Saturday, June 29, 2013

மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேககங்கள்



மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேககங்கள்

அன்பர்களே! வள்ளற்பெருமான் அடைந்த மரணமிலா பெருவாழ்வு உண்மையா! பொய்யா! என்பதனை சில கேள்வி பதில் வடிவில் இப்பதிப்பில் பார்க்கலாம் வாருங்கள்.

1. வள்ளலார் மரணமிலாப் பெருவாழ்வு பெற்றவர் என்பதற்கு என்ன ஆதாரம்?

தான் பெற்ற முத்தேக சித்தியைப் பல பாடல்களில் எடுத்துரைக்கின்றார். உதாரணத்துக்கு ஒரு பாடல்,

நானே தவம் புரிந்தேன் நம்பெருமான் நல்லருளால்
நானே அருட்சித்தி நாடடைந்தேன் - நானே
அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்
இழியாமல் ஆடுகின்றேன் இங்கு (5513)

ஆடுகின்ற சேவடிக்கே அளானேன் மாளாத யாக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழைப் பாடிப்பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன் எண்ணமெலாம் நிரம்பினேனே (56)

இந்தப் பாடலாலும், இவை போன்ற பலப் பல பாடல்களும் அவர் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வைப் பறை சாற்றுகின்றன.

இந்த உடம்பை மண்ணுக்கோ நெருப்புக்கோ இரையாக்காமல் 1874ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் அவர் கதவைத் தாளிட்டுக் கொண்டதின் மூலம் அவர் பெற்ற மரணமிலாப் பெருவாழ்வு உறுதியாகிறது.


2. வள்ளலார் அடைந்த உண்மையான நிலைதான் என்ன?

வள்ளலார் தான் செய்த தவத்தாலும், ஜீவகாருண்யத்தாலும், தன் தூல தேகத்தை ஒளியுடம்பாக மாற்றினார். சுத்த தேகமாக முதலில் அவர் தேகம் மாறியது. பிறகு அதே தேகம் பிரணவ தேகமாகியது. கடைசியாக அவர் ஞான தேகம் பெற்றார். அவர் ஞான தேகத்தோடு என்றும் அழியாத நிலையில் நமக்குத் துணையாக இருக்கின்றார்.

3. அவர் ஒளியுடம்பு பெற்றதற்கு என்ன ஆதாரம்?

வள்ளலாரின் சம காலத்தவர்களாகிய இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர் ஆகியோரின் நிழல் படங்கள் உள்ளன. ஆனால் பல முறை முயன்றும் வள்ளலாரை நிழற் படம் எடுக்க முடியவில்லை. இப்போது உள்ள வள்ளலார் படங்களெல்லாம் வரைந்த உருவப் படங்களேயொழிய அவரது உண்மையான நிழற்படங்கள் அல்ல. அவரது தூல தேகம் ஒளியுடம்பாக மாறி விட்டதால் அவரை நிழற்படம் எடுக்க முடியாது போய்விட்டது. இதுவே அவர் ஒளியுடம்பு பெற்றதற்கு ஆதாரம். அவரும் பல பாடல்களில் தான் ஒளி உடம்பு பெற்றதை அறிவிக்கின்றார்,

கற்றேன் சிற்றம் பலக்கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே (4745)

4. வள்ளலார் மற்றவர்கள் போல் மாளவில்லை என்பதை விளக்கமாக கூறவும்?

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன் மாளாத ஆக்கை பெற்றேன் என்றும்,

காற்றாலே, புவியாலே, ககனமதனாலே,
கனலாலே, புனலாலே, கதிராதியாலே,
கூற்றாலே, பிணியாலே, கொலைக் கருவியாலே,
கோளாலே, பிறவியற்றுங் கொடுஞ்செயல்களாலே,
வேற்றாலே, எஞ்ஞான்றும் அழியாத விளங்கும்
மெய்யளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

என்றும்

வாழி என் தோழி யென் வார்த்தை கேளென்றும்
மரணமில்லாப் பெரு வரம் யான் பெற்றுக் கொண்டேன்

என்றும், இப்படிப் பலப்பல பாடல்களிலே தான் பெற்ற மரணமிலாப் பெருவழ்வைப் பறை சாற்றுகின்றார்.

