Sunday, February 26, 2017

பிக்குகள்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017-ஆம் மாதம் வெளிவந்தவை:

பிக்குகள்
========
 
ஏகாந்த இடத்தில் வசித்து, மன அமைதி பெற்று, உலகத்தின் உண்மை நிலையைக் காண்கின்ற, நற்காட்சி அடைந்துள்ள பிக்குவானவர், மனிதரால் காண முடியாத இன்பத்தை அடைகின்றார்.

ஓ பிக்குகளே! மல்லிகைச் செடி வாடிய பூவை உதிர்த்து விடுவது போல, ஆசைகளையும் வெறுப்பையும் (ராகத் துவேஷங்களை) உதிர்த்து விடுங்கள்.

ஞானம் (அறிவு) இல்லாதவருக்குத் தியானம் (மன அடக்கம்) இல்லை. தியானம் இல்லாதவருக்கு ஞானம் இல்லை. யார் தியானமும் ஞானமும் உள்ளவரோ அவர், மோட்சத்தின் அருகில் இருக்கின்றார்.

பிக்குவே! சிந்தித்துப்பார். அசட்டையாயிராதே. காம எண்ணங்களில் உன் மனத்தைச் சுழல விடாதே. அசட்டைத்தனத்தினாலே, பழுக்கக் காய்ந்த நெருப்பைக் கக்கும் இரும்பு உருண்டைகளை விழுங்காதே. அது சுடும்போது ‘இது துக்கம்’ என்று கதறாதே.

பிக்கு ஒருவர், தன்னுடைய ஊதியம் சிறிதாக இருந்தாலும் அதை இகழாமல் இருப்பாரானால், தேவர்களும் அவரைப் புகழ்கிறார்கள். ஏனென்றால் அவருடைய வாழ்க்கை தூய்மையானதாகவும் ஊக்கமுள்ளதாகவும் இருக்கின்றது.

பிக்குவாக உள்ள ஒருவர் தமது சொந்த லாபத்தை அலட்சியமாக எண்ணக்கூடாது. பிறருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப்படவும் கூடாது. மற்றவருடைய ஊதியத்தைக் கண்டு பொறாமைப் படுகின்றவர் சமாதி (மன அடக்கம்) பெறமாட்டார்.

தர்மோபதேசப்படி நடந்து, தர்மோபதேசத்தில் மனம் மகிழ்ந்து, தர்மோபதேசத்தை என்னேரமும் சிந்தித்துக் கொண்டு, தர்மத்தை மறவாமல் இருக்கின்ற பிக்கு, உண்மையில் தர்மத்திலிருந்து தவற மாட்டார்.

புத்தருடைய உபதேசங்களில் மனத்தைச் செலுத்துகின்ற இளைய பிக்குவானவர், மேகத்திலிருந்து வெளிப்பட்ட வெண்ணிலாவைப் போன்று உலகத்தில் ஒளிவிட்டு விளங்குகின்றார்.

ஒருவர் தானே தனக்குப் புகலிடமாம். ஒருவர் தானே தனக்கு எதிர்கால வாழ்க்கையை நியமிக்கின்றார். ஆகையினாலே குதிரை வாணிகர் உயர்ந்த இனத்துக் குதிரையை அடக்குவது போல, நீ உன்னிடமுள்ள ‘நான்’ என்பதை அடக்கு.

உடல் அடக்கம், வாக்கு அடக்கம், மன அடக்கம் உடையவராய் இவற்றில் நன்கு பயின்று பாவங்களை நீக்கினவர் யாரோ அவர் ‘உபசந்தர்’ என்று கூறப்படுகின்றார்.

