Tuesday, December 6, 2016

டிஜிட்டல் புரட்சி

டிஜிட்டல் புரட்சி

உலக வரலாற்றில், இந்தியாவை எல்லா நாடுகளும் திரும்பி பார்க்க வைத்த நாள் நவம்பர் 08-ஆம் தேதி. அன்றைய தினம் இந்திய ரிசர்வ் வங்கியானது தனது ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு தடைவிதித்ததுதான் அதற்கு காரணம். அதே நவம்பர் 08-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவும் வெளிவந்தது. ‘டொனால்ட் ட்ரம்ப்’ (Donald Trump) அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



        நவம்பர்-08-ஆம் தேதியில் உலக அளவில் நடைபெற்ற இவ்விரண்டு முக்கியத்துவம் வாய்ந்த மாறுதல்களை உலகமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி என உலகமே எதிர்ப்பார்த்திருந்தது. ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்ததை யாராலும் ஜீரனிக்கமுடியவில்லை. இன்றும் அமெரிக்க மக்களில் பலர் ‘டொனால்ட் ட்ரம்ப்’ அவர்களின் நிர்வாகம் எப்படியிருக்குமோ? என்ற அச்சத்தில் அவரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

        நமது இந்தியாவிலோ, பணத்தின் மூலம்    புரட்சியை   ஏற்படுத்தினார்    நமது இந்திய பிரதமர் திரு. ‘நரேந்திர மோடி’ அவர்கள். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் திரும்பப்பெறப்படுகின்றது. அதற்கு பதில் வேறு வடிவ பணத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற பிரதமரின் அறிவிப்பு மக்களிடையே பெருங் குழப்பத்தையும், ஒரு சிலரிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கருப்புப் பண பதுக்கல்களையும், கள்ள பணத்தையும் ஒழிக்கவே இந்த முடிவினை எடுத்திருப்பதாக அவர், தம் மக்களிடையே கூறினார்.

        டிசம்பர் – 31 வரை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களை மாற்றுவதற்கான காலவரையினையும் விதித்து, இன்னும் அதற்கான வழிமுறைகளை தினந்தோறும் அறிவித்தப்படியே இருக்கின்றது மத்திய அரசு. இதனால், ‘முதலைகள் வசிக்கும் குளத்தில் நீர் வற்றியதால், அம்முதலைகள் எல்லாம் நிலத்தில் நடமாடி தமது மூச்சினை விடுவதுபோன்று’ அமைந்தது கருப்பு பண முதலைகளின் நிலை. கள்ள பண வியாபாரிகளோ முற்றிலும் சீரழிந்தனர். தங்களது கள்ள பணத்தை வீதிகளிலும், ஓடைகளிலும் கொட்டி தங்களது எதிர்ப்பினை காட்டுகின்றனர். கள்ள பணம் முற்றிலும்,  கருப்பு  பணம்  90 சதவிகிதம் முற்றிலும் முடங்கியது உண்மை. இப்படிப்பட்ட ஒரு அறிவுசார் முடிவினை எடுத்தமைக்கு நமது பிரதமரை சன்மார்க்கிகளான நாம் பாராட்டியே ஆகவேண்டும், பாராட்டுகின்றோம்.

        இதற்கிடையில் சாமானிய மக்களாகிய நாம் படுகின்ற இன்னல்களும் அதிகம். நமது பிரதமர் இன்னும் சரியாக திட்டமிட்டிருந்து இதனை செயல்படுத்தியிருந்தால் தவறுகள் ஏதும் செய்யாத சாமானிய, நடுத்தர, அடித்தட்டு மக்கள்களாகிய நாம் பாதித்திருக்கமாட்டோம். ஒன்றை தடைசெய்யும்போது அதற்கு மாற்று என்ன? என்பதனையும் அதற்கான முன்னேற்பாட்டினையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு களம் கண்டிருந்தால் இத்திட்டம் இன்னும் நாடு முழுதும் வெற்றிபெற்றிருக்கும். இந்நாட்டின் 90 சதவிகித மக்களை வங்கி வாசலிலும் ஏ.டி.எம். வாசலிலும் நிற்க வைக்கும் ஒரு மோசமான நிலையினை தவிர்த்திருக்கலாம். முதலைகள் உள்ள குளத்து நீரினை வற்றவைத்தது உண்மையில் சாதனைதான். ஆனால் அதே நேரத்தில் சாதாரண ஆடு மாடுகள்கூட நீருக்காக ஏங்கும் நிலையினை கொண்டுவந்தது உண்மையில் மாபெரும் வேதனைதான். அதனை தவிர்த்திருக்க வேண்டும் இந்த அரசு.

