தயவு/கருணை Vs. அசாரம்/வழக்கம்
அன்பர்களே!
வள்ளலார் அவர்கள், கடவுளின் அருள் "கருணை என்னும் தயவினாலேயே"
கிட்டும் என்கிறார்கள். அந்த தயவு எல்லோரிடமும் இயற்கையாகவே உள்ளது என்பதை முதலில்
நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
"எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி"
அத் தயவு விருத்தியாகாமல், நாம் கடைபிடித்துவரும் பல வகை ஆச்சாரங்களால் முடக்கப்படுகிறது.
எனவே நாம் அந்தத் தயவை விருத்தியாகுமாறு செய்வித்தல் வேண்டும். விருத்தியானால்தான்
"ஒருமை" வரும். (ஒருமை என்பது அறிவும் ஒழுக்கமும் ஒத்தயிடம்)
"ஒருமைக் கண்தான் கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமப் புடைத்து"
அந்த ஒருமையிலேயே, நாம், கடவுளின் நிலையறிந்து, அக்கடவுளின் அருள் பெறுவதாக
உள்ளது.
நம்மிடம் இயற்கையாகவே உள்ள தயவை விருத்தி செய்வதற்கு நமக்கு தடையாக உள்ளவற்றை
வள்ளலார் வெளிப்படுத்தியுள்ளார்கள். அதில் முக்கியமானது "ஆசாரம்"
என்பது.
தத்துவ நியாயத்தை அனுசரித்துச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில்
நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத்
தடையாக இருப்பன சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு மத ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.
ஆதலால் இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்யம் விருத்தியாகாது.
(பக்கம் 418)
கட்டுப்பாட்டு ஆசாரங்கள்
அவையாவன,
ஜாதி ஆசாரம், குல ஆசாரம், ஆசிரம ஆசாரம், லோக ஆசாரம், தேச ஆசாரம், கிரியா
ஆசாரம், சமய ஆசாரம், மத ஆசாரம், மரபு ஆசாரம், கலை ஆசாரம், சாதன ஆசாரம், அந்த ஆசாரம்,
சாஸ்திர ஆசாரம் முதலிய ஆசாரங்கள் நமக்கு தயவை விருத்தி செய்ய தடையாக உள்ளன.
ஆசாரம் என்பது "வழக்கம்" ஆகும். நாம் செய்கின்ற சில வழக்கங்களினால்
தயவானது (கருணையானது) விருத்தியாகாமல் இருக்கிறது. ஆசாரங்களின் வகைகளை குறித்து காண்போம்...
ஜாதி ஆசாரம்:
ஜாதி என்றால் இனம், வருனம் ஆகும். மேற்படி சாதியானது தொழில் ஒழுக்கத்தினால்
முதலில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அச்சாதி "பிறப்பினால்" பார்க்கப்படுகிறது.
அச்சாதி வருணம், இனம் அடிப்படையில் பல வகைப்படுகிறது. ஒவ்வொரு சாதிக்கென
கட்டுப்பாடு ஆசாரங்கள் வகுக்கப்பட்டுள்ளது. ஆக, எவர் ஒருவர் "சாதி" அடிப்படையில்
ஏதேனும் ஒரு பழக்க வழக்கத்தை கைக்கொண்டால் அவருக்கு தயவு விருத்தியில் தடை ஏற்படும்.
பொது நோக்கம் அவரிடம் ஏற்படாது. எனவே சாதி ஆசாரங்களை விட்டு ஒழிக்க வேண்டும் என்கிறார்
வள்ளலார்.
குலாச்சாரம்:
குலம் என்றால் "குடி". சாதியால் பிரிவுபட்டது மற்றுமில்லாமல் குடியாலும்
வேறுபடுத்தப்பட்டான் மனிதன். மேற்படி ஒவ்வொரு "குடி"க்கும் ஒவ்வொரு வழக்கம்
உள்ளது. ஆக, எவர் ஒருவர் குலப்படியாக ஏதேனும் வழக்கத்தை மேற்க்கொண்டால் "தயவு"
விருத்தியாகாது என்கிறார் வள்ளலார்.
