அருட்பாவும் அரசியலும்
அன்பர்களே! திரு அருட்பிரகாச வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை நமது அரசியல் இயக்கங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன என்று சற்றே இங்கு காண்போம்.
1. 1947 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தின் 'கடவுள் மறுப்பு', 'சமய மறுப்பு' பிரசாரத்திற்கு "வள்ளலார்" எவ்வாறு பயன்பட்டார் என்று 04.10.1947 ஆம் ஆண்டில் 'குடியரசு' ஏட்டில் வெளியான 'ஆஸ்திகர்களே என்ன கூறுகிறீர்கள்?' என்ற கட்டுரையை இங்கு காண்போம்.
சுயமரியாதைக்காரர்கள் கடவுள் இல்லை, சாதி சமயம் இல்லை என்னும் கயவர்கள், வேத சாஸ்திரங்களையும் இதிகாசப் புராணங்களையும் மறுக்கும் விவேகமற்றவர்கள், நாஸ்திகர் என்று கூறும் ஆஸ்திகர்களே!
சுயமரியாதைக்காரர்களைக் குறைகூறவும் வாயில் வந்தவாறு திட்டவும் பழகிக்கொண்டிருகிறீர்களே யல்லாமல் உண்மை என்ன என்பதை ஒருபொழுதாவது சிந்தித்தீர்களா? மக்களின் உழைப்பின் பயனை உறிஞ்சுவதற்காகவே சாதியும் சமயமும் திராவிடர்களிடையே புகுத்தப்பட்டன. மக்களைத் தத்தம் நிலையை அறியவொட்டாமல் மிருகங்களாக்குவதே இதிகாசங்களும், புராணங்களும் இழி நிலையில் வாழ வேண்டியதே இறைவனின் கட்டளையாகும் என எண்ணச் செய்வதே வேதங்களும் சாஸ்திரங்களும்.
மக்கள் மானத்தை விட்டொழித்து மண்ணுலகில் மெய்மறந்து வாழ வேண்டுமென்பதற்காகப் படைக்கப்பட்டதுதான் விசித்திரமிக்க கடவுளர்கள். இவை சுயமரியாதைக்காரன் கூறுவதுதான். இவ்வாறு சுயமரியாதைக்காரன் கூறுவது பொய்யா? உலகத்தில் யாராகயிருந்தாலும் அனைவருக்கும் அறிவுண்டு எனக்கூறுபவன் சுயமரியாதைக்காரன்! ஆதலால் அறிவு பெற்று விளங்கும் ஆஸ்திகர்களே! சிந்தியுங்கள் நன்றாகச் சிந்தியுங்கள்!
"கொள்ளை வினைக் கூட்டுறவால்
கூட்டிய பல்சமயக் கூட்டமும் அக்
கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறு அக்கலைகள் நாட்டியபல்
கதியும் காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும்
எல்லாம் பிள்ளை விளையாட்டே"
என்று பேசுகிறவர் யார் தெரியுமா?
"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சரிதம் எல்லாம் பிள்ளைவிளையாட்டே"
என்பவர் யார்?
"இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம்
இவைமுதலா இந்திரசாலங் கடையா உரைப்பர்
மயல் ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனே நீநூல் அனைத்தும் சாலம் என அறிக"
என்று பறைசாற்றுபவர் யார் தெரியுமா?
"நான்முகர் நல்லுருத்திரர்கள் நாரண ரிந்திரர்கள்
நவிலருகர் புத்தர் முதன்மதத் தலைவ ரெல்லாம்
வான்முகத்தில் தோன்றியரு ளொளி சிறிதேயடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம் போனபடியே
தேன்முகந் துண்டவரெனவே விளையாடா நின்ற
சிறுபிள்ளைக் கூட்டமென"
என்று செப்புகிறவர் யார் தெரியுமா?
