Wednesday, December 1, 2021

சிவபெருமானும் வள்ளற்பெருமானும் - தி.ம.இராமலிங்கம்.

 

சிவபெருமானும் வள்ளற்பெருமானும்

 

(தி..இராமலிங்கம்)

 

          அருட்பெருஞ்ஜோதி                 அருட்பெருஞ்ஜோதி

          தனிப்பெருங்கருணை              அருட்பெருஞ்ஜோதி

 

           எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

 


          எல்லாம் வல்ல இந்த பரவெளியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வசிக்கும் இந்த பூமியானது கல்லும் மண்ணும் நீரும் தீயும் காற்றும் வானுமாக உருவாக்கம் பெற்று, அது தன்னைத்தானே கிழக்கிலிருந்து மேற்காக சுற்றிக்கொண்டு அதன் அருகில் உள்ள சூரியனையும் சுற்றி வருகின்றது.

 

          இவ்வாறு பூமி உருவாகிய பல கோடி ஆண்டுகளுக்கு பின்னர் அதில் உயிரினங்கள் தோன்றின. இப்படி உயிரினங்கள் தோன்றிய பல கோடி ஆண்டுகளுக்கு பின்னரே மனிதன் இந்த பூமியில் தோன்றினான்.

 

          மனிதன் தோன்றிய பல லட்சம் ஆண்டுகளுக்கு பின்னர், அவனது சிந்தனை எழுச்சி பெற்றதால் கடவுள் என்ற ஒருவர் அனுமானிக்கப்பட்டார். ஒவ்வொருவரின் அனுமானத்திற்குத் தக்க ஒவ்வொரு கடவுள் உருவாக்கப்பட்டு அதனை ஏற்கும் மனிதக் குழுவால் அந்தந்த அனுமானக் கடவுள்கள் மனிதர்களால் வணங்கப்பட்டு வந்தன.

 

          அப்படி ஒவ்வொரு அனுமானக் கடவுளையும் எவ்வாறு வணங்க வேண்டும் என்றும், அந்தக் கடவுள் பெயர் இன்னதென்றும் அதன் இயல்புகள் இன்னதென்றும் அதன் உருவம் இன்னதென்றும் அதன் வீடு இன்னதென்றும் அனுமானித்து உருவாக்கிய நூல்களே புனித நூல்கள் எனவும் வேதங்கள் எனவும் இந்த பூமியில் தற்போது எண்ணற்ற நூல்கள் உருவாகி விட்டன.  

 

          அவ்வகையில் சிவபெருமான் என்னும் முழுமுதற் கடவுளை வணங்கக்கூடிய மனிதக் குழுக்களை சைவ சமயத்தவர்கள் என்பர். சைவம் என்பது பொதுவாக தாவர உணவை மட்டுமே உண்பவர்களை குறிக்கும் சொல்லாகும். ஆனால் இங்கு அவ்வாறு பொருள் கொள்ளுதல் கூடாது. "சிவ" என்பது "சைவ" என மாறியது.

 

          சைவ சமயம் உருவான இடம் தமிழகம். சிவபெருமான் தமிழர்களின் கண்டுபிடிப்பு. தற்போது இந்த சைவ சமயம் இந்தியா முழுதும் பரவியுள்ளது. தமிழில் எழுதப்பட்ட சைவ தத்துவங்கள் எண்ணற்றவை. அவைகள் யாவும் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சைவ சமயமே சயங்களுக்கு எல்லாம் தலையாய இடத்திலிருந்து மக்களை வழிநடத்தி வருகின்றது.

சைவ சமயத்தில் சுமார் 22 பிரிவுகளுக்கும் மேற்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு கொள்கை உடையவனவாய் விளங்குகின்றன. எனினும் அவை யாவும் சிவபெருமான் அல்லது பசுபதி என்கிற கடவுளை தமது சைவசமயத்தின் கடவுளாகக் கொண்டுள்ளன. மேலும் இவையாவும் 36 தத்துவங்களை சிற்சில வேறுபாடுகளுக்கிணங்க ஒப்புக்கொள்கின்றன. நமது தமிழகத்தில் விளங்கும் சைவ சமயமானது "சித்தாந்த சைவம்" ஆகும். இது த்வைத கொள்கையினை உடையது. அதாவது ஜீவன் வேறு, சிவன் வேறு என்ற கொள்கையினை உடையது. பாசுபத சைவைம், காஷ்மீர சைவம், வீரசைவம் போன்றவை சைவ சமயத்தில் உள்ள மிக முக்கிய பிரிவுகளாகும். இவைகளை எல்லாம் ஒவ்வொன்றாக அலசி ஆராய முடியாத அளவிற்கு இவைகள் தம்முள் வேறுபாடுகளை கொண்டுள்ளன. ஆனாலும் நாம் இங்கு சைவ சமயத்தின் பொது தத்துவங்களைக் கொண்டு அதன் தலைவரான சிவபெருமானின் நிலையினையும் சைவ சமயத் தத்துவங்களையும் வள்ளபெருமான் நிலையினையும் சுத்த சன்மார்க்கத் தத்துவங்களையும் சற்றே அலசுவோம்.

