோன்றித் தனமாக, அனாதி நிலையே உண்மைஎனக் கொண்டதாக இருக்கிறதோ அவ்விடத்தில் அவ்வெற்றிடத்தில் 'அனாதியே உண்மை’ என்கிற இறைவனும் மெய்ப்பொருளாய் அமர்ந்துள்ளான்.
இவ்வரிகளிலிருந்து நாம் இறைவன் 'அனாதி'யாக உள்ளான் என்பதை தெரிந்து கொள்கிறோம். மேலும் கூறுகிறார்...
"சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருட்பெருஞ் ஜோதி"
(திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்-115)
"பதிபசு பாசம் எனப்பகர் மூன்றின்
பதியினைப் போற்பசு பாசம் அநாதி"
திருமூலர் தமது திருமந்திரத்தில், இறைவன் உயிர் மற்றும் பாசம் இவை மூன்றும் அநாதி நிலையே என்கிறார். ஆனால் நமது வள்ளற்பெருமான் அநாதி நிலைகளில் இருப்பவை மொத்தம் ஆறு என்கிறார். திருமூலர் கூறியவற்றில் முதல் இரண்டினை ஒப்புக்கொள்ளும் வள்ளலார் இறுதியான பாசத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பாசம் என்பது ஒரு குணம் அல்லது அறிவு அவ்வளவே. அது அநாதி அல்ல என்பது வள்ளலாரின் கூற்று. வள்ளலார் கூறும் அநாதிகள் ஆறினை காண்போம்;
கடவுள், அருட்சத்தி, ஆகாயம், காற்று, ஆன்மா, அணு என்பனவாம். இவ்வாறில் முதன்மை இடத்தில் இருப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்கிறார் வள்ளற்பெருமான். இப்படி அனாதியில் ஆதியாக / முதன்மையாக இருக்கும் அருட்பெருஞ்ஜோதி கடவுளை சுத்த சன்மார்க்கம் அன்றி இவ்வுலகில் கீழான நிலையில் உள்ள சாதிகளும், சமயங்களும், மதங்களும் அம்முதன்மை அனாதியை காணவில்லை என்கிறார் வள்ளற்பெருமான்.
இவ்வரிகளிலிருதும் நாம் இறைவன் 'அனாதி'யே என்பதை அறியமுடிகிறது. இதுபோன்று பல இடங்களில் திருவருட்பாவானது இறைவனை அனாதி என்கிறது. மேலும் திருவருட்பா உரைநடை நூல் கூறுகிறது,
"ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் - ஆன்மாகாசத்தில் - அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்." (பக்கம்-353)
மேற்காணும் எடுத்துக்காட்டிலிருந்து இறைவன் பிறப்பற்றவன் மற்றும் இறப்பற்றவன் என்கிற அனாதி நிலையில் இருப்பதாக வள்ளற்பெருமான் எடுத்தியம்புகிறார். எனவே அனாதி நிலைக்கு காரண காரிய தொடர்புகள் இருக்க முடியாது என்றாகிறது. ஏன் இருக்க முடியாது? என்றால், அனாதி நிலையில் அவை இரண்டும் ஒன்றாகவே இருப்பதாக கூறப்படுகிறது. எது காரியமாக இருக்கிறதோ அதுவே காரணமாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அநாதி நிலைக்கு காரணம் அந்த அநாதி நிலையே என்றாகிறது.
"காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன" (திருவருட்பா-5699)
இப்போது, நாம் இதற்கு முன்பு கேட்ட கேள்வியினை மீண்டும் கேட்டுப் பார்த்தால் அதற்கு விடை கிடைத்துவிடும்.
நம்மை படைத்தது யார்?
இறைவன்!
அப்படியானால், அந்த இறைவனை படைத்தது யார்?
இறைவன்!
அதாவது இறைவன் படைக்கப்பட்ட பொருள் அல்ல. அது என்றும் இருக்கின்ற அனாதி என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
"காரண காரியக் கல்விகள் எல்லாம் கற்பித்து... (திருவருட்பா-4645)
'அனாதியின் காரணம் அனாதியே' என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டுமானால், நாம் அந்த அனாதியிடமே காரண காரியக் கல்வியினை பயில வேண்டும். வள்ளற்பெருமானுக்கு இந்த கல்வியினை அந்த அனாதி கற்பித்துள்ளது. நாமும் கற்போமானால் நமக்கு கேள்விகள் எழாது.
"காரண அருவே காரிய உருவே
காரண காரியம் காட்டி..." (திருவருட்பா-3891)
அனாதி நிலையில் காரண காரியம் எப்படி உள்ளது என்றால்? காரியம் உருவாகவும் வெளிப்படையாகவும் அதற்கான காரணம் அருவாகவும் மறைவாகவும் உள்ளதாக திருவருட்பா கூறுகிறது.
"காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி"
(திரு அருட்பெருஞ்ஜோதி அகவல்-53)
வெளி என்னும் ஆகாயத்தின் காரியம் என்ன? அந்த ஆகாயத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள் ஆகியவையே ஆகாயத்தின் காரியமாக உள்ளது. அவை உருவாக காரணம் என்ன? அதற்கு காரணம் அருவான ஆகாயம். அதாவது அருவான ஆகாயமே காரணமாக இருந்து தன்னிடத்தே உருவாக நட்சத்திரங்களையும் கோள்களையும் உருவாக்கிக்கொண்டது. எனவே அனாதியான அந்த ஆகாயமே காரணமும் காரியமுமாக தன்னை காட்டிக்கொண்டிருக்கிறது. வேதங்கள் கூறுகின்ற இறைவனின் இருப்பிடமான சிற்சபை என்பது அந்த ஆகாயத்தில்தான் உள்ளது. அங்கே முதன்மை அனாதியான அருட்பெருஞ்ஜோதி விளக்கமாக உள்ளார்.
"காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
காரண காரியக் கருவிது பலவாய்
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
பொழுதினில் அறிதிஎப் பொருள்நிலை களுமே
தாரணி தனில்என்ற தயவுடை அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே."
(திருவருட்பா-3695)
காரண நிலையிலும் ஒரு காரியம் உண்டு. காரியம் எங்கிருந்தோ திடீரென புதிதாகத் தோன்றுவது கிடையாது. அது உற்பத்திக்கு முன்னரும் உள்ளது. இதுவே சற்காரிய வாதம் என்கிறது சைவ சித்தாந்தம். 'இல்லது தோன்றாது; உள்ளது அழியாது' என்பது சற்காரிய வாதம். இதன் விளக்கம் பலவாக விரியும். இதன் பொருள் நமக்கு புரியவே புரியாது. எனவே தம் மகனான வள்ளற்பெருமானுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், காரண காரியத்தால் அளப்பதை விட்டுவிட்டு பூரண நிலை பெறுவதில் முழு ஈடுபாடு காட்டுக; பூரணம் அடைந்துவிட்டால் அவையெல்லாம் கணப் பொழுதில் உனக்குத் தெரியவரும் என்று அறிவுறுத்துகிறார்.
"காரணம் இன்னது, அக்காரணத்தால் செய்கின்ற காரியம் இன்னது, அதற்கும்மேல் அக்காரண காரியத்தின் மூலகாரணம் இன்னது என்று இன்னும் பலவகையில் அக்காரண காரியத்தை அளப்பதில் கைதேர்ந்தது இந்த வேதங்களும் அதன் விளக்கமான ஆகமங்களும் ஆகும்.
நீ அவ்வாறு காரண காரிய கேள்விகளைக் கேட்டு அளந்துக்கொண்டு காலத்தை வீண் செய்யாதே மகனே. உனது நோக்கம் பூரண நிலை அனுபவம் பெறுவதே ஆகும். அந்த அனுபவம் கிடைத்துவிட்டால் கணப் பொழுதில் எப்பொருளின் நிலைகளையும் நீ அறிந்துவிடுவாய்."
வள்ளற்பெருமானும் இறைவன் அளித்த உபதேசம் இதுவே. ஆகவே நாமும் காரண காரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இது உண்மையா? அது உண்மையா? என்று குழம்புவதைக் காட்டிலும் அதிலிருந்து விடுபட்டு பூரண நிலை அனுபவம் பெறுவதே குறிக்கோளாக இருக்க வேண்டும். வேத வழியினை விட்டுவிட்டு திருவருட்பாவை கைகொள்வோம். இறைவன் அனாதி என்றால் அனாதிதான். அதற்கான காரண காரியத்திற்குள் இறங்க வேண்டாம் என்கிறார் வள்ளற்பெருமான். அனுபவம் கிடைக்கப் பெற்றால் எல்லாம் தானாக வெட்ட வெளிச்சமாக தெரியவரும். எனவே அந்த அனுபவம் கிடைக்க முயலவேண்டும்.
மேலும் பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இவைகளை காலமே நிர்ணயம் செய்கிறது. இந்த பிரபஞ்சத்தில் காலம் எவ்வாறு உருவானது? இந்த பிரபஞ்சத்தில் சுழலும் தன்மையுள்ள பொருட்களுக்கு எல்லாம் காலம் உள்ளது. சுழலாத பொருட்கள் என்று இந்த பிரபஞ்சத்தில் ஏதாவது உண்டா? என்றால் இல்லை. நாம் வசிக்கின்ற பூமி முதற்கொண்டு நமது சூரிய குடும்பமும், நமது பால் வெளியும், நமது உடுக்களும், அதுபோல் எண்ணற்றவைகளும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அதன் மையத்தையும் சுற்றி வருவதாகவே உள்ளன.
