Sunday, December 26, 2021

தம்பிப்பாளையம் ஸ்ரீமத் வீரசைவ சோலை சிவயோக சுவாமிகள்

 தம்பிப்பாளையம் ஸ்ரீமத் வீரசைவ சோலை சிவயோக சுவாமிகள்                 விருப்பாக்கம்மாள் – 136-ஆவது மகா குருபூஜை பெருவிழா:

அருள் வாக்கியம்

முக்தியளிக்கும் பக்தியளிக்கும் முதல்வியினிருள் வாக்கியஞ்

சித்தியளிக்குஞ் செல்வமளிக்குஞ் செகமெலாம் வரவழைக்கும்

புத்தியளிக்கும் புண்ணியமளிக்கும் புலைகொலை யொழித்தோர்க்கு

நித்தியமளிக்கும் நிளையளிக்கும் நின்மலி வாக்கியந்தானே.

 

வடலூர் வள்ளற்பெருமானுக்கு அருள் வாக்கியம் வழங்கியும், ஸ்ரீ உமாதேவியால் ”சோலை” என்று அருட்பெயர் பெற்ற தளமாகிய தம்பிப்பாளையம் கிராமத்தில் உள்ள ஜீவசமாதியுமாகிய ஸ்ரீமத் சோலை வீரசைவ சிவயோக சுவாமிகளது குருபூஜையும், அவரது துணைவியார் விருப்பாக்கம்மாள் குருபூஜையும் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு மார்கழித் திங்கள் 12-ம் நாள் (27-12-2021) திங்கள் கிழமை அஸ்டமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய நன்னாள் காலை 10-.00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. அவ்வமயம் அன்பர்கள் அனைவரும் வந்திருந்து குருபூஜை அருளை பெற அழைக்கின்றோம்.

 

கடலூர் விருத்தாசலம் சாலையில் குள்ளஞ்சாவடியை அடுத்து தம்பிப்பாளையத்தில் ஸ்ரீமத் சோலை வீர சைவ சிவயோகசுவாமிகள் மடம் உள்ளது. இந்த மடத்தில் இருக்கும் கிணற்றில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் வற்றாமல் இன்றும் உள்ளது.

மடத்தின் நிர்வாகி பால சுப்ரமணியன் கூறும்போது, ஸ்ரீமத் சோலை வீர சைவ சிவயோகசுவாமிகள் மடம் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் நவாப் காலத்தில் ஸ்ரீமத் சோகை வீர சைவ சிவயோக சுவாமிகளால் நிறுவப்பட்டது. மத்தில் வீர சைவ சிவயோக சுவாமிகள் 1885ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-தேதி ஜீவ சமாதியடைந்தார். அவரது சமாதிக்கு அருகில் அவரது மனைவி விருப்பாக்கம்மாள் ஜீவ சமாதியடைந்துள்ளார்.

இந்த தலத்தில் வடலூர் இராமலிங்க அடிகளாருக்கு ஸ்ரீமத் சோலை வீரசைவ சிவயோக சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

இங்குள்ள கிணறு மடம் நிறுவும்போது தோண்டப்பட்டது. கிணற்றின் ஆழம் 15 அடியாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிராம பொது மக்கள் கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினர். இருந்தும் கிணற்றில் இது வரை தண்ணீர் வற்றாமல் உள்ளது. இங்குள்ள வீரசைவ சிவயோக சுவாமிகளருள் பெற்ற மாமரத்தில் ஆண்டு தோறும் மா விளைச்சல் அதிகமாக இருக்கும்.

இங்கு சிவன், விநாயகர், சுப்ரமணியர், உமாதேவி ஆகியோருக்கு கோயில் கட்டி 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மையிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.








 

Saturday, December 25, 2021

வள்ளலார் பார்வையில் திருக்குறள் யாருக்கு சொந்தம்?

         வள்ளலார் பார்வையில் திருக்குறள் யாருக்கு சொந்தம்?

பொது மறையா?

இந்து மறையா?

சமண மறையா?

கிறுத்துவ மறையா?

ஆன்ம நேய அன்பர்களுக்கு வந்தனம்!

வள்ளலார் அவர்கள் மிகவும்போற்றிய நூல்களில் ஒன்று திருக்குறள் என்னும் நூலும் ஆகும். இன்று நமது தமிழகத்தில் உள்ள சில கிறுத்துவர்கள், திருக்குறள் என்னும் நூலினை கிறுத்துவ நூல் என்றும் திருவள்ளுவர் கிறுத்துவர் என்றும் கூறி அதற்கான ஆதரங்களை எடுத்துரைக்கின்றார்கள். அது உண்மையா? என வள்ளலார் வழியில் காண்போம் வாருங்கள்

முதலில் நாம் இவ்வாய்விற்காக எடுத்துக்கொள்வது, திருக்குறளின் முதல் அதிகாரத்தில் உள்ள முதல் பத்து பாடல்களே. அவைகளை முதலில் பார்ப்போம்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல்.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கால்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

திருக்குறளின் முதல் பத்து பாடல்களை கொண்டுதான் நாம் திருக்குறள் யாருக்கு சொந்தம் என்பதை வள்ளலார் வழியில் ஆயப்போகின்றோம். வாருங்கள்,

திருக்குறள் பொது மறையா? என்றால் இல்லை. ஆனால் இதில் கூறப்படும் உபதேசங்கள் அனைத்தும் உலகியல் மக்களுக்கு பொது எனக் கொள்ளப்படும் வகையில் உள்ளது. அந்த வகையில் இது பொது மறை எனலாம். ஆனாலும் இது ஏதோ ஒரு சமயத்தை பின்பற்றியதுதான் என்பது தெளிவு. அது எந்த மதம் என்பதை இறுதியில் காண்போம்.

திருக்குறள் சமண மறையா? திருக்குறள் சமண மறைதான் என சிலர் இந்த திருக்குறளில் வரும்எண்குணத்தான்என்னும் சொல்லை வைத்து பேசுவர்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

எண்குணத்தான் என்ற சொல்லினை முதன் முதலில் எடுத்துக் கையாண்டது சமண மதமே. அதனால்தான் சமணரகள் இந்தச் சொல்லினைக் கொண்டு திருக்குறள் எங்களுடையதே என முழங்குகின்றார்கள். இவர்களின் வாக்கின்படி எண்குணத்தன் என்பது அருகனை குறிப்பதாக வாதிடுகின்றார்கள்.

சமண இலக்கியமான சூடாமணி நிகண்டு இவ்வாறு கூறுகின்றது,

கடையிலா ஞானத்தோடு காட்சி வீரியமே இன்பம்

மிடையுறு நாமமின்மை விதித்த கோத்திரங்க ளின்மை

அடைவிலா ஆயுவின்மை அந்தராயங்க ளின்மை

உடையவன் யாவன் மற்றிவ்வுலகினுக் கிறைவனாமே

 

கடையிலா ஞானமும், கடையிலா காட்சியும், கடையிலா வீரியமும், அழியா இயல்பும், ஆயுள் இன்மையும், நாமமின்மையும், கோத்திரமின்மையும் ஆகிய எண் குணங்கள் என்பது அருகருக்கே வாய்க்கப்பெற்றது. எனவே அருகரைத்தான் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். என்கின்றார்கள் சமணர்கள்.

சைவ மதத்திலும் சிவபெருமானின் குணங்களாக எண் குணங்களை குறிப்பிட்டு திருநாவுக்கரசர் தேவாரத்தில்எட்டுக்கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்என்று பாடுகின்றார்.

சுந்தரர் தேவாரத்தில்திருக்கானாட்டுமுள்ளூர் சிவனைப் பாடுகையில், “இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை, இறையவனை மறையவனை எண்குணத்தினானைஎன்று பாடுகின்றார்.

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதியில் 15-ஆவது பாடலில்,

முருகன் குமரன் குகனென்று மொழிந்து

உருகும் செயல் தந்துணர்வு என்றருள்வாய்

பொரு புங்கவரும் புவியும் பரவும்

குருபுங்கவ எண்குண பஞ்சரனே

என்று பாடுவதால், எண்குணம் என்பது சைவ சமயக் கடவுளை குறிப்பதாகவும் உள்ளது.

சிவனின் எண்குணங்களாக, தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை ஆகியவாம்.

கடவுள் வாழ்த்தில் வருகின்ற பத்து குறள்களிலும் உள்ள வார்த்தைகள் அனைத்தும் அருகப் பெருமானையே குறிக்கும் என சமணர்கள் கூறுகின்றார்கள்.

எண்ணையும் எழுத்தையும் முதன் முதல் அறிவித்ததானால் ஆதிபகவன் என்பவர் அருக பெருமானே.

வினையின் சிறிது காலம் ஆட்பட்டு, தன் முயற்சியால் அவ்வினையின் நீங்கியதால் தூய அறிவு என்னும் கேவல ஞானத்தை அடைந்ததனால் வாலறிவன் என்றும்,

அவ்வாறு அருக பகவான் கேவல அறிவு பெற்றதைத் தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரன் அவருக்குசமவசரணஅமைத்து, அவர் எழுந்தருள பாத அடிகளில் தாமரை மலரை அமைக்கின்றார். அருக பகவான் அந்த தாமரை மலர்களில் நடந்ததினால் மலர்மிசை ஏகினான் என்றும்,

காமம், வெகுளி மயக்கம் என்ற முக்குற்றத்தினை அகற்றியதால், வேண்டுதல் வேண்டாமை இலான் என்றும்,

தேவர்களால் பூஜிக்கப்பட்டவனும்சமவசரணம்என்னும் கோட்டத்தில் எழுந்தருளியச் சிறப்புப் பேறுப்பெற்றவன் ஆதலால் தனக்குவமை இல்லாதான் என்றும்,

நம்மைப்போல் தாய் வயிற்றில் பிறந்து, வினைகளுக்குக் காரணமான ஐம்பொறிகளையும் அடக்கினதாலே பொறிவாயில் ஐந்தவித்தான் என்றும்,

காதி, அகாதி என்ற இருவினைகளை தன்னிடம் சேரா நின்றதால் இருவினை சேரா இறைவன் என்றும்,

சமவசரணம் என்னும் திருக்கோயிலில் மண்ணுயிர் முதலான அனைத்து உயிர்களும் உய்ய அறம் உரைத்ததனால் அறவாழி அந்தனன் என்றும்,

எட்டு வினைகளை வென்று எட்டுக் குணங்களைப் பெற்றதனால் எண்குணத்தான் என்றும், (இரண்டு நான்கு வினைகள்எட்டு வினைகளாக சொல்லப்பட்டுள்ளன)

பிறவி என்னும் பெறுங்கடலை கடக்க புணையாக மக்களுக்குத் விளங்கியதால் இறைவன் (தீர்த்தங்கரர்) என்றும்

திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்து முழுதும் அருக பகவானையே திருவள்ளுவர் குறிப்பிடுவதால், திருக்குறள் ஓர் சமண மறையே என நிறுவுகின்றனர்.

இங்கே நாம் ஒரே சொல்லை வைத்தே திருக்குறள் சமண சமயத்தை சார்ந்து இல்லை என நிறுவுகின்றோம். அதாவதுஇறைவன்என்கின்ற சொல்லே அது. இறை கோட்பாடு அற்ற சமணத்தில் எவ்வாறு இறைவன் என்கின்ற சொல் பயன்படுத்தப்படும்? மேலும் எண்குணத்தான் என்பது மற்ற சமய தெய்வங்களுக்கும் அடங்கும். எனவே இதற்கு மேற்கொண்டு இதனை ஆயாமல் திருக்குறள் என்பது சமண மதத்தை சார்ந்தது அல்ல என நிறுவுவோம்.

அடுத்ததாக திருக்குறள் கிறுத்துவ மறையா? என ஆய்வோம்.

இவ்வுலகில் கிறுத்துவம் துவங்கி 2021 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் வள்ளுவர் ஆண்டு தற்போது 2051 ஆகின்றது. எனவே எடுத்த எடுப்பிலேயே திருக்குறள் கிறுத்துவ மறையல்ல என சொல்லிவிடாம். எனினும் இன்னும் சில தரவுகளைக் காண்போம்.

பிறவி பெருங்கடலைப்பற்றி கிறுத்துவம் பேசாது. கிறுத்துவத்தில் மறுபிறப்பு கொள்கை கிடையாது. எனவே திருக்குறள் கிறுத்துவ மறை கிடையாது. முற்பிறவியில் செய்த வினையால் இப்பிறவி கிடைத்தது என்றால், முதல் பிறவியானது எந்த வினையினால் வந்திருக்கும்? என்பதை சிந்தித்தால், பிறவி சுழற்சி என்பது பொய் என நிறுவலாம், என்கின்றார் அந்த கிறுத்துவ ஆராய்ச்சியாளர்.

இதற்கு சைவ சமயத்தின் கண் கொண்டு வள்ளலார் கூறும் பதிலைக் காண்போம், ஆன்மாவிற்கு ஆணவம் என்கின்ற மலம் இயற்கை. அந்த ஆணவமலம் நீங்கி இறையடி சேர விரும்பி அனைத்து ஆன்மாக்களும் தனது முதல் பிறவியினை எடுத்தன. அவ்வாறு எடுத்த முதல் பிறவியில், அதன் முயற்சி தவறியதால் பிறவிகள் தொடர்ந்துகொண்டே உள்ளன. எப்பிறவியில் ஆணவம் நீங்குகின்றதோ அந்தப்பிறவியே அவ்வான்மாவிற்கு இறுதி பிறவியாகும் என்கின்றது சைவ சமயம். எனவே சைவ சமயம் கூறும் பிறவி சுழற்சியைத்தான் வள்ளுவர் கூறுகின்றார் எனக் கொள்க. 

இருள் சேர் இரு வினை பற்றி பேசும்போது, நல்வினை, தீவினை என இந்து மதம் கூறுவாத கூறுகின்றார்கள். அப்படியெனில் நல்வினை எவ்வாறு இருளைச் சேரும்? என்பது அவர்களது கேள்வி. வினை என்றாலே அது இருள்தான் என்பது இந்து மதத்தின் தத்துவம். அதனால்தான்சும்மா இருஎன்கின்ற உபதேசம் இந்து மதத்தில் உள்ளது. எனவே கிறுத்துவரான ஒருவர் இவ்விரு வினையினை ஜென்ம பாவம் (பரம்பரையாக வருகின்ற பாவம்), கர்ம பாவம் (தனி ஒருவர் செய்கின்ற பாவம்) என்று கிறுத்துவம் கூறுவதாகக் கூறுகின்றார். எனவே வள்ளுவர் கூறும் இருள்சேர் இருவினை என்பது கிறுத்துவம் கூறும் ஜென்ம பாவமும், கர்ம பாவமும்தான் என்பது அவரது ஆராய்ச்சி. இவ்வாறு ஆராய்ந்தால் ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லி விளக்கம் செய்ய, இதற்கு ஒரு முடிவைக் காண்பது அரிது. எனவே இந்த இரு வினை வைத்து திருக்குறள் எந்த மத்ததைச் சார்ந்தது என முடிவுக்கு வருவது இயலாது.   

மேலும் குறள் வெண்பாவால் இயற்றப்பட்ட இந்நூலுக்குதிருஎன்கின்ற அடைமொழியினை கொடுத்து திருக்குறள் என பெயரிட்டுள்ளனர் நமது முன்னோர்கள். ’திருஎன்கின்ற அடைமொழி கொண்ட நூல்கள் யாவும் சைவம் மற்றும் வைணவ நூலாகவே இருப்பதைக் கொண்டும், திருக்குறள் என்பது கிறுத்துவம் சார்ந்தது இல்லை என்பதை நிறுவலாம்.

மேலும் திருக்குறளில் புலால் உண்ணாமை கோட்பாடு உள்ளது. இக்கோட்பாடு கிறுத்துவத்தில் இல்லை. ஏன், இந்தியாவைவிட்டு வெளிநாட்டில் உருவான எம்மதத்திற்கும் புலால் உண்ணாமை என்னும் ஜீவகாருண்ய கோட்பாடு அறவே இல்லை.

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு

கோழிக்குஞ்சு வந்ததுன்னு

யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு

பூனைக்குஞ்சு சொன்னதுண்டு

கதையிலதானே இப்ப காணுது பூமி…

என்கிற சினிமா பாடல் வரியை மெய்ப்பிக்கும் வகையில்தான் உள்ளது கிறுத்துவர்களின் திருக்குறள் ஆராய்ச்சி முடிவுகள். பரலோகத்தில் உள்ள பரமபிதாவே… இவர்கள் தாம் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் செய்கின்றார்கள்… இவர்களை மன்னித்துவிடும். 

திருக்குறள் ஒரு கிறுத்துவ நூல் அல்ல என்பதை நிலைநாட்ட நாம் இதுவரை சொல்லிவந்த எடுத்துக்காட்டுகளே போதும். 

இப்போது நாம் வள்ளலார் வழியில் திருக்குறள் யாருக்கு சொந்தமென்பதை நிறுவலாம் வாருங்கள்

வள்ளலார்தான் தமிழகத்தில் முதன்முதலில் திருக்குறளை மாணவர்களுக்கும் தமது சீடர்களுக்கும் பாடமாக கற்பித்தார் என்பது வரலாறு. இவ்வரலாறு எதன் கண் நாம் அறிகின்றோம் எனில், வள்ளலரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கநதசாமிப்பிள்ளை அவர்களியற்றிய வள்ளலாரின் சரித்திர குறிப்புகள் மூலம் அறியப்பெறுகின்றோம். இச்சரித்திரக் குறிப்புகள் காரணப்பட்டார் இயற்றியபிரபந்தத்திரட்டுஎன்னும் நூலில் காணக்கிடைக்கின்றது. மேலும் காரணப்பட்டார் பதிப்பித்த திருவருட்பா நூலிலும் இதனைக் காணலாம்.

வடலூரில் சன்மார்க்க பாடசாலைவைக்க எண்ணி வள்ளலார், படித்தவர்களைக் கூட்டித் தொழுவூர் வேலாயுத முதலியாரை அவர்களுக்கு உபாத்தியாயராக அமைத்துத் திருக்குறள் பாடம் நடத்துவிக்க கட்டளையிட்டனர். மூன்றுமாத மாகியும் மூன்றதிகாரமும் நடவாமையால் வாசிப்போர்கள் வள்ளலாரிடம் குறைகூற, வள்ளலார்மூடமுண்ட வித்வானைக் கூப்பிடும்என்று கூற, முதலியார் வந்து வாய்புதைத்துப் பின்புறத்தே கைக்கட்டித் தூதுஒதுக்கி நிற்க, வள்ளலார்பிச்சு மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரந்தானும் நடக்கவில்லையாம்; பாடசாலை வேண்டாம் வித்வான்களே! உங்களுக்குத் தானாகவே கல்விவரும்என்று கூறிப் பாடசாலையை நிறுத்திவிட்டனர். (மூடமுண்ட வித்வான் என்பதற்குச் சிலர் பிள்ளைப்பெருமான் தம் பேச்சைக்கேட்டு முதலியாரை மூடம், முண்டம் வித்வான் எனத்திட்டினார் என்று கொண்டனர் போலும், மூடம்அறியாமையை உண்டவிழுங்கிய வித்வான் என்பது கருத்து.)

-.மு.. பிரபந்தத்திரட்டு.திருநாவுக்கரசு பதிப்புபக்கம்  - 117.

வள்ளலார் அவர்கள், சன்மார்க்கம் போதிக்க திருக்குறளை ஒரு பாடமாக நடத்தியதை நாம் இந்தப் பதிவிலிருந்து அறியமுடிகின்றது.  இதிலிருந்து வள்ளலார் முதலில் திருக்குறளை ஒரு சன்மார்க்க நூலாக தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்வோம். இது நிற்க.

ஒரு நாள் வித்வான் ஒருவர் வள்ளலாரிடம் திருக்குறளில் முதற் குறளிலேயேமுதற்றே உலகுஎன்பதில் ஏகாரம் ஈற்றசையாயின், “கடுகைத் துளைத்தேழ் கடலைப்புகட்டி…?” என்று கூறியது எங்ஙனம் பொருந்தும்என்று கேட்க, வள்ளலார்முதல்தே எனப் பிரித்தால் தோஷமென்னஎன்று குறிப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியினை காரணப்பட்டு ச.மு.. அருளிய பிரபந்தத்திரட்டில், .திருநாவுக்கரசு பதிப்பில் பக்கம் – 118-ல் காணலாம்.

இவ்வாறு வள்ளலாரிடம் வித்வான்கள் திருக்குறளை வைத்து விவாதம் செய்திருக்கின்றதை நாம் இந்நிகழ்ச்சியின் மூலம் காண்கின்றோம். இதன் பொருள் என்னவாக இருக்கும் எனப் பார்ப்போம்.

திருவள்ளுவரின் திருக்குறளைத் திறனாய்வு செய்த இடைக்காடர் என்னும் புலவர், “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்எனப் பாடியுள்ளார். கடுகைத் துளைத்து அதில் ஏழு கடலை புகட்டுவது போன்று திருக்குறளில் ஏழு சீரில் உலக உண்மைகளை வழங்குவிடுகின்றது திருக்குறள் என்கின்றார். இதனையே ஒளவையாரும்அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுக்கத் தறித்த குறள்என்று பாராட்டியுள்ளார்.

அகரம் முதல், எழுத்து எல்லாம்; ஆதி

பகவன் முதற்றே, உலகு.

அகரம் மொழிக்கெல்லாம் எவ்வாறு முதலாக உள்ளதோ, அது போல இவ்வுலகிற்கு இறைவனே முதலாக உள்ளான்.

இடைச் சொல் என்று தமிழ் இலக்கணத்தில் உண்டு. தனித்து நின்று பொருள் தராது, இரண்டு சொற்களுக்கிடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது பொருளின் தெளிவைத் தரும்.

நிறைய இடைச்சொற்கள் இருக்கின்றன. அதில் ஏகார இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம். ஏகார இடைச்சொல் ஏழு விதமாக வரும். வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும், ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத் தரும்.

1.      தேற்றம் என்றால் உறுதி, தெளிவு. நான் இதைச் செய்தேன் என்பதை, நானே இதைச் செய்தேன் என்று சொல்லலாம். இதில் ’நான்’ என்பதில் ஏகாரம் சேர்த்து ’நானே’ என்று சொல்லும்போது அவ்வாக்கியம் உறுதிபடுத்தப்படுகின்றது.

2.       வினா; வீட்டுக்குப் போகிறேன் என்ற வாக்கியத்தில் ஏகாரம் சேர்க்க அது வீட்டுக்குத் தானே போகிறேன்? என கேள்வி வாக்கியமாக மாறும்.

3.       எண்; வீடு, நிலம், நகை என்கின்ற பொருள்கள் இருக்கின்றது என்பதைக் குறிக்கும். அதனையே ஏகாரம் சேர்த்து வீடே, நிலமே, நகையே என சொல்லும்போது நம்மையறியாமல் மூன்று விதமான பொருள் இருக்கின்றது என எண்ண தொடங்கிவிடுகிறோம்.

4.      பிரிநிலை; அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்த மாணவன் என்பதில் அவனே என்கின்ற ஏகாரம் ஒருவனை பிரித்துக் காட்டுகின்றது. எனவே இது பிரிநிலை ஏகாரமாகும்.

5.      எதிர்மறை; நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கின்றது.

6.      இசை நிறை; ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார். இவ்வாக்கியத்தில் இவள் ஒருத்தி என்று தொடங்கியிருக்கலாம். ஏயே என்று தொடங்கியதால் இது இசை நயம் ஏகாரமாகும்.

7.      ஈற்று அசை; அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு சேர்க்கப்படும் சொற்கள். ’என்றுமேத்தித் தொழுவோ மியாமே’ என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்ற ஏகாரத்தில் பொருள் ஏதுமின்றி நிற்கின்றது.

இவ்வளவு பெரிய இலக்கண விளக்கம் இங்குத் தேவையில்லாதது. எனினும் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற வரியில் முதற்றே என்ற சொல்லை கவனியுங்கள். ‘ஆதி பகவன் முதற்று உலகு’ என்று சொல்லி யிருக்கலாம் அல்லவா? அப்படி சொல்லியிருந்தால் ‘உலகுக்கு இறைவன் முதல்’ என்று அர்த்தம் வரும். அவன் மட்டுந்தான் முதல் என்ற அர்த்தம் வராது. எனவே ஏகாரம் சேர்த்து வள்ளுவர் கூறுவதால், உலகிற்கு இறைவன் மட்டுமே முதல் என்று உறுதிப் படுத்துகின்றார்.

இப்போது, வள்ளலாரிடம் ஒரு வித்வான் வந்து விவாதம் செய்ததை கவனியுங்கள். ‘முதற்றே உலகு’ என்பதில் ஏகாரம் ஈற்றசையாயின், ‘கடுகைத் துளைத்து அதில் ஏழ் கடலைப்புகட்டி’ என்று இடைக்காடர் புகழ்வது எங்ஙனம் பொருந்தும்? என வள்ளலாரிடம் கேள்வி எழுப்புகின்றார்.

ஏகாரம் வந்ததிற்கும், இடைக்காடரின் ‘ஏழ்கடல் புகட்டி’ என்பதற்கும் என்ன சம்பந்தம் என எனக்குத் தெரியவில்லை. மேலும் அந்த வித்வானுக்கு வள்ளலார் கூறிய ‘முதல்தே எனப் பிரித்தால் தோஷமென்ன?’ என்ற பதிலும் எம்மை குழப்புகின்றது. ஏனெனில் முதல்தே என்பதிலும் ஏகாரம் வருகின்றது. இதற்கு சரியான விளக்கம் தெரிந்தவர்கள் கூறலாம்.  இது நிற்க.

அடுத்ததாக சாகாத கல்வி என்கின்ற தலைப்பில், திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 411-ல், வள்ளலார் இவ்வாறு உரைக்கின்றார், வேதங்கள் முக்கியம் சாகாத கல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.

என உரைக்கின்றார். எனவே நாம் முதலில் சன்மார்க்க நூலாக திருக்குறளை வள்ளலார் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்தோம். ஏன் திருக்குறளை சன்மார்க்க நூலாக தேர்ந்தெடுத்தார் என்பதற்கு விடையினை இங்கு நாம் காண்கின்றோம். ஏனெனில் திருக்குறளில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கின்றது. மேலும் வள்ளலார் திருக்குறள் என சொல்லாமல் இங்கே ’தேவர் குறள்’ என உயர்த்திச் சொன்னதை, கிறுத்துவர்கள் கண்டால், இது எங்களது ’தேவனின் குறள்’ என வள்ளலாரே சொல்லிவிட்டார் என மீண்டும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டது’ என்பதாக சொன்னாலும் சொல்லிவிடுவர்.

வள்ளலார் சொன்னது போல், திருக்குறளில் முதல் அதிகாரத்தில் இரண்டு இடங்களில் “நீடுவாழ்வார்” என்கின்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. அச்சொல்லை ஆதாரமாகக் கொண்டே வள்ளலார் திருக்குறளில் சாகாக்கல்வி சொல்லப்பட்டுள்ளது என்கின்றார். மேலும் திருக்குறளை ’வேதங்கள் முக்கியம்’ என்ற அடை மொழி இட்டு சொல்வதால், வேதங்களில் முக்கியமானது ‘தேவர் குறள்’ என்றும் கூறியது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

அடுத்ததாக வேதாகமச் சிறப்பு என்கின்ற தலைப்பில், திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 440-ல், வள்ளலார் இவ்வாறு உரைக்கின்றார், இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை. ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக் காணப்படுமாகில், அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது உண்மை.

வள்ளலாரின் இந்த அறிவிப்புதான் திருக்குறள் யாருக்கு சொந்தம் என்பதை நிர்ணயித்திருக்கின்றது. இந்து வேதாகமங்களில் மட்டும்தான் சாகாத கல்வி சொல்லப்பட்டுள்ளது என்கின்றார். இந்து வேதாகமம் என்று வள்ளலார் சொல்வது வடமொழி நான்கு அல்லது மூன்று வேதமல்ல. தமிழ் மொழி வேதங்களான ’தேவர் குறள்’ என்பதையே வேதங்கள் என்று சொன்னதை முன்னமே கண்டோம். அது போல ‘திருமந்திரம்’ என்பதனையும் நாம் இந்து வேதமாக வள்ளலார் சொன்னாரென எடுத்துக்கொள்ளலாம். எனவே சாகாத கல்வியை சொல்லுகின்ற நூல்கள் எதுவாகினும் அது இந்து நூல்கள்தான் என்பது வள்ளலாரின் வாக்கு. திருவள்ளுவர் சாகாக் கல்வி சொல்லி மரணமிலா பெருவாழ்வில் இருக்கின்றாரா? எனக்கேட்டால், இல்லை. சொல்வது திருக்குறள், செய்வது திருவருட்பா ஆகும். சொல்வது வேறு, செய்வது வேறு. வள்ளலார் திருக்குறளில் சாகாக் கல்வி சொல்லப்பட்டுள்ளது எனதான் சொல்லியிருக்கின்றார்.

எனவே வள்ளலாரின் வாக்கின்படி திருக்குறள் என்பது சைவ சமயம் சார்ந்த நூலே ஆகும். சைவர்களே அதன் முழு உரிமையாளர்கள். சைவத்திற்கு அடுத்த படியான சுத்த சன்மார்க்கத்திற்கும் திருக்குறள் உரிமையுடையதாகும்.  நன்றி.

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி.

 

தி.ம.இராமலிங்கம்

T.M.RAMALINGAM

Whatsapp: +91 9445545475

vallalarmail@gmail.com

 

 



 

 

 

Monday, December 20, 2021

சிவபெருமானும் வள்ளற்பெருமானும் (தி.ம.இராமலிங்கம்) அத்தியாயம் - 3

 

சிவபெருமானும் வள்ளற்பெருமானும்

                                               (தி..இராமலிங்கம்)

                               அருட்பெருஞ்ஜோதி                 அருட்பெருஞ்ஜோதி

          தனிப்பெருங்கருணை               அருட்பெருஞ்ஜோதி

           எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

                                                     அத்தியாயம் - 3

தோற்றமும் குணமும்




 சிவபெருமான்:

           மொகஞ்சதாரா மற்றும் சிந்து ஆகிய வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே சிவ வழிபாடு இருந்து வந்துள்ளது. எனவே இவரை ஆதி சித்தன் அல்லது ஆதி சிவன் என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட தமிழர்களால் வழிபட்டு வந்த சேயோன் வழிபாடே பிற்காலத்தில் சிவ வழிபாடாக மாறியது. சேயோன் என்ற கடவுள் குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வமாகும். சேயோன் என்றால் சிவந்தவன் என்று பொருள். சிவந்தவன் என்பதே சிவனாக அழைக்கப்பட்டு வருகிறது. முது முதல்வன், ஈர்ஞ்சடை, அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் நமது சங்க நூல்களில் காணப்படுகிறது. மேலும் பல பெயர்கள் கொண்டு சிவபெருமான் அழைக்கப்படுகின்றார். அவைகளையும் காண்போம் வாருங்கள்,




           யோகி: எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் இவர் ஒரு யோகி.

           சித்தன்: அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் இவர் ஒரு சித்தர்.

    பித்தன்: சிவ பக்தர்களின் பக்தியில் மூழ்கி, அவர்கள் கேட்கும் வரங்களில் விளைவுகளை ஆராயாமல் வரங்களை தருவதால் இவர் ஒரு பித்தர்.

           சடையாண்டி: சடாமுடியுடைவராக இருப்பதால் இவர் ஒரு சடையாண்டி.

           திரிசூலன்: இவர் எப்பொழுதும் தமது கைகளில் சூலம் என்கிற ஆயுதத்தை ஏந்தி இருப்பதால் இவர் ஒரு திரிசூலன்.

       முக்கண்ணன்: நெற்றிக்கு மேலே ஒருகண்ணை அதீதமாகப் பெற்று மூன்று கண்களை உடையவராக இருப்பதால் இவர் ஒரு முக்கண்ணன்.

           கயிலைவாசன்: கயிலை மலையில் வசிப்பதால் இவர் ஒரு கயிலைவாசன்.

           சுடலையாண்டி: சுடுகாட்டில் வசிப்பதால் இவர் ஒரு சுடலையாண்டி.

           கங்காதரன்: கங்கை நதியினை பூமியில் ஓடவிட்டதால் இவர் ஒரு கங்காதரன்.

     ருத்ரன்: அகங்காரத்தினையும் தீவினைகளையும் அழிப்பதே தமது தொழிலாக கொண்டிருப்பதால் இவர் ஒரு ருத்ரன்.

            நடராஜன்: நடனக் கலையில் இவர் சிறந்து விளங்குவதால் இவர் ஒரு நடராஜர்.

           இவ்வாறு இவரை குணத்தின் அடிப்படையிலும் தோற்றத்தின் அடிப்படையிலும் வசிக்கும் இடத்தின் அடிப்படையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பெயர் கொண்டு நாம் அழைக்கிறோம்.

           சிவபெருமானின் இல்லறம் ஒரு காதல் திருமணத்தால் உருவாகியது. தாட்சாயிணி என்ற பெண் சிவபெருமான் மீது காதல் கொண்டதால் சிவபெருமானும் தாட்சாயிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இன்றைய உலகில் நடக்கும் அதே எதிர்ப்பு அன்றைக்கும் காதல் திருமணத்திற்கு இருந்து வந்துள்ளது. பெண்ணின் தந்தையான தட்சனுக்கு சிவபெருமானை பிடிக்காததால் பெண் வீட்டார் அத்திருமணத்தை ஒப்புக்கொள்ளாமல் இருவரையும் தள்ளி வைத்துவிட்டனர். ஒரு கட்டத்தில் தட்சன் சிவபெருமானை அவமானப்படுத்த, அதைத்தாங்காத தாட்சாயிணி தற்கொலை செய்து கொள்கிறாள். இதனைக் கண்ட சிவபெருமான் கோபம் கொண்டு தட்சனை அதாவது தமது மாமனாரை கொலை செய்துவிடுகிறார்.





           தற்கொலையுண்ட தாட்சாயிணி மீண்டும் இப்பூமியில் பார்வதி தேவியாக பிறந்து அதே சிவபெருமாணை திருமணம் செய்துகொள்கிறாள். இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகள் இரண்டு. ஒன்று விநாயகர் இன்னொன்று முருகர். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் கடவுளாக கருதப்படுகிறார்கள்.




    ஒரு முறை திருமால் பெண் உருவம் எடுத்து சிவபெருமான் முன் வர, சிவபெருமானுக்கு சபலம் தோன்றி எதிரில் இருப்பது திருமால் என்றே அறியாமல் மோகத்தில் அப்பெண்ணுடன் கூடியதால், இவர்கள் இருவருக்கும் ஐயனார் அல்லது ஐயப்பன் என்ற குழந்தை பிறந்தது.



           இவ்வாறு சிவபெருமானுக்கு பைரவர், கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயப்பன் ஆகிய பஞ்ச குமாரர்கள் உள்ளனர்.

     சிவபெருமானின் மேனியில் புலித்தோல், பாம்பு, பிறை, கங்கா போன்றவைகள் எப்படி வந்தன என்று பார்ப்போம்.

           தருகா வனத்தில் வசித்துவந்த முனிவர்களின் ஆணவத்தை அழிக்க சிவபெருமான் திகம்பர மூர்த்தியாக அதாவது ஆடைகள் ஏதுமின்றி அம்மனமாக உருவெடுத்து அங்குச் சென்றார். அங்குள்ள முனிவர்களின் மனைவியர்கள் தம் கணவர்களை விட இந்த திகம்பரர் மிக அழகாக உள்ளாரே என்று மயங்கி அவர்கள் அனைவரும் தம் கணவர்களான முனிவர்களை விட்டு அந்த திகம்பரருடன் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதனைக்கண்ட முனிவர்கள் அந்த திகம்பரர் மேல் கோபம் கொண்டு தங்களுடைய தவ வலிமையால் புலியை உருவாக்கி திகம்பரர் மேல் ஏவினர். ஆனால் ஆடைகள் ஏதுமின்றி திரிந்த அந்த திகம்பரர் அப்புலியினைக் கொன்று அதன் தோலை உரித்து தமது ஆடையாக அணிந்துக்கொண்டார்.




           பிறகு அம்முனிவர்கள் ஒரு யானையை அவர் மீது ஏவினர். அதன் தோலையும் சிவபெருமான் உரித்துவிட்டார்.

           கொலை ஆயுதமான மழுவினை ஏவினார்கள். அதனையும் தன்னுடைய ஆயுதங்களில் ஒன்றாகச் சிவபெருமான் இணைத்துக்கொண்டார்.

           தட்சனின் சாபத்திலிருந்து சந்திரனைக் காக்க பிறைச்சந்திரனை தமது சடாமுடியில் சூடிக்கொண்டார்.

           பகிரதனின் முன்னோர்களை முக்தியடைய அவரின் வேண்டுகோலை ஏற்று கங்கையை முடியில் தாங்கிக்கொண்டார்.

           காசிபர் கத்துரு தம்பதிகளின் குழந்தைகளான பாம்புகள், மாற்றாந்தாய் மகனான கருடனிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிவபெருமானை சரணடைந்தன. அவற்றைச் சிவபெருமான் தமது ஆபரணமாக தரித்துக்கொண்டார்.

       இவையெல்லாம் சிவபெருமானின் அடையாளங்களாக உள்ளன.   

     சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி சத்தர் என்றும், அருவுருத் திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது. அருவுருவமாக இலிங்கமும் உருவத்திருமேனியாக மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் விளங்குகின்றன.

     அண்ட சராசரங்களை உருவாக்குவதற்காக தன்னுடைய இடப்பக்கத்தினை சக்தியாகப் பிரித்தார். ஆதி மூலவரான சிவபெருமானிலிருந்து சக்தி பிரிந்ததால் அச்சக்திக்கு ஆதி சக்தி எனப்பெயர். சிவபெருமானுக்கோ மாதொருபாகன் எனவும் பெயர் வந்தது. இதனை நமது வள்ளற்பெருமானும் “திருவடி புகழ்ச்சி” யாக பாடியருளி யுள்ளார்கள்.

           '...சயசய வெனுந்தொண்ட ரிதயமலர்

                   மேவிய சடாமகுடன் மதனதகனன்

          சந்திரசே கரனிடப வாகனன்

                   கங்கா தரன்சூல பாணியிறைவன்

          தனிமுத லுமாபதி புராந்தகன்

                   பசுபதி சயம்புமா தேவனமலன்

          தாண்டவன் தலைமாலை பூண்டவன்

                   தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்

          தன்னிகரில் சித்தெலாம் வல்லவன்

                   வடதிசைச் சைலமெனு மொருவில்வன்

          தக்ஷினா மூர்த்தியருண் மூர்த்திபுண்ணிய

                   மூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்

          தலைமைபெறு கணநாய கன்குழக

                   னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்

          சம்புவே தண்டன் பிறப்பிலான்

                   முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்

          சதுரன் கடாசல வுரிப்போர்வை

                   யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்

          சர்வகா ரணன்விறற் காலகாலன்

                   சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்...'

 என்று வள்ளற்பெருமான், சிவபெருமானின் வடிவினை தாம் அருளிய திருவடிப் புகழ்ச்சி (திருவருட்பா-1960)என்ற பாடலில் பதிவும் செய்திருக்கின்றார்.

    சிவபெருமானின் 25 சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சோமஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர், பிட்சாடனர், காமசம்ஹாரர், கால சம்ஹாரர், சலந்தராகரர், திரிபுராந்தகர், கஜசம்ஹாரர், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, கிராதகர், கங்காளர், சக்ரதானர், கஜமுக அனுக்கிரக மூர்த்தி, சண்டேச அனுக்கிரகர், ஏகபாதமூர்த்தி, லிங்கோத்பவர், சுகாசனர், உமா மகேஸ்வரர், அரியர்த்த மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், நீலகண்டர் இவையாவும் மகேசுவர மூர்த்தங்கள் ஆகும்.

           இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் இணைந்து மேலும் பல சிவரூபங்கள் இணைந்து சிவ உருவத்திருமேனிகள் என்று மொத்தம் 64 வழங்கப்படுகின்றன. அவை, இலிங்க மூர்த்தி, இலிங்கோத்பவ மூர்த்தி, முகலிங்க மூர்த்தி, சதாசிவ மூர்த்தி, மகா சதாசிவ மூர்த்தி, உமாமகேஸ்வர மூர்த்தி, சுகாசன மூர்த்தி, உமேச மூர்த்தி, சோமாஸ்கந்த மூர்த்தி, சந்திரசேகர மூர்த்தி, இடபாரூட மூர்த்தி, இடபாந்திக மூர்த்தி, புஜங்கலளித மூர்த்தி, புஜங்கத்ராச மூர்த்தி, சந்த்யான்ருத்த மூர்த்தி, சதாநிருத்த மூர்த்தி, சண்டதாண்டவ மூர்த்தி, கங்காதர மூர்த்தி, கங்காவிசர்ஜன மூர்த்தி, திரிபுராந்தக மூர்த்தி, கல்யாணசுந்தர மூர்த்தி, அர்த்தநாரீஸ்வர மூர்த்தி, கஜயுக்த மூர்த்தி, ஜ்வாரபக்ன மூர்த்தி, சார்த்தூலஹர மூர்த்தி, பாசுபத மூர்த்தி, கங்காள மூர்த்தி, கேசவார்த்த மூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, சரப மூர்த்தி, சடேச அனுக்ரஹ மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி, காலந்தக மூர்த்தி, காமதகன மூர்த்தி, இலகுளேஸ்வர மூர்த்தி, பைரவ மூர்த்தி, ஆபத்தோத்தரண மூர்த்தி, வடுக மூர்த்தி, க்ஷேத்திரபால மூர்த்தி, வீரபத்ர மூர்த்தி, அகோர மூர்த்தி, தட்சயஞ்யஷத மூர்த்தி, கிராத மூர்த்தி, குரு மூர்த்தி, அசுவாருட மூர்த்தி, கஜாந்திக மூர்த்தி, சலந்தரவத மூர்த்தி, ஏகபாதத்ரி மூர்த்தி, திரிபாதத்ரி மூர்த்தி, ஏகபாத மூர்த்தி, கெளரிவரப்ரத மூர்த்தி, சக்கரதான மூர்த்தி, கெளரிலீலாசமன்வித மூர்த்தி, விசாபகரண மூர்த்தி, கருடன் அருகிருந்த மூர்த்தி, பிரம்ம சிரச்சேத மூர்த்தி, கூர்ம சம்ஹார மூர்த்தி, மச்ச சம்ஹார மூர்த்தி, வராக சம்ஹார மூர்த்தி, பிரார்த்தனா மூர்த்தி, இரத்த பிட்சா பிரதான மூர்த்தி, சிஷ்ய பாவ மூர்த்தி என்பனவாம்.

           சிவபெருமானின் மனித அவதாரம் மொத்தம் இருபத்து ஏழு என கூர்மபுராணம் கூறுகின்றது. ஸ்வேதா, சுதாரா, மதனன், சுஹோத்திரன், கங்கணன், லோகாக்ஷி, ஜெய் கிஷ்ஹவ்யன், தாதிவாகன், ரிஷபன், பிருகு, உக்கிரன், அத்திரி, கவுதமன், வேதசீர்ஷன், கோகர்ணன், ஷிகந்தகன், ஜடமாலி, அட்டஹாசன், தாருகன், லங்காலி, மகாயாமன், முனி, ஷூலி, பிண்ட முனிச்வரன், சஹிஷ்ணு, சோமசர்மா, நகுலீஸ்வரன் ஆகிய 27 மனித அவதாரங்களை சிவபெருமான் எடுத்துள்ளார்.

           மேலும் சிவபெருமான் மனித வடிவெடுத்து மக்களுக்கு உதவியதாக திருவிளையாடல் புராணத்திலும், பெரிய புராணத்திலும் குறிப்புகள் உள்ளன.

           இதுவரை நாம் சிவபெருமானின் பல்வேறு வகையான தோற்றங்களைக் கண்டோம். இனி சிவபெருமானின் குணங்கள் என்ன என்பதைக் காண்போம்;

           "பவமின்மை யிறவின்மை பற்றின்மை பெயரின்மை

           உவமை யின்மை யொருவினை யின்மை

           குறைவி லறிவுடைமை கோத்திர மின்மையென்

           றிறைவ னிடத்தி லெண்குண மிவையே"

 பிறப்பு, இறப்பு, பற்று, பெயர், உவமை, வினை, கோத்திரம் ஆகிய ஏழு குணங்கள் இல்லாததாகவும் குறைவில்லா அறிவு உடையவராகவும் ஆக இந்த எட்டு குணங்களை உடையவராக இருப்பார் சிவபெருமான் என்று கூறுகிறது இப்பாடல். இதுவன்றி தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, வரம்பிலா இன்பமுடைமை என இந்த எட்டு குணங்களும் சிவபெருமானுக்கே உரியது என்றும் கூறுவர்.

 நாம் இதுவரை சிவபெருமானின் தோற்றமும், அவரது குணமும் பற்றி அறிந்தோம். தற்போது வள்ளற்பெருமானின் தோற்றமும், குணமும் பற்றி அறிவோம் வாருங்கள்

 வள்ளற்பெருமான்:

           வள்ளற்பெருமானின் வடிவத் தோற்றம் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் நன்கு அறிவோம். எனினும் அவருடைய வெளித்தோற்றம் பற்றி இங்கு எழுதவேண்டியத் தேவை இருப்பதால், அவரின் வடிவினைப்பற்றி சற்று காண்போம்.

                   வெண் துகிலால் தம்முடைய மேனியினை உச்சி முதல் கால் வரை முழுதும் மறைத்துக்கொண்டார். தம்வடிவினை சிலை வடிவமாகவோ அல்லது புகைப்படமாகவோ வெளிக்காட்ட மறுத்தார். அவர் காலத்தில் வங்காளத்தில் வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்களுக்கெல்லாம் புகைப்படம் இருக்கிறது. ஆனால் புகைப்படம் எடுக்க எவ்வளவு முயன்றும் வள்ளற்பெருமானின் உருவம், புகைப்படத்தில் விழாது போனது ஆச்சரியம், அதிசயம், அற்புதமாக இன்றும் பேசப்படுகின்றது. மண்ணினால் செய்த அவரது உருவத்தை புகைப்படம் எடுத்தும் வரைந்தும் தற்போது நம்மிடையே அவரது உருவங்கள் காணக்கிடைக்கின்றது.

           வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு சமரசபஜனை .மு.கந்தசாமி ஐயா அவர்களின் 'பிரபந்தத்திரட்டு' என்னும் நூலே இதற்கெல்லாம் ஆதாரமாக உள்ளது.




           "பண்ணுருட்டியிலிருந்த குயவர் ஒருவர் வள்ளலாரிடத்து அன்பு பூண்டு அவரது திருவுருவத்தை மண்ணால் அமைத்து உரிய வர்ணங்களைத் தீட்டி வள்ளலார் திருமுன்பு கொண்டு வந்து காட்டினார். வள்ளலார் அதை எடுத்துக்கொண்டு தருமச்சாலைக்கு வெளியே வந்து "பொன்னான மேனி மண்ணாயிற்றோ" என்று கூறி இரு கையையும் விட்டனர். அது விழுந்து தூளாகியது. பிறகு அவர் வேறு ஒரு உருவம் அமைத்தனர், அவ்வுருவத்திலிருந்துதான் புகைப்படம் எடுத்து வழங்கி வருகிறது." (ிரபந்தத்திரட்டு - .திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 127 )

           "ஒருகால் அன்பர்கள் வள்ளலாரது திருவுருவத்தைப் புகைப்படத்தில் பிடிக்கவேண்டுமென்று விரும்ப, சென்னையில் பிரசித்தியாயிருந்த மாசிலாமணி முதலியார் என்பவர் எட்டுதரம் பிடித்தும் திருமுகமும் திருக்கரமும் திருவடிகளும் அதில் விழாமல் வெள்ளை வேட்டி மாத்திரம் விழுந்ததைக்கண்டு மனம் வருந்தினர். " (ிரபந்தத்திரட்டு - .திருநாவுக்கரசு பதிப்பு - பக்கம் - 127)

 வெள்ளை வேட்டி மாத்திரம் விழுந்த வள்ளற்பெருமானின் புகைப்படத்தை உங்களில் யாரேனும் பார்த்திருக்கலாம். நான் எனது பள்ளிப்பருவத்தில் இப்புகைப்படத்தை எமது தாய் தந்தையாருடன் கடலூர் அப்பாசாமி செட்டியார் இல்லத்தில் பார்த்திருக்கின்றேன். இதேபோன்று இன்னும் மூன்று அல்லது நான்கு புகைப்படங்கள் இருப்பதாகவும், அது வெவ்வேறு அன்பர்களிடம் இருப்பதாகவும் அப்பாசாமி செட்டியாரின் வாரிசுதாரர்கள் எங்களிடம் அன்று கூறினார்கள். அப்படத்தை தற்போது நினைவு படுத்தி பார்க்கும்போது எனக்கு மெய் சிலிர்க்கின்றது




           தற்போது கடலூர் அப்பாசாமி செட்டியார் இல்லத்தில் அக்குடும்பத்தினர் வாழவில்லை. அது திருமண மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. வள்ளற்பெருமான் அடிக்கடி வந்து தங்கிச் சென்ற வீடு அது. அவ்வீட்டிலிருந்த அந்த அரியப் புகைப்படம் தற்போது யாரிடம் இருக்கின்றது எனத்தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் கூறினால், அதனை மீட்டெடுத்து இவ்வுலகிற்கு மீண்டும் அந்த அற்புத நிகழ்வினை நாம் வெளிகொண்டுவர முடியும்.

           இவையல்லாமல் வள்ளற்பெருமானின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுதம் ஐயா அவர்கள் தியாசபிகல் சொசைட்டிக்கு கொடுத்த  வாக்குமூலத்தின் படி வள்ளலாரின் தோற்றம் எப்படி இருந்தது என்பதனையும் நாம் அறிந்துக்கொள்ள முடிகின்றது.

           “நடுத்தர உயரமுள்ளவராக, பார்ப்பதற்கு எலும்புக்கூடெனவே தோன்றும் மெலிந்த மேனியராக இருப்பார். ஆயினும் வலிமையுடையவர். மிக விரைந்து நடப்பார். நிமிர்ந்த தோற்றம், தெள்ளிய சிவந்த முகம், நேரான கூரிய மூக்கு, ஒளி வீசும் பெருங்கண்கள், முகத்தில் இடைவிடாத ஒரு துயரக்குறி. இறுதிக் காலத்தில் தலைமயிரை நீள வளரவிட்டிருந்தார். யோகிகளின் வழக்கத்திற்கு மாறாக ஜோடு அணிவார். உடை இரண்டு வெள்ளை ஆடைகளே. எதிலும் மிக்க அளவோடு இருப்பார். ஓய்வு கொள்வதேயில்லை. கடும் மரக்கறி உணவினர். இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முரையே உண்பார். அதுவும் சில கவளங்களே. அக்காலங்களில் சிறிது சர்க்கரை கலந்த வெந்நீரை மட்டுமே அருந்துவார். பலமுறை தம்மை சூழ்ந்திருந்தவர்களைப் பிரிந்து பிறர் கண்களுக்குப் புலப்படா வண்ணம் மறைந்துபோவார். நீண்டகாலம் அவ்வாறே பிறரியா வண்ணமிருப்பார்.”

           இவ்வாறு வள்ளற்பெருமானின் தோற்றத்தை, தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளார்கள்.   

           வள்ளற்பெருமானை தமது சிறுவயதில் நேரில் கண்டு பழகிய ஆடூர் சபாபதி சிவாச்சாரியார் அவர்களின் பேத்தி அவர்கள், தாம் கண்ணுற்ற வள்ளலாரைப் பற்றி திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களிடம் கூறியதை, வாரியார் சுவாமிகள் தமது சுயசரிதையில் இவ்வாறு எழுதியிருகின்றார்,




 வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன்.

அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன். ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத்துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணேகுட்டிப்பெண்ணேஎன்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்என்றார். இதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சியும் அதிசயமும் அடைந்தேன்”.

இவ்வாறு வள்ளலாரின் உடம்பு பொன்னுடம்பு என்பதனை வாரியார் சுவாமிகளும் பதிவு செய்துள்ளார்கள்.

வள்ளற்பெருமானின் தோற்றத்தைப் பற்றி நாம் இதுகாறும் கண்டோம். தற்போது அவரது குணம் என்ன வெனக் காண்போம்.

 வள்ளற்பெருமானின் குணங்களாக நாம் அவர் பாடிய திருவருட்பா நூலிலிருந்தும், அவர் அடைந்த நிலைகளிலிருந்தும் நிறைய காணலாம். நாம் ஏற்கனவே சிவபெருமானின் குணங்களாக எண்குணங்களை கண்டோம். அது போல வள்ளற்பெருமானும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குணங்களாக கீழே உள்ள பாடலை பாடியருளியுள்ளார்கள். திருவருட்பா ஆறாந்திருமுறையில் பதி விளக்கம் என்னும் தலைப்பில் அடங்கிய 13 பாடல்களில் அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வரின் குணங்களை மிக அருமையாக பாடிய்ருளியுள்ளார்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தனிக்கடவுள் என இங்கே அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். இங்கே நாம் ஒரு உதாரணத்திற்காக 12-ஆம் பாடலை மட்டும் காண்போம். இப்பாடலில் மட்டும் மொத்தம் 13 குணங்கள் உள்ளதாக நாம் அறிகின்றோம்.

 இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார்

குணங்கள் ஏதுமிலார்

தத்துவங்கள் ஏதுமிலார்

மற்றோர் செயற்கை இல்லார்

பிறப்பில்லார்

இறப்பில்லார்

யாதும் திரிபில்லார்

களங்கம் இல்லார்

தீமை ஒன்றும் இல்லார்

வியப்புற வேண்டுதல் இல்லார்

வேண்டாமை இல்லார்

மெய்யே மெய்யாகி எங்கும் விளங்குவார்

 இன்பமயமாய் உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபைதனில் ஓங்குவார்

 என தாம் கண்ட தனிக்கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குணங்களாக குறிக்கின்றார். அப்பாடல் இதோ

 இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் குணங்கள்

          ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்

செயற்கை இல்லார் பிறப்பில்லார் இறப்பில்லாஅர் யாதும்

          திரிபில்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார்

வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்

          மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய்

உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபைதனிலே

          ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.




 சரி, நாம் இப்போது வள்ளற்பெருமானின் குணங்கள் என்ன எனக் காண்போம். பரலோகத்தில் இருக்கும் சிவபெருமானின் எண் குணங்களும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பல்வேறு குணங்கள் யாவும் இல்லை இல்லை என்றே பெரும்பாலும் வர்ணித்திருக்கின்றார்கள். ஆனால் இகலோகத்தில் வாழும் வள்ளலார், எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராக இருக்கின்றார். அதனை யாம் ஒரு பதிகமாக பாடியுள்ளோம். நாம் தற்போது அதனை பார்போம் வாருங்கள்.   

 பெரும்பதி விளக்கம்

 கரமிரண்டும் கட்டியே புலணைந்தும் கட்டுகின்ற    

          குண முடையோன் பசிஎனும் கொடிய

நரக உலகில் உணவளிக்கும் புண்ணிய

          நிறைகுண முடையோன் சுத்த சன்மார்க்க

உரமளித்து மனிதரை இறையாக்கும் சித்தி     

          உடைய குணமுடையோன் அருள் நிறை       

இரக்கமே குணமாய்க் கொண்டு இவ்வுலகில்

          இறவாதேக மெடுத்த இராமலிங்க பிள்ளையே.

 

 காவியாம் உலகில் வெள்ளுடைக் கட்டிக்

          கருணைநிறை குண முடையோன் மத

காவியம் எல்லாம் மண்மூடிப் போகதிருக்

          குறளேதன் குணமுடையோன் உலகரை உரக்கக்

கூவியழைத்து சங்கம் சார்என இரக்கத்தால்

          கதறும் குணமுடையோன் பிற உயிர்களின்

ஆவிகொலை யுறக்கண்டு நடுங்கி இளைத்து

          உயிரிரக்க குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

இறைவனுக் கோரிரக்கம் கற்பித்து மதம்

          ஒன்றில்லா குணமுடையோன் உடம் பெனும்

குறையினை முத்தேக மாக்கி நித்திய

          கதிபெற்ற குணமுடையோன் அத்து வித

நிறைதனில் இறைவனென தானும் ஓங்கி

          நிற்கின்ற குணமுடையோன் பேசும் பொய்

மறைக ளெல்லாம் இறந்தன இறந்தனவென

          மீளும் குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

இயற்கை மலமூன்றும் இரக்கத்தால் நொடியில்      

          அகற்றும் குணமுடையோன் அடி முடியெனும்

மயக்கந் தவிர்த்து மாண்புறவே கண்டிட்ட

          மாசறு குணமுடையோன் அந்தோ உலகெலாம்

வியக்க இறைவனின் முதல்மகன் இவனென

          வாய்மை குணமுடையோன் இரக்கமே உருவாய்

இயங்க சுத்தசன்மார்க்க தயவால் ஓங்கி

          உத்தம குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

உத்தரஞான சிதம்பரம் வந்தால் என்றுவந்தாயென

          உணவளிக்கும் குணமுடையோன் குறை தீர

பத்திகொண்டு காண வந்தால் வாஎன்றுகுறை

          போக்கும் குணமுடையோன் என்றும் உலகோர்

மத்தியில் நலமோங்க மகாமந்திரம் ஓதும்

          மங்கள குணமுடையோன் மரணம் அதை

சத்தியமாய் தடுக்கும் சுத்த சன்மார்க்கஞ்

          சார்ந்த குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

இடுகாடு செல்லாது யாவர்க்கும் சித்திவளாக

          இடங் கொடுக்கும் இரக்க குணமுடையோன்

அடுத்தடுத்து இறந்தோறெல்லாம் எழுந்திடும்

          அற்புதம் புரியவரும் அதீத குணமுடையோன்

நடுக்கண் திறந்து அண்டமெல்லாம் கண்டங்கே

          நடனஞ் செய்யும் இறை குணமுடையோன்

விடுத்ததினால் வந்த இலாபத்தால் ஐந்தொழில்

          வன்மை குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

          வன்புலால் உணவுடன் மிருகப் பாலையும்

                   விட்டவர்க்கே நின்று அருளும் குணமுடையோன்

          நன்மக்கள் அகஇனத்தாருடன் சங்கம் வைத்து

                   நித்தமும் கூடிக் குலாவும் குணமுடையோன்

          புன்மக்கள் புறஇனத்தாரை வம்மின் இங்கேவெனப்

                   பேசி நம்மவரென ஆக்கும் குணமுடையோன்

          தன்னருள் ஈந்து இன்சொல்பேசி யார்க்கும்

                   தந்தை குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

சைவக் கடவுள் சிவன்முதற் அனைத்து

          சமயத் தெய்வங்களை அருளும் குணமுடையோன்

உவப்புடன் தனிக்கடவுள் கண்டதனை யார்க்கும்

          உத்தரக் கடவுளென வணங்கும் குணமுடையோன்

நவநிலை எல்லாம் தனிக்கடவுளின் ஓரணு    

          நிலையே என தெளிந்த குணமுடையோன்

தவத்திலே பெற்ற அருட்பெருஞ் ஜோதியை

          தனிஎனுங் குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

உயிரைக் கொல்லும் சூலம்சிலுவை முதற்கொண்ட

          ஆயுத தெய்வங்களை தவிர்க்கும் குணமுடையோன்

பயின்ற சமயமத வேதங்களெல்லாம் பெரும்

          பாழென அருட்பா அருளும் குணமுடையோன்

வயிற்றுக்கு தாவர உணவளிப்பவரை எல்லாம்

          வல்லான் இவனென ஏற்றும் குணமுடையோன்

பயிர்வாடியதுக் கண்டு தானும் வாடும்மனிதப்

          பண்பு குணங்கொண்ட இராமலிங்க பிள்ளையே.

 

அருட்ஜோதி ஆனேனென்று தன்னிலை எதுவென

          அறைந்த இறைவனே தானெனும் குணமுடையோன்

ஒருமைநிலை ஓங்கி நானிருக்கும் இடத்தில்வந்து             

          அமர்ந்த இறையோடு இறையாகும் குணமுடையோன்

இருமை இனியில்லை எனவே வள்ளலுனை

          இருகைகூப்பி வணங்க தடையகற்றும் குணமுடையோன்

கருவுரு உயிர்களெல்லாம் இறவாநிலை யளிக்கும்

          குணங்கொண்ட சிதம்பர இராமலிங்க பிள்ளைய

          மேற்கண்ட பதிகத்தின் மூலம் இகலோகத்தில் விளங்கும் பதியாகிய எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குணங்களை கண்டோம்.

          இதுவரை நாம் சிவபெருமான் மற்றும் வள்ளற்பெருமானின் தோற்றம் அதாவது வடிவம் மற்றும் குணங்கள் பற்றி கண்டோம். இவ்விருவரின் தோற்ற குணங்களை நாம் இப்போது சிறிது ஆராய்ந்து இருவரில் யார் உலகியல் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றார்கள் என்பதைக் காண்போம் வாருங்கள்.

சிவபெருமானும் வள்ளற்பெருமானும் என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே சிவபெருமானின் தத்துவங்கள் சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருப்பதாக விளக்கியுள்ளோம். அதே கருத்து இங்கேயும் பொருந்தக்காணலாம்.

அதாவது சிவபெருமான் பெருமை பெறும் எண்குணத்தான் என வர்ணனை செய்துவிட்டு, அவருடைய செயல்கள் எல்லாம் அதற்கு மாறாக இருப்பதை, அவருடைய காதல் திருமண நிகழ்ச்சியினை காணும்போது நீங்கள் அறிந்துகொள்ளலாம். மேலும் சிவபுராணங்களை படித்தால் பல்வேறு சிவனின் செய்கைகள் அவரது குணத்திற்கு மாறாக் இருக்கும். எனவே சிவனின் குணம் என மேலாக வர்ணனை செய்ததெல்லாம் பொய் எனப்படுகின்றது.

உதாரணமாக சைவ திருக்கோயில் என்றாலே அது சிதம்பரம்தான். அங்கே என்ன நடந்தது எனப் பார்ப்போம்.

திருஞானசம்பந்தர் பொருள் திரட்டிப் பசுக்களை கொன்றுஆங்காங்கு    வேள்வி புரிந்ததையும் அக்கொலை வேள்வியைத் தில்லைவாழ் சிவபெருமானும் அடியார்களும் ஆசீர்வித்ததாகவும்,

 

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மைய றீர்வாரே.

 எனப்பாடியுள்ளார். இப்பரிதாப செயலைக்கண்டு தில்லை திருவாய்மொழி பாடிய புலவர்

         'பெரிதாய முக்தியைப் பல்லோர்க்கருளும் நற்பிள்ளை பெற்றும்

அரிதாய பொன்கொண்டும் சீர்காழி அந்தணனாம் கிழவன்

பரிதாபமின்றிப் பசுவதைத்தான் என்ன பாவம் அந்தோ

எரிதாங்கி நின்றஎன் அப்பனே...'

 சிதம்பரத்தில் உள்ள சிவபெருமானை வணங்க, திருஞானசம்பந்தர் பசுவினை பலிகொடுத்த நிகழ்வினையும், பசுவினை பலிகொடுத்து சிவனை வணங்கும் சிறப்போர் வாழும் தில்லை எனவும் போற்றி பாடியுள்ளார் திருஞான சம்பந்தர். அதனை ஒரு வேறு புலவர்அது பாவச் செயல்எனப் பாடியதையும் காண்கின்றோம். இன்றும் சிவ ஆலயங்களில் மறைவாக பலி கொடுப்பதை கேள்வியுறுகின்றோம்.

 மேலும் சைவமென்பது பெயரில்தான் உள்ளதே தவிர, சைவ சமயத்தை மேற்கொள்ளும் ஒரு சிலரைத் தவிர மற்றோர் யாவரும் அசைவராகவே உள்ளனர். இதனை சிவ சமயம் கண்டிக்கவில்லை. கட்டாயப்படுத்தவில்லை. இன்றும் சைவ சமயத்தை உபதேசிக்கும் யாவரும் புராணக் கதைகளை பேசிவிட்டு செல்கின்றனரே தவிர, தம் மக்களை தாவர உணவிற்கு மாறும்பாடி கட்டாயப்படுத்தும் சூழ்நிலை இல்லாததைக் காண்கின்றோம். கட்டாயப்படுத்தவும் முடியாது. ஏனெனில் சைவத்தின் பன்னிரு திருமுறைகளும் தாவர உணவினைத்தான் உண்ண வேண்டும் என மக்களை ஒழுக்கத்திற்கு வரும்படி பாடவில்லை. ஜீவகாருண்ய ஒழுக்கமின்றி பக்தி மார்க்கமுடைய எந்த மதமும் சமயமும் சூதாக சொல்லப்பட்டதுதான்.

 மாறாக வள்ளற்பெருமானின் செய்கைகளே அவரது குணங்களாக இருப்பதை நாம் தெளிவாகக் காணலாம். சிவபெருமான் போன்று புலியைக் கொலை செய்துஅதன் தோலை உரித்து ஆடையாக அணியவில்லை. வெறும் வெள்ளாடை மட்டுமே அவரது ஆடை.. சிவபெருமான் போன்று மண்டை ஓட்டு மாலை அணிந்து விகாரப்படவில்லை. மாறாக பாமாலை அணிந்துக்கொண்டார். இவ்வாறு ஒப்புமை நோக்கில் சிவபெருமானும் வள்ளற்பெருமானும் இருவேறு துருவங்களாக இருப்பதை நாம் காணலாம்.

 வருவார் அழைத்து வாடி என சிதம்பரத்தில் உள்ள சிவபெருமானை வள்ளலார் உத்தரஞான சிதம்பரத்திற்கு அழைக்கின்றார். அந்த சிவன் உத்தரஞான சிதம்பரத்திற்கு வந்தாலும், ஞான சபையுள் புக முடியாது. ”கொலை புலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்என்ற வள்ளற்பெருமானின் கட்டளையானது சிவபெருமானை உள்ளே செல்ல விடாது. வெளியிலிருந்து வணங்கிக் கொண்டு தன் நிலையினை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். ஞான சபையுள் வந்து இடுக்கில்லாமல் வந்து ஆட முடியாது. எனினும் தற்காலத்தில் புராணங்கள் எல்லாம் எழுவதில்லை. எப்போதோ செய்த செய்கைகளை இனியும் தொடராமல் சிவன் சுத்த சன்மார்க்கத்திற்கு வந்திருந்தால், ஞான சபைக்குள் செல்லமுடியும். அவ்வாறுதான் சென்றிருக்கின்றார். இனி ஒரு புராணம் எழுத யாரும் முன்வர மாட்டார்கள். அப்படி எழுதினால் சிவன் சுத்த சன்மார்க்கத்திற்கு வந்துவிட்டதாகவும், அவன் சொரூப நிலையில் மட்டுமே காரியப்படுவான் எனவும், மனிதனைப்போன்று கை கால்களுடன், குடும்பம் குட்டியுடன் இருக்க மாட்டான் என புராணங்களை எழுதுங்கள்.




 அதைவிடுத்து சிதம்பர சிவன்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என வள்ளலார் பாடியுள்ளார் என இரு துருவங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியினை செய்ய வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். இறுதியாக சுத்த சன்மார்க்க பெரும்பதியை வரவேற்போம் வாருங்கள்,

 இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுளர், தேவர், அடியார், யோகி, ஞானி முதலானவர்களில் ஒருவரல்ல. இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும், எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும், எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி.




 இவ்வாறு தனிக்கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பெரும்பதி என, திருவருட்பா உரைநடை நூல் பக்கம் 547-ல் உரைக்கின்றார் வள்ளற்பெருமான். எனவே நாம் உண்மை உணர்ந்து சுத்த சன்மார்க்கம் சார்வோம். நன்றி.

 அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி     

T.M.RAMALINGAM

Whatsapp No.+91 9445545475

vallalarmail@gmail.com