 

சைவ சமயங்களில் எண்ணற்ற அருளாளர்கள் தமிழகத்தில் தோன்றியுள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவரும் நமக்கு மிக சமீப காலத்தில் தோன்றியவர் வள்ளற்பெருமான் ஆவார்.

 

          வள்ளற்பெருமான் சைவ சமய குடும்பத்தில் தோன்றி சைவ சமயத்தில் மிகவும் ஆழ்ந்து சென்று அதனால் பல சித்துக்களை கைவரப்பெற்றவர். பள்ளிக்கு செல்லாமலேயே உலகியல் அறிவையும் அருளியல் அறிவையும் கைவரப் பெற்றவர். அதனால் இவரை ஓதாமல் உணர்ந்தவர் என்பர். இவர் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவராக வளர்ந்தாலும் ஒரு கால கட்டத்தில் அதனையும் மீறி "சுத்த சன்மார்க்கம்" கண்டவர். உலக மக்கள் இதுவரை காணாத ஓர் புதிய மார்க்கத்திற்கு அழைத்துச் சென்றவர். "மரணமிலா பெருவாழ்வு" என்ற உயர்ந்த குறிக்கோளை அடைவதே இவரின் சுத்த சன்மார்க்கம் சொல்லும் வழிமுறையாகும்.

 

சிவபெருமானையோ வள்ளற்பெருமானையோ ஒருவருடன் ஒருவரை உயர்த்தியோ தாழ்த்தியோ சொல்வதல்ல இந்த ஒப்பீடு. எனினும் சுத்த சன்மார்க்க தத்துவப்படியும், சைவ சமயத் தத்துவப்படியும் ஒப்பிடும்போது ஒன்றோடு ஒன்று மேலும் கீழும் அல்லது சமமாக இருப்பது இயற்கை. இங்கு இரு தத்துவங்கள் பேசிக்கொள்கின்றன. அதனை நான் இங்கு எழுத்து வடிவமாக உங்களுக்குத் தந்திருக்கிறேன். இந்த ஒப்பீட்டினை நீங்கள் தவறானது என்றோ அல்லது சரியானது என்றோ எப்படி எடுத்துக்கொண்டாலும் அதற்கு முழுமுதல் காரணமாக இருப்பது இங்கு சொல்லப்பட்டுள்ள தத்துவங்கள் மட்டுமே, நான் அல்ல. எனவே இந்த ஒப்பீட்டில் நீங்கள் என்னை பார்ப்பதை விட்டுவிட்டு எதுவாகினும் தத்துவங்களைப் பார்த்து நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள்.

 

          எனவே சைவ சமயத் தலைவர் சிவபெருமானையும் சுத்த சன்மார்க்கத் தலைவர் வள்ளற்பெருமானையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் அவர்களின் உயர்வு தாழ்வுகளை அவர்களின் தத்துவங்களைக் கொண்டு நாம் இங்கு சற்று ஆராய்வோம். சைவ சமயமும் சுத்த சன்மார்க்கமும் ஒரே பாதையில்தான் செல்கின்றதா? அல்லது வேறு வேறானவையா? சிவபெருமானும் வள்ளற்பெருமானும் தங்களது தத்துவங்களால் ஒத்தவர்களா? அல்லது வேறானவர்களா? என்பதனை நாம் சற்று பார்ப்போம் வாருங்கள். இங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிற்கும் உண்டான இறுதி தீர்வினை அந்தந்த தலைப்பிற்கு இறுதியில் திருவருட்பாவின் துணைகொண்டு தீர்க்கப்பட்டுள்ளது.

 

 

அத்தியாயம் - 1

 

பணிகள்:

 

        சிவபெருமான்:

 

        உலகினைப் படைத்து, உலக உயிர்களையும் படைத்து, மும்மூர்த்திகளையும் படைத்து, தேவர்கள், அசுரர்கள் இவர்களையும் படைத்து, உலக பிரளயக் காலத்தில் தான் படைத்ததை எல்லாம் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவனாகிய தான் மட்டும் நிலையாக இருக்கும் பணியினை சைவ சமயக்கடவுளான சிவபெருமான் செய்வதாக சைவ தத்துவம் உரைக்கிறது.

 

          சிவனானவன் மும்மூர்திகளாக பிரம்மன், விஷ்ணு, சிவன்  என்பவர்களை படைக்கையில், 'சிவன்' என்கிற இடத்தில் ருத்திரனாக தாமே சிவ அம்சமாக தோன்றுவதாக சைவ தத்துவம் கூறுகிறது. ருத்திரனுக்கு பிறகு மகேஸ்வரன் மற்றும் சதாசிவன் என்கிறவர்களும் உண்டு. இவர்களும் சிவனின் அம்சமாக விளங்குபவர்களாக சைவ தத்துவம் கூறுகிறது. ஆக சிவபெருமான் இந்த ஐவர்களையும் படைத்து இந்த ஐவரில் தாம் மூவராகவும் (ருத்திரன், மகேஸவரன், சதாசிவன்) இருக்கிறார்.

