Friday, May 10, 2013

சுத்த சன்மார்க்கம், சன்மார்க்கம் - வேறுபாடு


சுத்த சன்மார்க்கம், சன்மார்க்கம்  - வேறுபாடு   
                                                     10-05-13

நடமாடும் ஞானசபைகளே! அங்கே நடனமிடும் நம் இறைவருக்கும் அடிபணிந்து வணங்குகின்றேன்!

சுத்த சன்மார்க்கம் என்பது என்ன? என்று, நாம் இப்போது திருஅருட்பாவின் அடிதொட்டு பார்க்கலாம்... வாங்க...

மார்க்கம் என்பது நான்கு வகைப்படும், அவை:-

1. தாச மார்க்கம்
2. சற்புத்திர மார்க்கம்
3. சக மார்க்கம்
4. சன்மார்க்கம்

முதல் மூன்று நமக்கு தேவையற்றதாக உள்ளதால், நான்காவதாக உள்ள சன்மார்க்கத்தைப் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்... வாங்க...

சத்மார்க்கம் (உண்மை துவாரம் / வழி) என்பதே சன்மார்க்கம் என்று மருவியது என்க. சத்து என்னும் பொருளின் உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கமே சன்மார்க்கம். எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞான சித்தியை பெறுதல்,

"நெல்லை விளைவித்தான்" என்பதன் பொருள், நிலத்தை சீர் செய்து, உரமிட்டு, உழுதல் தொடங்கி, அரிசியை அண்ணமாக்கி அனுபவிக்கும் காலம் வரை அச்சொல்லில் அடங்கியிருப்பது போன்று,

சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருள் எனக் கொள்க.

நாம் தற்போது சன்மார்க்க வகைகளைப் பற்றி பார்க்கலாம்...வாங்க...

சன்மார்க்கம் மூன்று வகைப்படும் என்று வள்ளலார் கூறுகிறார், அவை :-

1. சமய சன்மார்க்கம்
2. மத சன்மார்க்கம்
3. சுத்த சன்மார்க்கம்

1. சமய சன்மார்க்கம் என்பது,  சத்துவகுணத்தைச் சார்ந்தது விளங்குவது சமய சன்மார்க்கமாகும். அதாவது,

# சத்போதம் - உண்மையான அறிவு / ஞானம் / போதனை - விளக்கம்
# சத்கர்மம் - உண்மையான ஒழுங்கு / சீர் / முறைமை
# சத்சங்கம் - உண்மையான கூட்டம் / கழகம்
# சத்காலம் - உண்மையான நேரம் / பொழுது
# சத்விசாரம் - உண்மையான ஆராய்ச்சி / சிந்தனை / எண்ணம் / யோசனை
# சத்பாத்திரம் - உண்மையான உறுப்பினர் / ஒருமையுள் ஒன்றிவிடும் நபர்
# சத்ஜனம் - உண்மையான மக்கள் / பிறப்புகள்
# சத்செய்கை - உண்மையான வெளிப்பாடு

மேற்கண்ட எட்டு வகைகளும் சத்துவ குணத்தை சார்ந்தது,

# கொல்லாமை
# பொறுமை
# சாந்தம்
# அடக்கம்
# இந்திரிய நிக்கிரகம் - (ஐம் பொறிகளையும் அடக்கி ஆளுதல்)
# ஜீவகாருண்யம்

மேற்கண்ட ஆறு வகைகளும் சத்துவ குணத்தின் இயல்பாகும் / குணமாகும். இவ்வகை உண்மையைக் கொண்டு சத்துவகுணத்தின் இயல்புகளை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்.

சமய சன்மார்க்கத்தின் / சத்துவ குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

1. தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல்
2. புத்திரனாகப் பாவித்தல்
3. சிநேகிதனைப் போலப் பாவித்தல்
4. தன்னைப்போலப் பாவித்தல்

இது ஜீவ நியாயமாகும்.

2. மத சன்மார்க்கம் என்பது, நிர்க்குண லட்சியம் செய்வதாகும்.

நிர்குணம் என்பது யாதெனில், மேற்படி சமய சன்மார்க்கத்தின் எண் குணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று அதிலிருந்து மேலேறி லட்சியானுபவம் பெறுதல் ஆகும். 