1874ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் தம் அன்பர்களை அழைத்துப் பின்வருமாறு கூறினார்,

'நான் உள்ளே பத்துப் பதினைந்து தினமிருக்கப் போகிறேன். பார்த்து அவநம்பிக்கை யடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக் கொடார்.'

தான் அறைக்குள்ளெ நுழைந்து அறையைத் தாளிட்டுக் கொண்டார்கள். வெளிக் கதவைப் பூட்டிக் கொள்ளும்படி அன்பர்களிடம் கூறினார்கள். அதன்படியே அன்பர்களும்  வெளிக்கதவைப் பூட்டி விட்டார்கள்.

இந்த அறிவிப்பைப் கூர்ந்து நோக்கினால் அந்த அறைக்குள்ளே பத்துப் பதினைந்து தினங்கள் மட்டுமே இருப்பதாக கூறியுள்ளதும், யாராவது திறந்து பார்த்தால் வெறு வீடாக இருக்கும் என்றதும், மறைந்தது அவர் விருப்பம் போல என்பதும் யாரும் காரணமல்ல என்பதும் விளங்கும். என்னைக்காட்டிக் கொடார் என்ற வாசகம் அது வெறு வீடாகத் தோன்றினாலும் நான் உள்ளேதான் இருப்பேன் என்பது பொருளாகிறது.

காட்டிக்கொடார் என்ற சொல், தான் உள்ளே இருப்பேன் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. உண்மையிலேயே அவர் உள்ளே இல்லை என்றால் காட்டிக் கொடார் என்ற சொல்லுக்கே அவசியமில்லை. காட்டிக் கொடார் என்ற வார்த்தை மிக மிக முக்கியமான ஒன்றாகும். உள்ளே இருந்தாலும் கண்ணுக்குத் தோன்றாமல் இருப்பார் என்பதை இவ்வார்த்தை உறுதிபடுத்துகிறது.

மேலும் அவர் 1874ல் மறைந்தது, முதல் முறை அல்ல. அதற்கு முன் எத்தனையோ முறைகளில் அவர் மறைந்து மறைந்து மீண்டும் தோன்றியிருக்கின்றார். தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் பிரம்ம ஞான சமாஜத்தார்க்கு அளித்த குறிப்பில் 'எங்கள் குருநாதர் பல நேரங்களில் யார் கண்களுக்கும் தோன்றாமல் மறைந்துவிடுவது உண்டு. அந்தச் சமயங்களில் அவர் என்ன ஆனார் எங்கு போனார் என்பது ஒருவருக்கும் தெரிய மாட்டாது' என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து 1874ல் மறைந்தது போல் பல முறை அதற்கு முன்பும் வள்ளலார் மறைந்திருக்கின்றார் என்பது புலனாகிறது. இதற்கு ஆதாரமாக 26.10.1870ல் சன்மார்க்க அன்பர்கட்கு வள்ளலார் இட்ட கட்டளை அறிவிப்பு அடியில் வருமாறு உள்ளது.

திருச்சிற்றம்பலம்

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது

ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாய் நம்பியிருங்கள் என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் தானே வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.

இவ்வாறு 26.10.1870ல் அறிக்கை வெளியிட்டு மறைந்திருக்கின்றார். பின்னர் வெளி வந்திருக்கின்றார். முன்பெல்லாம் மறைந்தபோது பத்து அல்லது பதினைந்து தினங்களுக்குள் வெளிவந்திருக்கிறார். 1874 ஜனவரி 30ஆம் நாள் மறைந்தவர் இன்னும் வெளிவரவில்லை. மறைவதும் வெளிவருவதும் அவருடைய விருப்பம்.