எண் ஜோதிடம்



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

எண் ஜோதிடம்
=============
இந்திய (இந்து) மக்களின் மூட நம்பிக்கைகளில் ஜோதிடம் முதன்மையானதாக உள்ளது.  ஜோதிடங்களில் பல வகை உண்டு, வான் ஜோதிடம், எண் ஜோதிடம், கிளி ஜோதிடம், எலி ஜோதிடம், கைரேகை ஜோதிடம், ஓலைச்சுவடி ஜோதிடம் என்று பலதரப்பட்ட வகைகள் உண்டு. ஜோதிடம் என்றாலே அது பொதுவாக வான் ஜோதிடத்தையே குறிக்கும். இந்த வான் ஜோதிடத்தைப் பற்றி நாம் சென்ற மின்னிதழில் கண்டோம். தற்போது நாம் எண் ஜோதிடம் (Numerology) பற்றி காண்போம்.

எண் ஜோதிடத்தை பொறுத்தவரை உலகலாவிய அளவில் இதனை அனைத்து தரப்பு மக்களும் நம்புகின்றனர். ஆனால் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கிடையே எண்களின் பலன்கள் வெவ்வேறு விதமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. சீனாவில் 7 என்கிற எண் நல்லது என்று நம்பப்பட்டால், அமெரிக்காவில் அதே 7 என்கிற கெட்டதாக நம்பப்படுகின்றது. இப்படி நாட்டுக்கு நாடு எண்களுக்குண்டான ஜோதிட நம்பிக்கைகள் வேறுபடுகின்றன. அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு உண்மையாகத் தோன்றுகின்றது.

இப்படிப்பட்ட எண் ஜோதிடம் சமீப காலமாகவே தோன்றி வளர்ந்துள்ளது என அறிகிறோம். சுமார் நாற்பது அல்லது ஐம்பது வருடங்களாகத்தான் இவை தோன்றி வளர்ந்திருக்கும் எனத் தோன்றுகின்றது. எனினும் நமது தமிழகத்தை பொறுத்தமட்டில் சங்ககாலத்திலேயே எண் ஜோதிடம் தோன்றியிருக்குமோ? என எண்ணத்தோன்றுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது தமிழ் மறையான திருக்குறலில் கூட,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
 கண்ணென்ப வாழ்ம் உயிர்க்கு.

என்று எண்களின் முக்கியத்துவத்தை கூறியிருக்கின்றது. எனினும் இக்குறள் ஜோதிடத்தை குறிப்பதாக சொல்லிவிட முடியாது. இதுபோல்,

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

என்பதில் வருகின்ற நான்கு என்பது நாலடியார் என்கின்ற நூலையும் குறள் வெண்பாவையும் குறிக்கும். எனவே நாலும் இரண்டும் என்பதும் ஜோதிடத்தை குறிப்பதல்ல. எனினும் சங்க கால நூல்களின் பெயர்களை பார்த்தோமானால் 4, 40, 400, 4000 என்று நான்கினையும் நான்கின் வர்க்கத்தையும் காணமுடியும். நான் மணிக்கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை எல்லாம் நான்கின் மயம்தான்.

        நாலடியார், நான் மணிக்கடிகை, சதுர் அகராதி, கார் நாற்பது, களவழி நாற்பது, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, புற நானூறு, அக நானூறு, நற்றினை நானூறு, குறுந்தொகை நானூறு, பழமொழி நானூறு, நாலாயிர திவ்யப் பிரபந்தம், நாலாயிரக்கோவை இவ்வாறு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டே தமிழில் எண்களின் பெயரில் நூல்கள் இயற்றப்பட்டு அவ்வெவ்வெண்ணிக்கையில் பாடல்களை இயற்றி முடித்துள்ளனர் நமது தமிழர்கள்.