லட்சியம் / லட்சியானுபவம் யாதெனில்,

# சோகம்
# சிவோகம்
# தத்வமசி
# சிவத்துவமசி

என்னும் மேற்படியான வாக்கியத்தில் அமைந்த முக்கிய அனுபவமாகும்.

முக்கிய அனுபவம் என்பது, மத சன்மார்க்கத்தின் / நிற்குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

1. தான் கடவுளுக்கு அடிமையாதல்
2. தான் கடவுளுக்கு புத்திரனாதல்
3. தான் கடவுளுக்கு சிநேகனாதல்
4. தான் கடவுளுக்கு நிகராதல் (கடவுளேதானாதல்)

இது சத்துவ மற்றும் நிற்குணத்தின் / சமய மற்றும் மத சன்மார்க்கத்தின் முடிவு ஆகும்.

3. சுத்த சன்மார்க்கம் என்பது, மேற்கண்ட சத்துவகுணம், நிற்குணங்களின் வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம் ஆகும்.

சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே அன்றி இல்லாதன அல்ல.

இங்கு நமக்கு சற்று தலை சுற்றுகிறது அல்லவா? வள்ளலார் மேற்கண்டவாறு விளக்கம் கொடுத்து விட்டார், நாம் தான் புரிந்துக்கொள்ளவேண்டும், என்ன செய்வது...

அது என்ன? அல்லாதது.... இல்லாதது... இரண்டு சொல்பொருளும் ஒன்றுதானா? அல்லது வேறானதா? ஒரே பொருள் என்றால், வள்ளலார் இவ்வாறு தெரிவித்திருக்க மாட்டார். அப்போது இதன் பொருள் வேறுவேறானவையாகத்தான் இருக்கவேண்டும். இம்... பார்ப்போம்... வாங்க...

பெருமானார், முதலில் கூறிய வார்த்தையின் படி, சுத்த சன்மார்க்க அனுபவம் என்பது-சமய சன்மார்க்கமும் மத சன்மார்க்கமும் பெற்றுஇராத அனுபவமே சுத்த சன்மார்க்க அனுபவம் ஆகும் என்று கூறிவிட்டார்.

பிறகு அடுத்த அடியில் தொடரும்போது, சமய மத சன்மார்க்கங்கள், சுத்த சன்மார்க்கத்திற்கு அல்லாதது / கிடையாது / அப்பாற்பட்டது / மேலோங்கியது என்று சொல்லிவிட்டு, அடுத்த அடியில் - ஆனால் இல்லாதன அல்ல என்று கூறி, சமய மத சன்மார்க்கங்கள் சுத்த சன்மார்க்கத்தில் இருக்கிறது என்றும் கூறுகிறார்! இது எப்படி இருக்கிறது!

ஒரே குழப்பமடா சாமி! 

அதாவது சமய மத சன்மார்க்கங்களில் உள்ள அசுத்தங்கள் எவ்வளவு உள்ளனவோ அவ்வளவையும், ஒரு அணுக்கூட உட்புகமுடியாத மிக நுண்ணிய அளவுள்ள அசுத்தத்தையும் இறைவன் அருளாள், சமய மத சன்மார்க்கத்திலிருந்து அப்புறப்படுத்தி சுத்தமாக்கி, துரிசுகளை நீக்கி அதற்கு, தமது காலத்திற்கு முன்பு வரை இல்லாத ஒரு மார்க்கத்தை நம்பெருமானார் உருவாக்குகிறார், அதற்கு "சுத்த சன்மார்க்கம்" என பெயரிடுகிறார், அவ்வளவே.

குழப்பம் தீரவில்லையா? எந்த ஒரு உண்மையும் குழப்பமாகவே இருக்கும்! நாம் குழப்படையவில்லை என்றால், சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம்! சரி...மேலும் படிப்போம்... வாங்க...