"இருட் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப் புன்செவியில் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்க ளாச்சிரம
வழக்கெல்லாம் குழிகொட்டி மண்மூடிப் போட்டு"
என்று சாத்திரங்களை எதிர்த்துச் சாம்பலாக்கி எருவாக்குக என்று மதங்களையும் வருணாச்சிரம வழக்கங்களையும் குழியில் கொட்டி மண்மூடி புதைக்க வேண்டும் என்று கூறுகின்றவர் யார் தெரியுமா?
"மதத்திலே சமய வழக்கிலே மாயை மருட்டிலே இருட்டிலே மறவாக் கதத்தீலே மனத்தை வைத்து வீண் பொழுது கழிக்கின்றார்"
எனவும் உங்களின் உண்மையான நிலையை உரைப்பவர் யார் தெரியுமா?
"சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே"
என்றும் உங்கள் மனநிலைக்கு மனமிரங்குபவர் யார் தெரியுமா?
இவ்வாறு கூறுகின்றவர் சுயமரியாதைக் கவிஞரல்லர். ஆஸ்திகர்களாகிய உங்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவரான வடலூர் இராமலிங்க சுவாமிகளாவார். இவர் இவ்வாறு எழுதி வைத்திருக்கும் நூலைத் "திருஅருட்பா" எனச் செப்பி மாலையைச் சுற்றி மண்டியிட்டு வணங்குகிறீர்கள், இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றவர்களை மருநர் என்று செப்பி மண் கல்லை வாரி எறிந்து மல்லுக்கு நிற்க வருகின்றீர்கள்.
இப்போது என்ன கூறுவீர்கள்? சுயமரியாதைக் காரர்கள் கயவர்களா? விவேகமற்றவர்களா? புரட்டர்களா? நாஸ்திகர்களா? சுயமரியாதைக் காரர்களை குறைகூறும் ஆஸ்திகர்களே - உங்களின் உண்மையான நிலை என்ன என்பதை நீங்களே சிந்தித்து முடிவு கட்டுங்கள். சைவ மெய்யன்பர்களே! நீங்களும் சிந்தியுங்கள். சிந்தித்து தெளிவடைய முடிகிறதா எனப்பாருங்கள்.
2. மேலும் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் சில பாடல்களை மட்டும் தொகுத்து "பெரியார்" குடிஅரசுப் பதிப்பாக வெளியீடாக வெளியிட்டார்.
அவ்விளம்பரச்செய்தி பின்வருமாறு;
"குடிஅரசுப் பதிப்பக வெளியீடுகள்" சந்தாதாரர்களுக்கு முக்கால் விலை
"இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு"
"இது இராமலிங்க சுவாமிகள் பாடிய அருட்பாவில் ஆறாம் திருமுறையில் உள்ள பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்டது. இதில் உள்ள பாடல்களால், வேதம், புராணம், மதம் முதலியவைகளின் சூழ்ச்சிகளையும் அவைகள் பொய் என்பதனையும் உணரலாம்" இதன் விலை அணா 0-2-0.
இவ்வாறு பெரியார் அவர்கள் திருஅருட்பாவைச் சந்தாகாரர்களுக்கு சலுகை விலையில் அளித்தும் அக்காலத்தில் பரப்பியிருக்கிறார் என்பதனை இவ்விளம்பரத்தின் மூலம் நாமறிகிறோம். தந்தை பெரியாரையும் தயவுருவ வள்ளலாரையும் ஒப்பிட்டுப் பல நூல்கள் வெளிவந்தன எனத் தெரிகிறது.
