காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மின்னூலில் பிப்ரவரி
2017 ஆம் மாதம் வெளிவந்தவை:
ஜல்லிக் கட்டு
===========
நமது பாரம்பரியத்தில்
ஒன்றான ஜல்லிக் கட்டு போட்டியை கடந்த மூன்று ஆண்டுகளாக விலங்கு நல அமைப்புகள் தொடர்ந்த
வழக்கினால் உச்ச நீதி மன்றம் தடை விதித்திருந்தது. இத்தடையையினை, மத்திய மாநில சட்டத்தின்
மூலம் நீக்கக்கோரி சென்ற மாதம் (ஜனவரி – 2017) சென்னை மெரினா கடற்கரை மற்றும் தமிழகம்
முழுதும் மாணவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.
சுத்த சன்மார்க்கம்
இந்த ஜல்லிக் கட்டு போட்டியினை எவ்வாறு நோக்குகின்றது? சுத்த சன்மார்க்கம் என்பதே உயிர்
இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழகத்தின் பாரம்பரியம் என்பதலோ அல்லது தமிழர்களின்
பெரும்பாண்மையினர் இதனை ஆதரிக்கின்றார்கள் என்பதாலோ ஓர் விலங்கின் உரிமையை சுத்த சன்மார்க்கம்
விட்டுக்கொடுத்திடாது. ஆசாரங்கள் (கலாச்சாரம்) ஒழிய வேண்டும் என்பதில் சுத்த சன்மார்க்கம்
முனைப்புக் காட்டுகின்றது. ஆசாரங்களை மனிதர்கள் கடைப்பிடிப்பதனால் அன்பு / கருணை, அற
பண்புகள் நம்மை விட்டு நீங்கிவிடுவதாக சுத்த சன்மார்க்கம் உரைக்கின்றது.
விலங்கு நல
அமைப்புகளின் உண்மை தன்மை, உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள், மத்திய மாநில அரசுகளின்
நிலமைகள், தமிழக மாணவர்களின் / மக்களின் கருத்துக்கள் இவைகளிடையே நாம் பயணம் செய்ய
வேண்டியதில்லை. எனினும் தமிழக மாணவர்கள் கூறும் ஒரே விவாதம் என்னவெனில், தமிழகக் காளை
மாடுகளை, ஜல்லிக் கட்டு தடையின் மூலம் அழிக்கப்பார்க்கின்றார்கள் என்பதே.
சுமார் 60-க்கும்
மேற்பட்ட தமிழகக் காளை இனங்கள் இருந்தன என்றும், தற்போது 10-க்கும் குறைவான காளை இனங்கள்
மட்டுமே தமிழகத்தில் காணப்படுகின்றன என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது
ஜல்லிக் கட்டு நடைபெற்று வந்தபோதே சுமார் 50-க்கும் மேற்பட்ட காளை இனங்கள் நம்மை விட்டு
நீங்கிவிட்டன என்பது தெரியவருகின்றது. இதிலிருந்து ஜல்லிக் கட்டுக்கும் காளை இனங்கள்
அழிவதற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. பிறகு எப்படி இவைகள் அழிந்திருக்கும்?
காளை மாடுகள்
என்றாலே அவை விவசாயிகளின் நண்பன் என்று சொல்லலாம். விவசாய வேலைகள் அனைத்தையும் இப்படிப்பட்ட
காளை மாடுகளைக் கொண்டு அன்றைய தமிழர்கள் செய்து வந்தனர். இயந்திர மயமாக்கலால் காளை
மாடுகள் இருந்த இடத்தினை விவசாய நவீன வாகனங்கள் (Tractor) பிடித்துக்கொண்டன. காளை மாடுகள்
செய்த வேலைகளை தற்போது இயந்திரங்கள் செய்கின்றன. அதன் காரணமாக காளை மாடுகள் மக்களிடையே
பயனற்றுப்போயின. இதன் நீட்சியே காளை இனங்கள் அழியக்காரணமாக ஆகின. விவசாயிகளும் மாணவர்களும்
பாரம்பரியம் பேசிக்கொண்டு, இயந்திரம் செய்யும் வேலையினை விடுவித்து மீண்டும் காளைகளுக்கு
வேலை கொடுக்க முடியுமா? அப்படிக்கொடுத்தால் காளை இனங்கள் மீண்டும் நம்மிடையே நிலைத்து
நிற்கும். ஆனால் அது முடியாத காரியம்.