ஆசிரம ஆசாரம்:
சன்னியாசம், காட்டிற்குச்சென்று தவம் செய்யும் நிலை, பிரம்மசரியம் உட்பட
எந்த ஒரு வாழ்க்கையை குறிப்பிட்டு மேற்கொண்டால் அது ஆசிரம வாழ்க்கை ஆகும். சந்நியாசம்
என்பது துறவு. இத்துறவிலும் நான்குவகை துறவு உண்டு என்பர். ஆக, துறவறம், தவம் (வானப்பிரஸ்தம்)
போன்ற ஆசிரம வழக்கங்கள் நம்முள் உள்ள கருணையை விருத்தியாகாமல் தடை செய்கிறது. இவ்வழக்க
வாழ்க்கை முறையில் "பொது நோக்கமில்லை". எனவே ஆசிரம ஆசாரம் தயவை விருத்தி
செய்வதற்கு தடையாக உள்ளது என்கிறார் வள்ளலார்.
லோகாச்சாரம்:
உலக மக்களிடையே பழக்க வழக்கத்திலுள்ள பலசெய்கையில் (உதாரணம்: உயர்வு, தாழ்வு,
நிறம்) பொது நோக்கமில்லை. அங்ஙனம் உள்ள எந்தவொரு வழக்கத்திலும் நாம் பழகினால், அது
"தயவு" விருத்திக்கு தடையாக அமையும் என்கிறார் வள்ளலார்.
தேசாச்சாரம்:
இடம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனை வேறுபடுத்தும் எந்தவொரு வழக்கமும்
நம்மிடம் இருக்குமானால் அது நம் தயவை விருத்திசெய்வதற்கு தடையாக அமையும் என்கிறார்
வள்ளலார்.
கிரியாச்சாரம்:
கிரியை என்றால் செய்கை. உபாயம் எனப்படும். மந்திரம், தந்திரம், சூழ்ச்சி,
காணிக்கை, விரதம் உட்பட எந்தவொரு வழக்கத்தை பயன்படுத்தி வழிபாடு செய்தால் அவை கிரியை
ஆகும். நம்மிடம் உள்ள தயவை விருத்தி செய்வதற்கு மேற்படி "கிரியாசாரங்கள்"
தடையாக உள்ளது என்கிறார் வள்ளலார். மேற்படி கிரியையில் பொதுநோக்கம் வராது. சமய, மத
மார்க்கங்களில் மேற்படியான கிரியாசாரங்கள் உண்டு.
சமயாச்சாரம்:
சமயாசாரம் என்றால் அந்தந்த சமயங்களில் உள்ள வழக்கங்கள் ஆகும். சமயத்தின்
மீது இலட்சியம் கொண்டால் அதன் கோட்பாடுகளின் படி வழக்கம் அமைய வேண்டும். சமய சடங்கு
சம்பிரதயங்கள் நம்மில் உள்ள தயவை விருத்தி செய்வதற்கு தடையாக உள்ளது என்கிறார் வள்ளலார்.
சைவம், வைணவம் உட்பட எந்தவொரு சமயங்களிலும் இலட்சியம் வைக்கக்கூடாது என்றால்
அதன் "வழக்கங்களில்" எங்ஙனம் இலட்சியம் வைக்க முடியும்? சமய பழக்க வழக்கங்களை
மேற்கொண்டால் "தயவு" விருத்தியாகாது என்கிறார் வள்ளலார். அவை நம் மனதில்
பற்றவே கூடாது என்கிறார்கள்.
மதாச்சாரம்:
மதம் என்பது சமயம் ஆனாலும் கொள்கையில் மதம் வேறுபாடு உடையது. சைவம் வைணவம்
சமயமாகும். வேதாந்தம், சித்தாந்தம் (இந்து மதம்) மற்றும் கிறுத்து, இஸ்லாம், புத்தம்,
சமணம், சீக்கியம் போன்றவைகள் மதமாகும் எனலாம். அதாவது மதமானது சமயம் கடந்து நிற்பது
ஆகும். இக்கொள்கை அதாவது மதக் கோட்பாட்டில் உள்ள வழக்கங்களும் தயவை விருத்தி செய்வதற்கு
தடையாக உள்ளது என்ற உண்மையை வள்ளலார் கண்டார்கள்.
