வள்ளலாரும் பெரியாரும் சந்தித்தால்...
அன்புடையீர் வணக்கம். தற்காலங்களில் எல்லாம் இருதுருவ கொள்கைகளையுடைய பிரமுகர்களை அடிக்கடி சந்திக்க வைத்து பேட்டி எடுத்து அதன்மூலம் இருவருடைய கருத்தின் உண்மைகளை மோதவிட்டு அதன்மூலம் மக்களை தெளிவடையவைப்பது அல்லது இன்னும் குழப்பமடையவைப்பதில் தொலைக்காட்சி அலைவரிசைகளில்
காண்கின்றோம்.
அந்த வகையில் இருதுருவ கொள்கையுடைய வள்ளலாரையும் பெரியாரையும் சந்திக்க வைக்க காலத்தால் முடியாவிட்டாலும் அவர்களுடைய கருத்துகள் என்றென்றும் காலத்தில் நிலைத்து நிற்பதால் அவர்களை நாம் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வைக்கமுடியும்.
அவ்வாறுதான் தற்போது இவர்களிருவரும் சந்தித்து உரையாடுகிறார்கள். என்ன பேசுகிறார்கள் என்றுதான் பார்ப்போமே...
(யமது இந்த சிறு படைப்பு 'செப்டம்பர் 1997 ஆம் ஆண்டு, சுமார் 15.5 வருடங்களுக்கு முன்பு திரு.நா.மகாலிங்கம் அவரகள் ஆசிரியராக இருக்கும் "ஓம் சக்தி" மாத இதழில் வெளிவந்துள்ளது என்பதனை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறேன்)
வள்ளலார்: "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, அருட்பெருஞ்ஜோதி..."
பெரியார்: "கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், பரப்பியவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கடவுள் இல்லவே இல்லை..."
வள்ளலார்: 'தம்பி... நீ தான் பெரியார் ஈ.வே.இராமசாமியா? நான் தான் இராமலிங்கம். உன்னைச் சந்தித்தலில் மகிழ்கின்றேன்.'
பெரியார்: 'ஓ... வள்ளலாரா! வாங்க, வாங்க, நல்லாயிருக்கீங்களா?'
வள்ளலார்: 'நலம் தான். நான் அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தைக் கூறிக்கொண்டு வருகையில், கடவுள் - இல்லை, முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி சத்தமெல்லாம் என் காதில் விழுந்தவுடன் நடுங்கிவிட்டேன். அதை நீதான் கூறினாயா?'
பெரியார்: 'ஆமாம்... அதில் என்ன தவறு?'
'கடவுளை ஒப்புக்கொண்டால், பிறகு இந்து மதத்தை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்; பிறகு வர்ணாசிரம தர்மத்தை ஒப்புக்கொள்ளவேண்டும், பிறகு ஒருவன் பிராமணன், அவனுக்குத் தொண்டு செய்யக் கடமைப்பட்ட நாலாவது சாதியான சூத்திரன் என்று நாம் ஒப்புக்கொள்ளவேண்டும், பிறகு வேத சாஸ்திரம், புராண இதிகாசங்களில் எழுதி வைத்திருக்கின்றபடி நாம் தாசி மகன், வைப்பாட்டி மகன் என்பதையும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இதெல்லாம் தேவையா? வெங்காயம்!'
வள்ளலார்: 'தம்பி, கடவுள் இல்லை என்று சொல்லியதால் இப்பிரச்சனை தீர்ந்துவிட்டதா? எனது நோக்கும், உனது நோக்கும் ஒன்றுதான்.'
'எனக்கும் ஒருகாலத்தில் இந்துமதத்தின்பால் வைத்திருந்த நம்பிக்கை அசைக்கமுடியாமல் இருந்தது. ஆனால், அவற்றையெல்லாம் விட்டு விட்டேன்.'