3. "வடலூரும் ஈரோடும்" என்னும் நூலை எழுதிய 'திருக்குறளார்' சுத்த சன்மார்க்கப் போலிகளை கீழ்கண்டவாறு சாடித்தள்ளுகிறார்,
"இன்று வடலூர் சென்று வள்ளலாரின் திருவாக்குகளைப் பாராயணம் செய்து பக்திப் பரவசமடையும் அடியார்களில் எத்தனைபேர் அடியாரின் உண்மையெண்ணம் நிறைவேற சாதி மதம் ஒழிய - புராணக்குப்பைகள் நீங்கத் தியாகம் செய்து செய்கை முறையில் வெளிவந்து மக்களிடையே பாடுபடுகிறார்கள் என்று கேட்கிறோம்"
"ஆசிரியர் எவ்வழி அவ்வழி நாங்களும்" என்று பகுத்தறிவு இழந்து, இனப் பற்றை மறந்து, ஆரிய அடிமைகளான தமிழர்களும் வடலூரைப் பின்பற்றாது சென்றனர். இன்று அவர் பாடலைப் பாடினால் போதுமா?
இவ்வாறு வெறும் பேச்சளவில் வள்ளலாரைப் போற்றிச் செயலளவில் சாதி சமயப் பற்றாளர்களாக இருக்கும் இரட்டை வேடதாரிகளுக்குச் சவுக்கடி தருகிறார் திருக்குறளார்.
முடிவாக,
"வள்ளலார் வெளிப்படையில் கூறிய கருத்தினைச் செயல் முறையில் நிலைநிறுத்தப் பாடுபடும் சுயமரியாதைப் பெரியார்களைப் பின்பற்றாத அறிவிலிகள் நிறைந்த இந்த நாடு முன்னேற வழியுண்டா? எழுத்தில் முழங்கிய வடலூரார் கொள்கைகளைச் செயலில் செய்து காட்டுகிறார் பெரியார்" (வடலூரும் ஈரோடும்-பக்கம் 21)
வள்ளலார் கருத்துகளைச் செயலளவில் செய்து காட்டுகிறார் பெரியார் எனப் பெரியாருக்கு புகழாரம் சூட்டுகிறார் திருக்குறளார். இக்கருத்து 'சாதி சமய மத ஒழிப்பு' என்ற ஒரு கருத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் சரியே.
மற்றபடி பெருமானாரின் சமயங்கடந்த, சமரச சுத்த சன்மார்க்க நெறி, ஜீவகாருண்யக் கொள்கை, மரணமிலா பெருவாழ்வு, ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை, கடவுள் ஒருவரே உள்ளார், புலால் மறுப்புக் கொள்கை, தருமச்சாலை வழிபாடு, ஜீவ போன்ற உயர் கொள்கைகளுக்கும் பெரியாருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.
4. வள்ளலார் மீதி பெரும் ஈடுபாடு கொண்டிருந்த தந்தை பெரியார் அவர்கள் வடநாட்டில் தோன்றிய அருளாளர்களைப் பொற்றுகின்ற அளவு தமிழனுக்கு தன் இனப் பெரியோர்களைப் போற்றவேண்டும் என்று தெரியவில்லையே என்று வருந்தினார். இதைக் குறிப்பாக 'தமிழ்க் கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்' என்ற நூலில் பேராசிரியர் சே.இராஜேந்திரன் அவர்களும் சுட்டிக் காட்டுகிறார்.
"மக்களுடைய சிந்தனை ஆற்றலைத் தூண்டுவதற்கு குடிஅரசு இதழ்களில் பெரியார் தொகுத்துள்ள வினாக் கணைகள் என்றென்றும் எண்ணிப்பார்த்து மகழத்தக்கனவாக உள்ளன."
"இராமகிருஷ்ணரைப் போற்றுகின்ற தமிழனே! இராமலிங்கர் எவ்விதத்தில் தாழ்ந்தவர்! என்று கேட்டுத் தமிழரின் தன்மானத்தைப் பெரியார் கிளர்ந்தெழச் செய்தார்."
(தமிழ்க் கவிதையில் திராவிட இயக்கத்தின் தாக்கம்-பக்கம் 92)
இக்கட்டுரை குடிஅரசு ஏட்டில் (08-05-1948 ஆம் ஆண்டு) பக்கம் 14-ல் இடம்பெற்றுள்ளது. அதனை அப்படி இங்கு காணலாம்.
ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப் பற்று? இராமகிருஷ்ண பரமஹம்சர்
"இராமக்கிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார் உன் இராமலிங்கம் எவ்விதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியது என்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப் பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டு எழு தம்பி! உன் இனத்தான் எந்தவிதத்திலும் அறிவிலோ ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்"
5. இதனையே 'உவமைப் புலவர் சுரதா' தன் கவிதையில் தேன் மழையாய் பொழிகிறது
"வங்கத்து ஞானிக்குச் சிலைகள் இங்கே!
வடலூர் போன்றோர்க்குச் சிலைகள் எங்கே?"
என்று தேன் மழையில் 'விழாத விழாக்கள்' என்ற தலைப்பில் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் பாடியதிலும் பெரியாரின் தாக்கத்தைக் காணலாம்.
6. பெரியார் அவர்கள் அருட்பாவை படித்தார், பாடினார், குறைந்த விலையில் நூலாக அச்சிட்டுப் பரப்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக வடலூர் சென்று வந்த நிகழ்ச்சியையும் அவரது ஆர்வத்தையும் என்றும் நாம் எண்ணத்தக்கது.
"தந்தை பெரியார் புலால் மறுக்காதவர். ஒருமுறை அவர் ஞானசபைக்கு வந்தார். ஞான சபையின் முகப்பில் "புலால் மறுத்தவர் மட்டும் உள்ளே வருக" என்ற பெருமனாரின் கட்டளையினை படித்துவிட்டு வள்ளற்பெருமானுக்கு மரியாதை தரும் வகையில் வெளியிலேயே நின்று விட்டு சென்றார்" (தமிழர் பண்பாடு - பக்கம் 4)
இப்படித் தந்தை பெரியாரின் 'அருட்பா ஈடுபாடு' அவரை வடலூர் வாயில் வரை கொண்டுவந்து நிறுத்தியிருப்பதை காண்கிற பொழுது 'கல்லும் உருகும் அருட்பாவில் கனகம் பதித்த உத்தமனின் உயர்வை எண்ணி எண்ணி உருகுவதைத் தவிர தமிழகத்திற்கு உய்யும் வழி வேறு உண்டோ?
7. தமிழ்த் தென்றலும் தவத் தென்றலும்:
"சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர் அவர்கள் தந்தையாவார். நான் தாயாவேன். நாங்களிருவரும் மாயவரம் சமரச சன்மார்க்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளையே சுயமரியாதையாகும். அக்குழந்தை தாயுடன் வாழாது இதுகாறும் தந்தையுடன் சேர்ந்து வாழ்கிறது. அதன் வளர்ச்சிக் கண்டு யான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." (தமிழர் தலைவர் - பக்கம் 141)
மேலே உள்ளதைக் கூறியவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஆகும்.
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் முதற் பகுதியிலும் திரு.வி.க. அவர்கள் சுயமரியாதை இயக்கம் சன்மார்க்க இயக்கத்தினின்றும் பிறந்தது என்று வாதாடுகின்றார்.
"நாயக்கர் சுயமரியாதை எனது சன்மார்க்க இயக்கத்தின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை; பத்து பங்கு வேற்றுமை; வேற்றுமை எங்களுக்குள் போர் மூட்டியது."
இவ்வாறு பின்னால் சமரச சன்மார்க்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தமிழகமெங்கும் உலாவந்த பெருமைக்குரிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. கூறுகிறார். இவர் தம் வாழ்நாளில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அருட்பா ஓதுவதிலும், பெருமான் புகழ் பாடுவதிலும் கழிந்தன என்று நாம் கொள்ளலாம்.