வள்ளலார் அவர்கள் எல்லாச் சித்துக்களும் கைவரப் பெற்றவர். நினைத்த இடத்துக்கு நினைத்தவுடன் செல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். ஆண்டவனோடு அவர் நேரடியாக உறவாடியவர். 22.10.1873 அன்று சித்திவளாகத்தில் சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்து அவர் ஆற்றிய பேருரையில் ஒரு செய்தியைத் தெரிவிக்கின்றார்.

அதாவது 21.10.1873 அன்று அவருடன் ஆண்டவன் பேசியதாகவும் அவரை இவ்வுலகில் வேறு இடத்திலோ அல்லது வேறு உலகிலோ சென்று வருமாறு பணியிட்டதாகத் தெரிகிறது. அவரது வாசகத்தை அப்படியே படித்துப் பாருங்கள்.

'என்னிடத்தில் ஒருவன் வசப்படாது முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன். மிரட்டிச் சொல்லுவேன், தெண்டன் விழுந்து சொல்லுவேன். அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன், அல்லது ஆண்டவரை நினைத்துப் பிராத்தனை செய்வேன். நீங்கள் எல்லோரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் சஷண நேரம் இருக்க மாட்டார்களே என்று ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன், அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் அல்ல."

நான் இல்லாமல் இந்த ஜனங்கள் சஷண நேரங்கூட இருக்க மாட்டார்களே என்று வள்ளலார் ஏன் சொல்ல வேண்டும்? ஆண்டவனின் கட்டளைப்படி அவர் எங்கோ செல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஜனங்களை விட்டு எப்படி பிரிவது என்று யோசித்திருக்கிறார். ஆண்டவர் அதற்கும் ஏதாவது சமாதானம் சொல்லியிருக்கக்கூடும். 21.10.1873 அன்றே இந்த ஜனங்களை விட்டு எங்கோ செல்ல வேண்டிய கட்டளை ஆண்டவனால் வள்ளலாருக்குத் தரப்பட்டு விட்டது.

தந்தைசொல் தட்டாத வள்ளற் பெருமான் அதற்குரிய நாளாகக் கார்த்திகை பெளர்ணமியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தான் வெளியே செல்ல வேண்டிய வேலையிருப்பதால் இது வரை தான் பராமரித்து வந்த திருவிளக்கைப் புறத்தில் வைத்து இதனை தடைபடாது ஆராதியுங்கள் என்று கட்டளையிட்டார். உள்ளே சென்று கதவையும் தாளிட்டுக்கொண்டார்.

பின்னர் ஏதோ காரணத்தால் மீண்டும் அறையை விட்டு வெளியே வந்து வந்தார். வந்த பிறகு தைப்பூசத்தன்று 30.01.1874ஆம் ஆண்டு கதவை சாத்தி அறைக்குள்ளே சென்றார். திருக்காப்பிட்டுக் கொண்டது, அவர் முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்த செயலே தவிர மற்றவர்க்கு ஏற்பட்ட எந்த துர்நிலையும் அவருக்கு ஏற்படவில்லை என்று அறிய வேண்டும்.

மேலும் அறிவுக் கூர்மையோடு அவரது நிலைமையை ஆய்ந்தால் அவர் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்ததை உணரலாம்.

ஒரு குடும்பத்தலைவன் இறந்து விட்டால் அவனது வாரிசான அவனுடைய மகனோ, அல்லது மற்றவர்களோ சட்டப்படி அந்தக் குடும்பத் தலைவனின் சொத்தை உடனே அனுபவிக்கலாம். அதே நேரத்தில் அவன் எங்காவது காணாமல் போய் விட்டால், ஏழு ஆண்டுகள் வரை அந்தக் குடும்பத்தினர் காத்திருந்து பிறகு தான் அனுபவிக்க முடியும். இது தான் சட்டம். அதே போல வடலூர் கிராம வாசிகள் இனாமாகக் கொடுத்த நிலமும் தருமச்சாலை முதலிய கட்டிடங்களும் வள்ளலார் பேரில் பட்டா செய்யப்பட்டிருந்தன. வரியும் செலுத்தப்பட்டு வந்தது. 1874ல் அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபிறகு யாரும் வரி செலுத்தவில்லை. ஒன்றும் தெரியாத ஒரு சிலர் கூறுவதுபோல் அவருக்கு ஏதேனும் ஆகியிருந்தால் அவர் பேரிலிருந்த பட்டாவை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றியிருக்கலாம். அவர் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே சென்று பிறர் கண்களுக்குக் காணாமல் மறைந்துவிட்டதால், சட்டப்படி அவர் பேரிலிருந்த பட்டாவை மாற்ற ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1874 ஜனவரி 30ல் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டார்கள். அடுத்து 11.10.1880 அன்று சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் தேவஸ்தான தருமஸ்தானங்களின் ஸ்தாபகராகிய சிதம்பரம் இராமலிங்க பிள்ளை என்பவர் ஏழு வருஷகாலமாய் பகிரங்கத்தில் நமூது இல்லாமல் இருப்பதினாலே மேற்படி 302 நம்பர் பட்டாவை 1. ஆறுமுக முதலியார், 2. வக்கீல் வெங்கிடேச ஐயர், 3. சபாபதி குருக்கள், 4. நயினா ரெட்டியார் ஆகிய நால்வரையும் ஏஜண்டுகளாக நியமிக்கப் போவதாக சிதம்பரம் தாசில்தார் ஓர் அறிக்கை வெளியிடுகிறார்.

பின்னர் 01.03.1881ல் பசலி 1290-91ல் மேற்குறித்த நான்கு ஏஜென்டுகள் பேரில் பட்டா மாற்றம் செய்யப்படுகின்றது. ஏழு ஆண்டுகள் சட்டப்படிப் பட்டா மாற்றம் செய்ய ஏன் காலதாமதம் ஆகியது? சிதம்பரம் தாசில்தாரின் அறிக்கை துல்லியமாகச் சிதம்பரம் இராமலிங்க பரதேசி என்பவர் ஏழு ஆண்டுகளாகப் பகிரங்கத்தில் நமூது இல்லாததினால் என்று கூறுவது ஒன்று போதாதா! மற்றவர்கள் கூறுவது போல வள்ளலாருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் சிதம்பரம் தாசில்தார் "பகிரங்கத்தில் காணவில்லை" என்று ஏன் அறிக்கை வெளியிடுகிறார். அவர் அறிக்கையும், ஏழு ஆண்டுகள் காத்திருந்ததும் வள்ளலார் கதவைச் சாத்திக் கொண்டு அறைக்குள்ளே மறைந்ததற்குச் சான்றாக நிற்கின்றனவே.

இதுவரை கூறி வந்த அனைத்தையும் ஆழ்ந்து படித்தால் மறையவும், வெளித் தோன்றவும் ஆற்றல் பெற்றிருந்த வள்ளலார் அவர்கள், ஆண்டவனிட்ட கட்டளைப்படி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் தாமே திட்டமிட்டு அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக் கொண்டார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்கும்.

5. 1874-ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் திருக்காப்பிட்டுக் கொண்ட அன்றுதான் வள்ளாலார் ஆண்டவனோடு இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று கூறுவது சரியா?

அப்படிக்கூறுவது தவறு. வள்ளலார் ஆண்டவனோடு கலந்தார் என்று சொல்வதை விட ஆண்டவன் வள்ளலாரை நாடி அவருடன் இரண்டறக் கலந்தான் என்றுதான் கூற வேண்டும். அதை வள்ளலாரே பல பாடல்களில் கூறியுள்ளார். உதாரணமாக,

அருட்ஜோதியானே னென்றறையப்பா முரசு
அருளாட்சிபெற்றே னென்றறையப்பா முரசு
மருட்சார்புதீர்த்தே னென்றறையப்பா முரசு
மரணந்தவிர்த்தேன னென்றறையப்பா முரசு

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மாதவம் பன்னாட் புரிந்து மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணை மேற் பனிக் கறையினூடே
திருவடி சேர்த்தருள்க வெனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசியிலே வலிந்து நுழைந்தெனக்கே
நல்ல திருவருளமுதம் நல்கிய தன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து எளியேன்
உள்ளமெனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே

இறைவன் என்றைக்கோ வள்ளலாரைக் கலந்து விட்டான். இறைவன் வேறு வள்ளலார் வேறு என்று இருந்த துவைத நிலை மாறி, வள்ளலாரும் ஆண்டவனும் ஒன்றான அத்வைத நிலை எப்போதோ ஏற்பட்டுவிட்டது. ஆணிப் பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி என்ற பாடலில்

அம்மையைக் கண்டேன் அவனருள் கொண்டேன் அமுதமுமுண்டேனடி என்றும் தாங்கும் அவனருளாலே நடராசர் சந்நிதி கண்டேன் என்றும் சந்நிதியிற் சென்று நான் பெற்ற பேறது சாமியறிவாரடி என்றும் பாடுகின்றார். இப்படி ஆண்டவனுடன் கலந்த பிறகு, தான் பாடிய பாடலை மக்கள் அலட்சியம் செய்யக் கூடாதே என்பதற்காகவே 'நானுரைக்கும் வார்த்தை யெலாம் நாயகன்தன் வார்த்தை நம்புமினோ' என்று பாடினார். இறைவனுடன் என்றைக்கோ கலந்தவர் வள்ளலார். ஒளியுடம்பு என்றோ பெற்றுவிட்டார். சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் ஆகிய முத்தேக சித்திகளையும் கூட வள்ளலார் என்றோ பெற்றுவிட்டார். அதனையடைந்தப்பிறகுதான் அருட்பாக்கள் முத்தேகத்தின் அனுபவமாக அவரால் பாடப்பட்டன. போதனையாக பாடப்பட்டன அல்ல. 1870 அக்டோபர் 26ந்தேதி அவர் மறைந்து பின்னர் வெளி வந்திருக்கின்றார். 30.01.1874 அன்று திருக்காப்பிட்டுக் கொண்டார் என்று கூறுவதே சரியானது.

6. வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொண்டார் என்று சிலர் கூறுவது சரியா?

சரியல்ல. முன்பே கூறியதுபோல 1873 கார்த்திகை மாதம் பெளர்ணமி அன்று தான் வழிபட்டு வந்த திருவிளக்கை வெளியில் வைத்துக் கீழ்கண்டவாறு அருளுரையாற்றினார்கள்,

'இதைத் தடைபடாது ஆராதியுங்கள். இந்தக் கதவை சாத்திவிடப் போகிறேன். இனி கொஞ்சகாலம் எல்லோரும், ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் உங்களுடைய காலத்தை வீணில் கழிக்காமல் நினைந்து நினைந்து என்றும் தொடக்கமுடைய 28 பாசுரமடங்கிய பாடறிற் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொள்வேன்'

எனக்கூறி அறைக்குள்ளே சென்ற வள்ளலார் யாது காரணம் பற்றியோ மீண்டும் வெளிவந்து மார்கழி மாதம் முழுவதும் பிரசங்கம் செய்தார். பின்னர் தை மாதம் மறுபடி அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.