தமிழில் மற்ற எண்களிலும் நூல்கள் இருக்கின்றன. ஏர் எழுபது, முப்பால், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு என்று எண்களின் பெயர்களில் நூல்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட எல்லா நூல்களையும் தொகுத்து வழங்கும்போதும் அவைகளுக்கும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினென்கீழ் கணக்கு, என்று எண் பெயராகவே வைத்ததால் பழந்தமிழர்களுக்கும் நியூமராலஜி தெரிந்திருக்குமோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேத காலத்திலும் தசம், சதம், சஹஸ்ரம் என்ற டெசிமல் (Decimal) முறைப் பெயர்கள் நிறைய வருகின்றன. யஜூர் வேதத்தில் சத ருத்ரீயம் என்று சிவன் பெயரில் முக்கியமான ருது வருகின்றது. சமகம் என்னும் பகுதியில் எண்களின் பெயர்களின் மட்டுமே வரும் மந்திரங்களும் உண்டு. அதற்குப் பின்னுள்ள காலத்தில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணி தனது புத்தகத்துக்கு அஷ்டாத்யாயீ (எட்டு அத்தியாயம்) என்று பெயர் வைத்தார்.

சமஸ்கிருதத்தில் தசாம்ஸப் பெயர்கள் அதிகம் வருகின்றன. பதிகம், சதகம், சஹஸ்ர நாமம், லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று வருகின்றன. பஞ்ச ரத்னம், அஷ்டகம் என்று ஐந்துக்கும் எட்டுக்கும் வேதத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோல தமிழர்களும் சங்ககாலத்தில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று சபைகளை அமைத்து இதே ஐந்துக்கும் எட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். மொத்தத்தில் இந்தியர்கள் எல்லோரும் குறிப்பிட்ட சில எண்களின் மீது ஏதோ ஒரு காரணம் கொண்டு காதல் புரிந்துள்ளனர்.

சங்ககாலத்தவர்கள் தாம் இயற்றிய நூல்களில் சில எண்களுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். அம்முக்கியத்துவம் ஜோதிட ரீதியாக இருந்திருக்க முடியாது. ஆனால் இக்காலத்தவர்கள் ஜோதிட ரீதியாக எண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாம் வாங்கும் வாகனங்களின் பதிவெண்கள், தாம் கட்டும் வீட்டு மனைகளின் எண்கள், தாம் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதிலும் எண்கள், பழையப் பெயரை நீக்கிவிட்டு புதியப் பெயரை வைப்பதிலும், எண்களை ஜோதிட ரீதியாக பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

தமிழ் எழுத்துக்களுக்கு ஜோதிட எண்கள் அமைக்காது, ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டும் ஜோதிட எண்களை அமைத்து அதன் கூட்டுத்தொகை எண்ணை கர்த்தாவாகக் கொள்கின்றனர். இதனை உருவாக்கிய அந்த புத்திசாலி ஆசிரியர் யார் எனத்தெரியவில்லை.

A, I, J,Q,Y = 1
B,K,R = 2
C,G,L,S = 3
D,M,T = 4
E,H,N,X = 5
U,V,W = 6
Q,Z = 7
F,P = 8

மேலே குறிப்பிட்டவாறு ஆங்கில எழுத்துகளுக்கு ஒன்று முதல் எட்டு வரை ஜோதிட எண்களை அளித்துள்ளார்கள். இதனைக்கொண்டு நாம் நமது தமிழ்ப்பெயரை ஆங்கிலத்தில் எழுதி நமக்கான கர்த்தா எண்களை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது பிறந்த குழந்தைகளுக்கு ஜோதிடம் கணித்து அதற்கு தக்க எண்களில் பெயர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக தற்போது நிறைய எண் ஜோதிட பெயர்கள் வலைதளங்களில் கொட்டிக்கிடக்கின்றது.