'சாதி, மதம், இனம், சமயம், சடங்கு இவற்றுக்குள் புகுத்தப்பட்ட இறைவனை அவற்றிற்கு அப்பால் எடுத்து வந்து, இவன் தான் "அருட்பெருஞ்ஜோதி" என்று உலகுக்கு காட்டினேன்.'
'இவருக்கு சாதி, மதம், சமயங்கள் இல்லை என்றும், எனவே இவரை வணங்கும் மக்களுக்கும் சாதி, சமயம் இல்லை என்று கூறினேன்.'
''கடவுளே இல்லை' என்று உன்போல் உன்போல் கூறவில்லையே? முள்ளை முள்ளால் தானே எடுக்கவேண்டும்?'
'இனி நீ கருப்பாடையை எடுத்துவிட்டு என்போல் வெள்ளாடையை உடுத்திக்கொள்'
பெரியார்: 'நானா? வெள்ளாடையா? வெங்காயம்! உங்களது சன்மார்க்கத்தினால் மட்டும் இப்பிரச்சனை தீர்ந்தாவிட்டது? இன்றும் கும்பகோனம், தஞ்சாவூர் போன்ற கோயில்களில் சிக்கி இறந்தவர்கள் நமது திராவிட மக்களல்லவா?'
ஆரியர்கள் செய்யும் சூழ்ச்சிக்கு இனியும் எத்தனை பேர் கோயில்களில் சாகப்போகிறார்களோ? ஆமாம்... இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா? அதைச் சொல்லும் முதலில்...'
வள்ளலார்: 'ஆமாம், என்றால் நீ எப்படி? என்று கேட்பாய்? இல்லை, என்றால் நீ என்னையே கருப்பாடை அணிந்துக்கொள்ளச் சொல்வாய்!'
'இறைவன் நமது அறிவுக்கு அப்பாற்பட்டவன. இறைவன் இருப்பதை விஞ்ஞான முறைப்படி விளக்கவா முடியும்? அறிவு எங்கு முற்றுபெறுகிறதோ, அங்கு ஆன்மீக அன்பு எழுகிறது. அன்பால் கடவுளைக் காணமுடியுமே அன்றி அறிவால் அல்ல! அந்த அனுபவம் எப்படிப் பட்டதென்றால்...'
'ஒவ்வொருவரும் இறப்பது நிச்சயம். நமக்கு மரணம் என்றாவது வந்தே தீரும் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது. என்றோ வரப்போவதை முன்பே இவன் எப்படி அதனை நிச்சயம் என்று கூறுகிறான்? மரணம் வராமலேயே இருந்துவிடலாமல்லவா? ஆனால், மரணம் நிச்சயம் வரும் என்றே அவன் நம்புகிறான்! ஏன்?'
'ஏனென்றால், அவனுடைய முப்பாட்டன் இறந்துவிட்டான், இன்று இல்லை. பாட்டன் இறந்துவிட்டான், இன்று இல்லை. தந்தையும் இறந்துவிட்டார், இன்று இல்லை. ஆகவே நானும் இறப்பேன், நாளை இருக்க மாட்டேன் என்று தமக்கு முன்னோர்களைக் காரணம் காட்டிக் கூறுகிறான்'
'ஆனால், இதை நீ உண்மை என்று ஒப்புக்கொள்ளவில்லையா?'
'ஏன், நீ அவனிடம் சென்று, உமது பகுத்தறிவினால், தம்பி, நீ கூறுவது தவறு, மரணம் மனிதர்களுக்கு இல்லை. மனித ஆற்றல் தான் உலகிலேயே சிறந்தது. நீ எப்படி உனது முன்னோர்களைக் காட்டி இவ்வாறு கூறலாம்? நீ என்றாவது இறந்து பார்த்திருக்கிறாயா? நீ இறந்ததை நீ பார்த்தால் தானே, நான் இறப்பேன் என்று கூற வேண்டும். என்று உன்னால் அவனிடம் கேள்வி கேட்க முடியுமா? முடியாது!'
'ஏனெனில் இறை அனுபவமும், மரண அனுபவமும் ஒருவனுக்கு ஏற்பட்டால் அவனால் அதனை வெளியில் கூறமுடியாமல் போகும்!'
