Sunday, May 26, 2013

ஓம் ஸ்ரீ காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளை

அன்பர்களே! வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை அவர்களைப் பற்றி திரு.R.N.ஜெயநாராயணக்கண்ணன் அவர்கள் தமது "ஞானபூமி" என்னும் நூலில் (ஓங்கார அருளாலயம் வெளியீடு) 'இருபதாம் நூற்றாண்டின் ஆத்ம ஞானிகள்' என்னும் தலைப்பில் கீழ்கண்டவாறு எடுத்துரைக்கிறார்.

ஓம் ஸ்ரீ காரணப்பட்டு கந்தசாமிப் பிள்ளை

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்ற போதத்தையும் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்ற ஞான வாக்கையும், ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், இந்திரிய ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க முறைகளையும் ஏம சித்தி, தத்துவ நிக்கிரகம் செய்தல், இறைவன் நிலையறிந்து அம்மயமாதல் போன்ற ஆன்மீக படிகளையும் சாகாக் கல்வியையும், சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் போன்ற பெரு நெறிகளையும், ஆன்மநேய ஒருமைப்பாட்டின் அவசியத்தையும் மரணமிலா பெருவாழ்வை வாழ்ந்துக் காட்டி நாமும் வாழ வழி வகுத்த வடலூர் இராமலிங்க சுவாமிகளான திருவருட்பிரகாச வள்ளலாரின் அணுக்கத்தொண்டராக "சமரச பஜனை ச.மு.கந்தசாமிப் பிள்ளையவர்கள் புதுவைக்கு அடுத்த காரணப்பட்டு என்ற ஊரில் சன்மார்க்க வாழ்வு வாழ்ந்து வந்தார்.



அணுக்கம் என்றால் நெருக்கம் என்று பொருள். வள்ளல் பெருமானோடே நெருங்கித் தொண்டாற்றி, ஐயாவின் அருளாசியால் வாழ்வை வைத்து வாழ்ந்தார் இத்தொண்டர்.

இவர் 1838-ஆம் ஆண்டு ஏம்பலம் என்ற ஊருக்கு அருகிலுள்ள காரணப்பட்டில் பிறந்தார். தந்தையார் பெயர் முத்துசாமிப் பிள்ளை, தாயார் தைலாம்மாள். இவர் கருணீகர் குலம், பிரம்ம கோத்திரம்.

இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் தெளிவாகக் கற்றவர். எப்போழுதும் பஞ்சாட்சர ஜபம் செய்துக் கொண்டிருப்பார். இயல் இசை தமிழ்ச் சிறப்புடன் விளங்கினார். கவிகளை தேன்மாரிப் பொழிவார். இராமலிங்க சுவாமிகளின் புகழையும் அருளையும் கேட்டுணர்ந்த இவர் வள்ளல் பெருமானிடம் ஆறாக் காதல் கொண்டார். வள்ளலாரிடம் சென்று தம் குறையை இரந்தபோது பெருமான் அவருக்கு விபூதிக் கொடுத்து "தக்க உத்தியோகம் தருவோம்" என்று அருளிச் செய்தனர்.

பிள்ளையவர்கள் தம் உபாசனாமூர்த்தியாக வள்ளலாரையே ஏற்றுக்கொண்டார். "திருவருட்பிரகாச வள்ளலாரை உபாசனாமூர்த்தியாகக் கொண்டொழுகும் காரணப்பட்டு சமரச பஜனை ச.மு.கந்தசாமிப் பிள்ளை" என்று தமது "பிரபந்தத் திரட்டு" என்னும் நூலின் முகப்பில் எழுதியுள்ளார். திருஅருட்பா ஆறுதிருமுறைகளையும் சிறப்பான முறையில் ஆய்ந்து பதிப்பித்தார்.

இவரை "ஆயிரம் பிறை கண்டவர்" என்பார்கள். திருஅருட்பாவில் பொதிந்துக் கிடக்கும் சமரச சுத்த சன்மார்க்க கருத்துகளை சொற்பொழிவாக மக்களுக்கு உணர்த்தினார். இவரது சிறந்த நூல் "பிரபந்த திரட்டு" ஆகும். இது 1500 பக்கங்களைக் கொண்டது. இதில் 25 நூல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள் 14 நூல்கள் வள்ளலார் மேல் பாடப்பட்டவை. இராமலிங்க சுவாமிகள் திவ்ய சரித்திரக் கீர்த்தனை, சற்குரு வெண்பா அந்தாதி, திருவருட்பிரகாச வள்ளலார் வருகை என்பவை மாணிக்கக் கற்களாகும். வள்ளலார் வருகை பற்றிய அவரது பாடல்களை இங்கு தருகிறோம்.

சாவாத நெறியருளும் சாமிவரு மாகில்
சாசஷியதா யநுபவிக்குந் தன்மைவரு மாகில்
சாகாத தலையாதித் தரமறிவ னாகில்
சாந்தமுட னல்லதிசை சாற்றுசிறு பல்லி!

சித்திபுரச் சிற்சபையின் தேவன்வரு மாகில்
சித்திவளா கத்தொளிசெய் சித்தன்வரு மாகில்
சித்திபெறு முத்திநெறி சேரவரு மாகில்
சித்த முந்திசையிற் செப்புசிறு பல்லி!
           (நன்னிமித்தம் பராவல் 26-30)

1924-ஆம் ஆண்டு திருஅருட்பா ஆறு திருமுறைகளையும் ஒரே தொகுதியாக வெளியிட்டார்.

வந்தது முடிந்தது:

வயதானது, உடல் கூடு சோர்வுற்றது. ஒரு நாள் அங்குள்ளோரைக் கூப்பிட்டு நான் இராமலிங்க சுவாமிகளின் திருவடிகளைச் சேரப்போகிறேன் என்றார். படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று உரத்தக் குரலில் உள்ளாழ்ந்து சொன்னார். 1924-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி (02-12-1924) உடலை விட்டுப் புறப்பட்டுவிட்டார். காரணப்பட்டு கந்தசாமிப்பிள்ளையவர்களைப் பற்றி குகா.இராஜமாணிக்கம்பிள்ளையவர்கள் பாடியபாடல்கள் கீழ்வருமாறு:

வெண்பா

இரத்தாசஷிக் கார்த்திகையில் ஏற்றபதி னேழில்
திரத்தசட்டி சேரவிட்டம் செவ்வாய் - விரக்தனவன்
காரணப் பட்டினிலே கந்தசாமிப் பெரியோன்
பூரணணாய் நின்றான் பொலிந்து!

விருத்தம்

ஆயிரந்தாய்க் கருணையினும் அதிகங்கொண்ட
    அருட்பிரகாசப் பெரியார்க் கடிமையாகி
ஆயிரம் பாக் களுக்கதிக மான பாக்கள்
    அவனியிலே செய்த தொண்டர் கந்தசாமி
பாயிரத்தி லவர்செய்த நூன்மு கப்பில்
    பார்த்திட்டா லவர்பெருமை கான்பீர்; கேண்மின்
ஆயிரத்தி லொருகூறு பெற்றா மாகில்
    அவர்பத்தி தனில்நாமு முய்ந்து விட்டோம்.

அருட்பெருஞ்ஜோதி          அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.