வள்ளலார் பார்வையில் திருக்குறள் யாருக்கு சொந்தம்?
பொது மறையா?
இந்து மறையா?
சமண மறையா?
கிறுத்துவ மறையா?
ஆன்ம நேய அன்பர்களுக்கு வந்தனம்!
வள்ளலார் அவர்கள் மிகவும்போற்றிய நூல்களில் ஒன்று திருக்குறள்
என்னும் நூலும் ஆகும். இன்று நமது தமிழகத்தில் உள்ள சில கிறுத்துவர்கள், திருக்குறள்
என்னும் நூலினை கிறுத்துவ நூல் என்றும் திருவள்ளுவர் கிறுத்துவர் என்றும் கூறி அதற்கான
ஆதரங்களை எடுத்துரைக்கின்றார்கள். அது உண்மையா? என வள்ளலார் வழியில் காண்போம் வாருங்கள்…
முதலில் நாம் இவ்வாய்விற்காக எடுத்துக்கொள்வது, திருக்குறளின் முதல் அதிகாரத்தில்
உள்ள முதல் பத்து பாடல்களே. அவைகளை முதலில் பார்ப்போம்…
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கால்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
திருக்குறளின் முதல் பத்து பாடல்களை கொண்டுதான் நாம் திருக்குறள்
யாருக்கு சொந்தம் என்பதை வள்ளலார் வழியில் ஆயப்போகின்றோம். வாருங்கள்,
திருக்குறள் பொது மறையா? என்றால் இல்லை. ஆனால்
இதில் கூறப்படும் உபதேசங்கள் அனைத்தும் உலகியல் மக்களுக்கு பொது எனக் கொள்ளப்படும்
வகையில் உள்ளது. அந்த வகையில் இது பொது மறை எனலாம். ஆனாலும் இது ஏதோ ஒரு சமயத்தை பின்பற்றியதுதான் என்பது தெளிவு. அது எந்த மதம் என்பதை இறுதியில் காண்போம்.
திருக்குறள் சமண மறையா? திருக்குறள் சமண மறைதான் என சிலர் இந்த திருக்குறளில்
வரும் “எண்குணத்தான்” என்னும் சொல்லை வைத்து
பேசுவர்.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
எண்குணத்தான் என்ற சொல்லினை முதன் முதலில் எடுத்துக் கையாண்டது
சமண மதமே. அதனால்தான் சமணரகள் இந்தச் சொல்லினைக் கொண்டு திருக்குறள் எங்களுடையதே என முழங்குகின்றார்கள்.
இவர்களின் வாக்கின்படி எண்குணத்தன் என்பது அருகனை குறிப்பதாக வாதிடுகின்றார்கள்.
சமண இலக்கியமான சூடாமணி நிகண்டு இவ்வாறு கூறுகின்றது,
கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம்
மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்க ளின்மை
அடைவிலா ஆயுவின்மை அந்தராயங்க ளின்மை
உடையவன் யாவன் மற்றிவ்வுலகினுக் கிறைவனாமே”
கடையிலா ஞானமும், கடையிலா காட்சியும், கடையிலா
வீரியமும், அழியா இயல்பும், ஆயுள் இன்மையும்,
நாமமின்மையும், கோத்திரமின்மையும் ஆகிய எண் குணங்கள்
என்பது அருகருக்கே வாய்க்கப்பெற்றது. எனவே அருகரைத்தான் திருவள்ளுவர்
குறிப்பிடுகின்றார். என்கின்றார்கள் சமணர்கள்.
சைவ மதத்திலும் சிவபெருமானின் குணங்களாக எண் குணங்களை குறிப்பிட்டு
திருநாவுக்கரசர் தேவாரத்தில் “எட்டுக்கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்” என்று
பாடுகின்றார்.
சுந்தரர் தேவாரத்தில் – திருக்கானாட்டுமுள்ளூர் சிவனைப் பாடுகையில்,
“இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை, இறையவனை மறையவனை
எண்குணத்தினானை” என்று பாடுகின்றார்.