குடியரசில் பெரியார் தீட்டிய ஆசிரியவுரைகளுக்கு மறுப்பாக திரு.வி.க. அவர்கள் (27.06.1928) நவசக்தியில் 'தொடர் முடங்கல்' எனுந்தலைப்பில் எழுதினார். இக்கட்டுரை 'அன்பு கெழுமிய நாயக்கரே' என விளித்து 'தங்களை சிற்றினமெனக் கருதாத தோழன்' என முடிகின்றது. அக்கட்டுரையில்,
"தங்கள் பார்வையில் தற்போது நடைபெற்று வரும் திராவிடன் பத்திரிகையில் இரண்டு குறிப்புகள் திகழ்கின்றன. ஒன்று இராமலிங்க சுவாமியைப் பற்றியது, மற்றொன்று புத்தர் பெருமானைப் பற்றியது. இராமலிங்க சுவாமிகளின் கண்டனக் கூட்டங்களும் புத்தமத எதிர்ப்பு கூட்டங்களும் குழுமிய நாட்களில் யான் பள்ளி மாணாக்கனாயிருந்தவன். அப்பொழுது எம்மேடையில் பேசினேன் என்பது எனக்குத் தெரியவில்லை."
(தமிழ்ச் சோலை, பக்கம் - 371)
இவ்வாறு மாணாக்கப் பருவத்தில் கதிரைவேலரோடு மருட்பா மேடைகளில் கலந்து கொண்ட திரு.வி.க. அவர்கள் பின்னால் அதை ஒப்புக்கொள்ள மனமின்றி 'அப்பொழுது எம் மேடையில் பேசினேன்' என்பது எனக்கு தெரியவில்லை, என்று மழுப்பியிருப்பதும் அருட்பா அணிக்கு கிட்டிய வெற்றி என்றுதான் கூறவேண்டும்.
தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் 1920 அக்டோபர் மாதம் 22-ம் நாள் 'நவசக்தி' எனும் வார ஏட்டினைத் தொடங்கினார். தொடர்ச்சியாக 13 ஆண்டுகள் நடைபெற்ற இவ்வேட்டில் இடம்பெற்ற சிறந்த கட்டுரைகளையெல்லாம் தொகுத்து தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு எனும் நூலாகவும் திரு.வி.க. அவர்கள் வெளியிட்டார்கள்.
இக்கட்டுரை தொகுப்பு நூலில் 06.05.1921-ல் 'சமரச சன்மார்க்கம்' எனும் கட்டுரையும் 09.01.1929-ல் திருவாரூர் - விசயபுரம் சமரச சன்மார்க்கத்தின் ஒன்பதாம் ஆண்டு விழா தலைமைப் பேருரை 'சமரசம்' என்னும் தலைப்பிலும் 'சன்மார்க்கம்' என்னும் தலைப்பில் 20.04.1932-ல் நவசக்தி வார இதழில் வந்த கட்டுரையும் 05.11.1926-ல் 'சன்மார்க்க சங்கம்' எனும் தலைப்பில் வெளிவந்த கட்டுரையும் தொகுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளன.
இங்கே ஆண்டினைச் சுட்டுவதின் நோக்கம் வள்ளலார் புகழ் பரப்பிய அரசியல் தலைவர்களில் பலருக்கு முன்னோடியாகத் தமிழ்த்தென்றல் விளங்குகிறார் என்ற கருத்தை நிலைநாட்டவே ஆகும்.
மேலும் அரசியல் இலக்கியம் ஆகிய இரு துறைகளிலும் பணியாற்றிய புகழ் பெற்ற ப.ஜீவானந்தம், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், பேராசிரியர், டாக்டர் நாவலர் போன்ற பெருமக்களுக்கெல்லாம் இந்த வகையில் திரு.வி.க. அவர்கள் முன்னோடியாகிறார்.