 

          சைவ தத்துவப்படி நாம் ருத்திரனையே சிவபெருமானாக வணங்குகிறோம். இந்த ருத்திரனின் பணி அழித்தல் ஆகும். எனவே சிவனின் முக்கியப் பணி அழித்தலே ஆகும். பிரம்மனின் பணி படைத்தல், விஷ்ணுவின் பணி காத்தல், மகேஷ்வரனின் பணி மறைத்தல், சதாசிவனின் பணி அருளள் என்பனவாகும். இதனை சைவ சமயத்தில் 'ஐந்தொழில்கள்' என வழங்கப்படுகின்றன.

 

          இந்து சமயங்களில் ஒன்றான வைணவ சமயமானது, சைவ சமய தத்துவங்களை மறுக்கும். வைணவ சமய தத்துவப்படி விஷ்ணு என்னும் முழுமுதற்கடவுள்தான் சிவபெருமானை படைத்ததாக கூறுகிறது. நாம் வைணவ சமயத்திற்கு செல்லாமல், சைவ சமயக்கடவுளை பற்றி மட்டும் பார்ப்போமே எனில், சிவபெருமானே முழுமுதற் கடவுள். அவரது முக்கியப் பணி அழித்தல் பணியாகும்.

 

          எனினும் சிவபெருமான் சிதம்பர நடராஜ மூர்த்தியாக எழுந்தருளி மேற்காணும் ஐந்து தொழிலையும் அவர் ஒருவரே செய்வதாகவும் ஒரு கருத்துண்டு.

 

          நடராஜ பெருமானின் வலக்கையிலுள்ள உடுக்கை படைக்கும் தொழிலையும், இடக்கையில் உள்ள நெருப்பு அழிக்கும் தொழிலையும், மற்றொரு வலக்கையில் உட்புறத்தை காட்டுவது அருளும் தொழிலையும், மற்றொரு இடக்கை துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைத்தல் தொழிலையும், தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாதமும் காக்கும் தொழிலையும் செய்வதாகக் கூறுவர்.  இப்படி ஐந்தொழிலையும் ஒருங்கே செய்யக்கூடிய வல்லமை சிவபெருமானுக்கு உண்டு என்று சைவ சமயம் கூறுகிறது.

 

          வள்ளற்பெருமான்:

       

        இறைவன் வள்ளற்பெருமானுக்கு இட்ட பணி எதுவெனில், உலகத்தில் உள்ள மக்களை திருத்தி அவர்களை சன்மார்க்க சங்கத்தை நாடும்படி செய்விக்கவேண்டும் என்பதே. அகத்தே கருத்து புறத்தே வெளுத்து இருக்கும் மக்களை திருத்திச் சன்மார்க்க சங்கத்தை நாடவைத்து அவர்களை இப்பிறவியிலேயே இறைவனை அடைய செய்யும் நற்செயலை செய்வது வள்ளற்பெருமானின் முக்கியப் பணியாகும்.

 

          'அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

           சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

           இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

           உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.'

                                                                (திருவருட்பா - 5485)

 

என்று தமது உயரிய பணியாக இறைவன் வகுத்ததை வள்ளற்பெருமான் மிகத்தெளிவாக இங்கே சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் எனக்கு இப்பணி மட்டும் போதாது, எனக்கு இன்னொரு பணியும் வேண்டும் என்று தாமே இறைவனிடம் கேட்டுப் பெற்ற பணியும் உண்டு. அதுதான் ஐந்தொழில் செய்யும் பணியாகும்.

 

          'சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழில்

           ஐந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி'

                                                (திருவருட்பா - 4615-167)

 

"எண்ணத்தில் உள்ள துன்பத்தை அழித்து சிவமாகப் பெற்று, அந்த சிவம் செய்யும் தொழிலாகிய ஐந்தையும் எனக்கும் அருள வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே" என்று சிவபெருமான் செய்யும் ஐந்தொழில் ஆற்றலை நானும் செய்ய வேண்டும் என்று இறைவனிடம் கேட்கிறார். இறைவனும் சிவபெருமான் செய்யும் ஐந்தொழில் செய்யும் ஆற்றலை வள்ளற்பெருமானுக்கும் கொடுக்கிறார். ஆனால் அதிலும் ஒரு அரிய நுட்பத்தைச் சொல்லி அதற்காக இதனை நீ இந்த ஐந்தொழிலை செய்வாயாக! என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளற்பெருமானும் அப்பணியை செய்ய ஆணையிடுகிறார்.

 

          அது என்ன நுட்பம்? சிவபெருமான் செய்யும் ஐந்தொழில் ஏதோ கடமைக்கென இருக்க, வள்ளற்பெருமான் செய்யும் ஐந்தொழில் என்பதில் ஒரு செயற்கரிய நோக்கம் இருப்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். அந்நோக்கம் என்னவெனில், உலகில் உள்ள மனிதர்கள் மட்டுமல்லாது, உலக உயிர்கள் எல்லாம் ஒளி நெறி பெற்றிடும் படி நான் அருளும் இந்த ஐந்தொழிலையும் நீ மிகச்சிறப்பாக செய்திடல் வேண்டும் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளற்பெருமானுக்கு அருளுகின்றார்.

