Tuesday, December 6, 2016

டிஜிட்டல் புரட்சி

டிஜிட்டல் புரட்சி

உலக வரலாற்றில், இந்தியாவை எல்லா நாடுகளும் திரும்பி பார்க்க வைத்த நாள் நவம்பர் 08-ஆம் தேதி. அன்றைய தினம் இந்திய ரிசர்வ் வங்கியானது தனது ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களுக்கு தடைவிதித்ததுதான் அதற்கு காரணம். அதே நவம்பர் 08-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவும் வெளிவந்தது. டொனால்ட் ட்ரம்ப்’ (Donald Trump) அவர்கள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



        நவம்பர்-08-ஆம் தேதியில் உலக அளவில் நடைபெற்ற இவ்விரண்டு முக்கியத்துவம் வாய்ந்த மாறுதல்களை உலகமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கே வெற்றி என உலகமே எதிர்ப்பார்த்திருந்தது. ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்ததை யாராலும் ஜீரனிக்கமுடியவில்லை. இன்றும் அமெரிக்க மக்களில் பலர் டொனால்ட் ட்ரம்ப்அவர்களின் நிர்வாகம் எப்படியிருக்குமோ? என்ற அச்சத்தில் அவரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

        நமது இந்தியாவிலோ, பணத்தின் மூலம்    புரட்சியை   ஏற்படுத்தினார்    நமது இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிஅவர்கள். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் திரும்பப்பெறப்படுகின்றது. அதற்கு பதில் வேறு வடிவ பணத்தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற பிரதமரின் அறிவிப்பு மக்களிடையே பெருங் குழப்பத்தையும், ஒரு சிலரிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கருப்புப் பண பதுக்கல்களையும், கள்ள பணத்தையும் ஒழிக்கவே இந்த முடிவினை எடுத்திருப்பதாக அவர், தம் மக்களிடையே கூறினார்.

        டிசம்பர் 31 வரை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களை மாற்றுவதற்கான காலவரையினையும் விதித்து, இன்னும் அதற்கான வழிமுறைகளை தினந்தோறும் அறிவித்தப்படியே இருக்கின்றது மத்திய அரசு. இதனால், ‘முதலைகள் வசிக்கும் குளத்தில் நீர் வற்றியதால், அம்முதலைகள் எல்லாம் நிலத்தில் நடமாடி தமது மூச்சினை விடுவதுபோன்றுஅமைந்தது கருப்பு பண முதலைகளின் நிலை. கள்ள பண வியாபாரிகளோ முற்றிலும் சீரழிந்தனர். தங்களது கள்ள பணத்தை வீதிகளிலும், ஓடைகளிலும் கொட்டி தங்களது எதிர்ப்பினை காட்டுகின்றனர். கள்ள பணம் முற்றிலும்,  கருப்பு  பணம்  90 சதவிகிதம் முற்றிலும் முடங்கியது உண்மை. இப்படிப்பட்ட ஒரு அறிவுசார் முடிவினை எடுத்தமைக்கு நமது பிரதமரை சன்மார்க்கிகளான நாம் பாராட்டியே ஆகவேண்டும், பாராட்டுகின்றோம்.

        இதற்கிடையில் சாமானிய மக்களாகிய நாம் படுகின்ற இன்னல்களும் அதிகம். நமது பிரதமர் இன்னும் சரியாக திட்டமிட்டிருந்து இதனை செயல்படுத்தியிருந்தால் தவறுகள் ஏதும் செய்யாத சாமானிய, நடுத்தர, அடித்தட்டு மக்கள்களாகிய நாம் பாதித்திருக்கமாட்டோம். ஒன்றை தடைசெய்யும்போது அதற்கு மாற்று என்ன? என்பதனையும் அதற்கான முன்னேற்பாட்டினையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு களம் கண்டிருந்தால் இத்திட்டம் இன்னும் நாடு முழுதும் வெற்றிபெற்றிருக்கும். இந்நாட்டின் 90 சதவிகித மக்களை வங்கி வாசலிலும் ஏ.டி.எம். வாசலிலும் நிற்க வைக்கும் ஒரு மோசமான நிலையினை தவிர்த்திருக்கலாம். முதலைகள் உள்ள குளத்து நீரினை வற்றவைத்தது உண்மையில் சாதனைதான். ஆனால் அதே நேரத்தில் சாதாரண ஆடு மாடுகள்கூட நீருக்காக ஏங்கும் நிலையினை கொண்டுவந்தது உண்மையில் மாபெரும் வேதனைதான். அதனை தவிர்த்திருக்க வேண்டும் இந்த அரசு.

        தற்போதும் ஒன்றும் முழுகிவிடவில்லை. இந்த பணத்தாட்டுப்பாட்டை வேறுவிதமாக சமாளிக்க முயல்கின்றது நமது மத்திய அரசு. அதாவது பணத்தின் மூலம் நடைபெறும் வர்த்தகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் வழியிலே செய்ய மக்களுக்கு அறிவுறுத்துகின்றது. இந்த அறிவுறுத்தல் தற்காலிகாம இல்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே நமது கனவு. இப்படிப்பட்ட அறிவுறுத்தல் நமது நாட்டிற்கு மிகமிக நல்லது. இதனால் இனி கருப்பு பணம் என்கின்ற பேச்சிற்கே இடமில்லாமல் செய்துவிடமுடியும். லஞ்சம் முழுவதும் ஒழியும். அதனால் இப்போது இருக்கும் நிலையே நீடிக்க வேண்டும். அதாவது பணமே அச்சடிக்க வேண்டாம். பணத்தை விநியோகம் செய்ய வேண்டாம். ஒன்று, ஐந்து, பத்து, இருபது மற்றும் நூறு ஆகிய பரிமாணங்களில் மட்டுமே பணத்தை விநியோகிக்க வேண்டும். ஐயாயிரம் ரூபாய்க்கு மேற்படும் பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே நடைபெறவேண்டும்  என்ற கட்டுப்பாட்டை சட்டமாக இயற்றி அதனை நடைமுறைக்கு உடனே கொண்டுவர வேண்டும்.