"தேச பக்தனும், நவசக்தியும் அரசியல் கிளர்ச்சிக்கெனத் தோற்றுவிக்கப்பட்ட பத்திரிக்கைகள் ஆதலால் அவைகளில் பெரிதும் அவ்வப்போதய அரசியல் நிலையையொட்டி ஆசிரியக் கட்டுரைகள் எழுதப்படுவது வழக்கம். சிலபோது பொதுக் கட்டுரைகளும் எழுதப்படுவதும் உண்டு." என்று திரு.வி.க. குறிப்பிடுகிறார்.
அரசியல் புயல்களுக்கு நடுவே இலக்கியத் தென்றலை வீசச் செய்வதற்கு அப்போது திரு.வி.க. அவர்களுக்கு அருட்பாவும் பெருமானும் உதவி செய்தனர். இந்த மரபை ஒட்டியே இந்திராகாந்தி அம்மையார் நெருக்கடி நிலையை ஏற்படுத்தி இதழ் தணிக்கை முறையைக் கொண்டுவந்த பொழுது டாக்டர் கலைஞர் அவர்கள் முரசொலியில் 'இலக்கியச் சோலைக்கு ஏகுவோம் வாரீர்' என்று அழைத்தார். அப்போது தி.மு.க. பொது செயலாளராக இருந்த டாக்டர் நாவலர் அவர்கள் 09-01-1972 இல் 'தமிழ் இலக்கியக் கழகம்' என்னும் இலக்கிய அமைப்பினைத் தொடங்கினார்.
இப்படி அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கவாதியாகவும் இருந்துக்கொண்டு அருட்பாவை பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்திய பெருமக்களில் திரு.வி.க. அவர்களே முன்னனி முத்தாய் ஒளிர்கிறார்.
இவரது சமகாலத்தவராய் அரசியலில் ஈடுபாடு காட்டாது இலக்கியத் துறையில் மட்டும் ஈடு இணையற்றவராய் திகழ்ந்த மறைமலையடிகளார் வள்ளலார் பற்றியும் அருட்பா பற்றியும் பலக் கூட்டங்களில் உரையாற்றியவராகவும் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியவராகவும் இருந்தபோதிலும் அவை ஒரு தனி நூலாக வெளிவரும் அளவுக்கு இல்லாமையே அவருக்கு ஒரு பெரும் குறையையாய் நின்றுவிட்டது.
மற்றும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களோ தன் உரைகளையும் கட்டுரைகளையும் தொகுத்து 'இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்' எனும் நூலாக ஆக்கி முதற்பதிப்பாக 1929-ல் வெளியிட்டு முதன்மை பெறுகிறார். அந்நூலில் முன்னுரையில்,
"சென்ற விபவ ஆண்டு தைத் திங்களில் உற்ற பூசநாள் (26-01-1929) விழாவைத் தொடர்ந்து கூடிய மாநாட்டில் தலைமை வகிக்கும் பேறு அடியேனுக்குக் கிடைத்தது. அம்மாநாட்டில் அடியேன் நிகழ்த்திய தலைமையுரையைச் செவிமடுத்த அன்பர் பலர். அதைப் பத்திரிக்கையில் எழுதிவருமாறு கேட்டனர். அவ்வாறே அத்தலைமையுரையை எனது 'நவசக்தி'யில் வாரந்தோறும் எழுதிவரலானேன். அக்கட்டுரைகளைக் கொண்டதே இந்நூல். இந்நூலுக்கு 'இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்' என்னும் பெயர் சூட்டப்பட்டது."
"மண்ணெல்லாம் சன்மார்க்க மலராட்சி வேண்டும்
மார்க்கமெல்லாம் சன்மார்க்க மணங்கமழ வேண்டும்
கண்ணெல்லாம் சன்மார்க்க காட்சியுறல் வேண்டும்
காதெல்லாம் சன்மார்க்கக் கேள்விநுழைய வேண்டும்
பெண்ணெல்லாம் சன்மார்க்கப் பிள்ளைபெறல் வேண்டும்
பேச்செல்லாம் சன்மார்க்கப் பேச்சாதல் வேண்டும்
பண்ணெல்லாம் சன்மார்க்கப் பாட்டிலெழல் வேண்டும்
பரம்பொருளே! சன்மார்க்கப் பணிசெய்ய வேண்டுவனே!" (திரு.வி.க.)
