Thursday, June 20, 2013

தமிழர்களின் சடங்குகள்


தமிழர்களின் சடங்குகள்

நண்பர்களே! தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை இவ்வுலகில் எங்கும் காணமுடியாது. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்யமாட்டார்கள். அப்படி செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் பொருளைப் புரிந்துக் கொண்டுதான் செய்வார்கள்.

ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்குத் தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகின்றோம். உண்மையில் இந்த சடங்குகளுக்கும், அதில் சொல்லப்படும் மந்திரங்களுக்கும் நம்மை இழிவுப்படுத்துவதை நாம் உணர்ந்துக் கொள்வதும் இல்லை. உணர்ந்துக் கொள்ள விரும்புவதுமில்லை.


திருமணத்தின்போது சொல்லப்படும் சில மந்திரங்களைப் பார்ப்போம்,

'சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ'

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது. நீ முதலில் சந்திரனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான், இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் பொருள்.

அதாவது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்போது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடன் அவள் எந்தக்காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு... என்று இருக்கிறது)

இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.

அதாவது மந்திரத்தில் உள்ள 'பதி' என்ற சொல் கணவன் என்ற பொருளில் சொல்லப்படுவதில்லை. பாதுகாவலன் என்ற பொருளில்தான் சொல்லப்படுகிறது. முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான் என்ற ஒரு புதிய விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று "அறிவியல்" விளக்கம் வேறு தருவார்கள்.

சிலரி இன்னும் ஒருபடி மேலே போய் சந்திரன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள். ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு 'பதி' என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் 'பொம்பிளைப் பொறுக்கியாக' சொல்லப்படுகின்ற சந்திரன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் பாதுகாப்பில் தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்துவிடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்லுகின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன.

'உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி' 

இந்த மந்திரத்தின் பொருள், விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப்படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!

இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக்கொள்கிறோம். தகப்பன் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்புவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!

இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையறையில் என்ன வேலை? ஆகவே, சந்திரன், கந்தர்வன், அக்னி ஆகிய மூவரும் மணமகனின் கணவர்கள் என்றுதான் இம்மந்திரங்கள் கூறுகின்றன. இவற்றைவிட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று... இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.

இவைகள் இருக்கட்டும். வேறுசில திருமண மந்திரங்களைப் பார்ப்போம்.

'தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ யஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதை யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்'

இதனுடைய பொருள், நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்,

'விஸ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசது ஆரிஞ்சது ப்ரஜாபதி தாதா கர்ப்பந்தாது'

இதனுடைய பொருள், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா) உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்துக் கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தப்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமே! அதற்கும் ஏதாவது மந்திரம் சொன்னால் நல்லா இருக்கும்.

இப்படியாக தமிழர்களுக்கு புரியாத மந்திரங்களைச் சொல்லி நடைபெறுகின்ற தமிழர் திருமணங்களை, ஆபாசங்களுக்கு உட்படுத்தும் சமஸ்கிருத மந்திரத்தை என்றுதான்  தமிழர்கள் புரிந்துக்கொண்டு விரட்டியடிப்பார்களோ தெரியவில்லை. இன்னும் இது எமது 'கடவுள் மதம்' என்று சொல்லிக்கொண்டு சுரணையற்றவர்களாக இருக்கவும் வேண்டுமோ? இவைகளை விட்டு தமிழர்களின் மந்திரங்களான திருக்குறளையும், திருஅருட்பாவையும் பாடி திருமணங்களை நடத்தலாமே! இவைகளில் இல்லாத மந்திரங்கள் உலகில் வேறு எந்த மொழி வேதத்திலும் இல்லை. தமிழர்களே புரிந்துக்கொள்ளுங்கள்.

எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த சமஸ்கிருத மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைபடுத்துகின்றன.

மணமுடிக்கப போகின்றவளை ஏற்கனவே பலருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமண மந்திரங்களைப் பார்த்தோம். இனி எம்மை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப்படுத்தும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம்.