கலாச்சாரம்:
கலம் என்றால் ஆபரணம், ஆயுதம் உட்பட பல வருகிறது. மேற்படி ஏதேனும் கலம் சம்பந்தப்பட்ட
வழக்கம் நம்மிடம் இருக்குமானால், நமக்கு தயவு விருத்தியாகாது. கலாசாரம் நமக்கு கூடாது
என்கிறார் வள்ளலார்.
சாதனாச்சாரம்:
சாதனம் என்றால் கருவி, பயிற்சி, சின்னம் முதலியவையாகும். ஏதேனும் கருவிகள்
மூலம் மற்றும் மூச்சுப்பயிற்சி, ஜபித்தல் மாதிரி ஏதேனும் பயிற்சிகள் மூலம் மற்றும்
மாலையணிதல், திருநீறு உட்பட் ஏதேனும் சின்னங்கள் மூலம் வழக்கத்தை நாம் மேற்கொண்டால்
அவையாவும் "தயவு" விருத்திசெய்வதற்கு தடையாகிவிடும். ஆக, சாதானாச்சாரம் கூடாது
என்கிறார் வள்ளலார்.
அந்தாச்சாரம்:
அந்தம் என்பது அஞ்ஞானம். ஆன்மீகம் அடிப்படையாக கொண்டு அஞ்ஞான வழக்கம் (மூடப்பழக்கம்)
நம்மிடம் இருப்பின் அது தயவை விருத்தி செய்வதற்கு தடையாக இருக்கும் என்கிறார் வள்ளலார்.
சாஸ்திராச்சாரம்:
சாஸ்திரம் என்பது நூல். நூலின்படி அமையப்பெறும் எந்தவொரு வழக்கமும் நம்மிடமுள்ள
"தயவை" விருத்தி செய்வதற்கு தடையாகும் என்கிறார் வள்ளலார். வேதாந்தம், தர்க்கம்
உட்பட பல நூல்கள் அந்தந்த மதங்களில் உள்ளன. ஆகம, ஆரண விதிகள், சடங்கு செய்முறைகள்,
போன்ற "சாஸ்திர வழக்கம" நாம் மேற்கொண்டால், நம்மிடம் உள்ள தயவை விருத்தி
செய்வதற்கு அவையாவும் தடையாக அமையும் என்கிறார் வள்ளலார்.
அன்பர்களே! மேற்படி சொல்லப்பட்ட 13 வகை ஆச்சார வகைகளை விட்டு ஒழித்தல் வேண்டும்.
இவைகளெல்லாம் தயவை பெற எப்படி தடைகளாக இருக்கிறது என்பதனை சொல்ல முற்பட்டால் விரிந்துக்கொண்டே
செல்லும். அதனால் மேற்படி ஆச்சாரங்களில் இதுவரை மூழ்கியுள்ள நாமே நம்மை சுய பரிசோதனை
செய்யின் நமக்கே இதன் உண்மை தெரியவரும். மேற்படியான வழக்கங்களை விட்டுவிட்டப்பிறகு
"பொது நோக்கம்" என்கிற "உண்மையான அறிவான வழக்கம்" நம்மிடம்
வரும், வர வேண்டும் என்கிறார் வள்ளலார்.
தயவை விருத்தி செய்வதற்கு தடையாக இருந்த வழக்கங்களை விடுவது என்பது கடினமான
செயல் அல்ல. சுதந்தரத்தை பெற முயலுங்கள்.
சுத்த சன்மார்க்க ஒழுக்கம் யாதெனில் "இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக்
கொள்ளாதீர்கள், எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்"
(பக்கம் 410)
ஆசாரங்களை விட்டால் தான் இறைவன் அருள் கிட்டும்.
(நன்றி: APJ.ARUL)
உயிரெல்லாம் ஒருநீ திருநடம்
புரியும்
ஒருதிருப் பொதுஎன அறிந்தேன்
செயிரெலாம் தவிர்ந்தேன்
திருவெலாம் அடைந்தேன்
சித்தெலாம் வல்லதொன் றறிந்தேன்
மயிரெலாம் புளகித் துளமெலாம்
கனிந்து
மலர்ந்தனன் சுத்தசன் மார்க்கப்
பயிரெலாம் தழைக்கப்
பதியெலாம் களிக்கப்
பாடுகின் றேன்பொதுப் பாட்டே (5426)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.