'இப்பொழுது உன்வழியில் உன் கேள்விக்கு நான் கூறும் பதில், மரணம் தான் இறைவன். மரணம் இல்லை என்று கூறினால் இறைவனும் இல்லை. மரணம் - அதை நீ வென்றால் இறைவனையே வென்று என்போல் அவனுடன் இரண்டறக் கலந்துவிடலாம்!'
பெரியார்: 'நீங்கள் கூறுவதிலும் உண்மை இருக்கிறதோ? தாங்கள் கட்டியுள்ள ஞானசபையை நானும் மும்முறை வலம் வந்து விழுந்து வணங்கியது உண்டு. அது கடவுள் உண்டு என்பதற்காக அன்று, உங்களது ஆன்ம நேய ஒருமைப்பாட்டிற்காக நான் செய்த மரியாதி அது.'
'ஆனால் நீங்கள் இறைவனாகி விட்டதால் இந்தச் சமூகத்திற்கும், மக்களுக்கும் என்ன நன்மையைப் பெரிதாகச் செய்துவிட்டீர்கள்?'
'பசிப்பிணி தீரவேண்டுமென தருமச்சாலை தொடங்கினீர்கள். நீங்கள் ஏற்றி வைத்த அடுப்பு இன்னும் அணையாமல் இருக்கிறதேயொழிய, மேலும் அங்கு பிச்சைக் காரர்களல்லவா அதிகமாகி விட்டார்கள்!'
'எது எப்படியோ தற்போதய பிரச்சனை பிச்சைக்காரர்கள் அல்ல! நான் கடவுள் இல்லை என்று சொன்னதுபோல், இனி தலைவர்கள் பெயரும் இல்லை என்று எனது பெயரை எடுத்துவிட்டார்கள்! இதுதான் தற்போதய பிரச்சனை!' (பெரியார் போக்குவரத்துக் கழகம், என்று பல்வேறுபட்ட தலைவர்கள் பெயர் கொண்ட போக்குவரத்துக் கழங்களை அரசு நீக்கி, அதனை பொதுவாக "அரசு போக்குவரத்து கழகம்" என்று வழங்க ஆணையிட்டது)
வள்ளலார்: 'பிச்... பார்த்தீரா, கடவுள் இல்லை என்று சொன்ன உன்பெயரை மட்டுமா எடுத்தார்கள்? கடவுள் உண்டு என்று சொன்ன என் பெயரையும் எடுத்துவிட்டார்களே!'
("தென்னாற்காடு வள்ளலார்" மாவட்டம் என்பதனை "கடலூர்" மாவட்டம் என்று அரசு மாற்றிவிட்டது)
'மக்களுக்கு நாம் வெவ்வேறு வழியில் போராடியாவது நல்லதாகி விட்டது! கவலைப்படாதே... மக்கள் திருந்தி விட்டார்கள்!'
'இனி தலைவர்கள் பெயரை எடுத்தது போல் ஒவ்வொரு சாதி, மதம், இனம், சமயம் இவைகளையும் எடுத்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.'
பெரியார்: 'நாட்டு மக்களைப் பற்றிப் பேசியதால் இருட்டிவிட்டதுகூடத் தெரியவில்லை. இந்தாருங்கள் இந்த மெழுகு வத்தியை ஏற்றுங்களேன்!'
வள்ளலார்: 'இல்லை... வெளிச்சத்தின் பொருட்டு ஒரு மெழுகுவத்தி அழுவதை என்னால் சகிக்க முடியாது!'
'இதோ அகல் விளக்கை ஏற்றுகிறேன்."
பெரியார்: 'ஓ... இந்த கருப்புச் சட்டையால் உங்களை திருத்தவே முடியாது... சரி, நான் விடை பெறுகிறேன்...'
'கடவுள் இல்லை, கடவுள் இல்லை...'
வள்ளலார்: 'ஆகட்டும், அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி...'
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.