இவ்வாறு சுற்றுவதினால் அங்கு காலம் என்கிற மாயை உருவாக்கம் பெறுகிறது. நீங்கள் தற்போது உங்கள் வீட்டில் அமர்ந்துக்கொண்டு மடிக்கணிணியில் இதனை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் உங்கள் வீட்டில் மட்டுந்தான் இருக்கிறீர்களா? என்றால் இல்லை. இந்த பூமியுடன் சேர்ந்து நீங்களும் உங்கள் மடிக்கணிணியும் இப்பிரபஞ்சத்தில் சுற்றுகிறீர்கள். நொடிக்கு நொடி நீங்கள் இடம் மாறிக்கொண்டே இருக்கிறீர்கள். அப்போது காலம் உங்களை பிடித்துக்கொள்கிறது. எத்தனை பகல், எத்தனை இரவு என்று கணக்கிடுவதே காலம். அல்லது எத்தனை சுழற்சி எவ்வளது தூரம் என்று கணக்கிடுவதே காலம்.
இப்படி காலத்திற்குள் சிக்கிக்கொண்ட எதற்கும் பிறப்பும் இறப்பும், ஆதியும் அந்தமும் இருந்தே தீரும் என்பது இயற்கை விதியாக உள்ளது. இப்பிரபஞ்சத்தில் சுழலாத பொருள் என்பது இல்லை என்பதைக் கண்டோம். ஆனால் இப்பிரபஞ்ச வெளி சுழல்கிறதா? இவ்வெளியில் உள்ள பொருட்கள் சுழல்கின்றனவே அன்றி இவ்வெளி சுழலவில்லை. எனவே அதற்கு காலம் என்பது கிடையாது. எனவே அதற்கு ஆதியும் அந்தமும் கிடையாது என்று நாம் இந்த ஆதி அந்தத்திற்கு ஒருவாறு அறிவியல் பூர்வமாக விளக்கம் அளிக்கலாம்.
மரணமிலா பெருவாழ்வில் காலாதீதன் ஆவது என்பதும் இந்த அறிவியல் கோட்பாட்டின்படி உண்மையே. எவ்வாறெனில், இந்த பொருள் நிலையில் உள்ள தேகத்தை ஞான தேகமாக்கிக்கொண்டு ஒளி உடம்பெடுத்துவிட்டால், அந்நிலையில் அவன் காலத்தை கடந்தவன் ஆகிறான். ஏனெனில் அவன் தற்போது ஒரு பொருள் அல்ல. அருள் அனுபவ தேகம் எடுத்துக்கொண்டதால், அவனை இப்பிரபஞ்ச பொருட்களின் சுழற்சியிலிருந்து விடுபடுகிறான். சுழற்சியிலிருந்து விடுபடும் எதனையும் காலம் அண்டாது. காலம் இல்லையெனில் மரணமும் இல்லை. வள்ளற்பெருமானின் ஞான தேகம் பெற்ற நிலை இதுதான்
PART -3 WILL BE COUNTINUE
T.M.RAMALINGAM
Whatsapp No.9445545475
vallalarmail@gmail.com
நன்றி ஐயா,
ReplyDeleteஎனக்கிருந்த ஐயங்கள் பல நீங்கின, தங்கள் வலையொளியும் என் கேள்விக்குத் தீனியாக கிடைத்திருக்கிறது. வாழ்க வளமுடன்! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை 🔥💛🤍🙏🏻
நன்றி ஐயா
Deleteஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி இறைவன் யார் ஐயா எனக்கு யார் இறைவன் என்று சொல்லுங்கள்
ReplyDeleteஒருவர் மற்றவர்களுக்கு சொல்லி தெரிவதில்லை இறைவன். தனக்குத் தானே அக விசாரம் மூலம் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து ஐயா.
Deleteஉருத்திரன் வேறு சிவபெருமான் வேறு, மும்மூர்த்திகளில் ஒருவர் உருத்திரன். அதேபோல் மகேஸ்வரன் வேறு சதாசிவன் வேறு, இவர்களைப்படைத்தவர் சிவபெருமான்.
ReplyDeleteபூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
பதப்பொருள் : கோத்தும்பீ - அரச வண்டே! பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
சிவபெருமானின் மூன்று அம்சங்களாக (பகுதிகளாக) விளங்குபவர்களே ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவன். எனவே இவர்கள் மூவரும் சிவபெருமானே ஆகும். பொதுவாக மூவர் என்றால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர்களை குறிக்கும். நன்றி.
Delete