 

          'உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட

           இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை'

                                                (திருவருட்பா - 4615-1577) 

 

          முடிவாக வள்ளற்பெருமானின் பணியாக இருப்பது யாதெனில், மனிதர்களைத் திருத்தி அவர்களை சன்மார்க்க சங்கத்தை அடைவிப்பதும், தான் ஐந்தொழில் செய்து அதன் மூலம் உலக உயிர்களை ஒளி நெறி பற்றிட செய்தலும் ஆகும்.

 

        சுத்த சன்மார்க்க வழியில் தீர்வு:

 

          சைவ சமய தத்துவப்படி சிவபெருமான் ஐந்தொழிலையும் செய்கின்றார். அதேபோல் சுத்த சன்மார்க்க தத்துவப்படி வள்ளற்பெருமானும் ஐந்தொழிலையும் செய்கின்றார். இருவருக்கும் அந்த ஆற்றல் உள்ளதால் இவ்விருவரும் இங்கே சமநிலையினை அடைகின்றனர்.

 

          எனினும் ஒரே தொழிலை இரண்டு நபர்கள் எவ்வாறு செய்தல் இயலும்? ஆகவே தற்போது இந்த ஐந்தொழிலையும் செய்வது சிவபெருமான் அல்ல, வள்ளற்பெருமானே என்று இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். தற்போது உலகில் ஒளி நெறியாம் சுத்த சன்மார்க்க நெறி ஓங்கிக்கொண்டு வருவதையும் நாம் உணரவேண்டும்.

 

          சரி, பணி செய்பவர்கள் பணியாளர்கள் என்று கொண்டால், இங்கே சிவபெருமானும் வள்ளற்பெருமானும் ஒரு பணியாளராகவே இருக்கின்றனர். இப்பணியை இவர்களுக்கு வழங்கும் முதலாளி யார்? என்ற கேள்வி எழுகிறது இல்லையா?

 

          அந்த முதலாளிதான் வள்ளற்பெருமான் கூறியபடி "அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்". இவரே சிவபெருமானுக்கும் வள்ளற்பெருமானுக்கும் ஐந்தொழில் செய்யும் ஆற்றலை வழங்கியவர். வள்ளற்பெருமானுக்கு தமது இறைவன் யார் என்று தெரியும். ஆனால் சிவபெருமானோ தமது இறைவனான அருட்பெருஞ்ஜோதியை இன்னும் காணவில்லை. எனவேதான் (சைவ சமய தத்துவப்படியும் இதுவே உண்மை) அவர் இன்னும் நெற்றியில் திருநீறு அணிந்துக்கொண்டு சைவ சமயத்தை பின்பற்றும் மானிடரைப்போல் தவ நிலையில் கண்களை மூடி, இறைவனைத் தேடி தியானித்துக்கொண்டே இருக்கிறார். அவர் மானிடராகப் பிறந்து வள்ளற்பிரானைப்போல் வந்தால்தான் அருட்பெருஞ்ஜோதியை அவரால் காணமுடியும். வள்ளற்பிரான் பெற்ற நிலையினை அடையவும் முடியும். அதுவரை சிவபெருமான் ஒரு சுவர்ணதேகியே.

 

          'சிருட்டித் தலைவரை சிருட்டியண் டங்களை

           அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

           காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை

           ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

           அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை

           அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

           மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை

           அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

           தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை

           அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி'

                                      (திருவருட்பா - 4615-583)

 

ஐந்தொழில் செய்யும் தலைவர்களான பிரமா, விஷ்ணு, சிவன், மகேஷ்வரன், சதாசிவன் ஆகியோர்களை, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வகுத்தும் அமைத்தும் உள்ளதாக வள்ளற்பெருமான் கூறுகிறார்.

 

          'அகப்புற வமுதளித் தைவரா திகளை

           அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி'

                                      (திருவருட்பா - 4615-751)

 

'அகப்புற அமுதாகிய வெளியும் காற்றும் அளித்து பிரமா முதல் சதாசிவன் வரையான ஐவர்களையும் இவ்வுலகில் மீண்டும் மனிதர்களாக அகப்பட - வெளிப்பட வரும் காலம்வரை அவர்களை அமுது கொடுத்து காத்தருள்வாய் அருட்பெருஞ்ஜோதி' என்று வள்ளற்பெருமான் அந்த சிவபெருமானுக்காக இறைவனிடம் வேண்டுகிறார்.

 

          'படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை

           அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி

           காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை

           ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி

           அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்

           அடர்புற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

           மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை

           அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

           தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை

           அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி'

                                      (திருவருட்பா - 4615-853)

 

பிரமன் என்பவர்கள் பற்பல கோடியும், விஷ்ணு என்பவர்கள் கணக்கில் பல கோடியும், சிவன் என்பவர்கள் அளவே இல்லாமலும், மகேஷ்வரன் என்பவர்கள் வகைவகையாக பல கோடியும், சதாசிவன் என்பவர்களை சேர்த்தால் பல கோடியும் இருப்பதாகவும் அவர்களையெல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே படைத்தும், காத்தும், அடக்கியும், மறைத்தும், அருளியும் வருவதாக வள்ளற்பெருமான் உரைக்கின்றார்.