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியில் 15-ஆவது பாடலில்,
“முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்துணர்வு என்றருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே”
என்று பாடுவதால், எண்குணம் என்பது சைவ சமயக் கடவுளை குறிப்பதாகவும்
உள்ளது.
சிவனின் எண்குணங்களாக, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல்,
இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள்
உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவாம்.
கடவுள் வாழ்த்தில் வருகின்ற பத்து குறள்களிலும் உள்ள வார்த்தைகள்
அனைத்தும் அருகப் பெருமானையே குறிக்கும் என சமணர்கள் கூறுகின்றார்கள்.
எண்ணையும் எழுத்தையும் முதன் முதல் அறிவித்ததானால் ஆதிபகவன்
என்பவர் அருக பெருமானே.
வினையின் சிறிது காலம் ஆட்பட்டு, தன் முயற்சியால் அவ்வினையின்
நீங்கியதால் தூய அறிவு என்னும் கேவல ஞானத்தை அடைந்ததனால் வாலறிவன் என்றும்,
அவ்வாறு அருக பகவான் கேவல அறிவு பெற்றதைத் தன் அவதி ஞானத்தால்
அறிந்த தேவேந்திரன் அவருக்கு “சமவசரண” அமைத்து, அவர்
எழுந்தருள பாத அடிகளில் தாமரை மலரை அமைக்கின்றார். அருக பகவான்
அந்த தாமரை மலர்களில் நடந்ததினால் மலர்மிசை ஏகினான் என்றும்,
காமம், வெகுளி மயக்கம் என்ற முக்குற்றத்தினை அகற்றியதால், வேண்டுதல் வேண்டாமை இலான் என்றும்,
தேவர்களால் பூஜிக்கப்பட்டவனும் “சமவசரணம்” என்னும் கோட்டத்தில் எழுந்தருளியச் சிறப்புப் பேறுப்பெற்றவன் ஆதலால் தனக்குவமை
இல்லாதான் என்றும்,
நம்மைப்போல் தாய் வயிற்றில் பிறந்து, வினைகளுக்குக் காரணமான ஐம்பொறிகளையும்
அடக்கினதாலே பொறிவாயில் ஐந்தவித்தான் என்றும்,
காதி, அகாதி என்ற இருவினைகளை தன்னிடம் சேரா நின்றதால் இருவினை சேரா இறைவன்
என்றும்,
சமவசரணம் என்னும் திருக்கோயிலில் மண்ணுயிர் முதலான அனைத்து உயிர்களும்
உய்ய அறம் உரைத்ததனால் அறவாழி அந்தனன் என்றும்,
எட்டு வினைகளை வென்று எட்டுக் குணங்களைப் பெற்றதனால் எண்குணத்தான்
என்றும், (இரண்டு நான்கு வினைகள் – எட்டு வினைகளாக சொல்லப்பட்டுள்ளன)
பிறவி என்னும் பெறுங்கடலை கடக்க புணையாக மக்களுக்குத் விளங்கியதால்
இறைவன் (தீர்த்தங்கரர்) என்றும்
திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து முழுதும் அருக பகவானையே
திருவள்ளுவர் குறிப்பிடுவதால், திருக்குறள் ஓர் சமண மறையே என நிறுவுகின்றனர்.
இங்கே நாம் ஒரே சொல்லை வைத்தே திருக்குறள் சமண சமயத்தை சார்ந்து
இல்லை என நிறுவுகின்றோம். அதாவது ”இறைவன்” என்கின்ற சொல்லே
அது. இறை கோட்பாடு அற்ற சமணத்தில் எவ்வாறு இறைவன் என்கின்ற சொல்
பயன்படுத்தப்படும்? மேலும் எண்குணத்தான் என்பது மற்ற சமய தெய்வங்களுக்கும்
அடங்கும். எனவே இதற்கு மேற்கொண்டு இதனை ஆயாமல் திருக்குறள் என்பது
சமண மதத்தை சார்ந்தது அல்ல என நிறுவுவோம்.
அடுத்ததாக திருக்குறள் கிறுத்துவ மறையா? என ஆய்வோம்.
இவ்வுலகில் கிறுத்துவம் துவங்கி 2021 ஆண்டுகள் ஆகின்றன.
ஆனால் வள்ளுவர் ஆண்டு தற்போது 2051 ஆகின்றது.
எனவே எடுத்த எடுப்பிலேயே திருக்குறள் கிறுத்துவ மறையல்ல என சொல்லிவிடாம்.
எனினும் இன்னும் சில தரவுகளைக் காண்போம்.
பிறவி பெருங்கடலைப்பற்றி கிறுத்துவம் பேசாது. கிறுத்துவத்தில் மறுபிறப்பு
கொள்கை கிடையாது. எனவே திருக்குறள் கிறுத்துவ மறை கிடையாது.
முற்பிறவியில் செய்த வினையால் இப்பிறவி கிடைத்தது என்றால், முதல் பிறவியானது எந்த வினையினால் வந்திருக்கும்? என்பதை
சிந்தித்தால், பிறவி சுழற்சி என்பது பொய் என நிறுவலாம்,
என்கின்றார் அந்த கிறுத்துவ ஆராய்ச்சியாளர்.
இதற்கு சைவ சமயத்தின் கண் கொண்டு வள்ளலார் கூறும் பதிலைக் காண்போம், ஆன்மாவிற்கு ஆணவம் என்கின்ற
மலம் இயற்கை. அந்த ஆணவமலம் நீங்கி இறையடி சேர விரும்பி அனைத்து
ஆன்மாக்களும் தனது முதல் பிறவியினை எடுத்தன. அவ்வாறு எடுத்த முதல்
பிறவியில், அதன் முயற்சி தவறியதால் பிறவிகள் தொடர்ந்துகொண்டே
உள்ளன. எப்பிறவியில் ஆணவம் நீங்குகின்றதோ அந்தப்பிறவியே அவ்வான்மாவிற்கு
இறுதி பிறவியாகும் என்கின்றது சைவ சமயம். எனவே சைவ சமயம் கூறும்
பிறவி சுழற்சியைத்தான் வள்ளுவர் கூறுகின்றார் எனக் கொள்க.
இருள் சேர் இரு வினை பற்றி பேசும்போது, நல்வினை, தீவினை என இந்து மதம் கூறுவாத கூறுகின்றார்கள். அப்படியெனில்
நல்வினை எவ்வாறு இருளைச் சேரும்? என்பது அவர்களது கேள்வி.
வினை என்றாலே அது இருள்தான் என்பது இந்து மதத்தின் தத்துவம்.
அதனால்தான் “சும்மா இரு” என்கின்ற உபதேசம் இந்து மதத்தில் உள்ளது. எனவே கிறுத்துவரான
ஒருவர் இவ்விரு வினையினை ஜென்ம பாவம் (பரம்பரையாக வருகின்ற பாவம்),
கர்ம பாவம் (தனி ஒருவர் செய்கின்ற பாவம்)
என்று கிறுத்துவம் கூறுவதாகக் கூறுகின்றார். எனவே
வள்ளுவர் கூறும் இருள்சேர் இருவினை என்பது கிறுத்துவம் கூறும் ஜென்ம பாவமும்,
கர்ம பாவமும்தான் என்பது அவரது ஆராய்ச்சி. இவ்வாறு
ஆராய்ந்தால் ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லி விளக்கம் செய்ய, இதற்கு ஒரு முடிவைக் காண்பது அரிது. எனவே இந்த இரு வினை
வைத்து திருக்குறள் எந்த மத்ததைச் சார்ந்தது என முடிவுக்கு வருவது இயலாது.
மேலும் குறள் வெண்பாவால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு ’திரு’ என்கின்ற அடைமொழியினை கொடுத்து திருக்குறள் என பெயரிட்டுள்ளனர் நமது முன்னோர்கள்.
’திரு’ என்கின்ற அடைமொழி கொண்ட நூல்கள் யாவும்
சைவம் மற்றும் வைணவ நூலாகவே இருப்பதைக் கொண்டும், திருக்குறள்
என்பது கிறுத்துவம் சார்ந்தது இல்லை என்பதை நிறுவலாம்.
மேலும் திருக்குறளில் புலால் உண்ணாமை கோட்பாடு உள்ளது. இக்கோட்பாடு கிறுத்துவத்தில்
இல்லை. ஏன், இந்தியாவைவிட்டு வெளிநாட்டில்
உருவான எம்மதத்திற்கும் புலால் உண்ணாமை என்னும் ஜீவகாருண்ய கோட்பாடு அறவே இல்லை.
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
கோழிக்குஞ்சு வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்ப காணுது பூமி…
என்கிற சினிமா பாடல் வரியை மெய்ப்பிக்கும் வகையில்தான் உள்ளது
கிறுத்துவர்களின் திருக்குறள் ஆராய்ச்சி முடிவுகள். பரலோகத்தில் உள்ள பரமபிதாவே… இவர்கள்
தாம் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் செய்கின்றார்கள்… இவர்களை மன்னித்துவிடும்.
திருக்குறள் ஒரு கிறுத்துவ நூல் அல்ல என்பதை நிலைநாட்ட நாம்
இதுவரை சொல்லிவந்த எடுத்துக்காட்டுகளே போதும்.
இப்போது நாம் வள்ளலார் வழியில் திருக்குறள் யாருக்கு சொந்தமென்பதை
நிறுவலாம் வாருங்கள்…
வள்ளலார்தான் தமிழகத்தில் முதன்முதலில் திருக்குறளை மாணவர்களுக்கும்
தமது சீடர்களுக்கும் பாடமாக கற்பித்தார் என்பது வரலாறு. இவ்வரலாறு எதன் கண் நாம்
அறிகின்றோம் எனில், வள்ளலரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கநதசாமிப்பிள்ளை அவர்களியற்றிய வள்ளலாரின் சரித்திர
குறிப்புகள் மூலம் அறியப்பெறுகின்றோம். இச்சரித்திரக் குறிப்புகள்
காரணப்பட்டார் இயற்றிய “பிரபந்தத்திரட்டு” என்னும் நூலில் காணக்கிடைக்கின்றது. மேலும் காரணப்பட்டார்
பதிப்பித்த திருவருட்பா நூலிலும் இதனைக் காணலாம்.
வடலூரில் சன்மார்க்க பாடசாலைவைக்க எண்ணி வள்ளலார், படித்தவர்களைக் கூட்டித்
தொழுவூர் வேலாயுத முதலியாரை அவர்களுக்கு உபாத்தியாயராக அமைத்துத் திருக்குறள் பாடம்
நடத்துவிக்க கட்டளையிட்டனர். மூன்றுமாத மாகியும் மூன்றதிகாரமும்
நடவாமையால் வாசிப்போர்கள் வள்ளலாரிடம் குறைகூற, வள்ளலார்
“மூடமுண்ட வித்வானைக் கூப்பிடும்” என்று கூற,
முதலியார் வந்து வாய்புதைத்துப் பின்புறத்தே கைக்கட்டித் தூதுஒதுக்கி
நிற்க, வள்ளலார் “பிச்சு மூன்று மாதமாகியும்
மூன்று அதிகாரந்தானும் நடக்கவில்லையாம்; பாடசாலை வேண்டாம் வித்வான்களே!
உங்களுக்குத் தானாகவே கல்விவரும்” என்று கூறிப்
பாடசாலையை நிறுத்திவிட்டனர். (மூடமுண்ட வித்வான் என்பதற்குச்
சிலர் பிள்ளைப்பெருமான் தம் பேச்சைக்கேட்டு முதலியாரை மூடம், முண்டம் வித்வான் எனத்திட்டினார் என்று கொண்டனர் போலும், மூடம் – அறியாமையை உண்ட – விழுங்கிய
வித்வான் என்பது கருத்து.)