உதாரணமாக ப.கண்ணன் என்கின்ற தமிழ்ப் பெயரை P.Kannan என்று எழுத வேண்டும். இதில் அமைந்துள்ள ஆங்கில எழுத்துக்காண ஜோதிட எண்களான 8+2+1+5+5+1+5=27=2+7=9. இப்படி ப.கண்ணன் என்ற பெயருக்கு அமைந்த ஜோதிட எண் ஒன்பதாக வகுக்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட ஜோதிட எண்களால் தற்போத தலைமுறை நமது பாரம்பரியத்தை விட்டு எங்கோ சென்றுவிட்டது. தமிழில் பெயர்கள் வைக்கப்படுவதே இல்லை. பாம்பு சீறும் சப்தம் போன்று ‘ஷ்….ஷ்…’ என்று சப்தம்தான் தற்போதய குழந்தைகளின் பெயர்களில் ஒலிக்கின்றது. தமிழ்ப் பெயர்கள் அழிய இந்த எண் ஜோதிடம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. தாத்தா பாட்டியின் பெயரினை பெயரனுக்கு பேத்திக்கு வைக்கும் நடைமுறைகள் இன்று முற்றிலும் அழிந்துவிட்டன. வாயில் நுழையமுடியாத வடச்சொல்கள் எல்லாம் இன்றைய தமிழர்களின் குழந்தைகளுக்கு பெயர்களாக அமைக்கப்பட்டுவருகின்றன. அதனையே பெற்றோர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். நமக்கு தேவையான பாரம்பரியத்தை விட்டுவிட்டு தேவையற்ற பாரம்பரியத்திற்காக இன்றைய இளைஞர்கள் போராடுகின்றார்கள்.

எண் ஜோதிடம் என்கின்ற முட்டாள் தனமான நம்பிக்கைகளை மிகவும் படித்து நல்ல சமுதாய அந்தஸ்தத்தில் உள்ளவர்களால்தான் பெரும்பாலும் பின்பற்றப்பட்டுவருகின்றது. இது கிராம மக்கள் வரை சென்றடைந்துவிட்டது. இந்த முட்டாள் தனம் இப்படியே தொடர்ந்தால், இந்த எண் ஜோதிடத்தால் தமிழக மக்கள் தங்கள் அடையாளங்களை இன்னும் இருபதே வருடத்தில் முற்றிலும் இழப்பார்கள். வாகனப்பதிவிற்கும், வீட்டு மனை எண் அமைவதிலும் பெரும் பணத்தை செலவிட்டு ராசி எண்களை வாங்குகின்றார்கள். நாம் சுரண்டப்படுகின்றோம் என்பதனை யாரும் அறிவதில்லை. அவர்களது அறிவு மூடப்பட்டு மூட நம்பிக்கை ஓங்குகின்றது.

சன்மார்க்க மக்களாகிய நாம் இப்படிப்பட்ட மூட வழக்கங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதோடு, நம்மைச் சார்ந்த மற்றவர்களையும் அதிலிருந்து மீட்டெழச் செய்யவேண்டும். கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக வேண்டும் என்ற வள்ளலாரின் கட்டளையினை நிறைவேற்றுவோம். 

                                --தி.ம.இராமலிங்கம்.

ஜல்லிக் கட்டு



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி 2017 ஆம் மாதம் வெளிவந்தவை:

                                               ஜல்லிக் கட்டு
                                             ===========


நமது பாரம்பரியத்தில் ஒன்றான ஜல்லிக் கட்டு போட்டியை கடந்த மூன்று ஆண்டுகளாக விலங்கு நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கினால் உச்ச நீதி மன்றம் தடை விதித்திருந்தது. இத்தடையையினை, மத்திய மாநில சட்டத்தின் மூலம் நீக்கக்கோரி சென்ற மாதம் (ஜனவரி – 2017) சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகம் முழுதும் மாணவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

சுத்த சன்மார்க்கம் இந்த ஜல்லிக் கட்டு போட்டியினை எவ்வாறு நோக்குகின்றது? சுத்த சன்மார்க்கம் என்பதே உயிர் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தின் பாரம்பரியம் என்பதலோ அல்லது தமிழர்களின் பெரும்பாண்மையினர் இதனை ஆதரிக்கின்றார்கள் என்பதாலோ ஓர் விலங்கின் உரிமையை சுத்த சன்மார்க்கம் விட்டுக்கொடுத்திடாது. ஆசாரங்கள் (கலாச்சாரம்) ஒழிய வேண்டும் என்பதில் சுத்த சன்மார்க்கம் முனைப்புக் காட்டுகின்றது. ஆசாரங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பதனால் அன்பு / கருணை, அற பண்புகள் நம்மை விட்டு நீங்கிவிடுவதாக சுத்த சன்மார்க்கம் உரைக்கின்றது.