இந்த அடிப்படைக்
காரணத்தை மறைத்துவிட்டு, ஜல்லிக் கட்டுத் தடையால்தான் காளை இனங்கள் அழிந்து வருகின்றன
என்று சொல்லி இளைஞர்களை தூண்டிவிட்டது எது எனத் தெரியவில்லை. ஜல்லிக் கட்டினால் காளைகள்
பாதிப்படைகின்றன என்பது உண்மை எனில், கலாச்சாரம் என்கின்ற பெயரில் அதனை ஊக்குவிக்காமல்
தடை செய்வது நலமே. அவரசச் சட்டத்தால் தடை நீங்கியவுடன் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்
கட்டு நிகழ்ச்சியால் ஒரு காவலர் உட்பட மூன்று மனித உயிர்கள் பலியாயின. இதனிடையில் ஜல்லிக்
கட்டுக்காக போராடுகின்றோம் என, சேவல் சண்டைகளும் தமிழகத்தில் தலைதூக்கியது வருத்தமளிக்கின்றது.
கோயில்களில் பலியிடக்கூடாது என கடந்த காலத்தில் அ.தி.மு.க. அரசு தடைவிதித்தது. ஆனால்
இதே தமிழக மக்கள், அது எங்கள் கலாச்சாரம் என்று சொல்லி போராடி அந்தத் தடையினை எதிர்த்து
நின்று வெற்றிபெற்றார்கள். எனவே கலாச்சாரம் என்ற பெயரில் ஒரு தவறினை செய்ய சுத்த சன்மார்க்கம்
அனுமதிக்காது. சங்க காலத்திலேயே ஜல்லிக் கட்டுக்கான ஆதரங்கள் இருக்கின்றன என்று சொல்பவர்கள்,
சங்ககால மக்களின் பழக்க வழக்கங்களையா இன்று கடைபிடிக்கின்றார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
எவ்வளவோ அறிவியல் முன்னேற்றங்கள், ஆன்மிக முன்னேற்றங்களை கடந்து நவீன யுகத்தில் பயணப்படும்
நாம், ஏன் பின்நோக்கிச் செல்ல வேண்டும். தமிழனின் அடையாளம் புதுமையை கடைபிடிப்பதாக
இருக்கட்டும், உயிர் இரக்கத்தை அடையாளமாகக் கொள்ளட்டும், புலால் மறுப்பவர்களாக இருக்கட்டும்,
மதுவை மறுப்பவர்களாக இருக்கட்டும், உலகிற்கு புதுமையை எடுத்துக்காட்டுபவர்களாக இருக்கட்டும்.
நமது அடையாளங்கள் அறத்தில் நிலைத்த தன்மையாகவும் அறம் அல்லாததில் மாறக்கூடியதாகவும்
இருக்கட்டும். அற நூல்களாக, சமயங்கள் மதங்கள் கடந்த திருக்குறள் மற்றும் திருவருட்பாவினை
ஏற்கட்டும். அறம் அல்லாததை விடுவதே உண்மையான புரட்சியாகும். அந்த புரட்சியே தமிழனின்
அடையாளமாக இருக்கட்டும்.
ஜல்லிக் கட்டு
போராட்டத்தில் நமது இளைஞர்கள் நடத்திய அறவழிப்போராட்டம் வரவேற்கத்தக்கது. இப்போராட்டத்தினால்
அந்நிய குளிர் பானங்கள் நம்மிடையே விற்கக்கூடாது என்கின்ற எழுச்சி தமிழகம் முழுதும்
பரவியதும் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் சுதேசி குளிர் பானங்களையும் மக்கள் புறந்தள்ள
வேண்டும். இயற்கையாகக் கிடைக்கும் மோர், பதநீர், இளநீர் இவைகளையே நுகரவேண்டும்.
அமைதியாக நடைபெற்ற
போராட்டத்தில், ஏதோ அந்நிய சக்திகள் நுழைந்துவிட்டன என்று காவல் துறை மாணவர்கள் மீது
எடுத்த நடவடிக்கை சரியானதல்ல. மாணவக்கூட்டத்தை அமைதியான முறையில் கூடச்செய்த தமிழக
அரசு, அதே அமைதித் தன்மையுடன் கலைத்திருக்க வேண்டும். மாணவர்களும் தங்களது நோக்கம்
நிறைவேறியதை அறிந்து உடனே போராட்டத்தை விலக்கிக்கொண்டிருக்க வேண்டும். நாம் இந்தியர்கள்
என்பதை வெறுத்து தமிழர்கள் என்று குறுகிய மனப்பான்மையுடன் பிரிவினை வாதங்களை எழுப்பியதும்
கண்டிக்கத்தக்கது. எப்படியோ இறுதி முடிவு தமிழக அரசிற்கும், மாணவர்களுக்கும் அவமானத்தை
தந்துவிட்டது என்பது உண்மை.
--தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.