Friday, June 28, 2013

உண்மை உண்டோ



அருட்பெருஞ்ஜோதி      அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை           அருட்பெருஞ்ஜோதி

            உண்மை உண்டோ
              (கலிவிருத்தம்)





கண்களும் இமைகளைக்   கண்டது உண்டோ
கண்ணீர் சுமையைக் கொண்டது உண்டோ
விண்ணோடு இறையும் விளம்புகின்ற மறையும்
வீண்என்று தெளிவாய் விளக்குகின்ற வள்ளலே       (1)

வளர்ந்த முடிநகம் வலிகண்டது உண்டோ
விளக்குத் திரிகளுக்கோர் விளக்கம் உண்டோ
அளந்து அறியுமோ ஆளுமை வேதங்களும்
அளந்தாய் இறைவனை ஆசாரங்கள் இன்றியே       (2)

நடராஜர் சிலைகளும் நடமாடியது உண்டோ
நடமாடும் கோயில்களில் நடராஜர் உண்டோ
மடங்களும் ஆசிரமங்களும் மனிதனைக் காட்டா
மூடர்களும் சத்சங்கத்தை மொய்க்க இறைவனாமே     (3)

அமர்ந்த அய்யப்பனின் அடிஎழுந்தது உண்டோ
அமங்கள பூஜைகளில் ஆடியபாதம் உண்டோ
எமனுக்கும் எமனாகும் எம்ஜீவகாருண்ய வழிபாடே
ஏமாந்தே வீண்போகாமல் ஏறுவீர்சன் மார்க்கஏனியிலே (4)

மூன்றடி மண்கேட்டான் மூடனிடமது உண்டோ
மூன்றாமடி   அங்கேவைக்க முயன்றதும் உண்டோ
மன்றிலாடும் மாடமது முக்கோணத்தின் உச்சியது
மான்தாவும் அடியது மனிதனின் சொந்தமது          (5)

பாம்பின்மேல் உறங்காமல் படுத்தவனும் உண்டோ
பாம்பின்கால் அறிந்தவன் பாடைஏறுவது உண்டோ
சோம்பித் திரிந்தவனும் சோதனை செய்பவனும்
சாம்பலாய் ஆனவனும் சகலமும் கால்கணக்கே       (6)

தன்னிழலைப் புதைக்க துவங்கியனும் உண்டோ
தன்காலால் தன்னிழலை தொட்டளந்தவனும் உண்டோ
ஒன்றுக்கும் அகப்படாத ஒன்றை கல்லாக்கலாமோ
ஒன்றியிருக்கும் நிழலானை ஒளியானை உள்நோக்காய் (7)

பிணம்தான் தன்னைதூக்கி பயணித்ததும் உண்டோ
பிணமொத்த சிலைதூக்கி பயனடைந்தவனும் உண்டோ
குணமென்று குற்றமே கற்றாய் மலையென்று
கணக்கறியாத பள்ளத்திலே களித்திருக்கின்ற சகத்தீரே (8)  

தனக்குப்பல தாயுண்டென்று தாய்பாலுண்டவன் உண்டோ
தனதுலகில் பலசூரியனுதிக்க தலைத்தவன் உண்டோ
உனக்கும் எனக்கும் உலகுயிர்களுக்கும் எதற்கும்
உனக்குள் இருக்குமிறை உறவுஅது ஒன்றேகண்டாய்  (9)

சந்திரன்தேய்ந்து வளர்வதில் சற்றேனுமுண்மை உண்டோ
சந்தேகமுளதோ சூரியனுதிப்பதும் சாய்வதும் உண்டோ
மந்திரங்களோதி நாளும்கோளும் மதியிலா ஜோதிடம்பார்த்து
மந்திசிரங்கை சொறிந்ததுபோல் மதிகேட்டு ஓடுவதழகோ (10)


    


    
          
    
    


    








    
    
          
    

    


    
    


      
    




3 comments:

  1. மந்திரங்களோதி நாளும்கோளும் மதியிலா ஜோதிடம்பார்த்து
    மந்திசிரங்கை சொறிந்ததுபோல் மதிகேட்டு ஓடுவதழகோ // ...இன்று இதை நாேக்கித்தான் மதியை மழுங்கடித்து ஓட வைத்துக் காெண்டு திரிகிறார்கள் ...! தக்க தருணத்தில் இந்த ...உண்மைகள் எதுவென்று அறிய எடுத்து இயம்பிய தக்களுக்கு நன்றி ....!!

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா...

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.