8. மேலும் டாக்டர் கலைஞர் அவர்கள், திருஅருட்பாவில் வள்ளலார் பாடிய "கந்த கோட்டம்" என்னும் சொல்லைத் தழுவியே "வள்ளுவர் கோட்டம்" என்பதனை நிறுவினார். "கோட்டம்" என்ற தமிழ்ச் சொல்லை முதலில் உருவாக்கியவர் வள்ளலார் ஆவார்கள். இது 'கோட்டை' என்னும் சொல்லில் இருந்து வந்தது.
மேலும் வள்ளலார் உருவாக்கிய "ஞானசபை" என்பதனை தழுவி கலைஞர் அவர்கள் அதனை தமிழில் "அறிவாலயம்" என்பதனை உருவாக்கினார்.
தற்போது கலைஞர் அவர்கள் வெள்ளாடையும், தோளில் மஞ்சள் துண்டையும் அணிந்திருப்பது, வள்ளலாரின் சன்மார்க்கக் கொடியினை அடையாளப்படுத்துகிறது.
9. உலக நலத் தொண்டர் வேதாத்திரி அவர்களும் வெள்ளாடையை உடுத்தி தோளில் மஞ்சள் துண்டினை சார்த்தியிருப்பது, சன்மார்க்கக் கொடியினை அடையாளப்படுத்தவே ஆகும்.
10. தனித் தமிழ் இயக்கம்:
வேதாச்சலம் என்ற தமது இயற்பெயரை தான் கண்ட 'தனித்தமிழ் இயக்கத்தின்' மூலம் மறைமலை அடிகள் சுத்த தமிழில் மாற்றிக்கொண்டார். இந்த 'தனித் தமிழ் இயக்கம்' தோன்றக் காரணமாக இருந்தது வள்ளலாரின் பாடல் ஆகும்.
வேதாச்சலம் அவர்கள் வள்ளலார் பாடிய பாடல் ஒன்றை மெல்லென இசைக்கிறார்! கூடவே அவரது மகளும் கிளிப்பிள்ளையாய் சொன்னதைச் சொல்லுகின்றது.
பெற்ற தாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்
உயிரை மேவிய உடல்மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பதுமறந்தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந்து ஓங்கும்
நமச்சி வாயத்தை நான்மறவேனே!
இசைப் பாகாக வடித்த தந்தை முதலடியை முதலடியை மீண்டும் இசைத்து உற்ற தேகத்தை என்று சொல்லிச் சற்றே தயங்கினார். தந்தை முகத்தை நோக்கினார் இளஞ்செல்வி.
நீலா! வள்ளலார் பாடிய இவ் வளமான பாடலில் தேகம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இது வடசொல். இவ்விடத்தில் யாக்கை என்னும் தென் சொல்லைப் பெய்திருந்தால் இன்னும் எத்தகு சுவையாகவும் நயமாகவும் இருந்திருக்கும்! என்றார் தந்தையார்.
இப்பாடலால், தந்தையும் மகளும் தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவே தனித்தமிழ் இயக்கம் தோன்றிய வரலாறு ஆகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தையும் மகளும் தவத்திரு மறைமலை அடிகளாரும் நீலாம்பிகையும் ஆவர்! இவ்வியக்கம் தோன்றிய ஆண்டு 1916. அப்போது அடிகளாருக்கு அகவை நாற்பது. மகளுக்கு அகவை பதின்மூன்று!
எமக்குத் தெரிந்தவரையில் அருட்பா எவ்வாறு அரசியலில் கலந்துள்ளது என்பதை தெரிவித்துவிட்டேன். மீண்டும் சந்திப்போம், நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி