Tuesday, June 4, 2013

அருள்திரு.ச.மு.கந்தசாமிப் பிள்ளை

அருள்திரு.ச.மு.கந்தசாமிப் பிள்ளை

"வாழையடி வாழைஎன வந்துதித்த திருக்கூட்ட மரபில் யானும் ஒருவன்" எனத் தம்மை அழகாக அறிமுகமாக்கிக் கொண்டவர் வள்ளலார். அவரது அடியினையொட்டி அவர் காலத்தில் அவருடன் அணுக்கத்தொண்டராக இருந்தவர் திரு.ச.மு.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் ஆவார்கள். வள்ளலார் கல்வி அறக்கட்டளைக்காக பொருள்களை வாரிவழங்கயிருக்கும் அன்பர்களெல்லாம் வாழையடி வாழையாக வந்துதித்தவரின் அடியைப் பின்பற்றி "வள்ளலடி வள்ளலாக" இருந்தப் பெருந்தகை - ச.மு.கந்தசாமிப் பிள்ளையைப் பற்றி தெரிந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

ச.மு.கந்தசாமிப் பிள்ளையவர்கள் கடலூர் அருகேயுள்ள காரணப்பட்டு கிராமத்தில் கருணீகர் மரபில் தோன்றியவர். சந்திரசேகரன் பிள்ளைக்குப் பிறந்த முத்துசாமிப் பிள்ளைக்கும் தயிலம்மாளுக்கும் மகனாக இவர் பிறந்தார்.

"பாட்டால் அவன் புகழைப் பாடுகின்றோர் பக்கநின்று கேட்டால் வினைகள் விடைகேட்குங்காண்" என்ற வள்ளலாரின் வரிகளுக்கிணங்க, இவர் காரணப்பட்டில் சமரச பஜனை நடத்தித் தமது தமிழ்த் திறத்தால் அருட்பாவை ஓதிவந்தார்.

படிப்பறிவு இல்லாத இவர், வள்ளற்பெருமானின் ஆசியால் "பிரபந்தத் திரட்டு" என்ற நூலை 1923-ல் இயற்றியருளினார். அதனை, "பாடவகைக் கேற்ற படிப்பில்லா நாயேனைப் பாடவகை செய்தருளும் - பண்புடைய சற்குருவே" என்று பாடி வாழ்த்துகின்றார். மேலும் இவர் 1924-ல் திருஅருட்பாவைத் தமது பதிப்பாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இவரது வாழ்வில் வள்ளலாரின் அருள், பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளதாக இவரது நூல் கூறுகிறது.

வள்ளலார் சித்திவளாகத்தில் மறைந்த நாளன்று இவர் அருகில் இல்லாததால், செய்தியறிந்து மூன்றுநாள் கழித்து சித்திவளாகம் சென்று, நான் இல்லாதபோது இவ்வாறு செய்துவிட்டீர்களே! எனக்கு என்ன கட்டளை இட்டுள்ளீர்கள்? எனக் கதறி அழுது அழுது சித்திவளாகத்தை பலமுறை அங்கப்பிரதட்சணம் செய்து தமது உடலை வருத்திக்கொண்டபொழுது, வள்ளலார் அவர் முன்தோன்றி விபூதி தந்து "பின்பு தக்க உத்தியோகம் தருவோம்" என்று இயம்பியதாக இவர் தமது நூலில் பாடியுள்ளார்.

இராமலிங்கர் கூறிய உத்தியோகமாக இவர் பிரபந்தத் திரட்டை, அவர் மறைந்த 49 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்டு ஏற்றுக்கொண்டார்.

பிரபந்தத் திரட்டில் இவர் பாடிய தலைப்புகளில் முக்கியமாக வள்ளலாரது சரித்திரக் குறிப்புகள், கீர்த்தனைகள், கொலைமறுத்தல், அருட்பிரகாசர் அற்புத அந்தாதி, வடற்சிற்சபை மாலை, அருட்பிரகாசர் அற்புத மாலை, விபூதி பிரசாத மகிமை, திருவருட்பிரகாச வள்ளலார் நாமாவளி போன்றவை போற்றப்படுவனவாகும்.

இதுவரை வள்ளலாருக்கெனத் தனியாக பாசுரங்களை பெருமளவில் இயற்றியவர்கள் இவரைத் தவிர எவருமிலர். பிரபந்தத் திரட்டு என்ற இவரது நூலில் மொத்தம் இவர் இயற்றிய பாடல்கள் 3,466 ஆகும். இதில் 1,212 அந்தாதிப் பாடல்கள், 634 நாமாவளிகள், 555 கண்ணிகள், 511 வெண்பாக்கள், 408 கீர்த்தனைகள், 114 விருத்தங்கள், 32 கலித்துறைகள் அடங்கும். இவைகள் அனைத்திலும் இவருடைய குருவான "இராமலிங்கம்" என்ற பெயரை 878 முறை உபயோகப்படுத்தியுள்ளார். இது தவிர இந்நூலில் இந்நூலாசிரியரான இவரைப்பற்றி பல வித்வான்கள் பாடிய சிறப்புப் பாயிரங்கள் பல.

இந்நூலில் பலச் செய்திகளை இவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் முக்கியமாக "வள்ளலார் போட்டிருக்கும் பாதரட்சைகளை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஒவ்வொருவர் எடுத்துக் கொண்டுபோய் போற்றி அதில் லிங்கத்தை வைத்துக்கட்டி வைப்பார்கள். சிலநாள் கழித்து எடுத்துப் பார்த்தால் லிங்கம் கட்டியிருக்கும். எடுத்து நெருப்பிலிட்டால் உருகி புகைந்துப் போகாது. இதனால் வள்ளலார் சுத்த தேகம் பெற்றதன் இலக்கணம் புலனாகிறது" என்று வள்ளலார் போட்டிருந்த பாதரட்சைகளைப் பற்றிக் கூறுகிறது.



வள்ளலார் போட்டிருந்த அந்த அற்புத பாதரட்சைகளிரண்டும் தற்போது இவரது சமாதியில் (காரணப்பட்டில்) வைத்துப் பூஜிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது வாரிசுதாரர்களான திருநாவுக்கரசு - மல்லிகா என்பவர்களால் வைக்கப்பட்டுள்ள ஓர் அணையா விளக்கும் அவரது சமாதியில் எரிந்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அருளாளரின் சமாதியை அனைவரும் வந்து கண்டு வள்ளலாரின் அருளைப் பெறவேண்டும். கடலூரிலிருந்து இக்கிராமத்திற்கு பேருந்து வசதியும் உண்டு.

இவரது "பிரபந்தத் திரட்டு" என்ற நூல் அனைவரும் படித்து பயன்பெரும் வகையில் இந்நூலைப் பதிப்பித்து வெளியிட சன்மார்க்கள் முன்வரவேண்டும். வள்ளலாரின் புகழ் பாடும் இந்நூல் புதுமைப் பெற்று வெளிவர வள்ளலார் அருள் புரிவாராக!

"வாழ்கவிவ் வையகமும் - வானகமும் மற்றவுமே வாழ்க திருஅருட்பா - வாய் மலர்ந்த சற்குருவே"

(இக்கட்டுரை "கருணீகர் நல்வாழ்வு" என்னும் மாத இதழில் அக்டோபர் மாதம் 1997-ல் வெளிவந்தது என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்)

அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி





2 comments:

  1. A scholar who become a follower of Sanmargh (Sanmargh – the path advocated by Vallalar)

    Karanapattu S M Kandasamy Pillai was a learned person, a great scholar, musician, poet and had great affinity on Tamil language. He was suffering with a unique disease that he got fainted often. All sorts of treatments failed. He came to know about Vallalar and hence he came and requested Vallalar to cure him. Vallalar not only cured him by giving Vibhuti (holy ash), but also accepted him as his disciple. Since then, he started propagating about Vallalar, his greatness, his principles, etc. He also followed the various disciplines advocated by Vallalar (such as avoidance of killing animals, non intake of non vegetarian food, feeding the poor etc) scrupulously and remained a pure sanmarghi next to Thozhuvur Velayudha Mudaliar.



    He wrote “ Sarithira Keerthanai”, “Sarguru Venpa Andhathi”, “Gurunesa venpa”, “Siddhivilasa Namavali”, etc., composed several songs on Vallalar, compiled and published them as “prabhandha thirattu”. He also compiled entire “Thiruvarutpa” in a single book and published in 1924. In this way, Kandasamy pillai spent his life in the service of Vallalar and got his Grace.

    ReplyDelete
  2. Arutperunjothi thanipperunnkarunai

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.