கார்த்திகை மாதம் எல்லா உடம்புகளிலும் புகுந்துக் கொள்வேன் என்று கூறினாலும் அவர் வெளியே வந்து விட்டதால் அவ்வாறு செய்யவில்லை என்று உணர வேண்டும். அவர் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டிருந்தால் அவரால் வெளிவந்திருக்க முடியாது. அவர் தேகம் அணு அணுவாகச் சிதைந்து எல்லா உடம்பிலும் புகுந்துக்கொண்டால் அவர் மரணமிலாப்பெரு வாழ்வு பெற்றது பொய்யாகிவிடும். மரணமிலா பெருவாழ்வு பெற்ற வள்ளலார் நமக்குத் துணையாய் ஞான தேகத்துடன் தன்னிச்சை போல் இயங்கி வருகிறார் என்பதே உண்மை.

7. அப்படியென்றால் எல்லா உடம்புகளிலும் வள்ளலார் புகுந்து கொண்டார் என்று இன்றும் சிலர் பேசிவருவது பற்றி என்ன சொல்வது?

கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று வள்ளலார் கூறிய வாசகத்தையும் தை மாதம் திருக்காப்பிட்டுக்கொண்ட போது வெளியிட்ட வாசகத்தையும் திருஅருட்பா புத்தகத்தில் ஒரே பக்கத்தில் அச்சிட்டுவிட்டதால் எந்த நாளில் எதைச் சொன்னார் என்று சரியாகக் கவனியாமல் இரண்டு வாசகங்களும் திருக்காப்பிட்டுக் கொண்ட அன்று வெளியிட்டவை என்ற தவறான எண்ணந்தான் இப்படிக் கூற வைக்கின்றன. நாளோடு ஒப்பிட்டுச் சரியாக ஆய்வு செய்தால் உண்மை விளங்கும்.

8. அப்பர், திருஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்றோர் எப்படித் திரும்ப வருவார்கள் என்ற பேச்சிற்கே இடமில்லையோ, அது போல் வள்ளலாரும் திரும்ப வருவார் என்ற பேச்சிற்கே இடமில்லையென்று சொல்வது சரியா?

ஒருபாதி உண்மை, மறு பாதி பொய். அதாவது அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்றோர் திரும்ப வரமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உண்மையில் மனிதரல்லர் என்றும் தத்துவங்களே யென்றும் வள்ளலாரே கூறுகிறார். எனவே அவர்கள் வரமாட்டார்கள்.

05.10.1823ல் தவச்சீலன் இராமைய பிள்ளைக்கும் தவத் திருமகள் சின்னம்மைக்கும் பிறந்த வள்ளலார் சரித்திர நாயகர், வரலாற்று மனிதர் எனவே அவர் வருவார், தன்னை வெளிப்படுத்துவார்.

ஏற்கனவே விளக்கியுள்ளது போல வள்ளலார் பல முறை மறைந்திருக்கின்றார். ஒவ்வொரு முறையும் வெளி வந்திருக்கின்றார். அப்போது அடிக்கடி வெளிவந்தார். இப்போது கொஞ்ச காலதாமதம் ஆகிறது. அதாவது மறைந்த நாள் முதல் - தோன்றிய நாள் வரை உள்ள இடைவெளி அப்போதெல்லாம் குறைவாக இருந்தது. இப்போது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இதுவே உண்மை.

9. வள்ளலார் இப்போது என்ன செய்துக்கொண்டிருப்பார்?

எதற்காக ஆண்டவர் அவரை நம்மை விட்டு வரச் சொன்னாரோ அந்தப் பணியைச் செய்து வருகிறார். நமக்காக பிராத்தனை செய்து கொண்டிருக்கின்றார். மேலும் இறைவன் தன்னை ஐந்தொழிலையும் செய்யுமாறு பணித்ததாக பல பாடல்களில் பாடியுள்ளார்.

மன்னுகின்ற பொன்வடிவம் மந்திரமாம் வடிவும்
     வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ் செய்திடவே பணித்துப்
     பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
     ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
     மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே. (4150)

10. தான் திரும்பி வருவதாக எங்காவது வள்ளலார் கூறியிருக்கிறாரா?