        தற்போதும் ஒன்றும் முழுகிவிடவில்லை. இந்த பணத்தாட்டுப்பாட்டை வேறுவிதமாக சமாளிக்க முயல்கின்றது நமது மத்திய அரசு. அதாவது பணத்தின் மூலம் நடைபெறும் வர்த்தகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் வழியிலே செய்ய மக்களுக்கு அறிவுறுத்துகின்றது. இந்த அறிவுறுத்தல் தற்காலிகாம இல்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே நமது கனவு. இப்படிப்பட்ட அறிவுறுத்தல் நமது நாட்டிற்கு மிகமிக நல்லது. இதனால் இனி கருப்பு பணம் என்கின்ற பேச்சிற்கே இடமில்லாமல் செய்துவிடமுடியும். லஞ்சம் முழுவதும் ஒழியும். அதனால் இப்போது இருக்கும் நிலையே நீடிக்க வேண்டும். அதாவது பணமே அச்சடிக்க வேண்டாம். பணத்தை விநியோகம் செய்ய வேண்டாம். ஒன்று, ஐந்து, பத்து, இருபது மற்றும் நூறு ஆகிய பரிமாணங்களில் மட்டுமே பணத்தை விநியோகிக்க வேண்டும். ஐயாயிரம் ரூபாய்க்கு மேற்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே நடைபெறவேண்டும்  என்ற கட்டுப்பாட்டை சட்டமாக இயற்றி அதனை நடைமுறைக்கு உடனே கொண்டுவர வேண்டும்.

        அதற்கு ஏதுவாக இதுவரை வங்கியில் கணக்கு வைத்திருந்து, டெபிட் கார்ட் வாங்காத அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் விண்ணப்பத்தை எதிர்பார்க்காது, உடனடியாக அவர்ளது முகவரிக்கு டெபிட் கார்டினை அந்தந்த வங்கிகள் அனுப்பிவைக்க வேண்டும். அதன் கூடவே நெட்   பேங்கிங்    என்கிற    சேவைக்கான யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்ட் ஆகியவைகளையும் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் அதனுடன் வங்கிக்காசோலையினையும் அவர்களது பெயரில் அனுப்பி வைக்கவேண்டும். அதாவது காசோலை புத்தகம், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் ஆகியவைகள் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும். பணம் அடிப்பதை ரிசர்வ் வங்கி விட்டுவிட்டு இந்த சேவையினை செய்ய முற்பட வேண்டும். இதனால் மக்கள் நீரினுள் மூச்சுவிட முடியாமல் வெளியில் முட்டியடித்துக்கொண்டு வருவதைப் போன்று இயல்பாகவே டிஜிட்டல் முறைக்கு மாறிவிடுவார்கள். எல்லா பரிவர்த்தனைகளும் பணம் இன்றி நடக்க ஆரம்பித்துவிடும். இப்பொழுதே ‘பணம்’ செய்யும் வேலையினை ‘டிஜிட்டல்’ செய்ய ஆரம்பித்துவிட்டது. இதுவரை தொழிலாளர்களின் ஊதியங்களை பணமாக கொடுத்தவர்கள் எல்லாம் வேறு வழி இல்லாததால், ஒருவித பயத்துடன் தற்போது வங்கிகளின் மூலம் ஊதியங்களை டிஜிட்டலில் அளிக்கத் தொடங்கிவிட்டனர். பொய்க்கணக்கு எல்லாம் இனி செல்லுபடியாகாது என பல முதலாளிகள் நேர் வழிக்கு வந்துவிட்டனர். எனவே பணத் தாள்களை முற்றிலுமாக முடக்க வேண்டும். (ஒன்று, ஐந்து, பத்து, இருபது, நூறு தவிர) வீதியில் கீரை விற்கும் பாட்டிகள்கூட இனி தங்களது விற்பணை வரவுகளை ஸ்வைப்பிங் மெஷின் மூலம் பெற வேண்டும். அதற்காக பெட்டிக்கடைகளில் கூட இந்த ஸ்வைப்பிங் மெஷினை விற்பணைக்கு கொண்டுவர வேண்டும். வியாபாரிகள் மற்றும் தேவைப்படுபவர்கள் இந்த ஸ்வைப்பிங் மெஷினை வாங்கி அதனை வங்கியின் மூலம் தங்களது வங்கிக்கணக்கில் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒருவருக்கு ஒருவர் கடன் கொடுக்கவும் வாங்கவும் இயலும். அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாகிவிடும். இதனால் சட்ட விரோதமான நடவடிக்கைகள் முற்றிலும் நின்றுவிடும். நமது முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஐயா கண்ட கனவு 2020-க்குள் நிறைவேறிவிடும். இந்தியா வல்லரசாகிவிடும். அதன் பலன் முழுவதும் நமது இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடியினை சென்றடையும்.


        இதனை விடுத்து மீண்டும் பணத்தாள்களை பழையபடி அச்சடித்து பொதுமக்களிடம் வழங்கினால் மீண்டும் கருப்பு முதலைகள் தங்களது குட்டைகளில் நீரினை   நிரப்பிக்கொள்ளவே     முயல்வர் கள்ள பணமும் வந்துக்கொண்டேதான் இருக்கும். மேற்காணும் நடவடிக்கை அன்றி வேறு என்னவகை சட்டம் இயற்றினாலும் அது அம்முதலைகளை கட்டுப்படுத்த இயலாது. இந்திய மக்களாகிய நாம் டிஜிட்டலுக்கு மாறுவோம். நேர்மைக்கு வழிவிடுவோம். நேர்மையாக வாழ்வோம்.  இந்திய அரசாகிய நாம் வரிகளை குறைப்போம், விலைவாசியினை குறைப்போம், டோல் (சாலை பயன்பாட்டுக் கட்டணம்) வரியினை நீக்குவோம், பெட்ரோல், டீசலுக்கு முற்றிலும் வரியில்லை என்கிற நிலையை எடுப்போம்.  

        அடுத்த அமெரிக்க அதிபராக வெற்றிபெற்ற திரு.டொனால்ட் ட்ரப்ம் அவர்களை விட, நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையே இவ்வுலகம் நவம்பர் 08-ஆம் தேதி அன்று திரும்பிப்பார்த்தது. காரணம் ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிற மாபெரும் புதிய புரட்சி இயக்கம் துவங்கிவிட்டது. -TMR

















மாரணம்

மாரணம்

                        பாரப்பா வெள்ளியினால் தகடு தட்டி
                        பக்குவமாய் நசிமயவ என்று மாறி
                        நெடிதான நோய்களுக்கு கட்டினாக்கால்
                        மாரப்பா நோய்கள் எல்லாம் மாரணித்து போகும்
                        வஞ்சகருஞ் சத்துருவும் வகையுள்ளோரும்
                        வேரப்பா அற்றமரம் போலே போவோர்
                        மெய்யான மாரணத்தை விரும்பிச் செய்யே.

        வெள்ளியினால் ஆன தகட்டில் ‘நமசிவய” என்ற மந்திரத்தை மாற்றி “நசிமயவ” என்று எழுதிக்கொண்டு அந்த எந்திரத்தை நீண்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டிக்கொள்ள வேண்டும். அதற்கு முன்னர் மாரண மந்திரமான “ஓம் சிவயநம சவ்வும் ஸ்ரீயும் அரிஓம் சுவாகா” என்பதை 1008 முறை தொடர்ச்சியாக செபிக்க வேண்டும்.

        செபித்த பிறகு அந்த யந்திரத்தினை கட்டிக்கொள்ள, நீண்ட நோய்கள் அனைத்தும் நீங்கிவிடும். அதுமட்டுமல்ல, வஞ்சகர்கள், எதிரி இவர்களைப் போன்ற தீயவர்களும் வேரற்ற மரம்போல அவர்களை விட்டு நீங்கிவிடுவார்கள். இப்படிப்பட்ட மெய்யான மாரண கலையினை விரும்பிச் செய்யுங்கள் என்று அகத்தியர் உரைக்கின்றார்.

          மாந்திரிகத்தின் அட்டகாமங்களான வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் எனும் எட்டு பிரிவுகளில் மாரணம் என்ற கலையினை நாம் மேலே கண்டோம். மாரணக் கலையில் எதிரியை மரணமுறச்செய்யும் வித்தையும் உண்டு. அவ்வித்தை நாம் மேலே கண்டது அல்ல. எனினும் நமது முன்னோர்கள் நாம் நலமுடன் வாழ சில வழிகளை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அதன் காரண காரியங்களை நாம் அனுபவித்தால் தான் அதன் உண்மை என்னவென்று தெரியும். எனவே மேலே கண்ட மாரண கலையினை நாம் தெரிந்துக்கொள்வோம். இதனை செய்து பார்க்கும் விஷப் பரிட்சையைத் தவிர்த்திட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.



- ஜீவபந்து ப.ந.ஸ்ரீபால்

- ஜீவபந்து ப.ந.ஸ்ரீபால்

1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை திருநெல்வேலியைச் சார்ந்த பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் என்ற கோயிலில் நடைபெற்றஎருமைக்கடா பலியை நிறுத்த பிரச்சாரம் செய்து வந்தேன்.

என்னுடைய பிரசாரத்திற்குத் திருநெல்வேலி சபை சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரும் பல அறிஞர்களும் எனக்குத் துணையாக நின்றனர். இந்தப் பலிவிலக்குப் பிரசாரத்தை எதிர்ப்பவர்களும் இருந்தனர். எங்களுக்கு எதிராகப் பிரசாரமும் செய்தனர்.

இவ்வெதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி தெய்வங்களின் பெயரால் பலியிடும் கொள்கையைப் பற்றியும் இங்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பைப் பற்றியும் மகாத்மா காந்தியடிகளுக்கும் ஜவஹர்லால் நேருஜி அவர்களுக்கும் தந்தி மூலம் அவர்கள் அபிப்பிராயங்களைக் கேட்டேன். அவ்விரு மகான்களும் தந்தி வாயிலாக அறிவு சான்ற அறிவுரைகளை அனுப்பினர்.

Sacrifice of animals in the name of religion and God is remnant of barbarism. - M.K. Gandhi
மதத்தின் பெயராலும் தெய்வத்தின் பெயராலும் பிராணிகளைப் பலியிடுதல் காட்டுமிராண்டித் தனத்தின் கையிருப்பு - காந்தி.

(கையிருப்பு என்றால் நம்மிடமுள்ள அநாகரிகப் பழக்க வழக்கங்களில் ஒழிந்தன போக மீந்திருப்பது)

I am grieved to learn that it is proposed to offer animal sacrifice in temples. I think that such sacrifices are barbarous and they degrade the name of religion. I trust that the authorities of the temple will pay heed to the sentiments of cultured people in this matter and refrain from such sacrifices. -Jawaharlal Nehru

கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கேட்க மிகவும் வருந்துகிறேன். அவ்வாறு பலியிடுதல் மிலேச்சத்தனமென்றும் மதத்திற்கு இழுக்காகுமென்றும் நான் கருதுகிறேன். இவ்விசயத்தில் கோயில் அதிகாரிகள் கற்றவர்களுடைய மனப்பான்மையைக் கவனித்து அவ்வாறு பலியிடுவதை விலக்குவார்களென்று நான் நம்புகிறேன். - நேரு

இவ்வறிவுரைகளை அச்சிட்டு நகரெங்கும் பரப்பினேன். அவ்வறிவுரைகளை அக்கோயில் தர்மகர்த்தர்களும் அறிஞர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியோடு படித்து உயிர்ப்பலியை அறவே நிறுத்தி விட்டார்கள்.

