Sunday, December 19, 2021

பெரும்பதி விளக்கம்

                               பெரும்பதி விளக்கம்

                      (வள்ளற்பெருமானின் குணங்கள்)

கரமிரண்டும் கட்டியே புலணைந்தும் கட்டுகின்ற   

          குண முடையோன் பசிஎனும் கொடிய

நரக உலகில் உணவளிக்கும் புண்ணிய

          நிறைகுண முடையோன் சுத்த சன்மார்க்க

உரமளித்து மனிதரை இறையாக்கும் சித்தி     

          உடைய குணமுடையோன் அருள் நிறை       

இரக்கமே குணமாய்க் கொண்டு இவ்வுலகில்

          இறவாதேக மெடுத்த இராமலிங்க பிள்ளையே.

 

 காவியாம் உலகில் வெள்ளுடைக் கட்டிக்

          கருணைநிறை குண முடையோன் மத

காவியம் எல்லாம் மண்மூடிப் போகதிருக்

          குறளேதன் குணமுடையோன் உலகரை உரக்கக்

கூவியழைத்து சங்கம் சார்என இரக்கத்தால்

          கதறும் குணமுடையோன் பிற உயிர்களின்

ஆவிகொலை யுறக்கண்டு நடுங்கி இளைத்து

          உயிரிரக்க குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

இறைவனுக் கோரிரக்கம் கற்பித்து மதம்

          ஒன்றில்லா குணமுடையோன் உடம் பெனும்

குறையினை முத்தேக மாக்கி நித்திய

          கதிபெற்ற குணமுடையோன் அத்து வித

நிறைதனில் இறைவனென தானும் ஓங்கி

          நிற்கின்ற குணமுடையோன் பேசும் பொய்

மறைக ளெல்லாம் இறந்தன இறந்தனவென

          மீளும் குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

இயற்கை மலமூன்றும் இரக்கத்தால் நொடியில்      

          அகற்றும் குணமுடையோன் அடி முடியெனும்

மயக்கந் தவிர்த்து மாண்புறவே கண்டிட்ட

          மாசறு குணமுடையோன் அந்தோ உலகெலாம்

வியக்க இறைவனின் முதல்மகன் இவனென

          வாய்மை குணமுடையோன் இரக்கமே உருவாய்

இயங்க சுத்தசன்மார்க்க தயவால் ஓங்கி

          உத்தம குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

 உத்தரஞான சிதம்பரம் வந்தால் என்றுவந்தாயென

          உணவளிக்கும் குணமுடையோன் குறை தீர

பத்திகொண்டு காண வந்தால் வாஎன்றுகுறை

          போக்கும் குணமுடையோன் என்றும் உலகோர்

மத்தியில் நலமோங்க மகாமந்திரம் ஓதும்

          மங்கள குணமுடையோன் மரணம் அதை

சத்தியமாய் தடுக்கும் சுத்த சன்மார்க்கஞ்

          சார்ந்த குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

இடுகாடு செல்லாது யாவர்க்கும் சித்திவளாக

          இடங் கொடுக்கும் இரக்க குணமுடையோன்

அடுத்தடுத்து இறந்தோறெல்லாம் எழுந்திடும்

          அற்புதம் புரியவரும் அதீத குணமுடையோன்

நடுக்கண் திறந்து அண்டமெல்லாம் கண்டங்கே

          நடனஞ் செய்யும் இறை குணமுடையோன்

விடுத்ததினால் வந்த இலாபத்தால் ஐந்தொழில்

          வன்மை குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

          வன்புலால் உணவுடன் மிருகப் பாலையும்

                   விட்டவர்க்கே நின்று அருளும் குணமுடையோன்

          நன்மக்கள் அகஇனத்தாருடன் சங்கம் வைத்து

                   நித்தமும் கூடிக் குலாவும் குணமுடையோன்

          புன்மக்கள் புறஇனத்தாரை வம்மின் இங்கேவெனப்

                   பேசி நம்மவரென ஆக்கும் குணமுடையோன்

          ன்னருள் ஈந்து இன்சொல்பேசி யார்க்கும்

                   தந்தை குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

         சைவக் கடவுள் சிவன்முதற் அனைத்து

          சமயத் தெய்வங்களை அருளும் குணமுடையோன்

உவப்புடன் தனிக்கடவுள் கண்டதனை யார்க்கும்

          உத்தரக் கடவுளென வணங்கும் குணமுடையோன்

நவநிலை எல்லாம் தனிக்கடவுளின் ஓரணு    

          நிலையே என தெளிந்த குணமுடையோன்

தவத்திலே பெற்ற அருட்பெருஞ் ஜோதியை

          தனிஎனுங் குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

உயிரைக் கொல்லும் சூலம்சிலுவை முதற்கொண்ட

          ஆயுத தெய்வங்களை தவிர்க்கும் குணமுடையோன்

பயின்ற சமயமத வேதங்களெல்லாம் பெரும்

          பாழென அருட்பா அருளும் குணமுடையோன்

வயிற்றுக்கு தாவர உணவளிப்பவரை எல்லாம்

          வல்லான் இவனென ஏற்றும் குணமுடையோன்

பயிர்வாடியதுக் கண்டு தானும் வாடும்மனிதப்

          பண்பு குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

அருட்ஜோதி ஆனேனென்று தன்னிலை எதுவென

          அறைந்து இறைவனே தானெனும் குணமுடையோன்

ஒருமைநிலை ஓங்கி நானிருக்கும் இடத்தில்வந்து             

          அமர்ந்த இறையோடு இறையாகும் குணமுடையோன்

இருமை இனியில்லை எனவே வள்ளலுனை

          இருகைகூப்பி வணங்க தடையகற்றும் குணமுடையோன்

கருவுரு உயிர்களுக்கெல்லாம் இறவாநிலை யளிக்கும்

                  குணங்கொண்ட சிதம்பர இராமலிங்க பிள்ளையே. 


தி.ம.இராமலிங்கம்

T.M.RAMALINGAM

Whatsapp No. +91 9445545475

vallalarmail@gmail.com











 






No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.