-ச.மு.க. பிரபந்தத்திரட்டு – அ.திருநாவுக்கரசு பதிப்பு – பக்கம் - 117.
வள்ளலார் அவர்கள், சன்மார்க்கம் போதிக்க திருக்குறளை ஒரு பாடமாக
நடத்தியதை நாம் இந்தப் பதிவிலிருந்து அறியமுடிகின்றது. இதிலிருந்து வள்ளலார் முதலில் திருக்குறளை
ஒரு சன்மார்க்க நூலாக தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
இது நிற்க.
ஒரு நாள் வித்வான் ஒருவர் வள்ளலாரிடம் திருக்குறளில் முதற் குறளிலேயே “முதற்றே உலகு” என்பதில் ஏகாரம் ஈற்றசையாயின், “கடுகைத் துளைத்தேழ் கடலைப்புகட்டி…?”
என்று கூறியது எங்ஙனம் பொருந்தும்” என்று கேட்க,
வள்ளலார் “முதல்தே எனப் பிரித்தால் தோஷமென்ன”
என்று குறிப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியினை காரணப்பட்டு ச.மு.க. அருளிய பிரபந்தத்திரட்டில், அ.திருநாவுக்கரசு பதிப்பில் பக்கம் – 118-ல் காணலாம்.
இவ்வாறு வள்ளலாரிடம் வித்வான்கள் திருக்குறளை வைத்து விவாதம்
செய்திருக்கின்றதை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் காண்கின்றோம். இதன் பொருள் என்னவாக இருக்கும்
எனப் பார்ப்போம்.
திருவள்ளுவரின் திருக்குறளைத் திறனாய்வு செய்த இடைக்காடர் என்னும்
புலவர், “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” எனப் பாடியுள்ளார். கடுகைத் துளைத்து அதில் ஏழு கடலை
புகட்டுவது போன்று திருக்குறளில் ஏழு சீரில் உலக உண்மைகளை வழங்குவிடுகின்றது திருக்குறள்
என்கின்றார். இதனையே ஒளவையாரும் “அணுவைத்
துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுக்கத் தறித்த குறள்” என்று பாராட்டியுள்ளார்.
அகரம் முதல், எழுத்து எல்லாம்; ஆதி
பகவன் முதற்றே, உலகு.
அகரம் மொழிக்கெல்லாம் எவ்வாறு முதலாக உள்ளதோ, அது போல இவ்வுலகிற்கு இறைவனே
முதலாக உள்ளான்.
இடைச் சொல் என்று தமிழ் இலக்கணத்தில் உண்டு. தனித்து நின்று பொருள் தராது,
இரண்டு சொற்களுக்கிடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு,
அல்லது பொருளின் தெளிவைத் தரும்.
நிறைய இடைச்சொற்கள் இருக்கின்றன. அதில் ஏகார இடைச் சொல்லை மட்டும்
பார்ப்போம். ஏகார இடைச்சொல் ஏழு விதமாக வரும். வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும்,
பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும், ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத் தரும்.
1.
தேற்றம் என்றால்
உறுதி, தெளிவு. நான் இதைச் செய்தேன் என்பதை, நானே இதைச் செய்தேன் என்று சொல்லலாம்.
இதில் ’நான்’ என்பதில் ஏகாரம் சேர்த்து ’நானே’ என்று சொல்லும்போது அவ்வாக்கியம் உறுதிபடுத்தப்படுகின்றது.
2.
வினா; வீட்டுக்குப் போகிறேன் என்ற வாக்கியத்தில்
ஏகாரம் சேர்க்க அது வீட்டுக்குத் தானே போகிறேன்? என கேள்வி வாக்கியமாக மாறும்.
3.
எண்; வீடு, நிலம், நகை என்கின்ற பொருள்கள் இருக்கின்றது
என்பதைக் குறிக்கும். அதனையே ஏகாரம் சேர்த்து வீடே, நிலமே, நகையே என சொல்லும்போது நம்மையறியாமல்
மூன்று விதமான பொருள் இருக்கின்றது என எண்ண தொடங்கிவிடுகிறோம்.
4.
பிரிநிலை; அனைத்து
மாணவர்களிலும் அவனே சிறந்த மாணவன் என்பதில் அவனே என்கின்ற ஏகாரம் ஒருவனை பிரித்துக்
காட்டுகின்றது. எனவே இது பிரிநிலை ஏகாரமாகும்.
5.
எதிர்மறை; நீயே
கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கின்றது.
6.
இசை நிறை; ஏயே யிவலொருத்தி
பேடியோ வென்றார். இவ்வாக்கியத்தில் இவள் ஒருத்தி என்று தொடங்கியிருக்கலாம். ஏயே என்று
தொடங்கியதால் இது இசை நயம் ஏகாரமாகும்.
7.
ஈற்று அசை; அசைச்
சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு சேர்க்கப்படும்
சொற்கள். ’என்றுமேத்தித் தொழுவோ மியாமே’ என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி
இருக்கலாம். யாமே என்ற ஏகாரத்தில் பொருள் ஏதுமின்றி நிற்கின்றது.
இவ்வளவு பெரிய இலக்கண விளக்கம் இங்குத் தேவையில்லாதது. எனினும்
ஆதி பகவன் முதற்றே உலகு என்ற வரியில் முதற்றே என்ற சொல்லை கவனியுங்கள். ‘ஆதி பகவன்
முதற்று உலகு’ என்று சொல்லி யிருக்கலாம் அல்லவா? அப்படி சொல்லியிருந்தால் ‘உலகுக்கு
இறைவன் முதல்’ என்று அர்த்தம் வரும். அவன் மட்டுந்தான் முதல் என்ற அர்த்தம் வராது.
எனவே ஏகாரம் சேர்த்து வள்ளுவர் கூறுவதால், உலகிற்கு இறைவன் மட்டுமே முதல் என்று உறுதிப்
படுத்துகின்றார்.
இப்போது, வள்ளலாரிடம் ஒரு வித்வான் வந்து விவாதம் செய்ததை கவனியுங்கள்.
‘முதற்றே உலகு’ என்பதில் ஏகாரம் ஈற்றசையாயின், ‘கடுகைத் துளைத்து அதில் ஏழ் கடலைப்புகட்டி’
என்று இடைக்காடர் புகழ்வது எங்ஙனம் பொருந்தும்? என வள்ளலாரிடம் கேள்வி எழுப்புகின்றார்.
ஏகாரம் வந்ததிற்கும், இடைக்காடரின் ‘ஏழ்கடல் புகட்டி’ என்பதற்கும்
என்ன சம்பந்தம் என எனக்குத் தெரியவில்லை. மேலும் அந்த வித்வானுக்கு வள்ளலார் கூறிய
‘முதல்தே எனப் பிரித்தால் தோஷமென்ன?’ என்ற பதிலும் எம்மை குழப்புகின்றது. ஏனெனில் முதல்தே
என்பதிலும் ஏகாரம் வருகின்றது. இதற்கு சரியான விளக்கம் தெரிந்தவர்கள் கூறலாம். இது நிற்க.
அடுத்ததாக சாகாத கல்வி என்கின்ற தலைப்பில், திருவருட்பா உரைநடை நூல்
பக்கம் 411-ல், வள்ளலார் இவ்வாறு உரைக்கின்றார்,
வேதங்கள் முக்கியம் சாகாத கல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது.
அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.
என உரைக்கின்றார். எனவே நாம் முதலில் சன்மார்க்க நூலாக திருக்குறளை
வள்ளலார் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்தோம். ஏன் திருக்குறளை
சன்மார்க்க நூலாக தேர்ந்தெடுத்தார் என்பதற்கு விடையினை இங்கு நாம் காண்கின்றோம்.
ஏனெனில் திருக்குறளில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கின்றது.
மேலும் வள்ளலார் திருக்குறள் என சொல்லாமல் இங்கே ’தேவர் குறள்’ என உயர்த்திச் சொன்னதை,
கிறுத்துவர்கள் கண்டால், இது எங்களது ’தேவனின் குறள்’ என வள்ளலாரே சொல்லிவிட்டார் என
மீண்டும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டது’ என்பதாக சொன்னாலும் சொல்லிவிடுவர்.
வள்ளலார் சொன்னது போல், திருக்குறளில் முதல் அதிகாரத்தில் இரண்டு
இடங்களில் “நீடுவாழ்வார்” என்கின்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. அச்சொல்லை ஆதாரமாகக்
கொண்டே வள்ளலார் திருக்குறளில் சாகாக்கல்வி சொல்லப்பட்டுள்ளது என்கின்றார். மேலும்
திருக்குறளை ’வேதங்கள் முக்கியம்’ என்ற அடை மொழி இட்டு சொல்வதால், வேதங்களில் முக்கியமானது
‘தேவர் குறள்’ என்றும் கூறியது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
அடுத்ததாக வேதாகமச் சிறப்பு என்கின்ற தலைப்பில், திருவருட்பா உரைநடை நூல்
பக்கம் 440-ல், வள்ளலார் இவ்வாறு உரைக்கின்றார்,
இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச்
சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும்
சாகாத கல்வியையும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக்
காணப்படுமாகில், அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது
உண்மை.
வள்ளலாரின் இந்த அறிவிப்புதான் திருக்குறள் யாருக்கு சொந்தம்
என்பதை நிர்ணயித்திருக்கின்றது. இந்து வேதாகமங்களில் மட்டும்தான் சாகாத கல்வி சொல்லப்பட்டுள்ளது
என்கின்றார். இந்து வேதாகமம் என்று வள்ளலார் சொல்வது வடமொழி நான்கு அல்லது மூன்று வேதமல்ல.
தமிழ் மொழி வேதங்களான ’தேவர் குறள்’ என்பதையே வேதங்கள் என்று சொன்னதை முன்னமே கண்டோம்.
அது போல ‘திருமந்திரம்’ என்பதனையும் நாம் இந்து வேதமாக வள்ளலார் சொன்னாரென எடுத்துக்கொள்ளலாம்.
எனவே சாகாத கல்வியை சொல்லுகின்ற நூல்கள் எதுவாகினும் அது இந்து நூல்கள்தான் என்பது
வள்ளலாரின் வாக்கு. திருவள்ளுவர் சாகாக் கல்வி சொல்லி மரணமிலா பெருவாழ்வில் இருக்கின்றாரா?
எனக்கேட்டால், இல்லை. சொல்வது திருக்குறள், செய்வது திருவருட்பா ஆகும். சொல்வது வேறு,
செய்வது வேறு. வள்ளலார் திருக்குறளில் சாகாக் கல்வி சொல்லப்பட்டுள்ளது எனதான் சொல்லியிருக்கின்றார்.
எனவே வள்ளலாரின் வாக்கின்படி திருக்குறள் என்பது சைவ சமயம் சார்ந்த
நூலே ஆகும். சைவர்களே அதன் முழு உரிமையாளர்கள். சைவத்திற்கு அடுத்த படியான சுத்த சன்மார்க்கத்திற்கும்
திருக்குறள் உரிமையுடையதாகும். நன்றி.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி.
தி.ம.இராமலிங்கம்
T.M.RAMALINGAM
Whatsapp: +91 9445545475
vallalarmail@gmail.com
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
ReplyDeleteபண்புடைமை என்னும் வழக்கு. (௯௱௯௰௧ - 991)
எண்பதத்தால் .....meaning எளிதாக...non-discriminatory
எண்பதத்தால் .....meaning எளிமை...not eight.
Deleteஎண்குணத்தான் meaning எளிமை
நன்றி
Deleteதிருவருட்பா ஆறாம் திருமுறை vallalar songs: https://vallalarsongs.com/
ReplyDeleteதிருவருட்பா பாடல்கள்
ReplyDelete