 

          உலக உயிர்களை சிவபெருமான் படைத்தார் என்கிறது சைவ சமயம். ஆனால் சுத்த சன்மார்க்கம், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டது அல்ல என்கிறது. இறைவன் எவ்வாறு அனாதியோ அவ்வாறே உயிர்களும் அனாதி என்கிறது சுத்த சன்மார்க்கம். வெளி, கடவுள், காற்று, உயிர் ஆகியவைகள் யாராலும் படைக்கப்பட்டது அல்ல. ஆகவே இறைவனானவன் தன்னைப்போல உள்ள அனாதி சக்திகளான வெளி, காற்று, உயிர்களை இறுதிகாலத்தில் அழித்து தன்னுள் ஒடுக்கி தான் மட்டுமே இருக்கக்கூடிய நிலையினை அடையமுடியாது என்பதும் தெளிவாகிறது. "பஞ்சகிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது" (திருவருட்பா உரைநடை பக்கம் - 355) என்று வள்ளற்பெருமான் சொல்வது மூலம் இதனை அறியலாம்.

 


          "ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் - ஆன்மாகாசத்தில் - அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்."

                                                          (திருவருட்பா உரைநடை பக்கம் - 353)

 

          அதுபோல் தேவர்களையும் அசுரர்களையும் சிவபெருமான் படைத்தார் என்கிறது சைவ சமயம். தேவர்களையும் அசுரர்களையும் மோதவிட்டு அதன் மூலம் பல்வேறு மாயாஜால வித்தைகளை அரங்கேற்றி, ஒரு துப்பறியும் நாவலாகவே விளங்குகின்றன சைவ புராணங்கள். ஆனால் சுத்த சன்மார்க்கம் அதனை மறுக்கிறது. துர்குணமுடைய மனிதர்களே அசுரர்கள், அறிவும் தயவும் உடைய மனிதர்களே தேவர்கள் என்று சொல்கிறது. அதாவது தேவர், அசுரர், மனிதர் இவை மூன்றுமே மனித உடலை எடுத்த நமது மானிடக்கூட்டங்கள்தான் என்கிறது.

 

          "அகங்காரி முதல் துர்கந்த வஸ்துக்களெல்லாம் பூமிக்குள் தோன்றுங் கந்தமூலம் - அழுக்குடைய வஸ்து - இவைகள் அசுரர் - துர்வாசனை, துர்வாசனையுடையவர்கள், துர்குண மனுசஷியர்கள். அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறு எந்த காரணத்தாலும் அல்ல."

                                                          (திருவருட்பா உரைநடை பக்கம் - 378)

 

          சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில், தாவர யோனி, ஊர்வன யோனி, நீர்வாழ்வன யோனி, பறவை யோனி, விலங்கு யோனி, தேவ யோனி, நரக யோனி, அதன் பிறகே அழியாப் பெருவாழ்வைத் தருகின்ற உயர் அறிவுடைய மனித தேகம் கிடைப்பதாக வள்ளற்பெருமான் உரைக்கிறார்.

 


இதில் தேவயோனியும், நரக யோனியும் மனித வடிவங்களே. தேவ யோனியாக பசாசர் (பிசாசு), பூதர், இராக்கதர் (ஈயாதார்), அசுரர் (நல்வினையாளர்), சுரர் (தீவினையாளர்) ஆகியோர்கள் தேவயோனியில் பிறந்த மனிதர்கள். (சைவ சமயத்தில் இப்பிறவிகளை பதினெட்டு கூட்டங்கள் என்பர். (பதினெண்கணம்) அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னார், நிருதர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், விண்ணோர், மண்ணோர் என்ற பதினெட்டு வகையான கூட்டங்கள். இக்கூட்டங்களுக்கு அதிபதி பிள்ளையார், எனவே அவருக்கு "கணபதி" என்றும் பெயர்.)

 



நரக யோனியாக காட்டகத்தார் (காட்டில் வாழ்பவர்கள்), கரவு செய்வார் (திருடர்கள்), கொலை செய்வார் போன்றவர்கள் நரக யோனியில் பிறந்த மனிதர்கள்.

 

இவர்களல்லாது, அழியாப் பெருவாழ்வைத் தருகின்ற உயர் அறிவுடைய மனித தேகத்தைப் பெற்றவர்கள் அல்லது அவ்வாழ்வினைப் பெற முயற்சிப்பவர்களே மனித யோனியர் ஆவர்.

 

பொதுவாக "மனிதர்கள்" என்று நம்மை நாம் கூறிக்கொண்டாலும் மேற்காணும் மூன்று பிரிவுகளில், நாம் எந்த யோனியை முதலாகக் கொண்டவர்கள் என்பதை நமது செய்லகள்தான் எடுத்துரைக்கும், என்று சுத்த சன்மார்க்கம் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

  

          மேற்காணும் தத்துவங்களின்படி, இங்கே சைவமத தத்துவங்கள் சுத்த சன்மார்க்க தத்துவத்தோடு முரண்படுகிறது. அளவே இல்லாத சிவன்களில் நாம் வணங்கும் சிவன் யார் என்று யாருக்கும் தெரியாது. நம்மில் பலர், முன்னால் சிவன்களாக இருக்கவும் கூடும்.