அதாவது, சமய மத சன்மார்க்கத்தில் உள்ள உண்மைகளை மட்டும் நமது பெருமானார் இறைவன் அருளாள் கண்டு அந்த உண்மைகளை மட்டும் தமது "சுத்த சன்மார்க்கத்தில்" இறக்குமதி செய்து கொண்டார். அவ்வளவே... "இல்லாதன அல்ல" என்பதன் பொருள் இப்போது ஒருவாறு புரியும் என நம்புகிறேன். ஆனால் சமய மத சன்மார்க்கங்கள் அல்ல என்பதனையும் ஜாக்கிரத்தையுடன் கவனிக்க வேண்டும்.... கொஞ்சம் அசந்தால் அதோகதிதான்...

மேலும் பெருமானார் கூறும்போது, "சுத்தம் என்பதன் பொருள் ஒன்றுமில்லாதது. சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்கு பூர்வம் / முன்பு வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களைக் கடந்தது."

சரி, ஒரு சந்தேகம், மத சன்மார்க்கத்திலே நான்காவது நிலையிலே "கடவுளே தான் ஆதல்" என்ற நிலை வந்து விட்டதே! அதற்கும் மேல் என்ன இருக்கிறது? இந்த சுத்த சன்மார்க்கத்தில்? சபாஷ்... சரியான சந்தேகம்... வாங்க, மேலும் போகலாம்...

வள்ளலாருக்கு முன்பு வரை வாழ்ந்த யாரும் இந்நிலையினை அடையவில்லை,  ஏனெனில் அவர்களுக்கு உண்மை கடவுள் ஒருவர் உண்டு என்பது தெரிந்தும், அவர் யார் என்று தெரியாமல் பலரும் பலவாறு கூறி பல இக்கட்டான அனுபவங்களை பெற்றுஇருக்கிறார்கள்.

அதனால தான் நம்பெருமானார், அந்த நான்காவது நிலையினை "கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்று தமது சுத்த சன்மார்க்கத்தில் மிக அழகாக கூறுவார். இதுவரை இருந்தவர்கள் கடவுள் நிலையறியாமல் தவறான மார்கங்களில் முயற்சி செய்து அதற்குத் தக்க பலனையும் அடைந்தார்கள்.

இதுவரை இருந்தவர்கள், அந்த நான்காவது நிலையின் பயனாக அடைந்தது என்னவெண்று வள்ளலார் கூறுவது யாதெனில்...

"சிருஷ்டி, ஸ்திதி, அம்மாரம், திரோபவம், அனுக்கிரஹம் எனும் பஞ்சகிருத்திய தத்துவங்களைக் கர்த்தாவாக வழங்கி வருகின்ற பிரமா, விஷ்ணு, ருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் தத்துவங்களில், சிருஷ்டியில் சிருஷ்டி, சிருஷ்டியில் ஸ்திதி, சிருஷ்டியில் அம்மாரம், சிருஷ்டியில் திரோபவம், சிருஷ்டியில் அனுக்கிராஹம் இப்படியான ஒவ்வொரு தத்துவத்திலும் 5 தத்துவம் என இது மொத்தம் 25 தத்துவங்கள் என்க. இந்த 25-ம் 64,000-ஆல் பெருக்கினால் வரக்கூடிய காலம் (16,00,000/- பதினாறு லட்சம் ஆண்டுகள்) வரை மகாசதாசிவ அனுபவத்தைப் பெற்று, சுத்ததேகியாக இருப்பது"

மேற்கண்டவாறு ஒரு கால வரையறைகுள் இந்த சுத்த தேக அனுபவம் முடிவுற்று அவர்கள் மரணமடைந்து மீண்டும் பிறப்பெய்துவதையே, அந்த நான்காவது அனுபவம் (கடவுளேதானாதல்) உள்ளதாக வள்ளலார் குறிப்பிடுகிறார்.

ஆனால், சுத்த சன்மார்க்கத்தில், "கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்பது "மரணமிலா பெருவாழ்வு" "சாகாக் கல்வி" அதே "சுத்த தேகம்" என்னும் சொல்தான் இங்கேயும் உள்ளது.

சுத்த சன்மார்க்கம் மூலம் வள்ளலார் அடைந்த சுத்த தேகத்திற்கும், இனி நாம் அடையப்போகும் சுத்த தேகத்திற்கும் ஒரு கால வரையறை என்பதே கிடையாது.