- ஜைன நெறிகளும் வள்ளலார் புரட்சியும் என்ற நூலிலிருந்து.


தம்மபதம்

தம்மபதம்

11. தமது மூத்தோரை இடைவிடாமல் மதிக்கும் பக்தி இயல்புடையவர்களுக்கு நீண்ட ஆயுள், அழகு, மகிழ்ச்சி, வலிமை
என்னும் நான்கு பண்புகளும் வளர்கின்றன (109 )

12. அனைவரும் தண்டனையைக் கண்டு பயப்படுகிறார்கள்,
அனைவரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆதலால், அனைவரையும் தம்மை போல் கருதி, கொலை செய்யாமலிருப்பீர்களாக! கொலை செய்வதையும் ஊக்குவிக்காமலிருப்பீர்களாக! (129 )

13. தனக்கெந்த நன்மையும் செய்யாத செயலினையும், தீமைமிகு செயலினையும் செய்வது மிக எளிதே; அனால் நன்மை பயப்பதையும் நல்லதையும் செய்வதற்கு உண்மையில் மிக கடினம் (163)


14. உள்நோக்கில் நிறைநிலை உற்றவர், தம்மத்தில் நிலைத்து நிற்பவர், உண்மை உணர்ந்தவர், தன்கடன் கழித்தவர்,
இவரே மக்கட் இனிவராம். (217 )

15.புத்தர்கள் வழியை மட்டுமே காட்டுவார்கள் (276)

16.உண்மையாகவே, தியானத்தினால் தெள்ளறிவு (ஞானம்) உதிக்கிறது. தியானமில்லை என்றால், ஞானம் தேய்கிறது.
பெறுவதும் இழப்பதுமாகிய இந்த இருவழிப் பாதையை அறிந்துக்கொண்டு, ஞானத்தை அதிகரிக்கும் வழியில் ஒருவர் தன்னையே வழிநடத்திக் கொள்ளவேண்டும். (282)

17.தம்மத்தின் தானம் அனைத்து தானங்களையும்   வெல்லக்கூடியது. தம்மத்தின்  சுவை அனைத்து சுவைகளையும் வெல்லக்கூடியது. தம்மத்தின் மகிழ்ச்சி அனைத்து இன்பங்களையும் வெல்லக்கூடியது. விருப்பின் (ஆசையின்) அழிவு அனைத்து துன்பங்களையும் வெல்லக்கூடியது.

18.பகைவர் இடத்திலும் நட்புடனிருத்தல், வன்முறைக் கிடையிலும் அமைதியாயிருத்தல், பற்றுள்ளோர் இடையிலும் பற்றற்றிருத்தல் 
போன்ற குணவானே உன்னத மனிதர் என்பேன். (406)


பத்து கன்னியர்

பத்து கன்னியர்

பத்து கன்னியர் உவமை இயேசு கூறிய உவமையாகும். இதில் இயேசு தன்னை மணவாளனாகவும் கிறிஸ்தவரை கன்னிகையாராகவும், பரலோக இராச்சியத்தை கல்யாண வீடாகவும் உவமானப்படுத்துகிறார். மத்தேயு 25:1-12 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரலோக இராச்சியம் தங்கள் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தி இல்லாதவர்களுமாக இருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் விளக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் விளக்குகளோடு தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டு போனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுஇரவில்: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் கேட்டது. அப்பொழுது, அந்தச் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப் சென்றபோது மணவாளன் வந்துவிட்டார், ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடு கூடக் கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் கதவும் அடைக்கப்பட்டது. பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். அதற்கு மணவாளன்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இது இயேசுவின் இரண்டாம் வருகையை குறித்து சொல்லப்பட்ட உவமையாகும். அவர் வரும் போது அவரை எதிர் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பது பிரதான கருத்தாகும். இங்கு மணவாளன் இயேசுவாகும் கல்யாணவீடு பரலோக இராச்சியமாகும். மேலும் விளக்கு மனிதரது ஆத்துமாவையும் எண்ணெய் தயார் நிலையையும் குறிக்கிறது.