நான் அசைவம். எப்படி வள்ளலாரை பின்பற்றுவது?
எமது முகநூல் நண்பர்
ஒருவர் மேற்கண்ட கேள்வியினை கேட்டுள்ளார். அதற்குண்டான பதில் என்னவாக இருக்க முடியும்,
பார்ப்போம்.
நம்மில் பலருக்கு வள்ளலார்
கொள்கையினை பின்பற்ற வேண்டும் என்ற அவா உள்ளது. ஆனால் வள்ளலார், தம் கொள்கையினை பின்பற்ற
அடிப்படை விதியாக புலால் மறுத்தலை மிகவும் வற்புறுத்துகிறார். சாதி, மத, இன பிரிவுகளை
வெறுத்த அவரே, இரண்டு இனங்களை புதிதாக இவ்வுலகிலயல் மக்களுக்காக உருவாக்கியுள்ளார்.
ஒன்று "அக இனம்", மற்றொன்று "புற இனம்".
அக இனம் என்பது, யார்
ஒருவர் புலாலை / மாமிசத்தை மறுத்து சைவ உணவினை உட்கொள்கிறாரோ அவரை 'அக இனம்' என்று
உலக மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துகிறார். எந்த மதத்தவர்களாயினும், எந்த சமயத்தவர்களாயினும்,
எந்த சாதியினர்களாயினும், எந்த நாட்டினர்களாயினும், எந்த மொழியினாராயினும், எப்படிப்பட்ட
மனிதர்களாயிருந்தாலும், எப்படிப்பட்ட ஞானிகளாயினும் அவர்கள் சைவ உணவினை மட்டுமே தேர்ந்தெடுத்து
உண்பவர்களாயின் அவர்கள் யாவரும் இந்த 'அக இனம்' என்னும் நம்மவர்கள் ஆவார்கள்.
புற இனம் என்பது, யார்
ஒருவர் புலால் / மாமிசம் உண்கிறாரோ அவரை 'புற இனம்' என்று தனியே பிரித்து விடுகிறார்.
எந்த மதத்தவர்களாயினும், எந்த சமயத்தவர்களாயினும், எந்த சாதியினர்களாயினும், எந்த நாட்டினர்களாயினும்,
எந்த மொழியினாராயினும், எப்படிப்பட்ட மனிதர்களாயிருந்தாலும், எப்படிப்பட்ட ஞானிகளாயினும்
அவர்கள் அசைவ உணவினை / புலால் உணவினை / மாமிசத்தை உண்பவர்களாயின் அவர்கள் யாவரும் இந்த
'புற இனம்' என்னும் நம்மைச் சாராத புறத்தவர்கள் ஆவார்கள்.
மனிதர்களிடையே பிரிவினையினை
விரும்பாத வள்ளலார், தாமே இரு பிரிவினையினை உருவாக்குகிறார் என்றால், அதுவும் அந்தப்
பிரிவினை எதன் அடிப்படையில் என்றால் இந்த உணவின் அடிப்படையில்தான். அப்படிஎனில் நாம்
உண்ணும் உணவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது! என்பதனை உணரவேண்டும்.
நாங்கள் மாமிசம் உண்டால்,
இவருக்கு (வள்ளலாருக்கு) ஏன் வலிக்கிறது? எங்கள் கடவுள் நாங்கள் மாமிசம் உண்பதை தடுக்கவில்லை,
அல்லது மாமிசம் உண்ண சொல்கிறார் என்று சில நண்பர்கள் கூறுகின்றனர்.
மாமிசம் என்பது, கொலை
செய்யப்பட்ட இறந்த உடல்களின் பிண்டமாகும். இப்போதுள்ள நமது அரசியல் சட்டத்தில் மனிதன்
மனிதனை கொன்றால் மட்டுமே கொலை என்ற வரம்பிற்கு வரும். ஆனால் மனிதன் மற்ற உயிருள்ள மிருகங்களையோ,
பறவைகளையோ, மீன் இனங்களையோ, அதனதன் கரு முட்டைகளையோ கொலை செய்தால், அதனை கொலை என்றோ
அதற்குண்டான தண்டனை என்ன? என்பது பற்றியோ நம் சட்டத்தில் எதுவும் கூறவில்லை.
முன்னொரு
காலத்தில், திருவாரூரில் அரசான்ட நமது தமிழ் மன்னன் 'மனுநீதி சோழன்' என்பவன், தன்னுடைய
ஒரே மகன் தெரியாமல் ஒரு பசுங்கன்றை தனது தேரில் ஏற்றி கொன்றுவிடுகிறான். அதனை அறிந்த
மன்னன், தம் மகன் என்றும் பாராமல், அவன் ஒரு உயிரைக் கொன்று, கொலை பாதகத்தை செய்ததினால்
அவனையும் அதே போன்று தேர் சக்கரத்தில் வைத்து கொல்ல ஆணையிட்டதையும் நாம் அறிகிறோம்.
(இந்நீதியினைப்பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும் http://www.vallalarr.blogspot.in/2013/04/blog-post_27.html
)
இதிலிருந்து, நமது முன்னோர்கள்
எந்த உயிரினத்தைக் கொன்றாலும் அது கொலையே என்று தமது அரசியல் சட்டத்தில் வைத்து பேணியிருப்பதை
காணமுடிகிறது. திருவள்ளுவர், புத்தர், மகாவீரர், அசோகர் போன்ற அருளாளர்களும் மாமிசம்
உண்பதை கண்டித்தனர். வள்ளலார் இதற்கான காரணத்தை காரணத்தை இவ்வாறு கூறுகிறார்,
"ஜீவர்களெல்லாம்
- ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏக தேசங்களாய்ச் சர்வ சக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட
படியால் ஓர் உரிமையுள்ள சகோதரர்களேயாவர். சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்ற
போதும், துக்கப்படுவாரென்று அறிந்த போதும் - அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு
சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்க கண்ட
போதும், துக்கப்படுமென்று அறிந்த போதும் மற்றொரு ஜீவனுக்கு உருக்க முண்டாவது, 'பழைய
ஆன்ம உரிமை' என்று அறியவேண்டும்"
அதாவது நம்மையெல்லாம்
(மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன) படைத்தவர் ஒரு சக்தியுள்ள
கடவுளாகும். எனவே நாமெல்லாம் அவ்வகையில் சகோதரர்கள் என்று அறியவேண்டும். புறத்தே தேகம்தான்
வேறுபடுகிறதே அன்றி அகத்தே உள்ள ஆன்மாவால் நாமெல்லாம் சகோதரர்கள். இன்று மனித தேகத்தில்
உள்ள இந்த ஆன்மா, நாளை மீன் தேகமோ, ஆட்டின் தேகமோ, மரத்தின் தேகமோ எடுக்க உள்ளது. இன்று
ஆட்டின் தேகத்தில் உள்ள ஆன்மா, நாளை மனித தேகம் எடுக்கவுள்ளது என்பதனை அறிய வேண்டும்.
இன்று நீ ஒரு ஆட்டை கொலைச் செய்தால், அது உண்மையில் நீ உன் சகோதரனை கொலை செய்ததற்குச்
சமம். அதன் மாமிசத்தை உண்பதும், நீ உன் சகோதரனின் மாமிசத்தை உண்பதற்கு சமம். எனவே நாமெல்லாம்
ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று கூறுகிறார் வள்ளலார்.
தாவர உணவு மட்டும் எப்படி
சைவ உணவு என்று சொல்லலாம்? என்ற கேள்விக்குண்டான பதிலை இங்கே சொடுக்கி படிக்கவும்
இதனை உணர்ந்தவரான வள்ளலார்,
ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை கொலை செய்து உண்டால் அவருக்கு வலிப்பதில் வியப்பேதும்
இல்லையே! ஏன் இதனை உணர்ந்த நமக்கும் சகோதர பாசத்தால், ஆன்ம நேய ஒருமைப்பாட்டால் வலிக்கவே
செய்யும்!
மாமிசம் உண்பதை கடவுள்
தடுக்கவில்லையா? தடுக்கின்றார். எப்படி தடுக்கின்றார்? நாம் ஒரு உயிரினை கொலை செய்யும்போது,
அவ்வுடலில் உள்ள ஆன்மா வலி தாங்க முடியாமல் கத்துகிறதே! அப்போது கடவுள் நீங்கள் செய்யும்
செயலை, தடுப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? அவ்வலியால் உடலை விரைத்து துள்ளுகிறது, துடிக்கிறதே!
அப்போது கடவுள் நீங்கள் செய்யும் செயலை, தடுப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? இதன் வலி எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
ஆனால் கொலை செய்யும் நோக்கில் ஒரு சகோதரன் துன்புறுத்தப்பட்டு பிழைத்துவிட்டான் என்றால்,
அந்த சகோதரரிடம் சென்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் சொல்வார்கள் அந்த வலியும் பயமும்
நரக வேதனையாக இருந்தது என்பார்கள். அவ்வாறு ஒவ்வொரு ஆன்மாவும் தன்னைப் பாதுகாக்க துடிக்க
வைப்பதே, இயற்கையான இறைவனின் தடுப்பு முறையாகும். அதனை அறியாது நாம், பிற உயிர்கள்
துடிக்க துடிக்க கொலைசெய்து உண்டுவிடுகிறோம். ஒவ்வொரு உடலில் உள்ள ஆன்மாவை பாதுகாக்கவே
'வலி' என்ற உணர்ச்சியினை இறைவன் எல்லா உடல்களுக்கும் கொடுத்துள்ளான். ஆன்மாவிற்கு பாதிப்பு
வருகையில் இறைவன் இந்த வலியினால் தடுக்க முற்படுகின்றார், என்று அறிய வேண்டும்.
எங்கள் கடவுள் மாமிசம்
உண்ணச் சொல்கிறார்! யாதுமற்ற வெட்டவெளி, பேரண்டம் என்கிற பெருவெளி, அவற்றில் அடங்கியுள்ள
கணக்கில்லா அண்டங்கள், அவற்றில் அடங்கியுள்ள கணக்கில்லா உலகங்கள், அவற்றில் ஒன்றான
நாம் வாழும் இவ்வுலகம், இவ்வுலகில் வாழும் அணுவான உயிர்களிலிருந்து மனித உயிர்கள் வரை
யாவற்றிக்கும் காரணமாய் இருப்பவர் ஒரே ஒரு கடவுளே ஆவர். எங்களுக்கு ஒரு கடவுள், உங்களுக்கு
ஒரு கடவுள் என்பதெல்லாம் இல்லை. சரி, யாருடைய கடவுள் உண்மையான கடவுள்? மாமிசம் உண்ண
சொல்லும் எங்கள் கடவுளா? மாமிசத்தை மறுக்கச் சொல்லும் உங்கள் கடவுளா?
இவ்வுலகின் மாயையால்,
'கடவுள் ஒருவரே உள்ளார்' என்பதனை ஒப்புக்கொள்ளும் மார்க்கங்கள் பலவாக இருப்பதால், அது
ஒவ்வொன்றும் ஒவ்வொருக் கடவுளை கூறிக்கொண்டிருக்கிறது. வானில் உள்ள நிலவு ஒன்றுதான்.
ஆனால் அதன் பிம்பம் ஒரு அசுத்தமான குட்டையில் பிரதிபலிக்கும் போது அந்த பிம்பம் ஒளியின்றி
சற்று கருமையாக தோற்றமளிக்கும். அதே பிம்பம் ஒரு தெளிந்த நீரோடையில் பிரதிபலிக்கும்
போது ஒரு முழுநிலவின் ஒளி முழுவதையும் அங்கே நாம் காணமுடியும். நாம் நேரடியாக நிலவைப்
பார்ப்பது போன்று இறைவனைக் காணமுடியாது. அதனால் இறைபிம்பம் அருளாளர்களின் உள்ளத்தில்
பிரதிபலித்து அது மார்க்கமாக மாறுகிறது. அருளாளர்களின் உள்ளம் தெளிவற்று இருந்தால்,
இறைவனின் சுத்தஒளியும் அங்கே தெளிவற்ற ஒன்றாகவே விழும். அவ்வமையம் ஏற்படும் போதனைகளும்
மார்க்கங்களும் துன்மார்க்கமாகவே இருக்கும். அருளாளர்களின் உள்ளம் தெளிந்து இருந்தால்
அங்கே விழும் இறைபிம்பம் அதே உண்மைச் சுத்த ஒளியாக இருக்கும். அப்போது பிறக்கின்ற மார்க்கம்
அருள் மார்க்கமாக, தயவு மார்க்கமாக, அன்பு மார்க்கமாக பிறக்கும்.
எனவே நாம் எப்படி உண்மைக்
கடவுளை இவ்வுலகில் தேர்ந்தெடுப்பது எனில், வள்ளலார் கூறுவது போல், "எங்கே கருணை
இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி" அதாவது எவ்வுள்ளத்தில் கருணை
இயற்கையில் உள்ளனவோ, அவ்வுள்ளத்தில்தான் அருட்பெருஞ்ஜோதி இறைவனின் அசல் பிம்பம் தெளிவாக
விளங்குகிறது என்கிறார்.
எனவே நண்பர்களே! அரசியல்
கட்சித் தொண்டர்கள் போல், ஆட்டுமந்தைகள் போல் கூட்டம் கூடும் இடத்திற்கும் / மார்க்கத்திற்கும்
செல்வதுதான் புத்திசாலித்தனம் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இறைவனால்
படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் அன்பை போதிக்கின்ற மார்க்கம் / கடவுள் எதுவோ அதனை
நீங்களே தேர்ந்தெடுங்கள். கடவுள் மாமிசத்தை உண்ணச் சொல்கிறார் என்றால், அது அசுத்த
உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட கடவுளின் வார்த்தை (அதுவும் கடவுளின் வார்த்தை தான், அசுத்தக்
குட்டையில் விழும் நிலவின் பிம்பம் போன்று) என்பதை அறிந்து விரைவில் அதிலிருந்து விடுபடவேண்டும்.
காயையும், கனியையும் இறைவன்தான் படைத்தான். நாம் கனியினை சுவைபட உண்ணலாமே!
மாமிசம் உண்பவர்கள்
மறுபிறவியில் எப்பிறவி எடுப்பார்கள் என்பதனை வள்ளலார் கூறுவதை பார்ப்போம்,
"அவரவர் கடின செய்கைக்குத்
தக்கபடி, சிலர் நரக வாசிகளாகவும், சிலர சமுத்திர வாசிகளாகவும், சிலர் ஆரணய வாசிகளாகவும்,
சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட
மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய விஷ ஜெந்துக்களாகவும், சிலர் முதலை, சுறா
முதலிய கடின ஜெந்துக்களாகவும், சிலர் காக்கை, கழுகு முதலிய பட்சி சண்டாளங்காளாகவும்,
சிலர் எட்டி, கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள்."
இங்கே வள்ளலார், இப்படிப்பட்ட
பிறவிகளை எடுப்பார்கள் / பிறப்பார்கள் என்று போதனை கூறாமல் "பிறந்திருக்கின்றார்கள்"
என்று இன்றும் என்றும் இவ்வுலகில் உள்ள மேற்கண்ட துஷ்ட பிறவிகள் எப்படி எதனால் பிறக்கின்றார்கள்
என்று சொல்வதை சற்று கவனிக்கவும்.
ஒரு ஞானியானவன், ஒரு
கணத்தில் ஒரு ஆணை பெண்ணாகவும், ஒரு பெண்ணை ஆணாகவும் மாற்றும் வல்லமை பெற்றுள்ளான்.
அவன் புலால் உண்ணும் கருத்தை உடையவன் என்றால், அவனை "ஞானி" என்று கூறக்கூடாது
என்கிறார் வள்ளலார்.
அதாவது அந்த ஞானி புலால்
உண்ணவில்லை. ஆனால் புலால் உண்ணுவது தவறில்லை என்ற கருத்தை கொண்டவனாகில், அவனிடம் எப்படிப்பட்ட
சித்து வித்தை வெளிப்பட்டாலும் அவனை "ஞானி" என்றுக் கூறக்கூடாது என்பார்
வள்ளலார்.
"ஒரு ஜீவனைக் கொன்று
மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுவித்தல் கடவுளருக்குச் சம்மதமுமல்ல, ஜீவகாருண்ய ஒழுக்கமும்
அல்லவென்று சத்தியமாக அறியவேண்டும்" என்பார் வள்ளலார்.
இப்போது சொல்லுங்கள்
அன்பரே! நான் அசைவம் என்று! இப்போதும் நமது நண்பர்கள் - அன்பர்கள் ஆகாமல், நான் அசைவம்
என்றால், அவர்கள் புற இனம்தான். மன்னிக்கவும், அவர்களால் வள்ளலாரைப் பின்பற்ற முடியாது.
அதுமட்டுமல்ல வேறுஒரு எந்த அருள்வழியிலும் செல்லமுடியாது.
பொய்விளக்கப் புகுகின்றீர்
போதுகழிக் கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகலஎன் கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொருபாழ்ங்
கிணற்றில்விழு கின்ற
களியஎனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்புமர ணாதிகளை
நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடியமுயற் றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற
தருணம்
மேவியதீண் டடைவீரேல் ஆவிபெறு வீரே. (5569)
எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத்
திரங்கள்
எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெயவம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென்
றறியீர்
கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என்
புரிவீர்
அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற
தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே (திருஅருட்பா 5570)
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக அருமையான விளக்கம்.படித்தேன்.
ReplyDeleteமகிழ்ந்தேன்.இதை படித்த ஓருவர் மாறினாலும் அது இந்தக் கட்டுரைக்கு
கிடைத்த முழு வெற்றியாகும்.
வாழ்க வள்ளலார்!வளர்க அவர்தம் புகழ்.
Thanks Ayya
ReplyDelete