 

                ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென்

                   கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய்

                   சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித்

                   தெய்வமென்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

                                                                             (திருவருட்பா-4800)

 

வள்ளற்பெருமான் இப்பாடலுக்கு உரை எழுதியவர்களும், பொருள் காண்பவர்களும் உடனே சிவபெருமான்தான் வள்ளலாருக்கு ஐந்தொழில் செய்ய ஆணையிட்டான் என்று நினைப்பர். ஏனெனில் "சைவர் என்னும் நின்னடியார் சபை நடுவில்" என்கிற வரியில் நாம் நிலைகுலைந்து விடுவோம்.

 

"திருவருளாகிய அமுதத்தைக் கண்களால் காணுமாறு கையில் தந்து உண்பித்தான் சிவன் என்பதற்கு, “நின் அருளமுது என் கைவரச் செய்து உண்ணுவித்தாய்என்று சொல்லுகின்றார். கங்கணம் - கையில் அணியும் வளையல் போல்வதொரு ஆபரணம். சைவர் - சிவசம்பந்தம் பெற்ற சிவஞானிகள். அடியார் கூட்டத்தில் இருக்க வைத்துத் தனது சிவஞானத்தால் ஒளி திகழச் செய்தமை புலப்பட, “தெய்வமென்று வளர்க்கின்றாய்என்று செப்புகின்றார். சைவம் சிவத்தோடு சம்பந்தமானது என்பர் திருமூலர்." ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்களின் உரையாகும்.

 

சைவ சமயத் தத்துவத்தின்படி, ஐந்தொழில் செய்யும் ஆற்றல் அதன் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு மட்டுமே உரியது. ஜீவாத்மா என்றும் பரமாத்மாவாக ஆகமுடியாது என்கிறது சைவம். ஜீவாத்மா தமது உயர்நிலையில் பரமாத்மாவின் நிழலடியில் தஞ்சம்புகும் என்பதே சைவ சமயத்தத்துவம்.

 


நான்கு வேதங்களிலும், சைவ புராணங்களிலும், முக்கியமாக தமிழகத்தில் விளக்கும் சித்தாந்த சைவ சமயத்திலும், நாயன்மார்களின் வரலாற்றிலும் ஐந்தொழில் செய்கிற ஜீவாத்மா (மனிதர்) என்பது இல்லவே இல்லை. சிவபெருமான், தான் செய்யும் அந்த ஐந்தொழிலை யாருக்காவது கொடுத்ததாக கதைகள்கூட கிடையாது. அவ்வாறிருக்க இங்கே எப்படி சைவ தத்துவத்தை மீறி சிவபெருமான் என்ற கடவுள் பூமியில் வாழுகின்ற ஒரு சாதாரன மனிதனுக்கு ஐந்தொழிலை செய்யும் வல்லமையை கொடுக்க இயலும்? ஆனால் சுத்த சன்மார்க்கம் ஓர் துரும்பிற்குக்கூட அந்த ஐந்தொழில் செய்யும் வல்லமையை கொடுக்கும் என்கிறது.

 

"சைவர் என்னும் நின்னடியார்" என்பதை மேலோட்டமாக பார்த்தால் அது சிவபெருமானை வழிபடும் சைவ சமயத்தார்களைக் குறிக்கும். ஆனால் மேற்காணும் தத்துவ முரணால் இவ்விடத்தில் "சைவர்" என்பது ஊன் உண்ணாமல் இருக்கும் அக இனத்தாரையே குறிக்கும். அக இனத்தார்களே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அடியார்கள் ஆவர் என்பது வள்ளற்பெருமானின் வாக்கு. எனவே இந்த "சைவம்" என்ற ஒரு சொல் இரு பொருள் தருவதால், நாம் அச்சொல்லினை இடத்திற்குத் தக்கவே பயன்படுத்த வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு எல்லாம் சிவபெருமான்தான் என்று கருதினால், அது சைவ சமயத் தத்துவத்தையே தகர்க்கும். வள்ளற்பெருமான் வெளிப்பட தோன்றிய காலத்தில், அன்றைய சைவர்களும் சைவ மடங்களும் வள்ளற்பெருமானை எதிர்த்ததின் மர்மம் இதுதான். வள்ளற்பெருமான் ஆறாந் திருமுறையினை வெளியிட வேண்டாம் என்று சொன்னதிற்கும் காரணம் இதுதான். நாம் சமரசமாகப் போகவேண்டி, மற்ற சிவனடியார்கள் போல் வள்ளற்பெருமானையும் கருதுவதால் வருகின்ற பிழையால் இப்படிப்பட்ட உரைகள் திருவருட்பா பாடல்களுக்கு எழுதப்படுகின்றன. உண்மையை எழுதினால், எழுதப்படுபவர்களுக்கு உலகியர்களால் பாதிப்பு வரும் என்று கருதியே இப்படிப்பட்ட உண்மை கருத்துக்களை வள்ளற்பெருமான் உரைக்கும்போது, அக்கருத்தினை சைவ சமயச் சொற்களை பயன்படுத்தியே பெரும்பாலும் பாடல்களாக வடித்திருப்பார். அதனை சற்று கூர்ந்து நோக்கினால் அதன் பொருள் வேறாக இருப்பதைக் காணலாம். நாம் சமய மத சடங்குகளைக் கடந்து திருவருட்பாவினை பார்க்கும்போது அதன் சத்தியமானது நம்மையும் சத்தியமாக்கும் வல்லமை உடையதாய் இருப்பதை உணரலாம். அதுவல்லாது மேலோட்டமாக பார்த்தால், நம்மால் சமய மதக்குழியினை விட்டு பெருவெளியினை தரிசிப்பது என்பது நடவாத காரியம்.   