வள்ளலார் இதனை கூறும்போது, "எந்தக் காலத்தும் எவ்வகைத் தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞானதேகமென்கின்ற தேகசித்தியும் எல்லாம் வல்ல சர்வசித்தியும் பெற்றுக்கொள்வது, அதாவது அண்ட பிண்ட தத்துவங்களைச் சுதந்தரத்தில் நடத்துவதும், தனிப்பெரும் வல்லமையும், ஏம ரவுப்பிய பிரேதஜீவி தாதி சித்தியும், வஸ்துப் பிரத்யசஷானுபவ சித்தியும் ஆகிய இவற்றை ஒருங்கே அடைவது சுத்த சன்மார்க்கத்தின் முடிபு ஆகும்." என்கிறார்.

மேலும் வள்ளலார் கூறும்போது, "சமய சன்மார்க்கம் மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிற்குள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கம் 36 வகை. அதனை விரிக்க 6 கோடியாகும். இது போலவே மதத்திலும் 36. மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏமசித்தி, தேகசித்தி முதலியவை உண்டு. அவை சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தா மூர்த்திகளான ஈசுவரன், பிரமம், சிவன், முதலிய தத்துவங்களில் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதொழிய, அதற்கு மேல் இரா."

"சமய மதங்களிலும் சமரசம் உண்டு. அவை:-
# வேதாந்த சித்தாந்த சமரசம்
# யோகாந்த கலாந்த சமரசம்
# போதாந்த நாதாந்த சமரசம்

இதற்கு அதீதம் "சடாந்த சமரசம்".
இதற்கு அதீதம் "சன்மார்க்க சமரசம்"
இதற்கு அதீதாம் "சுத்த சமரசம்"
ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கச் "சுத்த சமரச சன்மார்க்கமாம். இவை பூர்வோத்தரநியாயப்படி, கடைதலைப் பூட்டாக, "சமரச சுத்த சன்மார்க்கம்" என மருவின."

"சுத்த சன்மார்க்கத்திற்கு படி மூன்று, அவை:-

1. சடாந்த சன்மார்க்கம்
2. சமரச சன்மார்க்கம்
3. சுத்த சன்மார்க்கம்

சுத்த சன்மார்க்கத்திற்கு படிகள் மூன்று, அவை:-

1. சிற்சபை
2. பொற்சபை
3. சுத்த ஞானசபை

இதன் மூலம் அடையக்கூடிய "சுத்த தேகம்" என்பதின் அனுபவத்தை விரித்தால் விசேஷமாம். சுத்த சன்மார்க்கம் விளங்குங் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாக தெரிவிப்பார்."

மேற்கண்டவாறு நமது பெருமானார், சுத்த சன்மார்க்கத்தின் வல்லமையை விரிக்கின்றார். சுத்த சன்மார்க்க காலத்தை எதிர்பார்த்து நாம் சர்வ ஜாக்கிரதையாக இருப்போம். நாளையே வந்தாலும், அந்த பயனை அடையும் தகுதியினை நாம் பெற்று இருக்கவேண்டும் அல்லவா?

"பக்குவ ஆன்மாக்களிடத்தில் கடவுள் அருள் வெளிப்பட்டால் சுத்தமாதி மூன்று தேகமும் அத்தருணமே வரும். பக்குவமில்லாதவருக்கு அருள் செய்தால், வாழை யினடத்தில் அக்கினி காரியப்படுவது போலாம்." அதனால் விரைவோம் சுத்த சன்மார்க்கத்திற்கு...

"நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லசஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லசஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி என்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம், ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லி யிருக்கிறார்கள்.

தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத்தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை."

மேற்படி வள்ளலார், ஆதியிலே ஒரு வல்லவன் இதனை ஏதோ காரணத்திற்காக, இறைவனின் நிலையினை மறைத்து, பொய் உரைத்த கற்பனைகளை அவிழ்த்து விட்டுவிட்டதாக கூறுகிறார். அவன் பூட்டிய பூட்டை இறை அருளினால் அவிழ்துவிட்டார். அப்பூட்டின் சாவியாக அவருக்கு பயன்பட்டது என்னவெனில், "ஆன்மநேய ஒருமை பாட்டுரிமை" என்னும் தயவு ஆகும். இந்த தயவு வர சுத்த சன்மார்க்கத்தில் உள்ள "சாகாக் கல்வி"யை நாம் பயில வேண்டும்.

இனி சுருக்கமாக சன்மார்க்கத்திற்கும் சுத்த சன்மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் காண்போம்... வாங்க...

எண்
சமய சன்மார்க்கம்
சுத்த சன்மார்க்கம்
1
தத்துவமசி நிலை
சத்துவ நெறி
2
இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் பல
அனைத்திற்கும் அதீதமாக விளங்கும் ஒரே மார்க்கம்
3
சத்துவ குணம் சம்பந்தப்பட்டது
சத்துவம் சம்பந்தப்பட்டது
4
தத்துவங்களை உபாசித்தல், அர்ச்சித்தல் உண்டு
தனித்தலைவன் லட்சியம் தவிர வேறு ஏதுமில்லை
5
ஒவ்வொரு தத்துவங்களுக்கும் தனித்தனி கர்த்தாவாக வழங்கப்பட்டுள்ளது
ஒரே இறைவனை மட்டுமே தொழுதல் கர்த்தாக்களை வணங்குதல் தேவையில்லை
6
சித்திவகைகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமய மார்க்கங்கள் நிறைய உண்டு. இவை தத்துவ சித்திக் கற்பனைகள்
சர்வசித்தியை உடைய அந்த ஒரே கடவுள் பற்றி உண்மை அறியும் மார்க்கம்
7
பலவகையில் பிரிக்கப்பட்டதால் பூரணத்துவத்தினை அறியும் காலம் கணக்கிடமுடியாது.
ஒரே பூரணத்துவத்தின் உண்மை அறிவது எளிதில் கூடும்
8
பூரணத்துவம் அறிய முடியாமல் தடைபடும்
எவ்வித தடையுமில்லை
9
ஜீவகாருண்யம் உண்டு. அத்துடன் சடங்கு முதலிய ஆசாரமும் உண்டு. அதனால் கருணை விருத்தியாகாமல் தடைபடும்
கருணை விருத்திக்கு தடையாக இருக்கும் சாதி சமய கட்டுபாட்டு ஆசாரங்களுக்கு தடையுண்டு, ஆகையால் கருணை மட்டுமே சாதனம், வெற்றி உண்டு.

      

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள் என்ன? என்பது போன்ற மேலும் பல பதிவுகள் தொடரும்...

"ஆங்காரம் தவிர்ந்தவருள் ஓங்காநின் றவனே
    அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே
 ஓங்கார நிலைகாட்டி அதன்மேல்உற் றொளிரும்
    ஒருநிலையும் காட்டிஅப்பால் உயர்ந்ததனி நிலையில்
 பாங்காக ஏற்றி எந்தப் பதத்தலைவ ராலும்
    படைக்கவொணாச் சித்தியைநான் படைக்கவைத்த பதியே
 தூங்காது பெருஞ்சுகமே சுகித்திடஇவ் வுலகைச்
    சுத்தசன்மார்க் கந்தனிலே வைத்தருள்க விரைந்தே."  

3 comments:

  1. Senthilvinayagam MMay 16, 2020 at 2:25 PM

    சுத்த சன்மார்க்கம் காட்டி தந்த வள்ளல் வாழ்க

    ReplyDelete
  2. சன்மார்க்கம் என்பது இயற்கையை பற்றிய முழு நிலை அறிவு ..
    இயற்கையாதனில் எல்லாம் உயிர்களும் ஒலி ஒளி இவற்றின்
    இயக்க நிலை அறிவை கொண்டு

    தான் பெற்ற மனித தேகத்தில் இயற்கை சுத்த தேகத்தை அறிந்து அத்தேகமே இறைவன்
    அமர்தருளும் ஞான உரு உண்மை திரு உருவை அடைந்து
    சகாத நிலையில் வாழும் பரிபூரண இயற்கை இன்ப வாழ்க்கை... சன்மார்க்க வாழ்வு திரு வாழ்வு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா...

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.