22.10.1873 புதன் கிழமை காலை 8 மணிக்கு மேட்டுக் குப்பத்தில் சன்மார்க்க கொடி கட்டி உபதேசம் செய்து ஆற்றிய பேருரையில் அவர் கூறிய வாசகம் இதுதான்,
'இப்போது நீங்கள் இது வரைக்கும் ஒழுக்கத்திற்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் சாலைக்குப் போகக் கொஞ்ச தினமிருக்கிறது. அதற்குள்ளாக நீங்கள் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்திற்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் கேட்டுக் கொண்டும் வருகின்றேன். ஆதலால் நீங்கள் அப்படி செய்து கொண்டிருங்கள்.'

தான் வருவதாக வள்ளலார் அளித்த வாக்குறுதியும் அதுவரை நாம் செய்ய வேண்டிய பணி இன்னதென்பதனையும் மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் அறியலாம். அவர் அப்படிக் கூறியது 22.10.1873 புதன் கிழமை காலை 8 மணிக்கு மேல்.

11. வள்ளலாரின் ஞான தேகத்தை நம்மால் பார்க்க முடியுமா?

'காரணப் பிரகிருதி மகா காரணப் பிரகிருதியங்கங்கள் மனதிற்கே விஷயமாகுமென்றும் இவை சாதாரண லட்சணம் என்றும் அசாதாரண லட்சணத்தில் கண்ணறிவு பலமுறை சாதன லட்சியத்தால் நுட்பறிவாகி மனதிற்கு விஷயமாகின்ற காரண மகாகாரணப் பிரகிருதி யங்களையும் அறியும் என்றும், இவ்வாறு அறிவது சாத்தியமே என்றும் இதனை யோக சாதன முதலிய வழிகளாலும் தத்துவ சாத்திரங்களாலும் அனுமான முதலிய பிரமாணங்களாலும் அறிந்து கொள்ளலாம்' என்றும் வள்ளற் பெருமானார் தம்மிடம் வாதிட்ட பிரம்ம சமாஜம் சம்பேடு ஸ்ரீதர நாயக்கர் அவர்களிடம் கூறியுள்ளார். சாதனா சகாயத்தால் கண் நுட்ப அறிவு பெறுமானால் காணலாம். அல்லது ஞானதேகிகளே வெளிப்பட்டால் அனைவரும் காணலாம்.

நாம் இவ்வுலகில் காண்பவையெல்லாம் முப்பரிமானத்துள் அடங்கிவிடும். அதாவது மெல்லிய நூல் என்பது நீளத்தை மட்டும் கொண்ட ஒரு பரிமானமாகும். நாம் படுக்கும் பாய் என்பது நீளம், அகலம் ஆகிய இரு பரிமாணங்களைக்கொண்டதாகும். செங்கல் என்பது நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று பரிமானங்களைக் கொண்டதாகும். இவ்வாறு இவ்வுலகில் மனிதன் உட்படி எந்தத் தோற்றமும் இந்த முப்பரிமானத்தில் அடங்கிவிடும். நான்காவது பரிமானம் எப்படி இருக்கும் என்பது எவருக்கும் தெரியாது. மனித அறிவைக் கடந்ததாக உள்ளது. ஆனால் மொத்தம் ஏழு பரிமானங்கள் உள்ளதாக ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஏழு பரிமானங்களுக்கும் அப்பால் பட்டது இறைவன் வடிவம். ஞான உடம்பும் அவ்வாறே. ஆகையால் நமக்கு இறையருளால் முப்பரிமானத்தைத் தாண்டிய வடிவைக் காணுகின்ற கண் அமையப்பெற்றால் காணலாம். நன்றி.

(நன்றி: மு.பா. ஐயா எழுதிய 'வள்ளலாரை புரிந்துக்கொள்ளுங்கள்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞஜோதி




7 comments:

  1. Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  2. அருமை அருமை மெய்சிலிர்க்க வைத்தது. நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  3. வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரே போற்றி.....

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.