 

முடிவாக, மேற்படியான ஆய்வின் மூலம் ஐந்தொழில் செய்வதில் சிவபெருமானும் வள்ளற்பெருமானும் சமநிலையில் இருந்தாலும், அந்த ஐந்தொழில் செய்வதில் ஒரு நொக்கத்தை வள்ளற்பெருமானுக்கு அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்கியதால், வள்ளற்பெருமான் செய்யும் ஐந்தொழில், சிவபெருமான் செய்யும் ஐந்தொழிலைக்காட்டிலும் பல படிகள் முன்னிற்கின்றன. எனவே பணி செய்வதில், சிவபெருமானைவிட வள்ளற்பெருமானே மோலோங்கி இருப்பதையும் நம்மால் இதன்மூலம் அறிய முடிகிறது.

 

ஐரோப்பிய தத்துவ ஞானிகள் எல்லாம் ஒருவரின் கருத்தினை மற்றவர்கள் மறுத்து அவரவர்களும் ஒவ்வொரு புதிய கருத்தினை வெளிப்படுத்தினர். ஆனால் இந்திய தத்துவ ஞானிகள் அவ்வாறு அல்ல. இங்கே பல்வேறு மாறுபட்ட கருத்துகள் தோன்றினாலும் அவையாவும் முந்தைய மரபை ஒட்டியே தங்களது வேர்களை அமைத்துக்கொண்டன. பழையனவற்றின் தொடர்ச்சியாகவே நாம் புதிய தத்துவங்களை காண இயலும். இதுவரை இந்தியாவில் யாரும் புதிய அடிப்படை தத்துவங்களை உருவாக்கிவிடவில்லை. வள்ளற்பெருமானும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

 

இவரது சுத்த சன்மார்க்க தத்துவங்கள், சைவசமயத் தத்துவத்தையே வேர்களாக கொண்டுள்ளன. வேர் சைவசமயமாக இருந்தாலும் அதிலிருந்து வளர்ந்த மரம் வேறாகவும், இவ்வுலகில் புதியதாகவும் இருப்பதுதான் சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பு. 'சுத்த சன்மார்க்கம்' என்பது 'சன்மார்க்கம்' என்ற சைவசமயத்தின் வேர் ஆகும். சுத்த சன்மார்க்கத்தில் 'சிவம்' என்பது சைவசமயத்தின் 'சிவன்' என்கிற வேர் ஆகும். சுத்த சன்மார்க்கத்தில் 'மரணமிலா பெருவாழ்வு' என்பது சைவசமயத்தின் 'சிவசாயுச்சியம்' என்கிற வேர் ஆகும். சுத்த சன்மார்க்கத்தில் 'அக இனம்' என்பது சைவசமயத்தின் 'தீட்சை' என்கிற வேர் ஆகும். சுத்த சன்மார்க்கத்தில் 'ஐந்தொழில்' என்பது சைவசமயத்தின் 'ஐந்தொழில்' என்கிற வேர் ஆகும். சுத்த சன்மார்க்கத்தில் 'சிற்சபை' என்பது சைவசமயத்தின் சிதம்பரம் 'பொன்னம்பலம்' என்கிற வேர் ஆகும். சுத்த சன்மார்க்கத்தில் 'சிற்சத்தி' என்பது சைவசமயத்தில் 'சிவகாமி' என்கிற வேர் ஆகும். 

 


வேர் என்பது மரத்தின் ஒரு முக்கிய பாகமாக இருப்பினும், நாம் வெளியில் தெரிகின்ற மரமான சுத்த சன்மார்க்கத்தை மட்டுமே காண வேண்டும் என்பது வள்ளற்பெருமானின் அவா ஆகும். அதாவது வேர் இல்லாத மரமாக காண்பவர்கள் சுத்த சன்மார்க்கிகள். மாறாக, சுத்த சன்மார்க்க மரத்தில் மண் மூடியுள்ள வேரினை தோண்டி தோண்டி பார்ப்பவர்கள் சைவ சன்மார்க்கிகள் ஆவர். இவர்களால் சுத்த சன்மார்க்கம் என்கிற மரமும் சேதமாகும். சுத்த சன்மார்க்க காலம் வரும்வரை முரண்பாடுகளுக்கிடையேதான் இந்த புதிய மார்க்கம் வளர்ச்சிகாண வேண்டும் என்பதும் வள்ளலாரின் விருப்பம். முரண்பாடுகளை நாமே நீக்குவதைவிட அவரவர்கள் உண்மை கண்டு நீக்கிக்கொண்டு வெளி வரவேண்டும் என்பதே வள்ளலாரின் சூட்சுமம்.   