        அதற்கு ஏதுவாக இதுவரை வங்கியில் கணக்கு வைத்திருந்து, டெபிட் கார்ட் வாங்காத அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் விண்ணப்பத்தை எதிர்பார்க்காது, உடனடியாக அவர்ளது முகவரிக்கு டெபிட் கார்டினை அந்தந்த வங்கிகள் அனுப்பிவைக்க வேண்டும். அதன் கூடவே நெட்   பேங்கிங்    என்கிற    சேவைக்கான யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்ட் ஆகியவைகளையும் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் அதனுடன் வங்கிக்காசோலையினையும் அவர்களது பெயரில் அனுப்பி வைக்கவேண்டும். அதாவது காசோலை புத்தகம், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் ஆகியவைகள் எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும். பணம் அடிப்பதை ரிசர்வ் வங்கி விட்டுவிட்டு இந்த சேவையினை செய்ய முற்பட வேண்டும். இதனால் மக்கள் நீரினுள் மூச்சுவிட முடியாமல் வெளியில் முட்டியடித்துக்கொண்டு வருவதைப் போன்று இயல்பாகவே டிஜிட்டல் முறைக்கு மாறிவிடுவார்கள். எல்லா பரிவர்த்தனைகளும் பணம் இன்றி நடக்க ஆரம்பித்துவிடும். இப்பொழுதே பணம்செய்யும் வேலையினை டிஜிட்டல்செய்ய ஆரம்பித்துவிட்டது. இதுவரை தொழிலாளர்களின் ஊதியங்களை பணமாக கொடுத்தவர்கள் எல்லாம் வேறு வழி இல்லாததால், ஒருவித பயத்துடன் தற்போது வங்கிகளின் மூலம் ஊதியங்களை டிஜிட்டலில் அளிக்கத் தொடங்கிவிட்டனர். பொய்க்கணக்கு எல்லாம் இனி செல்லுபடியாகாது என பல முதலாளிகள் நேர் வழிக்கு வந்துவிட்டனர். எனவே பணத் தாள்களை முற்றிலுமாக முடக்க வேண்டும். (ஒன்று, ஐந்து, பத்து, இருபது, நூறு தவிர) வீதியில் கீரை விற்கும் பாட்டிகள்கூட இனி தங்களது விற்பணை வரவுகளை ஸ்வைப்பிங் மெஷின் மூலம் பெற வேண்டும். அதற்காக பெட்டிக்கடைகளில் கூட இந்த ஸ்வைப்பிங் மெஷினை விற்பணைக்கு கொண்டுவர வேண்டும். வியாபாரிகள் மற்றும் தேவைப்படுபவர்கள் இந்த ஸ்வைப்பிங் மெஷினை வாங்கி அதனை வங்கியின் மூலம் தங்களது வங்கிக்கணக்கில் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒருவருக்கு ஒருவர் கடன் கொடுக்கவும் வாங்கவும் இயலும். அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாகிவிடும். இதனால் சட்ட விரோதமான நடவடிக்கைகள் முற்றிலும் நின்றுவிடும். நமது முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஐயா கண்ட கனவு 2020-க்குள் நிறைவேறிவிடும். இந்தியா வல்லரசாகிவிடும். அதன் பலன் முழுவதும் நமது இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடியினை சென்றடையும்.


        இதனை விடுத்து மீண்டும் பணத்தாள்களை பழையபடி அச்சடித்து பொதுமக்களிடம் வழங்கினால் மீண்டும் கருப்பு முதலைகள் தங்களது குட்டைகளில் நீரினை   நிரப்பிக்கொள்ளவே     முயல்வர் கள்ள பணமும் வந்துக்கொண்டேதான் இருக்கும். மேற்காணும் நடவடிக்கை அன்றி வேறு என்னவகை சட்டம் இயற்றினாலும் அது அம்முதலைகளை கட்டுப்படுத்த இயலாது. இந்திய மக்களாகிய நாம் டிஜிட்டலுக்கு மாறுவோம். நேர்மைக்கு வழிவிடுவோம். நேர்மையாக வாழ்வோம்.  இந்திய அரசாகிய நாம் வரிகளை குறைப்போம், விலைவாசியினை குறைப்போம், டோல் (சாலை பயன்பாட்டுக் கட்டணம்) வரியினை நீக்குவோம், பெட்ரோல், டீசலுக்கு முற்றிலும் வரியில்லை என்கிற நிலையை எடுப்போம்.  

        அடுத்த அமெரிக்க அதிபராக வெற்றிபெற்ற திரு.டொனால்ட் ட்ரப்ம் அவர்களை விட, நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையே இவ்வுலகம் நவம்பர் 08-ஆம் தேதி அன்று திரும்பிப்பார்த்தது. காரணம் டிஜிட்டல் இந்தியாஎன்கிற மாபெரும் புதிய புரட்சி இயக்கம் துவங்கிவிட்டது. -TMR

















No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.