Friday, December 17, 2021

சிவபெருமானும் வள்ளற்பெருமானும் (இரண்டாம் பகுதியின் சத்விசாரம்)

                         சிவபெருமானும் வள்ளற்பெருமானும்

                                        (இரண்டாம் பகுதியின் சத்விசாரம்) 

 ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம். “சிவபெருமானும் வள்ளற்பெருமானும்என்கின்ற தலைப்பில்தோற்றமும் குணமும்என்ற மூன்றாவது பகுதியினை தற்போது நாம் பார்க்கப்போகின்றோம். அதற்கு முன்னர்,

           திரு தில்லை ஆனந்த நடராஜன் அவர்கள்சிவபெருமானும் வள்ளற்பெருமானும் என்கின்ற பதிவில் இரண்டாம் பாகத்திலிருந்து சில சத்விசாரங்களை மேற்கொண்டுள்ளார். அவரக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டு, நாம் தற்போது அவர் தொடுத்த சத்விசாரத்தை முடித்துக்கொண்டு அதற்கப்பால் நாம்சிவபெருமானும் வள்ளற்பெருமானும்என்ற தலைப்பில் மூன்றாம் பதிவினைத் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.

 சத்விசாரம் துவக்கம். முதல் சத்விசாரம்:

இப்பதிவில் தாங்கள் முதலில் சிவபெருமான் அனாதி பிறப்பு இறப்பு அற்றவன் என்று சைவ சித்தாந்தம் மற்றும் திருவருட்பா பாடல் கூறியதாக சொன்னீர்கள். பின்னர் சிவபெருமான் பிறப்பு இறப்பு உள்ளவர் என்று எதை வைத்து கூறமுடியும் ஐயா.

என்று முதல் சத்விசாரமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அதற்கான பதில் விசாரம் வருமாறு,

தில்லை ஆனந்த நடராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம். சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் இல்லை என்றும் உண்டு என்றும் திருவருட்பாவே கூறியிருக்கின்றன. அதற்கான ஆதாரங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எமது வலைப்பூ பக்கத்திற்கு சென்று இதனை படித்தறியலாம். அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதேனும் சத்விசாரம் இருப்பின் தெரிவிக்க வேண்டுகின்றேன்.

 http://vallalarr.blogspot.com/2021/12/part-2.html?m=0

 இரண்டாவது சத்விசாரம்:

சைவ சித்தாந்தம் சிவம் என்பது பிறப்பு இறப்பு அற்ற சொரூப நிலையில் அனாதியாக உள்ளது என்றும் அந்த சிவம் பல படிநிலைகளை, அதாவது நவ நிலைகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேசுவரன், சதாசிவம், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம், என்று உயிர்களின் பொருட்டு கருணை கொண்டு தன் சொரூப நிலையை விட்டு கீழிறங்கி அந்தந்த உயிர்களின் பக்குவத்திற்கேற்ப காட்சி கொடுத்து முடிவில் உயிர்களின் ஆணவத்தை தன்வயப்படுத்தி உயிர்களுக்கு சச்சிதானந்த வடிவம் கொடுக்கிறதுதான் சிவம் என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. அதையே தான் வள்ளல் பெருமான் கூறுகிறார்கள்.

இதற்கான பதில் விசாரம்:

வள்ளற்பெருமானும் இதையேத்தான் கூறியிருப்பதாக கூறுகின்றீர்கள். ஆனால் வள்ளலார் இதனை அப்படியே எடுத்துக்கொள்ளவில்லை. சித்தாந்த சைவ சமயத்தில் சிவபெருமானை சொரூப நிலையில் ஆதி அந்தமற்ற உருவமற்ற கடவுளாக காண்பதில்லை. அதனை ஒரு தத்துவத்திற்காக மட்டுமே வைத்துள்ளார்கள். மற்ற மதத்தவர்கள் யாரேனும் கேள்வி கேட்டால், எங்கள் இறைவன் இப்படிப்பட்டவன் என பதில் சொல்ல மட்டுமே அந்த சொரூப நிலை தத்துவம் பயன்படுத்தப்படுகின்றது. சைவம் மட்டுமல்ல அனைத்து மதங்களும் கூறும் இந்த சொரூப நிலைத் தத்துவம், அந்தந்த மதங்களின் தத்துவ எல்லைகளை ஆராயும் போது பொய்யாக இருப்பதைக் காணலாம். அதாவது சைவ சமயத்தில் உள்ளே உள்ள ததத்துவம், இவ்வுலகமான புறத்தில் வேறாக செயல்படுகின்றது. எனவேதான் வள்ளலார் இவைகளை தவிர்க்க, ”உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்எனப்ப்பாடினார். சைவ சமயத்தை பொருத்தமட்டில், நாடெங்கும் கோயில்களை கட்டி அங்கே சிலைகள் வைத்து, கற்பனையான புராணக்கதைகள் பல பேசிக்கொண்டு திரிவதுதான் நடைமுறை உண்மை. இப்படியே அனைத்து மதங்களையும் காணலாம். சைவ சமயத்தில், இடைபட்ட காலத்தில் பஞ்ச பூதங்களாக சிவபெருமானை வழிபடத் தொடங்கினர். அந்த பஞ்ச பூதங்களில் ஒன்றாக ஆகாய தளமாக சிதம்பரத்தை கண்டார்கள். ஆனாலும் அது இரகசியமாக வைக்கப்பட்டு நடராஜர் உருவம்தான் அங்கும் வழிபாட்டில் உள்ளன.

நமது பிண்டம் 96 தத்துவங்களை உடையது. இந்த 96 தத்துவங்களும் முழுமையாய் உடைய சமயங்கள் மதங்கள் என்று எதுவுமில்லை, என வள்ளலார் தமது உபதேசத்தில் குறிப்பிடுவதை காணலாம்,

96 கலையே 96 தத்துவமாய்ப் பிண்ட வடிவாயிற்று.

அக்கினிகலை 64-ன் குணங்கள் சைவத்தில் 64 திருவிளையாடல்கள் ஆகவும், உண்மை அடியார்கள் 63 அதீதம் ஒன்று ஆகவும் வழங்குகின்றன. சந்திரகலை 12-மே வைஷ்ணவ பரத்தில் துவாதச ஆழ்வார்களாக வழங்குகின்றன. மற்ற 20 கலையும் கௌமாரம், பாசுபதம், மஹாவிரதம், சாத்தேயம், காணாபத்தியம், காபாலம், சௌரம், மகம்மதீயம், பௌத்தம், கிறிஸ்துவம் முதலிய சமயங்களில் வழங்குகின்றன.

இவ்வாறு நமது சைவ சமயத்தில் 64 தத்துவங்கள் மட்டுமே காரியப்படுகின்றன. ஆனால் 96 தத்துவங்கள் இருப்பதாக சைவம் கூறும். அதில் காரியப்படும் தத்துவங்கள் மொத்தம் 64 தான். அதற்கு மேற்பட்டு காரியப்படாது. இவ்வாறு சமயங்கள் சொல்வது ஒன்றாகவும், அதன் காரியங்கள் சொல்லும் வண்ணம் இல்லாமையாகவும் இருக்கும். இதனை திரயோதசாந்தம் என்ற நிலையினை விளக்குகையில் வள்ளலார் இவ்வாறு கூறுவார், “இவ்வளவு அனுபவமும் பூர்வத்திலிலுள்ள அனுபவிகளால் குறிக்கப்பட்ட நிலைகளில் இல்லை.” என்பார். இதன் விவரங்களை யாம் தனியே ஒரு யூட்யூப் பதிவினை முன்னரே அளித்துள்ளேன். அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனையும் சென்று காண வேண்டுகின்றேன்.

 https://youtu.be/hEulnTfULKY

சமய நூல்களில் பிழை என்கின்ற தலைப்பில்திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 376-ல் வள்ளலார் இவ்வாறு குறிப்பிடுகின்றார்,

சமயமத சாத்திரங்களில் அனேக இடத்தில் பிழைகளிருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்திருந்தவர்கள். ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டிருக்கின்றன. மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கல்லது மற்றவர்களுக்குப் பிழையற இயற்ற முடியாது. அந்தப் பிழைகள் சுத்தசன்மார்க்கம் விளங்குகின்ற காலத்தில் வெளிப்படும்.

எனவே நாம் சமயங்களில் குறிப்பிட்டிருப்பதை அப்படியே உண்மை என எடுத்துக்கொண்டு வீண்போதல் நல்லதல்ல.

மூன்றாவது சத்விசாரம்:

கடவுள் அனாதி அருட்சத்தி அனாதி என்று பாசம் அனாதி என்று வள்ளல் பெருமான் ஏற்றுக்கொண்டார்களே ஐயா. பாசம் என்பது ஆணவம் என்றும் அது அனாதியாகவே உயிர்களிடம் உள்ளன என்றும் உரைநடையிலும் பாடலிலும் கூறியுள்ளார்களே ஐயா. பின்னர் ஏன் தாங்கள் சிவபெருமானுக்கு பிறப்பு இறப்பு உள்ளதாக பதிவின் கடைசியில் கூறுகிறீர்கள் ஐயா.

பதில் விசாரம் வருமாறு,

முதலில் சைவ சமயம் கூறும் அனாதிகளை காண்போம். பதி, பசு, பாசம் என்கின்ற மூன்றினை அனாதி என்கின்றது சைவம்.

அருவம், உருவம், மற்றும் அருவுருமாக இருப்பது பதி என்கின்ற அனாதி.

இரண்டாவதாக சகலர், பிரளயாகரர், மற்றும் விஞ்ஞானகலர் என பசு என்கின்ற அனாதி.

ஆணவம், கன்மம், மற்றும் மாமாயை என பாசம் அனாதி. இப்படியாக மூன்று அனாதிகள் இருப்பதாக சைவம் கூறும்.

ஆனால், சுத்த சன்மார்க்கம் மொத்தம் ஆறு அனாதிகளை கூறும். அவை, ஆகாயம், காற்று, அணுக்கள், கடவுள், அருட்சத்தி, ஆன்மாக்கள் ஆக ஆறு அனாதிகள். இவைகளில் சைவம் கூறும் பாசம் என்கின்ற அனாதி, சுத்த சன்மார்க்கத்தில் ஆன்மாக்களின் இயற்கை குணங்களாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அவை தனியே இயங்காது. ஆன்மாக்கள் இன்றி பாசம் இயங்காது. ஆனால் பாசம் இன்றி தனித்து ஆன்மா இயங்கும் என்கின்றது சுத்த சன்மார்க்கம். அனாதி இயற்கையான ஆணவம் இன்றி ஆன்மா இயங்கவேண்டுமானால், அவ்வான்மா கடவுள் அருளால் சுத்த தேகம் பெற வேண்டும் என்கின்றது சுத்த சன்மார்க்கம். இவ்வரிய தத்துவங்கள் சைவம் முதற்கொண்டு வேறு எந்த மதங்களிலும் சொல்லப்படவில்லை.

பிண்ட இலக்கணம் என்கின்ற தலைப்பில் திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 363 கோயில்களில் உள்ள நந்தி என்ற குறியீட்டு சிலையைபசுஎன்றும்ஆணவம்என்றும் கூறுகின்றார் வள்ளலார். ஆனால் சைவம் பசு என்பதை தனியாகவும், ஆணவத்தை தனியாகவும் பிரித்து கூறுவது ஏற்புடையது அல்ல.      

ஆணவ மல நிவர்த்தி என்கின்ற தலைப்பில் திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 399-ல் காண்க,

மனுஷ்ய வல்லபத்தால் தனக்கிருக்கிற அசுத்தங்களை நிவர்த்தி செய்துகொள்ளக் கூடுமா வென்றால்: இது நல்லது இது கெட்டது என்று பகுத்தறியும் ஞானத்தால் விஷய வாசனையில் கரணங்களைச் செல்ல வொட்டாமல் தடுக்கக்கூடுமே ஒழிய, நிவர்த்திக்கக் கூடாது. அது ஆண்டவரருளால் சுத்ததேகம் பெற்றவர்களால்தான் முடியும். அது அருளொளி கிடைத்தால் அத்தருணமே சுத்தக்கரணமாய் நிற்கும். அசுத்தம் வருவதற்குக் காரணம் யாதெனில் செம்பிற் களிம்பு இயற்கை. அதுபோல் ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை. செம்பிலே களிம்பு இயற்கையா யுள்ளதைப் பரிசனவேதியினால் நிவர்த்தித்து ஏமமாக்குவது போல், மாயாகாரியமான இந்தத் தேகத்தின்கண் உள்ள ஆன்ம இயற்கையாகிய ஆணவமலம் ஆண்டவரருளினால் நீங்கப்பெற்றுச் சுத்த உடம்பாக்கிக் கொள்ளலாம். ஆண்டவர் அருள் அடைவதற்கு, நாம் இடைவிடாது நம்முயற்சியின்கண் பழகுதல் வேண்டும்.

இவ்வாறு ஆணவமலம் என்கின்ற பாசம் ஆண்டவன் அருளால் நீக்கப்படும்போது அது அனாதி என்கின்ற தகுதியை இழந்து நிற்கும்.

நான்காவது சத்விசாரம்:       

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே என்று யாரை வடலூருக்கு வள்ளல் பெருமான் அழைக்கிறார்கள் ஐயா. அதே பாடலில் சிவகாம வல்லியோடு இங்கும் அங்கும் இடுக்கில்லாமல் ஆடலாம் என்று யாரை கூறுகிறார்கள் ஐயா. சிவகாமவல்லி தாயார் சிதம்பரத்தில் தானே உள்ளார்கள்.

பதில் விசாரம் வருமாறு:

சிவகாம வல்லி என்ற சைவ சமயத்தில் உள்ளதை சுத்த சன்மார்க்கத்தில் சிற்சத்தியாக அல்லது அருட்சத்தியாக பார்க்கப்படுகின்றது என்பதனை நாம் இந்த தலைப்பில் முதல் அத்தியாயத்திலேயே கண்டோம். அதனை ஒரு முறை தாங்கள் மீண்டும் பார்க்கவும். இந்த அருட்சத்தியும் கடவுளைப் போன்று அனாதியாக உள்ளதாக வள்ளலார் உரைக்கின்றார். எனினும் சைவத்தில் கூறும் சிவகாமவல்லியில் நிலையும், அருட்சத்தி நிலையும் வேறு வேறு. ஏனெனில் சிவனுக்கே பிறப்பு இறப்பு உண்டென்றால், அவன் மனைவிக்கும் அதே நிலையன்றோ வாய்க்கும்.  

சிதம்பரத்தில் உள்ள சிவபெருமானைத்தான், ஐயா வள்ளலார் வடலூருக்கு அழைக்கின்றார். இங்கே வந்தால் நல்ல வரம் பெறலாம் என அழைக்கின்றார். வரம் பெறுகின்ற நிலையில்தானே சிவபெருமான் இருக்கின்றார் என்பதனை இங்கே குறிப்பாக ஐயா வள்ளலார் குறிப்பிடுகின்றார். வரம் கொடுப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராவார். அந்த சுவர்ணதேக சிவபெருமான் வடலூர் வந்து ஞானதேகனாகி இறவா வரம் பெற வேண்டியா ஐயா வள்ளலார் வடலூருக்கு அழைக்கின்றார். சிவபெருமானும் சிதம்பரத்திலிருந்து வடலூர் வந்துவிட்டார். ஆனால் இன்னும் இறவாவரம் பெறவில்லை. மனித தேகமெடுத்துதான் அவ்வரத்தை யாரும் பெறமுடியும். வள்ளலாருக்கு பின்பு எவர் ஒருவர் இறவா வரம் பெறுகின்றார்களோ அவர் முன் பிறவியில் சிவபெருமானாகவோ அல்லது சமயக் கடவுள்களாகவோ இருந்திருப்பார்கள்.    

ஐந்தாவது சத்விசாரம்:

தாங்கள் பதிவின் முதலில் சிவபெருமான் பிறப்பு இறப்பு அற்றவர் என்று வள்ளல் பெருமான் கூறியதாக ஆதாரம் காட்டினீர்கள். பிறப்பு இறப்பு உள்ளதாக கூறிய பின் அதற்கு ஆதாரமே காட்டவில்லை ஐயா.

இதுபற்றி தாங்கள் கருத்தை பதிவிட்டால் நன்று ஐயா.

பதில் விசாரம் வருமாறு:

சிவபெருமானுக்கு ஆயுள் உள்ளதை திருவருட்பா ஆதாரத்துடன் கூறியுள்ளதை தாங்கள் கீழே உள்ள லிங்க்கை தொடர்புகொண்டு படித்தறியலாம். சிவபெருமானின் ஆயுள் 43,20,000 ஆண்டுகள் ஆகும். திருச்சிற்றம்பலத்தில் ஆடுகின்ற அருட்பெருஞ்ஜோதியின் நிலையை ஒரு மனிதனாக உருவகப்படுத்தினால், அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் இறுதியாக உள்ள ஒரு சிறு துகளாகத்தான் சிவனின் நிலை உள்ளதாக வள்ளலார் பாடுகின்றார்.  

தடையுறாப் புரமன் விண்டுருத் திரன்மா

யேச்சுரன் சதாசிவன் விந்து

நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி

நவில்பர சிவமெனும் இவர்கள்

இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்

இடதுகாற் கடைவிரல் நகத்தின்

கடையுறு துகளென் றறிந்தனன் அதன்மேற்

கண்டனன் திருவடி நிலையே. (திருவடிநிலைதிருவருட்பா)

இங்கு திருச்சிற்றம்பலம் என்பது நமது உடலில் உள்ள நடுக்கண் அமைந்துள்ள புருவ மத்தியை குறிக்கும். திருவடி என்பது அங்கு ஆடுகின்ற முச்சோதியுள் மூன்றாவது ஜோதியைக்குறிக்கும். ”ஜோதியுள் ஜோதியுள் ஜோதிஇங்கு குறிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது ஜோதியே ஆடுகின்ற திருவடியான அருட்பெருஞ்ஜோதியாகும்.  

ஆறாவது சத்விசாரம்:

மேலும் ஞான தேகம் என்ற சொல் பெரிய புராணத்தில் திருநாவுக்கரசர் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது ஐயா. இதற்கு முன்னர் யாருமே அடையவில்லை என்றால் ஞான தேகம் என்ற சொல் எப்படி சேக்கிழாருக்கு தெரிந்திருக்கும். யார் சேக்கிழார் பெருமானுக்கு ஞானதேகம் என்ற சொல்லை கூறியிருப்பார்கள்? ஐயா, இதையும் தெளிவு படுத்த வேண்டுகின்றேன்.

மண் முதலாம் உலகு ஏத்த

மன்னு திருத் தாண்டகத்தைப்

புண்ணியா உன் அடிக்கே

போதுகின்றேன் எனப் புகன்று

நண்ணரிய சிவ ஆனந்த

ஞான வடிவே ஆகி

அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட

அரசு அமர்ந்து இருந்தார். – 427

சிவானந்த ஞான வடிவே ஆகி என்று கூறுகிறார்கள் சேக்கிழார் பெருமான் அப்பரை.

பதில் விசாரம் வருமாறு:

இங்கே நீங்கள் கூறும் பெரியபுராணமே கற்பனைக்கதைகள் தான். இதனை நாம் சொல்லும்போது நமக்கு வலி ஏற்படத்தான் செய்யும். நானும் சைவ சமயத்தை சார்ந்தவந்தான். எனினும் வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். சுந்தரர் இயற்றியதாகக் கூறப்படும் திருத்தொண்டர்த் தொகை நூலினை வழிநூலாக ஏற்று கல்வெட்டு செய்திகளையும், கர்ணபரம்பரை கதைகளையும், செவி வழி செய்திகள் மற்றும் தன்னிடம் இருந்த சைவ சமயப் பற்றால் பல கற்பனைகளையும் சேர்த்து சேக்கிழாரால் எழுதப்பட்டதுதான் பெரியபுராணம். சிவபெருமான் இந்நூலுக்குஉலகெலாம்என்ற திருவார்த்தையை எடுத்து கொடுத்ததாகவும் கூறுவர். ”உலகெலாம்என்ற சொல்லை வள்ளலார்மெய்ம்மொழிஎன்று கூறியதுடன் அதற்கான விளக்கத்தையும் மலையளவிற்கு சொல்லியுள்ளார்கள்.

சமய நூல்களின் உண்மை என்ற தலைப்பில் திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 375-ல் வள்ளலார் இவ்வாறு கூறுகின்றார்.

பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் மற்ற நாயன்மார்களும் தத்துவங்களே யொழிய வேறில்லை. அதை அதை விசாரித்து அனுஷ்டித்தால், அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும். இதுபோல சைவத்தில் சொல்லுகின்ற சௌராதி சண்டை பரியந்தமும்* தத்துவமே யாம். சைவ புராணம் விஷ்ணு புராணம் முதலிய யாவற்றின் உண்மையும் தத்துவ சம்மாரங்கள். சூரபத்மன் யுத்தம் முதலிய யுத்தங்களும் தத்துவ சம்மாரங்களே. இதுபோல் மாணிக்கவாசக சுவாமிகள் முதலிய மகான்களின் சரித்திரமும் தத்துவசித்தியே. மேற்குறித்தவர்கள் பேரால் ஒவ்வொரு மஹான்கள் சாஸ்திரங்களையும் தேவாரம் திருவாசகங்கள் முதலியவைகளையும் அமைத்து, இவற்றிற்கு இடமாக ஆலயங்கள் அமைத்து, மேற்படி சித்திக்கு உரிய தத்துவ தத்துவிகளின் பெயரைக் கர்த்தாவாக்கி, அந்தச் சித்தி முடிக்குங் காலம் தினம் கருவி முதலியவைகளை மேற்படி ஆலயங்களுக்கு விசேஷ காலமாக்கி, வழக்கத்தில் வருவித்தார்கள். மேற்குறித்த நாயன்மார் முதலியவர்களின் உண்மையனுபவ தாத்பரியமுடைய சித்திகள் முன்னும் பின்னும் இனியுமுள. நாம் மேற்படி தத்துவங்களை அனுஷ்டித்தால் அவ்விதமாக ஆகக் கூடும். இது போலவே திருவிளையாடல் பாரத பாகவதங்களு மமைத்துக் கொள்க. ஒருவாறு.

ஐயா, இங்கு சேக்கிழார் கூறுவது எல்லாமே கற்பனைதான். ஒரு பெரியவரை உயர்த்திப் பாட வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. அதனை அவர் செவ்வனே செய்துவிட்டார். ஞான வடிவம் என்பது என்பது சுவர்ண வடிவம், பிரணவ வடிவம் இறுதியாக ஞான வடிவம் என படிப்படியாக வரக்கூடியது. எனவே அப்படிப்பட்ட அனுபவத்தை இதுகாறும் யாரும் பெறவில்லை என்பதை வள்ளலார் தனது பேருபதேசத்தில் கூறியிருக்கின்றார்கள். சேக்கிழார் கூறும் ஞான வடிவம் என்பது, சிவனை நினைந்து ஆனந்தத்தில் திளைத்து சிவஞானத்தைப் பெற்ற வடிவமாக திருநாவுக்கரசர் விளங்குகின்றார் எனப் பொருள் கொள்ளலாம். அவ்வளவே. இதற்கும் தேக மாற்றத்திற்கும் சம்பந்தமில்லை. அப்படி மாற்றம் கண்டிருந்தால் வள்ளலாரைப் போன்று அதனை திருநாவுக்கரசரே அல்லவா பாடியிருக்க வேண்டும். இப்போது வள்ளலார் கூறிய பேருபதேசத்தைப் பார்ப்போம்

இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது.

ஏழாவது சத்விசாரம்:

மேலும் மாணிக்க வாசகரும் ருத்திரனை ஐந்தொழில் செய்யும் சிவபெருமான் என்று ஏற்றுக்கொள்ளவில்லை ஐயா.

சிவபெருமான் எதற்கும் ஒப்புமை இல்லாதவர் என்று தான் மாணிக்கவாசகர் கூறுகிறார்கள் ஐயா.

பதில் விசாரம் வருமாறு: 

மாணிக்க வாசகர் போன்று, சைவ சமயத்தில் ஊறிய வள்ளலாரும் முதலில் சிவபெருமான் யாருக்கும் ஒப்புமை இல்லாதவன், ஆதி அந்தம் இல்லாதவன் என்றுதான் பாடியிருக்கின்றார். தத்துவங்களை எல்லாம் கடந்து பார்க்கையில் சிவபெருமானின் நிலை, சைவ சமயத்தில் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் இல்லை என்பதை வள்ளலார் அறிந்து அதனை வெளிப்படுத்துகின்றார் என்பதை முன்பே பார்த்தோம். 

எட்டாவது சத்விசாரம்: 

ஏற்கனவே இறைவனுடைய பூரண ஞான சித்தி பெற்ற சுத்த சன்மார்க்க ஞானிகள் உள்ளனர் என்று பெருமானே கூறுகிறார்களே ஐயா. இதை எப்படி மறுக்க முடியும்.

பதில் விசாரம் வருமாறு:

சடாந்த சமரச சத்தியராய் விளங்குகின்ற சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளது சித்விலாசத் திருச்சபைக் கண்ணே,

என்று ஞான விண்ணப்பத்தில் வள்ளலார் கூறுவது,

இவ்வுலகத்தில் பிறபெடுத்தவர்களைஅல்ல. அவர்கள் எவ்வுலகத்தில் இருக்கின்றார்கள் என நமக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒரு உலகத்தில் இருக்கின்றார்கள் என இதன் மூலம் அறியலாம். இவ்வுலகத்தில் இல்லை என நாம் கூறுவது எவ்வாறெனில், அதுவும் வள்ளலார் உபதேசத்தின்படியே.

சமய மத சன்மார்க்கிகளில் தாயுமான சுவாமிகளும் இன்னும் அனேக பெரியோர்களும் சுத்தப் பரப் பிரமத்தினிடத்தில் இரண்டறக் கலந்துவிட்டதாக முறையிடுவது வாஸ்தவமா அவாஸ்தவமாவென்றால், அவாஸ்தவம். சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கைகூடும். என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும். மற்றச் சமய மத மார்க்கங்களெல்லாம் சுத்த சன்மார்க்கத்துக்குச் செல்லக் கீழ்ப்படிக ளாதலால், அவற்றில் ஐக்கிய மென்பதே யில்லை. தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீள வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள்; சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள்.

என்று கூறியதின் மூலம் நாம் வாழும் இப்பூமியில் ஞான தேகம் எடுத்தவர் வள்ளலார் மட்டுமே. நாம் வணங்கும் சிவபெருமான் சுவர்ண தேகி என்பதை அறியவும். 

ஒரு கட்டத்தில் சைவ சமயம் மட்டுமல்ல அனைத்து சமய மதங்களும் பொய் என்று வள்ளலார் அறிவித்துவிட்டபடியால், நாம் அதனில் இலட்சியம் வைக்க வேண்டியதில்லை. சுத்த சன்மார்க்கத்திற்கு சைவ சமயம் அந்நியமல்ல. அனன்னியம் என்பதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது சைவ சமயத்தை விடவும் வேண்டாம், தொடவும் வேண்டாம். மேலும் வள்ளற்பெருமானின் பேருபதேசத்தை உணர்ந்துக்கொண்டால் நமக்கு இப்படிப்பட்ட சந்தேகம் வரவே வராது. 

நாம் இதுகாறும் நாம்சிவபெருமானும் வள்ளற்பெருமானும்என்ற ஆய்வில் இரண்டாம் பகுதியில் எழுந்த சத்விசாரத்தினைக் கண்டோம். அடுத்ததாக நாம் மூன்றாவது பகுதியினை விரைவில் பார்ப்போம். நன்றி.

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி




 தி.ம.இராமலிங்கம்

Whatsapp: +91 9445545475

vallalarmail@gmail.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.