விலங்கு நல அமைப்புகளின் உண்மை தன்மை, உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள், மத்திய மாநில அரசுகளின் நிலமைகள், தமிழக மாணவர்களின் / மக்களின் கருத்துக்கள் இவைகளிடையே நாம் பயணம் செய்ய வேண்டியதில்லை. எனினும் தமிழக மாணவர்கள் கூறும் ஒரே விவாதம் என்னவெனில், தமிழகக் காளை மாடுகளை, ஜல்லிக் கட்டு தடையின் மூலம் அழிக்கப்பார்க்கின்றார்கள் என்பதே.

சுமார் 60-க்கும் மேற்பட்ட தமிழகக் காளை இனங்கள் இருந்தன என்றும், தற்போது 10-க்கும் குறைவான காளை இனங்கள் மட்டுமே தமிழகத்தில் காணப்படுகின்றன என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஜல்லிக் கட்டு நடைபெற்று வந்தபோதே சுமார் 50-க்கும் மேற்பட்ட காளை இனங்கள் நம்மை விட்டு நீங்கிவிட்டன என்பது தெரியவருகின்றது. இதிலிருந்து ஜல்லிக் கட்டுக்கும் காளை இனங்கள் அழிவதற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. பிறகு எப்படி இவைகள் அழிந்திருக்கும்?

காளை மாடுகள் என்றாலே அவை விவசாயிகளின் நண்பன் என்று சொல்லலாம். விவசாய வேலைகள் அனைத்தையும் இப்படிப்பட்ட காளை மாடுகளைக் கொண்டு அன்றைய தமிழர்கள் செய்து வந்தனர். இயந்திர மயமாக்கலால் காளை மாடுகள் இருந்த இடத்தினை விவசாய நவீன வாகனங்கள் (Tractor) பிடித்துக்கொண்டன. காளை மாடுகள் செய்த வேலைகளை தற்போது இயந்திரங்கள் செய்கின்றன. அதன் காரணமாக காளை மாடுகள் மக்களிடையே பயனற்றுப்போயின. இதன் நீட்சியே காளை இனங்கள் அழியக்காரணமாக ஆகின. விவசாயிகளும் மாணவர்களும் பாரம்பரியம் பேசிக்கொண்டு, இயந்திரம் செய்யும் வேலையினை விடுவித்து மீண்டும் காளைகளுக்கு வேலை கொடுக்க முடியுமா? அப்படிக்கொடுத்தால் காளை இனங்கள் மீண்டும் நம்மிடையே நிலைத்து நிற்கும். ஆனால் அது முடியாத காரியம்.