மதத்தை தாய் தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுவதை பார்க்கிறோம். அவர்களுடைய பார்வையில் மதம் என்பது தாய் தந்தை போன்றது. எப்படி நாம் தாய் தந்தையை மாற்ற மாட்டோமோ, எப்படி நம் தாய் தந்தையர் மீது சந்தேகம் கொள்ள மாட்டோமோ, அதே போன்று மதத்தை மாற்றவோ, அதன் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

தமிழர்கள், சம்பிரதாயம் என்ற பெயரில் செய்கின்ற பல முட்டாள்தனமான விடயங்களில் இறந்தவருக்கு திதி கொடுப்பதும் ஒன்று. என்ன செய்வது? பிறப்பில் தொடங்கி இறப்புவரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது.

இப்பொழுது இறந்தப்பின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். முதலில் இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம்.

'யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம கிருஸ்ண கிருஸ்ண...'

இந்த மந்திரத்தின் பொருள், என்னுடைய அம்மா பத்தினியாக இல்லாது இருந்து, என்னை வேறு ஒருவருக்கு பெற்றிருந்தால், இந்த திவசத்திற்கு உரிமை கோரி என்னுடைய உண்மையான தகப்பனார் வருவார். அப்படி இல்லாத என்னுடைய அம்மாவின் கணவரே இந்த திவசத்தை பெறட்டும். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம். அதாவது திதி கொடுப்பவனுடைய தாய் சில வேளைகளில் சோரம் போய் வேறு யாருக்காவது அவனைப் பெற்றிருக்கலாம் என்று இந்த மந்திரம் சொல்கிறது.

உன்னுடைய அப்பா வேறு யாராவதாக இருக்கலாம். நீ அப்பன் பேர் தெரியாதவனாக இருக்கலாம் என்று இந்த 'புனித மந்திரம்' சொல்கிறது.

தந்தைக்கு திவசம் செய்கின்ற போதுதான் இப்படி என்று நினைக்கவேண்டாம். சமஸ்கிருத மந்திரம் எம் தமிழினத் தாய்க்கு திவசம் செய்கின்ற போதும் வஞ்சகத்தோடுதான் மந்திரம் இயற்றப்பட்டுள்ளது. அம்மாவிற்கு திவசம் செய்கின்ற போது சொல்கின்ற ஒரு மந்திரம் இதோ,

'என்மே மாதா ப்ரவது லோபசரதி அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா அவபத்ய நாம...'

இதன் பொருள், என்னுடைய அம்மா யாருடன் படுத்த என்னைப் பெற்றாளோ தெரியவில்லை. ஒரு நம்பிக்கையில்தான் அவளை என்னுடைய அப்பாவின் மனைவியாகக் கருதுகிறேன். அந்த அம்மாவிற்கு இந்த திவசம் போய் சேரட்டும்.

உண்மையில் இந்த மந்திரம் பொருளற்றது. தாய்க்கு கொடுக்கின்ற திதியில் தந்தை யார்? என்ற கேள்வி எழத் தேவையில்லை. தந்தைக்கு கொடுக்கின்ற போதாவது தாய் சோரம் போயிருந்து, அதனால் உண்மையான தந்தை வந்து விட்டால்? என்னாவது என்ற கேள்வியோடு அந்த மந்திரத்தை தொடர்பு படுத்தலாம். ஆனால் தாய்க்கு கொடுக்கும் திதியிலும் அவள் சோரம் போயிருக்கலாம் என்று சொல்வதற்கு அவசியமே இல்லை. ஆயினும் இந்த புனித மந்திரம் அப்படித்தான் சொல்கிறது.

எந்த மதத்தை தாய், தந்தையோடு ஒப்பிட்டு உறுதியாக நம்புகிறீர்களோ, அந்த மதத்தின் சடங்குகளே உங்களுடைய அம்மாவை 'நம்பத்தகாதவள்' என்கிறது. நடத்தை கெட்டவளாக இருக்கலாம் என்கிறது. நீங்கள் வேறு அப்பனுக்கு பிறந்திருக்கலாம் என்கிறது.

சடங்குகள் என்று பிதற்றுபவர்களுக்கும், மதத்தை பெற்றோரோடு ஒப்பிடுபவர்களுக்கும் இதை விட வேறு கேவலம் ஏற்படப்போவதில்லை.