 

சுத்த சன்மார்க்க மரத்தில் காய்த்து பழுத்ததுதான் 'அருட்பெருஞ்ஜோதி' அல்லது 'சிவம்' என்கிற ஆண்டவர். இவருக்கென்று புதியதாக இவ்வுலகில் ஞானசபை எழுந்துள்ளது. இவருக்கென்று புதியதாக இவ்வுலகில் அருட்பாடல்கள் எழுந்துள்ளது. இவருக்கென்று புதியதாக இவ்வுலகில் திருமுறைகள் எழுந்துள்ளன. இவருக்கென்று புதியதாக இவ்வுலகில் அனையாதீபம் எழுந்துள்ளன. இவருக்கென்று புதியதாக இவ்வுலகில் அனையாஅடுப்பு எழுந்துள்ளன. இவருக்கென்று புதியதாக இவ்வுலகில் கொடி எழுந்துள்ளது. இவருக்கென்று புதியதாக இவ்வுலகில் வழிபாட்டுமுறை எழுந்துள்ளது. இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக வெள்ளாடை சாதுக்கள் எழுந்துள்ளார்கள். இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக அகஇனம் எழுந்துள்ளது. இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக ஒழுக்கங்கள் எழுந்துள்ளது. இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக பெருவாழ்வு எழுந்துள்ளது. இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக சங்கம் எழுந்துள்ளது. இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக சாலை எழுந்துள்ளது. இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக மகாமந்திரம் எழுந்துள்ளது. இவருக்கென்று இவ்வுலகில் புதியதாக சாகாக்கல்வி விளக்கமாக எழுந்துள்ளது. இதற்கெல்லாம் வேர் சைவசமயத்தில் உள்ளதாகவும், மற்ற மதங்களில் உள்ளதாகவும் நாம் அந்த வேரினைத் தேடிச்சென்றால், நாமும் அந்த வேர் போல மண்மூடிப்போக வேண்டியதுதான். அதற்காகத்தான் அந்த வேர்களை எல்லாம் 'பொய்' என்று சாடுகிறார். இதன்மூலம் நம்மை மேல்நோக்கிய பார்வையால், மரத்தினைக் கண்டு அதில் உள்ள பழத்தினை உண்ண வலியுறுத்துகிறார். அந்த பழத்தினை உண்ணும் வழிமுறையாக சுத்த சன்மார்க்கத்தை படைக்கிறார்.

 

அவ்வாறு படைக்கும்போது, சைவசமய வேர் சொற்களில் சிலவற்றை மட்டும் அப்படியே எடுத்து கையாள்கிறார். உதாரணமாக 'ஐந்தொழில்' என்பது சைவசமய கடவுளான சிவபெருமான் மட்டுமே செய்யக்கூடிய ஒரு செய்கையாகும். இந்த 'ஐந்தொழில்' என்கிற செய்கையினை சுத்த சன்மார்க்கம் மூலம், அதனை நானும் செய்கிறேன் என்கிறார் வள்ளற்பெருமான். ஏன்.... அதனை ஒரு துரும்புகூட செய்ய முடியும் என்கிறார் வள்ளற்பெருமான். சுத்த சன்மார்க்கத்தை பொறுத்தவரை சிவபெருமான் என்பவர் ஒரு துரும்பு என்று சொல்லாமல் சொல்லுகிறார் வள்ளற்பெருமான். இதைப்போலவே 'திருச்சிற்றம்பலம்', 'சிவகாமி', 'நடராஜர்', 'சிதம்பரம்', 'சன்மார்க்கம்' போன்ற சைவசமய வேர் சொற்களை அப்படியே சுத்த சன்மார்க்கத்தில் பயன்படுதியிருப்பினும் அதற்கு உள்ளார்ந்த பொருள் வேறு. இதற்கெல்லாம் சைவ சமய வேர் சொற்களின் பொருளைக்கொண்டு நாம் நோக்குதல் கூடாது. 'வள்ளலார்' என்ற சொல் ஒன்றுதான். ஆனால் சைவசமயத்தவர்கள் அச்சொல்லை எவ்வாறு பார்க்கிறார்களோ, அதனினும் முற்றிலும் வேறு பொருள் கொண்டு பார்ப்பார்கள் சுத்த சன்மார்க்கிகள்.

 

இதுவரை நாம் "பணிகள்" என்ற தலைப்பில் சிவபெருமானையும் வள்ளற்பெருமானையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இனி அவர்களது பிறப்பும் இறப்பும் பற்றி சற்று ஆராய்வோம்.





T.M.RAMALINGAM 

Whatsapp No.+91 9445545475

vallalarmail@gmail.com

2 comments:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.