இந்த அடிப்படைக் காரணத்தை மறைத்துவிட்டு, ஜல்லிக் கட்டுத் தடையால்தான் காளை இனங்கள் அழிந்து வருகின்றன என்று சொல்லி இளைஞர்களை தூண்டிவிட்டது எது எனத் தெரியவில்லை. ஜல்லிக் கட்டினால் காளைகள் பாதிப்படைகின்றன என்பது உண்மை எனில், கலாச்சாரம் என்கின்ற பெயரில் அதனை ஊக்குவிக்காமல் தடை செய்வது நலமே. அவரசச் சட்டத்தால் தடை நீங்கியவுடன் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியால் ஒரு காவலர் உட்பட மூன்று மனித உயிர்கள் பலியாயின. இதனிடையில் ஜல்லிக் கட்டுக்காக போராடுகின்றோம் என, சேவல் சண்டைகளும் தமிழகத்தில் தலைதூக்கியது வருத்தமளிக்கின்றது. கோயில்களில் பலியிடக்கூடாது என கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசு தடைவிதித்தது. ஆனால் இதே தமிழக மக்கள், அது எங்கள் கலாச்சாரம் என்று சொல்லி போராடி அந்தத் தடையினை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார்கள். எனவே கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு தவறினை செய்ய சுத்த சன்மார்க்கம் அனுமதிக்காது. சங்க காலத்திலேயே ஜல்லிக் கட்டுக்கான ஆதரங்கள் இருக்கின்றன என்று சொல்பவர்கள், சங்ககால மக்களின் பழக்க வழக்கங்களையா இன்று கடைபிடிக்கின்றார்கள் என்று சிந்திக்க வேண்டும். எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்கள், ஆன்மிக முன்னேற்றங்களை கடந்து நவீன யுகத்தில் பயணப்படும் நாம், ஏன் பின்நோக்கிச் செல்ல வேண்டும். தமிழனின் அடையாளம் புதுமையை கடைபிடிப்பதாக இருக்கட்டும், உயிர் இரக்கத்தை அடையாளமாகக் கொள்ளட்டும், புலால் மறுப்பவர்களாக இருக்கட்டும், மதுவை மறுப்பவர்களாக இருக்கட்டும், உலகிற்கு புதுமையை எடுத்துக்காட்டுபவர்களாக இருக்கட்டும். நமது அடையாளங்கள் அறத்தில் நிலைத்த தன்மையாகவும் அறம் அல்லாததில் மாறக்கூடியதாகவும் இருக்கட்டும். அற நூல்களாக, சமயங்கள் மதங்கள் கடந்த திருக்குறள் மற்றும் திருவருட்பாவினை ஏற்கட்டும். அறம் அல்லாததை விடுவதே உண்மையான புரட்சியாகும். அந்த புரட்சியே தமிழனின் அடையாளமாக இருக்கட்டும்.  

ஜல்லிக் கட்டு போராட்டத்தில் நமது இளைஞர்கள் நடத்திய அறவழிப்போராட்டம் வரவேற்கத்தக்கது. இப்போராட்டத்தினால் அந்நிய குளிர் பானங்கள் நம்மிடையே விற்கக்கூடாது என்கின்ற எழுச்சி தமிழகம் முழுதும் பரவியதும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் சுதேசி குளிர் பானங்களையும் மக்கள் புறந்தள்ள வேண்டும். இயற்கையாகக் கிடைக்கும் மோர், பதநீர், இளநீர் இவைகளையே நுகரவேண்டும்.

அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில், ஏதோ அந்நிய சக்திகள் நுழைந்துவிட்டன என்று காவல் துறை மாணவர்கள் மீது எடுத்த நடவடிக்கை சரியானதல்ல. மாணவக்கூட்டத்தை அமைதியான முறையில் கூடச்செய்த தமிழக அரசு, அதே அமைதித் தன்மையுடன் கலைத்திருக்க வேண்டும். மாணவர்களும் தங்களது நோக்கம் நிறைவேறியதை அறிந்து உடனே போராட்டத்தை விலக்கிக்கொண்டிருக்க வேண்டும். நாம் இந்தியர்கள் என்பதை வெறுத்து தமிழர்கள் என்று குறுகிய மனப்பான்மையுடன் பிரிவினை வாதங்களை எழுப்பியதும் கண்டிக்கத்தக்கது. எப்படியோ இறுதி முடிவு தமிழக அரசிற்கும், மாணவர்களுக்கும் அவமானத்தை தந்துவிட்டது என்பது உண்மை. 

                                     --தி.ம.இராமலிங்கம்.