இங்கே ஒரு கேள்வி எழலாம். பார்ப்பனர்களும் தங்களுடைய வீட்டு திருமண, இழவு நிகழ்ச்சியிலும் இதே மந்திரத்தைத்தானே சொல்லுகிறார்கள்! அப்பொழுது அவர்கள் என்ன முட்டாள்களா? என்ற கேள்வி இயல்பாகவே எழும். ஆம், பார்ப்பனர்களது வீட்டிலும் இதே மந்திரங்கள்தான் ஓதப்படுகின்றன. அது அவர்களுடைய பழக்க வழக்கத்திலிருந்து வந்த மந்திரமாக இருக்கலாம், எனவே அது அவர்களுக்கு ஒக்கும் என்று சொல்லலாம், ஆனால் தமிழர்களான நமக்கும் ஒக்குமா? என்பதே கேள்வி! மேலும் இதில் மனுதர்மம் பின்பற்றப்படுவதால் இம்மந்திரங்கள் அவர்களுக்கு சகஜமாகிவிட்டது. மனுதர்மம் பெண்களை மிகவும் இழிவானப் பார்வையில் பார்க்கிறது. அதனால்தான் திருமண, இழவு நிகழ்ச்சியில் அமைந்த சமஸ்கிருத மந்திரங்கள் பெண்களையே இழிவுபடுத்தி ஓதுவதை பார்க்கலாம். பார்ப்பண பெண்கள் என்றாலும் மனுநீதி அடிப்படையில் பார்ப்பன ஆண்களுக்கு பிடிக்காது. இதனை பற்றி சொன்னால் விரிந்துக்கொண்டே செல்லும். பொதுவாக இப்படிப்பட்ட சமஸ்கிருத மந்திரங்களை பார்ப்பனவர்கள் கூட தங்களது இல்லங்களில் ஓதி பார்ப்பனப்பெண்களை கேவலப்படுத்துவதை யாம் எதிர்க்கிறோம். எனவே இம்மந்திரங்களை பொது நோக்கம் கருதி தமிழக அரசு தடைசெய்யவேண்டும்.

நாம் தமிழர். நமக்காண திருமண சடங்கில் இனியும் பெண்களை கேவலப்படுத்தும் சமஸ்கிருத மந்திரங்களை தடுத்து நிறுத்துவோம். நமது முன்னோர்கள் வேதமான திருக்குறள் மற்றும் திருஅருட்பா ஓதி திருமணங்களை நடத்துவோம்.

குழந்தைகளுக்கு காதுகுத்தல், இறந்தவர்களைப் பார்த்து அழக்கூடாது, இறந்தவர்களை எரியூட்டாமல் புதைக்கவேண்டும், இறந்தவர்களுக்கு 'திதி' என்ற கர்மக் காரியங்கள் எதுவும் செய்ய வேண்டாம், அவை ஏமாற்று வேலையே என்று அறியவேண்டும். இதனைப்பற்றி வள்ளலார் கூறுவதைக் காண்போம்.

"1. கர்மகால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும்.

2. இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தை உடனிருக்கவேண்டும்.

3. புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்.

4. மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணமப் பிரயத்தனஞ் செய்யவேண்டாம்.

5. பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்.

6. கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்ய வேண்டாம். தெரிவிக்கத்தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்ட மட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள்.... இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்தருள்வார். இது சத்தியம். இது சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட்டறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக."

மெய்யோர் தினைத்தனையும் அறிகிலார் பொய்க்கதை
           விளம்பஎனில் இவ்வுலகிலோ
     மேலுல்கில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர்தெரு
           மேவுமண் ணெனினும்உதவக்
கையோ மனத்தையும் விடுக்கஇசை யார்கள்கொலை
           களவுகட் காமம்முதலாக்
     கண்டதீ மைகள்அன்றி நன்மைஎன் பதனைஒரு
           கனவிலும் கண்டறிகிலார்
ஐயோ முனிவர்தமை விதிப்படி படைத்தவிதி
           அங்கைதாங் கங்கைஎன்னும்
     ஆற்றில் குளிக்கினும் தீமூழ்கி எழினும்அவ்
           வசுத்தநீங் காதுகண்டாய்
மையோர் அணுத்துணையும் மேவுறாத் தவசிகா
           மணிஉலக நாதவள்ளல்
     மகிழவரு வேளூரில் அன்பர்பவ ரோகமற
           வளர்வைத் தியநாதனே. (திருஅருட்பா-2428)

அருட்பெருஞ்ஜோதி           அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை                அருட்பெருஞ்ஜோதி













No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.